Browsed by
Month: June 2015

ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

 

’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி?’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க

 

‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப் ஹோம்லேண்ட். நவ் வீ ஹோல்ட் இட். திஸ் இஸ் ஹவ் வீ ட்ரீட் டெஸ்ட்டினீ. டெஸ்ட்டினீ இஸ் ஜஸ்ட் அன் அவுட்கம் ஆஃப் ஆர் ட்ரீம்ஸ்’ எங்களுக்குச் சொந்தமா தாய்நாடு வேணும்றது ஒரு காலத்தில எங்களுக்குக் கனவா இருந்தது. இப்ப நிஜம். இப்படித்தான் நாங்க கனவையும் விதியையும் மதிக்கிறோம். விதின்றது கனவோட வெளிப்பாடு.’

 

’ஆனா உங்க கனவு பலபேரோட கனவ குழி தோண்டி பொதச்சிருச்சே’

 

‘பொதைக்கவல்லாம் இல்ல. இட்ஸ் மேட்டர் ஆஃப் டைம். காலம் பதில் சொல்லும்’

 

‘இது மழுப்பல். நீங்க மத்தவங்களோட கனவுகளப் பொதைக்கிறது சத்தியம். ஏன் செய்யிறீங்க’

 

‘லெட் அஸ் சேஞ்ச் த டாப்பிக்’

 

‘தஹ்ர். டோண்ட் டேக் மீ ராங். நீங்க தப்பான பாதையில நடக்கிறீங்க. அது தப்பான பாதையினு நல்லாத் தெரிஞ்சே.’

 

‘மே பீ’

 

‘உண்மைய ஒத்திக்கலைனாலும் பரவாயில்ல. ஒரு பொய்ய உண்மையா சொல்றீங்க’

 

‘தென்’

 

‘உங்களுக்கு கோபம் வருது. கவனிச்சீங்களா? நீங்க எல்லாரும் இப்டிதான் இருக்கீங்க. உங்களுக்கு பாலஸ்தீன் பத்தி பேசினா கோபம் வருது. உங்களுக்கே தப்புனு தெரிஞ்சிருந்தும் அத சரினு சொல்லி முரண்டு புடிக்கிறீங்க’

 

‘தென் ப்ரூவ் இட்’

 

’திஸ் இட்செல்ஃப் இஸ் அ க்ரேட் ப்ரூஃப். நீங்க இந்தியாவுக்கு வரதே மிகப்பெரிய ப்ரூஃப். தப்பான வேல செய்றவனுக்குத் தான் பாதிப்பு இருக்கும்’

 

‘எக்ஸ்ப்ளைன் ப்ளீஸ்’

 

‘ஒரு எடுத்துக்காட்டு. இங்க இண்டியால ஏ டி எம்-ல ஒரு அம்மாவ ஒருத்தன் வெட்டிக் கொன்னான். சரியா இத ஏடிஎம்ல இருந்த கேமரா படம் பிடிச்சது. இதில இன்வால்வ் ஆகிறது மூனு பேர். கொல்லப்பட்டவங்க. கொன்னவன். அதப் பாக்கிறவன். ஒரு கேள்வி. இதில யார் ரொம்ப பாதிப்புக்கு உள்ளானவங்க?’

 

‘வாட்ஸ் ராங் இனிட். த ஒன் காட் கில்ட். கொல்லப்பட்டவன் தான் அதிக பாதிப்புக்கு உள்ளானவன்’

 

‘நான் இல்லன்றேன்’

 

‘தென்?’

 

‘கொன்னவன் தான் அதிகமா பாதிக்கப்படுவான். ரெண்டாவது பாத்தவன். மூனாவது தான் கொல்லப்பட்டவன்.’

 

‘ரியலி வியர்ட்’

 

‘உண்மை. கொல்லப்பட்டவன் இறந்து போயிடறான். ஒரே ஒரு தடவ தான் வலி. கொன்னவனுக்கு அப்படி இல்ல. அவனோட அந்தச் செயல் அவன நிம்மதியா விடாது. திரும்பத் திரும்ப உணர்ச்சிப்பூர்வமா அந்த செயல் வந்து தொந்தரவு கொடுக்கும். மனரீதியா பயங்கரமான எஃபெக்ட் இருக்கும். டூ யூ அக்ரி’

 

‘அப்ஸ்லூட்லி. இதில இருந்து என்ன சொல்ல வறீங்க?’

 

‘நிறைய. நீங்க, இஸ்ரேலியர்கள் என்ன நிலைமைல இருக்கீங்கன்னு தெரியுமா?’

 

‘…..’

 

‘அந்தக் கொன்னவனோட நிலைமைல தான். நீங்க அந்த வேலைய தான் செய்யறீங்க. உங்களவிட பாதிக்கப்பட்ட பாலஸ்தீயர்கள்கிட்ட மனத் தொந்தரவு நிச்சயம் கம்மி தான்’

 

‘வேர்ல்ட் வார் காலத்தில நாங்க பாதிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்?’

 

‘தெரியாம இல்ல. உங்களத் தொறத்தின ஐரோப்பாவ விட்டுட்டு வரவேத்த பாலஸ்தீனியர்கள்கிட்ட நீங்க வாங்கினத எல்லாம் திரும்பி குடுக்கிறது எந்த வகையில சரி?’

 

‘ஹஸன் அது எங்க இடம். எங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம். எங்களுக்கு எங்க இறைவன் கொடுத்த இடம். அத அவங்க பிடிங்கிக்கிட்டாங்க நாங்க திரும்பி பிடிங்கிக்கிட்டோம்’

 

‘ஆமா. நாலாவது நூற்றாண்டு ரோமானியர்களுக்குப் பயந்து ஓடின உங்கள அவங்க தான் தொறத்தி விட்டாங்க பாருங்க. நீங்களும் அந்த இடத்துக்கு வந்தேரிகள் தான். உலகத்தில எந்த இடமும் யாருக்கும் பூர்வீகம் கிடையாது. எல்லாரும் எங்கிருந்தோ வந்தவங்க தான்.’

 

‘சரி இவ்ளோ சொல்றீங்கல்ல. இறைவன் அந்த இடத்த எங்களுக்குக் கொடுக்கலைனா எப்படி எங்களால அந்த இடத்த ஜெயிக்க முடிஞ்சது. இப்ப எப்பிடி நிம்மதியா வாழ முடியுது? இறைவன் எங்க பக்கம்னு இதில இருந்து தெரியலையா?’

 

‘நிலம் கிடச்சதுன்னு சொல்லுங்க. நிம்மதி கிடச்சதுன்னு சொல்லாதிங்க. நீங்க யூரோப்ல இருந்த நிம்மதியில கூட இங்க இல்ல. கட்டாய ராணுவ சேவை செஞ்சு நாட்டத் தக்கவைக்க வேண்டி இருக்கு. ஐரோப்பால ஒடுக்கப்பட்ட உங்களுக்கு இறைவன் கை கொடுத்தான். வாய்ப்புக் கொடுத்தான். ஆனா அத என்ன பண்ணிரிக்கங்கன்றது உங்களுக்கே தெரியும். தப்பு செஞ்சவன் சைக்காலஜிக்கலா பாதிக்கப்படறான். அதத் தொலைக்க நிம்மதியத் தேடி அலையறான். நீங்க ஆன்மீகம்னு சொன்னாலும் மனசுக்குள்ள போதையத் தேடித் தான் வறீங்க’

 

‘இப்ப என்ன பண்ண சொல்றீங்க. எங்கள காலி பண்ண சொல்றீங்களா?’

 

‘நீங்க செஞ்ச தப்பவே நான் எப்டி திரும்ப செய்யச் சொல்வேன்.’

 

‘தென்?’

 

’சேர்ந்து வாழச் சொல்றேன்’

 

‘நாங்களும் அதத்தான் விரும்புறோம்’

 

‘விரும்பினா மட்டும் பத்தாது. பதிவு செய்யனும். உங்களோட கருத்தப் பதிவு செய்யனும். இத இஸ்ரேல் அராங்கம் மட்டுமில்ல சுத்தி இருக்க மத்த அரபு நாட்டு அரசும் விரும்பாது. இது தான் என்னைக்கும் ட்ரெண்ட். மக்கள் என்னிக்கும் ஒன்னா இருக்கத் தான் விரும்புறாங்க. அவங்க கோபம் ஒன்னு ரெண்டு நாளுக்குத்தான். ஆனா அத வச்சு குளிர் காயறது அரசாங்கங்கள் தான்’

 

‘எப்படி?’

 

‘தெரியல. எனக்கு இன்னும் தெரியல. ஆனா ஒரு நாள் சொல்வேன். இன்ஷா அல்லாஹ்’

 

‘ஈன்ஸாஆலா’

 

 

 

‘அப்டித்தான்யா. மொதல்ல இந்த முக்காலில இருந்து ஏறுங்க. அப்பறம் நேரா ஏறிப் பழகலாம்.’

 

‘இடக்கால இடது கால்மாட்டில சொருகி வலக்கால வலக்கா தூக்கிப் போட்டு ஒக்காருங்க. பாத்து சாணத்தில ஒக்காருங்க குதிரைக்கு வலிக்காம.’

 

‘ம் அப்டித்தான். முன்னாடி குதிச்சுக் குடுங்க. குதிரையோட முன்னங்கால்கள உங்க காலால அழுத்திக் குடுங்க புரிஞ்சுக்கும்’

 

‘கடிவாளத்த மெல்லமா வலிக்காம இழுத்து பின்னாடி பைய குதிச்சு குடுத்தீங்கனா பிள்ள நிண்டிடும். வலக்க திரும்ப இடக்காலால பைய அழுத்தி வலக்கையால தடவிக் குடுங்க புரிஞ்சிக்குவான்.’

 

‘ஒன்ன மனசுல வச்சுக்கோங்க. எப்பவும் உங்க எடைய கால்மாட்டில தான் முழுசா குடுக்கனும், எக்காரணங் கொண்டும் கடிவாளத்த குடுக்கக் கூடாது.’

 

’நான் முன்னங்கால்னு சொல்றது இங்க குதிரையோட முன்னங்கால் கம்முக்கூட. கிச்செல்லாம் வராதுயா தைரியமா அழுத்துங்க பையன் துடுக்கா ராஜ்பாட் நடை போடுவான்’

 

‘குதிச்சு நடக்கும் போது ரெண்டு ஆட்டம் குடுப்பான். மேல தூக்கித் தூக்கிப் போட்டு தான் போவான். வேகம் கூடக் கூட மேல கீழ ஆட்டம் அதிகமா இருக்கும். எப்பவுமே வேமா போவும் போது சாணத்தில உக்காரக் கூடாது. ரெண்டு கால்மாட்டிலயும் எடையக் குடுத்து நிக்கனும். நிக்கனும்னா நட்டமா இல்ல. அப்டி நின்னா தூக்கி எறிஞ்சிடும். ஒரு மாதிரி குனிஞ்ச மாதிரி ஒக்காராம நிக்கனும். சரியாப்பு?’

 

’குதிரைய சாணம், கடிவாளம் இல்லாமயும் சவாரி செய்யலாம். ஆனா அதுக்கு நெறைய திறம வேணும். கவனம் வேணும். எங்க பாட்டன் முப்பாட்டன்லாம் அப்டிதான்’

 

‘மார்வாடி, கத்தியவாரின்னு இந்தியக் குதிர நிறைய இருக்கு. வளக்கிறதுக்கு இதுதான் சவுரியமாப்படும். வெளிநாட்டுக்குதிர அரபிக்குதிரனு போனா வெல அதிகம். அரபிக் குதிரையோட கால் யானைக்காலாட்டமிருக்கும். கொழம்படிச்சத்தம் விண்ணப் பெளக்கும். அது ராசா காலத்தில போர்ல கொண்டு போனது. இப்பலாம் தேவை இல்ல. வெள்ளக்காரங்க காலத்தில இங்க நிறைய வகை குதிர கொண்டு வரப்பட்டதாம். கொடைக்கானல்ல தெரு நாய் கூட வெளிநாட்டு நாயாட்டம் இருக்கும் பார்த்திருப்பீக. எல்லாம் அவக விட்டுப்போனதோட மிச்சம் தான். குதிரையும் அப்டித்தான். நிறைய வகையில காட்ல திரியும் பாக்கலாம்’

 

 

 

காட்டிற்குள் தனியே செல்வது அதிகாலைப் பழக்கமாகிவிட்டது. ஓடும் ஓடைகளின் சலசலப்பு ஒரு வகையான புல்லரிப்பைத் தருகிறது. தனிமை தான். ஆனால் தனிமை அல்ல. மனிதர்களிடமிருந்து தனிமைப்படுதல் எனக் கொள்ளலாம். இது கொஞ்சம் அழுத்தமான தனிமை. அமையல்லாத அமைதி. ஒன்றும் கேட்காத சூன்யம் அல்ல இது. சுற்றிலும் ஏதோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கும் நிலையில் இல்லாத நிலை. சற்று குழப்புகிற நிலை. கண்களை மூடிச் சிறிது நேரம் கவனித்தால் அதில் கரைந்து விடுவோம். இருப்பு நிலை அற்றுப் போகும். அதன் பின் மனம் உள்நோக்கிப் பயணிக்கத் துவங்கும். அது மிகக் குழப்பமான பயணம். தலை சுற்றும் பயணம். எந்த நோக்கமும் இல்லாமல் கட்டுக்கடங்காமல் தன் வழியே செல்லும் ஒரு வகைப் பயணம். பலர் இதனைத் தூக்கத்திற்கு முன் மனம் அடையும் குழப்ப நிலை எனக் கொண்டு அதனைப் பொருட்படுத்துவதில்லை.

 

உண்மை என்ன தெரியுமா? இது தான் ஆழ்மனம். இதற்கு அடிபணிந்து பழக்கம் இராது. பலரும் அதைக் கண்டுகொள்ளாமல் விடுவாதால் தான்தோன்றியாய் திரிந்து பழக்கப்பட்டது. அதனை அடையும் அந்த நிலை தான் உண்மையில் சுய நிலை. நம் சுய நிலை. நம்மை, நம் மனதை நாம் பார்க்க விரும்பாத ஒரு உண்மை நிலை அது. எழுத்துக்களால் உணரச் சற்றுக் கடினம். எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருப்பவர்களால் இங்கே இருக்கும் அந்த உணர்வை உணர முடியாது. எழுத்துக்களினூடே மிதந்து செல்லும் மனங்களுக்கு எளிதாய் புரியும், அவை உணர்வதால்.

 

மூச்சைக் கவனித்துக் கொண்டே இந்நிலைக்குச் சென்று விடலாம். சென்று சற்று நேரம் ஆழ்மனதின் இரைச்சலுக்கு உட்பட தெளிவு கிடைக்கும். தெளிவு என்று இங்கே சொல்வது, பொது உலகில், பொது மொழியில் சொல்லும் தெளிவு அல்ல. அது ஒரு வகையான தெளிவு. தெளிவற்ற தெளிவு. உண்மையில் இந்த மனதின் சமாச்சாரத்திற்கு நாம் பேசும் மொழியில் வார்த்தைகள் இல்லை. அமைதியற்ற அமைதி, தனிமையற்ற தனிமை போல் இது தெளிவற்ற தெளிவு. மனதின் இரைச்சலுக்குப் பழகிப்போக அதன் மீதான புரிதல் வளரும். இந்த மனதை பழக்கத் தெரிந்தவுடன் எதை வேண்டுமானாலும் உள்ளே செலுத்தலாம். மறுப்பின்றி உடனே எடுத்துக் கொள்ளும். எடுத்துக் கொண்டதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். எடுத்துக் கொண்டதை நிறைவேற்ற சூழலை வளைத்துக் கொடுக்கும். எடுத்துக் கொண்டதை நித்தமும் நினைவில் கொண்டிருக்கும். எடுத்துக் கொண்டதை அடைய விதி விரைவு கொண்டிருக்கும்.

 

தனிமையற்ற தனிமை, அமைதியற்ற அமைதி, இரைச்சலற்ற இரைச்சல், குழப்பமற்ற குழப்பம், தெளிவற்ற தெளிவு. தெளிவாகச் சொல்வதா? ஒரு நிமிடம். தெளிவு என்பது என்ன? மனிதனின் இயல்பு தெளிவு தானா?

 

உண்மையில் எதையும் நேராகத், தெளிவாகச் சொல்வது இயற்கையின் இயல்பில் இல்லாதது. வந்தார் போனார் என எதையும் இயற்கை தெளிவாய் சொல்வதில்லை. இறைவன் இயற்கைக்கு உண்மையில் கொடுத்த மொழி தெளிவு கிடையாது. அது தெளிவற்ற தெளிவு. நம் மூளை தெளிவற்ற தெளிவில் தான் சிந்திக்கிறது. நாம் அதன் போக்கில் போகாமல் நாம் தெளிவெனக் கருதுவதை அதனுள் திணிக்கப் பார்க்கிறோம். நமக்கு அதன் மொழி புரியவில்லை என்பதற்காக அதனைக் குழப்பம் என்கிறோம்.

 

தெளிவென நாம் கருதுவது தெளிவல்ல. சதுரமும், செவ்வகமும், வட்டமும் நமக்குத் தெளிவான உருவங்கள். இயற்கையின் இயல்பில் இவ்வுருவங்கள் தெளிவானதல்ல. அவை அதற்கு புதிது. தெளிவற்ற உரு தான் இயற்கையின் இயல்பு. மனிதனாகட்டும் மரமாகட்டும் விண்ணாகட்டும் ஏதுவும் சதுரம் செவ்வகமென மனிதன் தெளிவெனக் கருதும் உருவில் இல்லை. அவை தெளிவற்ற தெளிவில் தான் இருக்கிறது. உலகம் நமக்குக் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது, தெளிவற்ற தெளிவில். நாம் தான் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

 

ஒரு குழந்தையிடம் பென்சிலைக் கொடுங்கள். என்ன செய்யும்? கிறுக்கும். எதையாவது கிறுக்கும். அதன் மனமும் அப்படித்தான். தெளிவற்ற தெளிவு நிலை. இயற்கையை புரிந்து கொள்ள நாம் நம் முறையில் தெளிவென்ற ஒன்றால் அக்குழந்தைக்கு கற்பிக்கிறோம். தெளிவு என்ற பெயரில் இயல்பை விடுக்க நாம் கற்றுக் கொடுக்கிறோம். பின்னர் அதை இயல்பெனக் கொண்ட மனிதர்கள் உருவாகி வாழ்ந்து மரிக்கிறார்கள். உண்மையில் இயற்கையின் அந்த இயல்பை அனைவரும் உணர்ந்து கொள்வதில்லை. உணர்பவன் புரட்சியாளனாய், சிந்தனையாளனாய், தலைவனாய், குருவாய் உருப்பெறுகிறான். தெளிவை இயல்பெனக் கொண்டவன் பின் தொடர்கிறான்.

 

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயான நிலை. விழிப்பற்ற விழிப்பு நிலை. மனம் சில நாட்களாவே பயம் தொற்றிக் கொண்டதைப் போல் செயல்படுகிறது. என்ன பயமென்று தொடர்கையில் பயம் மிகைக்கிறது. பயத்தை பின் தொடர பயமாக இருக்கிறது. பயத்தைப் போக்கி விடலாம் என அமர்ந்தால் இயலவில்லை. பயம் மீண்டும் பின் தொடர்கிறது. ஏதோ ஒரு வெடிப்பு நிகழப் போவதை மனம் உணர்த்துகிறது. புரிந்து கொள்ளத்தான் பயமாக உள்ளது. அதற்காகவெல்லாம் விட முடியாது. போராடித்தான் ஆக வேண்டும்.

 

தெளிவற்ற தெளிவில் எங்கே மனம் சென்றாலும் அந்தக் கண்களில் சென்று முடிகிறது. படாரெனத் திறக்கும் கண்கள் அவை. ஒளிபடைத்த கண்கள். ஒளியை உள்ளிழுத்து உமிழும் கண்கள். கணவுகளில் மிரட்சியைக் கொடுக்கும் கண்களாகத் துவங்கி பரிணமித்து வெண் தாடிகளினூடே புதைந்து தற்போது தெளிவற்ற தெளிவிலும் மையம் கொள்ளத் துவங்கிவிட்டது.

 

உள்ளே கண்கள் விரிகிறது. கூடுதலாக ஒரு மூச்சிரைப்பை உணர முடிகிறது. தற்போது மிரட்சி பெரிதாய் இல்லை. மனம் பயத்திற்குப் பக்குவப்படத் துவங்கியுள்ளது, ஆனால் பயத்தில் ஏதும் குறைவில்லை. சலனமற்ற சலனம். கண்கள் திறக்க வெண் தாடி முகத்தில் படுகிறது. மனதைக் கவனித்தால் பயம் தெரிகிறது. பதற்றம் இல்லை. நெடுங்கோடுகளுடைய கண்கள் தெரிகிறது. அது மனிதனின் கண்கள் இல்லை. அது தாடியும் இல்லை.

 

குதிரை. வெள்ளைக் குதிரை. ஹஸனது கண்களில் எதையோ கண்வைத்து தேடிக் கொண்டிருந்தது. பிடரி மயிர் அவன் முகத்தில் பட்டு எழுப்பியிருக்க வேண்டும். எழுந்து நின்றான். சலனம் இல்லை. அதன் கண்கள் அவனை ஊடுருவின. அவன் கண்கள் அதன் கண்களை ஊடுருவின. மொழியற்ற பரிமாற்றத்திற்குப் பின் அதன் மீதேறினான். திமிறவில்லை. கால்கள் ஏதோ அதன் காலில் தடவி கட்டளையிட்டன. கைகள் பிடரியை வருடி வழி சொல்லின. குதிரை நகர்ந்தது. நடந்தது. கடந்தது. பரிந்தது. எதுவும் கேட்கவில்லை. ஒரு நிலை. ஒரு தாவல். ஒரு எறி. அவன் வானில். பறந்து கொண்டிருந்தான்.

குதிரை அவனைத் தூக்கி எறிந்திருந்தது. விண்ணில் பறந்து கொண்டிருந்தான். எந்த ரேகையும் அவன் முகத்தில் இல்லை. அது மிதமாய் இருந்தது. கட்டிலில் படித்திருபதைப் போல். கைகால் அசைவின்றி விண்ணிலிருந்து கீழ் வீழ்ந்த பின்னும் அது சலனமின்றியே இருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன.

 

 

 

’அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. நான் இந்த நிலைமையில என்னிக்கும் இருந்தது கெடையாது. இது மறக்க முடியாத நிலைம’

 

என்னால் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கொள்ள முடிகிறது. ஆனால், அழுது துடித்துக் கத்திக் கதற வேண்டிய நிலைமையில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நகரக் கூட முடியவில்லை. கை கால்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. உணர முயற்சித்தும் பயனில்லை. சிரித்தாலும் தெரியவில்லை. கண்கள் அசைகிறது. மனம் வேலை செய்கிறது. வலிகள் தெரியவில்லை. மரத்துள்ளது. கண்களைத் திறந்தேன். எதிரே வெண் பிடரியுடன் ஒளிமிக்க கண்கள் தெரிந்தது. என்னை அழைத்தது. மறுக்க முடியா அழைப்பு. சென்றேன். மேலே என்றது. ஏறினேன். சென்றது. வானை முத்தமிட மேல் நோக்கித் தூக்கி எறிந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. விண்ணைப் பிடிக்க இயாலா நான் கீழ் விழுந்தேன். தற்போது தரையில் கிடக்கிறேன். அசைவின்றிக் கிடக்கிறேன். ஆனால் சிரிக்கிறேன். இன்புறுகிறேன். ஒளி தெரிகிறது. நான் தேடிய ஒளி தெரிகிறது. என்னுள்ளிருந்து ஒளி தெரிகிறது. கண்கள் திறந்துவிட்டது. திறந்தே விட்டது.

 

இனி நடிக்க அவசியமில்லை. பள்ளிப் பருவத்தில் எடுத்த ஹஸன் வேடம் இனி எனக்குத் தேவை இல்லை. நான் நானாக இருந்தேன். என்னை  மாற்றினர். நான் இன்று மீண்டும் நானாகிவிட்டேன். ஒளியில் இருந்த நான் ஒளியை விட்டு வெளியேறி ஒளியில் நுழைகிறேன். தீவிரவாதியாக வருவேன் என என் மேம் அடிக்கடி கூறுவார். நான் முஸ்லிமாகப் பிறந்ததைக் குறை என்பார். எனக்கே தெரியவில்லை நான் இப்படி மனதை ஒளியை தீவிரமாகத் தேடி அலையும் தீவிரவாதி என்று. உண்மை தான் சொல்லியிருக்கிறார். இஸ்லாம் என்னுள் எப்படி வந்ததென்று தெரியவில்லை. மிக இயல்பாகப் படுகிறது. இன்று முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அமைதியை அழுத்தமாக இஸ்லாம் மொழிகிறது.

 

மரணம் என்னை பயம் கொள்ளச் செய்யவில்லை. வரவேற்கும் நிலையின் உச்சத்தில் நான் நிற்கிறேன். என் கடந்த காலங்களின் புள்ளிகளை இங்கு இணைத்து கோடாக்க முடிகிறது. அது தெளிவான கோடல்ல. ஆனால் தெளிவற்ற அத்தெளிவு என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடரும் உத்வேகம் அளிக்கிறது.

 

அன்னையும், தந்தையும், ஸ்மிர்தியும், ஜோஆனும், என் மாயமும், தஹ்ரும், மேக்ஸும், ரஞ்சித்தும், க்ரீனியும், தஞ்சாவூரும், டெல்லியும், லண்டனும், இஸ்ரேலும், ஃபாலஸ்தீனும், இஸ்லாமும், வேதாந்தமும், முஹம்மதும், புத்தரும், கம்யூனிசமும், தியானமும், நாத்திகமும், தீவிரவாதாமும், அமைதியும், தெளிவும், குழப்பமும், கிழக்கும், வடக்கும், தெற்கும், மேற்கும், இருளும், ஒளியும் இன்னும் விடுபட்டவையும், நினைவிலிருந்து மறைந்தவையும் ஒன்று சேருமா?

 

தொங்கும் கதாப்பாத்திரங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எதற்காகவோ எப்போதோ வாழ்க்கையில் வந்த நிகழ்வுகளும் நபர்களும் எனக்கு கதை சொல்கிறார்கள். இது எதிர்காலத்தின் கதை. என் குறிக்கோள் ஒளிர்விடுகிறது. செய்ய வேண்டியவை தெளிவற்ற தெளிவில் தெரிகிறது. என்னால் வாசிக்க முடிகிறது, உணர்ச்சியால். இவ்வளவு காலம் ஏமாந்திருக்கிறேன். தெளிவான ஒளி எங்கும் இல்லை. இதோ கிடைத்துவிட்டது. ஒளியற்ற ஒளி. இத்தனை நாளாய் நான் தேடிக் கொண்டிருப்பது.

 

என்னால் இதற்கு மேல் கதை சொல்ல முடியவில்லை. ஆட்கள் தெரிகிறார்கள். இவர்களைக் கண்டவுடன் திடீரென மனம் தூக்கம் கொள்கிறது. இவ்வளவு நேரம் இதற்காய் காத்திருப்பதைப் போல் பாவனை செய்கிறது. நான் எழுந்துவிடுவேன். என் கையில் எண்ணங்களும், கண்களில் கனவுகளும் ஒளியுடன் ஒன்றிணைந்து ஒன்றை எனக்குக் காட்டுகிறது. நான் தயாராகிவிட்டேன்.

 

நாம் தேடித் திரியும் ஒளி உண்மையில் உள்ளே இருக்கிறது. தேடித் திரிந்தால் மட்டுமே கிடைக்கும் அது. உள்ளேயும் வெளியேயும் ஒளி வெளிப்படும் வரை தேடித் திரியுங்கள். பின், அது உங்களை வழி நடத்தும். நடந்து செல்லுங்கள். என் கதை இங்கு துவங்குகிறது. நான் எழுந்தபின் ஒளியை ஏந்திச் செல்வேன். உலகிற்கு காண்பிப்பேன். உங்களால் கற்பனை செய்ய முடியுமாயின் செய்து கொள்ளுங்கள். இது துவக்கத்தின் கதை. என் கதை சொல்லும் மீதியை நான் இறக்கையில். மீண்டு வந்து மீதம் சொல்கிறேன். இது தொடக்கமற்ற தொடக்கம். முடிவற்ற முடிவு.

 

 

What the hell are you doing here man? Get up and head towards Gaza following your light. Two hundred and twenty two grams of light. That’s Max’s order.