Browsed by
Month: October 2014

ஒளி 222 கிராம்: பகுதி 6

ஒளி 222 கிராம்: பகுதி 6

’திஸ் இஸ் ஜோஆன் ஜோன்ஸ். டிசைனிங்ல இருக்காங்க. ரொம்ப பிரில்லியண்ட் லேடி. ’ பாலா அறிமுகப்படுத்தினான்.

 

ஜோஆன். முப்பத்தைந்து வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்துவிடும் தூய ஆங்கில இனம் என. எதிரே ஹிஜாப்புடன் நின்றார்.

 

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ஜோஆன் ஹஸனை நோக்கிக் கூறினார்.

 

‘வ அலைக்கும் ஸலாம்’ திணறித் திணறி பதில் கூறினான் ஹஸன். இதுவரை தன் வாழ்நாளில் சில தவிர்க்க இயலாத சமயங்களைத் தவிர இந்தத் தொடரை அவன் பயன்படுத்தியதில்லை. இன்று பயன்படுத்தியதற்கு காரணம், குழப்பம். வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி இஸ்லாமிய தோரனையில் உடையணிந்து சலாம் வேறு சொல்கிறாள். பாலாவை புதிராகப் பார்த்தான்.

 

மூவரும் ஹஸனது அறைக்கு அருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர். ஹஸனுக்கு வேலை துவங்கியிருந்தது. அடுத்த மாதம் முதல் தீவிரமான ப்ராஜக்ட்களில் இறங்கியாக வேண்டும். தி க்ரீனின் ப்ராஜக்ட்கள் எல்லாம் மிகவும் தீவிரமானவை. நாளும் பொழுதும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும் உடன் வேலை செய்யத் தகுதியானவர்களை தெரிவு செய்யவும் இந்த மாதத்தை செலவு செய்யமாறு அவனுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

‘ஐ அண்டர்ஸ்டாண்ட். ஜோஆனோட  ஹிஜாபும் சலாமும் தானே இந்த குழப்பத்துக்கு காரணம்?’ சிரித்துக் கொண்டே கேட்டான் பாலா.

 

‘ம் அப்டிலாம் இல்ல பாலா’ எனத் துவங்கி சில பொருந்தா வசனங்களை உதிர்த்துவிட்டு அவசர அவசரமாக‘ஆமாம் பாலா’  என மழுப்பிக் கொண்டே முடித்தான்.

 

அதற்குள் ஜோஆன் புன்னகையுடன் சொன்னார் ‘ஐம் முஸ்லிம்’

 

‘முஸ்லிமா எப்படி? யூ சீம் டு பி அ வைட்’

 

‘யா. நான் இஸ்லாம இப்ப தான் ஏத்துக்கிட்டேன். டூ இயர்ஸ் ஆகுது’ கடகடவென நொடிப்பொழுது ஆங்கிலத்தில் முடிந்ததார்.

 

‘வை? இஸ்லாம்?’

 

‘ஹஸன் எதுக்குனு மட்டும் கேக்காதீங்க. விளக்கம் குடுக்க ஆரம்பிச்சாங்கனா ஒரு நாள் பத்தாது.’ விளையாட்டாகக் கூறிவிட்டு கண்ணடித்தான் பாலா.

 

’ஐ வில் ஸே யூ டுமாரோ. இப்பக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கெளம்பனும்’ என பாலாவை விளையாட்டாக முறைத்துவிட்டு கிளம்பினார் ஜோஆன்.

 

 

’உனக்கு என்னப் பார்த்தா என்ன தோனுது?’

 

‘என்ன தோனுதுனா? புரியல’

 

‘சரி. நான் எப்படி இருக்கேன்’

 

‘எப்படி இருக்கேன்னா? நல்லா தானே இருக்கீங்க’

 

‘நீ உண்மையிலேயே இப்படி பேசிறீயா இல்ல சும்மா நடிக்கிறீயா?’

 

‘உங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கோங்க மேம்’

 

‘சரி. நான் எப்டி இருக்கேன். பாக்க அழகா இருக்கேனா? இல்ல அசிங்கமா இருக்கேனா? ஆம் ஐ நாட் ஹாட் அன் செக்ஸி ’

 

‘மேம் இப்ப நமக்கு இது தேவையா? நமக்கு வேலை குமிஞ்சு கெடக்கு. முக்கியாமான டிஸ்கஷன் நடக்கும் போது தானா உங்களுக்கு இப்டீலாம் சந்தேகம் வரும்?’

 

‘ஐம் யுவர் சுபீரிர்யர். ஜஸ்ட் ஆன்ஸர். நான் எப்டி இருக்கேன்?’

 

’நல்லா தான் இருக்கீங்க’

 

‘நாட் திஸ் சிம்பிள். இன்னும் நல்லா டீப்பா ஃபீல் பண்ணி சொல்லு’

 

‘டீப்பா? எப்டி?

 

‘ஓகே ஐ வில் டீச் யூ. மனசில இருந்து எல்லாத்தையும் அழிச்சிடு. நோ தாட்ஸ். அப்டியே என்னப் பாரு. நல்லா என்னை உள்வாங்கிக்கோ. ஐ மீன் நான் இப்ப உனக்கு கெடச்சா எப்டி இருக்கும்னு யோசி.’

 

’இத என்ன யோசிச்சுட்டு இருக்கிறது மேம். கெடச்சானா என்ன சொல்லவறீங்க? வெளிப்படையா சொல்லுங்களேன்’

 

’மூர்க் மூர்க். பொண்ணுங்களப் பாத்தா உனக்கு என்னடா தோனும்?’

 

‘இப்டி திடீர்னு கேட்டா என்ன சொல்ல. பொண்ணுங்களா தோனும்.’

 

‘இடியட். உனக்கு ஆசைனு ஒன்னு இருக்கா இல்லையா? பொண்ணுங்கள பார்த்தா ஆசை வராதா?’

 

‘எதுக்கு ஆசை வரனும்? நீங்க அதிகமா சினிமா பாத்து கெட்டு போயிருக்கீங்க. சினிமால காட்ற மாதிரி பொண்ணு பின்னாடி சுத்திறதெல்லாம் சும்மாங்க’

 

’உனக்குள்ள என்ன மாதிரி உணர்ச்சிலாம் வரும்டா?’

 

‘எல்லா உணர்ச்சியும் வரும் ஆனா அத அப்டியே மெண்டு முழுங்கிடுவேன்’

 

‘இம் அதத்தான் கேக்கிறேன். ஒரு உணர்ச்சி வரும்னு சொல்றியே. அதத்தான் வெளிப்படையா சொல்லச் சொல்றேன்’

 

‘உங்களுக்கு ஒன்னு தெரியுமா. நான் சின்ன வயசில அப்டி தான் வெளிப்படையா மனசில எது இருந்தாலும் சொல்லிடுவேன். ஆனா அதுக்காக நான் வாங்கிக் கட்டிக்கிட்டது தான் அதிகம். அதனால நான் எதையும் வெளிய சொல்றதில்ல. அப்டியே மென்னு முழுங்கிடுவேன். அதுவே பழக்கமாயிடுச்சு’

 

‘அப்ப உனக்கும் உணர்ச்சிகளெல்லாம் வரும்ல. இப்ப சொல்லு என்ன பார்த்தா எப்புடி இருக்கு. வோ யார் ஹை ஜோ குஷ்பு கி தராஹ் வோ ஜிஸ்கெ ஸுபான் உர்தூ கி தராஹ்னு ஏதாவது கவிதை கண்டிப்பா தோணனும்’

 

‘உண்மையிலேயே நான் மனசில நினைச்சத சொல்லிடவா?’

 

‘ம் சொல்லு அதத்தானே கேட்டிட்டிருக்கேன்’

 

‘பயம் தான் தோனுது. உங்கள பார்த்தா எனக்கு அடிமனசில பயம் தான் தோனுது. ஏன் தோனுது கேக்காதீங்க’

 

‘யூ ஆர் டெம்ப்டிங் மீ. ஒழுங்க சொல்லிடு.’

 

‘நானும் சொல்லனும்னு தான் நினைக்கிறேன். ஆனா சொல்லாம விட்டுறதே நல்லதுனு நினைக்கிறேன்.’

 

’இப்ப சொல்றியா இல்லையா. ஆர் எல்ஸ் ஐ வில் ஸ்டாப் டாக்கிங் வித் யூ’

 

’இது ஒன்ன சொல்லிடுங்க மேம். பேசமாட்டேன் கீசமாட்டேன்னு’

 

‘டெல் மீ’

 

’சொல்றேன். நீங்க நான் ஃபர்ஸ்ட் டே ஆஃபிஸ்க்கு வந்தப்ப லேட்டா ஏன் வந்திங்க’

 

‘ம் அதுவா. மெட்ரோல ஒரு சின்ன பிரச்சன’

 

‘அதான் என்ன பிரச்சனை?’

 

‘பெரிசா ஒன்னுமில்லை. ஒருத்தன் என்ன இடிச்சிட்டு ஓடிட்டான். சச் அ சீப் பர்ஸன் ஹீ மஸ்ட் பீ’

 

’அவன உங்களுக்கு தெரியுமா?’

 

‘தெரியாது. ஆனா பாத்தா கண்டிப்பா சொல்லிடுவேன்.’

 

‘அப்டியா. ஸ்யூர் ஹேனா?’

 

‘ஸ்யூர்’

 

‘ஒன்னு தெரியுமா? நீங்க அவன் கூட தான் இவ்ளோ நேரமா பேசிட்டிருக்கீங்க.’

 

’யூ மீன்?’

 

‘நான் தான் அன்னிக்கு உங்கள தள்ளிவிட்டது?’

 

’சான்ஸே இல்ல. ஜூட் மத் கஹோ. எனக்கு அவன் நல்லா மைண்ட்ல இருக்கான். நீயில்ல’

 

‘போங்க மேம். நீங்களும், உங்க மைண்ட்டும். நான் தான் அவன். டோக்கன் இல்லாம மாட்டிட்டேன். அதான் உங்க பின்னாடியே வந்தேன்’ என்று கூறி அந்தக் கதையை எடுத்து விட்டான். ஆடிப்போனாள் ஸ்மிர்தி.

 

‘ஐ காண்ட் பிளிவ். இத ஏன் நீ முன்னாலயே சொல்லல’

 

‘சொல்லி இருந்தா?’

 

‘அன்னிக்கே நல்லா குடுத்திருப்பேன்.’

 

’அதான் சொல்லல’

 

‘யூ லையர்.’  அவனுக்கு ஒன்று கொடுக்க கையை உயர்த்தினாள்.

 

‘அதான் நான் முன்னாடியே சொன்னனே உங்களப் பார்த்தா எனக்கு பயம் வருதுன்னு. இதுக்குத் தான்’

 

’சரி. இனிமே என்னப் பாத்து பயப்பிட வேண்டாம். பயத்துக்கான உணர்ச்சிய எடுத்துட்டு என்னப் பார்த்தா என்ன தோணுது?’

 

’ஏன் இத ஏங்கிட்ட கேக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

 

’பெரிசா ஒன்னும் இல்ல. இதுவரைக்கும் என்ன நாலஞ்சு பேர் லவ் பண்ணியிருக்காங்க. அவங்களாம் என்ன ஆகா ஓகோனு புகழுவாங்க. அதல்லாம் உண்மையா இல்லையானு உன்ன மாதி ஹானஸ்ட்டானவன்கிட்ட தான் கேக்கனும்னு நினைக்கிறேன்’

 

‘மேம் நீங்க ஏன் இவ்ளோ தெரிஞ்சிக்க முயற்சி பண்றீங்கனு தெரில. நீங்க ரொம்ப அழகா தான் இருக்கீங்க. அத எப்டி டிஸ்க்ரைப் பண்றதுன்லாம் எனக்கு தெரில. அதான் உண்மை’

 

‘ஓ.கே. லெட் மீ டிஸ்க்ரைப் யூ. தென் யூ கேன். உன்னப் பத்தி சொல்லனும்னா. யூ ஆர் அ கில்லர். தெரிஞ்சு பேசிறையா தெரியாம பேசுறியானு தெரியல ஆனா நீ பேசுறது பொண்ணுங்கள அப்படியே இம்ப்ரஸ் பண்ணிடும். அதுவும் எதப் பாத்தாலும் கிறுக்கனாட்டம் மூஞ்சில எந்த ரியாக்‌ஷனுமே இல்லாம திரிவ பாரு. அது தான் உன்னோட ஹைலைட். மத்தபடி உங்கிட்ட சிக்ஸ்பேக் இல்லாம இருக்கலாம் இல்ல பாத்தவொடனே பத்திக்கிற மாதிரியான ஹாட்னஸ் இல்லாம இருக்கலாம். பட் யூ ஆர் ஹேண்ட்ஸம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நீ கேர் எடுத்துக்குவ பாரு அத தான் பொண்ணுங்க நிறைய எதிர்பாப்பாங்க. அப்பறம் குழந்த மாதிரி சில ரியாக்‌ஷன் உன் மூஞ்சில அப்பப்ப தெரியும். யூ வில் ஆக்ட் சோ க்யூட். இப்ப சொல்லு என்னப் பத்தி’

 

’உங்கள இப்படி சொல்லனும்னா. திரும்பவும் சொல்றேன். பாத்தவுடனே பயம் தான் வரும். எப்ப என்ன செய்விங்களோனு பக்பக்னு இருக்கும். ஒரே வார்த்தைல சொல்லனும்னா உங்களுக்கு எங்கப்பா மாதி குணம். அதாவது நான் யாரப்பாத்தும் பயப்பட மாட்டேன். அந்த உணர்ச்சி எப்ப வரும்னா எம்மேல ரொம்ப அன்பா இருக்கேன்னு சொல்லிட்டு அதிகமாக உரிமை எடுத்துக்கிடும் போது.’

 

‘ஐயோ. வேற எதுவுமே உனக்கு தோனலையாடா?’

 

‘இல்லையே’

 

‘சரி வேற பொண்ணுங்கள பாத்து ஏதாவது தோனிருக்கா?’

 

’ஆமா. நிறைய தோனிருக்கு.’

 

‘எந்த மாதிரி?’

 

‘சிலர பாத்தா அழகா தோனிருக்கு. மனசு ஒரு அஞ்சு நிமிஷம் அப்டி இப்டி ஆடீட்டு வந்திருக்கு. என்னைய நிறைய  கஷ்டப்படுத்தின எங்க ப்ரின்ஸிபால் மேம பார்த்த எனக்கு உண்மையிலேயே பயம் வராது பரிதாபம் தான் வரும். இருந்தாலும் அவங்க மூக்க பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்ளோ அழகான மூக்க வச்சுக்கிட்டு ஏன் இவங்க இவ்ளோ கோபப்படுறாங்கனு நினைப்பேன்’

 

‘தும் முஜே மார் ரஹே ஹை.’

 

‘மாஃப் கரோ’

 

’எனக்கு வயசு தான் உன்னவிட கொஞ்சம் அதிகம். அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.’

 

‘எதுக்கு பிரச்சனை இல்லை?’

 

‘மாரேஜ் பண்ணிக்க.’

 

‘கல்யாணமா. என்ன மேம் இது?’

 

‘இல்ல பயப்படாத. நான் சொல்றேன். உன்ன ஒரு வருஷத்துக்கு முன்னாடி பாத்திருந்தா தூக்கிட்டு போயாவது கல்யாணம் செஞ்சிருப்பேன். பட் இப்ப டூ லேட் எனக்கு ஏற்கனவே மாப்ள பாத்தாசு. அடுத்த வாரம் எனக்கு என்கேஜ்மெண்ட். லேகின் ஐ லவ் யூ. லவ் டஸிண்ட் ரெக்கொயர் பொஸஷன்’

 

‘என்ன சொன்னீங்க?’

 

‘லவ் டஸிண்ட் ரெக்கொயர் எனி பொஸஷன். காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை.’

 

’நான் ஒன்னு கேக்கவா?’

 

‘கேளு’

 

’எங்க இந்தத் தத்துவத்த புடிச்சீங்க?’

 

‘அதுவா முக்கியம். நான் இங்க எவ்ளோ ஃபீல் பண்ணி என் மனசில இருக்கிறத சொல்லிட்டிருக்கேன்.’

 

’அது தான் முக்கியம். ப்ளீஸ் சொல்லுங்க. இப்படி ஒரு தத்துவம் எப்படி உங்களுக்கு கெடச்சது. நிச்சயம் நீங்களா யோசிச்சிருக்க வாய்ப்பில்ல.’

 

’டோண்ட் மோக் மீ.’

 

‘ஐம் ஸீரியஸ். ப்ளீஸ். போலோ’

 

என்று ஹஸன் வந்து ஸ்மிர்திக்கு கீழ் வேலைக்குச் சேர்ந்தானோ அன்றே ஆரம்பித்துவிட்டது. ஸ்மிர்தி செய்வதெல்லாம் காதலி காதலனிடம் நடந்து கொள்வதைப் போல் தான் தோன்றும். ஹஸன் சற்று விலகிச் சென்றாலும் விடமாட்டாள். துரத்திக் கொண்டு வருவாள். அவன் மீது எப்போதும் அதிகாரம் இருக்கும். தனக்கு கீழ் வேலை செய்கிறான் என்ற அதிகாரம் இல்லை. அவன் மீது இருக்கும் அக்கரையினால், அன்பினால், காதலினால். அவளுக்கு அவனை பார்த்தவுடன் பிடித்திருக்க வேண்டும். அவளுக்குள் என்ன உணர்வுகள் எழுந்திருக்கும் என்றெல்லாம் அவனால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. உணரும் மனப்பக்குவமும் காதல் உணர்வும் அவனிடம் இல்லை. காதல் என்பது அவனைப் பொறுத்தவரை இச்சை.

 

இச்சை, கிரியை, ஞானம். இந்திய மெய்யியலாளர்கள் சக்திகளை இவ்வாறு வகைப்படுத்திருக்கிறார்கள். இச்சை என்றால் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என அனைத்து ஆசைப்படுதலும். க்ரியை என்றால் படைப்புத்திறன். ஞானம் என்றால் ஞானம். இச்சையை அடக்கினால் க்ரியை அதிகரிக்கும். க்ரியை அதிகரிக்க அதிகரிக்க ஞானம் வெளிப்படும். விவேகானந்தர் இவற்றை விளக்கி ஞானத்தை அடையும் யோகங்களை அறிமுகப்படுத்தும் விதமும் அலாதியானது என்பது அவன் கருத்து. இன்னும் ’ஆசை’களை அடக்கும் கலைக்காகவே பிறந்த கௌத்தமரது போதனைக்குள் அவன் இறங்கவில்லை.

 

‘சொல்லுங்க. யார் சொன்னது?’

 

’மேரா பாப்’

 

‘அப்பாவா? உங்கப்பா பேரென்ன மேம்?’

 

’ஆதிநாத் ஜெய்ன். எதுக்கு?’

 

ஹஸன் தத்துவங்களினால் வளர்க்கப்பட்டவன். தத்துவங்களால் மேம்படுத்தப்பட்டவன். தத்துவங்களினூடே பயனிப்பவன். தத்துவங்கள் போதும் அவனை இழுக்க.துரும்பு கிடைத்தாலும் விடமாட்டான். ததுவங்கள் அவனுக்கு வாழ்கையை வாழக் கற்றுக்கொடுத்தன. தத்துங்கள் இல்லாமல் அவனால் ஒரு நொடி கூட உயிர் வாழ இயலாது. தான் போன போக்கில் அவனால் போக முடியாது. தான் போன போக்கில் போவதற்காக இந்த மனிதனை இயற்கை பரிணாமிக்கவில்லை என்று அவன் நம்பினான். தன் போக்கில், தன் இச்சையின் போக்கில் போனவர்களின் நிலையையும் கொள்கை, தத்துவங்களின் பின்னே போனவர்களின் நிலையையும் அவனுக்கு வரலாறு காட்டியுள்ளது.

 

கொள்கைகளும் தத்துவங்களும் கடவுளிடம் கூட்டிச் செல்வதை அவன் நம்பவில்லை. மாறாக பரிணாமத்தினால் மனிதனுடனேயே வந்த அந்த மிருக குணங்களைக் களைவதே ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய வேலை எனக் கூறிவந்தான். மனிதன் என்று பொறாமை, பகைமை, இச்சை, தன்னலம் போன்ற மிருக குணங்களை வென்று தான் யாரென உணர்கிறானோ அன்று பரிணாமத்தின் வேலை முடிந்தது. தன்னை யாரென தனக்கே இயற்கை காட்டிவிட்டால் அதன் வேலை முடிந்தது. இது தான் ஹஸனது தத்துவம்.

 

 

பத்தாம் வகுப்பில் கடவுளை நம்பாமல் பரிட்சை எழுதிய பாவம் அவனைப் பின் தொடர்ந்தது. பொதுத் தேர்வு முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இறுதியில் அவன் 92% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். பள்ளித் தேர்வுகளில் அவன் 60% எட்டுவதே பேரதிசயம். தேர்வு முடிவு வந்த தினத்தன்று பள்ளிக்குச் சென்றான். அனைவரும் அவனை ஆச்சரியம் பொருந்திய கண்களில் பார்த்தனர். ஒளி அவன் மீது படர்ந்திருந்தது. ஒளியில் நுழைபவனை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை முதன்முறை உணர்ந்தான்.

 

வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி என்பது அனைத்தும் ஒளியில் கிடைக்கக் கூடியது. ஒளி என்பது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவது. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முதலில் நல்ல மன ஆரோக்கியம் இருக்க வேண்டும். நல்ல மன ஆரோக்கியம் இருக்க கொள்கைகளும் தியானமும் அவசியம். கடவுள் தேவையில்லை. ஆக, தியானத்தையும் தத்துவங்களையும் கொள்கைகளையும் கொண்டு வாழ்வில் வெற்றி பெறலாம். வெற்றி என்பதே ஒளி. மனதை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்தால் போதும் இந்த உலகம் நம்மைக் கொடுமை செய்யாது. ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

 

பத்தாம் வகுப்புக்குப் பிறகு பதினொன்று பணிரெண்டாம் வகுப்பைத் தங்கள் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என பிரின்ஸிபால் அவனது தந்தையை வற்புறுத்தினார். அவனுக்கோ வியப்பு. மூன்று நான்கு மாதங்களுக்கு முன் இதே வாய் தான் அவனை வெளியில் அனுப்ப முனைந்தது. முழு இருளில் பிடித்து தள்ளியது. தற்போது ஒளியைப் பாருங்கள் என்னவெல்லாம் செய்கிறதென.

 

அவனது தந்தை அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தார். இந்தப் பள்ளியில் தொடரலாம் இல்லை வேறு பள்ளி பார்த்துக் கொள்ளலாம். அவன் யோசிக்கவெல்லாம் இல்லை. வெளிப்படையாகச் சொன்னான், இந்தப் பள்ளி தனக்கு ஒத்துவராதென. முடிந்தது. வழக்கம் போல் மேற்கொண்டு யாரும் எதுவும் பேசத் துணியவில்லை.

 

அங்கு மீண்டும் படிக்க முடியாது என சொல்லிவிட்டானே தவிர அடுத்து எங்கு சேரப்போகிறோம் என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. வெளியே வந்துவிடு போதும். வந்துவிட்டான். பின், எப்படியோ நாமக்கல்லில் ஒரு பள்ளியில் போய் சேர்ந்தான். பள்ளி விடுதியின் வாழ்கை புதுவித சுதந்திரத்தைத் தந்தது. அவனைப் பொறுத்த வரை இத்தனை நாளாய் அனுபவித்ததில் இருந்து விடுதலை அளித்த பள்ளி இது.

 

அப்பள்ளிக்கு வந்ததும் வராததுமாக அவனைக் கவர்ந்த விஷயம் நூலகம். அவன் அதுவரைக் கண்டிராத பல புத்தகங்கள் அங்கு இருந்தன. ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்கள் எடுக்க முடிந்தது. வாரா வாரம் போய் லைப்ரேரியனிடம் காட்டிவிட்டு போகவேண்டும். வீட்டில் இருப்பதை விட அருமையான முறை. அவ்வளவு தான். இரண்டாவது ப்ரேயர். ஆம் இந்தப் பள்ளியில் அஸ்ம்ப்ளி, ப்ரேயர் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. ஆண்டுக்கொன்று அம்மாவசைகொன்று என்று கூடக் கிடையாது. கடவுளை நம்பச் சொல்லி நச்சரிக்கும் வேலையும் கிடையாது. இது போக கம்யூனிஸ்ட் சித்தாந்தம் வேறு ஆசிரிய மாணவர்களிடையே தெரியும்.

 

கம்யூனிஸத்திற்கு பள்ளியில் என்ன அவசியம்? இருந்தது. இதற்கெல்லாம்  முதலாளித்துவ பள்ளி நிர்வாகம் தான் காரணம். முதாலாளித்துவம் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு அளவிற்கு அல்ல உலைகையே முழுங்கும் அளவிற்கு. ஒரே ஒரு உதாரணம். அப்பள்ளியில் 95% மேல் மதிப்பெண் இருந்தால் படிப்புக்காலமாகிய இரண்டு வருடமும் விடுதி மற்றும் பள்ளிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம். 95% முதல் 90% வரை இருப்பவர்களுக்கு பள்ளிக் கட்டணம் இல்லை, விடுதிக் கட்டணம் மட்டும் கட்டவேண்டும். 90% முதல் 80% வரை இருப்பவர்கள் முழு பள்ளிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதற்கும் கீழே இருப்பவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் மட்டும் போதாது, கல்லூரிகளைப் போல் டொனேஷன் கொடுக்க வேண்டும். இது இரு வருடக் கட்டணத்தைவிட இருமடங்கு இருக்கும். மதிப்பெண் குறையக் குறைய இந்த டொனேஷனும் எகிறும். ’என்னங்க இது காலேஜ் மாதிரி டொனேஷனெல்லாம் கேக்கிறீங்கனு’ கேட்டால் ’நீங்க எங்கிட்ட டொனேஷன் கட்டுங்க. உங்க பிள்ளைகள நாங்க காலேஜ்ல டொனேஷனே இல்லாம சேர்ற அளவுக்கு மார்க் எடுக்க வைக்கிறோம் என நியாயமாக ஒரு பதில் அந்தப் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து வந்து விழும். ஆம் முதலில் அந்த டைரக்டர் என அழைக்கப்படும் நிர்வாகிகளின் வரலாற்றைச் சற்று பார்த்துவிடுவோம்.

 

நாமக்கல் என்றவுடன் தமிழ்நாட்டில் முதலில் நினைவுக்கு வருவது முட்டையும் கோழியும் தான். இது போக இன்னொன்று இருக்கிறது. கொஞ்சம் செய்திகளை கருத்துடன் கவனிப்பவர்கள் எளிதாகக் கண்டு கொள்வர். அது லாரி. ஆம் முட்டை, கோழி, லாரி. இது தான் நாமக்கல்லின் பிரதான தொழில். இந்த லாரி தொழிலில் பெரிய ஆளாய் இருப்பவர்களுக்கு உள்ளூர்  கட்டப்பஞ்சாயத்து வாய்ப்புகளும் இலவசமாய் வந்து சேரும். இவர்களை மனதில் ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

நாமக்கல்லில் தொன்னூறுகளின் துவக்கத்தில் சில அரசுப் பள்ளிகளில் வேலை செய்த ஆசிரியர்களுக்கு திடீரென ஒரு ஆசை துவங்கியது. அந்த ஆசைக்கு அடிப்படை அவர்கள் வேலை செய்யும் பள்ளிகள் எடுத்த மதிப்பெண்கள் தான். அதாவது நாமக்கல்லின் சில அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளியில் வேலை செய்த திறமையான ஆசிரியர்களின் துணையால் பொதுத்தேர்வில் மாநில அளவில் முக்கிய இடங்களை கைப்பற்றியிருந்தன. அதுவும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு வருடா வருடம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த சமயத்தையும் சந்தையில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்கும் ஆசியர்களுக்கு இருந்த வாய்ப்பையும் பயன்படுத்தி மேற்கண்ட பள்ளி ஆசிரியர்கள் தனித்தனியாக தங்கள் வீட்டில் ட்யூஷன் எடுக்க ஆரம்பித்தனர். பிறகு கூட்டாக சேர்ந்து தனியாக இடம் பிடித்து ட்யூஷன் செண்டர் வைத்து பாடம் எடுக்க ஆரம்பித்தனர். தற்போது இவர்களிடம் படித்த மாணவர்களும் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். புதிதாய் ஒரு தொழிலுக்கான அச்சாரம் அமைக்கப்பட்டது.

 

இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு செய்தி மீண்டும் மீண்டும் மக்களால் மக்களுக்காக மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது. பிள்ளைகள் படிக்கவைத்தால் அவர்கள் கை நிறைய சம்பாதிப்பார்கள் என. இது அப்படியே பரிணமித்து பிள்ளைகளை இஞ்சினியரிங் அல்லது டாக்டர் படிக்கவைத்தால் அவர்கள் கை நிறைய சம்பாதிப்பார்கள். பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை எனும் மனநிலை உண்டானது. நல்ல மதிப்பெண்கள் இருந்தால் தான் எளிதாக இருக்கும் என்பதை உணர்ந்து சிலர் தங்கள் பிள்ளைகளை இத்தகைய ட்யூஷனில் சேர்க்கத் துவங்கினர். கல்வியில் ஒரு வியாபார யுக்தி இறுதியாக கண்டடையப்பட்டது. பெரும் பெரும் நகரங்கள் துவங்கி பட்டி தொட்டி வரை இந்தியாவின் மிகப்பெரிய இனமாகிய நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகள் மேல் தங்களால் முடியாத கனவுகளை எல்லாம் கட்டி களத்தில் இறக்கிவிட்டனர். தங்களைப் போல் தங்கள் குழந்தையும் பணத்திற்குத் திண்டாடும் அவல ஒளியற்ற நிலையில் இருக்க கூடாது என்பதே அவர்கள் ஆதங்கமாக இருந்தது.

 

இது தானே தொழில் முனைதல். தேவை இருக்கிறது. பூர்த்தி செய். பணத்தை அள்ளு. முடிந்தது. ட்யூஷன் செண்டர்களில் லாரிகள் முதலீடு செய்யத் துவங்கியது. லாரிகளின் பெரும் பணத்தால் ட்யூஷன் செண்டர்கள் பெரும் பள்ளிகளாய் இதுவரை தமிழ்நாடே கண்டிராத அளவில் விஷ்வரூபம் எடுத்தன. கிராமங்களில் பெருமளவு நிலம் வாங்கப்பட்டு பள்ளிகள் எழும்பின. உள்ளே என்ன நடக்கிறது என வெளியே தெரியாத அளவிற்கு அனாந்தரக் காடுகளில் பள்ளிகள் அமைந்தன. இதனால் பல கிராமங்கள் பயனடைந்தன. பள்ளிக்குள் கீழ்மட்ட பணிகளை செய்ய கிராமங்கள் ஆள் அனுப்பின. பள்ளிகள் பங்குச் சந்தைகளாயின. லாரிக்கு இத்தனை சதவிகித பங்கு என்றும் ஆசிரியர் ஒருவருக்கு இவ்வளவு பங்கு என்றும் கூறி முதலீட்டையும் உழைப்பையும் கொண்டு பங்கு பிரிக்கப்பட்டது. ட்யூஷன் ஆசிரியர்கள் டைரக்டர்கள் ஆயினர்.

 

காலையில் அவசர அவசரமாக எழுந்து மனைவியை கடிந்து பிள்ளைகளிடம் எரிந்துவிழுந்து எதையாவது டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு ஏதாவது பஸ்ஸைப் பிடித்து வேலை செய்யும் பள்ளிக்குச் சென்று மாணவர்களைக் கத்தி மேய்த்து படிக்க வைத்து சோர்வாகி அங்கேயே ஒரு தூக்கத்தை போட்டுவிட்டு கொண்டுவந்த பையை தூசிதட்டி எடுத்து அரைத்தூக்கத்துடன் வீட்டிற்கு சென்று விடைத்தாள்களை மனம் போன போக்கில் திருத்தி ட்யூஷன் எதுவும் இருந்தால் எடுத்துவிட்டுக் காய்ந்த வயிற்றுடன் அப்படியே மல்லாக்கப் படுத்துத் தூங்கும் ஒளியற்ற வாழ்க்கைக்குப் பதில் அதிகாலை பத்துப் பதினோறு மணிக்கு பொறுமையாக எழுந்து பல்லிடித்துவிட்டு பன்னீரில் கொப்பளித்துவிட்டு  ஜாலியாக ஏதாவது பெரிய ஹோட்டலில் பகல்-மதிய உணவை அருந்திவிட்டு பந்தாவாக பென்ஸ் காரில் பள்ளிப்பக்கம் சென்று நாலைந்து ஒளியற்றவர்களை உருட்டி மிரட்டிவிட்டு மிடுக்காக வறுத்த முந்திரிகளை நொறுக்கிக் கொண்டே பவனி வந்துவிட்டு பள்ளியில் இருக்கும் தன் சொகுசு அறையில் மிதமான ஏசியுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு ஆறு மணிவாக்கில் எழுந்து குளியல் போட்டுவிட்டு ட்ராக் பேண்ட் டீசர்ட் ஷட்டில் ராக்கட்டுடன் ஒளிவுற்றவர்களுடன் விளையாடிவிட்டு முடிந்தால் சிறிது தூரம் நடை போய்விட்டு பீட்சா பர்கர் என எதையாவது ஸ்னாக்ஸாக உள்ளே தள்ளிவிட்டு குடும்பத்துடன் டீவி பார்த்துவிட்டு ஒன்பது மணி போல் கணக்குகளை எல்லாம் முடித்துவிட்டு நண்பர்களுடன் ஒளியில் ஆடிவிட்டு குடித்துவிட்டுத் தடுமாறிய நிலையில் வந்து பானை வயிற்றுடன் உலகக் கவலைகளை எல்லாம் மறந்துவிட்டு சுபிட்சமாக உறங்கும் ஒளிவுற்ற வாழ்க்கை இவர்கள் வசமானது.

 

இவர்களுக்குக் கீழ் தான் அனைவரும். மாணவர்கள், ஆசிரியர்கள் யாராகிலும். இந்த முதலாளித்துவத்திற்கு எதிராக அவ்வப்போது சில கிளர்ச்சிகள் எழும். அவற்றை  ஒரு படை கொண்டு அடக்கி வைப்பர். முதலாளித்துவத்தின் முதுகெழும்பான காவல் படைக்கு நிகரான ஒரு படை அப்பள்ளியில் இயங்கி வந்தது. பி.டி படை. உடற்பயிற்சி ஆசிரியர்கள் படை. உடற் பயிற்சியோ விளையாட்டோ இல்லாத பள்ளியில் நான்கு மாணவனுக்கு ஒரு பி.டி என்ற வீதத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். தங்கும் விடுதி, உணவு விடுதி, பள்ளிக்குச் செல்லும் சாலை, பள்ளி, வகுப்பு, கழிப்பறை, நிற்குமிடம், தும்முமிடம் என அனைத்து இடத்திலும் காவலர்களாய் காட்சியளிப்பர் இந்த பி.டிக்கள். இவர்களுடைய தலையாய வேலை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது.

 

இப்பள்ளியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன?

 

அந்தப் பள்ளியில் பெண்களும் படித்தனர். அவர்களுக்குத் தனி விடுதி, தனி உணவகம், படிக்க தனி இடம். பாகிஸ்தான் இந்தியப் பிரிவினைக் கோடுகளைப் போல் சதுர வடிவிலான அப்பள்ளி சரி பாதியாக பிரிக்கப்பட்டிருக்கும். இப்பக்கம் ஆண்கள், அப்பக்கம் பெண்கள். நடுவில் கதவுகளையுடைய பலகைகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். அக்கதவுகளுக்கு அருகில் பி.டி பாதுகாப்பு பலமாக இருக்கும். இருபக்கமும் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். யாராவது அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தாலே சட்டம் ஒழுங்கை குழைத்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்படும். அதே போல் விடுதியில் செல்போன், எஃப்.எம் போன்றவற்றை உபயோகிக்கத் தடை இருந்தது. வாரம் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் அதிரடி சோதனை நடைபெறும். செல்போன், எஃப் எம் அல்ல நோக்கம். அதிரடி சோதனையின் நோக்கம் நீலப்புத்தகம், வீட்டிலிருந்து கொண்டுவரும் திண்பண்டங்களைக் குறிவைத்தே இருக்கும்.

 

அதே போல், விடுதி மாணவர்களின் நேர நிர்வாகத்தையும் பி.டி படையே பார்த்துக் கொள்ளும். காலை ஐந்து மணிக்கு மணியோசையுடன் அனைவர் அறைக் கதவுகளும் தட்டப்படும். மாணவர்கள் தங்கியிருக்கும் ஐந்து அறைக்கு அடுத்த அறை பி.டிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆறு மணிக்கு ஸ்டடி ஹாலுக்குச் செல்ல வேண்டும். எட்டு மணிக்கு அது முடியும். பின்னர் குளித்தோ குளிக்கமலோ கிளம்பி ரேசன் கடையைவிட பலமடங்கு நீளமான உணவக வரிசையில் நின்று தின்றோ தின்னாமலோ ஒன்பது மணிக்குள் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளி ஒன்றரைக்கு முடியும். மீண்டும் இரண்டு மணிக்குள் மதிய உணவை முடித்தோ முடிக்காமலோ திரும்ப வேண்டும். பள்ளி நான்கு மணிக்கு நிறைவடையும். மீண்டும் நாலறைக்கு ஸ்டடி ஹாலுக்குச் செல்ல வேண்டும். ஸ்டடி பத்து மணிக்கு முடியும். இடையில் ஒரு மணி நேரம் இரவு உணவு இடைவேளை. இரவு பத்து முதல் காலை ஐந்து வரை தூங்கிக் கொள்பவர்கள் கொள்ளலாம். இந்த நேர நிர்வாகம் பிசுபிசுக்காமல் வேலை செய்ய பி.டிக்கள் பெரிதும் பாடுபட்டனர். தங்கள் உயிரைக் கொண்டு காத்தனர்.

 

அப்பள்ளியில் படிக்கும் எந்த மாணவரைக் கேட்டாலும் கண்ணீரும் கம்பலையுடன் ‘இது ஸ்கூல் இல்லங்க ஜெயில்’ என பதில் கூறுவான். ஆனால் ஹஸனிடம் கேட்டால் ’இது தான் சார் ஸ்கூலு’ என்பான். ஏன்?

 

ஹஸன் வந்த நாளன்றே பள்ளிக்கு பழகிவிட்டான். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பிரணாயானம், தியானம் என ஒரு மணி நேரத்தை செலவிடுவான். பின்னர் ஆறு மணிக்கு அனைவருடனும் சேர்ந்து ஸ்டடி ஹாலுக்கு கையில் பாடம் தவிர்த்த நூலகத்தில் எடுத்த ஏதாவததொரு புத்தகத்துடன் சென்று சேர்வான். காலையிலேயே குளித்துவிட்டதால் எந்தத் தொந்தரவோ வரிசையோ இல்லாமல் காலை உணவை முடித்துவிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுவான். அங்கு சில சீண்டப்படாத மரங்கள் இருக்கும். அதற்குக் கீழே பெரிய பெரிய கொட்டைகள் இருக்கும். அவற்றைப் பொறுக்கிகொள்வான். கொட்டைகளை பொறுமையாக உட்கார்ந்து உடைத்து உள்ளே இருக்கும் பாதாம் பருப்புகளை எடுப்பதற்கும் பள்ளி துவங்குவதற்கும் நேரம் சரியாக இருக்கும். பின் பாடத்தை கவனிப்பதைப் போல் ஏதாவது பாவனை செய்வான். பிறகு மதிய உணவு இடைவேளைக்கு உணவகத்திற்கு செல்வான். தமிழகத்தின் மதிய உணவென்பதை ஹஸன் ஏனோ வெறுத்துவந்தான். அதனால் தட்டு நிறைய தயிரை ஊற்றி ஐந்தே நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டு பள்ளி திரும்பி ஒரு குட்டித் தூக்கம் போடுவான். நான்கு மணிக்கு பள்ளி முடிந்ததும் முகம் கை கால்களை நன்கு கழுவிவிட்டு கிளம்பி ஸ்டடி ஹாலுக்குச் சென்று விடுவான். சிறு தூக்கம். பின்னர் கொண்டு வந்த புத்தகங்களைப் படிப்பான். இரவு உணவு இடைவேளை வந்துவிடும். உண்டபின் நேரே ஸ்டடி ஹாலுக்கு வந்து புத்தகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்த நிலையில் உறங்கிவிடுவான். ஸ்டடி முடிந்ததும் கிளம்பிச் சென்று விடுதியிலும் உறங்கிவிடுவான். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழக் கசக்குமா? என்ன?

 

இங்கு தான் கம்யூனிஸத்தின் அறிமுகம் கிடைத்தது. புத்தகங்கள் வாயிலாகவும் சில ஆசிரியர்கள் மூலமாகவும். மார்க்ஸ், லெனின், சே குவாரா, மாவோ, காஸ்ட்ரோ என வாழ்க்கை வரலாறுகளின் மூலம் உந்தப்பட்டான். மேற்கண்ட கடிகாரச் சுழற்சி இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளில் இது பற்றியான கூட்டம் ரகசியமாக நடக்கும். கடந்தவாரம் பள்ளியில் நிகழ்ந்தவையும் நிர்வாகிகளின் போக்கும் அலசப்படும். தேவைப்படும் இடத்தில் நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்யப்படும். நெடு விடுமுறை தினங்களில் வீட்டிற்குச் செல்வதற்குப் பதில் தோழர்கள் அனைவரும் சேர்ந்து அவர்கள் பள்ளி அமைந்திருந்த கிராமத்தின் தோழர்களுடன் களப்பணியில் ஈடுபடுவர். இங்கு ஆசிரியர், விவசாயி, மாணவன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு கிடையாது. ஏற்றத்தாழ்விலும் பொருள் கொள்வதிலும் நம்பிக்கையற்ற எல்லோரும் எல்லோருக்கும் தோழர்களே.

 

 

’வெய்ட் ஹியர். நான் உள்ள போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்திடறேன்’

 

ஹஸன் ஜெய்ன் மந்திருக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். ஸ்வெதெம்பர சமணர்களின் கோவில். ’காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை’ என ஸ்மிர்தி கூறியதில் இருந்தே அவன் முடிவு செய்துவிட்டான். இந்த தத்துவத்திற்கு பின்னே இருக்கும் ஆசாமியை  நேரில் கண்டு விளக்கம் பெறவேண்டுமென. ஐந்தாறு வருடமாய் அவனுள் இரையின்றிக் கிடந்த தத்துவவாதிக்கு கொடூரமாக பசியெடுக்க ஆரம்பித்தது.

 

விசாரித்ததில் ஸ்மிர்தியின் தந்தை ஜெய்ன் தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் என்று தெரிய வந்தது. ஸ்மிர்திக்கு திருமணம் நிச்சயமாக இருந்தது. அந்த நிகழ்விற்கு தான் அவன் ஜெய்ப்பூர் வந்திருந்தான். ஆதிநாத் ஜெய்ன் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் தன்னை ஜெய்ன் மந்திருக்கு கூட்டிச் செல்லும்படி ஸ்மிர்தியை நச்சரித்து அங்கு சென்று சேர்ந்திருந்தான். இன்று இந்த மதம் என்ன சொல்கிறதென்று தெரிந்து கொள்ள தீர்மானித்திருந்தான்.

 

ஜெய்ப்பூர். பார்த்தோரை வசீகரிக்கும் ஊர். மஹாராஜா மான்சிங்கால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். வார்த்தைகளால் அவ்வளவு எளிதில் வருணிக்க முடியாது. இங்கே வந்தால் ஹஸனுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிங்க் சிட்டியின் முடிவில் இருக்கும் அந்தக் கடையின் ஐஸ்க்ரீம் லஸ்ஸி தான். அடிக்கும் வெயிலுக்கு மிகவும் இதமாக இருக்கும். பிங்க் சிட்டியின் வடிவமைப்பில் தாஜ்மஹாலைப் போல் ஒரு உன்னதம் தென்படும். ஆம் தாஜ்மஹாலை எத்தனை முறை பார்த்தாலும் அந்த உன்னதம் வெளிப்படும். டெல்லி செங்கோட்டையிலும் அவ்வுன்னதம் பிரதிபலிக்கும். கைப்பிடி அபினை அரைத்து ஒயினில் இட்டு குடிக்கும் மஹா குடிகார ஷாஜகானின் எல்லா படைப்பும் அப்படித்தான். உன்னதம் மிகுந்தவை. பார்த்தவுடன் மதியை மயங்கவைக்கக் கூடியவை. ஒளி நிரம்பியவை. எப்படி யோசித்தார் என்றே தெரியவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கிறார்.

 

’பர்மிஷன் க்ராண்டட் ஆவ்’

 

வெள்ளைப் பளிங்கு தளம். நம்மைப் போல் உடையணிந்து அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கு பலகை ஒன்றில் ஏதோ பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். இது எதிலுமே ஈடுபடாமல் மந்திரை சுத்தம் செய்து கொண்டும், கண்ணைமூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டும் வாயை வெள்ளைத் துணியால் ஒரு விதமாக மூடி வெள்ளை உடை உடுத்தி முக்காடிட்டிடுந்தத பெண்கள் சிலர் இருந்தனர். ஜெய்ன் தர்மத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இவர்களை ’சாத்வி’ என அழைக்கிறார்கள். ஸ்மிர்தி ஹஸனை அவ்வாறு தரையில் அமர்ந்து துணிபோன்ற ஒன்றில் மரக் குச்சியால் குறுக்கும் நெடுக்குமாய் கோடிட்டுக் கொண்டிருந்த வயதான சாத்வி ஒருவரிடம் கொண்டு போய் விட்டாள். அவர் இவர்களை அமரச் சொன்னார். ஸ்மிர்தி ’அவங்கள தொடக்கூடாது’ என ஹஸன் காதில் கிசுகிசுத்தாள்.

 

‘போலோ. ஆப் கா நாம்?’ சாத்வி தொடங்கினார்.

 

‘முஹம்மத் ஹஸன்’

 

’அச்சா. ஹஸன் பாய். என்ன சந்தேகம் உங்களுக்கு?’

 

‘க்யா ஹை ஜெய்ன் தர்ம்? சுருக்கமா சொல்ல முடியுமா?’

 

‘அச்சா. ஜெய்ன் கா தர்ம். இப்படி கிள்ளினா வலிக்குமா வலிக்காதா?’ தன் கையை கிள்ளிக் காண்பித்தார்.

 

‘வலிக்கும்’

 

‘ஏன்?’

 

’ஏன்னா. வலிய உணரக்கூடிய ரிஸப்ட்டார்ஸ் மூளைக்கு சிக்னல் கொடுக்கும். மூளை பதிலுக்கு ’இப்படி செய்ய அனுமதிக்காதனு’ வலியை குடுத்து எச்சரிக்கும்’

 

’டீக் ஹை. அப்டினா கிள்ளாமலேயே மனசு ஏன் வலிக்குது?’

 

‘ம். இச்சா. நினைக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன்’

 

‘பில்குல் சஹி. மனசு வலிக்க காரணம் ஆசை, வாஸ்னா, இச்சா, சாஹ், தமன்னா, அனுபவ்.’

 

‘ஆமாம்.’

 

’ஆசை இருந்ததுனா இந்த உலகத்தோட எல்லா துன்பங்களும் நம்ம தாக்கும் இல்லையா?’

 

‘ஆமாம்’

’ஆசை தான் நம்மள எல்லா துன்பத்துக்கும் கூட்டீட்டு போது. ஆசை தான் பாவம் செய்ய வைக்குது. பொருள் மீதான ஆசை நம்ம குறுக்கு வழில போய் சம்பாதிச்சு பாவத்த வளர்க்க வைக்கிது. பெண் மீதான ஆசை நம்மோட மனச ஊசலாடச் செய்யுது அறிவ மழுங்கடிக்கிது. மண் மீதான ஆசை அப்பாவி மக்கள பகடையா பயன்படுத்த சொல்லுது. ருசி மீதான ஆசை பல உயிர்களை கொன்னு தின்னு பாவம் செய்ய வைக்கிது. அப்ப ஆசை தான் எல்லா துன்பத்துக்கும் காரணம்.’

 

‘ஆமா’

 

’நமக்கும் தீங்கு விளைவிக்காத பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு வாழ்கையை வாழ்வதுக்கு கத்துக்குடுக்கும் தர்மம் தான் ஜெய்ன் தர்ம்.’

 

‘அதாவது துறவறம் மாதிரி சொல்றீங்களா?’

 

’ஆமாம். துறவறம் தான். வாழ்க்கைல உள்ள எல்லாப் பற்றையும் விலக்கிட்டு மேற்கொண்டு பாவம் செய்யாம தவிர்த்திக்கிற வாழ்க்கைக்குள்ள போறது தான் ஜெய்ன் கா தர்ம்.’

 

‘அதெப்படி. பாவங்களை செய்யாமல் இருக்கிறது. அந்த வழிமுறைய கொஞ்சம் சொல்லுங்க’

 

’அஹிம்சா, சத்யா, அஸ்தீயா, ப்ரம்மச்சரியா, அப்பரிக்ரஹா. அதாவது அஹிம்சை, சத்யம், களவாமை, பிரம்மச்சரியம், பற்றின்மை. இதன் மூலமா நாம இந்த பிறவா நிலையை அடையலாம்’

 

‘ஜென்மங்களப் பத்தி பேசறீங்களா?’

 

‘ஆமா. உங்களோட பாவத்த பொறுத்து அடுத்ததடுத்து வேற வேற பிறவிவில வேற வேற உயிரா பெறந்துகிட்டே இருப்பீங்க?’

 

’அத நம்புறீங்களா?’

 

’ஆமாம். அடுத்த பிறவி எடுக்காம கடவுளாயிடறது தான் மோட்சம். நிர்வாணம் எல்லாம்.’

 

‘சரி இதையே தானே ஹிந்துக்களும் சொல்றாங்க. எதுக்கு தனியா ஜெய்ன் தர்ம்?’

 

’பஹூத் அச்சா சவால் ஹை பாய். மொதல்ல ஹிந்து தர்ம்னா என்ன?’

 

‘ம்ம். நீங்க சொல்றது எல்லாம் தான். கர்மா, யோகா, தியானா, புணர்ஜென்மம்’

 

‘யார் சொன்னா?’

 

‘ஹிந்தூஸ் சொல்றாங்க’

 

’ஹிந்தூஸ்னா?’

 

‘ஸ்வாமிஜீஸ்’

 

‘ஒன்னு தெரியுமா? இன்னைக்கு ஹிந்து தர்ம்னு சொல்லப்படுற தர்ம் உண்மையிலேயே பத்து நூற்றாண்டுக்கு முன்னாடி இருந்த ஹிந்து தர்ம் இல்ல. காலப் போக்கில மாறினது. உண்மைய சொல்லனும்னா ஹிந்து தர்ம்னா என்னனு சரியா யாராலயும் சொல்ல முடியாது. ஜெய்ன் கா தர்ம், புத் கா தர்ம்னு இருக்கிற ஸர்மண தர்ம்கிட்டே இருந்து ஹிந்து தர்ம் நிறைய கடன் வாங்கி இருக்கு’

 

’எப்டிப்பட்ட கடன்?’

 

‘இன்னிக்கு ப்ராஹ்மின்ஸ் அசைவம் சாப்பிடாததே ஜெய்ன் தர்ம் உண்டு பண்ணின தாக்கம் தான்’

 

‘அப்டியா?’

 

‘ஹான். யஞ்னா கேள்விப்பட்டிருக்கிங்களா?’

 

‘யஞ்னா?’

 

‘யாகா. பலி. அஸ்வமேதக யாகா. கோமேதக யாகா. அதாவது நாம செஞ்ச பாவத்த போக்க அக்னி மூலமா கடவுளுக்கு பலி குடுக்கிறது. அது மூலமா நம்ம பாவத்த போக்கிக்கிறது. இது முக்கால்வாசி மதத்தில இருக்கு. ஈஸா கா தர்ம் ஜீஸசையே பலி கொடுக்குது. இஸ்லாம்ல இப்ராஹிம் தன்னோட பையன பலி கொடுக்கிறாரு. இதெப்படி சரிப்படும். நாம செஞ்ச தப்புக்கு அப்பாவி விலங்க பலி குடுத்தா என்ன ஆகும். நம்ம கர்மா இன்னும் கொடூரமா ஆயிடாது?’

 

‘ஆமாம்’ ஹஸன் ஒன்றை கவனித்தான். அவனிடம் சாத்வி அதிகமான உருது வார்த்தைகளை பயன்படுத்தினார். பொதுவாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் சொற்களைக் கூட உருதுவில் மாற்றி பயன்படுத்தினார். மானவ், மானவ்த்தா என மனிதனையும் மனித நேயத்தையும் குறிக்கப் பயன்படும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பதிலாக இன்ஸான், இன்ஸானியாத் எனவும் பூவை ஃபூல் என சொல்லாமல் குல் என்றும், இயேசுவை யெஷு என்று கூறாமல் ஈஸா என்றும் கூறினார். ஒருவேளை அவர் ஹஸன் என்றவுடன் முஸ்லிமாக எண்ணியிருக்க வேண்டும். உருதுவை அவனது தாய் மொழியாக நினைத்திருக்க வேண்டும். அதனால் அவனுக்கு புரிகிற மொழியில் பேச முனைந்திருக்க வேண்டும்.

 

‘வேதங்கள ஸ்ருதினு சொல்வாங்க. வேதங்கள் சொல்றபடி நடக்கிறங்க தான் வேதாந்திகள். இந்த வேதங்கள் வரதுக்கு முன்னாடி இருந்தே ஸ்ரமண தர்ம்னு ஒன்னு இருந்தது. வேதாந்தா தான் இன்னிக்கிருக்கிற ஹிந்து தர்ம்மோட தாத்தா. ஸ்ரமண தர்ம்ம ஏத்துக்கிட்டவங்க வேதாந்தா சொல்ற மாதிரி பலிகளையோ இல்ல பிறப்பால உயர்ந்தவன் தாழ்ந்தவனு சொல்றதையோ ஏத்துக்க மாட்டாங்க. தான் செஞ்ச பாவத்த தியானம் மூலமாவும், அன்பு மூலமாவும் தீர்த்து நிர்வாண நிலைக்கு போறத சொல்றது தான் ஸ்ரமண தர்ம். ஸ்ரமண தர்ம்குள்ள தான் ஜெய்னிஸமும் புத்திஸமும் வருது.’

 

‘நல்லா இருக்கே. நீங்க மத்த மதங்கள பத்தி என்ன சொல்றீங்க?’

 

’ஒரு மனுசன் நிர்வாணமாக மதங்கள் தேவையே இல்ல. அவன் தேர்ந்தெடுக்கிற வழிதான் எல்லாத்துக்கும் காரணம். அத தான் எல்லா மதமும் போதிக்கிறது. இடையில நிறைய புதுமைகள் புகுந்து அந்த பாதைய அழிக்கிது. அப்டிப்பட்ட காலத்தில எல்லாம் ஒரு மஹான் வந்து எல்லாத்தையும் திரும்ப சரியாக்கிறார். என்னப்பொறுத்தவர அப்படி வந்தவர் தான் மஹாவீர், புத்தா, ஈஸா, முஹம்மத் சாப் எல்லாம். யார் வேணாலும் அந்த மோட்ஷத்தை அடைய முடியும். ஆனா அந்த வழி என்னனு ஈஸியா தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும். அதுக்குத் தான் ஜெய்ன் கா தர்ம். ஜெய்ன்ன்ற வார்த்த ஜன் அல்லது ஜின் அப்டீன்ற வார்த்தையில இருந்து வந்தது. ஜன் அப்டீனா மக்கள். மக்கள் நல்ல நிலைக்கு போறதெப்படீனு சொல்றது தான் ஜெய்ன் தர்ம். இல்ல ஜின் அப்டீனா ஜீத்னா. ஆட்கொள்ளுதல். மனச ஆட்கொள்றதுனு சொல்லலாம்.’

 

‘அப்டியா அப்ப மஹாவீர்கு முன்னாடியே பல ஞானிகள் வந்திருப்பாங்கள்ள?’

 

‘ஆமாம். மஹாவீர் இருபத்தி நாலாவது தீர்த்தங்கரா. ரிஷபதேவ் தான் முதல் தீர்த்தங்கரா. ஜெய்ன் தர்ம் இந்த இருபத்தி நாலு தீர்த்தங்ராவ தான் நம்புது. மஹாவீர் தான் கடைசி தீர்த்தங்கர்.’

’ஓ. புத்தர் பத்தி என்ன சொல்றீங்க’

 

‘புத் கா தர்ம்மும் ஸ்ரமண தர்ம் தான். தமிழ்ல நீங்க ஜெய்ன் கா தர்ம்ம சமணம்னு சொல்வீங்க. உங்க திருவள்ளுவர் ஸ்ரமண தர்ம்ல இருந்ததா தமிழ் நாட்ல இருக்கிற ஜெய்ன் லோக் சொல்வாங்க. பிராமானியத்திலயும் வேதாந்தத்திலையும் நம்பிக்கையில்லாத கௌத்தம சித்தார்தா மொதல்ல வந்து சேர்ந்தது ஜெய்ன் தர்ம்ல தான். அதுக்குப் பின்னாடி ஜெய்ன் தர்ம்ல இருக்கிற கடுமையான நோன்பு, தவத்தையெல்லாம் பார்த்து பயந்து அவராவே நிர்வாணத்துக்கு ஒரு பாதைய வகுத்துக்கிட்டாரு. அதுதான் புத் கா தர்ம். புத் கா தர்ம் ஜெய்ன் தர்ம் மாதி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காது.’

 

‘ஜெய்ன் தர்ம் கடவுள் பத்தி என்ன சொல்றது?’

 

‘நீங்க நிர்வாணத்த அடஞ்சா நீங்க தான் கடவுள்னு சொல்லுது’

 

‘அஹம் ப்ரம்மாஸ்மி மாதிரியா?’

 

‘ஆமாம். ஜெய்ன் தர்ம்ல மூர்த்தீய அதாவது சிலைகள வச்சு பூஜா பன்றதுக்கெல்லாம் அனுமதி இல்ல. அதே மாதிரி தீர்த்த யாத்ராவும் இல்ல. இதெல்லாம் பின்னாடி வேதாந் தர்ம்ல இருந்து எடுத்துக்கிட்டது.’

 

’இன்னொரு கேள்வி. உங்கள்ல ஏன் பிரிவுகளெல்லாம் வந்தது. திகம்பரா, ஸ்வதம்பரா போல’

 

‘ஜெய்ன்ல ஸ்வதம்பர்ன்றது ஒரு ஸ்டேஜ். திகம்பர்ரது இன்னொரு ஸ்டேஜ் அவ்ளோ தான். சண்டை சச்சரவு எல்லாம் மக்களா உருவாக்கிக்கிட்டது’

 

‘மக்கள்ன்னா’

 

‘மக்கள்.’

 

‘அதாவது ஜெய்ன்ஸ்’

 

‘ஸ்மிர்தி மாதிரி ஜெய்ன் தர்ம்ம ப்ராக்டிஸ் பண்ணாத ஜெய்ன் லோக்’

 

‘ப்ராக்டிஸ் பண்ணாதவங்கள எப்டி ஜெய்ன்னு கூப்பிடறது?’

 

‘ஹான் பேட்டா. ஹம் ஜெய்னியோ நஹி’ மிக அமைதியான ஒரு ஆண் குரல் முதுகிற்கு பின்னே ஒலித்தது.

 

‘நமஸ்தே ஜீ’ என சாத்வியை நோக்கி சொல்லிக் கொண்டு ஒருவர் ஹஸனது முதுகில் தட்டிக்கொண்டு வந்தமர்ந்தார்.

 

‘ஆமாம் நான் உண்மையிலயே தான் சொல்றேன். நாம யாருமே பிறந்ததால ஜெய்ன் கா தர்ம்ம ஃபாலோ பன்றவங்களா ஆகிட மாட்டோம். வீ நீட் டு ப்ராக்டிஸ். ஆம் ஐ  ரைட் ஸ்மிர்தி’

 

ஹஸனை கொண்டு வந்து விட்டுவிட்டு ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போயிருந்த ஸ்மிர்தி, தன் தந்தையின் குரலைக் கேட்டவுடன் விழித்துக் கொண்டாள்.

 

’மே ஹூ ஆதிநாத் ஜெய்ன், ஸ்மிர்தி கா பாப். ஹஸன் உன்னப் பத்தி எல்லாத்தையும் ஸ்மிர்தி முழுசா சொன்னா. மாஃப் கரோ கொஞ்சம் லேட் ஆயிட்டது’

 

அடுத்த நாட்களை அவருடன் கழித்தான் ஹஸன். அவரைப் பற்றியும் சமணம் பற்றியும் பௌத்தம் பற்றியும் தெரிந்துகொண்டான். வாழ்க்கையில் ஜெய்ன் சொல்லும் தர்மங்களை பின்பற்றுவது மிகவும் கடினமானது என உண்ர்ந்தான். ஆனாலும் அதன் கொள்கைகளில் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. சமணம் கடினம் என எளிதான கொள்கையொன்றை நிறுவிய புத்தரது தர்மத்தையும், வாழ்க்கையையும் படித்தான். அன்று புத்தருக்கு எளிதாகப்பட்ட வழியை இன்று நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான வேலை இல்லை என புரிந்து கொண்டான். இதற்கும் மேல் தன் மகளுக்கு ஸ்மிர்தி என பெயரிட்ட காரணத்தையும் அறிந்து கொண்டான்.

 

‘காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை’. காதல் பற்றிய நினைவுகள் இருப்பதே நமக்கு பெரிய சொந்தம். இதனால் தான் காதலில் தோல்வியுற்றவர்கள் தான் காதலித்தவரின் பெயரை தன் குழந்தைக்கு பெயர் சூட்டுகின்றனர். இதற்கு மதம்கூட குறுக்கே நிற்பதில்லை. சமணர்களும் தங்கள் குழந்தைக்கு தாங்கள் நம்ப மறுக்கும் ஸ்மிர்திகளைக் கூட பெயராய் சூட்டிவர். குழந்தையை அதன் போக்கில் வளரவிட்டு அழகு பார்ப்பர்.

 

 

 

‘இல்ல இஸ்லாம்ல என்ன இருக்குனு மாறினீங்க?’

 

ஹஸனும் ஜோஆனும் காரசாமரான விவாதத்தில் இருந்தனர். ஹஸனுக்கு, ஜோஆனின் இந்த மாறுதலுக்கு பின் இருக்கும் காரணத்தை அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

 

‘நான் சொல்றதுக்கு முன்னாடி. நீ சொல்லு. இஸ்லாம்னா உன்ன பொறுத்த வரைக்கும் என்ன?’

 

’நான் வெளிப்படையா சொல்றேன். எனக்கு இஸ்லாம் பத்தி எதுவும் பேச பிடிக்காது. காரணம் நான் அதை அடிப்படையில இருந்து வெறுக்கிறேன்’

 

‘ஏன் வெறுக்கிற. மே ஐ நோ தி ரீஸன்?’

 

‘ஆஃப் கோர்ஸ். இட்ஸ் ப்ரொமோட்டிங் டெரரிஸம். இஸிட் நாட்?’

 

‘டெரரிஸமா. ஹஸன். டூ யூ நோ ஒன் திங். டெரரிஸம் ஹாஸ் நோ ரிலிஜியன்.’

 

‘பட். நீங்க ந்யூஸ் எல்லாம் பாருங்க. என்ன நடக்குதுன்னு. திஸ் பீப்பிள் ஆர் ரெஸ்பான்ஸிபில். தெயர் தியரி கில்ஸ்’

 

‘நீ முஸ்லிம் கிடையாது, சரியா ஹஸன்’

 

‘ஆமாம். ஆம் அன் எதிஸ்ட்.’

 

’சரி. நீ இஸ்லாம தீவரவாதத்தோட மதமா சொல்ற. உன் சொந்தக் காரங்க யாரும் தீவிரவாதியா மாறிட்டாங்களா? ‘

 

‘இல்ல.’

 

’இல்ல உன்னகிட்ட பழகின யாரும்?’

 

‘இல்ல’

 

‘அப்பறம் ஏன் அப்டி சொல்ற?’

 

’மேம். நீங்க கொஞ்சம் என்ன நடக்குதுனு பாருங்க. 9/11, 27/11, லண்டன் சப்வேன்னு ஏகப்பட்ட இன்ஸிடண்ட்ஸ். நான் சொல்றது புரியும். நான் சின்ன வயசில இருந்து இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்கு தான் தெரியும்’

 

‘இதெல்லாம் டெரரிஸ்ம்னு நான் ஒத்துக்கிறேன். ஆனா இதுக்கெல்லாம் இஸ்லாம் தான் காரணம்னு சொன்னா ஒத்துக்கமாட்டேன்’

 

‘ஏன்? இந்த இன்ஸிடண்ட்ஸ்ல எல்லாம் ஈடுபட்டவங்களோட பேர கொஞ்சம் பாருங்க. எல்லாம் முஸ்லிம்ஸ்.’

 

‘ஓகே. ஐ வில் ஆஸ்க் யூ சம்திங். நீங்களும் தான் ஹஸன்னு முஸ்லிம் பேர் வச்சிருக்கீங்க. நீங்க செய்ற தப்புக்கெல்லாம் இஸ்லாம தப்பு சொல்ல முடியுமா?’

 

‘ஆனா அவுங்கள மாதிரி நான் என்ன முஸ்லிமா சொல்லிக்கிறது கிடையாதே?’

 

’அவுங்க தன்னை முஸ்லிம்னு சொல்லிக்கிறதால அவங்க முஸ்லிம் ஆகிடுவாங்களா?  இஸ்லாம் சொல்றபடி இல்லாட்டி எப்படி முஸ்லிமாகிறது?’

 

’எஸ். பட் தே ஸே ஸோ.’

 

‘ஹாவ் யூ எவர் ரெட் குர்ஆன்? நேர்மையா சொல்லு. குர்ஆன எப்பவாச்சும் படிச்சிருக்கியா?’

 

‘இல்ல தொட்டதே கிடையாது. எனக்கு அரபி வாசிக்க தெரியாது’

 

‘நான் குர்ஆன தமிழ்ல படிச்சிருக்கீயானு கேக்கிறேன்.’

 

‘இல்ல. பார்த்திருக்கிறேன். தட்ஸ் ஆல்’

 

’படிச்சுப்பார் தெரியும். இஸ்லாம் சொல்லுதா இல்ல இவங்களா சொல்றாங்களானு’

 

‘குர்ஆன்ல ஜிஹாத் பத்தி எதுவும் இல்லனு சொல்ல வறீங்களா?’

 

’இல்ல. ஜிஹாத் பத்தி குர்ஆன் பேசுது. ஆனா அதுக்கு நீ வச்சிருக்கிற அர்த்தம் தான் வேற. எங்க ’ஜிஹாத்’கான மீனிங் சொல்லு?’

 

‘இதென்ன. எனக்கு தெரியாதா? ஜிஹாத்னா புனிதப்போர்னு அர்த்தம்.’

 

’இஸிட்? யார் சொன்னா? ஜிஹாத்னா புனிதப்போர்னு?’

 

‘எவ்ரிபடி. ஐ ஹாவ் ஆல்வேஸ் ஹெர்ட் இட். ஈவன் ஃப்ரம் மை ஹிஸ்டரி மேம்.’

 

‘குட். பட் ஜிஹாத்னா புனிதப் போர்னு அர்த்தம் இல்லை’

 

‘பின்ன?’

 

‘Struggle, Strive, Protest, போராட்டம், கடும் உழைப்பு, எதிரிப்பு, ஆட்சேபம்னு அர்த்தம்.’

 

‘எதுக்கான போராட்டம்? போருக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்னு தான் மேம்.’

 

’போருக்கும் போரட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

‘எப்டி?’

 

’இப்ப உனக்கும் இன்னொருத்தருக்கும் ஆகலைனு வச்சுக்கோ. ஏதோ கருத்து வேறுபாடு. அவர எதிர்த்து போராடறது உன் உரிமை இல்லையா? போராட்டம்னா உன்னோட ஆட்சேபத்த வெளிப்படுத்திறது. போய் போட்டு தள்றதில்ல.’

 

‘இது தான் அர்த்தம்னு சொல்ல வறீங்களா?’

 

‘சொல்லவெல்லாம் வேண்டாம். அது தான் ஜிஹாத்தோட அர்த்தம்.’

 

‘…..’

 

’இந்த உலகத்தின் மிகப் பெரிய ஜிஹாத் என்பது ஒருவன் தன் மனதை எதிர்த்து ஜிஹாத் செய்வது தான்னு நபி சொல்லியிருக்கார்.’

 

’அதாவது போரடறது எல்லாமே ஜிஹாத் தான்?’

 

‘ஆமாம். கெட்ட அரசனை எதிர்த்து மக்கள் செய்வது போல. ’

 

’புரட்சி, ரெவல்யூஷன்’

 

‘யெஸ் ரெவொல்யூஷன் ரெகொயர்ஸ் ப்ரொட்டெஸ்ட். ரெவல்யூஷன் ரெகொயர் ஜிஹாத். ரெவல்யூஷம் மே சம்டைம் ரெகொயர் வார். புரட்சிக்கு சில சமயம் போர்களும் அவசியம்’

 

‘கொடூரமான முதலாளியை எதிர்த்து தொழிலாளிகள் செய்வது, தகப்பனின் தவறை எதிர்த்து மகன் செய்வது, தன்னுள் உள்ள கெடுதியை எதிர்த்து தானே செய்வது’

 

‘ஆஃப் கோர்ஸ்’

 

 

 

‘இன்னிககு நைட் யாரும் மெஸ்ஸுக்கு சாப்பிட போக வேண்டாம்’

 

ஹஸன் பனிரெண்டாம் வகுப்புக்குள் சென்ற போது பி.டிக்களின் அராஜகம் தலைதூக்கி இருந்தது. முறையான காரணம் எதுவும் இன்றியே பல மாணவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பி.டிக்களுக்கு பிடிக்காதவர்கள்  என்ற கணக்கில் எல்லாம் தண்டனை இல்லை. அவர்களைப் பொறுத்த வரை தங்கள் மீதான பயம் மாணவர்களுக்கு எப்போதும் மனதில் இருக்க வேண்டும். அதனால் அவ்வப்போது இப்படிப்பட்ட வேட்டைகள். இவ்வேட்டைகளின் பலனாக பலரும் காம்ரேட்டுகளாயினர். புரட்சி ஒன்று உள்ளே புகைந்து கொண்டிருந்தது. இது நிர்வாகத்திற்கும் தெரியாமல் இல்லை.

 

பள்ளி நிர்வாகிகள் தேர்ந்த முதலாளிகளைப் போலவே செயல்பட்டனர். அடித்து ஒடுக்க பி.டி படை இருந்தது போலவே, ஒரு ரகசிய ஒற்றர் படையும் இருந்தது. சில ஆசிரியர்களும், மாணவர்களும் ஒற்றர்களாய் செயல்பட்டனர். மிக எளிதில் கண்டுகொள்ள இயலாத அளவிற்கு மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் மாணவர்களினூடே அலைந்தனர். இவர்கள் வாயிலாக மாணவர்களின் ஒவ்வொரு அடியும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. எதிர்க்கத் துணியும் அனைவரும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

 

இதில் ஹஸன் மிகவும் சிக்கலானவன். வெளிப்படையாக இருப்பதன் எதிர்மறை வெளிப்பாட்டை அவனது கடந்த காலத்தின் ஊடாக அறிந்திருந்ததால் அவனால் மறைந்து வாழ முடிந்தது. மனதை மறைத்து வாழ முடிந்தது. கூட்டம் கூட்டி நான்கு பேர் முன்னனியில் தலைவனாக இருப்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. தனியாக இருந்து கொள்கைகளை விளக்கி விடைதருவதே அவனுக்கு விருப்பம். அச்சூழலில் பொருத்தமாகப்பட்டது. மூளை எப்போதும் திரை மறைவுக்குப் பின் தான் இருக்க வேண்டும். வெளியே தெரிந்தால் பல்வேறு மட்டங்களில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க வேண்டிவரும்.

 

அன்றைய தினம். ஒரு பெரும் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. விடுதியில் தன்னை சில பி.டிக்களே வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துவதாக ஒருவன் நிர்வாகிகளிடம் புகார் கூறினான். அதனை என்னவென்று கவனிக்குமாறு பி.டிக்களுக்கு உத்தரவு பறந்தது. பிடிக்கள் அந்தப் பையனை பிடித்து லேசாக அப்ப்டி இப்படி அடிக்க அவன் இறந்து போனான். என்ன செய்ய?

 

அதனை நிர்வாகம் ஜோடனை செய்து படிப்பில் தோல்வியுற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான் என மாற்றியது. மாணவர்கள் மத்தியில் தீ பற்றிக்கொண்டது. விளக்கம் கோரினர். ஒடுக்கம் பதிலாய் தரப்பட்டது. 144 தடைச் சட்டத்தைப் போல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரச்சனை சீராகும் வரை மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. சற்று தொலைவில் இருந்த உணவு விடுதி வரை சென்று வர மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

 

தோழர்கள் பலர் ஒன்று கூடி மேற்கண்ட முடிவிற்கு வந்தனர். அன்று இரவு உணவை புறக்கணிப்பதென. திட்டம் அது மட்டுமல்ல என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

 

மாணவர்களின் கோபத்தை குறைக்க நிர்வாகம் இரண்டு நாட்களாக விருந்து போல் உணவு படைத்து மாணவர்களின் கவனத்தை தன்னால் முயன்ற அளவில் சிதறடிக்கப் பார்த்தது. மணி ஏழானது. எட்டானது. ஒன்பதானது. மாணவர்கள் யாரும் வெளியே வரவில்லை. உணவின் மனம் விடுதியில் பசிக்காதவருக்கும் பசிக்க வைத்தது. பசியும் உதாசீணமும் மாணவர்களின் கோபத்தை முறுக்கிவிட்டது.

 

உணவு விடுதியில் இருந்து செய்தி டைரக்டர்களிடம் சென்றது. டைரக்டர்கள் பி.டிக்களை கைகாட்டினர். ஒன்பது மணிவரை பொறுத்துப் பார்த்த பி.டிகள் விடுதிக்குள் உணவுக்கு வருமாறு நுழைந்து அறிவித்தனர். வெளியே யாரும் வரவேண்டாம் என்றும் தனியாக யாரும் சென்று மாணவர்கள் சார்பாக பேச வேண்டாம் என்றும் ஏற்கனவே மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

எவ்வளவு மசிந்து பேசியும் வெளியே வராதது கண்ட பி.டிக்கள் சினத்தின் உச்சிக்கே சென்றனர். விடுதிக்கதவுகளை திறந்து கொண்டு அறைகளுக்குள் நுழைந்தனர். மாணவர்களை கன்முன் தெரியாமல் தாக்கினர். மாணவர்கள் அலறிக்கொண்டு அறைகளைவிட்டு வெளியேறி உணவு விடுதிக்குள் நுழைந்தனர். அமைதியாக அமர்ந்து உணவருந்தினர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பி.டிக்கள் எண்ணினர். திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

தகவல் தெரிந்த உணவு விடுதியினுள் இருந்த தோழர்கள் தங்கள் அருகில் இருந்தவர்களிடம் அடுத்த கட்ட திட்டத்தை கூறினர்.

 

‘இங்க பாருங்க ஃப்ரண்ட்ஸ். நம்ம ஸ்ட்ரெந்த் பி.டிக்களவிட அதிகம். இப்ப நமக்கு வேண்டியதெல்லாம் ஒற்றுமை அவ்ளோதான். சரியா?. எல்லாரும் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலைமையில இருக்கோம். சரியா? கையில இருக்க ப்ளேட் போதும் நாம இன்னிக்கு இந்த நிலைமைய கையில எடுக்க. என்ன? எல்லாரும் தயாரா இருங்க. ஒரு ப்ளேட் பறக்கும். பறந்து போய் ஒரு பி.டி முகரைய ஒடைக்கும். அதுதான் நம்ம சிக்னல். ஃபாலோ தெம். கவனமா இருங்க. நம்ம குறி பிடி தான் ஓ.கே.’

 

சலசலப்பு அடங்கியது. வயிறு முட்ட தின்றுவிட்டு சாதித்துவிட்ட ஒளியுடன் அந்த பி.டி கையில் ஒரு வாழைப் பழத்துடன்  சென்றார். எல்லோரையும் பார்த்து ஒரு ஏளணப் புன்னகையை உதிர்த்தபடி, வாழைப்பழத் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு தட்டு அவரை நோக்கி சீறி வந்தது. குனிந்து கொண்டார். தட்டு பின்னால் இருந்த மற்றொரு பி.டியின் தலையை பதம் பார்த்தது. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் மாணவர்கள் எழுந்தனர். தட்டு மழை சராமாரியாக பொழிந்தது. அங்கு அது நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு மாணவர்குழு அடுக்களையினுள் புகுந்து கத்தி, அறிவாள்மனை, கரண்டி என அனைத்து பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டது.

 

என்ன நடக்கிறது என அறிந்து கொள்ளும் முன் பி.டிக்களை மாணவர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர். பைகளில் இருக்கும் பொருட்களை கீழே போட்டுவிட்டு கையை பின்னால் வைத்து கட்டியவாறு தரையில் முதுகுப்புற படுக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது. முதலில் எதிர்த்த பி.டிக்களுக்கு சுளீர் சுளீர் என விழுந்தது. அனைவரும் அவ்வாறே செய்தனர். பின்னர், ஒரு குழு மாணவர்கள் விடுதிக்குள் சென்று ’டை’களை எடுத்து வந்தனர். டையைக் கொண்டு பி.டிக்கள் அனைவர் கையும் பிணைக்கப்பட்டது. அனைவரும் விடுத்திக்குள் தள்ளப்பட்டனர். ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் எல்லோரும் தனித்தனி அறையில் சிறை தள்ளப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். நம்பிக்கைக்குரிய விடுதியில் தங்கிய ஆசிரியர்களும் விடுதி ஊழியர்களும் பள்ளி ஊழியர்களும் மாணவர்களுடன் இணைக்கப்பட்டனர். பிறருக்கு விடுதிக்குள்ளே சிறை. பள்ளியில் இருந்து வெளியே செல்லும் தொலைத் தொடர்பு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. அலைபேசிகள் அனைத்தையும் வழக்கமாக பள்ளி பயன்படுத்திய ஜாமர் கருவியை வைத்தே செயல் இழக்கச் செய்தனர். மாணவியர் விடுதியை பூட்டி அவர்களுக்கு ஏதும் ஏற்படாவண்னம் சில ஆசிரியர்களே காவலில் நிறுத்தப்பட்டனர். புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நடந்தது.

 

அடுத்து, நிர்வாகிகள் அறை. நிர்வாகிகளான டைரக்டர்கள் பத்து பேரும் இரவு எட்டு முதல் ஒன்பது வரை பள்ளியின் நிர்வாகிகள் அறையிலேயே இருப்பர். அன்று சில பிரச்சனை இருந்ததால், பத்து மணிவரை அங்கே தான் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தனர். தண்ணி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு குழு இந்த அறையை சுற்றி வளைத்தது. நிதானமாக அறைக்கதவை நெருங்கியது. கதவைத் தட்டியது. கதவு திறந்தது. குழு உள்ளே புகுந்தது. அனைவரும் சுதாரிப்பதற்குள் சிறைபிடிக்கப்பட்டனர்.  இது தான் ஒரு புரட்சியில் மிக முக்கியமான வேலை. சுதாரிப்பு. நிர்வாகிகள் உளறினர். ஏதேதோ திட்டித் தீர்த்தனர். ஒருவர் வெளியே வர மறுத்தார். தரதரவென இழுத்து வரப்பட்டார். அனைவரும் விடுதி அறைகளில் அடைக்கப்பட்டனர். பள்ளியில் ஆயுதம் தாங்கிய செக்யூரிட்டிகள் குறைவு. இரண்டே இரண்டு பேர் தான். மிக எளிதாக புரட்சி நடந்து முடிந்திருந்தது. இரண்டு துப்பாக்கிகளும் என்.எஸ்.எஸ் கேடட்களிடம் கொடுக்கப்பட்டது. பள்ளி தற்போது மாணவர் புரட்சி படையுடன். ஆனால் புரட்சி இன்னும் ஓயவில்லை. இனிதான் ஆரம்பிக்கவே இருக்கிறது.

 

மிகவும் துல்லியமாக திட்டங்கள். நிறை குறைகளை துல்லியமாக கணித்து காய் நகர்த்தும் திட்டம். நிச்சயம் மாணவர்களால் இயலாது. ஆனால் உண்மை என்ன வென்றால் இது முழுக்க முழுக்க மாணவர்களின் திட்டம். ஹஸனது திட்டம். திட்டத்தின் நோக்கம் பள்ளியில் நடப்பதை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவது. கற்பனையிலேயே கட்டிவிட்டான். திட்டத்திற்கு உயிரூட்ட தோழர்கள். முடிந்தது.

 

பள்ளியை இப்படி கட்டுக்குள் விடியும் வரை மட்டுமே வைக்க முடியும். அதற்குள் புரட்சியின் நோக்கம் முழுமையடைய வேண்டும். இது தான் நோக்கம். விடிவதற்கு சற்று நேரம் இருந்தது. மாணவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு திடலில் அமர வைக்கப்பட்டனர். அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாய் மனதை ஒரு நிலைப்படுத்தினர். பின்னர் தோழர்கள் தங்களது திட்டத்தை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினர். படை கிளம்பியது.

 

பள்ளியை அப்படியே விட்டுவிட்டு. பள்ளிக்கு வெளியே சென்றனர். பள்ளி, முக்கிய சாலையில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருந்தது. பேரணியாக கையில் செய்திப் பலகைகளுடன் சென்ற மாணவர்கள் இறுதியாக சாலையை மறித்து அமர்ந்தனர். அமர்ந்து சில நிமிடங்களில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வந்து சேர்ந்தனர். போலிஸ் குவிந்தது. பள்ளிக்குள் நடக்கும் அனைத்தும் தெளிவு படுத்தப்பட்டன. அரசின் கவனத்திற்கு சென்றது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த மாணவனின் மரணத்துடன் தொடர்புடைய பி.டிக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். மேலும் பலரும் அவமானம் தாங்காமல் வெளியேறினர். நீதிமன்றம் தலையிட்டது. தண்டனை கிடைத்தது. இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இப்படிப்பட்ட பெரும் பள்ளிகள் மீதான அரசின் கண்காணிப்பும் பலமாகியது. நிலைமை சீரானது. புரட்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு இறுதிவரை தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஹஸனுக்கு பள்ளிப்படிப்பும் முடிந்து கோயும்புத்தூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.