Browsed by
Month: June 2014

ஒளி 222 கிராம்: பகுதி 2

ஒளி 222 கிராம்: பகுதி 2

 

’என் ரூமுக்கு வந்தாங்களே அவுங்க பேர் என்ன?’

 

‘ரைஹானா. ஏன்? எனி ப்ராப்ளம்?’

 

’ரைஹானாவா. இல்ல பாலா. அப்டிலாம் இல்ல. சும்மா தான் கேக்கிறேன்’

 

லண்டன் ஐ. உண்மை தான். இந்தக் கண்ணின் உதவியால் லண்டனையே பார்த்துவிடலாம்.

பாலாதான் இங்கு கூட்டிவந்தான், லண்டனைப் பார்க்க ரம்மியமான இடம் என்று.

 

லண்டன் நகரம். இங்கிருந்து கிளம்பிய கம்பெனிப் படை தான் உலகெங்கும் சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது. தான் பேசும் மொழியை உலகப் பொது மொழியாக்கியது. கைக்கு எட்டா உலகை சர்வதேச கிராமமாக்கியது.  இன்னும் செய்ய இயலாதவற்றை, செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்தது. ஆடி அடிங்கியது. ஒளிரி ஓய்ந்தது.

 

தன் பொழிவை எல்லாம் செவ்விந்திய கண்டத்திற்கு தன் மக்களை ஏற்றிய தோணியில் ஏற்றி அனுப்பிவிட்டது போல. அந்த ஒளி எல்லாம் தற்பொழுது இல்லை. கொஞ்சம் மங்கித்தான் தெரிகிறது. உள்ளூரிலேயே இமாலய வேலையின்மை. மக்களிடம் சேமிப்பும் குறைவு, ஏழ்மையை நோக்கிச் செல்லும் விகுதியும் அதிகம். அதற்காக நம் ஒளிவற்ற நகரங்கள் போல் இல்லை. அதற்கு இன்னும் சில பல ஆண்டுகள் பிடிக்கும்.

 

அந்த ஆக்ராவுக்கு இந்த லண்டன் எவ்வளவோ பரவாயில்லை. ஆக்ராவும் லண்டனைப் போல் தான் ஒரு காலத்தில் உலகில் உள்ள ஒளி எல்லாம் ஒருக்கே படைத்து நூர் நிரம்பிய நகரமாய் விளங்கியது. இன்று போய் பாருங்கள் தெரியும். ம்ஹூம் ஓரிரு நாள் இருந்து பாருங்கள். விளங்கும்.

 

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும், அந்த ரயிலில். இல்லை திறந்ததும் நல்லதுக்குத்தான்.

 

‘க்யா? ஆப் தமில் ஹே நா?’

 

‘ஹான்.’

 

‘இல்லே. நேத்திலே ஈந்தே சைலெண்ட்டா ஆகாஷ தேக்றே. அதான் கேட்ட’

 

‘ஹே. நல்லா தமிழ் பேசிரிங்க? தெரியாம போச்சே. ரெண்டு நாளா தெலுங்கு, ஒரியா, ஹிந்தினு கேக்கிறதுக்கு, அந்த ஆகாசம் பரவாயில்லனு தான் வேடிக்கை பார்த்திட்டிருந்தேன்.’

 

‘யே சச் ஹே பைய்யா. சுனாயியோ கோ பாஷா ஆவ்ஸ்யக் ஹை மகர் தேக்னே கா பாஷா ஏக் ஹே’ வாயில் இருந்த பானுடன் சேர்ந்து சொற்கள்களும் குதம்பப்பட்டு கொஞ்சம் விழுங்கப்பட்டன. மீதி புரியும்படி வெளியே வழிந்தன.

 

‘குச் தீரே சே போலோ. புதுசு. மெதுவா பேசினா தான் எனக்குப் புரியும்.’

 

‘அச்சா. நீ எங்கீந் வரூ?’

 

‘கோயம்புத்தூர்ல. நீங்களும் அங்க தான ஏறினீங்க?’

 

‘ஹான். என்கு டிஎம்ஜி ஜிவல்லரில வேலை செஞ்சு. டி.எம்.ஜி ஜிவல்லர் ஜானே?’

 

‘தெரியும். ஒப்பணக்கார வீதிதானே?’

 

‘ம். ஓபனேகார் மார்க் தா. சோனே தங்க ஸ்மிதி வேலே’

 

’வெல்கம் டூ இந்தியா’ டாக்குமெண்ட்ரி பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். கொல்கட்டா சாக்கடைகளில் மூழ்கி தங்கமெடுக்கும் ஆக்ரா பொற்கொல்லர்களை. முகலாயர்களுக்கு ஆபரணம் வடிவமைத்த பொற்கொல்லர்களின் வாரிசுகள் இன்று ஆக்ராவிலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அடிமாட்டு ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள். அப்படி கோயம்புத்தூரில் நகைக்கடை வைத்திருக்கும் சேட்டு ஒருவரால் இவர் கோயம்புத்தூர் வந்திருக்கிறார். தற்போது சில வருட வேலைக்குப் பின் தன் சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்.  சில மணிநேர உரையாடலின் சுருக்கத்தால் உணர்ந்தது.

 

‘நீ எங் போற?’

 

‘டெல்லிக்கு. வேலைக்கு’

 

‘அச்சா. படா நவ்கரி கெடிச்சிருக்கு போல’

 

‘அட போங்க. . நீங்களாவது தேவல. எதோ கைத்தொழில் கத்து வச்சிருக்கிங்க. நான் அது கூட இல்ல. அஞ்சு வருஷம் ஒன்னுக்குமே இல்லாம என்ன படிக்கிறோம்னே தெரியாம இஞ்சினீரிங் படிச்சேன்.’  கட கடவென சொன்னதால் நிச்சயம் அவருக்குப் புரிந்திராது.

 

‘ம். தும் ஆக்ரா வந்திருக்கா?’

 

‘இல்ல. இப்ப தான் டெல்லிக்கே முதல்ல வரேன். அப்பறம் ஆக்ரா எங்க?’

 

‘ஜரூரா வா. தாஜ்மஹல், லால்கிலா. சூப்பர்’

 

‘அப்டியா’

 

ஆக்ரா, தங்குமிடங்கள், மார்க்கெட்டுகள், சுற்றத் தகுந்த இடங்கள், மொழி, முக்கியமாக குளிர். அடுத்த ஒரு மணிநேரம் கழிந்தது. ஜான்சியில் ஆரம்பித்த  பேச்சு ஆக்ரா வருகையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.

 

‘நானும் ஆக்ரால இறங்கப்போறேன்’

 

‘க்யோ?’

 

‘இல்ல இன்னும்  ஏழு நாள் கழிச்சு தான் டெல்லி போனும். ஒரு அவசரத்தில கெளம்பி வந்துட்டேன். ஆக்ராவ ஒரு ரவுண்டு அடிக்க முடிவு எடுத்துட்டேன். நீங்க எனக்கு ஒரு நல்ல லாட்ஜுக்கு ஆட்டோ மட்டும் புடுச்சி விடுங்க. போதும். தொந்தரவு ஏதும் தரமாட்டேன்’

 

அப்போதெல்லாம் அப்படித்தான். ஒன்றைப் பார்க்க விரும்பினால் கிளம்பிவிடுவது. ஆக்ரா ஸ்டேஷன். இறங்கியவுடன் ஒரு கோட் சூட் போட்ட ஆசாமியிடம் எதுவோ சென்று பேசி ஆட்டோ எற்பாடு செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

 

‘சலோ ஸாப்’ கோட்டு சூட்டு வேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியே கொண்டு போனது.  ஆட்டோ முன்பதிவு பூத்திற்கு முன் நின்று தாஜ் கஞ்ச் போக இங்கு பதிவு செய்தால் இருநூறு என்றும் தான் கூட்டிச் செல்லும் ஆட்டோவில் ஏறினால் நூறு என்றும் கூறியது. பதிலெதுவும் எதிர் பார்க்கவில்லை. நேரே கூட்டிச் சென்று கஞ்சி கஞ்சியாய் நின்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டது.

 

ஆட்டோ ஸ்டேஷன் வாசல் அருகே சென்ற போது ஒரு போலிஸ் இடைமறித்து ட்ரைவரிடம் ஏதோ பாஸ் கேட்டார். ஆட்டோக்காரரின் மழுப்பல்களால் கோபமுற்ற போலிஸ் பத்துரூபாய்  மாமூல் கேட்டார். அவர் வாயிலும் பான். ஒன்று மட்டும் தெரிந்தது இவர்களால் பான் போடாமல் வாழ முடியாது என.

 

ஆட்டோக்காரர் திரும்பி பத்து ரூபாய் கேட்டார்.’பைய்யா தஸ் ரூபி தீதோ’

 

‘மேரே பாஸ் குல்லா நஹி’

 

தன்னிடம் சில்லரை இல்லை எனக் கூறி நூறு ரூபாய் நோட்டை காட்டினான். அதை அப்படியே வாங்கி போலிஸிடம் கொடுத்தார். போலிஸிடமும் சில்லரை இல்லை. ரூபாயை வேகமாக எடுத்துக்கொண்டு போலிஸ் பூத்துக்குப் போனார். அவர் திரும்பி வரும்வரை ஆட்டோ நடுரோட்டில் நின்றது. போலிஸ் தொட்டதால் எந்த சிக்னல் விதிகளும் அதை சீண்டவில்லை. பிறகு வேகவேகமாக ஓடி வந்த போலிஸ் பத்து ரூபாய்கள் அடங்கிய சுருளை அவனிடம் கொடுத்துவிட்டு ஓடினார். வேலைக்குப் புதிது போல. தீஞ்ச, பல இடங்களில் ப்ளாஸ்டர் போட்ட ஒன்பது பஞ்சத்தில் அடிபட்ட பத்து ரூபாய் நோட்டுகள். தமிழ்நாட்டில் இப்படி கொடுத்தால் குப்பையில் போடச் சொல்வர். இங்கு அதெல்லாம் பெரிதல்ல என்பது போகப் போகத் தான் புரிந்தது. ஒன்று தெரியுமா? ஒரு பகுதியின் நிலையை அப்பகுதியில் புழங்கும் கரன்சி நோட்டுகளை வைத்தே கணித்து விடலாம். நூற்றில் பத்தை எடுத்துக்கொண்டு மீதம் கொடுக்கும் போலிஸ். ஊர் உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். இதற்கு மேல் என்ன வேண்டும் . ரைட். நமக்கெதுக்கு போலிஸ் வம்பு.

 

மதியம் ஒரு மணிக்கு கூட தெருவில் வெறுங்கையால் புகைத்துக் கொண்டே நடக்கலாம், அவ்வளவு பனி. அதில் மெல்லிய பான்வாடை இருபத்திநான்கு மணி நேரமும். ரயிலில் சந்தித்தவர், கோட்டு சூட்டு, போலிஸ், ஆட்டோக்காரர் என அனைவர் கறை படிந்த பற்களைக் கொண்ட வாயிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் அல்லவா. அப்படித்தான் இருக்கும்.

 

எங்கும் செம்பாளங்களால் ஆன சுவர்களைக் கொண்ட கட்டிடங்கள். தென் இந்தியாவில் கடப்பாக்கல் எந்த அளவிற்கு பயன்படுகிறதோ அதை விட அதிகாமாக இங்கு பயன்படுகிறது இக்கல். செம்மண், பெரிய பெரிய பாளங்களாக அப்படியே கடப்பாக்கல்களைப் போலவே சமைக்கப்படுகிறது. பின்னர் வேண்டுமென்ற அளவில் வெட்டி உபயோகிக்கப்படுகிறது. இரண்டு திட்டுகளுக்கு நடுவே கல் பலகையாய் போடப்பட்டு பெஞ்ச்சாக பயன்படுத்தப்படுகிறது. டைல்ஸை போல் உடைக்கப்பட்டு சுவற்றில் ஒட்டப்படுகின்றன. செங்கோட்டை சிவப்பாகத் தெரிவதற்கு இது தான் காரணம். முக்கியமாக ஜெய்பூரிலும், முகலாயர்களின் கட்டிடங்களிலும் அதிகமாக இதனைக் காண முடியும்.

 

எதற்கு இந்த செம்பாளங்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், ‘ஆக்ரா ஈகோ கான்சியஸ் சிட்டி அதான் மலைகளை கடைந்து க்ரேனைட் எடுக்காமல் இப்படி மண்ணிலிருந்து சுற்றுச்சூழலை நினைவில் கொண்டு கல் தயாரிக்கிறோம் என்கிறார்கள். சென்ற நூற்றாண்டுகளில் மலைகளைக் குடைந்து எழுப்பட்ட தாஜ்மஹாலை கரிக்குடிக்க வைத்து ஏன் அழகு பார்த்தீர்கள் ஈகோ கான்ஸியஸ் மக்களே? என்றால் பதிலில்லை. அதுபோக இக்கல் கட்டிடத்தை குளு குளுவென வைத்திருக்குமாம். இருக்கலாம். நம்மைப் பொருத்தவரை இந்த செந்நிற கற்களின் தலையாய வேலை பான் போட்டு சுவறெங்கும் துப்பப்படும் செந்நிற எச்சில் கறையை மறைப்பதற்குத் தான்.

 

ஐந்தாறு கிலோமீட்டர் சென்றிருக்கும். ஒரு ரோட்டில் நின்றது. ஒரு ஹோட்டலைக் கைகாட்டிவிட்டு இறங்கிக்கொள்ளச் சொன்னான்.  ஒன்பது நோட்டுச் சுருளை ஹஸன் நீட்டினான்.

 

’ந ந தோ ஸோ ரூபே. த்தூ கண்ட்ரட்’ ஹஸன் விடவில்லை. கோட்டு சூட்டுடன் பேசினது நூறு தான் என்றான். அவனும் விட்டுக்கொடுக்கவில்லை. தனக்கு தெரியாது என்றான். போலிஸ் காட்டி மிரட்டிப் பார்த்தான். சிரித்தான். நியாயம் தான். குளிரில் வெடவெடத்து இவனுடன் பேசுவதற்கு தொலைந்து போகிறான் என்று சுருளுக்கு மேல் நூறு ரூபாய் போட்டுக் கொடுத்தான்.

 

‘தென் ருபி திஸ்கவுன்த். ஜைஸே கி ஆப் தேக்கே சாப்’ என சிரித்த முகத்துடன் கைகாட்டிச் சென்றான். புரிந்து கொண்டு விட்டேன் இது அடித்துப் பிழைக்கும் ஊர் என.

 

ஹோட்டல்காரரிடம் இருந்தே அடியை துவங்கினான். 2000ல் ஆரம்பித்து ஒரு இரவுக்கு 200 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டான். போகப் போக ஊரின் அழகு புலப்பட்டது. இது வாய் பேசத் தெரிந்தவர்களுக்கான பூமி. அடித்துப் பேச வேண்டும். அவனுக்கு கட்டுப்படியாகவில்லை என்றாலும் நம் பேரத் திறமையைக் கண்டு வியந்து சிரித்துக் கொண்டே தந்துவிடுவான். நம்மிடம் விட்டதை ஏதாவது வாயில்லாப் பூச்சியிடம் வசூலித்து விடுவான். வட இந்தியாவை குறிப்பாக உத்தரபிரதேசத்தை சுற்றிவர நான்கு விதிகள் தான்.

 

  1. ராஜா அடிமை விளையாட்டு தான் எடுபடும். நீ ராஜா கதாபாத்திரம் ஏற்கத் தவறினால் அவன் உன்னை அடிமையாகக் கருதி விடுவான் அவ்வளவே. விடாமல் அடித்து பேரம் பேசு.
  2. ஹிந்தி தெரியுதோ இல்லையோ கெட்ட வார்த்தை சரமாறியாக தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் பேசும் ப்ரோட்டோ-பான்-உர்தூ-ஹிந்தி அவர்களுக்குள்ளாகவே புரிந்துகொள்கிறதா எனத் தெரியவில்லை. கை கால்களை காற்றில் ஆடவிட்டு நான்கு கெட்டவார்த்தைகளுடன் ’ஹே’ சேர்த்து நடுவில் தைத்து ஏற்றி இறக்கி தமிழில் பேசினால் கூட புரிந்து கொள்வார்கள், நீங்கள் ராஜா வேடம் கேட்கிறீர்கள் என.
  3. நம்மூரைப் போல் ட்ரஸ்ஸை பார்த்து எல்லாம் இவர்கள் எடை போடுவதில்லை. கோட்டு போட்டாலும் கோவணம் கட்டினாலும் ஒரே ட்ரீட்மெண்ட் தான். அதனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படத் தேவையே இல்லை.
  4. உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என அவர்களுக்கு நிச்சயம் தெரியக்கூடாது. தெரிந்தால் ஒன்று வாயில் எடுக்கப் பார்ப்பான் முடியவில்லையா கையில் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான். பிறகு துரத்திச் சென்று பிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.

 

தமிழகத்தில் சில நகரங்கள் தவிர வேறெங்கும் இந்த நிலையை காண இயலாது. ஒளி பறிபோன நகரங்களில் இது சாதாரணம் தான். லண்டனுக்கு இந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. மிகவும் அழகாகத் தான் இருக்கிறது.

 

’அங்க பாருங்க அதான் பக்கிங்கம் பேலஸ். இது செய்ண்ட் பால் கத்தீட்ரல்’ என பாலா மேலிருந்து தெரிவனவற்றை விளக்கிக்கொண்டிருந்தார்.

 

லண்டன் ஐயின் கேப்சூல் ஒன்றில் அமர்ந்து லண்டன் ப்ரிட்ஜையும், பக்கிங்ஹம் அரண்மனையையும் பார்க்கும் போது தாஜ்மஹாலும் ஆக்ரா கோட்டையும் தான் ஹஸனுக்கு நினைவில் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புகள் ஏற்படுத்தின. லண்டன் என்றவுடன் பெருமைக்குப் பதில் பச்சாதாபம் தான் மிஞ்சியது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் இருக்கும் லண்டனின் படம் இப்படித்தான் இருக்கும் என அவன் மனதே சில கணக்கை ஆக்ராவில் நிலைகொண்டு துவங்கியிருந்தது. கருப்பேறிய வெள்ளைத் தோலர்கள், பான் போட்டு பாதி இங்லிஷ் பேசும் டாக்ஸி ட்ரைவர்கள், ஆடுமாடுகளை விரட்டிக்கொண்டு ஓடும் காவலர், யமுனையைப் போல வற்றி துணி காயப்போட்டிருக்கும் சிறுவர்கள் ஒதுங்கும் கரைகளுடன் தேம்ஸ், கற்பனையிலும் ஒரு லாஜிக் பாருங்கள் பணக்காரர்களிடம் எந்தப் பஞ்சமும் தென்படவில்லை. என்றும் தேய்வது ஏழைகள் தான்.

 

யார் கண்டது வருங்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். காலம் சுழலக்கூடியது. மாறி மாறி வரும் ஒளியற்ற, ஒளிவுற்ற நிலை என்பது அனைவருக்கும் பொது தான். அது மனிதனாலும் சரி அவன் வாழும் இடமானாலும் சரி. அவனுக்கு உள்ளே சிரிப்பு தான் வந்தது, ஒளியில் இருக்கிறான் அல்லவா? அப்படி தான் இருக்கும்.

 

‘ஹஸன். எனிதிங்?’

 

‘நத்திங். வாங்க கிளம்பலாம்’

 

 

’எதுக்கு இப்ப ஷோரூம் வந்திருக்கோம்’

 

‘கார் வாங்க’

 

’காரா?’

 

‘எஸ் பாஸ்’

 

‘யாருக்கு?’

 

‘உங்களுக்கு’

 

‘எதுக்கு.’

 

‘ ஓட்றதுக்கு தான். ?’

 

‘உங்க கார் போதாதா?’

 

‘நம்ம கம்பனில எல்லாருக்கும் தனியா கார் இருக்கனும்றது ரூல்ஸ். லோன் அவங்களே குடுத்திடுவாங்க’

 

‘பாலா எனக்கு கார்லாம் வேணாம்’

 

’இல்ல ரூல்ஸ்’

 

‘புரிஞ்சுக்கோங்க. எனக்கு வேணாம்’

 

பாலா எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. விறுவிறுவென உள்ளே நுழைந்தான்.

 

‘செலக்ட் பண்ணுங்க பாஸ்’

 

இது எங்கு கொண்டு விடப்போகிறதோ தெரியவில்லை. சென்ற மாதம் அவன் இருந்த நிலைக்கும் இன்றிருக்கும் நிலைக்கும் ஏணி அல்ல ஏரோப்ளேன் விட்டாலும் எட்டாது.

 

‘பாலா சொன்னா புரிஞ்சுக்கோங்க எனக்கு கார்லாம் ஓட்டத்தெரியாது. காரென்ன பைக்கே ஒட்டத் தெரியாது’

 

 

’என்ன பாஸ் எப்பிடி இருந்தது?’

 

கார் ஓட்டத் தெரியாது என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் பாலா ஹஸனை இழுத்துச் சென்ற இடம் ட்ரைவிங் ஸ்கூல்.

 

‘நல்லா இருந்துச்சு. ஸிமுலேட்டர்லாம் வச்சு சொல்லிக் குடுத்தப்பட்டு தான் கார்ல கையவே வைக்க விடுறானுங்க.’

 

’எப்பிடியும் இங்க வந்து நீங்க தனியா லைஸன்ஸ் எடுக்க தான் வேனும்னு ஏற்கனவே எல்லாம் புக் செஞ்சு தான் வச்சிருந்தேன். என்ன இப்ப பேஸிக்ல இருந்து போறோம் அவ்வளவு தான். ஒரு வாரத்த ஈஸியா கடத்திடலாம்’

 

‘ஒரு வாரத்திலயா?’

 

‘ஆமா. உங்களுக்கு ஒன் வீவ் ஹார்ட் எண்ட் ட்ரைனிங் கோர்ஸ். ஒரு வாரம் போதும் பாஸ்’

 

‘பாலா இந்த பாஸ் எல்லாம் வேணாம். எனக்கு என்னமோ மாதி இருக்கு. இப்ப இங்க வேல பாக்க வந்த ஃபீலிங்கே இல்ல ஏதோ பிக்னிக் வந்தமாதிரி இருக்கு.’

 

‘அப்டி தான் பாஸ். கம்பெனி ஸ்டார்ட் ஆய்டுத்துன்னா உங்களுக்கு தெரியும் எப்பிடிப்பட்ட வேலைனு. இப்பவே ரிலாக்ஸ் பண்ணிகோங்க’