Browsed by
Month: November 2014

ஒளி 222 கிராம்: பகுதி 7

ஒளி 222 கிராம்: பகுதி 7

 

’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’

 

ஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப வேண்டும் என்றால் அனைவருக்கும் முன் கிளம்பிவிடுவான். தன் ஏழு வயது வரை எப்போதும் சிரிப்புடனே வலம் வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு வாழ்கையைப் பற்றி தெரியாது. வலியைப் பற்றி தெரியாது. ஒளியைப் பற்றி தெரியாது. எதைப்பற்றியும் தெரியாது. வாழ்க்கை என்பது வீடும் பள்ளியும். துன்பம் என்பது ஹோம்வொர்க். இன்பம் என்பது சுற்றுலா. பணம் என்பது மிட்டாய் வாங்க பயன்படும் ஒரு பொருள். அது எப்படி வருகிறது என்றெல்லாம் தெரியவில்லை. அநேகமாக அந்த மளிகைக் கடையில் இருந்து தான் வர வேண்டும். தினசரி வாழ்வதற்கு பணம் தேவையில்லை. மளிகைக் கடை போதும். அரிசியும் பருப்பும் அங்கிருந்து தான் வருகின்றன. ஆனால், பிற தேவைகளுக்குப் பணம் தேவை. அது ஒரு வயது வந்துவிட்டால் தானே வரும். வந்துவிடும். உழைப்பின் கசப்பை அவன் உணர்ந்திருக்கவில்லை. இன்பங்களை சுற்றியே வளர்ப்பு இருந்தது.

 

அன்று அவர்கள் நாகூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். வருடா வருடம் நான்கைந்து குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து நாகூர், ஏர்வாடி, ஆத்தங்கரை, பீமா என ஒரு டஜன் தர்காக்களுக்குச் செல்வது வழக்கம். ஹஸன் இச்சமயங்களில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பான். இதற்காக வாரக்கணக்கில் காத்துக்கிடப்பான். பயணத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பான்.

 

தர்காக்களுக்கு சென்று தங்கள் நலனுக்காக வேண்டி வருவதற்குத் தான் பிறருக்கு இந்தப் பயணம். ஹிந்துக்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வருவதைப் போல, இவர்கள் தர்காகளுக்குச் செல்வர்.

 

முதலில் தர்காக்கள் என்றால் என்ன? தர்கா என்பது முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஞானி, அரசர்கள் போன்றோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குப் பெயர். இங்கு தொழுகைகள் நடக்காது. வேண்டுதல்கள் தான் நிரம்பி இருக்கும். மயிலிறகுக் கட்டை கையில் வைத்துக்கொண்டு எதையோ முணுமுணுத்து அமர்ந்திர்ப்பர். அவர்களிடம் சர்க்கரை, ஊதுபத்தி, பணம் போன்றவற்றை கொடுத்தால் ஏதோ கையை ஏந்திப் பிராத்திப்பர். பின் ஆளுக்கொரு தாயத்தைக் கையில் கட்டிவிட்டு மயிலிறகுமாரால் தலையில் இரண்டு மிதமான அடிகளைக் கொடுத்துவிட்டு அனுப்பி வைப்பர்.

 

ஒவ்வொரு தர்காக்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக்கும். சில இடங்களில் அந்த இடத்திற்கேற்றாற் போல் எல்லாம் மாறுபடும். இங்கு செல்லும் அனைவரும் சமாதிகளின் முன்னால் மண்டியிட்டு வேண்டுவர். சிலைகளுக்கு முன் வேண்டாமல் இறந்தவர்களின் முன் வேண்டுவது.

 

தர்காக்களுக்கும் மசூதிக்கும் வேறுபாடு உண்டு. மசூதிகளில் சமாதி எல்லாம் இருக்காது. மசூதிகளில் சிலைகளும் இருக்காது. எதுவுமே இருக்காது. மயிற்பீலி ஆசாமி எல்லாம் இருக்க மாட்டர்கள். நான்கு சுவர்களை கொண்ட ஒரு அறை. அங்கு தொழுவார்கள். மாலை நேரங்களில் அரபி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பர்.

 

வாழ்கையில் ஒளி வேண்டியே அனைவரும் தர்காக்களுக்குச் செல்வர். ஹஸன் செல்வது வேறு காரணம். புதிய வானம், புதிய பூமி, புதிய மொழி, புதிய உணவு, புதுப்புது மனிதர்கள் என ஒரு புதிய உலகைக் காண அவன் ஆவல் கொண்டான். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வதில் அவனுக்கு அலாதிப் பிரியம். அப்படி ஏதோ ஒரு தர்காவின் கடற்கரையில் கிரிக்கட் விளையாடும் போது உருவான பந்தங்கள் சில இன்றுவரை அவனுடன் தொடர்கின்றன. அதுமட்டுமல்ல மதத்தை புரிந்து கொள்ளும் வயதிலும் அவன் இல்லை என்பதே உண்மை.

 

இஸ்லாம் என்றால் என்ன?

 

ஜோஆனைச் சந்திப்பதற்கு முன் இந்தக் கேள்வி அவனுள் என்றும் எழுந்ததில்லை. பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு வெள்ளைக்காரப் பெண், அதுவும் மெத்தப் படித்த பெண் தலையில் ஹிஜாபைக் கவிழ்த்துக் கொண்டு வந்து முன்னால் நின்று ஸலாம் சொன்னால் எப்படி இருக்கும்?

 

சில அலைகளைக் கிளப்பி விட்டிருந்தது. வாழ்கையின் ஒரு பகுதியைத் துளியும் நினைவின்றி நினைவின் பதிவுகளை மறப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், முதலில் அவன் விருப்பம் தன் எட்டு முதல் பதினாறு வயது வரை உள்ள காலகட்டத்தின் நினைவுகளாகத் தான் இருக்கும். சிரிப்பையும் சந்தோசத்தையும் மூச்சைப் பிடித்து சாகடித்த காலம் அது. ஆனாலும் அவனுக்குள் மதிப்புகளையும் கொள்கைகளையும் ஆழமாக வேரூன்றச் செய்த காலமும் அதுதான். ஆனால் இதன் சுகத்தைவிட அதன் துன்பம் மிகைத்து நிற்பது தான் அவனை இப்படி யோசிக்கச் செய்கிறது. மறக்கச் சொல்கிறது.

 

அனால் ஒன்று இத்தனை வருடத்தில் அவன் இஸ்லாம் பற்றி எதுவும் யோசித்ததில்லை. அல்லது யோசிக்க முற்பட்டதில்லை. ஏன் இப்போழுது கூட அது பற்றி எல்லாம் அவன் பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த ஜோஆன் தான் இப்படி குழப்பிவிட்டுப் போயிருக்கிறார். அதெப்படி சாத்தியம். தத்துவங்களையும் அவற்றின் அவசியத்தையும் உணர்ந்து அவற்றுடன் கலந்து கண்டடைந்து நிறுவிய உண்மைகளின் முன் இந்த இஸ்லாம் நிற்கிறதா? அதற்கு அவ்வளவு தகுதி உண்டா?

 

சரி, இஸ்லாம் என்றால் என்ன? இதுவரை அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்.

 

ஹிந்து மதம், கிருஸ்தவம் போல அது ஒரு மதம். பல வருடங்களுக்கு முன் அரேபியாவில் வாழ்ந்த முஹம்மத் எனும் ஞானி தோற்றுவித்தது. அவர் மன்னராகவும் இருந்திருக்கிறார். அவர் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. அவருக்கு உருவம் எல்லாம் யாரும் வரைந்து வைக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்றால் அல்லாஹ்வைக் கும்பிடச் சொன்னார். அல்லாஹ் என்பது இறைவன். உலகை, நம்மை படைத்தவனாக கருதப்படுபவன். அல்லாஹுக்கு உருவம் கிடையாது. புகையாகவோ ஒளியாகவோ இருக்கவேண்டும். அப்போது தான் உருவம் இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ்வை எல்லோரும் அவன் இவன் என்று தான் கூப்பிடுவார்கள். அது எந்த வகையிலும் அவன் மீது மரியாதைக் குறைவை குறிக்கவில்லை. அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எதுவும் இல்லை என்று கூறுவர். அரபியில் அல்லாஹ் என்றால் பால், உருவம் எதுவும் இல்லாத இறைவனைக் குறிக்கும் என்பர்.  அரபியில் அதேபோல் அவர், இவர் போன்ற மரியாதை வார்த்தைகள் எல்லாம் கிடையாது. அதனால் தமிழிலும் அவர் இவர் என்று பெயர்க்காமல் அவன் இவன் என்றே அழைக்கின்றனர்.

 

முஸ்லிம்கள் இந்த அல்லாஹ்வை பள்ளிவாசல்கள் என்று அழைக்கப்படும் மஸ்ஜித்களில் தொழுவர். ஐந்து வேளை பாங்கு சொல்லி தொழுவதற்கு அழைப்பர். பெரும்பாலும் வெள்ளைத்தாடி முளைத்த பெரியவர்கள் தான் வேலை வெட்டி இல்லாததால் ஐந்து வேளையும் தொழுகச் செல்வர். மற்றவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் அப்பக்கம் ஒதுங்குவர்.

 

இதுபோக தர்காக்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமை அரேபியாவில் இருந்து இங்கு எடுத்து வந்த மன்னர்கள், ஞானிகளின் அடக்கத் தலங்கள் இவை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இங்கு சென்று வருவர். எதையாவது வேண்டிக்கொண்டு, வேண்டுதல்களுடன் சென்று மொட்டை அடித்தோ இல்லை வேறுவகையிலோ காணிக்கை செலுத்திவருவர். ஹிந்துக்கள் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கி மொட்டையடித்துக் காணிக்கை செலுத்துவதைப் போல் தான் இதுவும். என்ன சாமிக்கு பதில் சமாதி, விபூதிக்கு பதில் சந்தனம். எல்லாம் ஒன்று தான். பெயர் மட்டும் வேறு வேறு. வடி கட்டிய மூட நம்பிக்கை. டெல்லியில் பல வருடம் தங்கியதில் அங்கு இது இன்னும் அதிகமாக இருப்பதை உணர முடிந்தது. முக்குக்கு ஒரு தர்கா என்கிற ரீதியில் வட இந்தியா காணப்படுகிறது. இங்கு ஹிந்துக்களும் வழிபாடு நடத்துகிறார்கள். சமூக நல்லிணக்கம் என்று ஊர் கூறுகிறது. பகுத்தறிவில்லாமல் இது போன்ற மூடப் பழக்கத்தினால் சமூக நல்லிணக்கம் ஏற்படாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதில்லை.

 

ஹிந்துக்கள் வேதங்களின் பின்னால் சென்றால் மட்டுமே உண்மையான ஹிந்து மதத்தை புரிய முடியும். உண்மையில் ஹிந்து மதம் என்பதே ஒரு பொதுப் பெயர் தான். இந்தியாவின் பல கருத்துகளையும் கொள்கைகளையும் ஒன்றாக கோர்க்கப் பயன்படுத்தும் சொல்லாடல் தவிர வேறில்லை. முஸ்லிம்கள் இப்படி சிலை வழிபாட்டைப் போன்ற சமாதி வழிபாட்டையும் கோவில்கள் போன்ற தர்காக்களையும் பின்பற்றுவதற்குப் பதில் தியானங்களையும் தேடல்களையும் பின்பற்றினால் தேவலம். எங்கே ஹிந்துக்களுக்கே தியானம் என்பது என்னவென்று தெரியவில்லை. இதில் முஸ்லிம்கள் எங்கு போய்?

 

இஸ்லாமில் இரண்டு பெருநாள்கள் உண்டு. ரம்ஜானும், பக்ரீதும். முப்பது நாள் சூரியன் உதிக்கும் முன்னிருந்து மறையும் வரை நோன்பு வைத்து கொண்டாடப்படுவது ரம்ஜான். ஆடொன்றை பலி கொடுத்து கொண்டாடுவது பக்ரீத். இந்த பக்ரீத் ஹஜ்ஜை தொடர்ந்து வரும். ஹஜ் என்பது மக்காவுக்கு சென்று வருவது. மக்கா என்பது இந்த தர்காக்களின் தலைமை இடம்.

 

இன்று உலகத்தில் அதிக அளவு தீவிரவாதத்தில் முஸ்லிம்கள் தான் ஈடுபடுகின்றனர். ஜோஆன் சொல்கிறபடி குர்ஆன் என்ன சொல்கிறதென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது சொல்லாமல் இவர்கள் அதனை தூக்கி கையில் வைத்துக் கொண்டு வீடியோ ரிலிஸ் செய்ய மாட்டார்கள்.

 

இன்றுவரை அவன் மனது இஸ்லாம் குறித்து வரையும் சித்திரம் இதுதான். ஜோஆன் இரண்டு புத்தகங்களை கையில் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பாவம் அவனுக்கு தெரியாது, அந்தப் புத்தகங்கள் அவனது வாழ்கையை தலைகீழாய் மாற்றப் போகிறதென.

 

 

வீட்டைவிட்டு ஓடிப்போகும் பொழுது அவருக்கு சரியாக இருபத்தியோரு வயது. அந்த வயதில் அவருக்கென்ன கஷ்டமோ?

 

என்னங்க இது இருபத்தியோரு வயதில் என்ன கஷ்டம்னு கேக்கிறீங்க? இன்னைக்கு இருபத்தியோரு வயசு இளவட்டத்த நம்பித் தான் பல வீடே இருக்கு. படிப்பு, ப்ளேஸ்மண்ட் மண்ணாங்கட்டினு அவனவனுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கு. இப்பிடி சாதாரணமா சொல்லிபுட்டீங்க.

 

பாஸ். எதுக்கு கோபம்? ம்? இன்னைக்கு இருக்கிற இருபத்தோரு வயசு பையன பத்தி பேசியிருந்தா, அவனுக்கு என்ன கஷ்டம் இல்லனுல கேட்டிருப்பேன். இது வேறங்க 1980ல வாழ்ந்த தலைமுறையில ஒரு இருபத்தியோரு வயது இளைஞன பத்தினது.

 

சொந்தமா கிராமத்தில வீடு. முப்போகம் நல்லா விளையும் நிலம். நாலஞ்சு மாட்டு மந்தைக. பத்து பதினஞ்சு ஆட்டுக் கூட்டம். ஒரு மரத்தில அடையிற அளவுக்கு கோழி குஞ்சுக. இப்படி நிம்மதியா கிராமத்தில வாழ்ந்திட்டிருந்த ஒரு தகப்பனோட இருபத்தியோரு வயசு பையன் அவன். கூழோ கஞ்சியோ வயிறுமுட்டக் குடுச்சிட்டு கலப்பைய எடுத்து நிலத்த இளம முறுக்கோட நாலு இழு இழுத்தோமோ, வீட்டுக்கு வந்து தூங்கினோமானு இல்லாம, டவுனுக்கு போயி சினிமா பாக்கிறது, ஹோட்டல்ல திங்கறது, சீகரட் கொளுத்துரது, அப்படியே ராத்திரிக்கு மப்பும் மந்தாரமுமா வீட்டுக்கு வந்து படுக்கையப் போடுறதுனு சுத்தின பையன் அவன். அவன் என்ன பண்ணுவான். இப்படி கிராமத்துக்குள்ளயே கெடந்தா உருப்பட முடியுமா? நாளைக்கு அவன் தலைமுறையும் ஆடு மாடு பத்திக்கிட்டு திரிய முடியுமா?

 

அதான் பையன் யோசிச்சான். நான் டவுனுக்குப் போயி நாலு எழுத்து படிக்கப்போறேன்னு சொல்லிட்டு ஏற்கனவே நாலு வருசத்த கடத்திட்டான். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போவல. கலப்பைய தூக்கிட்டு கிளம்பினா யாரும் அவன எதுவும் கேக்கப் போறதில்ல. அடப்போங்கப்பா, கலப்பையில கை வைக்கவா இத்தின வருஷமா டவுன் பக்கம் போயி படிச்சோம். ஒரு வாத்தியாராவோ, டாக்டராவோ, வக்கீலாவோ ஆனாத் தானே நல்லா இருக்கும்.

 

அங்க தான நம்ம பையனுக்கு பிரச்சனையே. யாருகிட்டயும் அவனுக்கு கைகட்டி வேல பாக்க வேற பிடிக்காதே. என்ன செய்ய? படிச்சதுனால கலப்பையும் தொடமாட்டேன். காலணானாலும் கைகட்டி ஒருத்தன் கிட்ட வாங்கவும் மாட்டேன். என் சொந்தக் காசா இருக்கனும். அதுக்கு? நீங்க தானே என்ன பெத்திங்க. கிழக்க இருக்கிற தோட்டத்த வித்துட்டு எனக்கு துட்டு குடுங்க. நான் எங்கிட்டாச்சும் கண்காணத திசையில போயி யாவாரம் ஆரம்பிச்சு பொழச்சுக்கிறேன்.

 

கண்காணாத தெசைக்கு போற நாயி, சொல்லிட்டுப் போனா என்ன? சொல்லாம ஓடினா என்ன? அதுக்கெதுக்கு நான் காசு குடுக்கனும்? சொந்தக்கால்ல நிக்க வேண்டியது தானே?

 

இந்தப் பேச்சக் கேட்டுட்டு சும்மாவா நிக்கும் இருபத்தோரு வயசு எள ரத்தம். போடா உன் சொத்துமாச்சு மசுருமாச்சுனு ஒரே போடா போட்டுட்டு வீட்டவிட்டு ஓடிப்போச்சு.

 

ஓடின காலு அப்படியே வடக்குப் பக்கமா ஓடி அரபிக்கடல்ல ஓஞ்சது. நின்னு பாத்தா பாம்பே. ஆத்தாடி எம்மாம்பெரிய ஊரு. காரென்ன? பஸ்ஸென்ன? வண்டியென்ன? சொர்க்கம்டா இது. ஒரு வாழ்க்கைய வாழ்ந்து பாத்திர வேண்டியது தான். முடிவோட அந்த இருபத்தியோரு வயசு அங்கயே டேரா போட்டது. என்னத்தையோ அங்க தமிழ் பேச ஆளிருந்ததால வேமா நீச்சலடிச்சு ஒரு நல்ல பாறையா பாத்து பிடிச்சுக்கிச்சு. அப்படி பிடிச்ச பாறை ஒரு பழம்பாறை. பாம்பேல கள்ளச் சாராயம் காச்சிறதுல பழந்தின்னு கொட்ட போட்ட பாறை.

 

பாறைகிட்ட வேலைக்கு சேர்ந்த நம்ம இருபத்தியொன்னு பல வருஷமா அதோடவே ஒட்டிக் கெடந்துச்சு. பல வருஷமாகியும் இன்னும் இருபத்தியொன்னு தானானு கேக்கப்படாது. நமக்கு இந்த பகுதி முடியிறவரைக்கும் இருபத்தியொன்னு தான். அப்படி சேர்ந்த இருபத்தியொன்னுக்கு வேல, தண்ணிக்கு மண்டவெல்லம், பேட்டரிகட்டை, சுக்கு, மிளகு, திப்பிலினு தேவப்பட்ட சாமானெல்லாம் வாங்கிக் குடுக்கிற வேல தான்.

 

மண்டவெல்லம் சுக்கெல்லாம் போட்டு செய்யக்கூடாத வேலையெல்லாம் செஞ்சு அப்படி இப்படி தெளிஞ்சாப்பில இறக்கினோம்னா ரெடி. பாயாசம் இல்லப்பு. இனிக்க இனிக்க நம்ம கள்ளச்சாராயம். காச்சி வைக்கிறது மட்டும் தான் பாறையோட வேலை. எடுத்திட்டு போயி விக்கிறதுக்கெல்லாம் கூட்டம் கேகேனு நிக்கும். ஒரு ட்ரம் பத்து ரூவானு எடுத்துட்டு போயி குடம் அஞ்சு ரூவானு கடைகளுக்குச் சப்ளை செஞ்சிட்டு புட்டி ஒரு ரூவானு விக்கிறதெல்லாம் அவனவன் பாடு. பாறைக்கு இது தான் வேல. என்ன கெடச்சிடப்போவுது சாராயத்திலனு சலிச்சுக்காதிங்க. இது மழை பேஞ்சா ஓஞ்சு போற சர்பத் யாவாரமில்ல. மனிசங்க சாவுவீட்லயும் குடிப்பானுங்க, சடங்கு வீட்லயும் குடிப்பானுங்க, ஏன் சாமிகும்பிடற பேரிலயும் குடிப்பானுங்க. அதுனால மழையோ புயலோ இடியோ காத்தோ என்னைக்கும் சாராயத்தோட பக்கம் வீசிறது கொறையாது. சும்மா கின்னுனு நிக்கும்.

 

அதான பாத்தேன். இருபத்தியொன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாத்துச்சு. கையிக்குனு எதுவும் சேக்கல. நல்லா சுத்தினமா தாம் தூம்னு தீட்டினமானு வாழ்க்க ஓடிச்சு. அப்பதான் அந்த பாறையும் புட்டுக்கிச்சு. மண்ணா போயி தண்ணீல கரஞ்சிச்சு. இருபத்தியொன்னுக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் வெளங்கள. ஒலகம் புரியல. இருந்தாலும் தளருமா என்ன?

 

அப்படியே தாதர்ல கடலோரத்தில இருந்த சாய்பாபா கோவில்ல கர சேந்துச்சு. அப்படி ஒருநாள் அந்தக் கோவில் பக்கம் வந்த அமண சாமி ஒன்னு கைய நீட்ட, நெத்தீல விபூதியோட அதோட கெளம்பிச்சு நம்ம இருபத்தி ஒன்னு. ஊர் ஊரா சுத்தல். ரொட்டியோ சப்பாத்தியோ நல்லா அரவவுத்துக்கு மேஞ்சிட்டு கால்போன போக்கில ஒரு வாழ்க்க. டெய்லி ரெண்டு வேள கஞ்சா. அப்படியே தியானத்தில உக்காந்தா காலைல தான் எந்திரிக்கிறது. உண்மையில தியானிச்சதா இல்ல தூங்கினதானு தெரியல. ஆனா ஒன்னு, நம்ம இருபத்தி ஒன்னுக்கு இப்படித் தான் ஞானம் கெடச்சது. அமண சாமி மூலமா ஒரு ஃபகிர்கிட்ட அறிமுகமாகி, ஃபகிரோட ஃபகிரா கொஞ்ச காலம் ஹாஜி மலங், ஹாஜி அலி, அஜ்மிர், கஷ்மிர்னு சுத்திச்சு இருபத்தொன்னு. இப்ப கஞ்சாவெல்லாம் கெடையாது. ஃபகிர்பாய்கிட்ட அதெல்லாம் எடுபடாது. வயிறுமுட்ட பிரியாணி கிடைக்கும். அவ்ளோதான். அந்த மயக்கத்திலயே கிக் ஏத்திக்கிற வேண்டியது தான். இப்படி பல நாள் ஊர் உலகத்த தெரிஞ்சிக்கிட்ட இருபத்தியொன்னுக்கு ஒருநாள் ஒரு ஆசை வந்துச்சு. பழச்செல்லாம் ஞாபகம் வந்துச்சு. ஒருக்கா வீட்டுபக்கம் தான் போயிட்டு வருவோமேனு.

 

இருபத்திஒன்னு என்னிக்கு யார்கிட்ட கேட்டுச்சு. நேரா விறுவிறுனு நடையக் கட்டுச்சு. ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு ஒரு மொழிப் பட்டாளத்தோட தமிழ் நாட்டுக்குள்ள எட்டிப்பாத்துச்சு. எட்டிப்பாத்தா ஒரே ஆச்சரியம். ஒரே பிள்ளையா வளந்த இருபத்தி ஒன்னு வீட்டுக்குள்ள பத்து வயசு பிள்ள ஒன்னு இருந்துச்சு. பொம்பளப் பிள்ள. இருபத்தியொன்னு வீட்டவிட்டு ஓடிப்போயி திரும்பி வந்த வயசு அந்த புள்ளைக்கு. தங்கச்சியப் பாத்ததில கடந்து வந்ததெல்லாம் மறந்த நம்ம இருபத்தியொன்னு அங்கயே தங்கிடுச்சு. ஓடுகாலியா மாறி ஊரூரா திரிஞ்ச இருபத்தியொன்னுக்கு ஒருவழியா ஒரு எடத்தில நோகாம ஒக்காந்து ஊர் மேயறதோட அரும புரிஞ்சிச்சு. என்ன புரிஞ்சு என்ன செய்ய? இது ஊருக்கு வந்த மறுமாசமே அவுங்க டாடி மண்டையப் போட, சோழி முடிஞ்சிச்சு. சம்பாரிச்சதெல்லாத்தையும் அவுங்க டாடி ஓடி ஆடி செலவு செஞ்சு எல்லாத்தையும் காலியாக்கிட்டு ‘நான் உனக்கே டாடிடா என் பேடி’ என டேக்கா காட்டி போயிருப்பது இப்ப தான் நம்ம இருபத்தி ஒன்னுக்கு உரச்சது. என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? கையில ஒரு பைசா கெடையாது. இருக்கிறது ஒரு வீடு தான். ரைட்டுன்னு எல்லாத்தையும் வித்திட்டு அம்மாளையும் தங்கச்சிக்காரியையும் கூட்டிக்கிட்டு தஞ்சாவூரு வந்துச்சு. அங்கிட்டு பசுபதி கோயிலப்பக்கம் ஒரு குடிசைய வேஞ்சு ஒரு மளிகக் கடையில வேலைக்கு சேந்துச்சு. இந்த நேரத்தில கலியாணம் வேற. எதுக்கு? வேறெதுக்கு துணி தொவைக்கவும், சமச்சுப் போடவும் ஆளில்லாம இருந்ததால தான்.

 

இப்டியே போன இருபத்தி ஒன்னு சொந்தமா ஒரு மளிக கடைய ஆரம்பிச்சது. அது பிச்சிக்கிட்டு ஓட ஆரம்பிச்சது. தன்னோட கடையில வேல பாத்த ஒருத்தனுக்கே தங்கச்சிய கட்டி வச்சது. கடைசியா இருபத்தியொன்னுக்கு நாப்பத்தி சில்ற வயசில ஒரு கொழந்த பொறந்துச்சு. ஹஸன்னு பேர் வச்சாச்சு.

 

இது தான் ஹஸனோட டாடி இருபத்தி ஒன்னோட கத. இருபத்தி ஒன்னு நாப்பத்தி சில்லறையான கத. இந்த பகுதிய படிச்சு உங்களுக்கு எப்படி தல சூத்துதோ அதே மாதி அத சுத்தல்கள்ல விட்ட கத. இன்னொரு முக்கியமான விசயம் நம்ம கதையோட பூர்வ கத.

 

 

 

என்ன நடந்ததென்றே நினைவில்லை. அல்லது நினைவில் கொள்ளுமளவிற்கு  எதுவும் பெரிதாக நடக்கவில்லை.

 

காலையில் எட்டரை மணிக்கு எழுந்தோமா, ஒன்பது மணி வகுப்பிற்கு அரைமணி நேரத்தில் அடித்துப் பிடித்து  எப்படியாவது தூக்கம் கலையாமல் சென்று சேர்ந்தோமா, அங்கு போய் ப்ரொஃபஸரின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூக்கத்தைத் தொடர்ந்தோமா, கொஞ்சம் டெரர் ப்ரொஃபஸராக இருந்தார் என்றால் வகுப்பைக் கட்டடித்துவிட்டு காண்டீனில் எதையாவது விழுங்கினோமா, அப்படியே மதியம் வரை அரட்டையட்டித்துவிட்டு  உணவு விடுதிக்கு சென்று வயிறு முட்ட உண்டோமா, மீண்டும் கல்லூரிக்கு வந்து உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைப் போல் இன்னொரு தூக்கத்தைப் போட்டோமா, நான்கு மணி வாக்கில் மீண்டு எழுந்து அறைக்குச் சென்று பாடம் அல்லாத வேறு சில பொதுப் புத்தகங்களை தொட்டோமா, நள்ளிரவு இரண்டு மணிவரை தொடர்ந்தோமா இடையிடையே தொட்டுக்கொள்ள இணையத்தை துலாவினோமா என தினமும் ஒரே மாதிரி சென்று கொண்டிருந்த வேளை அது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உடலில் சூடாக பாய்ந்த அந்த இரத்தம் இங்கு கூலண்ட் ஊற்றி குளிர்விக்கப்பட்டிருந்தது. போராட்டம், புரட்சி, எதிர்ப்பு, அதிருப்தி என்பதெல்லாம் இங்கு உணரக் கூட யாரும் தயாராய் இல்லை. காதல், முத்தம், பித்தம், டேட்டிங், மேட்டிங் என இங்கு இளைஞர்கள் மற்றொரு திசையில் சென்று கொண்டிருந்தனர். இருவர் இருவராக கூட்டு சேரும் இவர்களிடம் ஒற்றுமை கிற்றுமை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பேசினாலும் புரியாது. டெஸ்டோஸ்டீரோன் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் அது.

 

இங்கு ஹஸன் வந்து சேர்ந்தது பெரிய கதை. பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. வழக்கம் போல் தான். பத்தாம் வகுப்பில் நடந்த அதே கதை தான். கை நிறைய மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. 96% மதிப்பெண்கள். அவனால் நம்பவே முடியவில்லை. என்ன செய்ய. சில நேரங்களில் இப்படித்தான் ஏதாவது நடந்து தொலைத்து வாழ்கைப் பாதையையே மொத்தமாக மாற்றிவிடுகிறது.

 

உண்மையில் இப்படி ஹஸன் தன் மனதுக்குள் தன்னையே குறைவாக மதிப்பிட்டிருந்தான். உண்மையில் அவன் பெற்ற மதிப்பெண்கள் ஒன்றும் தாமாக வந்து விடவில்லை.இவனது உழைப்பும் இல்லாமல் இல்லை. ஒருமுறை ஒளியில் இருந்தவனை ஒளியின் ஒளி தன் வசம் ஈர்த்துவிட்டது. தன்னை அறியாமலே ஒளியை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். ஒளியும் அவனை நோக்கி நடந்து வரத் துவங்கியிருந்தது.

 

எல்லாம் ஒரு கனவு போல் முடிந்தது. இவ்வளவு நாளாய் தொடர்பில் இருந்த தோழர்களை விட்டு பல மைல் தூரத்தில் இருந்த கோயம்புத்தூரில் அவனுக்கு இஞ்சினியரிங் டிகிரி கிடைத்திருந்தது. வேறு வழியில்லை. சேர்ந்து தான் ஆகவேண்டும். இது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. கிளம்பிவிட்டான். கை நிறைய கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரிக்குள்ளே நு­­ழைந்தான்.

 

கனவுகளா? அதுவும் கல்லூரியிலா? தம்பி நீங்க படிக்கிறது இஞ்சினீரிங் காலேஜ். இது தமிழ் நாடு. செத்த  எந்திரிக்கிறீங்களா? கனவுகளை கைவிட்டுவிட்டு காலத்தில் கவனம் செலுத்துவதற்குள் காலம் கடந்துவிட்டது. அது என்று யாருக்காக காத்திருந்தது?

 

ஐந்து வருடமும் அப்படித்தான். ஆமாம் அரியர் எழுதிய ஒருவருடம் தனி. என்ன நடந்ததென்றே தெரியைவில்லை. தீடீரென ஒரு நாள் முடிந்தது. கையில் கனவுகளும் இல்லை. கைகொடுக்க தோள்களும் இல்லை. நடுக்காட்டில் கண்ணைக்கட்டி விட்டாற் போல் இருந்தது. ஒளி அகன்றுவிட்டது. தத்துவங்களின் பின்னும் கொள்கைகளின் பின்னும் போன போது ஒளி தானாய் தொடர்ந்தது. இப்போது வாழ்கையின் பின்னால், ஒளியின் பின்னால் விரட்டிப் போனால் அகன்று நிற்கிறது. என்ன உலகம் இது. ஒளியற்ற நிலை மீண்டும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

 

 

கேட்டவுடன் கிடைக்காமல் இருப்பதில் மட்டும் மன வருத்தம் இல்லை.  கேட்காமல், கேட்டதற்கு மேல் கிடைப்பதிலும் சில சமயம் மன வருத்தம் வரத்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்தால் புரியும். இல்லை புரிய இன்னும் சில பக்கங்களைத் தாண்ட வேண்டி இருக்கும்.

 

வீட்டைவிட்டு வெளியேறி ஏழு வருடம் ஆயிருந்தது. இரண்டு வருடம் நாமக்கல். ஐந்து வருடம் கோயம்புத்தூர். ஏழு வருடமும் வீட்டின் பக்கம் எட்டிப்பார்க்காமல் இல்லை. தீபாவளி பொங்கல் ரம்ஜான் பக்ரீத் ந்யூஇயர் என அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் தான். ஆடிக் களித்து செல்வது வழக்கம் தான். அப்படி வந்து போகும் போதெல்லாம் உலகம் அவனைச் சுற்றி இயங்குவதும் வழக்கம் தான். பல நாள் கழித்து வீட்டிற்கு வந்த பிள்ளையை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் வழக்கம் தான். புன்னைகயால் புண்களை மூடி உபசரிப்பது வழக்கம். வீட்டில் என்ன நடக்கிறதென்பதே கிட்டத்தட்ட தெரியாத நிலை. ஒரே பிள்ளை அவனுக்கு ஏதற்குத் தேவையில்லாத சங்கதிகள், படிப்பில் மட்டும் அவன் கவனம் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இப்படி இருப்பதும் வழக்கம் தான்.

 

இப்பொழுது அப்படியில்லை. வழக்கம் மாறவிருக்கிறது. படித்து முடித்து வீட்டிற்கு வந்தாயிற்று. வேலை என்றெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. கிடைத்தாலும் போகும் மனநிலையில் தற்போதைக்கு இல்லை. கல்லூரிக் கலவரங்களை மறந்து கொஞ்ச காலம் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டுமெனப் பட்டது. ஏழாண்டுகள் விட்டதைக் கூடிய விரைவில் எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் நினைப்பதைப் போல் எதுவும் நடப்பத்தில்லை. எதையும் நடப்பதைப் போலவும் நாம் நினைப்பதில்லை. வீடு உண்மையில் நிம்மதியான இடம் தானா? பரிசீலனை செய்து பார்க்கவேண்டிய தருணம் வந்தது. தானகத் தான். ஆமாம், இதனை தேடி வேறு செல்வார்கள்.

 

முதல் மாதம் அருமையாகச் சென்றது. அப்படியே காலார மதகடி பஜாரின் பக்கம் சென்று பாலத்தில் ஏறி அகண்ட காவிரியைக் கிளை கிளையாய் கண்டு உண்டு குளித்து மயங்கிக் களித்து தோழர்களுடன் திரும்பினால் அன்றைய நாள் போனதே தெரியாது. அதற்கு மேலும் போரடித்தால் கும்பகோணமோ தஞ்சாவூரோ சென்று வர வேண்டியது தான். ஊரின் பெயரே பாதிக்கதை சொல்லும். அய்யம்பேட்டை. அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலிய பெருமாள் சந்திரன். அதே அய்யம்பேட்டை தான். ஊரின் ஒவ்வொரு துகளும் பெயருக்கு சான்று கூறும். ஹஸனது வீடு, முற்றம் வைத்துக் கொள்ளை வைத்து கட்டப்பட்டது. கொள்ளையில் பலா மரங்களும், தென்னை மரங்களும், வாழை மரங்களும், அணில்களும், பாம்புகளும் அதிகம் இருக்கும். கால் கட்டைவிரலால் கீறினால் தண்ணீர் கொப்பளிக்கும் மண்ணைக் கொண்ட பூமி. மொட்டை மாடிக்குச் சென்று ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு தூங்கினால் எழுந்திரிக்கவே மனம் வராது. ஒரு கொசுவைக் கூட பார்க்கமுடியாது. வாழ்க்கையை வாழ்வது எப்படி என வாழத் தெரியாதவர்கள் ஒரு நடை சென்று பார்த்து வரலாம் அப்படியொரு இடம். மாதம் மும்மாரி பொழியும் சுரங்கம். சோழர் காலத்தில் காட்டுயானைகளுக்கு ஊட்டிவிடுமளவிற்கு  நெல் விளைந்ததாம். சொல்வார்கள்.

 

நாமக்கல் இதற்கு நேர் எதிர். எத்திசை திரும்பினும் நீக்கமர நிறைந்திருக்கும் வெயிலும், கண்களைக் கூசச் செய்யும் தூசும், ஆங்காங்கே கழட்டி தைக்கப்படும் லாரிகளும், ஊரின் நடுவே மொழுமொழுவென நிற்கும் தக தக பாறையும், அதற்கு உவமைபோல் ஊருக்குள் அலையும் வழுக்கைத் தலைகளும், பேருந்துகள் தீண்டத் தயங்கும் நிலையங்களும், குறிப்பாக தமிழகத்திலேயே அதிசயமாக விற்கப்படும் வாத்துக் கறியும், முதல் முறை உண்பவர்களுக்கு அது கொடுக்கும் வயிற்று வலியும் சொல்லிப் புரியவைக்கும் அளவை விஞ்சியவை.

 

கோயம்புத்தூர் அப்படியில்லை. வலிக்காமல் தடவிக்கொடுக்கும் படியான வெயில், அடித்தாலும் அழுகாமல் செல்லும் அம்மாஞ்சி மக்கள், சொல்லிக்கொள்ளும் படியாக ஒரே ஒரு அவினாசி ரோடு, குடிசையிலும் கோபுரத்திலும் குடி கொண்டிருக்கும் தொழில் தொழில் தொழில், கண்ணுக்கு குளிர்ச்சியாக ஊர் நிரம்பி வழியும் அளவிற்கு கலர் கலர் இளசுகள், எங்கும் எதிலும் அவசரம், சேரிகளை மறைத்து அகண்ட மார்புகளுடன் ஏதேதோ பெயர் தாங்கிய கட்டிடங்கள், ஒரு ஊர் அளவிற்கு கட்டப்பட்ட கொடீசியா கண்காட்சி மைதானம், எட்டிப்பார்த்தால் எக்காளமிடும் கேரளம், முட்டிப்ப்பார்த்தால் மோதி நிற்கும் ஊட்டி, பருகப் பருகத் திகட்டாமல் தித்திக்கும் சிறுவாணி, ஜெர்மன் புகழ்பாடும் எந்திரங்கள், என்ரரரரரர கண்ணு என தமிழை ஜெர்மன் போல் இழுக்கும் நாவுகள்.

 

ஊருக்கொரு வசியம். ஆளுக்கொரு செய்கை. ஊரையும் மக்களையும் கொண்டு பல காவியம் எழுதலாம். யாருக்கும் எப்பொழுதும் வெறுக்காது. சரி அய்யம்பேட்டைக்கு வருவோம்.

 

ஊர் செழிப்பாக இருந்தால், வியாபாரமும் செழிப்பாகத் தானே இருக்கும். ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி பசுபதிகோவில் வந்த இருபத்தியொன்றுக்கு வாழ இடமளித்தது இந்த அய்யம்பேட்டை தான். இருபத்தியொன்று இதுவரை ஹஸனுக்கு முன்னுதாரனமாகத் தான் இருந்துள்ளார். என் தந்தையைப் போல் தான் ஆவேன் என வெளிப்படையாக பிரகடனப்படுத்தாத குறைதான். தந்தையை போல் எல்லா விசயத்திலும் வரவேண்டுமென்பது அவன் பேரவா.

 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏதேதோ யோகாசனங்களை செய்து கிளம்புவதில் இருந்து இரவில் குளித்து தியானித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும் வரை அவரது ஒவ்வொரு செயலையும் அடிபிறழாமல் திரும்பச் செய்வான். அவ்வளவு தேர்ந்த மனிதர் அவர். பூஜ்யத்திலிருந்து தனக்கான ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டவர். தன் தாயையும் தங்கையையும் பார்த்துப் பார்த்து பார்த்துக்கொண்டவர். என்ன தன் மனைவி விசயத்தில் அவர் எப்போதும் அலட்சியமாகத் தான் இருப்பார். அது ஒன்று தான். அதுவும் இந்த ஏழு வருட இடைவெளியில் சரியாகிப் போனது போல் தான் தெரிகிறது. ஒரு மாதமாக இருக்கிறேன் அம்மா இன்னும் புலம்பவில்லை. நிச்சயம் முன்னெப்பொழுதும் பார்க்காத அளவிற்கு மாறியிருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள் புதிதல்ல. எதிர்பார்க்கா எதிர்ப்பக்க திருப்பங்கள் தான் புதிது.

 

அன்றிரவு நடந்த அந்த நிகழ்விற்குப் பின் மொத்தமாக மாறிப்போனான் ஹஸன். வாழ்க்கையில் யாரைப் போல் வரவேண்டும் என கனவு கண்டிருந்தானோ, அவரைப் போல் நிச்சயம் வரக்கூடாது என முடிவு கட்டிய ஒரே இரவது. தெளிந்த இரவு. ஒளி பொருந்திய இரவு. இரவற்ற இரவு.