ஒளி 222 கிராம்: பகுதி 11

ஒளி 222 கிராம்: பகுதி 11

 

’தலா அல் பத்ரு ஆலைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’

 

அதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து ஐந்து மணிநேரத்தில் அந்த இடைநில்லா விமானம் வந்திருந்தது. கைரோ விமான நிலையத்தில் இறங்கி தயாராக நின்ற காரில் ஏறி அமர்ந்தனர்.  நுழைந்ததும் வழக்கம் போல் ஜோஆன் அந்த ட்ரைவருக்கு ஸலாம் சொன்னார். சிரித்த முகத்துடன் உரத்த குரலில் அவரும் பதில் கூறினார். நிசப்தமான அந்த அதிகாலை நேரத்தில் அவர் குரல் கனீரென ஒலித்தது.

 

ஜோஆனின் ஹிஜாபையும் ஹஸனையும் பார்த்த ஓட்டுனர் ’அஹ்லன் வ மர்ஹபா ஃபீகும் பி மஸ்ர் உம் எல் ஆலம்’அரபியில் கூறினார்.

 

’ஸுக்ரன் லக். ஹய்யா பெனா இல ரஃபா’ ஜோஆன் அவருக்கு பதிலளித்தார். ஹஸனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இவருக்கெப்படி அரபி தெரியும். மனதின் ஓரம் குறித்துக் கொண்டான். பின்னர் வண்டி கிளம்பியது. தலா அல் பத்ரு அலைனா என்ற பாடலை இசையே இல்லாமல் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.

 

’ஜோஆன். நான் எகிப்தப் பாக்கிறதுக்காவே தூக்கத்த வரவிடாம வச்சிருக்கேன். என்ன ம்யூஸிக் இது. மொதல்ல மாத்த சொல்லுங்க. தூக்கம் வருது.’

 

‘தய்யிப் சார். ஐ வில் சேஜ்’ உடைந்த ஆங்கிலத்துடன் ஓட்டுனர் பின்னால் திரும்பி தொடர்ந்தார். ‘திஸ் இஸ் வெல்கம் ஸாங். ஃபார் அவர் ப்ராபட்’

 

‘ப்ராஃபட்?’

 

‘ஆமாம் ஹஸன். இத நஸீத்னு சொல்வாங்க. ம்யூஸிக்கல் இண்ட்ஸ்ட்ருமெண்ட்ஸ் இருக்காது. வோக்கல்ஸ் மட்டும் தான். இப்ப நீ கேக்கிற இந்தப் பாட்டு, ப்ராஃபட் முஹம்மத் மதீனாவுக்கு போன போது அவர வரவேற்கிறதுக்காக மதினா மக்கள் பாடின பாட்டு. யூ மைட் ஹாவ் ப்ராபப்ளி ஹேர்ட். நம்மள வெல்கம் பன்றதுக்காக இந்த பாட்ட ட்ரைவர் ப்ளே பன்றார்.’ ஜோஆன் தெளிவாக்கினார்.

 

அவர் தன் ஊரை விட்டு அந்த நகருக்கு குடிபெயர்ந்தார். முஹம்மத் மக்காவை விட்டு யாத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்தார். யாத்ரீபில் அரபுகளும் யூதர்களும் குடியிருந்தனர். யாத்ரிப் என்பது சிறு நகரம். கி.பி 622ன் அளவில் அது நகரம் தான். பேரீச்சம்பழச் சோலைகளை விவசாயமாகக் கொண்ட பாலைவன ஊற்று நகரம் அது. அன்று முதல் யாத்ரிப் முஹம்மதின் நகரம் ஆனது. இறைச் செய்தியாளரின் நகரம் ஆனது. நபியின் நகரம் ஆனது. மதீனத்துன் நபி ஆனது. மதீனா ஆனது. அரபு மொழியில் நபி என்றால் இறைச் செய்தியை சுமப்பவர் என்று பொருள். மதீனா என்றால் நகரம். முஸ்லிம் என்றால் இறைவனுக்கு அடிபணிந்தவர் என்று பொருள். இஸ்லாம் என்பது ஸலாம் எனும் வார்த்தையிலிருந்து பிறக்கிறது. அமைதி என்று பொருள்.

 

தங்கள் உடைமைகளை அப்படியே மக்காவில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் மதீனாவிற்கு வந்த முஸ்லிம்களுக்கு மதீனாவின் முஸ்லிம்கள் உதவிய விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. வரலாறு மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது. மதினாவாசிகள் தங்கள் சொந்த சகோதரர்களைப் போல் மக்காவில் இருந்து அகதிகளாய் வந்தவர்களை நடத்தினர். ஆளுக்கு ஒருவர் என்ற விதத்தில் அகதிகளை பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். தங்கள் உடைமைகளில் பங்கு கொடுத்தனர். சொத்தை பிரித்துக் கொடுத்து அவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவந்தனர். பெரும் உதவும் கரக்காரர்களாகிப் போயினர்.

 

முஹம்மத் இறைவனின் சொல்லை அங்கு இறக்கி வைத்தார். அவ்வூரின் அரசனானார். ஆனால் அந்த அரசன் படுத்தது உடலில் தடம் பதிக்கும் ஈச்சம் பாயில், உண்டது கோதுமை தோலின் மாவில் செய்யப்பட்ட ரொட்டியை. பின்னால் தோன்றவிருக்கும் ஒரு அரசாங்கத்திற்குரிய அடிப்படைக் கட்டமைப்பு அங்கிருந்து தான் எழுப்பப்பட்டது. பிறப்பினால் கொண்ட குலம் அங்கு செல்லுபடியாகவில்லை. யாவரும் சகோதரர்கள். இறைவனின் சொல்படி நடப்பவர்கள் யாவரும் முஹம்மதின் சஹாபாக்கள் அதாவது தோழர்கள்.

 

மக்காவில் இருந்து இரண்டு பெரும் படையெடுப்பகளும் ஒரு முற்றுகையும் நிகழ்ந்தன. ஒரு போரில் மதீனாவும் ஒரு போரில் மக்காவும் வென்றிருந்தன. அந்த முற்றுகையிலும் மதீனா தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த மூன்று படையெடுப்புகளால் துவண்டு போனது உண்மையில் மக்கா தான். தொடர்ச்சியான போர் அதன் பொருளாதாரத்தை சிதைத்திருந்தது. அதேவேளையில் முஹம்மதின் பக்கம் இன்னும் பிற ஊர்காரர்கள் பங்களிக்கத் தயாராய் இருந்தனர். யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வெற்றி நிச்சயம் மதீனாவின் பக்கம்.

 

அந்த நிலையில் முஹம்மத் தன் தோழர்களுடன் மக்காவிற்கு செல்ல முடிவெடுக்கிறார். போருக்குக்காக அல்ல. நிராயுதபாணியாய் மக்காவின் சதுரங்க கோவில் காபாவிற்கு. மக்காவிலிருந்து சில கல் தொலைவில் உள்ள ஹுதைபியா எனும் இடத்தை நெருங்கும் போது மக்காவசிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். ஹுதைபியா உடன்படிக்கை கையெழுத்தாகிறது.

 

அப்துல்லாவின் மகன் முஹம்மத்திற்கும், மக்காவின் சார்பில் ஆம்ர் மகன் சுஹைலுக்குமிடையே கையெழுத்தாகும் அமைதிக்கான ஒப்பந்தம் இது. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு நமக்கிடையே எந்த போரும் இராது. முஹம்மதின் பக்கம் சேர நினைப்பவர்கள் தாராளமாக சேர்ந்துகொள்ளலாம். மக்காவின் பக்கம் சேர நினைப்பவர்கள் தராளமாக சேர்ந்து கொள்ளலாம். முடிவெடுக்கும் உரிமை அவரவரிடத்தில். மக்காவில் இருந்து, தகப்பன் உயிருடன் இருக்கும் யாராவது அவரது தகப்பனின் அனுமதி இல்லாமல் முஹம்மதிடம் சென்றால் அவரை முஹம்மத் மக்காவிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் அதே வேளையில் முஹம்மதிடம் இருந்து யாராவது மக்காவிடம் வந்தால் அவர் திருப்பி அனுப்பப்படமாட்டார். இந்த வருடம் மதீனத்து முஸ்லிம்களுக்கு மக்காவிற்குள் அனுமதி இல்லை. திரும்பிச் சென்று விட வேண்டும். அடுத்த வருடத்தில் இருந்து முஹம்மதும் அவரது தோழர்களும் மூன்று நாட்கள் மக்காவுக்குள் வரலாம். காபாவை சுற்றலாம். அம்மூன்று நாட்களும் மக்காவாசிகள் ஊரை விட்டுச் சுற்றி இருக்கும் மலைகளுக்கு இடம் பெயர்வர். அப்படி முஹம்மதும் அவரைச் சார்ந்தவர்களும் மக்காவுக்குள் வரும் போது ஆயுதங்கள் ஏதும் எடுத்து வரக்கூடாது.

 

முஹம்மதின் தோழர்களுக்கு ஒரே ஆவேசம். வெற்றி பெரும் நிலையில் இருக்கையில் நாம் எதற்கு அவர்களுக்குச் சார்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இது தேவையற்றது. நம்மை ஊரைவிட்டு துன்புறுத்தி துரத்தியவர்களிடம் நாம் ஏன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும்? முஹம்மத் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவருக்கேனும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிகிறதா? கூட்டத்தில் சலசலப்பு.

 

முஹம்மத் பொறுமையை மட்டும் கடைபிடிக்கச் சொன்னார். இரண்டு வருடம் ஒப்பந்தத்தின் போக்கில் சென்றது. ஒப்பந்தத்தின் ஷரத்துகள் யாவும் பின்பற்றப்பட்டது. அந்நிலையில் ஒரு நிகழ்வு நடந்தது.

 

குஸா’ஆ என்ற கோத்திரத்தினர் முஹம்மதின் அணியில் சேர்ந்திருந்தனர். அதே வேளையில் பனூ பக்கர் என்ற மற்றொரு கோத்திரத்தினர் மக்காவின் அணியில் இருந்தனர். மக்கா பனூ பக்கர் கோத்திரத்திற்கு ஆயுத உதவி செய்து குஸா’ஆ கோத்திரத்திற்கு பாடம் புகட்டச் சொல்லியது. பனூ பக்கர் கொஞ்சம் உக்கிரமான இரவுத் தாக்குதலை குஸா’ஆ மீது நடத்தி பலரை கொன்றது. முஹம்மத் மக்காவிற்கு மூன்று நிபந்தனைகளுடன் செய்தி அனுப்பினார்.

 

ஒன்று, மக்கா தாக்குதலில் பலியான குஸா’ஆ கோத்திரத்திற்கு உரிய இரத்தத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது பனூ பக்கர் கோத்திரத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி அவர்களை என்ன செய்தாலும் கண்டுகொள்ளக் கூடாது அல்லது ஹுதைபியாவின் உடன்படிக்கையை முறித்துக் கொள்ள வேண்டும்.

 

மக்காவிற்கு வேறு வழி தெரியவில்லை. இழப்பீட்டுத் தொகை செலுத்தும் அளவிற்கு செல்வம் இல்லை. பனூ பக்கர் கோத்திரத்தையும் கைவிட முடியாது. வேறு வழியில்லை. ஒப்பந்தம் முறிந்தது. மக்கா என்ன விலையிலும் ஒப்பந்தத்தைப் புதிப்பக்கத் தயாராய் இருந்தது. தங்களிடம் வலிமை இல்லை என நன்கு உணர்ந்திருந்தது. முஹம்மதற்கு தூது அனுப்பியது. இம்முறை முஹம்மத் தெளிவாய் இருந்தார்.

 

பத்தாயிரம் பேர் கொண்ட பெரும்படை மக்காவுக்குள் முஹம்மதின் தலைமையில் நுழைந்தது. வழியில் எதிர்த்து வாளேந்தி நிற்கும் வீரனைத் தவிர யாரையும் எதுவும் செய்யக்கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையில் யாரும் எதிர்க்கத் துணியவில்லை. மக்காவே வீட்டிற்குள் அடைபட்டிருந்தது. படை நேரே சதுரங்க கோவிலுக்கு சென்றது. காபாவில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. தங்களைக் காப்பாற்ற இயலாத இந்த சிலைகளா உங்களை காப்பாற்றப் போகிறது என்ற தோரணையில் இருந்தது. காபா சுத்தமாக்கப்பட்டது. இறை இல்லம் என்ற தகுதியோடு நின்று கொண்டது. மக்காவாசிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டது. மக்கா வீழ்ந்தது, ஒரு மனிதனின் கனவில். கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் புரட்சி முடிவுக்கு வந்தது.

 

’மக்களே கொஞ்சம் உங்கள் செவிகளை என் பக்கம் திருப்புங்கள். எனக்குத் தெரியவில்லை, அடுத்த வருடம் உங்களிடையே இங்கு நிற்பேனா என்று. அதனால் எனக்குச் சற்று செவி சாயுங்கள். இங்கு இன்று வர முடியாதவர்களுக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள்.

 

என் மக்களே. எப்படி நீங்கள் இந்த மாதத்தை, இந்த நாளை, இந்த மண்ணைப் புனிதமாக கருதுகிறீர்களோ அதே போல் ஒவ்வொரு இறைவனுக்கு அடிபணிந்தவரின் உயிரும் பொருளும் அவர்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கையும் புனிதமானதாகும். உங்களை நம்பி பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டவற்றை அதன் சொந்தக்காரர்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள். யாரையும் புண்படுத்தாதீர்கள். உங்களையும் யாரும் புண்படுத்த மாட்டார்கள். என்றும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களைப் படைத்தவனிடமே மீளப்போகிறீர்கள். உங்களது ஒவ்வொரு செயலுக்கும் அவனிடம் பதில் கூற வேண்டும். இறைவன் உங்களை வட்டியில் இருந்தும் அதன் கெடுதியில் இருந்தும் விலகி நிற்கச் சொல்கிறான். வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்திவிடுங்கள்.

 

அந்தத் தீங்கை விரும்புபவர்களிடம் கவனமாய் விலகி இருந்து கொள்ளுங்கள். உங்கள் மார்க்கத்தில் தெளிவாக நடங்கள். இன்று உங்களைப் பெரிய செயல்களில் தவறிழைக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால் உங்களது சிறிய செயல்களில் எச்சரிக்கையாய் இருங்கள்.

 

மக்களே உங்களுக்குப் பெண்கள் மீது சில உரிமைகள் இருப்பது உண்மை தான். ஆனால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கும் உங்களின் மேல் உரிமை இருக்கிறது என்பதை. உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அப்பெண்களுக்கு உங்களிடம் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அன்பை உணவாகவும் ஆடையாவும் ஊட்டுங்கள் அணிவியுங்கள். அவர்களிடம் பரிவாகவும் இரக்கமாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு உற்ற துணையாகவும் சிரைத்தையான அர்பணிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்கள் நீங்கள் அனுமதிகாதவர்களிடம் பழகுவதும் கூடா ஒழுக்கத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல.

 

மக்களே உள்ளார்வத்துடன் இதைக் கேளுங்கள். இறைவனை ஐந்து வேளை தொழுங்கள், ரமதானில் நோன்பு நோறுங்கள், உங்கள் செல்வத்திலிருந்து ஜகாத் தானத்தை கொடுங்கள். உங்களால் முடியுமாயின் ஹஜ்ஜும் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியும் இறைவனுக்கு அடிபணிந்தவர் அனைவரும் சகோதரர்கள் என. முஸ்லிம்கள் யாவரும் அந்த ஒரே சகோதரத்துவத்துடன் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானதை அவராக முன்வந்து தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுக்காதவரை அது உங்களுக்கு சொந்தம் அல்ல. அதனால் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்.

 

நீங்கள் அனைவரும் சமம். மனிதகுலம் அனைத்தும் ஆதமிடமிருந்து கிளைத்தது. ஒருவரை விட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவர் அல்ல. அதனால் ஒரு அரபு எவ்வகையிலும் அரபு அல்லாதவரிடமிருந்து உயர்ந்தவன் அல்ல. அதே போல் எந்த அரபல்லாதவரும் எவ்வகையிலும் ஓர் அரபை விட உயர்ந்தவர் அல்ல. எவ்வகையிலும் கருப்பரோ, வெள்ளையரோ, அரபோ, அரபல்லாதோரோ ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் அல்ல, இறைப்பற்றிலும் நற்செயல்களிலும் அல்லாமல்.

 

நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களைப் படைத்தவனின் முன் நின்று உங்கள் செயல்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதை. அதனால், நான் சென்ற பிறகு சரியான பாதையை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள்.

 

மக்களே,  எனக்கு முன் ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கும் ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களில் இருந்தே இறைவன் தன் தூதுவரைத் தேர்ந்தெடுத்து தன் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறான். ஆனால், எனக்குப் பிறகு இறைவனின் பக்கமிருந்து வேறெந்த செய்தியாளரோ மார்க்கமோ வரப் போவதில்லை. நான் இறுதியாய் விளங்குகிறேன். நன்றாக விளங்கிக் கொண்டு நான் உங்களுக்குக் கூறுவதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் என்னிடமிருந்து இரண்டை மட்டும் உங்களிடத்தில் விட்டுச் செல்கிறேன். ஒன்று, எனக்கு வந்த இறைச் செய்தி மற்றொன்று அதன் படி நான் நடந்துகொண்ட எடுத்துக்காட்டு. இவற்றை பின்பற்றுங்கள் வழி தவற வேண்டாம்.

 

இன்று நான் கூறியதைக் கேட்டவர்களே என் வார்த்தையைப் பிறருக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லட்டும். என் செய்தி சென்று சேரும் கடைசி நபர், என்னிடம் நேரடியாக கேட்கும் உங்களைவிட தெளிவாய் இச்செய்தியை விளங்கிக் கொள்ளட்டும். இறைவா எனக்கு நீ அளித்த செய்தியை உன் மக்களிடம் இறக்கி வைத்ததற்கு நீயும் அவர்களும் தான் சாட்சியாய் இருக்கிறீர்கள்.

 

யா அய்யுஹன்னாஸ். அன்தும் வ அல்லாஹ் வஹ்தஹூ அல் ஷஹீத் அலா மா தூல்’ அந்த உரையை முஹம்மத் முடித்தார்.

 

பின் தனக்கு வந்த இறுதி இறைச்செய்தியை கூறினார். ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. நான் உங்கள் மீது இறக்கிய ஆதரவை பரிபூரணப் படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாம் என்ற இந்தப் பாதயை திறந்துவிட்டுள்ளேன்.’

 

இறைச் செய்திகள் முடிந்தன. முஹம்மதால் ஓதப்பட்ட இறைச் செய்திகள் ‘குர்ஆன்’ ஆயின. முஹம்மதின் வேலை முடிந்தது. முஹம்மத் இறந்தார். உலகின் முதல் முஹம்மத் இறந்தார்.

உலகில் முதன் முதலில் முஹம்மத் என்ற பெயரைக் கொண்டவர் இறந்தார். இன்றுவரை உலகில் பல்வேறு நபர்கள் முஹம்மத் என்ற பெயரில் பல்வேறு குணங்களில் வந்திருக்கின்றனர். உலகின் அதிகம் பெயராய் சூட்டப்படும் சொல் ‘முஹம்மத்’. அதே பெயர் தான் இந்தக் காரில் உட்கார்ந்திருக்கும் முஹம்மத் ஹஸனுக்கும், அவன் கார் செல்லும் மண்ணின் அதிபர் முஹம்மத் மூர்ஸிக்கும். முஹம்மதின் புரட்சி லேசுப்பட்டதல்ல.

 

மணி ஆறு. கிழக்கில் ஒளி இறங்கிக் கொண்டிருந்தது. எகிப்தின் ரம்மியத்தை பார்க்க ஆவலாய் இருந்தான். இஸ்மாய்லியா நகரத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. பச்சைப் பசேலென்ற நகரமாய் தெரிந்தது. ஈச்ச மரங்கள் அங்கங்கு நடப்பட்டிருந்தன. வேறொரு ஓட்டுனர் பணியெடுத்தார். ஹஸன், ட்ரைவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு புதிய வானங்கள் புதிய பூமிகளைக் கண்டால் இப்படித்தான். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் இதுவரை ஓடிக்கொண்டிருந்த இசையற்ற பாடல்கள் மாற்றப்பட்டன.

 

துள்ளலான இசையில் ஒலித்தது. ’ஹபிபி அர்ரப் புஸ் வ புஸ் புஸ். ஸாலன் இஸ் அல் நுஸ் அ நுஸ் நுஸ்.’

 

வண்டி ஸுயஸ் கால்வாயின்  அல்-ஸலாம் பாலத்தை கடந்தது. பச்சை பகுதி மறைந்து பாலைவனப் பகுதி தென்பட்டது. ஸினாய் பகுதிக்குள் நுழைவதாய் ஜோஆன் சொன்னார்.

 

 

 

ஆப்ரஹாமின் மனைவி ஸாரா தங்களுக்குக் குழந்தை இல்லாததால் தன் அடிமைப் பெண்ணான ஹாஜரை தன் கனவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஹாஜருக்கும் அப்ரஹாமிற்கும் இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான். இஸ்மாயில் வளர்ந்து பருவம் அடைகிறான். அந்நேரத்தில் ஸாராவுக்கு குழந்தை பிறக்கிறது. ஐஸாக் என்று குழந்தை பெயரிடப்படுகிறது. இப்போது ஹாஜர் மீதும் இஸ்மாயில் மீதும் ஸாராவுக்கு பொறாமை. தன் கணவனிடம் அவர்களை வேறெங்காவது சென்று விட்டு வரச் சொல்கிறார். கனத்த மனதுடன் அவர் சென்று அவர்களைப் பாலைவன மக்காவில் விட்டு வருகிறார். மக்காவின் இஸ்மாயிலின் சந்ததியில் தான் முஹம்மத் பல நூற்றாண்டுகளுக்குப் பின் பிறக்கிறார்.

 

அதே போல், ஐஸாக்கின் மகன் ஜாகோப். ஜாகோப்பிற்கு இன்னொரு பெயர் இஸ்ராயீல். ஜாகோபிற்கு பனிரெண்டு மகன்கள். அதாவது இஸ்ராயீலின் பனிரெண்டு மகன்கள். இந்த பனிரெண்டு பேருக்குப் பின் கிளைத்த சந்ததிகள் இஸ்ராயீலின் பன்னிரெண்டு சந்ததிகள் ஆயினர். இஸ்ராயீலின் இந்த பனிரெண்டு குலத்தில் தான் யூதர்களின் மூலம் இருக்கிறது. இந்த வழியில் வருபவர்கள் தான் மோஸஸ், ஜீஸஸ் எல்லாம்.

 

மோஸஸ். எகிப்தில் பிறந்தார். அப்போது இஸ்ராயீலின் சந்ததிகள் எகிப்தின் அரசனிடம் அடிமைகளாய் இருந்தனர். மோஸஸ் வளர்ந்து இறைவனின் செய்திக்குப் பணிந்து அடிமைகளாய் இருந்த இஸ்ராயீலின் சந்ததிகளை எகிப்தில் இருந்து காப்பாற்றி செங்கடலைப் பிளந்து மூட நம்பிக்கைகளைக் களைந்து சினாய் தீபகற்பத்தின் பாலைவனத்தின் ஊடே வழிநடத்திச் சென்று இஸ்ராயீல் ராஜ்ஜியத்தை உருவாக்கித் தருகிறார்.மோஸஸ் என்பவர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு இறைவனின் சொல்லைக் கொண்டு வழிநடத்தி நன்மை பயக்கிய ஒரு கருவி.

 

இதன் பின் இஸ்ராயீலின் சந்ததிகளில் தோன்றியவருள் முக்கியமானவர் ஜீஸஸ் ஆகிய இயேசு. இஸ்ராயீலின் சந்ததிக்கு இறைவனின் செய்தியை சுமந்து வந்தவராய் கிறிஸ்தவர்களால் நம்பப்படுபவர். கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகனாக கூறுவர், உலகின் பாவத்தை தன் உதிரத்தால் போக்க வந்தவர் என்பர். மோஸஸால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட செய்தியாளர் என்று நம்புவர். யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. இயேசுவை பொய் செய்தியாளராகக் கூறி சிலுவையில் அறைந்தனர்.

 

யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள். இவர்கள் மூவருக்கும் இயேசு என்ற புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யூதர்களைப் பொறுத்தவரை இயேசு இறைச் செய்தியாளரும் இல்லை இறைவனின் மகன் என்ற பேச்சுக்கும் இடம் இல்லை. அவர் என்றோ சிலுவையில் அறையப்பட்ட பொய் பிரச்சாரகர். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை உலகத்தை இரட்சிக்க வந்த இரட்சகர். சிலுவையில் அறைந்து உயிர் நீத்த இறைமகனார். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர் இறைச் செய்தியாளர், கன்னி மரியாளின் மைந்தர், ஆனால் இறை மகனெல்லாம் கிடையாது. மற்ற இறைச் செய்தியாளர்களைப் போல் இறைச் செய்தியை தான் அனுப்பப்பட்ட இஸ்ராயீலின் கூட்டத்திற்கு எடுத்துச் சொல்ல வந்த ஒரு கருவி. இறைவனுக்கு மகன் எல்லாம் கிடையாது. அவன் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன். இதுபோக முஸ்லிம்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவரை இறைவன் உலகை விட்டு உயர்த்திவிட்டதாகவும் மீண்டும் பூமியில் தோன்றுவார் என்றும் கூறுவர். கிறிஸ்தவர்களும் இயேசு மீண்டும் பூமியில் உயிர்த்தெழுவதை நம்புகின்றனர்.

 

இயேசு வாழ்ந்த காலத்தில் இஸ்ராயீலின் சந்ததி ரோமானியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. எப்படி மோஸஸின் காலத்தில் எகிப்தின் அரசினிடம் இருந்தார்களோ அதே நிலைமை. தனக்கு பின் தன்னைப் போல் ஒரு இறைச் செய்தியாளரை இறைவன் அனுப்ப இருப்பதாக ஏற்கனவே மோஸஸ் முன்னறிவிப்பு செய்திருந்தார். இது தான் யூதர்களின் வாதம். இயேசுவையே மோஸஸ் முன்னறிவிப்புச் செய்திருந்தால் ஏன் ரோமானியர்களிடமிருந்து எங்களை அவர் விடுவிக்கவில்லை?

 

நியாயமான கேள்வி தான் ஆனால் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. ரோமானிய பேரரசு கிறிஸ்தவத்தை தழுவியது. ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. அதுவரை யூதர்கள் எகிப்தின் மன்னனாலும் அஸ்ஸிரிய்யர்களாலும் ஃபார்ஸிகளாலும் நாடிழந்து அகதிகளாய்  அடிமைகளாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனி ‘இயேசுவை கொலை செய்தவர்கள்’ எனும் பட்டத்துடன் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குக் கிறிஸ்தவ தேசங்களில் அலையப் போகிறார்கள். நிலைமை எப்படி இருக்கும்? இதுதான் மத்திய காலத்தில் யூதர்களின் நிலைமை. ஐரோப்பா முழுவதும் யூதர்கள் துரத்தப்பட்டனர்.

 

‘உங்களில் அவனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு அளித்ததைப் போல் இந்த உலகின் மீது பெரும் வெற்றியை அளிப்பதாக இறைவன் உங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளான். அவன் உறுதியாக உங்களுக்கு அவன் விரும்பி அளித்த இந்தப் பாதையை நிலைநாட்டுவான். அவனை வணங்கி வேறு யாரையும் அவனுக்கு இணைவைக்காமலும் இருப்பவர்களின் பயத்தை, பாதுகாப்பை கொண்டு விரட்டுவான். ஆனால் அவன் பாதையில் இருந்து பிறழ்பவர்கள் நிச்சயம் தவறிழைத்தவர்கள். அத்தகையவர்களுக்கு கேடு தான்.’ இறைவன் குர்ஆனில் கூறினான். (24:55)

 

ஐரோப்பா இருளில் இருந்த சமயத்தில் அரேபியாவில் முஹம்மத் என்று ஒரு இறைத்தூதர் தோன்றினார். மறைந்தார். அவர் மரணத்திற்கு பிந்தைய இருபது வருடத்திலேயே இஸ்லாமை ஏற்று இறைவனுக்கு அடிபணிந்த முஸ்லிம்களின் கையில் அன்றைய வல்லரசுகள் கையில் இருந்த துருக்கியும், பாரசீகமும், எகிப்தும், பாலஸ்தீனமும், சிரியாவும் வீழ்ந்தன. நூறு ஆண்டுகளில் ஸ்பெய்னும், மேற்கு ஆப்பிரிக்காவும், ஆப்பிரிக்கக் கொம்பும், இந்தியாவின் சிந்தும் இணைந்தன. இது உண்மையில் அரபுகளுக்கு வந்த வெற்றியாக இருக்கவில்லை. இஸ்லாமை ஏற்ற அனைத்து மக்களுக்குமான வெற்றியாய் இருந்தது. ஐரோப்பா இருளில் இருந்த போது மத்தியக் கிழக்கு ஒளிரியது. புது நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. கிரேக்க, ரோமானிய ஆட்சிகள் அடங்கின. அவர்களது தத்துவங்கள் கிழக்கிற்குள் வந்தன. புத்துயிரூட்டப்பட்டன.

 

சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சொல்வதற்கு ஆதாரம் தேவை. அது இருந்தால் மட்டுமே உண்மையாய் இருக்கும் என்ற கோணத்தில் தத்துவத்தை பௌதீகம் ஆக்கியது இக்காலகட்டம். பிறகு இஸ்லாமை ஒரு கலாச்சாரமாக்கி கலாச்சார முஸ்லிம்களாய் வாழத் தொடங்கிய காலம் தொடங்கியது. முன்னிருந்த நேர்மையான செயல்பாடு பின்னில்லை. துருக்கியின் உஸ்மானியப் பேரரசும் இந்தியாவின் முகலாயப் பேரரசும் தோன்றுவிக்கப் பட்டன. ஐரோப்பா சிறிது சிறிதாய் இருளில் இருந்து ஒளியை நோக்கி வந்தது. இங்கிலாந்து அடுத்த வல்லரசாய் உருப்பெற்றது. அதனிடமிருந்து அமெரிக்காவுக்குச் சென்றது.

 

மத்திய காலங்களில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் துரத்தப்பட்டனர். வேண்டா விருந்தாளியாகப் பார்க்கப்பட்டனர். ஆனால் இஸ்லாமிய தேசங்களில் அவர்களுக்கு ஒளி இருந்தது. அவர்கள் விரட்டப்படவில்லை. தோழமையோடு தான் பழக்கம் இருந்தது. ஐரோப்பிய யூதர்கள் ஐரோப்பாவால் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்கா போன்ற புதிய தேசங்களில் வாழ்வு தேடிப் போயினர். தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் பூர்வீகத்தையும் அடையாளத்தையும் சொல்லிக் கொடுத்தனர். கல்வியில் சிறந்தனர். முதல் உலகப் போர் காலகட்டத்தில் ஒரளவிற்கு அவர்களுக்கெதிரான கொடுமைகள் ஐரோப்பாவில் குறைந்தது. மிக விரைவில் ஹிட்லரின் வடிவில் துவங்கியது. பழைய சித்தாந்தங்களைப் புதுப்பித்துக் கொண்டு முதல் உலகப் போரில் துவண்டு போன ஜெர்மன் தாயைத் தூக்கி நிறுத்த ஹிட்லர் முடிவெடுத்தார். யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். யூதர்கள் மாபெரும் வதைக்கு உள்ளாயினர். மீண்டும் அகதிகளாய் நாட்டைவிட்டுக் கிளம்பினர்.

 

இந்நிலையில் தான் இதுவரை அவர்களைத் துரத்திய உலகம் கண்ணீர் வடித்தது. இன்னொரு வகையில் இதுவரைத் துரத்திய அனைத்து நாடுகளின் முக்கியப் பொறுப்பிலும் யூதர்கள் இருந்தனர். கல்வியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், கலையாகட்டும், அரசியல் ஆகட்டும், எதுவாக வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கும் யூதன் இருப்பான் என்றானது. அவர்கள் தங்களைப் பற்றிய மேற்கின் அபிப்பிராயத்தை முழுதாக மாற்றியிருந்தனர்.

 

பல நூற்றாண்டுகளாய் நாடோடியாய் திரியும் தங்களுக்கு நாடு வேண்டும் என யூதர்கள் முடிவெடுத்தனர். ஆப்ரிக்கா போன்ற பல இடங்களில் யூத நாடு தேடி முடித்த பின் பாலஸ்தீன் அவர்கள் கண்ணில் பட்டது. கடவுள் தங்களுக்கு மோஸஸின் தலைமையில் கொடுத்த பூமி என்றனர். அங்கு ஒரு யூத நாட்டை உருவாக்க எண்ணினர். பிரிட்டன் தலையிட்டு தன் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு நாடு அமைக்க முடிவெடுத்தது.

 

அதுவரை பல இடங்களில் இருந்தும் தொடர்ந்து துரத்தப்பட்ட யூதர்களை என்றும் இஸ்லாமிய நாடுகள் வரவேற்கவே செய்தன. ஆனால் அடி மடியிலேயே கைவைக்கும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

 

இஸ்ரேல் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை பாலஸ்தீன் ஒன்றும் வெற்றிடமாக இல்லை. மக்கள் வாழ்ந்து தான் வந்தனர். யூதர்கள் அங்கிருந்து துடைத்துவிட்டாற் போல் எல்லாம் வெளியேறவில்லை. எஞ்சிய யூதர்களும், யூதர்களில் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களும் வாழ்ந்தனர். பின்னர் இஸ்லாமின் வருகைக்குப் பின் பலர் இஸ்லாமைத் தழுவினர். பிராந்திய மொழியாக அரபு மொழி வளர்ந்தது. பல நூற்றாண்டுகள் அந்த நிலத்தைக் காக்க எதிரிகளிடம் போர் புரிந்துள்ளார்கள். கண்ணீரும் இரத்தம் சிந்தியுள்ளார்கள்.

 

அதெல்லாம் தெரியாது அந்த இடத்தில் யூத நாடு ஒன்று அமைந்தே தீரும். பெயர் இஸ்ரேல். 1948ல் பிரிட்டனின் முழு ஆசியுடன் பாலஸ்தீனைப் பிரித்தும், அங்கிருந்த அரபுகளை விரட்டியும் இஸ்ரேல் இயங்கத் துவங்கியது. வெளியில் இருந்து வந்த ஒரு அகதிக் கூட்டம் அங்கிருந்தவர்களை அகதியாக்கி அண்டை நாடுகளுக்குத் துரத்தியது. எகிப்தும், ஜோர்டானும், அண்டை அரபு தேசங்களும் இது கண்டு கொந்தளித்து இஸ்ரேலை எதிர்த்தனர். பல போர்களும் மூண்டது. அரபு தேசங்களிடம் வலிமை இல்லை. அனைத்திலும் இஸ்ரேலுக்கே ஜெயம். இப்போர்கள் இஸ்ரேலின் எல்லையை இன்னும் விரிவுபடுத்தி இருந்தன. எகிப்தின் சினாய் தீபகற்பம் முழுதும் இஸ்ரேல் வசம் போனது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அரபு தேசங்கள் பின் வாங்கின. பாலஸ்தீன் காஸா பட்டை மற்றும் மேற்றுகரை என்று இரு பகுதியாய்  பிரிந்து நின்றது. இடையில் இஸ்ரேல். இஸ்ரேல் தன் எல்லைகளை மேற்குக் கரைக்கு உள்ளும் சில இஸ்ரேலிய குடியிருப்புகளை ஏற்படுத்தி இன்றுவரை விரிவுபடுத்தி வருகிறது.

 

பாலஸ்தீனின் பெரும்பாண்மை மேற்குக் கரைப் பகுதி. காஸா பட்டை என்பது எகிப்தின் சினாயை ஒட்டிய சிறு நிலப்பரப்பு. இன்றுவரை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே எந்த நல்ல உடன்பாடும் எட்டப்படவில்லை. இன்று நடுவில் பிரிட்டன் இல்லை. இஸ்ரேலுக்கு தோள் கொடுத்து அமெரிக்கா நிற்கிறது.

 

இது போதாதென்று பாலஸ்தீனுக்குள்ளேயே சண்டை. ஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புகளால். ஆயுதம் ஏந்தி இஸ்ரேலை எதிர்த்த யாசர் அராஃபத் இறுதியில் பேச்சுவார்த்தையே இதற்கு தீர்வென முடிவுகட்டி அமைத்த அரசியல் இயக்கம் ஃபத்தாஹ். அதேபோல் 1980களில் அரபு தேசங்களில் தோன்றிய ‘இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின்’ விழுதாக அஹமத் யாஸினால் துவங்கப்பட்டது ‘ஹமாஸ்’ இயக்கம். ஃபத்தாஹ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டாலும். ஹமாஸ் விடவில்லை. இஸ்ரேலை அது அங்கீகரிக்கவே இல்லை. அது பாலஸ்தீனின் நிலம் என்று கூறிவந்தது.

 

2004ல் அராஃபத் இறக்க வேலை முடிந்தது. பாலஸ்தீன பொதுத் தேர்தல் வந்தது. ஃபத்தாவும் ஹமாஸும் நின்றனர். இறுதியில் ஹமாஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அதனை ஏற்கவில்லை. வெளியிலிருந்து வரும் நிதிகளை நிறுத்தின. அரசாங்கத்தை முடக்கின. ஃபத்தாவுக்கு உதவி செய்யத் துவங்கின. ஒற்றிணைந்து இருந்த மேற்குக் கரையும் காஸா பட்டையும் பிரியத் துவங்கின. 2007ல் போர் மூண்டது.

 

போரின் இறுதியில் காஸா பட்டையை ஹமாஸும் மேற்குக் கரையை ஃபத்தாவும் நிலைநிறுத்திக் கொண்டன. மேற்குக் கரையில் வென்றிருந்தாலும் ஹமாஸ் சம்பந்தப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹமாஸ் காஸாவில் குடிகொண்டது. ஃபத்தாஹ் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கு கரைக்கு அனுப்பப்பட்டனர். ஹமாஸ் கைக்கு காஸா வந்ததால் காஸாவின் மீது இஸ்ரேலும், எகிப்தும் பொருளாதாரத் தடை விதித்தன. பிறகு 2008ல் இஸ்ரேல் காஸா மீது தன் தேர்தல் நோக்கத்திற்காக படையெடுத்தது.

 

இலங்கைத் தமிழர்களை வைத்து எப்படி தமிழகத்தின் அரசியல்வாதிகள் சதுரங்கம் ஆடுகிறார்களோ அதே நிலைதான் மத்திய கிழக்கிலும். அங்கு பாலஸ்தீன் அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது. இன்றைய நிலையில் ஹமாஸை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் தீவிரவாத அமைப்புப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில் ரஷ்யாவும், துருக்கியும், நார்வேவும் அதை அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளன.

 

எகிப்து?

 

இது தான் மிக முக்கியமான கேள்வி. எகிப்து. பிற நாடுகளைப் போல் இல்லை அரபு தேசங்கள். மிகவும் ஸ்திரமற்ற தன்மையில் அவை நிற்பவை. என்று என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நேற்றிருப்பது இன்றில்லை இன்றிருப்பது நாளையில்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் நிலங்கள் அவை. மொழியாலும் கலாச்சாரத்தாலும் மதத்தாலும் பெரும் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும் ஆட்சியாளர்களால் பெரிதும் மாறுபடக்கூடியது. எகிப்தும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம். தற்போதைய முஹம்மத் மூர்ஸியின் ஆட்சியில் அப்படி இல்லை. மல்லிகைப் புரட்சிக்குப் பின் தேர்தலில் வென்ற மூர்ஸி இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியை சார்ந்தவர். இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியே ஹமாஸின் தாய்.

 

தற்போது மூர்ஸி ஆட்சிக்கு எதிரான அதிர்வுகள் எகிப்தில் நிலவுகின்றன. நாளை மூர்ஸியின் ஆட்சிக்கு எதுவும் நிகழ்ந்தால் காஸாவின் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.

 

ஒன்பது மணி. அந்த விடியலின் மயக்கத்தில் மத்தியத் தரைகடல் மிதமான நீலத்தில் பச்சைகளுடன் கலந்து ஈர்த்தது. மத்திய தரைக் கடலை ஒட்டியே சென்று ’ஆரிஷ்’ நகருக்கு அப்துல் மஸிஹ் வண்டியைச் சேர்த்தார். அந்த ஓட்டுனரின் பெயரை ஹஸன் அறிந்து வைத்திருந்தான். இவ்வளவு நேரம் அவர் தானே நடந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார். எகிப்தில் இருந்து சினாய் தீபகற்பத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவர் அங்கு நிகழ்ந்து வரும் அரசியலை எளிமையாகக் கூறிக்கொண்டே வந்தார். புரியும்படி அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. இந்த அரபுகளால் கைகளை ஆட்டாமல் பேசவே முடியாது போல. உரத்த குரலில் கைகளை அடித்து மடக்கி உலுக்கி உணர்ச்சி பொங்கத் தான் பேசுகிறார்கள். அப்படியே உணர்ச்சியில் மிதக்க வைத்து விடுகிறார்கள். திடீரென்று அழுகிறார், மனிதர் திடீரென்று இடி முழக்கத்துடன் சிரிக்கிறார். முகத்தில் ரேகைகள் அதிகம் தென்படுகிறது. கவலையும் வருத்தமும் வாட்டி இருக்க வேண்டும்.

 

ஆரிஷ் நகரில் பகல் உணவைக் கொள்ளலாம் என ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். ஃபலாஃபல், ஹும்முஸ்,  பிட்டா என ஏதேதோ புரியாத ஐட்டங்கள் வரவழைக்கப்பட்டன. ஹஸனுக்கு எதுவும் பிடிபடவில்லை. அதை எதில் செய்தார்கள் என்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பசிக் கொடுமை அதிகமாய் இருந்ததால் ஃபலாஃபல் உருண்டையை ஹும்முஸில் மஸிஹ் துவட்டி விழுங்குவதைப் போல் அவனும் செய்தான்.

 

உணவின் போது தான் அவனுக்குத் தெரிந்தது மஸிஹ் ’காப்ட்’ என. அதாவது எகிப்திய கிறிஸ்தவர்.

 

‘உங்க பேர்ல அப்துல்மஸிஹ்னு வச்சிருக்கீங்க? இது முஸ்லிம் பேர் இல்லையா?’

 

‘லா. தபாஆன் லா. அப்துல்னா அடிமை, மஸீஹ்னா கிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் அடிமை’

 

’ஜேசுதாஸா நீங்க?’

 

‘எய்ஹ்? அனா மெஷ் ஃபஹ்ம எண்ட பேடயோல் எய்ஹ்.’

 

’நத்திங். இட்ஸ் தமிழ். ஜேசுதாஸ் இஸ் ஒன் ஆஃப் ஆர் தமிழ் ஸிங்கர். ஹீ ஹொல்ட்ஸ் தெ ஸேம் மீனிங் ஆஃப் யுயர் நேம். ஆமா எனக்கு இன்னொரு கேள்வி. ஷால் ஐ?’

 

‘ஸ்யூர். தபாஅன். எஸஅல் ஸய் மன்த ஆவெஸ் யா சப்ஹி’

 

’அப்பறம் ஏன் பேச்சுக்கு நடுவே. யால்லாஹ், இன்ஷாஅல்லாஹ்னு அல்லாஹ் அல்லாஹ்னு சொன்னிங்க’

 

‘யா ஹஸன். ‘அல்லாஹ்’ எல் எஸ்ம் த ஹ்வா ந்ஃப்ஸோ எஸ்ம்’ காட்’ . எல் எத்னீன் வாஹித். மெஷ் பாஸ் ‘காட்’இல் மொஸல்மீன். அல்லாஹ்ன்றது அரபில இறைவன்றதுக்கு பொதுப்பெயர். முஸ்லிம்ஸ் மட்டுமில்ல நாங்களும் யூதர்களும் கூட யூஸ் பண்ணுவோம். ஈவன் பிஃபோர் அட்வெண்ட் ஆஃப்இஸ்லாம்’

 

’ஓ. முஸ்லிம்ஸ்  அல்லாஹ்வ ஒரே கடவுள் உருவமே இல்லைனு சொல்வாங்க. நீங்க எப்படி உங்க ட்ரினிட்டிய இதில சொல்வீங்க? குழப்பமா இருக்காது?’

 

யா மாஷா அல்லாஹ். எண்ட காயெப் எல் மொக்ஹ் ட ம்னீன். தா சஹ்ல கலெஸ். அல்லாஹ் அல் அப், அல்லாஹ் அல் வலத், அல்லாஹ் அல் ரூஹுல் குத்ஸ். மா அண்தெனஷ் அய் மிஷ்கல். மா பெத்னாஷ் நெர்பெக்ஹ அக்தர் மென் கெதா’

 

‘காட் தி ஃபாதர், காட் தி சன், காட் தி ஹோலி ஸ்பிரிட். பிதா அல்லாஹ், சுதன் அல்லாஹ், பரிசுத்த ஆவி அல்லாஹ்’

 

’அய்வா அனா காஹெஸ். ரஃபா ஹ்தக்ஹொத் வஆத் மென் ஹெனா 30 (கைச் சைகை) திஆஇஆஅ’

 

முப்பது நிமிடத்தில் ரஃபா வந்தடைந்தது. நம்மூர் விமான முனையம் போல் தெரிந்தது. அப்துல் மஸிஹ் காரை உள்ளே செலுத்தினார். ஜோஆன் இறங்கி ஐ.நா சபையின் சார்பாக நடக்கும் கட்டிட வேலைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எகிப்தின் பக்கத்தில் இருந்து உள்ளே வாகனம் அனுமதிக்கப்பட்டது. காஸாவின் பக்கம் சிறிது பரஸ்பர சோதனைக்குப் பின் நுழைய முடிந்தது.

 

’என்னக் ட்ஃபூட் அலா காஸா ஷெஆ மெஷ் பெஸொஹொலா எல்லி எண்டா ஃபக்ர்ஹா எல்லி பாஆஎத் ஸமாம். டெல்வஆதி பாஆஎத் சஆபா க்ஹலெஸ். அஹ்லன் வ மர்ஹபா ஃபீக் பி காஸா, அக்பர் ஸெக்ன் மஃப்தூஹ் பெல் ஆஅல்ம் தா.

 

காஸா, உலகின் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை உங்களை வரவேற்கிறது.’

 

 

காஸா பட்டை. ஆறு கிலோமீட்டர் அகலமும் நாற்பது கிலோமீட்டர் நீளமும் கொண்டது.  ரஃபா, கான் யூனுஸ், தைர் அல்பலாஹ், காஸா ஆகிய நான்கு நகரங்களை உள்ளடக்கியது.

மொத்தமாக காஸா பட்டை. இந்தப் பட்டையில் இன்று வாழும் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்ரேல் அமைந்த பிறகு அங்கிருந்து அகதிகளாய் வந்தவர்கள். சில அகதிகள் தங்கள் வாழ்வை ஓரளவிற்கு வாழக்கூடியதாய் மாற்றிக் கொண்டிருந்தாலும் பலரால் முடியவில்லை. பலருக்கு காஸாவின் அகதிகள் மூகாம்களில் தான் வாழ்க்கை கழிகிறது. எங்கும் மக்கள் நெரிசல் மிக அதிகமாய் தெரியும். இருந்தாலும் நம் இந்திய நகரங்கள் அளவிற்கு நெரிசல் தெரியாது. கூச்சலும் பெரிதாய் இருக்காது. ஆனாலும் மத்திய கிழக்கிற்கு இது அதிகம் தான்.

 

ஊரில் எங்கும் ஒரு வித பேரமைதியை உணர முடிந்தது. மக்களின் முகம் எப்போதும் ஒருவித பயத்துடன் அந்த அமைதிக்குப் பழகிப்போய் இருந்ததைப் போல் தெரிந்தது. வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த கடல் மட்டும் இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது. ஹஸன் கடலை நோக்கி நடந்தான். ஏதோ ஒன்று உள்ளிருந்து அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது.

 

கடல்கள் என்றும் அவனுள் பயத்தை தான் தோற்றுவித்துள்ளன. தூரத்தில் இருந்து போகிற போக்கில் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் அருகில் சென்றால் இருப்பதில்லை. கடலும் அலையும் அதன் ஓசையும் உள்ளுக்குள் கிலியை உண்டுபண்ணி விடுகின்றன. சிறுவயதில் ஏதாவது கடலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்றுவிடுவான். ஆனாலும் அந்தப் பயம் விட்டதாகத் தெரியவில்லை. சுனாமி தமிழகத்தை சுழற்றியடித்த போது இவன் கடலில் இல்லை. கடலை வெகு தொலைவில் இருந்து தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இருந்தாலும் அதை உணர்வுப் பூர்வமாக உணர முடிந்தது. மனது கற்பனை செய்து பயமுறுத்தியது. அன்றுடன் கடலுடன் என்றும் விளையாடியதில்லை. அதற்கு முன்பும் விளையாடியதில்லை என்பது வேறு கதை. அப்படியே மனதுக்குள் பயத்துடன் பதிந்தது. கால்களை தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அது திடீரென்று உள்வாங்கியது. அப்படியே தன் மொத்த திறத்தையும் திரட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்குமாய் ஒரு தாண்டவத்துடன் பாய்ந்தது. தன்னை மிதித்து விளையாடிய கால்களை மொத்தமாக விழுங்கியது. அந்தக் கால்கள் நேற்றுப் பிறந்தவையானாலும் சரி நாளை பிறக்கப்போவதானாலும் சரி. பாரபட்சம் ஏதும் கிடையாது. விழுங்கு. அங்கு கட்டளை ஒன்றே.

 

கடலைப் பார்த்தவாறும் அங்கு மனிதர்களின் செயல்பாட்டைப் பார்த்தவாறும் அமைதியாக அமர்ந்தான். ஆனாலும் மனம் அமைதியடையவில்லை. மலைகளிலும் வயல்களிலும் காடுகளிலும் கிடைக்கும் அந்த அமைதியை இங்கே கண்டெடுக்க முடியவில்லை. தொடர்ச்சியான இரைச்சலாய் மட்டுமே கடலின் சப்தம் அவனுக்குப்பட்டது. இருந்தாலும் அந்த மனிதர்களின் செயல் அனைத்தையும் மறைத்தது. படகுகளைத் திணறி இழுத்து உள்ளே செலுத்தி அந்த இரைச்சல் மிகுந்த கடலுடன் போராடி முட்டி மோதி மீன்பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களின் அந்த உழைப்பு ரசிக்கக் கூடியதாய் இருந்தது. இவனுக்கும் அந்த படகில் ஏறிச் செல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால், அது கடலில் நிலையில்லாமல் இப்படி அப்படியுமாய் ஆடிச் செல்வதைக் கண்டால் தான் ஒரு மாதிரி இருந்தது. அதில் எப்படி உறுதியாக மனிதர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அப்படியே எழுந்து அருகில் சென்றான்.

 

ஒரு படகு நீரைத் தழுவத் தயாரகிக் கொண்டிருந்தது. அருகே சென்று ஈரத்தில் நனைந்து கொண்டே  தடவிப்பார்த்தான். இதுவரை கடலுக்குள் படகில் போனதே இல்லை. இதை வட இந்தியர்கள் கேட்டால் காரி உமிழ்ந்திருப்பார்கள். கடல் விரிந்த தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கடலுக்குள் சென்றதில்லை என்றால் அவர்களுக்கு வியப்பாகத் தான் இருக்கும். கேட்போமா? வேண்டாமா? என்ன கேட்பது? திணறிக் கொண்டிருந்தான்.

 

அதற்குள் அவர் பார்த்தார். அந்த மீனவர் அவனைப் பார்த்தார்.

 

‘அலா ஷோ ப்டெதல்ஆ யா இப்னி’ அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏதோ திட்டுவதைப் போல் தெரிந்தது. விலகினான்.

 

‘பெத்ஹப் அஸ்ஸஹ்பக்?’ குரல் சற்று தணிந்ததாய் தெரிந்தது.

 

‘நத்திங்’ என்றான்.

 

‘ப்தெஹ்க்கி அரபி எண்த்த? அரபி அரபி’ என அரபி தெரியாதா என வாய்க்கு அருகே விரல்களை குவித்து விரித்து சாடை செய்தார்.

 

’நோ. ஐ நோண்ட் நோ அரபிக். டூ யூ நோ இங்லிஸ். இங்லிஸ்?’

 

‘அஹ் ம்னீஹ். ஷோ எஸ்மக்?’ நேம் நேம் யூ நேம்’

 

‘ஆன். மை நேம். ஐம் முஹம்மத் ஹஸன்’

 

‘முஹம்மத் ஹஸன். ஆ ஹான். தய்யிப். எண்த மின் வீன்? வேர் யூ ஃப்ரம்?’

 

‘இந்தியா’

 

‘அல் ஹிந்த். ஆ ஹான். அஸ்ஸலாமு அலைக்கும்.’

 

‘வ அலைக்கும் ஸலாம். தான்க்ஸ்.’

 

‘போட். லைக் டு கம். யூ?’

 

‘யெஸ்’ பெரிதாக தலையாட்டினான். அந்த சிறிய படகில் இருவரும் ஏறிக்கொண்டனர். அவர் மோட்டாரைச் செலுத்தினார். அவன் கால்கள் நிற்க முடியாமல் தடுமாறின. ஒருவிதக் கூச்சம் தெரிந்தது. உள்ளே ஏறியவுடன் ஹஸன் அமர்ந்து கொண்டான். நீரைப் பிளந்து கொண்டு படகு சென்றது. சிறிது தொலைவு சென்றிருக்கும், மோட்டாரை நிறுத்தினார். படகு நின்றது. நடுக்கடல் என்றெல்லாம் சொல்ல முடியாது. கரையில் இருந்து சிறிது தூரம். பின் வலையை உள்ளே வீசினார்.

 

‘அனா லிஸத்ன ப்ர்மி எல்ஷபகா. காலீன நெஸ்த்ன ஷ்வாய். வெய்ட் டில் ஃபிஷ்’

 

‘ஓகே. ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ வயதைக் கேட்டான்.

 

‘ஓல்ட் ஹாஹா. பட் ஸ்ட்ராங்க்’ அவரை வயதானவர் என்று சொல்லிவிட்டானோ என்று நினைத்து வயதானவன் தான் ஆனால் இன்றும் பலம் குறையவில்லை என்று புஷ்டிகளை உயத்திக் காட்டினார்.

 

‘நோ. நோ. ஐம் ஆஸ்கிங் யுவர் ஏஜ். ஏஜ்?’

 

‘ஒம்ர்?’

 

‘ஆ ஒம்ர். யுவர் உம்ர்’ ஹிந்தி உர்தூவில் வயதை ஒமர் என்று தான் கூறுவர். இம்மொழிகளில் அரபு சொற்கள் அதிகம்.

 

‘ஒம்ரி 65 (கைச் சைகை) ஸனா’. சிக்ஸ் ஃபைவ்’ அருபத்தைந்து என புரிந்து கொண்டான். ஆனால் இவர்கள் வலிமையாகத் தான் இருக்கிறார்கள். அவர் உடல் உழைப்பைப் பார்த்தால் வயதானதைப் போல் தெரியவில்லை. வலையை இளைஞனைப் போல் அவனைத் துணைக்கு அழைக்காமல் இழுத்தார். வலையில் மிகக் குறைந்த அளவு மீன்களே சிக்கி இருந்தன.

 

‘’அல்லாஹ் யெல்ஆன் இஸ்ரயேல் லானா மின் எல் ஸமா. ஹாஸ்ப்ய அல்லாஹ் அலீகோ யா அந்தல்.’ முகத்தில் வருத்தம் தெரிந்தது.

 

‘வை? லெட்ஸ் கோ இன் டீப். நாம இன்னும் கொஞ்சம் உள்ள போய் பிடிக்கலாமே?’ கையை கடல் நோக்கி காட்டி விளக்கினான்.

 

‘ஹாதா ஹொவ்வ எல் மஆபர் வி அய் ஹாத் பைஇயோபர் மின்னோ பெதொகொஹ்’அவர் சொன்னதில் இருந்தும் கைகளைத் தூரத்தில் சில இஸ்ரேல் கொடி பறக்கும் படகுகளைக் காட்டி சுடுவதைப் போல் செய்தலிலும் இதுதான் எல்லை, இதை தாண்டினால் இஸ்ரேல் ரோந்துப் படகுகள் சுட்டுவிடும் எனப் புரிந்தது.

 

‘வை?’

 

‘பார்டர்’.

 

அவரிடம் திக்கித் திணறிப் புரிந்து கொண்டது இதுதான். காஸாவின் கடல்களும் இஸ்ரேலின் பிடியில். காஸாபட்டை மூன்று புறத்தில் நிலத்தாலும் ஒரு புறத்தில் கடலாலும் சூழப்பட்டுள்ளது. நிலப்பகுதியில் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கே இருக்கும் மத்திய தரைக் கடலிலும் இஸ்ரேலின் முற்றுகை தொடர்கிறது. ஹமாஸ் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஹமாஸால், அவர்களின் ஏவுகணைகளால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்பதே இஸ்ரேலின் வாதம். ஹமாஸிடம் கேட்டால், முதலில் அவர்கள் தான் துவக்குகின்றனர், நாங்கள் செய்வது தற்காப்பு மட்டுமே. எங்களிடம், அமெரிக்காவின் துணையுடன் இருக்கும் அவர்களை எதிர்க்கும் அளவிற்கு ஆயுத பலம் இல்லை. இது போதாதென்று தெற்கே எகிப்தின் முற்றுகை. மூர்ஸிக்கு பிறகு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தெற்கே கடலுக்குள் செல்ல முடியாது. கரையிலிருந்து ஆறு கடல் மைல் தொலைவு தான் உள்ளே காஸா மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியும். மீறிச் சென்றால் துப்பாக்கிச் சூடு.

 

‘ஹாதா மெஷ் எல் பஹ்ர் எல் மொடவஸ்ஸத். ஹாதி பெர்கெட் காஸா. நாட் ஸீ. காஸா ஸ்விம்மிங் பூல் திஸ்’ என்று கூறினார். ஆம் காஸாவைப் பொருத்தவரை அது மத்திய தரைக் கடல் கிடையாது காஸாவின் கண்மாய் தான்.

 

ஆனால் இங்கே ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எல்லை தாண்டுவதும் பிடித்துப் போவதும் நம்மூரைப் போல் தினசரி பிரச்சனை இல்லை. என்றோ ஒரு நாள் நடப்பது. தங்கள் எல்லையைத் தாண்டி நம் எல்லைக்குள் வந்து நம் மீனவர்களை சுடும் அல்லது சிறைக்குக் கொண்டு செல்லும் தினசரி காட்சி இங்கில்லை. இலங்கையை விடுங்கள். வேறெங்கிருந்தோ வந்து நம் மீனவனைச் சுட்ட வெளிநாட்டுக்காரன் தாய் நாடு சென்று ஓட்டுப் போட்டுவர அனுமதிப்பதும் அவன் அங்கிருந்துகொண்டு வரமாட்டேன் போ என்று அடம்பிடிப்பதையும் ஏற்றுகொள்ளும் நம் பாரத தேசம் உண்மையில் உலகத்திற்கு வியப்பைத் தான் அளித்திருக்க வேண்டும்.

 

பிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு படகு தரைக்குத் திரும்பியது. ஹஸன் விடைபெற்றான். அவர் விடவில்லை. தன்னுடன் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டுப் போகுமாறு நிர்பந்தித்தார். ஹஸன் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை. சரி என்று நடையைக் கட்டினான். வீட்டில் யாரும் இல்லை. அவர் மட்டும் தான் தனித்திருந்தார். மிகச் சிறிய வீடு. கடற்கரையை ஒட்டி.

 

அவர் கதையைச் சொன்னார். அவர் சில போர்களில் பங்கு கொண்ட போர் வீரராம். இண்டிஃபாதா கிளர்ச்சியின் போது கலந்திருக்கிறார். அவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகளாம். எல்லாம் திருமணமாகி வேலையில் வெளியில் இருக்கின்றனராம். ஹமாஸ் மீது கொண்ட பற்றால் மேற்குக் கரையிலிருந்து இங்கு மனைவியுடன் வந்தாராம். ஆனால் நிலைமை இப்படி மாறுமென அவர் ஒரு நாளும் எண்ணியிருக்க மாட்டார். அவர் மனைவியையும் ஏதோ போரில் இழந்துள்ளார். தற்போது தனிமையில் தான் வாழ்வைக் கழிக்கிறார். அவர் கதையைப் பேசும் போது கண்ணீர் மல்குகிறது. இதை பாலஸ்தீனியர்களிடம் காண முடிகிறது. அனைவருக்கு கண்ணை முட்டும் அளவிற்கு துன்பம் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிரிக்க மறப்பதில்லை. வெளியில் இருந்து வருபவர்களிடம் தங்கள் துன்பமான பகுதியை அவர்கள் தெரிவிக்க விரும்புவதில்லை இருந்தாலும் சொல்வதற்குத் துன்பத்தைத் தவிர எதுவும் இல்லையாகையால் எப்படியாவது அது வெளிப்பட்டுவிடுகிறது.

 

மிகச் சிறிய வீடு தான். ஆனால் நம்மைப் பொறுத்த மட்டில் அது முதல் தர நடுத்தர வர்கத்தினரின் வீடு. தரை விரிப்பு, கட்டில், மெத்தை, ஃப்ரிட்ஜ், டீவி, மார்பிள் தரை, வாஷ் பேஸின், வெஸ்டர்ன் டாய்லட். ஆனால் அகதிகள் மூகாம்கள் இப்படியல்ல. அவர்கள் மிகவும் துன்பத்தில் தான் வாடுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தான் வாடுகின்றனர்.

 

வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் போட்டார். எரியவில்லை.

 

‘அல்லாஹ் யஹோத்கோ யா அவ்பாஷ்.  ப்ரதோ மாஃபீஷ் கஹ்ரபா. டைய்லி சிக்ஸ் ஹவர்ஸ் நோ எலெக்ட்ரிசிடி’ இதற்கு முன் இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் காஸாவின் மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் துவம்சமாக்கப்பட்டன. இப்போது ஒரே ஒரு நிலையம் மட்டுமே இயங்குகிறது. கூடுதலாக எகிப்தில் இருந்தும் இஸ்ரேலில் இருந்தும் சிறிது மின்சாரம் தருவிக்கப்படுகிறது. அதாவது காஸாவின் மின்சாரத்தையும் நீரையும் இஸ்ரேல் தன் கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. ஏதாவது மோதல் அல்லது பிணக்கம் என்றால் இஸ்ரேல் செய்யும் முதல் செயல் இவ்விரண்டையும் நிறுத்திவைப்பது தான். மூச்சை பிடுங்கிவிட்டால் செயல்படுவது எப்படி?

 

இங்கும் அவன் தன் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தான். கடந்த வருடம் தன் வீட்டில் இருட்டில் கழித்த கணங்களை எண்ணிப் பார்த்தான். தமிழகத்தில் இன்றுவரை குறைந்தது எட்டு முதல் இருபது மணிநேரம் வரை மின்சாரம் இல்லாத நிலையை எண்ணிப் பார்த்தான். உண்மையில் காஸாவின் நிலையைவிட இந்தியாவின் நிலை பல வகையில் மோசமாகத்தான் உள்ளது. எந்த முற்றுகையும் இல்லாமலேயே அப்படித்தான் உள்ளது. ஆனால் அவர்களைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது இது அவர்களுக்கு மிக மோசமான நிலைமை தான். இந்தியக் கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டு தற்போது வேலை செய்யும் இங்கிலாந்தின் கண்ணாடியை அணிந்து பார்த்தால் நிலைமை புரியும்.

 

இந்தியர்கள் இவர்களைவிட ஏன் இந்த உலகத்தை விட இன்னொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். சேமிப்பில். ஆம். நிலையற்ற போர்ச் சூழல் நிலவுவதால் இவர்கள் சேமிப்பதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. அதுபோக வேலையில்லாத் திண்டாமும் அதிகம். டிகிரி முடித்த இளைஞர்கள் பலர் இங்கு கார் ஓட்டுனர்களாய் தான் வேலை செய்கின்றனர். காஸாவில் அரசு போக்குவரத்தெல்லாம் கிடையாது எல்லாம் டாக்ஸிகள் தான். அப்படி கிடைக்கும் வேலையில் இருக்கும் அந்த சம்பளமும் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது. நம் மக்கள் தங்கள் சேமிப்பைப் பளபள தரையிலும் மெத்தைகளிலும் விரிப்புகளிலும் செலவளிப்பத்தில்லை. தங்கத்திலும் இடத்திலும் முதலிட்டு பாதுகாத்து விடுகின்றனர். கட்டாந்தரையில் பாயை விரித்துப் படுப்பது இயற்கை. ஹஸன் இதுவரை அவன் வீட்டில் மெத்தையில் எல்லாம் படுத்ததே இல்லை. அந்த முற்றத்தில் பாயை விரித்து குடும்பத்துடன் நிலாவை வெறித்துக் கொண்டே தூங்கித்தான் பழக்கம்.

 

ஏன் இப்படி? உண்மையில் காஸா இப்பொழுது இருக்கும் நிலையில் முன்னர் இருந்ததில்லை. காஸா என்ற பெயருக்கு ‘கருவூலம்’ என்று பொருள். அந்தளவிற்கு செல்வச் செழிப்பு இருந்தது. ஆசியாவையும், ஐரோப்பாவையும், ஆஃப்ரிக்காவையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதியாய் விளங்கியது. வணிகத்திற்கு முக்கியமான தடம். காஸாவின் பழங்களைப் பற்றி மஸிஹ் ஏற்கனவே பேசியிருக்கிறார். தொடர்ச்சியான போர்களும் மாற்றங்களும் நிலவி வந்தாலும் உலகின் நாளங்கள் பாயும் சில முக்கியமான பகுதிகளில் ஒன்று. கிட்டத்தட்ட உலகின் நடுப்பகுதி. எல்லாம் இங்கே மாறிக்கொண்டே இருக்கும்.  வரலாற்றின் பார்வையில் விரைவில். மனிதர்களின் பார்வையில் தலைமுறைகளில்.

 

அவர் மீனை ஏதேதோ செய்து ஒரு மணிநேரத்திற்குள் எதையோ தயார் செய்துவிட்டார். மீனும் காய்கறி சாலடும் பிட்டா ரொட்டியும் நனைத்துக் கொள்ள ஹும்மூஸும். இந்த ஹும்மூஸ் என்பது கொண்டைக் கடலையை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் ஒருவகை பேஸ்ட். இதை அப்படியே கெடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். வெளியே எடுத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஜாம் போல பிட்டா ரொட்டியை தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

 

’ஹபீத் எல் ஸமக்?, ஹவ் ஃபிஷ் இஸ்?’

 

‘வெல். ரொம்ப அருமையா இருக்கு.’

 

அன்றைய தினத்தின் முதல் மொபைல் அழைப்பு வந்தது. ஜோஆன் எதிர் முனையில். ஹஸன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்துவிட்டு அவனை மாலை ஆறு மணிக்குள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வரச் சொன்னார். காஸாவை அளந்து கொண்டிருந்த ஹஸனுக்கு தான் இங்கு ஏதோ ஐ.நாவும் தி க்ரீனும் இணைந்து கட்டித் தரும் ஏதோ கட்டிட வேலைக்காக வந்திருக்கிறோம் என்று மட்டும் தெரியும். துபாய்க்குப் போக முடியாததில் வருத்தம் எல்லாம் இல்லை. சிறிய ஏமாற்றம் அவ்வளவுதான். மொத்தத்தில் ஊர் சுற்ற வேண்டும். அது துபாய் என்றால் என்ன? பாலஸ்தீன் என்றால் என்ன?

 

பாலஸ்தீன் என்றவுடன் கிளம்பும்வரை ஏதோ பாலைவனம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சிறுவயதில் ஆசிரியர் பாடம் நடத்தியபடி ஏதோ பங்காளிச் சண்டை என்று தான் நினைத்து வந்தான். ஆனால் அப்பயணம் எல்லாவற்றையும் மாற்றியிருந்தது. மனிதர்கள் எங்கும் மனிதர்கள் தான் என ஆதாரம் காட்டியது. ஒரு வகையில் கவர்ந்திழுத்தது. அவனுக்குத் தெரியவில்லை இனிமேல் தான் அந்தக் கவர்ச்சி, அந்த மாயம், அந்த விடியல், அந்த மந்திரம் அவனுக்கு காட்சியளிக்கப் போகிறதென்று.

 

இறுதியில் அந்த எக்ஸ் ஆர்மி மீனவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். அதே கடற்கரையோரம் தான் அவன் தங்கியிருந்த விடுதியும் இருந்தது. ஐநா வின் கட்டிடமும் அங்கு தான் இருந்தது. விடுதி அவன் தரத்தில் மிக ஆடம்பரமாகப் பட்டது. எல்லாம் இந்தியக் கண் என்ன செய்வது?

 

மாலை ஆறுமணிக்கு ஜோஆன் தொலைபேசியில் அழைத்தார். தன் அறையைவிட்டு வெளியே வந்தான். அப்துல் மஸிஹ் தயாராய் காத்திருந்தார். இருவரும் ஏறிச் சென்றனர்.

 

காஸாவில் ஐநாவின் சார்பிலும் உதவியிலும் சில பள்ளிகள் இயங்குகின்றன. அப்படிப்பட்ட பள்ளி ஒன்றுக்குத் தான் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியின் குழந்தைகள் பச்சைச் சீருடையில் இருந்தனர். அநேகமாக இங்கு தான் அந்த ஊரில் பச்சை நிறம் அதிகம் இருக்கவேண்டும். கண்களுக்குக் கொஞ்சம் குளிச்சியாய் இருந்தது. ஊரே ஒருவகைப் புழுதி நிறத்தில் தான் எங்கும் காட்சியளிக்கிறது. வண்டியை நிறுத்திவிட்டு யாரையோ ஜோஆன் அலைபேசியில் அழைத்தார். பின்னர் எதையோ நோக்கி நடந்தார். ஹஸனும் தொடர்ந்தான்.

 

அங்கே ஒரு வகுப்பறை. அதற்குள் நுழைந்தார். ஒரு ஆசிரியை பாடமெடுத்துக் கொண்டிருந்தார். உடலை முழுதும் மறைத்த உடை. கரும்பலகை முழுவதும் அரபியில் ஏதேதோ கோடுகள். புரியாத வரை எழுத்துகள் என்றும் கோடுகள் தான். ஆனாலும் அந்தக் கோடுகளில் ஒரு நளினம் தெரிந்தது. இழுத்து இழுத்து சேர்த்து சேர்த்து எழுதப்படும் அம்மொழியில் ஒரு அழகு தென்பட்டது. இது அறிமுகமில்லா மொழியெல்லாம் இல்லை. குர்ஆனிலும் சிறுவயதில் அரபி பாடசாலையிலும் அடிக்கடிக் கண்ட மொழிதான். இருந்தாலும் அதனிடத்தில் வந்து பார்க்கும் போது ஒரு கலைநயம் தெரிகிறது.

 

அதனை எழுதிக் கொண்டிருந்த ஆசிரியை திரும்பினார். யார் என்று கேட்டார். மாணவர்கள் ‘ஜோஆன் மிஸ்’ என அலறினர். ’அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹ் ஜோஆன் கீஃப் ஒக்ஹ்தெக்?. ஒரே நிமிடம் தான். ஹஸன் செய்வினை வைக்கப்பட்டவனைப் போல் ஆனான். ஏதோ மாயத்தால் தீண்டப்பட்டான். ஏதோ விடியல் அவனுள் குடிகொண்டதைப் போல் இருந்தது. ஏதோ ஒரு மந்திரம் கவர்ந்திழுத்தது. மூச்சு பெருமூச்சானது. பேசக்கூட நாக்கு எழவில்லை. ஏதோ ஒன்றால் கட்டுண்டதைப் போல் இருந்தது.

 

இதுவரை இப்படி எதுவும் நடந்ததில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தும் இவ்வளவு சிலிர்த்ததில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. உணர்ச்சிகளுக்கு இவ்வளவு பலமா? இதுவரை இந்த உணர்வு எங்கே இருந்தது? என்ன ஆனது? இப்படி எல்லாம் உணர்ச்சிகள் ஒரு நொடியில் தோன்றுமா? விந்தையிலும் விந்தைதான். மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. தன் முன் ஏதோ நடப்பது மட்டும் தெரிந்தது. மிக அருகில் அந்த மாயம் வந்து ஜோஆனைக் கண்டாள். மிக அருகில் வந்து ஜோஆனை உற்றுப் பார்த்தாள். அவள் முகத்தில் சந்தோச உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. பின் ஏதேதோ இருவரும் பேசினார்கள். பின் ஹஸனை அவளுக்கு ஜோஆன் அறிமுகப்படுத்தினார். அந்த மந்திரம் ஹஸனை நேரே பார்க்காமல் ஏதோ ஒரு திசையில் பார்த்து ஸலாம் கூறினாள்.

 

பின் ஒரு மணிநேரம் ஏதோ ஒரு அறையில் உட்கார்ந்து ஜோஆனும் விடியலும் பேசிக் கொண்டார்கள். அவனும் அதே அறையில் தான் இருந்தான். ஆனால் எண்ணங்கள் எதுவும் இல்லாத நிலையில். அவளைப் பார்த்தது அவனைக் கேரளத்தின் மலைகளுக்கு ஊடே மழைச் சாரலில் நிற்க வைத்திருந்தது. அடிக்கும் அனல் காற்று தென்றலாய் வந்து தழுவியது. எங்கோ இருந்தான். இன்னதென அறியாத எங்கோ இருந்தான். பின், ஜோஆன் விடைபெற்றார். இவனிடம் ஏதோ பேசினார். இவன் காதில் எதுவும் விழவில்லை. அப்படியே மாயத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். எங்கோ நடப்பதைப் போல் இருந்தது. காரில் ஏறி அமர்ந்தான். விடுதியில் இறங்கினான். விடுதியின் உரிமையாளர் அங்கு நின்றிருந்தார். ஹஸன் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டே அவரைக் கடந்து சென்றான். அவர் ஹஸனுக்கு அருகே வந்து ஏதோ சொன்னார். பின் அவன் சாலை நோக்கித் திரும்பினான். பின்னால் யார் யாரோ அழைப்பதைப் போல் கேட்டது. அவன் திரும்பும் நிலையில் இல்லை. அவன் போக்கில் எங்கோ சென்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வண்டி இடித்தது. வானம் தெரிந்தது. பின்னர் ஏதேதோ முகங்கள் தெரிந்தது. பின்னர் மஸிஹ் தெரிந்தார். பின்னர் காரின் உட்புறக் கூரை தெரிந்தது. பின்னர் ரெட்டினா ஐ டிஸ்ப்ளேவில் தெரிந்து கொண்டிருந்தவை அனைத்தும் 1080p பிக்ஸல் ஆனது. 1080p 720p ஆனது. 720p 480p ஆனது. 480p 360p ஆனது. 360p 240p ஆனது. 240p 144p ஆனது. புள்ளிகள் அதிகமானது. ஏதேதோ தெரிந்தது. எங்கோ கேட்டுக் கொண்டிருந்த சத்தம் உள்வாங்கி உள்வாங்கி இறுதியில் நின்றே போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *