Browsed by
Category: பொது

ஹிந்தி டீச்சர் வாரணசி

ஹிந்தி டீச்சர் வாரணசி

சரியாக ஒரு வருடத்திற்குப்  பின் இத்தளத்தில் பதிவேற்றப்படும் பதிவு இது. ஆங்கிலத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்தாலும் தமிழை நான் தவிர்த்தேன். தமிழில் பொதுத் தளத்தில் எழுதுவதை மட்டுமே தவிர்த்தேனே தவிர முழுவதுமாய் அல்ல. திரைக்குப் பின் தமிழில் சில படைப்புகள் உருவாகிக் கொண்டிருந்தன. பொதுத் தளத்தில் தமிழ் புழங்கப்படாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

தொடர்ந்த பயணங்களும், வாழ்க்கைத் தேடலும், மூன்று வருடத்திற்கு முன் துவங்கிய தமிழ் நாவல் படைப்பும் என் நேரத்தை பிடித்துக் கொண்டன.
இருந்தும் வட்டம் தமிழ் கடந்து பரவியதால் ஆங்கிலப் பிரவேசம் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது திரும்பிவிட்டேன். தமிழிலும் இனிப் பதிவுகள் தொடரும். எங்கும் மறைந்து  விடவில்லை.
நாவல் வேலை இரண்டு மாதத்திற்கு முன் முடிந்தது. நாவல் பற்றி பிறகு மெதுவாகப் பேசலாம். அவ்வளவு எளிதில் வெளியே ஒரு படைப்பை வெளிக்கொணரும் சூழல் தமிழில் இல்லை. தத்தமது புத்தகங்களை வெளியிடும் அளவில் தான் தமிழ் பதிப்பகங்கள் உள்ளன. கவலையில்லை. பதிப்பகம் துவங்க வேண்டியது தான். கதை பற்றிக் கதைக்க நமக்கு சமயங்கள் பல உண்டு. பிறிதொரு நாள் பார்த்துக் கொள்வோம்.
இப்போதைக்கு நம் உரையின் நோக்கம் மொழிகளின் பக்கம் செல்கிறது. ஹிந்தியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பதாய் இது இருக்கும். ஏன் திடீரென்றென நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு. முடிவில் தெளியும்.
இது போதுமென கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஆத்மாக்களுக்கு இது தேவையற்றது. பிடிகளிலிருந்து விடுபடத் துடிக்கும் இதயங்களுக்கு இவ்வுரை மிக முக்கியம். அவர்கள் இதனை முன்பே உணர்ந்திருப்பினும் நினைவூட்டுவதும் பகிர்ந்து கொள்வது என்னகத்தே கடமை.
பிற மொழிகள் கற்பதென்பது நமக்குத் தெரியாத பல வாயில்களை திறக்க வல்லது. மாயம் நிகழ்த்தக் கூடியது. மொழி கற்றலின் சுவையறிந்தோர் இதனை உணர்வர்.
என்னைப் பொறுத்தவரை நான் மொழி கடந்து பல வருடங்கள் ஆகிறது. ஒரு மொழியிலோ இடத்திலோ வழக்கத்திலோ என்னை நான் வரையறுத்துக் கொள்வதில்லை. எல்லைகள் கற்பனையானவை. எல்லைகளை உடைக்க மொழிகள் மிக அவசியம்.
எந்த வகையில் ஹிந்தி அவசியமாகிறது?
எல்லா வகையிலும். ஒன்றேகால் லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் முப்பத்தியோரு லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் உள்ள அந்தப் பெரும் வேறுபாட்டில் தான் அவசியமாகிறது. இது தமிழகம் மற்றும் இந்தியாவின் பரப்பளவு. தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டாலே ஹிந்தியின் அவசியம் நமக்கு புலப்படும். பயணம் செய்யாத கால்கள் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனையோருக்குத் தேவை.
உலகில் அதிகம் பேசப்படும் மொழி மேண்டரின், பின் ஸ்பானீஷ் பிறகு ஆங்கிலம். அதற்கடுத்து?
ஹிந்தி உருதுக் குடும்பம். ஹிந்திக்கும் உருதுக்கும் வேறுபாடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது தான். ஒன்றுமில்லாதது. எழுத்து முறை வேறு வேறாதானே தவிர பேச்சில் பெரிய மாற்றமில்லை. சமஸ்கிருத பாளி சொற்களுக்குப் பதில் அரேபிய ஃபார்ஸி சொற்கள். இதெல்லாம் ஒரு வேறுபாடா?
உலகின் நான்காவது அதிகம் பேசப்படும் மொழி ஹிந்துஸ்தானி எனப்படும் ஹிந்தி-உருதுக் கூட்டமைப்பு. இதற்குப் பின் தான் அரபியும் இன்ன பிறவும். இவ்வளவு முக்கியம் இருக்கிறது வேறென்ன வேண்டும்.
ஆங்கிலம் போதும் எங்களுக்கு என்று சொல்ல முடியாது. தமிழகம் ஆங்கிலம் புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் வட இந்தியா இல்லை. இங்கு சர்வம் ஹிந்தி மயம். எண்களைக் கூட ஆங்கிலத்தில் அறிய இயலா பலரை நான் கண்டிருக்கிறேன். ஹிந்தி என்பது இங்கு சுவாசத்தைப் போல. இது எல்லோரும் அறிந்ததே.
மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், ஹிந்தி இந்தியாவின் இணைப்பு மொழி. தேசிய மொழி என்று சொல்லி சிக்க விருப்பமில்லை. இந்தியாவின் பொதுத் தளத்தையும் இதயத் துடிப்பையும் உணர ஹிந்தி இன்றியமையாதது.
எதற்கு இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?
பொறுமை. எனக்கு நம் கல்வி முறையில் நம்பிக்கை கிடையாது. துளிகூடக் கிடையாது. நம் கல்விமுறையால் பல பட்டம் தாங்கிகளை உருவாக்க முடியுமே தவிர அறிவாளிகளையும் வல்லுனர்களையும் அல்ல. துவக்கம் முதலே நான் நம் கல்வி முறையுடன் முரண்டுபிடிப்பவன். அறிவைத் தேட வேண்டும் என நம்புபவன். யாரிடமிருந்தும் எவ்வித சலசலப்பு வரினும் செவி மடுத்ததில்லை. என் வேலையை நடத்திக் கொண்டு இருப்பவன். கல்வியில் மாற்றம் வேண்டும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கையுள்ளவன்.
எதற்கு இங்கு என் கதை?
அவசியமிருக்கிறது. ஒன்றல்ல ஒரு டசன் காரணங்களுக்காக சென்ற மாதம் காசிக்கு வந்தேன். புதிதாய் ஒரு காரணம் முளைத்தது. வந்த வேலைகள் பல இருக்க புதிதாய் ஒரு வேலை தேடி வந்தது. கற்றல் சம்பந்தமானது. உடனே தலையசைத்தேன்.


இந்திய அரங்கில் மட்டுமல்ல உலக அளவிலும் ஹிந்திக்கு உள்ள சந்தை இங்கு வந்து தான் தெரியும். மிகவும் நெருக்கமான ஒரு பேராசிரியர் இங்கு பதினான்கு வருடமாய் ஹிந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்று வரை அவரிடம் நூற்றுக்கும் மேபட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழி கற்றுள்ளனர். ஒருவர் கூட இந்தியர் இல்லை.
துவக்கத்தில் அவரைப் பற்றித் தெரியாது. எல்லா இடத்திலும் ப்ராத்மிக் ப்ரவின் என்று சொல்லிக் கொண்டு ஹிந்தி என்ற பெயரில் மூளையைக் குதறிக் கொண்டு இருப்பவர்களில் ஒருவரென நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர் சொல்லிக் கொடுக்கும் விதம் தனித்துவம் வாய்ந்ததென்று.
விளங்கிக் கொண்டபொழுது அதிர்ச்சியடைந்தேன். மிக எளிதான வடிவமைப்புடன் கூடிய ஹிந்திப் பாடங்கள். ஒரு மணி நேரத்திற்குத் தனி நபர் பாடத்திற்கு இவர் வசூலிக்கும் கட்டணம் 600 ரூபாய். இதுவே குழுவிற்கு 1500 ரூபாய். அதிகமாகத் தான் தெரியும் ஆனால் அந்த ஒரு மணிநேரம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். ஒரு வாரம் இவர் வழிமுறையில் படித்தால் முன் பின் அறிமுகமில்லாதவருக்கும்  ஹிந்தி புரியத் துவங்கிவிடும். ’ஹிந்தி டீச்சர் வாரணசி’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்திய அளவில் வெளிநாட்டினருக்குப் மொழிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிறுவனங்களில் இவருக்கு இரண்டாம் இடம்.
தன் கிளையை டில்லிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். இது தொடர்பாக முதலில் சந்தித்தேன். பின்னர் நடந்தது எங்களுக்குள். விசயம் இதுதான். அவரிடம் போராடி மதுரைக்கு வரும் போது ‘ஹிந்தி டீச்சர் வாரணசி’யையும் எடுத்து வருகிறேன். யார் வேண்டுமானலும் சேரலாம். முதல் வகுப்பிலேயே தெரிந்துவிடும் எங்களுக்கும் பிறருக்குமான வேறுபாடு.
அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் இரண்டு ஹிந்தி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை எங்கள் முறையில் பயிற்சியளித்து நிறுவ எண்ணம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
மற்றபடி, கூட்டம் கூட்டி மாணவர்களைச் சேர்க்க விருப்பமில்லை. வாரணசியையும் டெல்லியையும் சமாளிப்பதே பெரிது. மதுரையில் விடாப்பிடியாக தொடங்குவதன் நோக்கம் வர்த்தக ரீதீயானதல்ல. தேவைப்படுபவர்களுக்கு கற்பிப்பது அவ்வளவு தான். யார் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பெரிதாக இருக்காது என்பது என் சார்பில் நிச்சயம் சொல்ல முடியும். ஆர்வமுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவே இதை நான் எழுதுகிறேன். கேள்விகளும் புலம்பல்களும் இல்லாமல் என்னடமிருக்கும் வழியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதுவே இக்கட்டுரையின் நோக்கம்.