Browsed by
Month: July 2014

ஒளி 222 கிராம்: பகுதி 3

ஒளி 222 கிராம்: பகுதி 3

 

What is desert? பாலைவனம் என்றால் என்ன?

 

Formal Definition in book: Desert is a dry place where rainfall is scarce. Ex. Thar Desert, India.

அதிகாரப்பூர்வமான  புத்தக பதில்: பாலைவனம் என்பது மிகவும் குறைவான மழை பெய்யக்கூடிய வரண்ட நிலப்பரப்பைக் குறிக்கும். எ-டு தார் பாலைவனம், இந்தியா.

 

’நீ மனசில என்ன நினைச்சுக்கிட்டிருக்க. என்ன எழுதிவச்சிருக்க? பாரு. இதுக்கு மார்க்கா? போ இங்கிருந்து.’

 

A desert is one area like us. There rain is low. Heat is high. Food is low. Dust is high. Camel is high. Cactus is high. People wear loose dress. There is oasis some places. Farming there. Farmers eat cactus. It different from our cactus. If is no rain, our city too become desert. No tree no rain. All the best. Cut trees build homes.

 

நான்காம் வகுப்பு. சோஸியல் ஸ்டடீஸ் பாடம். நூற்றுக்கு முப்பது மார்க். பாஸாக இன்னும் பத்து தேவை. ஆசிரியையை அனுகி இன்னும் சில மதிப்பெண்கள் கேட்டதற்குத் தான் மேற்கண்ட பதில்.

 

‘மேம் மேம் ப்ளீஸ் மேம்’.

 

உண்மையில் முந்தைய தினம் வரை இந்த தொடர் ’மிஸ் மிஸ் ப்ளீஸ் மிஸ்’ என்று தான் இருந்திருக்கும். இன்று அந்தப் பள்ளியில் தமிழ் மிஸ்களை அம்மா என்றும் மற்ற மிஸ்களை மேம் என்றும் கூப்பிடவெண்டுமென்று காலை அஸம்ப்ளியில் புதியதோர் சட்டம் நிறைவேற்றப் பட்டிருந்தது. மீறினால் ஃபைன் கட்ட வேண்டும் இல்லை பி.டி சாரிடம் பத்து அடி வாங்கிவிட்டு ஐந்நூறு மீட்டர் மைதானத்தை ஐந்து ரவுண்டு அடிக்க வேண்டும். இதேபோல் ஏற்கனவே அமலில் இருந்த பள்ளி வளாகத்தினுள்ளும் பேருந்துகளிலும் ஆங்கிலம் தான் செப்ப வேண்டும் என்ற விதிக்கும் இது பொருந்தும். மெட்ரிகுலேஷன் பள்ளியாம்.

 

‘பாலைவனத்தில விவசாயிகள் கேக்டஸ சாப்பிடுவாங்கனு எழுதி வச்சிருக்க. கேக்டஸ்னா என்னனு தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்க.

 

‘கேக்டஸ் மேம்’ என்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னான்.

 

‘இடியட். கேக்டஸுக்கு தமிழ்ல என்ன?’

 

‘பேரிச்சம் பழம் மேம்’

 

‘வெளங்கும். கேக்டஸ்னா கத்தாழை. பேரிச்சம் பழத்துக்கு டேட்ஸ். போ போய் மத்தவங்க பேப்பரலாம் வாங்கி பாரு ஃபூல். அர்த்தம் தெரியாதுனு தானே மனப்பாடம் செஞ்சு எழுத சொல்றோம். அப்பறமும் எதையாவது கிரிக்கி வச்சுட்டு ஏன் மேன் எங்கள பாடா படுத்திறீங்க’

 

‘மிஸ் மிஸ் அடுத்த கொஸ்டின் பாருங்க மிஸ். கரெக்ட்டா எழுதியிருப்பேன்’

 

வேண்டா வெறுப்பாக அடுத்த பக்கத்தை திருப்பி பார்த்த மேமுக்கு பேரதிர்ச்சி. முகம் கடுங்கோபத்திற்கு உள்ளானது.

 

‘ஸ்டுப்பிட். ஸ்டுப்பிட். வாட் ஹாவ் யூ ரிட்டன். திஸ் இஸ் எக்ஸாம் ஷீட் நாட் யூர் ட்ரீம் ஜர்னல். கெட் அவுட். மீட் தெ ப்ரின்ஸிபல் மேம்.’ என்ற காட்டுக் கத்தலுடன் விடைத்தாள் பறந்து வந்து முகத்தில் விழுந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன எழுதியிருக்கிறோம் என பக்கத்தை திருப்பிப் பார்த்தான்.

 

What do you know about himalayas? explain in detail. இமயமலையைப் பற்றி உனக்கு தெரிந்தவற்றை விரிவாக விவரி?

 

Himalayas is in north india. Over cool there. Snow there. Water, oil become ice. Simple it is like fridge. Don’t know how cook to inside fridge. Want to go there. Can ask rajni. Because he go there always. Rajni is our superstar. But good boy. Go to himalayas for meditation. See this in baba film. Good movie. Last month I watched it. Baba first say no god. Drinks and cigerets and become bad boy. No light. In dark. He go to himalaya one day. Get 7 mantras. Get light. Use it. Become good. Go to Himalaya, get light, bad become good. So saints live there. Good movie. Good himalayas. Go get mantras.

 

பதிலை ஒன்றுக்கு பல முறை படித்துப் பார்த்தான் அவனுக்கெதுவும் தவறாகத் தெரியவில்லை. ப்ரின்ஸிப்பால் ரூமுக்கு நேராக நீதி கேட்டு நடையைக் கட்டினான். கிடைத்ததென்னவோ வேறு!

 

 

என்கொயரி. ஏதோ போலிஸ் என்கொயரி என பயந்துவிட வேண்டாம். ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் அடிக்கடி கேட்கும் சொல்தான். என்கொயரி எனப்படுவது யாதெனின் தவறு செய்பவராக மேம்களால் கருதப்படுபவர்களை பிரின்ஸிபால் மேம் விசாரித்து நீதி வழங்குவது. இதுவும் நீதிமன்றங்களைப் போல் தான். முக்கால்வாசி அநீதி தான் நீதியாய் வந்து விழும்.. என்கொயரிக்கு உள்ளானவர் பிறரால் ஒதுக்கி வைக்கப்படுவர். அதுவும் தண்டனை ஏதும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவ்வளவு தான். வேலை முடிந்தது. அவருக்கு ப்ளாக் ஸ்டார் சார்ட் எனும் குற்றப் பட்டியலில் என்றும் நீங்கா இடம் உண்டு. அதன் பின் ’என்கொயரி போய்ட்டு வந்தவனுடன் என்ன பேச்சு?’ என்கிற ரீதியில் கவனிப்பு இருக்கும். பட்ட கண்ணிலே படும் கெட்ட குடியே கெடும்.

 

என்கொயரிக்கு செல்லும் பையன்கள் காதல் செய்திருப்பார்கள் இல்லை லேடிஸ் டாய்லட்டுக்குள் என்ன தான் செய்கிறார்கள் என்று எட்டிப்பார்த்திருப்பார்கள் இல்லை எதையாயது ஆட்டையைப் போட்டிருப்பார்கள் இல்லை பிட் அடித்திருப்பார்கள் இல்லை ரேங்க் கார்டில் பெற்றோர்களின் கையெழுத்தை இவர்களே போட்டிருப்பார்கள் இல்லை பக்கத்தில் அமர்ந்திருப்பவனை கடித்து வைத்திருப்பார்கள், அடித்து உருண்டிருப்பார்கள் அதுவும் இல்லை என்றால் எதையாவது உடைத்துத் தள்ளி இருப்பார்கள்.

 

என்கொயரி செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவு. செல்லும் காரணமும் உப்புக்குச் செல்லாதது. ’என் மேல இங்க்க தெளிச்சிட்டா மேம்’ என்று தெளிக்கப்பட்ட மையைவிட ஆயிரமாயிரம் மடங்கு கண்ணீர் சிந்தும் வகையறாக்கள். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேசும் அளவிற்கு தகுதியற்றது. விட்டுவிடுவோம்.

 

இந்தக் காரணங்கள் எதனுள்ளும் அகப்பாடத ஆனால் என்கொயரியில் மட்டும் சிக்கும் ஒருவன் இருக்கவே செய்தான். அவனது மனமும் அதன் வயதுக்கு மீறிய எண்ணங்களும் குற்றம் பிடிக்கப்பட்டன. எடுத்துக்காட்டுகள் பின்னே வருகின்றன. நமக்கு எடுத்துக்காட்டுகள் என்றாலும் அவனுக்கு அது தன்னை நிர்ணயித்த பொழுதுகள்.

 

என்கொயரிக்குச் செல்வது என்பது அவனுக்கு மிகச் சாதரணம். பள்ளியில் எங்கு தவறு நடந்தாலும் முதலில் அழைக்கப்படுவது பிடிக்கப்படுவது எல்லாம் அவன் தான். நான்காம் வகுப்பில் என்று அந்த சோஸியல் ஸ்டடீஸ் மேம் வந்து சேர்ந்ததோ அன்றே அவனுக்கு பிடித்தது சனி. பாஸாக ஒரு பத்து மார்க் கேட்டது தவறா? நாளொரு குற்றம் பொழுதொரு என்கொயரி. பல முறை பள்ளியில் யாரிடமாவது சிக்கிப் பரிதவிக்கும் கனவுகள் அவனுக்கு வந்திருக்கின்றன ஆனால் அவன் என்றும் கனவு கண்டதில்லை, அந்த சோஸியல் மேம் ப்ரின்ஸிபால் பதவிக்கு வருமென. அவன் ஏழாம் வகுப்புக்குச் சென்ற போது நிஜத்தில் வந்து தொலைத்தது. ஏழு முற்றி ஏழரையானது.

 

 

’கால் ஹிம்’

 

எட்டாம் வகுப்பு. ஆங்கில வகுப்பு. கலிவர்ஸ் ட்ராவல்ஸ். ஆறடி மனிதன். பெயர் கலிவர். கப்பல் மாலுமியாகி ஊர் சுற்ற ஆசை. தந்தையின் ஆசையோ டாக்டர் ஆக்குவது. கப்பல் மாலுமி + டாக்டர் = கப்பலில் டாக்டர்.  தீர்ந்தது இருவர் ஆசையும். கப்பலில் டாக்டர் எல்லாம் ஆகியாயிற்று. அப்படி கப்பலில் ஒருமுறை செல்லும் போது விபத்து. நீந்திக் கரை சேர்ந்த அலுப்பில் தூக்கம். விழித்துப்பார்த்தால் எழ இயலவில்லை. யாரோ இழுத்துக் கட்டியதைப் போல். அவனைச் சுற்றி பல ஒரு விரல் அளவுடைய மனிதர்கள் திரிந்தது பிறகு தான் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சின்ன மனிதர்களிடம் என்ன பாடுபடுகிறான் என்பது முதல் பாதிக் கதை. இதே போல் மற்றொரு விபத்தில் கலிவர் பெரிய சைஸ் மனிதர்களிடம் சிக்கிக் கழிப்பான். அப்போது அவன் அவர்கள் விரலளவு இருப்பான். இதுபோக கலிவரின் இன்னும் இரண்டு பயணங்கள் உள்ளன.

 

எப்படிப்பட்ட கற்பனை பாருங்கள். எவனும் யோசித்திருக்க முடியாது. கதையில் எழுத்தாளர் கற்பனை வடிவாக சொல்ல வருவது அன்றைய ஆங்கில சமூகத்தின் நிலையை. கூர்ந்து கவனித்தால் புரியும். இப்படிப்பட்ட கலிவராக ஒற்றை ஆளாய் பலரும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். மனம் சிறுத்த மனிதர்களிடம் அல்லது ஆணவம் பெருத்த மனிதர்களிடம் சிக்கித் தவிக்கிறார்கள். அவர் தங்களிடம் ஒன்றி தங்களைப் போல் மாற வேண்டும் என்பது அந்த சிறிய, பெரிய மனிதர்களின் பேரவா. ஆனால் அது இயலாதது. தங்களை மாற்றிக்கொள்ள கலிவர்களால் முடியாது. அதைத் தான் எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட் மனிதர்களின் உயரமாய் உருவகப்படுத்தியுள்ளார்.

 

வகுப்பு இடையில் தடைபட்டது. ஆஃபிஸில் வேலை செய்யும் மேம் வந்திருந்தார். இவர் இப்படி வந்தால் ஒன்று தான் அர்த்தம். என்கொயரி ஆரம்பிக்க இருக்கிறது. அதுவும் இது அவனது வகுப்பு. இங்கு வந்து நின்றாலே அனைவருக்கும் புரிந்துவிடும் அவனை ப்ரின்ஸிபால் அழைக்கிறார் என்று. வாயெடுத்துக் கூப்பிடும் முன்னே அவனுக்கு புரிந்துவிட்டது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அவனைத் திரும்பி பார்த்தனர். எழுந்து சென்றான்.

 

இத்தனை நாளாய் மனதில் இருப்பதை வெளியில் சொன்னால் தான் என்கொயரி வைப்பார்கள். இப்போதெல்லாம் மனதில் நினைத்தாலே பிடித்து விடுகிறார்கள்.  இப்போது தான் தன் நிலையை கலிவருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் அழைத்து விட்டார்கள்.

 

‘வாட் ஆர் யூ திங்கிங் இன் யூர் மைண்ட்’.

 

நீ என்ன மனசுல  நினைக்கிற? இது தான் அவனைக் கண்டவுடன் அந்த மேம் முதலில் கேட்கும் கேள்வி. நான்காம் வகுப்பில் இருந்தே தொடர்கிறது. பள்ளியில் படிக்கும் மற்ற எவருடைய மனதும் அவர்களுக்கு இவ்வளவு ஆவலைத் தந்ததில்லை. இவன் மனது தந்துவிட்டது. இந்தக் கேள்விக்கு வழக்கமாக அவன் தரும் பதில் மௌனமாகத் தான் இருக்கும். இன்றும் அப்படித் தான்.

 

‘உன்னால எதுவும் செய்யாம இருக்க முடியாதா. உனக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்ல’

 

அக்கா தங்கச்சி இல்லை. இது காலகாலமாக இந்திய சினிமாக்களில் பொம்பள பொறுக்கிகளுக்காகவென்றே எழுதி வைக்கப்பட்டிருக்கும் டயலாக். இதை எதற்காக தன்னிடம் கேட்கிறார் என யோசித்துக் கொண்டிருந்தான். ஏனென்றால் அவன் எப்படிப்பட்டவன் என்றால் பெண்களை பெண்களாகவே மதிக்காதவன். தவறாக எண்ணிவிட வேண்டாம். அவனுக்கு பெண்கள் பின்னாடி சுற்றுவது, ‘இன்னிக்கு அந்த ப்ராப்ளம்க்கு ஆன்ஸர் கண்டுபிடிச்சிட்டியா? நீ க்ரேட்’ என வழிவது இதெல்லாம் ஆகவே அகாது. ஆண்களிடம் எப்படி நடந்து கொள்வானோ அப்படித் தான் பெண்களிடமும். சமத்துவம் பேணுவதில் கைதேர்ந்தவன். எப்படி மாணவர்களிடம் நோட்டைப் பிடுங்கி ஹோம்வொர்க்கை காப்பியடிப்பானோ அப்படித் தான் மாணவிகளிடமும். ஒரு பெண் இவனை ப்ளடி இடியட்  என்று திட்டி தலையில் எதையோ சுறீரென்று எறிந்துவிட்டாள். காயம்பட்டு ரத்தத்துடன் கோபமும் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. கையில் சிக்கிய ஏதோ ஒன்றை பதிலுக்கு இவனும் எறிந்துவிட்டான். அவளுக்கும் தலையில் ரத்தம் கொட்டியது. சாந்தி சாந்தி சாந்தி ஹி.

 

மறுநாள் அவள் தன் பெற்றோருடன் வந்துவிட்டாள். வழக்கம் போல் என்கொயரி. ‘மொதல்ல அவ அடிச்சா அதனால நான் திரும்ப அடிச்சேன். தட்ஸ் ஆல். மத்த பசங்கள போல தேச்சுவிட்டுட்டு இளிச்சுக்ட்டே போகலாம் எனக்குத் தெரியாதுங்க. உங்க பொண்ண கண்டிச்சு வைங்க’ என்று கூறிவிட்டு வெளியேறினான். இப்படிப்பட்ட ஒருவனிடம் எப்படி இந்தக் கேள்வியை கேட்கலாம். அக்கா தங்கச்சி இல்லை என்று.

 

‘என்னாச்சு மேம்’  என கேட்டவாறே ப்ரின்ஸிபல் முன்னிருந்த டேபிளில் கைவைத்தான். இது அவனிடம் இன்னொரு பழக்கம். என்கொயரிக்கு செல்பவர்கள் எல்லாம் பவ்யமாய் கையை முன்னாலோ பின்னாலோ வைத்துக்கட்டி தான் நிற்பார்கள். யெஸ் மேம், நோ மேம் அல்லது அழுகை இது மூன்று தான் பதிலாக வரும். அவன் அப்படியல்ல.

 

என்னிடம் நேராகக் கேள் நான் பதில் சொல்கிறேன். நிச்சயம் பொய்யாக இராது. செய்தால் ஒப்புக்கொள்வேன். இந்த அடிமையிடம் விசாரிப்பது போல் விசாரிப்பதெல்லாம் என்னிடம் வேண்டாம். அப்படி விசாரித்தால் பதில் எதுவும் வராது. என்ன கத்த விரும்புகிறாயோ கத்திக்கொள். எனக்கு ஒன்றும் குடிமுழுகி விடாது. உன்னால் பெரிதாக என்ன செய்ய முடியும்? டீசி கொடுப்பாயா? கொடு. வருவதைப் பார்ப்போம். இல்லை படிக்காமல் ஆடு மாடு கூட மேய்ப்போம். வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு. என் மீது என்ன குற்றம் சுமத்துவாய்? சுமத்திக்கொள் சற்றும் கவலையில்லை. நான் குற்றம் செய்தால் உன்னைவிட எனக்கு நான் கொடுக்கும் தண்டனை மிகவும் கொடியதாக இருக்கும். பிறரை இம்சிக்கக் கூடாது என்பதில் உன்னைவிட நான் உறுதியானவன்.

 

இப்படிப்பட்ட ஒரு தத்துவவாதி அவனுள் உறங்கிக் கொண்டல்ல முப்பொழுதும் கொட்டக் கொட்ட விழித்தே கிடந்தான். அனேகமாக இப்படி யோசிப்பதை அவன் தந்தையிடம் இருந்து பெற்றிருப்பான். சிறுவயதில் மிகவும் கடினப்பட்டு பேசக் கற்றான். அதனால் வாயைத் திறந்தவுடன் மடை திறந்தாற் போல் எல்லாம் அவனால் பேச முடியாது. ஒவ்வொரு வார்த்தையையும் அடி மனதிலிருக்கும் எண்ணங்களிலிருந்து பிடித்துக் கட்டி இழுத்து எடுத்து வர வேண்டும். அதனால் அவ்வளவு எளிதில் பொய் கூற இயலாது. கூறினால் தடுமாற்றமும் திக்கலும் அதிகமாக இருக்கும். சிறு வயதிலிருந்தே பொய் சொன்னால் எவரும் எளிதாக கண்டுகொள்வர். அதனாலேயே பொய் சொல்வதை தவிர்த்து வந்தான். பொய்க்கு பதில் அவன் கண்டடைந்திருந்தது மௌணம்.

 

அவன் வீட்டு மாடியில் இருந்த தந்தையின் சிறிய நூலகம் பல தத்துவ நூல்களை கொண்டிருந்தது. அவற்றால் விளைந்த வினையாகக் கூட இருக்கலாம். இப்படி யோசிப்பது. யோகாவும் தியானமும் அவன் விரும்பி மேற்கொண்டவை. இப்படி என்கொயரியில் சிக்குவது என்பது பிறருக்கு காய்ச்சலையே வரவழைக்கும். ஆனால் அவனோ அச்சமயத்தில் தியானத்தில் இருப்பான். கேள்விக்கு பதில் சொல்லும் போதும் அப்படித்தான். கேட்கும் கேள்விக்கு அமைதியாக மனதை ஒரு முகப்படுத்தி உண்மையாய் பதில் கூறுவான். அதே வேளையில் காச்சுமூச்சென்ற கத்தல் தியானத்தை கலைக்க வல்லது. பொய்யை புரண்டோடச் செய்வது. அதானால் அதனை அமைதியைக் கொண்டு மொழுகிவிடுவான். அதே வேளையில் எழுதுவது அவனுக்கு பிடிக்கும். எழுதுவதில் இந்தக் கத்தல் இல்லை. கேட்கும் கேள்விக்கு நேர்மையாய் மனதில் உள்ளவற்றை தெளிவாகக் கூற இயலும். எதையும் மறைக்க அவசியமில்லை. அதற்கான எதிர்ப்புகள் சில நாட்கள் கழித்தே என்கொயரிகளாய் வரும். அதனால் தான் தேர்வு அவனுக்கு பிடித்தது. மனதில் உள்ளதைக் கொட்ட இடம் கொடுத்தது.

 

ஆனால் பேச்சிற்கு பதில் சொல்வதென்பது அப்படியில்லை. தன்னையும் மதித்து நேர்மையாக கேள்விகள் இருந்தால் நேர்மையாக பதில் சொல்வான் இல்லையா உடலையும் காலத்தையும் வெளியையும் கடந்த சூன்ய நிலையில் நிலைத்திருபான். என்ன பேச விருப்பமோ பேசிக்கொள். என்னை ஒன்றும் உன்னால் செய்ய முடியாது. உன் கத்தல் என்னுள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.  நான் கனவைப் போல்தான் நிஜத்தையும் கையாள்கிறேன். பயம் – சுகம், வெற்றி – தோல்வி போன்ற எதிர் முனைகள் அவனை இந்த தியான நிலையில் தொடுவதில்லை. என்றும் மிதம் என்ற ஒரே பண்பைத் தந்தது. இந்தியாவின் அழகு இங்கே தான் இருக்கிறது பாருங்கள். உலகிற்கு தியானத்தை தந்த பூமி. ஆனால் அதனால் பயன்பெறும் இந்தியர்களோ மிகச் சொற்பம். அதை எண்ணி கவலை எல்லாம் கொள்ள வேண்டாம்.

 

அவனிடம் இது பற்றி கேள்வி எழுப்பினால், ‘இந்தியா எனும் வட்டத்திற்குள் உங்களை அடைத்தால் தானே இந்த கவலை எல்லாம். தியானம் நம்மை கவலை கொள்ள அனுமதிக்காது. வட்டத்திற்கு சிக்க வைக்காது. இந்தியனை மற்றொரு நாட்டவனையும் கற்பனை எல்லைகளைக் கொண்டு பிரிக்காது. உலகம் முழுவதும் ஒன்று. மனிதர் அனைவரும் ஒன்று என்று மனதை பொதுவுடைமையாக்கிவிடும்.’

 

அவன் டேபிளில் கைவைத்தது தான் தாமதம். காட்டுக்குரல் ஒலிக்கத் துவங்கியது. மறக்க வேண்டாம். தியான நிலை. தியான நிலை. கால் மணி நேரம். நிச்சயம் மூச்சு கூட விட்டிருக்க வாய்ப்பில்லை. பிரின்ஸாலுக்கு வாயோரத்தில் எச்சில் முறைத்து நின்றது. மூச்சிறைத்தது. நரம்புகள் புடைத்து முகம் சிவந்திருந்தது. இதே பேச்சை போர்வீரர்கள் மத்தியில் பேசியிருந்தால் வெற்றி நிச்சயம். நிறுத்தியவுடன் வேக வேகமாக கைப்பையில் இருந்து எடுக்கப்பட்டு எதோ ஓர் மாத்திரை விழுங்கப்பட்டது. இப்படி கத்தினால் பீபி வராமல் என்ன வரும். இந்த மேமுக்கு உடல் மீது ஏதும் அக்கரை இருக்கிறதா? ஃபூல்.

 

பிரச்சனை இது தான். அவன் வீட்டிற்கு செல்லும் பேருந்தின் நேர் எதிர் திசையில் செல்லும் மற்றொரு பேருந்து ஒன்றில் நிகழ்ந்த நிகழ்வு. பள்ளியில் பிழியப்பட்டு பேருந்திலாவது ஆசுவாசப்பட்டுக் கொள்ளும் கூட்டம் நிறைய உண்டு. அவற்றிற்கு பள்ளியில் ஒரு வேடம் பேருந்தில் மற்றொரு வேடம். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வு அவனை பாதித்தது.

 

அந்தப் பேருந்தில் இரு மாணவர்கள் இரு மாணவிகளிடம் ஏதோ பாட சம்பந்தமாக பேசிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பேச்சினிடையே ஒருவன் ‘நாளைக்கு முதல் ஹவர் யார் பீரியட்?’ எனக் கேட்டிருக்கிறான். அதற்கு அந்த மாணவிகள் எங்களுக்கு இல்லை என்று கூறி இருவரும் தங்களுக்குள் சிரித்திருக்கின்றனர். எட்டாம் வகுப்பு அல்லவா? பருவம் அடையும் வயதல்லவா? அதனால் தங்களுக்குள் பெண்கள் இப்படி சங்கேதமாக பேசிக்கொள்வது இயல்புதான். இதில் ஏது சங்கேதம் என்பது சங்கேதவியலாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்டது. அவள்கள் தான் சிரிக்கிறாள்கள் என்றால் இவனுக்கு எங்கு போனது புத்தி. இவனும் உடன் கூடிச் சிரித்திருக்கிறான். என்ன இவனும் சிரிக்கிறான் என்று யோசித்து ‘உனக்கு பீரியட்னா என்னனு தெரியுமா?’ என கேட்க. ’ஓ தெரியுமே. விஷ்பர் மேட்டர் தானே’ என கண்கள் விரிய கூறி பெரிதாய் தலையாட்டி இருக்கிறான். முடிந்தது.

 

’மேம் எங்கிட்ட இவன் இப்டி பேசிட்டான்’

 

இது அவனுக்கு சம்பந்தப்படாத ஏதோ நால்வர் ஏதோ பேருந்தில் ஏதோ பேசியிருந்தது. ஆனால் மாட்டியது அவன் தான். அந்த நால்வரும் அவன் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவன் தான் சொல்லிக் கொடுத்துப் பேசியதாக அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துள்ளனர்.  அவனை வைத்து தங்கள் தலையை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

 

அதெப்படி எதிரெதிர் திசையில் முன்னேறும் இருவர் (கையில் அலைபேசி எல்லாம் இல்லை) பேசிக்கொள்ள முடியும் என்பதைக் கூட அந்த மேம் யோசிக்கவில்லை. ஆனால் பெரிதாக யோசித்திருந்தார். இது வயதுக்கு மீறிய சிந்தனை என்று. தன் காலத்தில் இந்த விஷயமெல்லாம் திருமணமானவர்களுக்கே புதிது என்ற கோணத்தில் இருந்து யோசித்த மேமுக்கு நிச்சயம் இது தற்காலத்தின் வயது வரம்புக்கு மீறிய சிந்தனை தான். ஆகவே இப்பள்ளியில் வயதுக்கு மீறிய சிந்தனையின் ஊற்றுக்கண் யார்? என சிந்திக்கத் துவங்கிய மேமுக்கு. அவன் தெரிந்தான். அவனே இதை திட்டமிட்டு நிகழ்த்தி இருக்க வேண்டும். கூப்பிடு அவனை.

 

அவன் எதுவும் பேச விரும்பவில்லை. யார்  சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தொலைக்காட்சியில் மணிக்குப் பலமுறை இந்த விளம்பரங்கள் வருகின்றன. இவர்களுக்குத் தனியே உட்கார வைத்து பாடம் வேறு நடத்த வேண்டுமா? என்ன? அதெல்லாம் அந்த மேமுக்கு புரியாது. அவர் பேசுவது தான் பேச்சு. மீண்டும் ஒரு மணி நேரம் நிறுத்தாமல் அர்ச்சனை தொடர்ந்தது. இறுதியில் அவனிடம் கருத்து கேட்கப்பட்டது. இலக்கண ரீதியில் சொல்வதானால் கருத்து. ஆனால் உண்மையில் அவர்கள் எதிர்பார்த்தது மன்னிப்பு, கெஞ்சல்.

 

‘எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ன பேசனுமோ பேசிக்கலாம்.’

 

My Dream
என் கனவு.

 

என் கனவு. நான் தினமும் கனவு கான்பவன். ஒன்றல்ல இரண்டல்ல. ஒராயிரம். ஒவ்வொரு நொடியும் கூட கனவு கான்பவன் என்று கொள்ளலாம். கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கனவு கான்கிறாயே என்று கேட்பார்கள் அல்லவா? நான் அந்த வகை. இரவில் வரும் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை என்பதால் அதைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்போது கூட பாருங்கள் கனவு கண்டுகொண்டே தான் இதனை எழுதுகிறேன். கனவும் நிஜமும் எனக்கு வேறுபாடாய் தெரியதில்லை. இந்தக் கட்டுரை இன்று நடக்கும் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற வேண்டும் என்றால்லாம் கனா காணவில்லை. இதனை யாராவது படித்தேனும் பார்க்க வேண்டும் என்று தான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அது நடக்குமா இல்லை கனவோடு கனவாய் கரைந்துவிடுமா என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. கனவு காண்பதோடு சரி. அதற்காக நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனக்கு போட்டிகளில் ஆர்வம் இல்லை.

 

ஒரு உண்மையைச் சொல்லவா? என் மனதில் இருக்கும்  கனவுகளைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். இல்லை, இவன் பொய் சொல்கிறான் என்பீர்கள். இல்லை, பைத்தியக்காரன் என்பீர்கள் இல்லை வழக்கம் போல் டெரரிஸ்ட் மைண்ட் செட் உடையவன் என்பீர்கள். இருந்தாலும் எழுதித் தான் ஆகவேண்டும் என என்னை நீங்கள் தான்  கம்பல் செய்கிறீர்கள்.

 

இன்று அழகிய சனிக்கிழமை. நம் ஸ்கூலில் கலர் ட்ரஸ் அணிய அனுமதி அளித்திருக்கும் ஒரே கிழமை. English I Paper, English II Paper, Tamil I Paper, Tamil II Paper, Hindi, Maths I Paper, Maths II Paper, Botany, Zoology, Physics, Chemistry, History, Civics, Geography, Economics, General Knowlede என மன உளைச்சல் கொடுக்கும் பாடங்கள் எதுவும் இல்லாத ஒரே கிழமை. முழுவதும் Physical Education, Value Education, Drawing, Karate, Yoga, Carnatic Music, Western Music என மனதுக்கு இதமளிக்கும் பாடங்களைக் கொண்ட ஒரே கிழமை. நாங்கள் வீட்டிலிருந்து புத்தகங்களையும் கேண்ட்டினில் உண்ணும் நோக்கில் டிஃபன் பாக்ஸையும் எடுத்து வராமல் கைவீசி நடந்து வரும் ஒரே கிழமை.

 

இப்படிப்பட்ட இனிமையான கிழமையில் தான் நீங்கள் கட்டுரைப் போட்டி வைக்க வேண்டுமா? திங்கள் முதல் வெள்ளிவரை ஏதாவது மேக்ஸ் க்ளாஸை அல்லது இங்லிஷ் க்ளாஸை கட் செய்து விட்டு வைக்கலாமே? ஏன் எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?இரண்டு மணிநேரம்? விருப்பப்பட்டவர்கள் எழுதுங்கள் என்றாவது சொல்லலாமே? அதை விட்டுவிட்டு அனைவரும் கண்டிப்பாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஏன் கொல்கிறீர்கள்?

 

இந்தப் போட்டிக்காக ராப்பகலாய் படித்து வந்த அந்த ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ஸை எழுதச் சொன்னால் இரண்டுமணி நேரம் கொடுத்தாலும் போதவில்லை என்று கூறி எழுதுவார்கள். எங்களைப் போன்றவர்களிடம் கொடுத்தால் என்ன செய்வோம்? இப்போது நான் செய்து கொண்டிருப்பதைப் போல் தான் எதையாவது உளறிக்கொண்டிருப்போம். உங்களுக்கு புரியக் கூடாது என்று ஏதாவது பழைய நோட்டில் இருந்து பக்கங்களைக் கிழித்து அல்லது நன்றாக இருக்கும் பேப்பரை நன்கு கசக்கி எழுதாத பேனாவால் இல்லை மஞ்சள், ஆரஞ்ச் என வாசிப்பவரின் கண்ணைக் குருடாக்கும் கலரில் நீங்கள் படிக்காமல் தூக்கிப்போட வேண்டும் என்று எதையாவது நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே கோழி கிளறுவது போல் கிளறுகிறோம் என்று அதைப் போல் எதையாவது கிளறி வைத்துக் கொண்டிருப்போம்.

 

சரி அரைமணிநேரம் தான் சென்றிருக்கிறது. பேப்பரைக் கொடுத்தால் இன்னும் ஒன்றரை மணிநேரம் கழித்து தான் பேப்பரை வாங்குவேன் என்று இந்த மேம் வேறு அடம் பிடிக்கிறது. இதற்கு மேல் கேட்டால் அவ்வளவு தான் மதம் பிடித்துவிடும். வேண்டாம். அதனால் தாங்க முடியாது. பாவம் பிறகு டென்ஷன் ஆகும். என்னால் தான் டென்ஷன் ஆனதாக என்னை ஸ்கூலில் பரப்பிவிடும். தனக்குத் தானே துன்பம் இழைத்துவிட்டு சாத்தானின் மீது பழி போடும் மனிதனைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று ஒரு ஃபார்ஸி கவிஞர் பாடிவைத்துப் போனாரே. நேற்று கூட ஹிந்தி மேம் பாடம் நடத்தினாரே. அது போல. தேவையா இதெல்லாம். பேசாமல் நான் என் கனவை சொல்லிவிடுகிறேன். ஆவதைப் பிறகு பார்க்கலாம்.

 

என் கனவு என்பதை நான் வாழ்கையில் என்னவாக ஆக கனவு காண்கிறேன் என்று எழுதுமாறு மேம் அறிவுறுத்தியிருந்தது. என்ன கனவு காணவேண்டும் என்பதையும் விட்டால் சொல்லிவிட்டுப் போயிருக்கும். நான் தான் வேண்டுமென்றே கேட்காமல் விட்டுவிட்டேன். சரி, இதற்கும் மேலே இதை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் முதலில் மனதை திடப்படுத்திக் கொள்ளவும். இனிமேல் என் மனதில் இருந்து நேரடியாக எண்ணங்களை கட்டி இழுத்துவந்து இங்கு கொட்ட முடிவெடுத்துவிட்டேன். எந்த ஒளிவு மறைவும் இருக்காது.

 

நான் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறேன்? உண்மையில் எனக்கே தெரியவில்லை. நான் ஐன்ஸ்டீன் போல் வருவேன் அப்துல் கலாம் போல் வருவேன் என ஃபர்ஸ்ட் பெஞ்சர்ஸ் போல எதாவது பொய் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் இன்னும் ஒரு கால்மணி நேரம் கொடுங்கள். அடிமனதை அலசி ஏதாவது அப்படி அகப்படுகிறதா என பார்க்கிறேன்.

 

ம். சிக்கிவிட்டது. மனதை அலசி ஆராய்ந்து தூண்டி துலாவி துவைத்து காயவைத்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். சொன்னால் கோபப்படுவீர்கள். இல்லை இதை நீங்கள் படித்தால் தானே கோபப்படுவதற்கு. சரி சொல்கிறேன்.

 

பேசாமல் சாமியார் ஆகிவிடலாம் என தோன்றுகிறது. ஸ்வாமிஜி என்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். போன வருடம் ராமகிருஷ்ண மடத்தில் அந்த ஸ்வாமிஜீயைப் பார்த்ததில் இருந்து தான் இந்த எண்ணம் வந்திருக்கவேண்டும். இந்த எண்ணம் இத்தனை நாளாய் என் மனதில் இருப்பது எனக்கே தெரியாது. நல்லவேளை உங்கள் தயவால் நான் என் மனதை அறிய முடிந்தது.  அதற்கு முதலில் ஒரு நன்றி.

 

ஒரே வார்த்தையில் என் கனவை சொல்லிவிடலாம். ஆனாலும் நான் அதை விரும்பவில்லை. இந்தக் கனவு எப்படி என்னுள் குடிகொண்டது என தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என் மனதைத் திறந்து பார்க்கலாம் என்று முடிவு கட்டிவிட்டேன். வெளிப்படையாக பேச ஆயத்தமாகிவிட்டேன். இனி, நீங்கள் கேட்டாலும் நான் முடிக்கும் வரை என்னால் இனி இந்தப் பேப்பரை தர இயலாது. ஐம் வெரி சாரி.

 

நான் சின்ன வயதில் இருந்து பிராமணப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட பிண்ணனியே இதில் பலமாக உள்ளதாக கருதுகிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. சற்றேரக்குறைய. தினமும் காலையில் ஸ்லோகங்களுடன் துவங்கும் தினசரி வகுப்புகள். மூச்சுக்கு முன்னூறு  முறை வந்து விழும் ஒழுக்கம், தர்மம் என்ற வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.

சொந்தமாக எதையாவது எழுதி வைத்தாலோ அல்லது நம்மீது சுமத்தபடும் குற்றங்களுக்கு விளக்கம் கொடுத்தாலோ அது ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மீறும் செயலாகக் கருதப்படும், நின்றால் நடந்தால் தும்மினால் குற்றம் என கூறப்படும் இந்தப் பள்ளிதான் உண்மையில் எனக்கு உலக வாழ்க்கை மேல் நாட்டமில்லாமல் செய்திருக்கிறது. சரி, வாழ்கை பிடிக்காத இப்படிப்பட்ட நிலை உண்மையில் என்னை தற்கொலைக்கு அல்லவா தூண்டி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் துறவறத்துக்கு என்னை தயார் செய்ய வேண்டும்? ஆன்மீகத்தில் எது என்னை ஈடுபடுத்தியது? நிச்சயம் பள்ளி இல்லை. எனக்கு பள்ளி கற்றுக்கொடுத்ததெல்லாம் எதை செய்யக் கூடாது என்பதை மாத்திரமே.

 

பிறகு, எது அல்லது யார் இதை எல்லாம் எனக்குள் செலுத்தினார்கள்? கொஞ்சம் பொறுங்கள். அரை மணி நேரமாவது தேவைப்படும்.

 

கண்டுபிடித்து விட்டேன். எப்படி நான் இந்தப் பள்ளியில் வேலை செய்பவர்களை வெறுத்தாலும் பள்ளியை நேசிக்கிறேனோ அதே போல் ஒருவரை நான் அடி மனதில் இருந்து வெறுத்தாலும் விரும்பி அவரது கொள்கைகளை நேசிக்கிறேன். ’யார்’களை வெறுத்தாலும் ’யார்’களின் ’எது’களால் கவரப்படும் எனக்கு, நேசிக்கும் ஒருவரின் கொள்கையை கைகொள்வது மிக எளிதான காரியம் தான். அவரால் இல்லை. அவரின் அதுவால் தான் நான் இவ்வளவு மாறியுள்ளேன்.

 

அவரின் அதுவே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகப்படுத்தி தியரி வகுப்பெடுக்க, இப்பள்ளி ப்ராக்டிகலாக வகுப்பெடுத்தது.கோபத்தை கண்ட்ரோல் பண்ண அது பாடம் சொல்லிக் கொடுத்தது. பள்ளியோ கோபத்தை உண்டுபண்ணும் நேரங்களில் என்னை கோர்த்துவிட்டு ப்ரக்டிகல் பாடம் நடத்தியது.

 

அவரின் அது எனக்கு புத்தகங்களின் மூலம் ஆறிமுகமாகியது.  அவர் ஒரு பெரிய கலெக்‌ஷன் வைத்திருந்தார். லைப்ரேரி அளவிற்கு பெரிது. தமிழ் மற்றும் ஆங்கில  புத்தகங்கள். பல விதங்கள் பல ரகங்கள். எத்தனையோ படித்திருக்கிறேன். முக்கியமாக ஆன்மீகம் மற்றும் தத்துவ புத்தகங்கள்.

 

விவேகானந்தர் என்னை மிகவும் கவர்ந்தவர். யோகத்தின் பல்வேறு வடிவங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர். துறவறத்தை. துறவறத்தின் அவசியத்தை. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும் படித்திருக்கிறேன். தியானங்களின் மூலமும் யோகாசங்களின் மூலமும் பயனடைந்திருக்கிறேன். ஆனால் ஒன்று கடவுளை மட்டும் உணர்ந்ததில்லை.

விவாகானந்தர் கடவுளை சிலைகளில் அறிமுகப்படுத்தவில்லை. அறிமுகப்படுத்தினாலும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவர் கடவுள் இருப்பதற்கும் வணங்குவதற்கும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார். ஆனால் நான் இவ்விசயத்தில் கருத்து வேறுபடுகிறேன். கருத்து முரண்பட இன்னொருவர் காரணமாக இருக்கிறார்.

 

வேறு யார் நம்ம பெரியார் தான். கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று கூறுவாரே அவரே தான். தியானத்தையும் யோகத்தையும் என்னால் கடவுளை அடையும் வழியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மனிதன் மனிதனை அறியும் ஒன்றாகவே இன்றும் கருதுகிறேன். பரிணாம வளர்ச்சியின் உச்சம் என்றே கருதுகிறேன்.

 

ஏனென்றால் தியானமும் யோகமும் ப்ராக்டிகலாக ஒத்துவரக்கூடியவை. கண் முன்னே பலனை காட்டக்கூடியவை. கடவுள் அப்படியல்ல. ஒத்துவராதது. கண்முன் பலனளிக்காதது. சிலைகளுக்கு பின்னே ஒளிந்திருக்கக் கூடியதாக கூறப்படுவது. பிறகு ஏன் அப்படிப் பட்ட ஒன்றை நான் நம்ப வேண்டும். இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. இது தான் என் வாதம். குழப்பமாக இருந்தாலும் பின்பற்ற வல்லது. நான் எதையும் பின்பற்றிப் பார்த்து ஏற்றுக்கொள்பவன் என்று வைத்துக் கொள்ளலாம். பின்பற்றிப் பார்த்து உண்மையாகப் பட்டால் ஏற்றுக் கொள்வேன். இல்லையா இல்லை என்று சொல்லிவிட்டுப் போய் விடுவேன். மிகத் தெளிவான போக்கு தான்.

 

அதே போல் ஒரே ஆளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவரிடம் உண்மை சிறிது இருந்தால் அவரிடம் உண்மை சிறிது இருக்கும். இந்த உண்மை என்பதை நான் எப்படி தேடுகிறேன் அல்லது வரையறை செய்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

 

உண்மை மனதுக்கு முதலில் குழப்பத்தைக் கொடுத்து பின் திருப்தி அளிக்கும். உண்மையல்லாதவை முதலில் திருப்தியையும் பின் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அளிக்கும். உண்மையில் குழப்பத்தில் திருப்தியுள்ளது.

 

இப்படித்தான் நான் என் உண்மையை உணர்கிறேன். அப்பா சொன்னார், அம்மா சொன்னார், ஆசிரியர் சொன்னார், ஆட்டுக்குட்டி சொன்னார், இல்லை உலகில் அதிகம் பேர் நம்புகிறார்கள் என்பதற்காக எதனையும் என்னால் உண்மையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

உலகில் உள்ள அனைத்தும் உண்மையால் அஸ்திவாரம் போடப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த உண்மை 1% இல்லை 2% இல்லை 0.000001%. உண்மை சிறிதளவேனும் எதிலும் யாரிலும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். அதனால் இவரிடம் இருக்கும் உண்மையை எடுத்துக்கொள்கிறேன். பிறகு அவரிடம் இருக்கும் உண்மையையும் எடுத்துக் கொள்கிறேன். பிறகு மற்றொருவரிடம் இருக்கும் உண்மையையும் எடுத்துக் கொள்கிறேன். எனக்கு உண்மையாய்படுவதை வைத்து எனக்கு ஒரு கொள்கையை நிறுவ முயல்கிறேன். ஏனென்றால் எனக்கு இதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளதையும் அறிவதற்கே மனிதன் பிறந்துள்ளதாக நான் நினைக்கிறேன். அதனால் நான் என்னையும் என்னைச் சுற்றியுள்ளதையும் அறிய விரும்புகிறேன். அப்படி தன்னையும் தன்னைச் சுற்றியும் இருந்தவற்றை அறிய விரும்பிய மனிதர்களின் வாழ்கையையும் செய்தியையும் படிக்கிறேன். இந்த உண்மையை என் மொழியில் நான் ஒளி என்று அழைக்கிறேன். இப்படி ஒளி பெற்ற சிலரை உலகம் போற்றுகிறது. சிலரை தூற்றுகிறது. என்ன இருந்தாலும் ஒளி ஒளி தான். மறுப்பதற்கில்லை. மறைப்பதற்கில்லை.

 

உலகில் மொத்தத்தில் நான் பின்பற்றும் அளவற்கு ஒளியுடைய ஒரே ஒருவர் இன்னும் தோன்றவில்லை. அல்லது இன்னும் அப்படிப்பட்டவரை நான் இன்னும் கண்டடையவில்லை. இப்போது தானே ஒன்பதாம் வகுப்பிற்கு வந்துள்ளேன். இன்னும் நிறைய ஒளியுடையவர்களை நான் கண்டடைய வேண்டும் அல்லவா?

 

இதனால் தான் நான் சொல்கிறேன் நான் சாமியாராக விரும்புகிறேன் என்று. ஆகி புதிய கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று. நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் சரியான விகிதத்தில் கலந்தால் மூடநம்பிக்கையும் போய்விடும் தன்னை அறியும் வேட்கையும் தொடரும். இது தான் என் ஆசை. சாமியார் என்று கூறியிருக்கக்கூடாது. வேறேதாவது பெயர் கொடுத்திருக்க வேண்டும். தேடுகிறேன். விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்.