Browsed by
Category: கட்டுரை

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்

இந்தப்படத்தின் நோக்கம் எண்டெர்டெய்ன்மெண்ட் மட்டுமே, கருத்து சொல்வதல்ல என்பது கமல் தன் படம் பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும். இதனை நினைவில் கொள்ளுங்கள். விமர்சனத்தை துவங்குவோம்.
முதன்முதலில் படத்தை பார்க்கும் எவருக்கும் முதலில் ஒரு பேரதிர்ச்சி ஏற்படும். தமிழ் படமா இது என. அந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவில் இருந்து  மிகப் பெரிய பாய்ச்சலாய் விஸ்வரூபம் அமைந்துள்ளது. காமெடிக்கு தனி ட்ராக்ட், பாடலுக்கு தனி ட்ராக்ட், காதலுக்கு தனி ட்ராக்ட் என்றெல்லாம் இல்லாமல் பாடல்கள், நகைச்சுவைகள் என எல்லாம் காட்சிகளுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறன. இது தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் இப்படத்தின் மிக முக்கிய பங்கு கமலுக்குரியது. நடிப்பு தயாரிப்பு டைரக்‌ஷன் என அனைத்துப் பங்கும் மிக நேர்த்தியாக ப்ரொஃபெஸனலாக உள்ளது. இதில் ஏதும் வியப்பில்லை. கமல் என்றும் அப்படித்தான்.
சரி அப்படி என்றால் படம் சூப்பர் தானே பிறகு எதற்காக முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருக்கின்றன? என்னதான் அவர்களுக்கெல்லாம் பிரச்சனை?
வருகிறேன். முதலில் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் தலைவர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதுவேன் என எண்ணிவிட வேண்டாம். உண்மையை பொய்யை விட்டு விலக்கிப் பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை,  உண்மை கமலிடம் இருந்தாலும் சரி முஸ்லிம்களுடன் இருந்தாலும் சரி.
இந்த நோக்கில் முஸ்லிம் தலைவர்களின் கருத்தையும் பிற தலைவர்கள், சமூகநல ஆர்வலர்களின் கருத்தையும் அணுகினேன். எனக்கு புரிந்ததை இங்கு எடுத்து வைக்கிறேன். காரணம் படத்தைப் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கானவர்கள்  போல் நானும் ஏதோ கருத்து சொல்லிவிட்டேன் என்பதற்கு இல்லை. நண்பர்களும்,தெரிந்தவர்களும் என்னிடம் கேட்கிறார்கள். எதற்காக நீங்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறீர்கள் என்று (உண்மையில் இதை பற்றிய விவரம் தற்பொழுது தான் முழுமையாகத் தெரியும்.) துஎன்னை நோக்கி சுட்டுப்படுவதால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலை எனக்கு உள்ளது.  அதனால் இந்தப் பதிவு அவர்களுடன்  கருத்துகளை பறிமார ஒரு தளம்.
திரைப்படங்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது பார்ப்பவர் மனதில் மிக எளிதில் தாங்கள் கொண்டு வரும் கருத்தை ஏற்றுவது. மற்ற ஊர்களை விட நம் தமிழகத்தில் இக்கருத்துகள் நாட்டையே ஆட்சி செய்யும் அளவிற்கு வித்திட்டுள்ளன என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டியது.
விஸ்வரூபம் படத்தை கமல் எண்டெர்டெய்ன்மெண்ட் எனக் கூறினாலும் அது கருத்துக்களை தாங்காத படம் என்றெல்லாம் கூறிவிட முடியாது. நம் வாழ்க்கையில் Just Enjoy and Forget (மகிழ்ந்திடு மறந்திடு) என உண்மையில் எந்த நிகழ்வுகளும் இல்லை. எல்லாவிதமான மகிழ்விப்புகளும் ஏதோ ஒரு கருத்தை விதைவிக்கின்றன. அந்தவகையில் விஸ்வரூபம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது தெரிவிக்க விரும்பும் கருத்து என்ன?
இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு முஸ்லிம் என்றாலே குலை நடுங்கும் அளவுக்கு அவர்களுக்கு வன்முறை அவர்களது தனியுடைமை ஆக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் குத்து வெட்டு கொலை. ஐந்து நிமிட்த்திற்கு ஒருமுறை அல்லாஹு அக்பர்’ (இறைவன் மிகப்பெரியவன் என்று பொருள்) எனும் சொல் அவர்களால் மொழியப்படுகிறது. இது போக இடையிடையே பல குரான் வசனங்கள் வேறு.  ஒருவனைக் கொலை செய்யும் முன் குரானில் இருந்து சில வசனங்கள் ஓதப்படுகின்றன. இன்னும் ஒரு டஜன் ஓட்டைகள். இது தான் வில்லன் குரூப்பிற்கு கமல் இப்படத்தில் அளித்திருக்கும் குணாதிசயம்.
இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. பதில், இது தமிழக முஸ்லிம்களை எங்கும் புண்படுத்தவில்லையே. ஆஃப்கானிய தாலிபான்களைத் தானே காட்டுகிறது. ஆஃப்கனில் வாழும் தாலிபான்கள் அனைவரும் முஸ்லிம்கள் தானே. பிறகெப்படி மாற்றிக் காண்பிக்க முடியும். ஆஃப்கனில் கதையைச் சொன்னால் உங்களுக்கு  என்ன?
இங்கே நாம் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இந்தியாவில் வாழ்பவன் இங்கிலாந்தில் வாழ்பவன் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் தான், அவன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி.
ஆஃப்கனிய தாலிபன்களைக் கூறுகிறோம் என்று சொல்லிக் கொண்டு குரான் போன்ற உலக முஸ்லிம்களுக்கு பொதுவான ஒரு விசயத்தின் மீது கைவைப்பது அனைவரையும் பாதிக்கிறது.  இப்படத்தை பார்த்துவிட்டு வரும் சகோதரருக்கு அல்லாஹு அக்பர்என்றால் எது நினைவுக்கு வரும். தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் சொல் எனத் தோன்றும். மக்களுக்கு புரிய வைப்பதை விட்டுவிட்டு குழப்பம் ஏற்படுத்துவது தவறு.
சரி, ஆஃப்கனின் நிலையை இப்பட்த்தில் படம் பிடித்துள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இன்றைய ஆஃப்கனில் தாலிபன்களின் ஆட்சி கிடையாது. அது என்றோ மக்களால் தூக்கி எறியப்பட்டுவிட்டது.இப்படத்தில் சிறுவன் கூட ஆயுதப் பயிற்சி பெறுவதுபோல் ஆஃப்கன் பற்றி புணையப்பட்டுள்ள பிப்பம் மிக மிகத் தவறானது. முற்றிலும் கற்பனை கலக்கப்பட்டது. ஆஃப்கன் மக்களையும் வாழ்க்கை முறையை தெரிந்தவர்கள் என்ற முறையில் யார் இதற்காக குரல் கொடுப்பார்கள்? இங்கு வாழும் முஸ்லிம்கள் தானே.
சரி தாலிபான்கள் ஆட்சியை பிரதிபலிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா? எந்தத் தாலிபன் குரான் வசனத்தை ஓதி தலை வெட்டுகிறான். அரபியில் பேசுவது எல்லாம் குரான் வசனமாகிவிடுமா? அதாவது எல்லா தமிழ் பேச்சுக்களையும் திருக்குறள் என ஏற்றுக்கொள்ள இயலுமா? மொழி தெரியாதவருக்கு இது ஒன்றும், பிரச்சனை இல்லை. தெரிந்தவர் எதிர்ப்பு தெரிவிக்கத்தானே செய்வார். படத்தில் இந்த இடத்தில் லாஜிக் இல்லை. குரானில் இருந்து பல வசனங்களை தாலிபன்கள் பயன்படுத்தி கொலை செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்க இயலும். குரான் அறிந்த முஸ்லிம்களைத் தவிர.
படத்தின் எதிர்ப்புக்கு முக்கியமான அம்சம். யாரைச் சித்தரிக்கிறோம் என்பதில் கமல் காட்டி இருக்கும் தடுமாற்றம் தான். அது தாலிபன்களையும் தெளிவாகச் சுட்டவில்லை ஆஃப்கனியர்களையும் தெளிவாக சுட்டவில்லை. எந்தக்காலம் என்பதும் மிக மிக முரண்பாடுகளுடன் பதியப்பட்டுள்ளது. அதனால் தான் தங்களைச் சுட்டுவது போல் பலரும் எண்ணுகின்றனர்.இதுதான் இப்படம் எதிர்க்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம். நம் தமிழ் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் எப்பொழுதுமே கொடுக்கப்படுவதில்லை. அதுதான் இந்த புதிய படத்திலும் பிரச்சனை. கதைக்கான கள ஆராய்ச்சி பெரிதாக இல்லை. உலகத்தரத்தை ஆராய்ந்தால் நமக்கு இது நன்கு விளங்கும்.
இப்படத்தை சற்று ஒதுக்கிவிட்டு பொதுவான தளத்திற்கு சிறிது வருவோம். கருத்து சுதந்திரம். ஒருவன் தனக்கு சரியாகப் பட்ட கருத்தை சுதந்திரமாக சொல்வதற்கு கருத்து சுதந்திரம் என்று பெயர். அக்கருத்துகள் பிறர் நம்பிக்கைகளை தாக்க வண்ணம் இருந்தால் எல்லாம் சரி. தாக்கினால் தாக்குதலுக்குள்ளானவன் வன்முறையில் இறங்காமல் தன் கருத்தைச் சொல்லவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அவனுக்கும் முழு சுதந்திரம் உண்டு. அதேபோல், தணிக்கை குழு எனும் சென்ஸார் போர்டின் தீர்ப்பே இறுதியானது என்றும் கூறப்படுகிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. டாம் 999 படம் பற்றி கடந்த வாரம் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு பலமான எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு சப்பைக் கட்டெல்லாம் கட்ட முடியாது.
இரண்டாவது இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இதில் அரசியலும் இல்லாமல் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் இப்படத்தில் தடை செய்யப்படும் அளவிற்கு இதில் ஒன்றும் பெரிதாக இல்லை. அதுவும் திரைக்கு வருவதற்கு முன்பே யாரும் பார்ப்பதற்கு முன்பே தடை கோருவது இதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ முஸ்லிம் அமைப்புகள் சொல்லிவிட்டனரே என்று அக்கரை எடுத்து தடை கோரி வழக்குத் தொடரும் டைப் இல்லை நம் முதல்வர். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதான், இவர்களும் மனுக்கொடுக்க அதை வைத்து ஜெ அழகாக ஒரு மூவ் அடித்துவிட்டார். இந்த மூவ்வை வைத்து தமிழக அரசு ஏதோ சாமர்த்தியமான சதுரங்கம் விளையாடுவது அனைவருக்கும் புரிந்ததே. இன்னும் சில காலத்தில் இதன் நோக்கம் புரிந்துவிடும்.
இறுதியாக, இப்படத்தில் கமல் கவனக் குறைவாக அல்லது மிக கவனமுடன் தெளிவாக சுட்டப்படாத (இதை ஜாடையாகச் சொல்லப் படுவதாகவும் கொள்ளலாம்) சில தவறுகள்  அவரை நெரிக்கின்றன. அதே போல் படத்தின் கதையும் ஆழமாக இல்லை. நுனிப்புல்லைத் தான் மேய்கிறது. தாலிபன்கள் பற்றிய சித்திரத்தை முதலில் துவங்க வேண்டும் என்றால் அவர்களை சோவியத்துக்கு எதிராக முதன்முதலில் உருவாக்கிய அமெரிக்காவின் கோர முகத்தைச் சித்தரிக்க வேண்டுமே. அல்லது சித்தரிக்காமல் அமைதியாவது காக்க வேண்டும். அதை விடுத்து ஹாலிவுட் ரேஞ்சில் தாலிபன்களை உருவாக்கிய அமெரிக்கா நல்ல பிள்ளை என்று படம் காட்டுவது தேவையற்ற வேலை. அரசியல் பேசமாட்டேன் என்று கமல் சொல்லும் கமல் தன் படங்களை முழு அரசியலை வைத்து கட்டமைப்பது வேடிக்கை.
தற்போது புதிய பிரச்சனை ஒன்று வெடித்துள்ளது. பிராமணர்களிடம் இருந்து. உனைக் காணாது எனத் தொடங்கும் பாடலின் நடுவில் கமல் தன் மனைவிக்கு சிக்கன் சமைப்பதைப் போல் ஒரு காட்சி வரும் அதை அவர் ருசிபார்க்காமல் ஆண்ட்ரியாவை ருசி பார்க்க வைப்பார். அது தான் அவர்கள் கொந்தளிப்புக்கு காரணம். இதன் மூலம் கமல் அமெரிக்காவில் பிராமணர்கள் மார்டனாக ஆகிவிட்டார் என சுட்ட வருகிறார். அமெரிக்க மார்டன் தனத்தைச் காட்ட ஏற்கனவே கதையின் நாயகிக்கு இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதைப் போல் காட்டுவதே போதும். உண்மையில் இந்த சிக்கன் காட்சி தேவையற்றது. பார்ப்பதற்கு வழிய உள்ளே திணிக்கப்பட்ட்தைப் போல் தான் தெரிகிறது.இது அவர்களின் வாதம். எதிர்ப்புகள் இன்றி அப்படியே அனைவரும் ஏற்றுக்கொண்டால் உன்னதம் கிடைக்காது எந்த எதிர்ப்பாக இருந்தாலும் ரிலீஸுக்குப் பிறகு வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.. பொதுமக்கள் படம் பார்த்துவிட்டு அவர்கள் கருத்தை சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் நவீன உத்திகளை பயன்படுத்தி இருந்தாலும் கதையில் பல்வேறு தடுமாற்றங்கள் உள்ள புதிய பானையில் ஊற்றப்பட்ட பழைய கள் விஸ்வரூபம். இது கமலுக்கு எப்போதோ புரிந்துவிட்டிருக்கும். எப்படியும் தவறை திருத்திக் கொண்டிருப்பார் என நம்புவோம்.
இந்த உன்னதம் நோக்கிய அவரது முதல் தொடக்கம் தடுமாற்றம் இருந்தாலும் நல்ல முயற்சி தான். 
பா பித்து

பா பித்து

பல வருடங்களாகவே வெண்பாக்களின் மீது தீராத ஈர்ப்பு உண்டு. கம்பனது இராமாயனத்தின் சொல்லாடலைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைவிட சிலேடை வெண்பாக்கள் இன்னும் ஓர் படி மேல். எப்படி தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்களோ என யோசித்திருக்கிறேன். வெண்பாக்களின் தொடர்ந்த வாசிப்பு பித்துப் பிடிக்க வைத்துவிட்டது. விளைவு, வெண்பா எழுதத் துணிந்தது தான். இன்று எழுதிய இரண்டு சிலேடை வெண்பாக்களை இங்கே பகிர்ந்துள்ளேன். வெண்பா எழுதத் துணியும் முதல் முயற்சி இது. பல இடங்களில் நிச்சயம் பிழைகள் இருக்கும். பிழை பொறுக்க வேண்டுகிறேன்.

சிலேடை வெண்பா என்றால் உங்களுக்கு என்னவென தெரிந்திருக்கும் என நம்புகிறேன், இருந்தாலும் இன்னோரு முறை.

ஒரே பா இரண்டு விதத்தில் பொருள்படும் விதம் இயற்றப்படுவது சிலேடை எனப்படும்.

எடுத்துக்காட்டாக, “வெள்ளை மழை” எனும் சொல்லை எப்படி டபுள், ட்ரிபிள் அர்த்தத்தில் நம்மவர்கள் விளங்குகிறார்களோ, அதே பாணியில் இரு பொருள்படும் படி ஒரு வெண்பாவை இயற்றுவது சிலேடை வெண்பா.

மேலும் உங்களை குழப்ப விரும்பவில்லை. போகப் போகப் புரிந்துவிடும் என்பதால்.

முதல் பா:

வலியச் சென்றால் விலகும் விலகிச்
சென்றால் வலியும் அறியாதோரைப் பணித்து
மெய் அறிந்தோரிடம் பணியும் இளம்
பெண்ணிற்கு நேர் பார்
– பாபா பகுர்தீன்

பொருள்:
வலிய வலிய நாம்  பின்னால் சென்றால் விலகி ஓடும், 
வேண்டாம் என விலகி ஓடினால் வலிய வலிய நம் பின் வரும்,
அறியாதோரை அடிபணித்து
அறிந்தோரிடம் அடிபணியும்
இவ்வாறு தான் இளம் பெண்ணும் உலகமும். (பார்-உலகம்)
இப்பாவை முதலில் இளம் பெண் என்று வைத்து வாசிக்கவும், பின் உலகம் என வைத்து வாசிக்கவும்.

இரண்டாம் பா:

மூழ்கையில் நிலையிலா முடிகையில் நினைவிலா
அமிழ்கையில் துளி எழுகிலா சந்திக்குச்
சந்தி விரவி நிற்கும் இக்காலக்
கல்விக்கு நிகர் கள்
– பாபா பகுர்தீன்
பொருள்:
அதனுள் மூழ்கி இருக்கும் பொழுது நிலையில்லாத தன்மையிலும்
அதனுள் இருந்து வெளிவந்தவுடன் மூழ்கி இருந்த பொழுது நடந்தது என்னவென நினைவில் இல்லாத தன்மையிலும்
உள்ளே அமிழ்ந்துவிட்டால் அல்லது அமிழ்க்கப்பட்டால் எழ இயலா தன்மையிலும் 
தெரு முக்குக்கு முக்கு ஊடுருவி நிற்கும் வகையில் (முக்குக்கு முக்கு நிற்கும் எஞ்சினீரிங் கல்லுரிகள் மற்றும் டாஸ்மாக்கள்)
இக்காலக் கல்வியும் கள்ளும் ஒன்று
இப்பாவை முதலில் இக்காலக் கல்வியை வைத்து வாசிக்கவும், பின் மது, கள் என வைத்து வாசிக்கவும்.
வாசித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சித்தார்த்த சித்தாந்தம்

சித்தார்த்த சித்தாந்தம்


தமிழ் பேப்பரில் வெளிவரும் போதிதர்மர்  தொடருக்காக 
பௌத்தம் மற்றும் கௌத்தம புத்தர் பற்றி நான் எழுதியவை இங்கு எடிட் செய்யப்படாத வடிவில்.


கடவுள் வாழ்த்து:


பௌத்தம் போதிதர்மர் பின்பற்றிய மதம் மட்டுமல்ல. லெஃப்ட்டில் புகுந்து ரைட்டில் வெளியேறிய மதம். எப்படி என்பதை பின்னால் சொல்கிறேன். இப்போதைக்கு பௌத்தம்.


ஒரு மதத்தை அறிய அதன் கடவுள் கோட்பாட்டை முதலில் அறிய வேண்டும். ஏனென்றால் மதங்கள் அனைத்தும் கடவுளில் இருந்து தான் தங்கள் கொள்கைகளை விரிக்கின்றன.


”புத்த மதத்தில் யார் கடவுள்?”.


கெளத்தம புத்தரா? இல்லை வேறு யாருமா?


ஒரு சமூகம் அறத்தில் தட்டொழியும் பொழுது, அச்சமூகத்திலிருந்தே ஒரு விழிப்படைந்த மனிதர் தோன்றுவர். அவர் அறத்தை நிலைநாட்டி தன் சமூகத்தாரை நேர்வழியில் கொண்டு செல்வார். அவ்வாறு விழிப்படைந்தவரே 

புத்தர் எனப்படுவார். 

சித்தாந்த கெளத்தமரும் அவ்வாறு உலகில் தோன்றிய பல புத்தர்களில் ஒருவராவார். இவ்வுலகில் கெளத்தமருக்கு முன்னும் பின்னும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகத்தில் பல புத்தர்கள் தோன்றியுள்ளனர். 


கெளத்தமருக்கு பின் ’மைத்ரேயர்’ எனும் புத்தர் தோன்றுவார் என்றும் அவர் தன் சமூகத்தினரை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் 


செம்மைப்படுத்தி உலகத்திற்கே ஒரு வரமாவார் என்றும் புத்தர் முன்னறிவிப்பு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுவே புத்த மதத்தின் புத்தர்கள் பற்றிய நம்பிக்கை. அப்படியென்றால் கடவுள்?


எதா எதாஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத; அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ர்ஜான்ம் அஹம்2


(பொருள்: பாரத நாட்டில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ; அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் (கிருஷ்ணன்) அவதரிப்பேன்.


எனும் பகவத்கீதை உபதேசத்தை எடுத்து ஹிந்துக்கள் இன்று புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாகக் கொண்டாடுகின்றனர். புத்தரை கடவுளாக பாவிக்கின்றனர். அப்பொழுது புத்தரை கடவுளின் அவதாரமாகக் கொள்ளலாமா?


பௌத்த மதத்தில், புத்தர் கடவுளின் அவதாரம் எனும் கருத்திற்கு மட்டுமல்ல புத்தர் கடவுள் எனும் கருத்திற்கே இடமில்லை. புத்தர் அவர்களுக்கு கடவுளுமில்லை, கடவுளின் அவதாரமும் இல்லை. ஜஸ்ட் நம்மைப்போல் ஒரு மனிதர் அவ்வளவே. நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு. நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்; அவர் விழிப்படைந்துவிட்டார். அவ்வளவே. 


விழிப்படைந்தால் தூங்கிக்கொண்டிருக்கும் நாமும் புத்தரே. அது என்ன விழிப்பு. மூடிக்கொண்டிருக்கும் இமைகளை திறப்பதா?, இல்லனே அது வேறுவகை விழிப்பு. பிரபஞ்ச விழிப்பு. முழிப்பதை எல்லாம் அடுத்த தலைப்பில் ஆற அமர காணலாம். இது பௌதத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதி.

அப்போ புத்தமதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றி கலந்துகொண்டதாக குறிப்பில்லை. இறைவன் உள்ளார் என்றும் கூறியதில்லை. இல்லை என்று கூறியதுமில்லை. கடவுள் விசயத்தில் புத்தர் நடுவுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் “புத்த மதம் கடவுள் விமர்சனமற்ற மதம்” . ’இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையரா.


ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பெளத்தர்கள் மறைமுகமாக கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லை இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ”கடவுள் இருக்கிறாரா?” என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.

ரொம்ப குழப்பிக்காதீங்க. ஒரு கதை கேட்போம்.

பகல், முற்பகல்.


புத்தர் தன் முதன்மை சீடர் அனந்தருடன் ஒரு கிராமத்தில் இருந்தார். ஒரு மனிதன் அவரிடம் மூச்சிரைக்க ஓடி வந்தார். கேட்டார் ஒரு கேள்வி.


“கடவுள் உள்ளாரா?”


நாம் அங்கு இருந்திருந்தால் புத்தரிடம் என்ன வினா தொடுத்திருப்போமோ அதே வினா. புத்தர் என்ன பதிலளிக்கிறார் என்று பார்ப்போமே.


“இல்லை, நிச்சயமாக கடவுள் இல்லவே இல்லை” புத்தர் சொன்னார்.


வந்த மனிதர் குழம்பிய நிலையில் அங்கிருந்து சென்றார். புத்தரின் வார்த்தைகளை கேட்ட அனந்தர் தம்மை நாத்திகர் என வரைவறுத்துக் கொண்டார்.


வெயில் கொளுத்தும் மதிய வேளை. காட்டுவழியே பயணம் மேற்க்கொண்ட அவர்கள் மற்றொரு சிற்றூரை அடைந்தனர்.


அங்கு மற்றொரு மனிதர் புத்தரை நோக்கி “கடவுள் உள்ளாரா?” எனும் கேள்வியுடன் அனுகினார்.


புத்தர் அமைதி தழும்பும் முகத்துடன் “ஆம், கடவுள் உள்ளார், நிச்சயமாக உள்ளார், அதிலென்ன சந்தேகம்” என்றார்.


இம்முறை அம்மனிதன் மட்டும் குழம்பவில்லை, அனந்தரும் சேர்ந்து குழம்பினார். அதனை வருணிக்க என்னால் இயலவில்லை. எனவே, நம்மைப்போல் என்று வைத்துக்கொள்வோமே.


மாலை, கடிகாரம் இல்லாத குறையை பறவைகள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பி அறிவித்தன. புத்தரும் அனந்தரும் குறிப்பறிந்து தங்கள் இருப்பிடத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு மனிதன் புத்தரைத் தடுத்து நிறுத்தினான்.


”ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், தங்களிடம் கேட்கலாமா?”


“கேளுங்கள், அறிந்தால் சொல்கிறேன்”


“கடவுள் என்றொருவர் உள்ளாரா?”


சிரித்த முகத்துடன் புத்தர் அம்மனிதரது முகத்தை நோக்கினாரே தவிர, வாய் திறந்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அம்மனிதனும் ஏதோ தன் ஐயம் தெளிவுபெற்றவன் போல் சாந்தத்துடன் விடைபெற்றான்.


அனந்தரின் குழம்பிய மனம் மேலும் கலங்கியது. அதற்கேற்றாற் போல் தெளிந்த வானை இருள் கவ்வியது. கலக்கம் தெளியும் முன் அவர்கள் இலக்கும் வந்தது. அதாங்க அவுங்க வீடு வந்துருச்சாம்.


புத்தர் உறக்கத்திற்கு ஆயத்தமானார். நம் நிலையில் இருந்த அனந்தருக்குத் தூக்கம் எப்படி வரும்?


“தாங்கள் மனம்போன போக்கில் போபவரல்ல. தங்கள் ஒவ்வொறு செயலுக்கும் பொருள் இருக்கும் என்பதையும் நான் அறிந்தவனே. இன்று காலை முதல் தங்களுடனேயே நான் என் பொழுதைக் கழித்தேன். ஒரே கேள்விக்குத் தாங்கள் அளித்த மூன்று வெவ்வேறு பதில்கள் என்னை குழப்பத்தில் ஆழ்த்தின. தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள்” மனதில் இருந்தவற்றை பளீரென புத்தர் முன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கொட்டினார்.


”க்ஹ் க்ஹ்” என்று குரலை அட்ஜஸ்ட் செய்து இப்படி கேட்டுப்புட்டானே என்று மனதினுள் அனந்தரை திட்டியவண்ணம் ”அது என்னனா தம்பி”னு மழுப்ப ஆரம்பிக்கும் இன்றைய அரசியல்வாதிகள் அல்ல புத்தர். அவர் தான் விழிப்படைந்தவர் ஆயிற்றே.


அனந்தர் தன் கேள்வியை முடிக்கும் முன் புத்தர் வாய்திறந்தார்.


“அனந்தனே! என்னிடம் காலையில் வந்த மனிதர் ஆத்திகர். தன் பெற்றோர் உற்றோர் கூறியதை அப்படியே ஏற்று கடவுள் இருக்கிறார் எனற முடிவுக்கு வந்தவர்.


மதியம் வந்தவர், ஒரு நாத்திகர். தன் இளவயதில் ஏற்பட்ட நிராசைகளாலும் ஏமாற்றத்தாலும் கடவுள் இல்லை என்ற நிலைக்கு வந்தவர்.


மாலை வந்தவர் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று நன்கு சிந்தித்தவர், ஆராய்ந்தவர். சில சமயம் கடவுள் இருப்பதைப் போலவும் சில சமயம் இல்லாதது போலவும் உணர்ந்து குழம்பி தன் குழப்பத்தைப் போக்க என்னை நாடியவர். ஆகையால் அவருக்கு என் புன்னைகையை பதிலாய் பரிசளித்தேன் மற்றவர்களுக்கு எதிர்மறையாய் பதிலளித்து சிந்திக்குமாறு இலைமறை காயாய் தெரியப்படுத்தினேன்.” என்று ‘டாட்’ வைத்தார்.


இக்கதையால் நமக்கு தெரியவரும் மாபெரும் கருத்துக்கள் இரண்டு.

முதலிரண்டு மனிதர்களுக்கான பதிலின் மூலம் “எதையும் அப்படியே எற்காமல் சிந்தனைக்கு உட்படுத்தி ஆராய வேண்டும்” என்ற கருத்தையும்,
கடை மனிதனுக்களித்த பதிலின் வாயிலாக “என் இனமடா நீ, நானும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று உன்போல் தேடுபவனே” என்ற கருத்து ஒன்றையும் மெளனத்தால் புத்தர் முன்வைக்கிறார்.

பெற்றோரோ, ஆசிரியரோ, தலைவர்களோ கூறும் எந்தக் கருத்தையும் உய்த்துணர ஒருவன் தன்னிடம் உள்ள தன்னிகரில்லா கருவி ஒன்றை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார் புத்தர்.


அக்கருவி ஒன்றும் நமக்கு புதிதல்ல. எதை செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்று நமக்கு கட்டளையிடும் மனமே அது.


குரங்கு போல் தாவும் மனத்தை அடக்கினால் நாம் சொல்வதை கிளிப்பிள்ளைபோல் கேட்டு திருப்ப சொல்லும் என்று கறப்பூரம் அடிக்காத குறையாய் சொல்கிறார் புத்தர். அதனை அடக்குவது அவ்வளவு சுலபமா என்ன? மனதை அடக்க சில வழிமுறைகளையும் விதிமுறைகளையும் போதிக்கிறார் புத்தர். இப்போதனைகளின் தொகுப்பே புத்த மதம். அதன்படி ஒழுகுபவனே பெளத்தன். ஒழுகி விழிப்படைபவனே புத்தன்.


மனத்தை நாம் சொல்வதைக் கேட்கும்படி எவ்வாறு பழக்குவது?

இக்கேள்விக்கு பதில் காண புத்தரின் சரித்திரத்தை ஆழமாக அறிதலே போதுமானது. என்ன ஆழத்தை ஆற அமரத் தழுவத் தயாரா…
*
தேடலும் பதிலும்:

கௌதம புத்தர், கிறிஸ்து பிறப்பதற்கு தோராயமாக 536 (சிலர் 563 என்றும் கூறுவர்) ஆண்டுகளுக்கு முன் தற்போது நேபாளத்தில் உள்ள லும்பினி எனும் பூங்காவில்5 பிறந்தார். வளர்ந்ததெல்லாம் கபிலவஸ்துவில். தற்போது கபிலவஸ்து உத்தர பிரதேசத்தில் உள்ளது.


கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தாந்தர். சித்தாந்தர் என்பதற்கு நினைத்ததை அடைபவன் என்று பொருள். அவர் சாக்கிய அரச குலத்தில் பிறந்தவர். அவரது தந்தை சுத்தோதனர். ஒரு குறுநில மன்னனாக இருந்தவர், கௌதமரின் பிறப்பிற்கு பின் கோசல நாட்டை வெற்றிகொண்டு முடி சூடினார். அரசி மாயா கௌதமரின் தாயார். இவர் பண்டைய நேபாளத்தின் தேவதகா அரச பரம்பரையில் பிறந்தவர். இவரை மஹா மாயா, மாயா தேவி என்றும் அழைப்பர்.


சுத்தோதனாவிற்கும் மாயாவிற்கும் திருமணமாகி 20 வருடமாக குழந்தை இல்லை. அந்த நிலையில், ஒரு நாள் பௌர்ணமி இரவு மாயா ஒரு கனா கண்டார். அதில் அவரை நான்கு தேவர்கள் இமய மலையில் உள்ள அநோதட்டா எனும் ஏரிக்கு கொண்டு செல்வது போல் உணர்ந்தார். அங்கு நீராடிவிட்டு வெளியில் வந்த அவரை சொர்கத்து உடையையும், வாசனை திரவியத்தையும் பூக்களையும் கொண்டு தேவர்கள் அலங்கரிக்கக் கண்டார். பின்னர் ஒரு வெள்ளை யானைக்குட்டி அவரை மும்முறை சுற்றி வந்து அவரது வயிற்றுக்குள் புகுவதைக் கண்டார். பட்டென துயில் கலைந்தெழுந்தார். தான் கர்பபமானதை உணர்ந்த அவர், பிறக்கவிருக்கும் குழந்தை துஷித்த சுவனத்தின் போதிசத்துவன் என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார். பௌத்த சித்தாந்தத்தில் போதிசத்துவர் என்பதற்கு ‘போதி நிலையில் வாழ்பவர்’ என்று பொருள் கொள்ளலாம். ‘போதிசத்துவர்’ என்பதை ஒவ்வொரு


புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் வழியில் புத்தரின் தாய் பிரசவவலி ஏற்பட்டு இந்த பூங்காவிலேயே புத்தரைப் பிரசவித்தார்.

பௌத்த பிரிவிலும் ஒவ்வொரு விதமாக விளங்குகின்றனர். இதைப் போல் போதிதர்மரின் இயற்பெயராகக் கருதப்படும் ’போதிதாரா’ எனும் பெயருக்கு போதிநிலையின் ’விண்மீன்’ எனப் பெயர்.

குழந்தையை தாய் வீட்டில் பெறுவதல்லவா இந்திய மாண்பு. எனவே மாயா தேவி தன் புகுந்த வீடான கபிலவஸ்த்துவை விட்டுப் பிறந்த வீடான நேபாளத்திற்கு புறப்படுகிறார். போகிற வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு லும்பினியில் கௌதமரை பிரசவிக்கிறார். அவருடைய துர்பாக்கியம், சித்தாந்தர் பிறந்து ஏழே நாட்களில் மரணமடைகிறார்.


அரசியாரின் மரணதுக்கத்தையும் மறந்து, ஒருமாதம் நாடே தங்கள் இளவரசனுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறது.


குழந்தை பிறந்தவுடன் முதல் வேலை என்ன?


ஆருடம் பார்ப்பது. எவர் தான் இதற்கு விலக்கு.


கௌதமர் பிறந்து சில நாட்களிலேயே அவருடைய தந்தை எட்டு பிராமணர்களை அரண்மனைக்கு வரவழைத்தார். குழந்தையாய் இருந்த கௌதமரை ஆராய்ந்த அவர்கள் ஒரு அதிர்ச்சியான தகவலை அளித்தனர். சித்தாந்தர் ஒன்று அரசனாவார் அல்லது துறவியாவார் என்று. தூக்கி வாரிப் போட்டது சுத்தோதனருக்கு, இவ்வளவு நாள் கழித்து பிறந்த தன் மகனை துறவியாக்க விரும்புவானா ஓர் அரசன். யோசித்தார், மிகத் தீவிரமாக யோசித்தார். ஒரு அருமையான யோசனையும் உதித்தது. அன்று முதல் சித்தாந்தர் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டார். இசையும், பொன்னும்,பெண்களும், போதையும் சித்தாந்தரை சூழ்ந்தன. போகங்களுக்கு அடிமை ஆகிவிட்டால் கௌதமரால் துறவு மேற்கொள்ள இயலாது என்று தப்பு கணக்கு போட்டார் சுத்தோதனர். தான் எப்படி வளர்க்கப்பட்டதாக புத்தரே கூறும் வார்த்தைகளைக் கேளுங்கள்.


“நான் தனிமையில் வாழ்தவன், வளர்ந்தவன். ஆம் தனிமையில், மாபெரும் தனிமையில், முழுமையான தனிமையில். எனக்காக எந்தை பல்வேறு தாமரை குளங்களை நிர்மானிதிருந்தார். அவற்றில் சில வெண்தாமரைகளையும், சில செந்தாமரைகளையும், சில ஊதா நிற மலர்களையும் உடையவை. நான் வாரணாசி நகரில் இருந்து வராத எந்த சந்தன கட்டைகளையும் பயன்படுத்தியதில்லை. என் தலைப்பாகை, தளர்வாடை, கீழாடை, மேலங்கி அனைத்தையும் வாரணாசியிளலிருந்தே தருவித்தேன். நான் உபயோகித்த அனைத்து பொருட்களும் இறக்குமதி செய்ய பட்டவை. என் மீது தூசி, வெயில், மழை, குளிர் படாமல் குடை பிடிக்கவே அல்லும் பகலும் பலர் பணியிலிருந்தனர்.


என் கைவசம் முன்று அரண்மனைகள் இருந்தன. மழைகாலத்திற்கொன்று வேனிர்காலதிற்கொன்றுமாய். மழைகாலங்களில் அந்தப்புரப்பெண்களுடன் என் பொழுது கழிந்தது நான் ஒரு முறை கூட என் அரண்மனையைவிட்டு வெளியே வந்ததில்லை.


என் நாட்டு மக்கள் தங்கள் வேலையாட்களுக்கு குருணை அரிசி சோற்றையும், குழைந்த பருப்பையும் உணவாய் தருவார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், என் வீட்டிலோ சேவகர்கள் கோதுமையாலும் அரிசியாலும் மாமிசத்தாலும் உணவு படைத்துண்டனர்.


அதிர்ஷ்டத்திலும், தனிமையிலும் வாழ்ந்ததால் எனக்கு உடல் முதிர்ச்சியைப் பற்றியோ, பிணியைப்பற்றியோ, இறப்பைப்பற்றியோ அறிமுகம் இல்லை. ஆதலால், என் இளம்பருவத்தில் முதன்முறையாக முதியோர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும், ஊனமுற்றோரையும் சந்தித்தபொழுது அதிர்ச்சியடைந்து பயந்தேன். நமக்கும் இதல்லாம் வருமே என்றெண்ணி 

சஞ்சலமடைதேன். மிரண்டேன் என்றே கூற வேண்டும்.“

இவ்வாறு உலகமே தெரியாவண்ணம் கௌதமர் வளர்க்கப்பட்டார். அவரை ஆளாக்கியவர் மாயா தேவியின் தங்கை மஹா பிரஜபதி. கௌத்தமரின் பதினாறாம் வயதில், யசோதரா எனும் சமவயது யுவதியுடன் திருமணம் இனிதே நிகழ்ந்தது. இல்லறத்தின் சான்றாக அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான் (ராகுலன் என்று பெயர்).


சித்தாந்தருக்கு வயதும் 29 ஆனது. எப்படியாவது அரண்மனை கோட்டை சுவற்றிற்கு அப்பால் உள்ள உலகை காணவேண்டும் என்ற ஆவல் அவரை குடிகொண்டது. அதற்கும் சமயமும் கிட்டியது. தன் மக்களின் நிலை காண கௌதமர் புறப்பட்டார், அவருடைய தேர்ப்பாகன் சன்னாவின் துணையுடன்

வெளியேவர் முதலில் ஒரு நோயாளியை கண்டார். “ஏன் இவர் இவ்வாறு உள்ளார்?” என்று பாகனிடம் வினவினார். பாகனும் விளக்கமளித்தான். இவ்வாறு அவர் இறப்பையும், பிணியையும், உலக துன்பங்களையும் நேரடியாக கண்டுணர்ந்தார். அவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதை நாம் அவர் 
வார்த்தைகளிலேயே கடந்த பத்தியில் உணர்ந்தோம்.

இதன் பிறகு கௌதமர், உலக துன்பங்களுக்கான விமோச்சனத்தை தேடினார். பல தகவல்களையும் புரட்டினார். இதோ அவர் வார்த்தைகளில்,

“நான் பிரபஞ்ச விழிப்படையும் முன் பிறப்பு, முதிர்வு, பிணி, துக்கம், இறப்பு ஆகியவற்றினூடே இன்பத்தையும் தேடினேன். திடீரென என்னுள் ஓர் கேள்வி பிறந்தது, “நான் ஏன் பிறக்க வேண்டும்?, என் இறக்க வேண்டும்? பிறவாமை, பிணியாமை, இறவாமை போன்றவற்றை அடைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று எனக்காக சிந்திக்க ஆரம்பித்தேன். உலக பிணியை வெல்லும் வழிகளை நான் ஆராய்ந்தேன். இதன் விளைவாக சில நாட்களிலேயே, என் இளமை என்னும் வரத்தை வீணடிக்காமல் பயன்படுத்த எண்ணினேன். துறவு பூண்டேன். என் மனைவியும், தந்தையும் மிகவும் நேசித்த என் தலைமுடியையும், மீசையையும், தாடியையும் மழித்தேன். என் வீட்டாரின் கண்ணீரையும் அறிந்து நான் வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினேன். துறவுரி தரித்து.”

புத்தரது காலத்தில் இரு பெரும் தத்துவவாதிகள் கூட்டம் இருந்தது. முதல் வகையைச் சார்ந்த தத்துவவாதிகள் வேதாந்திகள். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின்படி வாழ்பவர்கள். தங்கள் பாவங்களை போக்கவும், கடவுளை திருப்திபடுத்தவும் யாகம் வளர்த்து பிற உயிர்களை பலி கொடுப்பவர்கள். இன்றைய இந்து மதத்தையும் வேதாந்தத்தையும் ஒன்றென கொண்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். இவற்றை பற்றி விவரமாக பின்னர் பார்ப்போம்.இன்னொரு தத்துவவாதிகள் கூட்டம் சமணர்களை உள்ளடக்கியது. இவர்கள் வேதங்களின் அதிகாரத்தை வினவினர், குறை கண்டனர். இறைவணக்கம் அவசியமற்றதாக கூறினர். ஆனால். வேதாந்திகளைப் போலவே சமணர்களும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டனர். ஒருவனின் செயலே அவன் விதியை நிர்ணயிபதாக நம்பினார். ஆனால், வேதாந்திகளைப் போல் முக்தி அடைய அவர்கள் பலிகளையும், இல்லறவாழ்வை தேர்ந்தெடுக்கவில்லை மாறாக கொல்லாமையையும், துறவறத்தையும் தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞான நோட்டமிடல், நோன்பு, அனுபவம், தியானம், சமண மார்க்க பயிற்சி ஆகியவற்றின் முலம் இயற்கையின் விதிகளை அறியமுடியும் என்று உய்த்துணர்ந்தனர். புத்தருக்கு இச்சமண வழியிலேயே ஈர்ப்பு ஏற்பட்டது. சிக்கலான மத சடங்குகளாலும் சம்பிரதயங்களாலும்உயிர்ப்பலிகளாலும் பிரவிக்கடலை கடக்க முடியும் என்ற வேதாந்த தத்துவத்தை கௌதமர் மறுத்தார்.


புத்தர் சமண வழியை தேர்ந்தெடுத்தார்.


யாருக்கும் தெரியாமல், புத்தர் தன் குதிரை கந்தகாவுடனும் தேர்பாகன் சன்னாவுடனும் அரண்மனையை விட்டு இரவோடு இரவாக வெளியேறினார். 


முதலில் தன் துறவாழ்வை ராஜகஹாவில் துவங்கினார். தன் உணவிற்காக யாசித்தார். அங்கு மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன் கௌதமரை இனம் கண்டுகொண்டான். அவரது தேடல்பற்றி அறிந்து தன் நாட்டு ஆட்சியை கௌதமரிடம் கொடுப்பதாக அறிவித்தான். ஆனால், கௌதமர் தன் நிலையை விளக்கி அதை மறுத்தார். மேலும் தான் தன் கேள்விகளுக்கு பதில் கண்டறிந்தவுடன் முதலில் மகத நாட்டிற்க்கே வருவதாக உறுதியளித்தார்.


ராஜகஹாவில் இரு குருக்களிடம் பாடம் கற்றார் கௌதமர். முதலில் ‘அலர்த கலமா’’ என்பவரிடம் வித்தைகளை கசடறக் கற்றார். கலமா புத்தரை தன் ஞானவாரிசாக அறிவித்தார். இன்னும் தான் ஞானத்தில் திருப்தி அடையவில்லை என்று கூறி ‘உத்ரக ராம்புத்ரா’’ என்பவரிடம் தியானத்தை கற்க சீடரானார். அங்கும் அவர் திருப்தி அடையாததால் ‘கௌண்டின்யா’’ தலைமையிலிருந்த ஐந்து தோழர்களுடன் வேறு இடம் சென்றார்.


அங்கு ஊன், உறக்கம் இன்றி தவம் செய்தனர். உடலை வருத்தி தவமிருந்தால் தன் தேடல் முடிவுறும் என்று புத்தர் எண்ணினார். இதனால் அவர் உடல் இளைத்ததே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உயிர் உடலில் ஒற்றிக்கொண்டிருக்கும் பொழுதே இதனை உணர்ந்த புத்தர், உடலை வருத்தி தவமிருக்கும் திட்டத்தை கைவிட்டார். சித்தாந்தரின் இந்த முடிவால் விரக்தி அடைந்த தோழர்கள் அவரை தனியே விட்டுச் சென்றனர். கௌத்தமர் சமணர்களின் கடும் தவத்தை வெறுத்து நடுநிலையான பாதையை

தேர்ந்தெடுத்தார். சமணமும்9 அல்ல, வேதாந்தமும் அல்ல. அதுவே புத்த மார்க்கம் என்றானது.

பிறகு, கயாவை தனியே அடைந்தார். அங்கிருந்த ஒரு அரசமரத்தின் அடியே அமர்ந்தார். தன் தேடலுக்கு விடையறியாமல் அங்கிருந்து எழப்போவதில்லை என்று ஒரு முடிவெடுத்தார். உணவிற்காக மட்டும் யாசிக்க அங்கிருந்து எழுந்தார். நாற்பதி ஒன்பது நாட்களுக்கு பின் அவர் தேடலுக்கு விடை கிடைத்தது. அரசமரம் போதிமரம் ஆனது. அப்போது அவர் முப்பத்தி ஐந்து வயதைக் கடந்திருந்தார். சித்தாந்தர் புத்தரானார். புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள் என்பதை நாம் ஏற்கனவே கண்டோமல்லவா?

அப்படி என்ன பதில் அவருக்கு கிடைத்தது? தனி மனித புத்தரிடமிருந்து புத்தமதம் எப்படி உருவானது? புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்ன? இந்த கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் நாம் பதில் தேடுவோம்.

தேடல், அதுதானே புத்தரை இவ்வளவு பெரிய மகான் ஆக்கியது. ஸோ, நாமும் 
தேடுவோம்.

*

புத்தம் சரணம்:

பிறவாமை, பிணியாமை, இறவாமை எனும் நிலையை அடைய முதலில் ஒருவர் தன் வாழ்வில் நற்கருமங்கள் செய்யவேண்டும் என்று துறவு மேற்கொண்ட பொழுது புத்தர் உணர்ந்தார்.


(நற்கருமம் செய்தல் என்றால் பொய்யாமை, கொல்லாமை, கள்ளாமை, என்று ‘திருக்குறளில்’ வரும் அனைத்து ஆமைகளையும் கடைபிடிப்பது).

இவற்றை தவறாமல் கடைபிடித்தாலே பிறவாநிலை கைகூடிவிடும் என்று அறிந்தார்.

இதனை கடைபிடிப்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா?


இந்த அனைத்து ஆமைகளையும் ஒரே ஒரு ‘சை’’ தின்றுவிடுவதையும் புத்தர் கவனிக்காமளில்லை.


இவ்வாறு மனத்தில் ஓடிய எண்ணங்கள் அனைத்தையும், ஒருசேர நெற்றிப்பொட்டில் நிறுத்தி தியானத்தை தொடர்ந்தார் ………


இதன் விளைவாக, புத்தருக்கு கிடைத்த பதில் ‘ஆசை’’…….. பதிலும் கிடைதாயிற்று, அப்புறம் என்ன, நாலு பேர் கிட்ட சொல்ல வேண்டியது தானே. நாம் இப்படி தான் யோசிப்போம். அவர் புத்தரில்லையா? அவர் எப்படி யோசித்தார் என்று சற்று பார்ப்போம்.


“நமக்கு புரியுது சரி மத்தவுங்களுக்கு இது புரியுமா?” என்று சிந்தித்த புத்தர், ஒரு சூத்திர வடிவில் தன் தேடலுக்கான முடிவை அறிவித்தார்.


1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.

2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.
3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.
4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.

என்னய்யா இது, இது அதுன்னு, ஒரே குழப்பமா இருக்கேனு நினைக்காதிங்க…………. தத்துவம்னா அப்படிதான் இருக்கும்.


இது=ஆசை; அது=துன்பம்.


புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,

1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.
2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.
3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.
4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.10

இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.


இவற்றை அடைய புத்தர் ஒரு நிபந்தனையும் முன்வைக்கிறார்

நிபந்தனை என்னவென்றால், இவற்றை அடைய ஒருவர் ‘உலகம் ஒரு மாயை’’ என்று முதலில் உணர்ந்திருக்க வேண்டுமாம்.

ஆம், “நேற்றிருந்தது இன்றில்லை, இன்றிருப்பது நாளை இல்லை; எனவே இந்த மாய உலக வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு மனிதனின் பிறவி நோக்கம் அன்று”,” என்று மொழிந்தார் புத்தர்.

தன்னை விட்டுச்சென்ற அந்த ஐவரையும் சந்தித்து இவ்வுண்மைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார் புத்தர். இவர்களே புத்தரை தங்கள் ஆசானாக ஏற்றுக்கொண்ட முதல் சீடர்கள். காட்டுத்தீ போல் பரவியது பௌத்தம். அறுபதுபேர் கொண்ட ஒரு சங்கம் (குழு) அதிவிரைவில் உருவானவுடன், முதல் வேலையாக அவர்களை நாலா திசையிலும் பரவச்செய்தார் புத்தர் (சங்கம் வைத்து தமிழ் மட்டுமே வளர்க்க வேண்டுமா என்ன?). அவர்களின் பிரச்சாரத்தால் பலரும் புத்தமதத்தில் இணைந்தனர். பிராமணனாய் பிறவாத ஒரே குற்றத்திற்காக பிறவா நிலையை அடைய முடியாது என்று கூறி வேதாந்திகளால் ஒதுக்கப்பட்டவர்களும் இதில் சங்கமித்தனர். அரசர்களும், செல்வர்களும் தங்கள் பங்குக்கு புத்தவிகாரைகளை கட்டி புத்த பிக்குகள் தங்க வழிவகை செய்து கொடுத்தனர். 


ஆசைப்படுவதை முடக்கி ஒழுக்க நெறியில் தழைக்க தனது தொண்டர்களுக்கு சில வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தளித்தார் புத்தர்.


ஆசைப்படுவதை நிறுத்த புத்தர் மூன்று வழிகளை போதிக்கிறார். இதனை எட்டு மடிவழிகள் என்றும் கூறுவர்


1. ஒழுக்கம்

2. ஞானம்
3. தியானம்

ஒழுக்கம்:


நன்மொழி: உண்மை, பிறர் மனம் புண்படா வண்ணம் பேசுதல், தேவையற்ற வீண்பேச்சை தவிர்த்தல், மௌனம் காத்தல்.


நற்செய்கை: செய்கையால் பிறரை புண்படுத்தாதிருத்தல், அஹிம்சையான செயல்களை மட்டும் செய்தல்.


நல்வாழ்க்கை: பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா வாழ்க்கை. (அஹிம்சை)

ஞானம்:

நற்காட்சி: காணும் காட்சியை அது தோன்றும் விதத்தை வைத்து அணுகாமல், அதனுடைய உண்மைநிலையை மதிப்பிடுவது.


நல்லெண்ணம்: வாழக்கை சுழற்சியிலிருந்து விடுபட எண்ணுவது, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா எண்ணம், பிறர் நலம் விரும்புவது.


தியானம்:


நன்முயற்சி: தன்னை செம்மைபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.


நற்கடைபிடி: உலகின் மெய்ஞானத்தை முன்னுணர்ந்த விழிப்பு நிலையை கடைபிடித்தல்.


நல்லமைதி: அமைதியை நிலைநாட்ட தியானம் மேற்கொள்ளல்.


இவையே எட்டு நல்வழிகள் எனப்படும்.


இவையே புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என்று கூறிவிட்டாலும் 


இதனுள் வராத, புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்கநெறிகளும் உண்டு. புத்தரின் அத்தகைய உபதேசங்கங்களை அவர் மறைந்து சில மாதங்களுப்பின் புத்த பிக்குகள் தொகுத்து திரிபிடகம் என்று வழங்கினர்.

முன்னரே பார்த்தபடி, புத்தர் தான் வாக்களித்த பிம்பிசாரரை சந்திக்க மகத நாட்டிற்கு தன் சீடர்களுடன் பயணப்பட்டார். போகிற வழியில் ஊர்வில நாட்டு காட்டுப்பகுதியில் சில நாட்கள் தங்கினார் அங்கு தத்துவத்திலும் துறவரத்திலும் சிறந்து விளங்கிய முன்று சகோதர்களை தன் நெறியால் ஆக்கிரமித்தார். பின் மகத நாட்டிற்க்குச் சென்ற புத்தருக்கு பிம்பிசாரறால் பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பிம்பிசாரர் ஒரு பெருங் கூட்டத்துடன் புத்த மதத்தைத் தழுவினார். அவர் அரண்மனைக்கு அருகிலேய புத்தர் தங்கிக்கொள்ள வசதியாய் ஒரு சோலையை ஏற்படுத்தித் தந்தார். மழை காலங்களில் புத்தர் இங்கேயே தங்கியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காலங்களில் பூச்சிகள் பெருக்கம்  அதிகமாக இருப்பதால், அவற்றை இம்சிக்காமல் இருக்கவே மழை காலங்களில் மடங்களில் தங்கும் வழக்கம் பௌத்தர்களுக்கு வந்தது. 


இதன் பின்னர் புத்தர் தன் பிறந்த ஊரான கபிலவஸ்த்துவிற்கு அவரது தந்தையின் அழைப்பை ஏற்று துறவியாய் சென்றார். அங்கு புத்தரின் மகன் ராகுலரும், அத்தை மகன் அனந்தரும் புத்த மதத்தை ஏற்றனர். இதன் பின்னரே புத்தரின் மற்ற முதன்மை சீடர்களான தேவதத்தரும், உபாலியும், அனுருதாவும் பௌத்தத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து புத்தர் கோசல நாட்டுத் தலைநகரில் தங்கியும் ஊர் ஊராக சுற்றியும் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் தான் கண்ட உண்மையை பரப்பினார். இதன் பின்னர், கடும் பிணியால் பாதிக்கப்பட்ட புத்தர், ஒருநாள் தன் சீடர்களை அழைத்து “அருகே வாருங்கள் துறவிகளே, உங்களிடம் இருந்து நான் விடைபெறும் தருணம் இது. உலகிலுள்ள அத்தனை பொருட்களும் கறையக்கூடியதே, ஆகையால் உலகை மோகிக்காமல் கடின முயற்சியால் உங்கள் விமோச்சனதிற்காக பாடுபடுங்கள்”, என்ற இறுதி போதனையுடன் உலகைவிட்டு பிரிந்தார்.


அவருடைய இறப்பிற்குப் பின் மேற்கண்டபடி மூத்த புத்த பிக்குகள் ஒன்றுகூடி அவரது போதனைகளை தொகுத்து திரிபிடகம் உருவாக்கினர். திரிபிடகம் முன்று நூற்களை உள்ளடக்கியது. ஒழுக்கத்தை போதிக்கும் விநயபிடகம் அறநெறியை போதிக்கும் தம்மபிடகம், மனத்தில் உருவேற்ற வல்ல சூத்திரபிடகம்.


திரிபிடகம் பாளி மொழி நூலாகும், புத்தர் தனது போதனைகளை பாளி மொழியிலேயே செய்தார். புதிய வழக்கங்களை புத்த மதத்தில் புகுத்தும் வேலை புத்தர் இறந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து சில பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்று கேட்டால் “பழையன கழிந்து புதியன புகுந்தால் மட்டுமே புத்தமதம் தழைக்கும்” என்றனர். இதற்காக ‘வைசாலி’’ நகரருகில் எட்டு மாதம் தங்கி பிக்குகள் ஆலோசித்தனர்.


முடிவாக, ‘புத்த மதத்தில் புதுமைகளை புகுத்துவதற்கு இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இவர்களை எதிர்த்து புதுமை விரும்பி வெளியேரியவர்களே இன்றைய மஹாயான அதாவது பெருஞ்சுழற் பௌத்தர்கள் (அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர் இது).

இந்தப் புதுமை விரும்பிகள், ”புதுமை மதத்தை பாழ்படுத்தி விடும்”’ என்றவர்களை ஹினயான அதாவது சிறுஞ்சுழற் பௌத்தர்கள் என்றழைத்தனர்.


இதனை எதிர்த்து தங்களுக்கு தேரவாத (மூத்தோர் வழி) பௌத்தர்கள் என்று பெயர் சூடிக்கொண்டார்கள் மூத்தவர்கள்.பின்னர் இது நாள்வரை இரு பிரிவுகளுக்குள்ளுமே பல உபப்பிரிவுகள் தோன்றியும் மறைந்தும் விட்டன.

”மாஹயானம் இல்லையென்றால் பௌத்தம் இவ்வளவு தூரம் பரவி இராது; அதேபோல, தேராவதம் இல்லையென்றால் பௌத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது.”


இதுதான் மஹாயானத்திற்கும் தெராவதத்திற்கும் பௌத்தர்கள் கூறும் ஒற்றைவரி வேறுபாடு.


புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக் கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தல் உங்களுக்கு மஹாயானம் நன்கு விளங்கும்.


போதிதர்மர் மஹனயான பிரிவைச் சார்ந்தவர். இவர் மஹாயான பௌத்த பிரிவின் லெஃப்ட்டில் புகுந்து ரைட்டில் புதிதாய் ஜென் (தியான) புத்த மதத்துடன் வெளியேறியவர். இதுவரைக் கண்ட பௌத்தம் தான் அவரை துறவு மேற்கொள்ள வைத்தது. சீனா செல்லத் தூண்டியது. ஜென்னை தோற்றுவிக்க உதவியது.


எனவே, தான் ஆழமாக பார்க்காவிடினும் மேலோட்டமாகவாவது புத்த மத்ததை இவ்வாறு ஆராய வேண்டியுள்ளது.

மொழிகள் பிறந்தது நமக்காக

மொழிகள் பிறந்தது நமக்காக

மொழிகள் பிறந்தது நமக்காக

பாபா பக்ருதீன்

மொழி. ஒருவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கும் திரும்பி பேசுவதற்கும் பயன்படுகிறது. இது மொழி என்பதற்கான பொதுவான பொருள்.


அப்பொழுது மொழிகள் எதுவும் பிறக்கவில்லை. தங்கள் மனதிலுள்ளதை பிறருக்கு தெரிவிக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். எப்படியோ ஒருவர் கைகளை அப்படி இப்படி அசைத்து தன் எண்ணத்தை குறிப்பால் உணர்த்தும் கலையை கண்டுபிடித்தார். மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றார். ஒருநாள் அவரை எதிரிகள் கடத்திக்கொண்டு சென்றனர். தங்களுக்கும் கைகளைப் பயன்படுத்தி செய்தி தெரிவிக்கும் வித்தையை கற்றுத்தர வேண்டும் என்று வற்புறுத்தினர். தலைவர் மசியவில்லை. இந்த கை இருந்தால் தானே நீ செய்திகளை அறிவிப்பாய்எனக் கூறி சினத்தால் அவரது கைகளைத் துண்டித்தனர். ராவோடு ராவாக அவரை அவரது வீட்டில் வந்து போட்டனர். பொழுதும் விடிந்தது. பெரியவரின் கைகள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றனர். கைகள் இல்லா உங்களால் இனி எங்களுக்கு எப்படி குறிப்புகள் வழங்க முடியும் என வினவினர். மோ மன் சீ (கவலை வேண்டாம்)”, என்று முதன்முதலில் வாய் திறந்து பதிலளித்தார். மொழிகள் பிறந்தன.

இது சீன செவிவழிக்கதையாகும். இது நிஜமல்ல கதைதான் என்றாலும் இது ஒன்றை மட்டும் தெளிவாய் உணர்த்துகிறது. மனிதன் தன் மனதில் உள்ளதை பிறருக்கு உணர்த்த மொழி எழிதான கருவி ஆகும் என்பதை. கருவிஎன்ற சொல்லை அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்று பிறகு சொல்கிறேன். சரி, மொழிகள் பிறந்தது எப்படி?

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த மொழியியல் வல்லுனர்களிடம் கேட்டால் மொழி என்பது முறைபடுத்தப்பட்ட தொடர்பாடல் ஆகும். காச் மூச் என இலக்கணமின்றி கத்திக்கொண்டிருந்த மனிதன் பரிணாம வளர்ச்சியால் இலக்கணம் அமைத்து இலக்கியம் படைத்தான்என்று சொல்லி வந்தனர்.

முறைபடுத்தப்பட்ட தொடர்பாடல் என்பது மனிதனிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் பறவைகளிடமும் பூச்சிகளிடமும் ஏன் மரங் செடி கொடிகளிடமும் தான் காணப்படுகிறதுஎன்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறபடியால்,

இன்றைய விஞ்ஞானிகள், “பகுத்தறிவிற்கு உட்பட்ட தொடர்பாடல் மொழிகள் எனப்படுகின்றன என்கின்றனர். மற்றும் சிலர் மொழிகள் மனிதனுக்கு வேற்றுகிரக வாசிகளால் கற்பிக்கப்பட்டது என்றும் கூறி வருகின்றனர்.

இதுவும் ஒருநாள் மாறக்கூடியதே. நமக்கு அதெல்லாம் தேவையில்லை. பிற மொழிகளை கற்றுக்கொளவதின் நோக்கம் என்ன?

பேசுவதை புரிந்து கொள்வதற்காக மட்டுமா. இல்லை நிச்சயமாக இல்லை.

பல்வேறு மொழிகள் உலகில் பிறந்ததற்கு பல்வேறு நோக்கம் ஒன்றும் இல்லாமல் இல்லை. மொழிகள் பிறர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல வேறு வகையிலும் நமக்கு பயனளிக்கக்கூடியவை என்பதை இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.மொழிகளுக்கென தனித்துவமான நோக்கங்கள் பல உள்ளன. நோக்கங்களை பிற மொழிகளை கற்பவர்களும் கற்க முனைபவர்களும் அறிவதில் எந்த வியப்பும் இல்லை. வாருங்கள் தயாராவோம் மொழிகளின் பிற நோக்கங்களை ஆராய.

மொழி மனித எண்ணத்தை வெளிக்கொணரும் ஒரு கருவி என்பதை முன்னே உங்களை அடிக்கோடிடச் சொன்னேன் அல்லவா? ஏன்? வேறெதற்கு, மொழி என்பது ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்தத்தான்.

ஒரு காலத்தில் ஹிந்தியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் என்று கிளம்பிய திராவிடக்கட்சிகள் இன்று வெற்றிகரமாக ஹிந்தியை எதிர்த்து சாதித்துவிட்டனர். ஆனால் தமிழைத்தான் பாதுகாக்க மறந்துவிட்டனர், மறுத்துவிட்டனர். இதன் விழைவாக இன்று தமிழை ஆங்கிலம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை ஆங்கில கலாச்சாரம் ஆள்கிறது. மறைமுகமாக தமிழனை ஆங்கிலேயன் ஆள்கிறான். அவனது மொழி நம்மை ஆள்கிறது. புரியவில்லையா?

ஒரு மொழியால் ஒருவரது கலாச்சாரத்தை எளிதில் பாதிக்கவும் முடியும், சீர்படுத்தவும் முடியும். இதற்கு ஆங்கிலம் அருமையான எடுத்துக்காட்டு.

ஆங்கிலம் அறிவு என்ற பெயரில் தனிமனித ஒழுக்கத்தையும், மதத்தையும், குடும்ப, சமுதாய, அரசியல், கல்வி, பொருளாதார, கலாச்சார அமைப்புகளையும் சீர்குலைத்துள்ளதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் நிறைய பார்க்கவும் இருக்கிறோம்.

அதேபோல், தான் சார்ந்த ஒழுக்கமான நாகரிகத்தை பிறருக்கு எத்திவைத்த மொழிகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அரபி, பாளி, சமஸ்கிருதம் போன்றவற்றை கொள்ளலாம்.

இதனால் நான் ஆங்கிலத்தை வில்லனாகவும் சித்தரிக்க விழையவில்லை. அரபி, போன்ற, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கதாநாயகன் ஆக்கவும் விரும்பவில்லை. ஆங்கிலம் தன் கலாச்சாரத்தையும், அரபி, பாளி சமஸ்கிருதம் போன்றவைங்கள் கலாச்சாரத்தையும் தன்னைத் தழுவும் மக்களுக்கு புகட்டுகின்றன என்றே சொல்ல வருகிறேன். நாளையே உயர்ஒழுக்க கலாச்சாரமுடைய மக்கள் பெரும்பான்மையாய் ஆங்கிலம் செப்பினால் அல்லது உயரொழுக்கம் கொண்டோர் ஆங்கிலம் கற்க விழைந்தால், ஆங்கிலம் ஒருவேளை ஒழுக்கத்தை ஊட்டும் மொழியாய் மாற வாய்ப்புண்டு. அதாவது ஒரு மொழியால் தன்னை அதிகம் பயன்படுத்தும் மக்களின் கலாச்சாரத்தை தன்னை கற்போர் மீது புகட்டமுடியும் என்ற அத்தாட்சியை இங்கு நான் சுட்ட கடமைப்பட்டுள்ளேன்.  இதுவும் பிறமொழி கற்றலின் நோக்கங்களில் ஒன்று தான்.

மீண்டும் திராவிடக் கட்சிகள் விசயத்திற்கு வருவோம். ஹிந்தி எதிர்ப்பு. பிறமொழி கற்றால் நம் தாய் மொழி நசுங்கிவிடுமா என்ன? தமிழில் ஹிந்தி கலக்காமல் இருக்க தமிழர்களிடத்தில் தமிழின் மாண்பை எடுத்தோதுவதை விடுத்து ஹிந்தியை கற்காதீர்கள் என கூறினால் அது சரியா? சரியல்ல என்பதே இன்றைய தமிழின் நிலை நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் பிற மொழிகளைக் கற்றாலே நம் மொழியின் சிறப்பை நம்மால் அறிய முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சுப்ரமணிய பாரதி.

“யான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்என்று பாடிய பாரதிக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரஞ்சு, ஹிந்தி-உருது, பாரசீகம் (ஃபார்ஸி) என அரை டஜன் மொழிகள் தெரியும். இவற்றில் புலமையும் பெற்றிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இத்தனை மொழிகள் தெரிந்ததால் தான் தன் மொழியின் சிறப்பை அவர் அறிகிறார். பாரதியாரை விடுங்கள் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரே பன்மொழி வல்லுனர் தான். வடமொழியை சாலக் கற்றவர். இவர்கள் எல்லாம் என்ன தமிழை மறந்தாவிட்டார்கள். பிற மொழி கற்றல் நம் மொழியை எவ்வழியிலும் பாதிக்காது வளர்க்கவே செய்யும். மொழிப்பற்று என்ற பெயரில் பிற மொழி கற்பதை நிறுத்தல் எனபது வடிகட்டிய மடமை. இதுவும் அறிவுள்ளவர்களுக்கான அத்தாட்சிதான். பிற மொழி கற்றுக்கொள்வதால் நம் மொழி வலுப்படும். இதுவும் பிற மொழி கற்றலில் மற்றொரு நோக்கம்.

மொழிபெயர்ப்பு. வேற்று மொழி கற்றுக்கொள்வதால் நம் மொழிக்கு ஆற்றும் மற்றொரு சேவை. பிற மொழிகளில் இருக்கும் சிறந்த படைப்புகளை நம் மொழியில் மொழிபெயர்ப்பதென்பது நம் மொழியை வாழவைக்கும் மற்றொரு ஆக்கப்பூர்வமான செயல். உன்னதமான மொழிபெயர்ப்புக்கு நம் மொழிப் புலமை மட்டுமல்ல, மொழி பெயர்க்கப்படும் படைப்பின் மொழியில் புலமை பெற்றிருப்பதும் மிக மிக அவசியம். ஒரு எடுத்துக்காட்டு பார்போமே.

Two deep eyes like planets. இது ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் ஒரு கவிதையில் ஒரு 
பெண்ணின் கண்ணை வருனித்து வரும் வரி. இதனை தமிழாக்கம் செய்வோம் வாருங்கள்.
நம்மைப் போல் ஆங்கிலம் அறிந்த சராசரி மனிதன் இரண்டு ஆழமான கண்கள் கோள்களைப்போல் என மொழிபெயர்ப்பான். கொஞ்சம் புலமை பெற்றவன் என்றால் “ஆழ் கோள் கண்கள் கொண்டவளேஎன்று பெயர்ப்பான். ஆனால், பாரதியார் இதனை எவ்வாறு மொழிபெயர்த்தார் தெரியுமா?
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ”. இது தான் மொழிப்புலமை எனப்படுவது. இன்று மொழிபெயர்ப்புகள் அதிகரித்து விட்டன, பாவம் மொழிபெயர்ப்பாளனைத் தான் எங்கு தேடினும் காணோம். பிற மொழி கற்பதன் மற்றொரு நோக்கம் மொழிபெயர்ப்பு.
“நீ புதிதாக பிறக்கிறாய், புதிதாக ஒரு மொழி பேசும் பொழுதெல்லாம். நீ ஒரே ஒரு முறையே வாழ்கிறாய் ஒரு மொழி மட்டும் பேசினால்என்கிறது செக் நாட்டு பழமொழியொன்று. இது முற்றிலும் உண்மையான மொழி. புதிதாக ஒரு மொழி கற்கும் பொழுதெல்லாம் நாம் புதிதாக ஒரு உலகில் நுழைகிறோம். அந்த உலகம் உங்களுக்கு முற்றிலும் புதியதொரு கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும், உறவுகளையும், உணவுவகைகளையும் அறிமுகம் செய்யும். அங்கு வாழ்பவர்களின் நிலையை எடுத்துரைக்கும். என் மொழி, என் இனம், என் நாடு என ஒரு சிறு வட்டத்தில் சுழலும் மனதை மனிதராகிய நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்எனும் உயர்ந்த சித்தாந்தத்திற்கு இட்டுச்செல்லும். வேற்றுமைகளையும் சண்டைகளையும் ஊடுருவி நிற்கும். இது பிறமொழி  கற்றலின் மற்றொரு நோக்கமாகும்.
இது மட்டுமல்ல பல்வேறு மொழிகளைப் பேசும் பொழுது மொழியென்பதே அவசியமற்றுப்போகும். நேரடியாக உங்களால் பேசுபவரின் மனதை வாசிக்க முடியும். அவர் சொல்லவரும் கருத்துக்களை கிரகிக்க இயலும். பிற மனித மனங்கள் சிந்திக்கும் வித்த்தை புரிந்து கொள்ளமுடியும். மனிதர்களின் மனதை மட்டுமல்லாது பிற உயிரினங்களின் மனதையும் மொழிப் பிரியர்களால் புரிந்து கொள்ளமுடியும். அவற்றின் மீது அன்பு செலுத்தமுடியும். கற்றோரைக் கேளுங்கள் சொல்வார்கள். இது மற்றொரு நோக்கம்.
இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் பல மொழி கற்றுக்கொள்பவர்களுக்கு டீமென்சியா (Dementia) போன்ற நினைவிழப்பு நோய் வரவதற்கான வாய்ப்புகள் மிக் குறைவாம்.
படைப்புத்திறனும் பெருகுமாம். இது இன்னொரு நோக்கம்.
உங்களுக்கு பொருத்தமான மொழிகளை தேர்வு செய்யுங்கள். புதிய உலகிற்கு குடி பெயருங்கள். மொழியை தேர்ந்தெடுக்கும் பொழுது சில வரையரைகளை கையாளுங்கள், உங்கள் தாய் மொழிக்கு தொடர்புடைய மொழி, அதிக மக்கள் பேசும் மொழி, இலக்கியவளம் மிக்க மொழி, இனிமையான மொழி என.
தர வரிசை
மொழியின் பெயர்
தாய்மொழியாக கொண்டவர்கள்
பேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை
1
மண்டரின் சீனம்
845 மில்லியன்
1025 மில்லியன்
2
ஸ்பானிஷ்
329 மில்லியன்
390 மில்லியன்
3
ஆங்கிலம்
328 மில்லியன்
750 மில்லியன்
4
ஹிந்தி-உருது
240 மில்லியன்
490 மில்லியன்
5
அரபி
206 மில்லியன்
452 மில்லியன்
6
பெங்காலி
181 மில்லியன்
250 மில்லியன்
7
போர்த்துகீசியம்
178 மில்லியன்
193 மில்லியன்
8
ரஷ்யன்
144 மில்லியன்
250 மில்லியன்
15
தெலுங்கு
70 மில்லியன்
75 மில்லியன்
19
தமிழ்
66 மில்லியன்
74 மில்லியன்
இந்த மொழிப்பட்டியலை கூர்ந்து பாருங்கள். இதில் எத்தனை மொழிகள் உங்களுக்குத் தெரியும் என எண்ணிப்பாருங்கள். உங்கள் உலகம் எவ்வளவு சிறியது என சிந்தியுங்கள்.
மொழிகளுக்கென இன்றைய உலகில் பல்வேறு பணியிடங்கள் காலியாகத்தான் உள்ளன. மொழிபெயர்ப்புத் துறை இன்று அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. கல்விமுறையில் உள்ள ஓட்டைகளால் மொழி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. பணம் பணம் எனும் சிந்தனை உண்மைச் சிந்தனையாளர்களின் எண்ணிக்கையை கனிசமாக குறைத்துவிட்டது. யோசித்து, நாமாக நம்மை திருத்திக்கொள்வோம், வாருங்கள்.
இராப்பார்வை போற்றுதும்

இராப்பார்வை போற்றுதும்என்னையா இது இராப்பார்வை இராப்பிச்சைனு கேவலமா தலைப்பு வச்சுகிட்டு. என்ன தான் நீ சொல்லவர…

அண்ணே, போன வாரம் புதுப்ளாக் புகுவிழா என்று என் தளத்தில்வெளியிடப்பட்ட பதிவைப் படித்தீர்களா? படிக்காவிட்டால் ஒரு சைட் அடிச்சிட்டு வந்துடுங்களேன். வசதியாய் இருக்கும்.
போன தலைப்பில் விஞ்ஞான மனோபாவத்தை (Scientific Mindset) கொஞ்சம் பார்த்தோம். விண்வெளி நோட்டமிடல் (Sky Watching)  பற்றிய அறிமுகத்தையும் கொஞ்சம் பார்த்தோம். தற்போது விண்நோட்டத்திற்கு மிக மிக இன்றியமையாததாகக் கூறப்படும் இராப்பார்வையை பார்க்கவுள்ளோம்.

இரவு+பார்வை=இராப்பார்வை. இரவுப்பார்வை (Night Vision). விண்நோட்டத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.  பார்வையில் என்ன பகல்பார்வை, இராப்பார்வை என வேறுபாடு?

வேறுபாடு இருக்கிறதே, என்ன செய்ய.

விண்வெளியை நோட்டமிட உகந்த நேரம் எது?

சின்ன பாப்பாவிடம், வானத்தில நட்சத்திரத்தை எப்ப பார்க்கலாம்?என்று கேட்டால் இராத்திரில தான்“ என டக்கென பதில் வரும். ஆக, நட்சத்திரங்களை இரவில் தேடுவதே பொருத்தம்
ஏன் பகலில் விண்மீன்களை தேடக்கூடாதா?

மண்டையைப் பிளக்கும் வெயில் நேரத்தில் விண்மீன்களை தேடினால் பைத்தியக்காரன் எனும் பட்டம் தான் கிடைக்கும். குதர்க்கமான இந்தக் கேள்வியை சற்று மாற்றிக்கேளுங்களேன். ஏன் பகலில் விண்மீன்கள் தெரியக்கூடாதா?என்று. லாஜிக்காக மாறிவிடும்.

கண்ணின் பாகங்கள் 
முதலில் பகல் வானத்தில் விண்மீன்கள் இருக்குமா? கண்டிப்பாக இருக்கும். பகலில் சூரியனின் வெளிச்சம் அதிகமாக இருப்பதால். அந்த வெளிச்சத்தின் முன் இவ்விண்மீன்களின் வெளிச்சம் டம்மியாகி விடும். இதனால், தான் பகலில் விண்மீன்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறுவயதில் படித்திருப்பீர்களே. இன்னும் புரியவில்லையா?

ஒரு டார்ச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை உங்கள் அறையில் எரியும் ட்யூப்லைட்டை நோக்கி அடியுங்கள். பிறகு, ட்யூப் லைட்டை அணைத்துவிடுங்கள். அறை இருண்டுவிடும். இப்பொழுது மீண்டும் அணைந்த ட்யூப்லைட்டை நோக்கி டார்ச்சடியுங்கள். இரண்டுக்குமிடையே வித்தியாசம் தெரிகிறதா? தெரியும். பேரொளியின் முன் சிற்றொளி சரணடைந்துவிடும். இப்பொழுது ஏன் பகலில் விண்மீன்கள் தெரிவதில்லை என்று புரிகிறதல்லவா.

நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். விண்மீன்களை நோட்டமிட மட்டும் தான் இரவு அவசியம். விண்வெளியை அல்ல. பகலிலும் விண்வெளியை நோட்டமிடலாம். நட்சத்திரங்கள் தான் தெரியாதே ஒழிய சூரியன் தெரியுமல்லவா? சூரியனும் விண்வெளியில் தானே இருக்கிறது.

ஆக, விண்வெளியை எப்பொழுது வேண்டுமானாலும் நோட்டம் விடலாம். ஆனால், விண்மீன்களையும், கோள்களையும் இரவிலேயே நம்மால் நோட்டமிட முடியும். இருந்தாலும், பொதுவாக விண்வெளி நோட்டப் பொழுது என்பது இரவையே குறிக்கும்.

விண்நோட்டத்திற்கான நேரம் இரவு என்று முடிவுகட்டியாயிற்று. அடுத்து. இரவு நேரத்திற்கும் பகல் நேரதிற்குமான பார்வை வேறுபாட்டை சற்று பார்ப்போம். அதற்கு முன் கண்கள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ரெட்டினாவில் பார்வை குவிக்கப்படுகிறது
நமக்குத் தெரிந்து கண்களின் பாகங்கள் என்னென்ன? வெள்ளை விழி, கருவிழி அவ்வளவுதான். வெளியிலிருந்து பார்ப்பதால் நமக்கு அவ்வளவு தான் தெரியும்.

சரி விடுங்கள் இப்போது கண்ணை வெளியில் எடுத்து குறுக்குவெட்டாக (Transverse Section) வெட்டிக்கொள்வோம். கற்பனை செய்ய கடினமாக இருக்கிறதா, கீழுள்ள படத்தை காணவும்.

தீர்ந்தோம், கண்ணில் இத்தனை பாகமா?

பதராதீர்கள். இவை அனைத்தையும் இங்கு நான் அலசி பிளேடு போட விரும்பவில்லை. படத்தில் ஒளி குவிக்கப்படும் ரெட்டினா(Retina)  என்ற பகுதி தெரிகிறதா? அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

நம் கண்களில் உள்ள குவிலென்ஸ் (Convex Lens), வெளியிலிருந்து வரும் ஒளியை ரெட்டினா எனும் பகுதியில் குவிக்கின்றது. இதனை மேற்கண்ட படத்தில் காணலாம். அவ்வாறு குவிக்கப்படும் ஒளியானது இந்த ரெட்டினாவில் பட்டு, பார்வையாக்கப்படுகிறது. எப்படி?

தடி மற்றும் கூம்பு செல்கள்
ரெட்டினாவில் பார்வை நரம்புகள் (Optic Nerves) அதிகம். செல்களை கொண்டு அந்நரம்புகளை இருவகையாய் பிரிக்கலாம், தடி செல் (Rod Cells), கூம்பு செல் (Cone Cells) என (படத்தை பார்க்கவும்). மேற்கொண்டு செல்லும் முன், ஒளியின் தன்மையையும் சற்று பார்ப்போம்.
ஒளி. ஒரு முப்பட்டைக் கண்ணாடி (Prism) வழியே செலுத்தப்பட்டால் இந்த ஒளி ஏழு நிறமாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) பிரியும் என சிறு வயதில் படித்தது ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது?
ஒளி எழு நிறங்களைக் கொண்டது. சரியா?

தவறு. முற்றிலும் தவறு என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? எற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஒளி ஏழு நிறங்களைக் கொண்ட்தல்ல. நாம் காணும் ஒளி ஏழு நிறங்களைக் கொண்டது.
பொதுவான ஒளியிலிருந்து (Light) நாம் காணும் ஒளி (Visible Light) எப்படி வேறுபடுகிறது?

நாம் காணும் ஏழு நிறங்களுடன், ரேடியோ கதிர்கள் (Radio Waves), நுண் கதிர்கள் (Micro Waves), புறஊதா கதிர்கள் (Ultra-violet), அகச்சிவப்பு கதிர்கள் (Infra-Red), எக்ஸ்ரே கதிர்கள் (X-Ray), காமா கதிர்கள் (Gamma Ray) போன்றவற்றை உள்ளடக்கியதே ஒளி. இவற்றை மின்காந்த அலைகள் (Electro-magnetic Wave Spectrum) என்றும் அழைக்கலாம்.

ஏன் இவற்றை எல்லாம் நம்மால் காண இயலவில்லை?

அருமையான கேள்வி. ஏன் நம்மால் ஒளியின் மொத்த அலை வரிசையையும் காண இயலவில்லை. காரணம் நாம் ஏற்கனவே பார்த்த கூம்பு செல்களும், தடி செல்களும் தான். என்ன தொடர்பு பிறந்து விட்டதா? ஒளியின் ஊதாவிலிருந்து சிவப்புவரையுள்ள ஏழு நிறங்களைக் காண நமக்கு கூம்பு செல்கள் பேருதவி செய்கின்றன. இதனால் தான் ஹெச்.டி (HD) துள்ளியத்துடன் நம் உலகத்தை காண முடிகிறது. அப்படியென்றால் தடியின் வேலை?
ஏழு நிறங்களுக்கு அப்பால் (குறிப்பாக அகச் சிவப்பு) உள்ள நிறங்களை அரைகுரையாய் காண 

உதவுவது தான் இந்த தடிசெல்லின் வேலை. அப்படியென்ன வேலை?

ரொடாப்ஸின்
இந்த தடிசெல்லில் ரொடாப்ஸின்(Rodopsin) எனும் வேதிப்பொருள் உள்ளது. அதுதான் இரவில் அகச்சிவப்பு போன்ற கதிர்களைக் கொண்டு நமக்குப் பார்வை வழங்குகிறது. இராப்பார்வையை இந்த தடிசெல்லின் ‘ரொடாப்ஸின் கவனித்துக்கொள்கிறது. இரவில் (சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெளிச்சம் குறைந்த சூழலில்) நமக்கு பார்வையளிப்பவை தான் இந்த தடிசெல்கள். ஆக, இராப்பார்வையை பாதுகாக்க தடிசெல்லை பாதுகாக்க வேண்டும். இரவில் நிம்மதியாய் நடமாட தடிக்காரான் எவ்வளவு முக்கியமோ, இரவில் நிம்மதியாய் பார்க்க தடிசெல்கள் அவ்வளவு முக்கியம்.

அப்பறமென்ன. தடிசெல் அதுபாட்டுக்க அதன் வேலையைப் பார்க்கட்டுமே நாம் நம் வேலையப் பார்போம்.

எல்லாம் சுபம் என்று முடித்துக்கொண்டு போகலாம் என நினைக்கும் இந்த வேளையில் தான் புதிதாய் ஒரு பிரச்சனை முளைக்கின்றது.

தடிசெல்லில் ரொடாப்ஸின் என்ற வேதிப்பொருள் உள்ளதல்லவா? அது தான் உண்மையில் நமக்கு இராப்பார்வை கொடுக்கிறது என்று பார்த்தோமல்லவா? அது ஒரு நிலையற்ற வேதிப்பொருள். அதாவது, ஐஸ்கட்டி போல.

எப்படி வெப்பம் பட்டால் ஐஸ்கட்டி சிதைந்துவிடுமோ, அதே போல் இந்த ரொடாப்ஸினும் வெளிச்சம் பட்டால் சிதைந்துவிடும். வெளிச்சத்தை அகற்றிவிட்டாலும் இந்த ரொடாப்ஸின் மறுபடியும் ஒன்றுகூடுவதற்கு இருபது முதல் முப்பது நிமிடங்கள் பிடிக்கும், எப்படி நீராய் மாறிய ஐஸ் ஒன்றுகூட வெப்பம் நீக்கப்பட்டும் சில மணிநேரங்கள் பிடிக்குமோ அதைப்போல. இது தான் பிரச்சனை.

நான் வளவளவென சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஒரே ஒரு பரிசோதனை உங்களுக்கு இதை தெளிவாக புரியவைத்துவிடும்.

கொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு டார்ச்லைட்டை எடுத்தோமே அதே டார்ச் லைட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அப்படியே ஒரு சிவப்புக் கண்ணாடியையும். இரவு வரும் வரை பொறுமையாய் இருங்கள். வந்ததா, நியூஸ் பேப்பர் ஒன்றையும் கையோடு எடுத்துக்கொண்டு இருட்டான பகுதி ஒன்றுக்குச் செல்லுங்கள் (போவதற்கு முன் காஞ்சனா, கீஞ்சனா போன்ற படங்களைப் பார்க்கவேண்டாம்). ஆச்சா, வானத்தை பத்து நிமிடம் வார்ன் போல் வெறிக்காமலும், கங்குலி போல் அதிகமாக சிமிட்டாமலும் பார்க்கவும். பத்து நிமிடம் கழிந்ததா? அப்படியே அந்த இருட்டில் குனிந்து செய்தித்தாளை பார்க்கவும். அரைகுறையாய் ஏதோ தெரியும்.
அடுத்து, டார்ச் லைட்டை ஆன் செய்யவும். அந்த வெளிச்சத்தில் ஒரு நிமிடம் செய்திதாளைப் படிக்கவும். வெளிச்சத்தை அணைக்காமல் வானத்தை பார்க்கவும். தங்கள் பார்வை எப்படி 
இருக்கிறது, என்ன மாறுதல் அடைந்துள்ளது என குறித்துக்கொள்ளவும்.

மீண்டும் முதலிலிருந்து இந்தப் பரிசோதனையை தொடரவும், சிவப்புக் கண்ணாடி அணிந்து. மாறுதல்களை குறித்துக்கொள்ளவும்.

செய்தாயிற்றா? என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள். முதல் தடவையை விட இரண்டாம் தடவை செய்த பரிசோதனையில் தெளிவான இராப்பார்வை கிடைப்பதை உணர முடிகிறதா?
எல்லாம் ரொடாப்ஸினின் திருவிளையாடல் தான்.

முதல் தடவை நீங்கள் இருபது நிமிடம் இருளில் இருந்ததால், ரொடாப்ஸின் ஒன்றுகூடி உங்களுக்கு தெளிவான இராப்பார்வையை தந்தது. மீண்டும் வெளிச்சம் பட்ட்தால் சிதைந்தது.
இரண்டாம் தடவை நீங்கள் சிவப்புக் கண்ணாடி அணிந்திருந்ததால், ரொடப்ஸின் எள்ளளவும் சிதையவில்லை. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இருளில் படிக்கவும் முடியும். இரவுப் பார்வையும் கெடாது.

இருளில் ஏனையா நாங்கள் படிக்க வேண்டும்?

விண்நோட்டமிட, விண்மீன்களின் இருப்பறிய நமக்கு விண்வரைபடம் (Sky Map) அவசியம். அந்த வரைபடத்தை வாசிக்க வெளிச்சம் தேவை. விண்வெளியை தெளிவாக காண இராப்பார்வை தேவை. வெளிச்சம் வந்தால் இராப்பார்வை இராது. இந்த முரண்பாட்டைக் களையவே சிவப்பு வெளிச்சம்.

சிவப்புக்கு எப்படி இந்த ஆற்றல்?

சிவப்பு நிறம் இயல்பாகவே நீளமான அலையாகும். எங்கிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய கவனத்தை ஈர்க்க்க்கூடிய நிறமும் கூட. இதனால் தான் சிவப்பு நிறம் ஆபாயத்தை குறிக்கப் பயன்படுகிறது. இதனால் தான் கவனத்தை ஈர்க்கும் ‘அந்தப்பகுதிக்கு சிவப்பு விளக்குப் பகுதி என பெயர் வந்திருக்குமோ என்னமோ (யோசிங்க).

வெளிச்சத்தை விடுங்கள், அது இயற்கை காரணி. இராப்பார்வையை கெடுக்கும் வேறு காரணி அதாவது, மனிதால் உண்டான கெடுதி ஏதும் உள்ளதா?

நிறைய உள்ளது. முக்கியமாக ஒளி மாசுபாடு (Light Pollution).

நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு என்றால் சரி. அதென்ன ஒளிமாசுபாடு?

ஒளியால் மாசுபடா வானமும்மாசுபட்ட வானமும். 
இயற்கையில் பகல் உலகுக்கு மட்டுமே ஒளி. இரவுக்கு இருள். இதுதான் நியதி. ஆனால் இன்றோ மனிதன் மின்விளக்குகளால் இரவை பகலாக்கியுள்ளான். இதனால், பல கெடுதிகள் உண்டு.
இருபத்திநான்கு மணிநேரமும் இன்றைய மனிதன் இயங்குவதால் அவனுடைய இராப்பார்வை குறைகிறது. குறிப்பாக நகரத்தினரிடம் தான் இராப்பார்வைக் குறைபாடு அதிகமாக உள்ளது. குன்றிய இராப்பார்வை மீண்டும் மீண்டும் குறையக்குறைய தடிசெல்கள் அழிகின்றன. இது மனிதனுக்கு ஏற்படும் தீங்கு. இதேபோல் விலங்குகள், பறவைகள், மரஞ், செடி, கொடிகளிடத்திலும் பல்வேறு கெடுதல்கள் முளைக்கின்றன. அவைபற்றி பார்ப்பது நம் கட்டுரையின் நோக்கமல்ல.

உங்களிடம் நான் தெளிவாகச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். இராப்பார்வையை போற்றிக்கொள்ளுங்கள். விண்வெளிநோட்டத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. தயாராகுங்கள், அடுத்த பகுதியில் விண்நோட்டத்திற்கான மற்ற அடிப்படைகளை ஆராய.

  
   – ஏ.பி.தீன்
புதுமை வங்கி

புதுமை வங்கி

1
உங்களிடம் வங்கிக்கணக்கு உள்ளதா? அல்லது உங்களிடம் ஒரு ரூபாய் பணமேனும் உள்ளதா? அல்லது உங்களிடம் இறைவனின் கட்டளைப்படி செயல்படவேண்டும் எனும் எண்ணமேனும் உள்ளதா?
இவற்றுள் ஒரு கேள்விக்கேனும் உங்கள் பதில் ஆம் என்றால், இது நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதிதான்.
வாடிப்போன முகங்கள், வழுக்கை விழுந்த தலைகள், சுருங்கிய நெற்றிகள், அனைவரது கன்னத்திலும் கை, ஒரே சிந்தனை, ஒரே பெருஞ்சிந்தனை. இருபத்தி ஓறாம் நூற்றாண்டு பிறந்ததிலிருந்தே உலகப் பொருளாதார வல்லுனர்களின் கோலம் இப்படிதான். ஏன்? வேறென்ன பொருளாதார வீழ்ச்சிதான். உங்க வீட்டு விழ்ச்சியில்லை எங்க வீட்டு வீழ்ச்சியில்லை உலகவீழ்ச்சி. உலகப் பொருளாதார வீழ்ச்சி. இதனை உணராதோர் உலகில் எவருமில்லை என்றே கூறிவிடலாம். உணவுப்பொருள் விலையுயர்வு, எரிபொருள் விலையுயர்வு, போக்குவரத்து விலையுயர்வு என ஏகப்பட்ட உயர்வுகளை தாங்களும் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா. இந்நிலையில் தான் பல்வேறு நாடுகளின் பண வீக்கமும் நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டே சென்றது.
இப்படி இருந்தவேளையில் தான் சில நாடுகள் இந்தப் பொருளாதார வீழ்ச்சியை சற்றும் உணராமல் வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தன. நாமெல்லாம் இங்கு பணவீக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் இவர்கள் மட்டும் எப்படி அதன் அதிர்வு கூட தெரியாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் அனைத்து வல்லுனர்களும் தங்கள் கழுகுப்பார்வையை இந்நாடுகளின் மீது திருப்பினர், தங்கள் கண்ணாடிகளை சரி செய்தவண்ணம்.
 
மேம்போக்காக, ஆராயத் தொடங்கியவர்களின் கண்கள் விரிந்தன. கசக்கி கசக்கி சோர்ந்து போயிருந்தவர்களின் மூளையில் பல்ப் எரிந்த்தது. திடீரென கம்மியது. சிறிது நேரம் கழித்து மீண்டும் முன்பைவிட பிரகாசமாய் உயித்தெழுந்தது. காரணம்?
புதுமையான வங்கியியலே அந்நாடுகளின் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததைக் கண்ட வல்லுனர்கள் முதலில் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் கலக்கமடைந்தனர். காரணம் அந்த வங்கியியலின் பெயர் இஸ்லாமிய வங்கியியல் என கூறப்பட்டதே.
இஸ்லாம்என்பதை சொல் அளவிலேயே வெறுப்பவர்களால் இஸ்லாமிய வங்கியல் என்ற பதத்தை சீரணிக்க இயலவில்லை. வழி தெரிந்ததடா என்று சற்று மூச்சு விட்டவர்களை இஸ்லாமிய வங்கி மீண்டும் கலக்கமடையச் செய்தது. இஸ்லாம் நமக்கு எந்த அளவிலும் எதிரிதான் என அவர்கள் 9/11க்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இந்த முடிவிற்கு அவர்கள் வர முக்கிய காரணம் கற்பனை குதிரைகளை கிளப்பிவிட்ட ஊடகங்களும், அமெரிக்க அரசாங்கத்தின் உள்குத்து வேலைகளும் தான் என்பது உலகறிந்த ரகசியம். எனவே, சரி வந்தது வந்துவிட்டோம் ஏதாவது ஓட்டை கீட்டை இருக்கானு பார்த்து இருந்தா நம்மால் முடிந்த ‘நல்லுதவியை செய்து பெரிதாக்கிவிட்டு போவோம் என முழுவீச்சில் இஸ்லாமிய வங்கியியலுக்குள் மூழ்கினர். களை காண இறங்கியவர்கள் தங்கள் களைகள் நீக்கப்பட்டு புதுக்கலையுடன் வெளியேறினர் ஒற்றை வசனத்தோடு.
“நான் சான்று பகிர்கிறேன், இஸ்லாமிய வங்கியே உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்று
இதனை மிகைபடுத்தப்பட்ட கதை என்று நினைத்து விட வேண்டாம். இது முற்றிலும் உண்மை. முழுக்க முழுக்க உண்மை. நம்பிக்கையில்லையா? சரி, உலக அளவில் பெயர்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவரது பெயரைக் கூறுங்கள். ரொம்ப யோசிக்காதீர்கள் உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுனரை நம் பிரதமராய் வைத்துக்கொண்டு. பேசாமடந்தை போல் இருக்கும் டாக்டர்.மன்மோகன் சிங் ஒன்றும் லேசுபட்ட ஆளில்லை. அவரது வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள் தெரியவரும். எதற்காக அவரை இங்கு இழுதேன் என்றால் அவர் உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர் என்பதை சுட்டுவதற்காக. அவரே இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் அமைப்பதைப்பற்றி ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என்று தனது 2010 மலேசியப் பயணத்தில் அங்கு வெற்றிகரமாக இயங்கிய இஸ்லாமிய வங்கிகளை கண்டு பரிந்துரைதார்.
அந்த அளவிற்கு இஸ்லாமிய வங்கியியலில் என்ன தான் உள்ளது?
உள்ளது என்பதை வைத்துத் தொடங்குவதை விட ‘இல்லைஎனபதை வைத்துத் தொடங்குவதுதான் இன்றைய ஃபேஷன் என்பதை சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று தொடங்கும் இக்கால விளம்பரங்கள் எடுத்தியம்புகின்றன.
இஸ்லாமிய வங்கியில் வட்டி இல்லை. பொருளாதாரத்தின் முதுகுத்தண்டே வட்டியில்தானே தொடங்குகின்றது என்று கேள்வி எழுகிறதா? அதுதான் இஸ்லாமிய வங்கியியல்.
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்): இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று கூறியதினாலேயாம்; இறைவன் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானதுஎன்றாலும் அவனுடைய விவகாரம் இறைவனிடவிடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
அல்-குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 275.
ஏன் பேசிக்கொண்டிருக்கையிலேயே திடீரென்று குர்ஆன் வசனத்தை போட்டீர்கள் என்று கேட்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கவும். புரிந்தவர்கள் இந்த பகுதியை விடுத்து அடுத்த பகுதியில் இணைந்து கொள்ளவும்.
இஸ்லாமிய வங்கி என்பது இஸ்லாமிய கோட்பாடுகளின்படி செயல்படும் வங்கியாகும். அதென்ன இஸ்லாமிய கோட்பாடுகள்? அவை எங்கிருந்து எடுக்கப்படுகின்றன?
இஸ்லாமிய கோட்பாடுகள் அல்லது இஸ்லாமிய சட்டம் எனப்படுவது அரபு மொழியில் ‘ஷரியாஎனப்படும். ஷரியா என்பது இஸ்லாமியர்களின் திருநூலாகிய குர்ஆனிலிருந்து தான் இயற்றப்படுகிறது.
 குர்ஆன் என்பது இந்த உலகத்தைப் படைத்த இறைவனால் மனிதர்களை நல்வழியின் பக்கம் திருப்ப ‘முஹம்மத்’ (صلى الله عليه وسلم) எனும் மனிதருக்கு இறக்கியருளப்பட்டது. இதில் மனிதர்கள் உலகில் மனநிம்மதியுடன் வாழ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யகூடாது என்பதை தெளிவாக இறைவன் கூறுகிறான். ஷரியாவின் அடித்தளம் குர்ஆனாலேயே நிறுவப்படுகிறது. குர்ஆன் போக முஹம்மத் (صلى الله عليه وسلم) நபி வாழ்ந்த முறைகளும் ஷரியாவிற்கான சட்டமியற்ற உதவுகிறது. நபியின் (صلى الله عليه وسلمவாழ்க்கை முறை ஹதீஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த ஹதீஸ்களும் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்பட்ட முஹம்மத் நபியின் (صلى الله عليه وسلم) வாழ்க்கைமுறையாகும்.
இஸ்லாமிய சட்டதிட்டமான ஷரியா அரசியல், பொருளாதாரம், குற்றங்கள், போன்ற சமூக விதிகளிலிருந்து உண்ணல், உடுத்தல், குடித்தல், உடலுறவு கொள்ளுதல் வரையான தனிமனித விதிகள் வரைக்கும் உள்ளடக்கியதாகும்.
வட்டி வாங்குதல், கொடுத்தல் இரண்டுமே பாவம். வியாபாரமும் வட்டியைப் போன்றது தானே என கேட்பீர்கள் அல்லவா? உடல், உள உழைப்பின்றி மேற்கொள்ளப்படும் வியாபாரம் கூடும் (ஹலால்). ஆனால் பணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் தொழிலான வட்டித் தொழில் செய்வது கூடாது (ஹராம்). இதுதான் மேல் காணும் குர்ஆன் வசனத்தில் இறைவன் அளிக்கும் கட்டளை. இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேலே குர்ஆன் வசனம் மேற்கோள் காட்டப்பட்டது என.
ஆக, வட்டியில்லா கொடுக்கல், வாங்கல் இருக்கவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது தனிமனிதனுக்கு சரி. ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?
ஏன் வராது. பாகிஸ்தான், ஈரான், மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற மேற்கத்திய தேசங்களிலும் வெற்றிகரமாக இஸ்லாமிய வங்கி செயல்பட்டுவருவது இந்தக் கேள்விக்கேற்ற பதில். இதையெல்லாம் மேற்கத்திய பொருளாதார வல்லுனர்களும் யோசிக்காமலில்லை என்பதற்கும் இது சிறந்த உதாரணம்.
இஸ்லாமிய வங்கியியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமா?
இஸ்லாமிய வங்கிகள் எப்போதிலிருந்து புழக்கத்திற்கு வந்தன?
இஸ்லாமிய வங்கியியலுக்கும் வழக்கமான வங்கியியலுக்கும் இடையேயான வேற்றுமைகள் யாவை?
வழக்கமான வங்கியியலை விட இஸ்லாமிய வங்கியியல் எவ்வாறு சிறந்தது?
வட்டி எவ்வாறு மனித இனத்திற்கு கெடுதியாகும்?
இஸ்லாமிய வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
இந்தியாவில் இஸ்லாமிய வங்கியின் நிலை என்ன?
இஸ்லாமிய வங்கியில் தற்போதுள்ள குறைபாடுகள்? யாவை அதனை எவ்வாறு களைவது?
இன்னும் இவற்றை போல் ஏராளமான கேள்விகளுக்கு விரிவான பதில் காண தொடர்ந்து என் பதிவை வாசித்து வாருங்கள். புரிந்துகொள்ளலாம். இன்ஷாஅல்லாஹ்.
 –          ஏ.பி.தீன்

 (மீதி கட்டுரைகள் விரைவில் புத்தக வடிவில்……………..)
மூளை வறட்சி: (Brain Drain)

மூளை வறட்சி: (Brain Drain)


தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ மருத்துவ அறிக்கை என நினைத்து விட வேண்டாம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் பெரும் பெரும் மூளைகளால் மூளை வறட்சி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பத்திரிக்கைகளிலும் இந்தத் தலைப்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணமாக உள்ளன. இப்படி இருக்கும் வேளையில் மூளை வறட்சி என்றால் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாது புரிந்து வைத்திருப்பதும் மிக மிக அவசியமாகிறது. ஆதலால் அடுத்த நான்கு பக்கங்களில் இதனை முடிந்த அளவு அலச ஆயத்தமாவோம் வாருங்கள்.
மூளை வறட்சி என்பது அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்ற அறிவுத்தளத்தளத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பேரளவில் இடம்பெயர்ந்து செல்வதைக் குறிக்கும். பெரும்பாலும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், செல்வம் சேர்க்கவும், திறமையை நிறுவவும் மக்கள் இவ்வாறு இடம்பெயர்கிறார்கள்.
திரைகடல் ஓடி திரவியம் தேடும் இப்போக்கால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதுதானே என்று எண்ணிவிடாதீர்கள்.
வெளிநாட்டில் கிடைக்காத நம்மூர் பொருட்களை ஏற்றிச் சென்று அங்கு விற்றுவரும் பொருள் சார்ந்த வியாபாரம் அல்ல இது. அறிவு சார்ந்தது. மூளை சார்ந்த்து. மனிதர்கள் சார்ந்தது. குடும்பம் சார்ந்தது. ஆக மொத்தத்தில் முற்றிலும் நாடு சார்ந்தது. எப்படி தம்பினு நீங்க கேக்குறதுக்கு முன்னாடி நானே பதில் சொல்லிடறேன்.
ஒரு நாட்டின் மூலதனம் என்பது அதன் பணவலிமையைப் பொருத்தோ, ராணுவ வலிமையைப் பொருத்தோ மட்டும் அமைந்துவிடுவதில்லை, மனிதவலிமையைப் பொருத்தும் தான் அமைகின்றது என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும். மூளை வறட்சி என்பதை மனித மூலதன வெளியேற்றம் (Human capital flight) என்றும் அழைக்கலாம் என்றால் இதன் பேராற்றலை பார்த்துக்கொள்ளுங்கள். ஆளில்லாமல் வெரும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?எனும் சாமானியனின் கேள்வியுடன் நம் பதில் தொடங்குகிறது.
இந்த அறிவுப்பெயர்ச்சி, இடம்பெயரும் மக்களின் தாய்நாட்டின் பொருளாதார வாய்ப்புக்களிலும் (economic prospects), போட்டித்திறனிலும் (competitiveness) பெருத்த எதிர்மறை விளைவை உண்டு பண்ணுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் மிக்கோரின் எண்ணிக்கையையும் பெருமளவில் குறைக்கின்றது. இதனால் திறமைகுன்றியவர்கள் திறமையானவர்களின் இடத்தை நிரப்பவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த திறமை குன்றியவர்களால் எப்படி தங்கள் துறையை முன்னேற்ற இயலும். இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும்.”, என்பது மனிதவள ஆய்வாளர்களின் கவலை.
இந்தியாவிலிருந்து கணினி வல்லுனர்கள் மட்டும் வருடத்திற்கு சுமார் 200 கோடி பேர் இவ்வாறு இடம்பெயர்வதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme, UNDP) தெரிவிக்கின்றது.
இன்னும் விளங்கச் சொல்லி புரியவைக்க வேண்டுமானால் சீனாவை எடுத்துக்கொள்வோமே. மன்மோகன் சிங்கிலிருந்து நம் பக்கத்து வீட்டு மண்மேட்டு சிங்வரை ஆனாஊனா சீனாவை தானே சீண்டுகிறார்கள்.
சீனாவின் சவாலை சமாளிக்க நம் நாட்டு ராணுவபலத்தைக் கூட்டவேண்டும் என்று கூக்குரலிடும் சிலர், ஏன் சீனா நம்மை விட வேகமாக முன்னேறுகிறது? என்று நிதானித்து யோசிக்கத் தவறுகிறார்கள். தனிநபர் கல்வி, சுகாதாரம், ஆயுள், வருமானம் என முக்கால் வாசி அறிவுசார்ந்த, மனிதவளம் சார்ந்த துறைகளில் சீனா நம்மைவிட பல மடங்கு முன்னேறிவிட்டது. இப்படி இருக்கையில் வெறும் ராணுவபலத்தை மட்டும் கூட்ட முனைவதென்பது அபத்தத்தில் போய் தான் முடியும்.
இப்பொழுது புரிந்துவிட்டதா என்ன விரட்டு விரட்டினாலும் ஏன் இந்தப் பாயும் புலியால் அசுர வேகத்தில் பரியும் அந்த ட்ராகனை நெருங்கக் கூட இயலவில்லை என்று. மனிதவளம். இதுவே பதில். மனிதவளம் என்பது முன்னேறும் நாட்டிற்கு இன்றியமையாததாகும்.
ஏன் இப்படி மக்கள் பிறநாட்டிற்கு பாய்ந்து நம் நாட்டில் மூளை வறட்சியை உண்டாக்குகிறார்கள்?
கைநிறைய பணம் சம்பாதிக்கவும், தங்கள் வசதி வாய்ப்பை பெருக்கிகொள்ளவுமே பெரும்பாலானோர் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இங்கு தீரா தங்கள் அறிவுப்பசியை தீர்த்துக்கொள்ளவும், தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ளவும் இவ்வாறு செய்கிறார்கள். ஆக, தன் சுயநலத்திற்காகவே பலர் வெளிநாட்டின்பால் படையெடுக்கிறார்கள். எப்படி இந்த சுயநலத்தை விரட்டுவது?
மனிதன் அடிப்படையில் ஒரு சுயநலவாதி, அவன் சார்ந்துள்ள சமூகம் இதனை களைந்தால் ஒழிய என்று கூறுகிறது அராபியப் பழமொழியொன்று.
இந்த பழமொழி இடம்பெயரும் மக்களை குறைகூறாதே; அவன் வளர்க்கப்பட்ட சமூகத்தை குறைகூறு என்கிறது. நியாயமாகப் பார்த்தால் இது முற்றிலும் உண்மை தானே.
சாமானியன் தன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்வதை ‘சுயநலம்எனும் சொல்லால் கொச்சைபடுத்தி விட முடியாது. சமூகம் தன் மக்களுள் விதைத்ததைத் தானே அறுவடை செய்யும், செய்யவும் வேண்டும், அதைத்தான் இப்பொழுது செய்தும் வருகிறது. என்று குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள், அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் அள்ளி வீசியபடி.
இந்தியர்களிடம் ஒரு வினோத போக்கு காணப்படுகிறது. மந்தையோடு மந்தையாய் போகும் பழக்கம் தான் அது.
விளையாட்டாகட்டும், அரசியலாகட்டும், கல்வியாகட்டும், வேறு எந்த துறையாகட்டும் இதுதான் நம் மக்களின் இன்றைய நிலைமை. இதற்கு கிரிக்கெட், அன்னா ஹசாரே, இஞ்சினீரிங், ஐ.டி என எந்தத் தலைப்பை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுள் எஞ்சினீரிங் மற்றும் ஐ.டி மாயை என்பது மனிதவள மூலதன வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எப்படி?
முடிந்தால் நடுவர்க்க பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவனின் பெற்றோர்களிடம் பேச்சுக் கொடுங்கள். புரியவரும்.
“அப்பறனே, பையன அடுத்து என்ன படிக்க வைக்கப்போறிங்க
“ஏதாவது டாக்டராவோ இஞ்சினீயராவோ ஆக்கிபுடலாம்னு பார்த்தா எங்கப்பா, 70 பர்சண்ட்டையே தாண்ட மாட்டேன்றான், அதான் நிலத்தை வித்தாவது எஞ்சினியரிங் காலேஜுல சீட்டு வாங்கிப்போடலாமானு யோசிச்சிட்டிருக்கேன். என்னத்தையோ படிச்சுகிட்டானா எதோ ஒரு ஐ.டி. கம்பெனில வேலை பார்த்து செட்டிலாயிடுவான். நம்மள மாதிரி கஷ்டப்படாமலாவது இருப்பான்ல
இஞ்சினீரிங் முடித்தால் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடப்பதைப் போலவும், ஐ.டி கம்பெனிகளில் வேலைசெய்வது என்பது நோகாமல் கைநிறைய சம்பாதிக்கும் வித்தை என்பது போலவும், அமெரிக்கா என்பது சொர்க்க லோகம் போலவும் இன்றைய சமூத்தில் ஒரு மாயபிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. லட்ச லட்சமாய் செலவு செய்து முண்ணனி இஞ்சினீரிங் கல்லூரியில் பட்டம்பெற்று இன்று பத்தாயிரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் திண்டாடும் எத்தனையோ இளைஞர்களை எனக்குத்தெரியும். இவர்கள் மேல் தவறேதும் இல்லை, அவர்களிடமும் அவர்கள் பெற்றோரிடமும் இப்படிப்பட்ட மாயத்தை உண்டாக்கிய சமூகத்தின் மீதே தவறு.
சமூகம் சமூகம் என்று சும்மா இல்லாததையெல்லாம் வைத்து பேசுவதாக நினைத்துவிட வேண்டாம்.
உயிரற்றதாகத் தெரியும் இந்த சமூகம்எனும் சொல் பலவகை உயிருள்ள இனங்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட இடத்தில்/நாட்டில் மக்களின் கூட்டமைப்பைக் குறிக்கின்றது. சமூகத்தின் நிலை பெரும்பாலும் என்பது கல்வியாலும், அவர்கள் செய்யும் தொழில்களாலும், அதனை ஆளும் அரசாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஆக நம் சமூகத்தின் இந்த மாயபோக்கிற்கு நம் கல்விமுறையும் அரசியலும் பெரும் காரணம் என்பது தெளிவாகிறது.
மொட்டை மனப்பாடம் செய்வதையும், அதிக மதிப்பெண் குவிப்பதையும், போட்டி மனப்பான்மையையும் பெரிதும் ஊக்குவிக்கும் நம் நாட்டு கல்விமுறையைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். இந்தக் கல்விமுறையை உற்று கவனித்தால் அது நமக்குச் சாதகமாக இருப்பதைவிட பிற நாடுகளுக்கு குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை உணரலாம், அவர்கள் நாட்டு அறிவுத்தளத்தை நிரப்ப நம் நாடு அறுவடைக் களமாக பயன்படுவது புலப்படும். நம்மை வெள்ளையர்கள் வெளிப்படையாக அடிமைப்படுத்திய படலம் முடிந்து இப்போழுது மறைமுகமாக அடிமைப்படுத்தும் படலம் துவங்கிவிட்டது. இந்த மேற்கத்திய மோகம் உருவாக பள்ளி, கல்லூரி கல்விமுறைகள் போக ஊடகத்துறைக்கும் பெரும்பங்குண்டு.
கல்வி என்பது ஊடகத்துறையையும் உள்ளடக்கியதுதான். ஊடகங்களே அறிவை பாமரனையும் சென்றடையச் செய்கின்றன. திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்றவை வெள்ளைதோலே அழகு, வெள்ளையர் கொள்கையே உயர்ந்தது என்பது போன்ற மறைமுக கருத்தை மக்கள் மனதில் திணிக்கின்றன. பாம்பாட பருந்தாட போன்ற ரியாலிட்டி ஷோக்கள் இன்னும் ஒருபடி மேல். இது சமூகத்தில் கல்வித்துறையால் (இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அறிவுத்துறையால்) எற்பட்ட விளைவு.
அடுத்தது அரசியல். இதுவே மூளை வறட்சி ஏற்படுத்துபவைகளின் ரிஷி மூலம். அரசியல் தளத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தாலேயே பெரும்பாலானோர் நம் நாட்டை விட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர். அரசியல்வாதிகள் நினைத்தால் இடம்பெயர்பவர்களுக்கு இங்கேயே போதுமான ஆராய்ச்சி வசதிகளை செய்துகொடுக்கலாம், நல்ல ஊதியம் அளிக்கலாம், வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைய ஊக்கப்படுத்தலாம். ஆனால் செய்வதில்லை. ஏன்?
அவர்கள் தான் அரசியல்வாதிகள் ஆயிற்றே. இதைப்பற்றி ஒரு சமூக ஆர்வளரிடம் வினவினேன்.
“முதலெல்லாம் அரசியல்தான் தம்பி கஞ்சா விற்பவர்களுக்கும் ரவுடிகளுக்கும் பணமீட்டும் வழியாகத் தெரிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அறிவுத்தளம் தான் அவர்களின் விருப்பம். முக்குக்கு முக்கு இவர்கள் இஞ்சினீரிங் கல்லூரி தொடங்கிவிட்டதை நீங்கள் காணலாம். இதுதானையா இந்த மாயை உருவாக முதல் காரணம். மக்களை முன்னேறவிடக்கூடாது என கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் இப்படிப்பட்ட அரசியல் வாதிகளால் தான் பலரும் தாய்நாடு துறந்து வெளிநாடு புகுகின்றனர். மூளை வறட்சியைத் தடுக்க முதலில் அரசியல் வறட்சியை களையவேண்டும். இந்த திறமையற்ற அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு ஆணி (வேறேதோ சொல்லவந்து சட்டென்று மாற்றிச் சொன்னார்) கூட புடுங்கமுடியாதுஎன்றார்.
அதுசரி, ம்அரசியல் வரட்சி என்றால்?
வேறென்ன, திறமையற்றவற்களின் ஆட்சியால் நாட்டில் ஏற்படும் வறட்சிதான். படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் இதில் பேதமை இல்லை. சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்த மெகா ஊழல்களை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். படிப்பறிவில்லா அரசியல்வாதிகள் தான் ஏதோஅறியாமல்எல்.(கே).ஜி, டூ.(கே).ஜி என செய்துவிட்டார்கள் என்றால் படித்த இவர்களுக்கு எங்கே சென்றது புத்தி.
இதற்கு காரணம் பணத்தின் மீதுள்ள தீரா வேட்கை. இதற்கு காரணம் காண விழைந்தால் மறுபடியும் பணத்தை மதிக்கும் சமூகம், மதிப்புகளையும் நன்நெறிகளும் போதிக்கத் தவறும் கல்வி என மறுபடியும் வந்த பாதையிலேயே ஒரு சுழல் சுழல்கிறது.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் ‘மூளை வறட்சி எனபது ஒன்றைத்தொட்டால் மற்றொன்று, மற்றொன்றைத் தொட்டால் இன்னொன்று என விரிந்து கொண்டே செல்கின்றது. ஆக இரத்தினச்சுருக்கமாக இதனை முடித்துக்கொள்ளவேண்டுமென்றால். முதலில் கல்விப்புரட்சி வேண்டும், பின் ஒரு அரசியல் புரட்சி வேண்டும் அதற்கு முன் நல்லெண்ணங்களை ஊக்குவிக்கும் சமுதாயப்புரட்சி வேண்டும் அதற்கு முதலில் மனித மனம் விரிவடைய வேண்டும்.
Eliminating gender barriers (State level discourse): பாலின தடை களைதல்

Eliminating gender barriers (State level discourse): பாலின தடை களைதல்


இது தான் தலைப்பு. என்னடா இவனும் இவன் பங்குக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடானேனு சலிச்சுக்காதீங்க. இது மதுரைக்கல்லூரியில் மார்ச் ஏழாம் தேதி ‘பாலின தடை களைதல் எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கைப் பற்றிய என் அனுபவக்கட்டுரை.
அன்றைக்கு பிப்பிரவரி இருபத்தி ஏழாம் தேதி. சரியாக காலை ஏழு மணி இருபத்தி ஓரு நிமிடம். அம்மா போட்டு வைத்திருந்த பச்சைத் தேயிலையை குடிக்க எண்ணி வாயருகே கொண்டு சென்றபோது ஃபேஸ்புக்கில் ‘நோட்டிஃபிகேஷன்ஐகான் ஒரு செய்தியை அறிவித்தது. அதனை அழுத்தினேன் மதுரைக்கல்லூரி முதல்வரின் பொது நிகழ்வுப் பக்கத்திற்கு என்னை அழைத்துச்சென்றது.
நமக்கு தான் வகுப்பறையைத் தவிர்த்த அனைத்து இடங்களிலும் தலைகாட்டுவதென்பது குருதியில் ஊரியதாயிற்றே. ஆவலுடன் அந்நாளை டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன், களைகிறார்களா இல்லையா என்று ஒரு எட்டு பார்த்து வந்து விடுவோமே என்ற எண்ணத்துடன்.
நாட்கள் ஓடின………..
வழக்கம்  போல் அன்று கல்லூரிக்குச் சென்றேன். எங்கு நோக்கினும் ஒரே சேலை மயம். காற்றில் மல்லிகை மணம். என்னாச்சு டா இன்னிக்கு என்று என் நன்பனிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்.
கல்லூரி கொடிக்கம்பத்தின் அடியில் இடப்பட்டிருந்த கோலம் என்னை ஓடிவிடு என்பது போல் படுசிக்கலாய் இடப்பட்டிருந்தது. இதற்காகவே நானும் பல கோலப்போட்டிகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன், கோலங்களை ரசிக்கலாமே என்று. இதுநாள் வரை என்னால் கோலங்களை  ரசிக்க முடியாதது என் துரதிர்ஷ்டமே. விடுங்க தலைவா இதற்கெல்லாம் என்னை போன்ற ரசனை கெட்ட ஜென்மங்கள் தான் வருந்த வேண்டும். சரி கதைக்கு வருவோம்.
கோலக்குழப்பத்திலிருந்து வெளிவரும் முன் ஃபிளக்ஸ்போர்டு ஒன்று என் கண்ணில் பட்டது. புத்தியைச் சுட்டது. பாலின தடை கலையும் நாள் இதுவென்று அறிவித்தது. இன்றைக்கு எந்த வகுப்பும் நடக்காதுடா அம்பி என்று உணர்த்தியது. உற்சாகம் தலைக்கு மேல் பீறிட்டது.
பிறகென்ன, என்.எஸ்.எஸ் மக்களுடன் இரண்டரக்கலந்தேன். எதற்காக என்று கேட்கிறீர்களா? தனியாய் சென்றால் அந்நியர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல் எவனைப் பார்த்தாலும் மிரட்சியாகவே இருக்கும். ஆனால் என்.எஸ்.எஸ் உடனான பிணைப்பு அப்படியானதல்ல. நம் வீட்டுத் திருமணத்தைப் போன்றது. நாம இல்லாட்டி யார் நிலைநாட்டுவது? என்ற கேள்வியுடன் அன்யோன்யமாக சபையினருடன் பழகுவதற்கு வழிவகை செய்யக்கூடியது. ஒரே இடத்தில் ஆணி அடித்தாற் போல் அமர்ந்திருக்காமல் அங்கும் இங்கும் உலவுவதற்கு சுதந்திரமளிக்கக்கூடியது. நிகழ்சி போர் அடித்தால் எந்த சலனமுமின்றி பேசுபவரின் மனம் கோணாமல் வெளியே ‘எஸ்கேப்ஆக உதவக்கூடியது. இன்னும் எத்தனையோ கூடல்களைஎன்.எஸ்.எஸ் சாத்தியப்படுத்துவதாலேயே இந்த முன்யோசனை. எப்பூடி…!
கல்லூரி முதல்வரும் நிர்வாகியும் மேல்மாடி சங்கரையர் அரங்கில் விழாவைத் தொடங்கி வைத்தனர். மேடையில் மகளிர் ‘கிளப்பில் அடிக்கடி பார்க்க்கூடிய முகங்கள் தென்பட்டன. தங்கள் பங்குக்கு ஏதேதோ உரை நிகழ்த்தினர். அரைத்த மாவே மீண்டும் மீண்டும் அரைக்கப்பட்டது. அதற்குமேல் என்னால் அங்கு அமர இயலவில்லை. அறையை விட்டு கீழே இறங்கி வந்தேன். எதிரே கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியையும் ஆனந்த்த்தையும் அளித்தது.
எவளுக்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் முடிவிற்கு வந்தேனோ அவள் என் கண்ணெதிரே அமர்ந்திருந்தாள், அருகே அவளது தந்தையுடன். அவளது தந்தை மட்டும் அங்கில்லை என்றால் அவளை ஒரே மூச்சில் களவாடிச் சென்றிருப்பேன். என்ன செய்வது முன்னூறு ரூபாய் கொடுத்து அவளை வாங்க வேண்டியதாயிற்று. வாங்கி சிரத்தையுடன் பேப்பரில் சுற்றி (பிளாஸ்டிக்பை கல்லூரி வளாகத்தினுள் தடைசெய்யப்பட்டுள்ளதாம், எனக்கே காதுகுத்துறாங்க) பைக்குள் திணித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஆள் நடமாட்டமில்லாத அமைதியான இட்த்த்தில் வைத்து அவளை ஸ்பரிசிக்கத் தொடங்கினேன். களியுற்றேன். இருங்க இருங்க உங்களிடம் இருந்து எதோ கேள்வி கேட்கிறதே, அவள் என்றால் யார் என்று.
அவள் என்றால் என் ஆருயிர் காதலி ‘புத்தகம்தாங்க. நீங்க ஏதும் எடக்குமடக்கா எடுத்துக்காதீங்க.
மதியவேலையும் வந்தது. பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. நுழைந்தேன் காண்டீனுக்குள். நிறப்பினேன், வெளியேறினேன். மகளிர் தின மதிய நிகழ்சிகளிலாவது பங்கேற்க எண்ணி.
 கூடங்குள மகளிர் கூட்டம் மேடையில் கூடியிருந்தது. இடையில் சென்றதால் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழு என்று புரிந்து கொள்ள இரண்டு மூன்று நிமிடங்கள் பிடித்தன. மேடையிலிருந்தவர்கள் கண்ணீர் சிந்தாத குறையாக தங்கள் சோகக்கதையை செப்பினர். அவர்கள் பேசிய வட்டார வழக்கு தமிழுக்கு இனிமைகூட்டல் செய்தது. அவர்கள், காங்கிரஸையும் சங் பரிவாரங்களையும் ஒரு தாக்கு தாக்கினர். இத்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்கள் என சிலவற்றை மேடையேற்றினர். வெளிநாட்டுப் பணம் எங்களுக்கு வரவேவில்லை என்று சத்தியம் பண்ணாத குறையாக கூறினர். அணுசக்திக்கு மாற்றான ஆற்றல்களை முன்வைத்தனர். 1984ல் நிகழ்ந்த போபால் விசவாயு விபத்தையும், 1986ல் செர்னோபிலில் நடந்த அணுவிபத்தையும், 2011 பூகம்பத்தால் ஜப்பான் அனுபவித்த அணுக்கசிவையும் அடுக்கி அவை விளைவித்த துன்பங்களையும் கண்முன்னே படரவிட்டனர். 1984 போபால் வெடிவிபத்தின் போதும் 2004 சுனாமியின் போதும் மிகத் துரிதமாக செயல்பட்டு மக்களை காப்பாற்றிய இந்திய அரசியல்வாதிகள் நாக்கை பிடிங்கிக் கொள்ளும்படியான கேள்விகள் பலவற்றை தொடுத்தனர். வெள்ளையறிக்கையை வெளியிடமுடியுமா என மத்திய அரசை கோதாவிற்கு அழைத்தனர். இறுதியாக பார்வையாளர்களை வினவ வேண்டினர்.

“எல்லாம் முடிஞ்சு செயல்பட்ற நிலையில இருக்கும் வேளையில இந்தப் போரட்டத்த தொடங்குவதற்குப் பதிலா, 1988லயே தொடங்கி இருக்கலாமே?என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கேட்டார்.
“அறிவியல் வளர்ச்சியை உணர்ச்சியால் மட்டுப்படுத்த நினைக்காதீர்கள் என்று ஆரம்பித்த ஒரு  நீண்ட கேள்வி அஸ்திரத்தை வீசினார் மாணவி ஒருவர்.
அடித்த வெயிலில் இந்த கேள்விகள் மாணவர்கள் மத்தியில் சூட்டைக்கிளப்பியது.
இந்தப்போராட்டம் 1988லேயே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் அப்பொழுது ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தவில்லை என்றும் விளக்கமளித்தனர்.
“அறிவியல் வளர்ச்சி ஆக்கத்திற்கன்றி அழிவிற்கு பயன்படுத்தப்படும் பொழுது அதனை உணர்ச்சியாலன்றி எதனால் அனுகுவது?. வேண்டுமென்றால் உங்கள் வீட்டருகில் அணு உலையை வைத்து கொள்ளுங்கள். உணர்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பார்ப்போம் என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் பதிலளித்தனர். பள்ளிப்படிப்பைக் கூட கடக்காத இப்பெண்கள் பேசுவதைக் கண்டு நான் வியந்துபோனேன்.
இப்பெண்கள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
அறிவியல் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றனர்.
“பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத இவர்கள் கூறுவதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா?
போன்ற கேள்விகள் தங்களை அறிவுஜீவிகள் என்று கருதிக்கொண்டவர்கள் மத்தியில் உரக்க சலசலத்தது.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி முதல்வர் மேடை ஏறினார். கல்பாக்கம் போன்ற அணுமின்நிலையங்களால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்/ஏற்படவிருக்கும் ஆபத்தினை சுட்டிக்காட்டினார். தின்ந்தோரும் அணு ஆற்றலினால் ஏற்படும் இன்னல்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாட்காட்டியை வேறு அடிக்கடி காற்றில் அசைத்து அசைத்து காட்டி ஆக்ரோஷமாக பேசினார். மதுரைக்கல்லூரி மதுரையை ஒரு புரட்சிக்கு இட்டுச்செல்லும் என வாக்களித்தார். எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் முரளிஅவர்கள்  தன் இன்னொரு முகத்தால் அனைவரையும் மிரளவைத்தார் என்றே கூறவேண்டும்.
உணவு இடைவேளை விடப்பட்டது.
நான் ஏற்கனவே உணவருந்திவிட்டதால் வழக்கம் போல என் நண்பர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். சுமார் இரண்டரை மணியளவில் மீண்டும் சபை கூடியது கவியரசிகளுடன்.
தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, ராணி ஆகிய கவிஞர்கள் மேடையை அலங்கரித்தனர். இவற்களுள் தமிழச்சி எனக்கு கொஞ்சம் பிரபலமானவர், எங்கள் தொகுதி ச.ம.உ தங்கம் தென்னரசு அவர்களின் தங்கையாதலால். தென்னரசு மிக எளிய மனிதர், பழகுவதற்கும்.
தமிழச்சி தங்கபாண்டியன்
ஆங்கிலத்துறை தலைவி வரவேற்ப்பை முடிக்க தமிழச்சி பேச ஆரம்பித்தார். ஆங்கில இளங்கலை முடித்து தான் தமிழ் கவிஞரான முற்றிலும் முரணான விதத்தை பகிர்ந்துகொண்டார். தன் முதல் கவிதை முயற்சி அபத்தமாய் முடிந்ததை எந்த கூச்சமும் இன்றி தெரிவித்தார். கவிஞர், எழுத்தாளர் என்பதால் அவர்களுக்குப் பின் ஒளிவட்டமோ பெருங்கொம்போ இருக்கத் தேவையில்லை என்ற எதார்த்தத்தை எடுத்துரைத்தார். படைப்பாளிகளும் சாதாரன நிலையில் இருந்து வளர்ந்தவர்களே என்பதை மாணவர்கள் மனத்தில் பதிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஆங்கிலமானாலும் சரி தமிழானாலும் சரி தயக்கமின்றி உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தி அமர்ந்தார்.
சல்மா
அடுத்து சல்மா பேசத் தொடங்கினார். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த கவிஞர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. இஸ்லாமிய குடும்பப் பிண்ணனியில் வளர்ந்த தனது படிப்பு பெற்றோர்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார் (இஸ்லாத்தை அறியா இஸ்லாமியர்கள் பெருகிவிட்டதை இது தெளிவுபடுத்துகிறது). தன் மீதுஏவிவிடப்பட்ட ஒடுக்குமுறைகளை சமாளித்ததிலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமெடுத்ததுவரையிலான கதையை கண்கலங்காமல் விளக்கினார். ஆண் எழுத்தாளர்களுக்கு பெண் எழுத்தாளர்கள் எதிலும்சளைத்தவர்கள் அல்ல’ என்பதை ஆழமாக பதிவுசெய்து விடைபெற்றார். (இவரை வைத்து பி.பி.சி ஒரு ஆவணப்படம் தாயரிக்கிறது என்பது முதல்வர் வழிவந்த உபரித்தகவல்)
அடுத்ததாக மேடையேறியவர் கவிஞர் ராணி அவர்கள். தலித் கிருஸ்துவர் என்பதால் தனக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளையும் அதனால் தான் அனுபவித்த மன உளைச்சல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். படைப்பாளிகள் எதற்கும் அஞ்சக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதில் தெளிவாய் இருந்தார். பால்சார்ந்த கருத்துக்களை பிரகடனப்படுத்துவதில் பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்று பேச்சினிடையே அடிக்கடி உணர்த்தினார். இன்றளவும் தான் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.
பிறகு, கவிஞர்களை கௌரவிக்க எண்ணி வணிகவியல் துறை சார்பாக பேராசிரியர் ஒருவர் கவிஞர்கள் தமிழச்சிக்கும், ஸல்மாவுக்கும் பொன்னாடை என்ற பெயரில் டர்க்கி டவலை அணிவித்தார். ஏனோ தெரியவில்லை இதில் ராணி தவிர்க்கப்பட்டார். அந்நேரத்தில் அவரது முகம் சுருங்கியதைக் தெளிவாய் காணமுடிந்தது. தனக்களித்த பொன்னாடையை ராணிக்கு விட்டுக்கொடுத்து தான் தமிழச்சி தான் என்பதை நிறுவினார் தமிழச்சி தங்கபாண்டியன்.
ஒருவழியாக கருத்தரங்கு நிகழ்ச்சி முடிந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது. வெளியில் வேலை இருந்ததால் நானும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன், கிளம்பிச் சென்றேன். கலை நிகழ்சிகளைத் தொடர்ந்து ‘ஆண்மையோ ஆண்மைஎனும் நாடகமும் நடத்தப்பட்டதாம்.
நல்லவேளை நான் நழுவி விட்டேன், இல்லையெனில் அவற்றை வருணிக்க இன்னும் ஐந்நூறு வார்த்தைகள் தேவைப்பட்டிருக்கும். நீங்கள் தப்பித்தீர்கள் ஆயிரம் சொற்களோடு.

அக்காமார்களே அண்ணன்மார்களே; தாத்தாமார்களே பாட்டிமார்களே; தம்பிமார்களே தங்கைமார்களே; ஒன்றும் விளங்கா என்னை போன்ற விளக்கமார்களே அனைத்து மார்களுக்கும் நான் தெரிவிக்கவிரும்புவது என்னவென்றால் 

மதுரைக்கல்லுரி ஒரு அக்னிக்குஞ்சை (புரட்சி) பொரிக்க இருக்கின்றது என்பது அது மந்தையை விட்டு விலகி தனக்கென ஒரு பாதையை அமைக்க முற்படுவதிலேயே தெரிகின்றது. அதன் தழலை மதுரை சமாளிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். அடிக்கிற வெயில்ல இது வேறையானு புலம்பாதீங்க.

 – ஏ.பி.தீன்
நம்மூர் மதுரை

நம்மூர் மதுரை

என் ஊர் என்ற தலைப்பில் விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டதில் சேர நான் எழுதிய கட்டுரை:
மதுரை, நான் பிறந்த ஊர். வளர்ந்ததெல்லாம் விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில். மதுரை நகரம் காரியாபட்டியில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் மதுரை மாவட்டம் ஒன்பது கிலோ மீட்டரிலேயே தொடங்கிவிடுகிறது. விருதுநகரை விட மதுரையில் அனைத்தும் சகாயமாக கிடைப்பதால் (போக்குவரத்து உட்பட) வாரம் ஒருமுறையேனும் மதுரையை நோக்கி படையெடுப்பது காரியர்களின் (காரியாபட்டிக்காரர்களின்) வழக்கம். இதனாலேயே என் பெற்றோரும் என்னை மதுரையிலேயே படிக்க வைத்தனர். இப்போது நான் படிப்பது மதுரைக்கல்லூரிஎன்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்படியாக மதுரைக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது.
வகுப்புகளை கட்டையபோட்டுவிட்டு மதுரையை தெருத்தெருவாய் சுற்றியதின் பலனாக இத்தொடர்பு முற்றியது. மென்மேலும் என்னைக் கவர்ந்திழுத்து வசியப்படுத்தியது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு கிழக்கின் ஏதென்ஸ், தூங்காநகரம், கூடல்நகர், நான்மாடக்கூடல், கோயில்நகரம், மல்லிகை மாநகர் என பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. வரலாற்றில் என்றும் மதுரைக்கென்று தனி இடம் உண்டு. இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். மதுரையை கொஞ்சம் சுற்றுவோமே…!
பொதுவாக மதுரையின் லேண்ட்மார்க்காக  அறியப்படுபவை மீனாக்ஷி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்புரங்குன்றம், அழகர் கோவில் ஆகியனவாகும். இவை போக சமணர் படுக்கைகள், புனித மரியாள் கத்தீட்ரல், சுல்தான் அலாவுதீன் தர்கா, ஹாஜிமார் பள்ளிவாசல், திருவாதவூர் போன்றவை பெரிதாக அறியப்படாத இடங்கள் ஏராளம். உங்களுக்கு இந்த அறியப்படாதவற்றை அறிமுகப்படுத்த நான் விரும்புகிறேன். சமணர்களிடமிருந்தே ஆரம்பிப்போம்.
சமணர் படுக்கைகள்:
ஒரு காலத்தில் சமண துறவிகள் மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வசித்தனர். மலைக்குகைகளில் உள்ள பாறைகளை படுக்கைபோல் செதுக்கி உறங்கப் பயன்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த மலைகளில் பள்ளி நடத்தி மக்களுக்கு கல்வி போதித்தனர். ஆகையால் இவை சமணர் படுக்கை என்றும், சமணர் பள்ளி என்றும் முறையே அழைக்கப்பட்டன. இவற்றுள் யானைமலை ஒத்தக்கடை, நாகமலை கீழக்குயில்குடி ஆகியன சிறப்பிற்குரியவை. 
சைவ, வைஷ்ணவ தலங்கள்:
முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ஆகிய இரண்டும் மதுரையையில் உள்ளன. பழமுதிர்ச்சோலை அழகர்கோவில் அமைந்துள்ள அழகர்மலையின் உச்சியில் உள்ளது. இது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையின் சின்னமாய் இன்றும் விளங்குகின்றது.
புனித மரியாள் கத்தீட்ரல்:
இது கிழக்குவெளி வீதியில் அமைந்திருக்கிற தேவாலயமாகும். மதுரை ரோமன் கத்தோலியர்களின் புனித இடம். ரோமானிய கட்டிடக் கலையை பறைசாற்றும் மிகப்பெரிய சின்னம்.
இஸ்லாமியர்கள் சிறப்பிடங்கள்:
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவும், திருப்பரங்குன்றத்தின் உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவும், ஹாஜிமார் தெரு பள்ளியும் இஸ்லமியர்களின் சிறப்பிற்குரிய இடங்கள். இவை மதுரை இஸ்லாமியர் ஆட்சியின் மீதங்கள்.
என் வார இறுதி நாள்களை ஊர்சுற்றி களிப்பது வழக்கம்.  வெருந்தெருவை உலாவருவதைக் காட்டிலும் மலையேறுதல் எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. மலையேறுதலை ஏறும் மலையைப் பொறுத்து பசுமலையேற்றம், கல்மலையேற்றம் என இருவகையாய் பிரிக்கலாம்.
பசுமலையேற்றத்திற்கு உகந்த்து பச்சை போர்த்திய அழகர்மலை. செடி, கொடிகள், மரங்கள், நீரோடைகள் நிறைந்த மனத்திற்கு குளிர்ச்சியளிக்கும் காட்சிகளே எங்கும் பரவிக்கிடக்கும். மலை அடிவாரத்தில் உள்ள அழகர்கோவிலில் கிடைக்கும் முப்பது ரூபாய் அடையை உண்டால் ஒரு நாள் முழுவதும் பசியெடுக்காது. உங்களை முழுமையாக அதனை உண்ணவிடாமல் செய்வதற்கென்றே குரங்குகள் படை படையாய் திரிவதுண்டு. அவற்றை சமாளிப்பது அவரவர் சாமர்த்தியமே.
மனதைக் கொள்ளைகொள்ளும் பசுமலையேற்றம் ஒரு புறமென்றால், சிலிர்பூட்டும் கல்மலையேற்றம் மற்றொரு புறம். கல் மலைகளில் மரஞ், செடி, கொடிகளும், நீர் நிலைகளும் அவ்வளவாக இருக்காது. செங்குத்தான கால் வைத்தால் வழுக்கும் பாறைகள் இந்தவகை மலையேற்றத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. கீழக்குயில்குடி, யானைமலை, சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள குன்று முதிலியன முதல்முறை மலையேறுபவர்களின் அடிவயிற்றில் புளியைக்கரைக்கும் வழுக்கைப்பாறை மலைகள்.
மதுரை இறைபடைப்பின் கலைநயத்திற்கு மட்டுமல்ல, மனிதப்படைப்பின் கலைநயத்திற்கும் பேர்போனது. மீனாக்ஷி அம்மன் கோயில், திருமலைநாயக்கர் மஹால் போன்ற இடங்களில் இதனை நீங்கள் கண்கூடாய்க் காணலாம். நிச்சயமாக யாரும் தவறவிடக்கூடாத தமிழகத்தின் பழம்பெரும் ஊர் மதுரை. ஊர் சுற்றி ஊர் சுற்றி பசியெடுக்கிறது. வாருங்கள் உணவின் பக்கமும் சற்று கவனம் செலுத்தி வரலாம்.
மதுரையின் பிரபலமான சைவ உணவு என எதையும் கூறவியலாது. மற்ற ஊர்களில் கிடைக்கும் அதே இட்லி, வடை, தோசை, பொங்கல், சாம்பார், ரசம் தான் இங்கும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இவை அனைத்தும் மதுரை பாணியில் இருப்பதுதான். எடுத்துக்காட்டாக, வடக்குச் சித்திரவீதி முக்கில் இருக்கும் ‘கோபி ஐயங்கார்ஹோட்டலைச் சொல்லலாம். அங்கு இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளத் தரப்படும் மிளகாய்ச்சட்னிரொம்ம்ம்ம்ப ஃபேமஸ். எப்பேற்பட்ட கல்நெஞ்சக்காரனையும் கண்கலங்க வைக்கும் ஆற்றல் அதற்குண்டு. மதுரையை தமிழர் அசைவ உணவுவகைகளின் தாய் பூமி என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு அனைத்து வகையான அசைவ வகைகளும் இங்கு கிடைக்கின்றது. மதுரை முனியாண்டி விலாஸ், அம்மா மெஸ், குமார் மெஸ், பஞ்சாபி தாபா, சுல்தான் உணவகம் என பட்டியல் நீள்கிறது.
கறிதோசை, இறால்தோசை நண்டு ஆம்லெட், அயிரைமீன் அடை, போன்றவை அம்மா மெஸ், குமார் மெஸ் ஆகியவற்றின் முத்திரைகள். பகலில் வெயில் மண்டையைப் பிளப்பதால் பெரும்பாலும் மக்கள் மாலைநேரத்திலேயே வெளியே தலைகாட்டுவார்கள். அதனால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. மாலை ஆறுமணிக்கு மேல் மதுரை வீதிகளில் திருவிழாக்களைகட்டிவிடும். மதுரை மேலமாசிவீதி சென்னை ரங்கநாதன் தெருவைப்போல் எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்தது. இரவு ஒருமணிக்கு கூட உணவு கிடைக்கும் இந்த தூங்காநகரத்தில்.
மதுரை பானங்களுக்கே உலகப் பிரசித்திபெற்றது. ஜில் ஜில் ஜிகர்தண்டா மதுரையின் மணிமுடியென்று கூறினால் அது மிகையாகாது. வெயிலை சமாளிக்க உதவுவதால் முக்குக்கு முக்கு ஜிகர்தண்டா கடைகளையும் பருத்திப்பால் கடைகளையும் தர்பூசணி கடைகளையும், கரும்புச்சாறு கடைகளையும் காணலாம். இதேபோல் இனிப்பி வகைகளில் ‘போளிமிகப் பிரபலமான ஒன்று. தேங்காய்போளி, பருப்புபோளி, நெய்போளி, ஜீராபோளி, காரபோளி என இதில் ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு.
சாகித்திய விருது பெற்று விற்பனையில் சக்கைபோடு போடும் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்நாவல் மதுரையை மையமாக்கொண்டதே. மிகுந்த பொருட்செலவில் பலகாலமாக உருவாக்கப்பட்டுவரும் கமலின் மருதநாயகமும்மதுரை மன்னன் முஹம்மத் யூசுஃப் கான் சாகிபின் வாழ்க்கையைத் தழுவியதே. 
 
மதுரை வீரத்திற்கு பிரபலாமானது தான். காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கு நிற்கும் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் போன்ற ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அதற்காக, மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் தற்போதைய திரைப்படங்கள் மதுரையில் கொலை என்பது சர்வசாதாரணம் என்பதுபோல் ஒரு பிம்பத்த்தை உருவாக்கியுள்ளன. இதனால் மதுரைக்காரர்கள் எல்லாம் முரடர்கள் என்பதுபோன்ற மனோபாவம் பிற ஊரினருக்கு ஏற்படக்கூடும். 
இங்கு வந்து பார்த்தால் தான் மதுரை அன்றும் இன்றும் என்றும் அமைதியான நகரம் என்பது புலப்படும். தான் சென்னைவாசிகள் போலன்றி, பிறர் பிரச்சனையை தன் சொந்த பிரச்சனையாகக் கருதி என்றும் உதவ காத்திருக்கும் மிகவும் பாசக்கார பயலுக நிறைந்த நகரமே மதுரை மாநகர். சுருங்கக்கூறின் ‘தமிழர் பண்பாட்டின் தலைநகர்மதுரை. வாங்கணே நம்மூருக்கு ஒருவட்டமாவது…!