Browsed by
Month: May 2014

ஹிந்தி டீச்சர் வாரணசி

ஹிந்தி டீச்சர் வாரணசி

சரியாக ஒரு வருடத்திற்குப்  பின் இத்தளத்தில் பதிவேற்றப்படும் பதிவு இது. ஆங்கிலத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்தாலும் தமிழை நான் தவிர்த்தேன். தமிழில் பொதுத் தளத்தில் எழுதுவதை மட்டுமே தவிர்த்தேனே தவிர முழுவதுமாய் அல்ல. திரைக்குப் பின் தமிழில் சில படைப்புகள் உருவாகிக் கொண்டிருந்தன. பொதுத் தளத்தில் தமிழ் புழங்கப்படாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

தொடர்ந்த பயணங்களும், வாழ்க்கைத் தேடலும், மூன்று வருடத்திற்கு முன் துவங்கிய தமிழ் நாவல் படைப்பும் என் நேரத்தை பிடித்துக் கொண்டன.
இருந்தும் வட்டம் தமிழ் கடந்து பரவியதால் ஆங்கிலப் பிரவேசம் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது திரும்பிவிட்டேன். தமிழிலும் இனிப் பதிவுகள் தொடரும். எங்கும் மறைந்து  விடவில்லை.
நாவல் வேலை இரண்டு மாதத்திற்கு முன் முடிந்தது. நாவல் பற்றி பிறகு மெதுவாகப் பேசலாம். அவ்வளவு எளிதில் வெளியே ஒரு படைப்பை வெளிக்கொணரும் சூழல் தமிழில் இல்லை. தத்தமது புத்தகங்களை வெளியிடும் அளவில் தான் தமிழ் பதிப்பகங்கள் உள்ளன. கவலையில்லை. பதிப்பகம் துவங்க வேண்டியது தான். கதை பற்றிக் கதைக்க நமக்கு சமயங்கள் பல உண்டு. பிறிதொரு நாள் பார்த்துக் கொள்வோம்.
இப்போதைக்கு நம் உரையின் நோக்கம் மொழிகளின் பக்கம் செல்கிறது. ஹிந்தியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பதாய் இது இருக்கும். ஏன் திடீரென்றென நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு. முடிவில் தெளியும்.
இது போதுமென கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஆத்மாக்களுக்கு இது தேவையற்றது. பிடிகளிலிருந்து விடுபடத் துடிக்கும் இதயங்களுக்கு இவ்வுரை மிக முக்கியம். அவர்கள் இதனை முன்பே உணர்ந்திருப்பினும் நினைவூட்டுவதும் பகிர்ந்து கொள்வது என்னகத்தே கடமை.
பிற மொழிகள் கற்பதென்பது நமக்குத் தெரியாத பல வாயில்களை திறக்க வல்லது. மாயம் நிகழ்த்தக் கூடியது. மொழி கற்றலின் சுவையறிந்தோர் இதனை உணர்வர்.
என்னைப் பொறுத்தவரை நான் மொழி கடந்து பல வருடங்கள் ஆகிறது. ஒரு மொழியிலோ இடத்திலோ வழக்கத்திலோ என்னை நான் வரையறுத்துக் கொள்வதில்லை. எல்லைகள் கற்பனையானவை. எல்லைகளை உடைக்க மொழிகள் மிக அவசியம்.
எந்த வகையில் ஹிந்தி அவசியமாகிறது?
எல்லா வகையிலும். ஒன்றேகால் லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் முப்பத்தியோரு லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் உள்ள அந்தப் பெரும் வேறுபாட்டில் தான் அவசியமாகிறது. இது தமிழகம் மற்றும் இந்தியாவின் பரப்பளவு. தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டாலே ஹிந்தியின் அவசியம் நமக்கு புலப்படும். பயணம் செய்யாத கால்கள் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனையோருக்குத் தேவை.
உலகில் அதிகம் பேசப்படும் மொழி மேண்டரின், பின் ஸ்பானீஷ் பிறகு ஆங்கிலம். அதற்கடுத்து?
ஹிந்தி உருதுக் குடும்பம். ஹிந்திக்கும் உருதுக்கும் வேறுபாடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது தான். ஒன்றுமில்லாதது. எழுத்து முறை வேறு வேறாதானே தவிர பேச்சில் பெரிய மாற்றமில்லை. சமஸ்கிருத பாளி சொற்களுக்குப் பதில் அரேபிய ஃபார்ஸி சொற்கள். இதெல்லாம் ஒரு வேறுபாடா?
உலகின் நான்காவது அதிகம் பேசப்படும் மொழி ஹிந்துஸ்தானி எனப்படும் ஹிந்தி-உருதுக் கூட்டமைப்பு. இதற்குப் பின் தான் அரபியும் இன்ன பிறவும். இவ்வளவு முக்கியம் இருக்கிறது வேறென்ன வேண்டும்.
ஆங்கிலம் போதும் எங்களுக்கு என்று சொல்ல முடியாது. தமிழகம் ஆங்கிலம் புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் வட இந்தியா இல்லை. இங்கு சர்வம் ஹிந்தி மயம். எண்களைக் கூட ஆங்கிலத்தில் அறிய இயலா பலரை நான் கண்டிருக்கிறேன். ஹிந்தி என்பது இங்கு சுவாசத்தைப் போல. இது எல்லோரும் அறிந்ததே.
மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், ஹிந்தி இந்தியாவின் இணைப்பு மொழி. தேசிய மொழி என்று சொல்லி சிக்க விருப்பமில்லை. இந்தியாவின் பொதுத் தளத்தையும் இதயத் துடிப்பையும் உணர ஹிந்தி இன்றியமையாதது.
எதற்கு இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?
பொறுமை. எனக்கு நம் கல்வி முறையில் நம்பிக்கை கிடையாது. துளிகூடக் கிடையாது. நம் கல்விமுறையால் பல பட்டம் தாங்கிகளை உருவாக்க முடியுமே தவிர அறிவாளிகளையும் வல்லுனர்களையும் அல்ல. துவக்கம் முதலே நான் நம் கல்வி முறையுடன் முரண்டுபிடிப்பவன். அறிவைத் தேட வேண்டும் என நம்புபவன். யாரிடமிருந்தும் எவ்வித சலசலப்பு வரினும் செவி மடுத்ததில்லை. என் வேலையை நடத்திக் கொண்டு இருப்பவன். கல்வியில் மாற்றம் வேண்டும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கையுள்ளவன்.
எதற்கு இங்கு என் கதை?
அவசியமிருக்கிறது. ஒன்றல்ல ஒரு டசன் காரணங்களுக்காக சென்ற மாதம் காசிக்கு வந்தேன். புதிதாய் ஒரு காரணம் முளைத்தது. வந்த வேலைகள் பல இருக்க புதிதாய் ஒரு வேலை தேடி வந்தது. கற்றல் சம்பந்தமானது. உடனே தலையசைத்தேன்.


இந்திய அரங்கில் மட்டுமல்ல உலக அளவிலும் ஹிந்திக்கு உள்ள சந்தை இங்கு வந்து தான் தெரியும். மிகவும் நெருக்கமான ஒரு பேராசிரியர் இங்கு பதினான்கு வருடமாய் ஹிந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்று வரை அவரிடம் நூற்றுக்கும் மேபட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழி கற்றுள்ளனர். ஒருவர் கூட இந்தியர் இல்லை.
துவக்கத்தில் அவரைப் பற்றித் தெரியாது. எல்லா இடத்திலும் ப்ராத்மிக் ப்ரவின் என்று சொல்லிக் கொண்டு ஹிந்தி என்ற பெயரில் மூளையைக் குதறிக் கொண்டு இருப்பவர்களில் ஒருவரென நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர் சொல்லிக் கொடுக்கும் விதம் தனித்துவம் வாய்ந்ததென்று.
விளங்கிக் கொண்டபொழுது அதிர்ச்சியடைந்தேன். மிக எளிதான வடிவமைப்புடன் கூடிய ஹிந்திப் பாடங்கள். ஒரு மணி நேரத்திற்குத் தனி நபர் பாடத்திற்கு இவர் வசூலிக்கும் கட்டணம் 600 ரூபாய். இதுவே குழுவிற்கு 1500 ரூபாய். அதிகமாகத் தான் தெரியும் ஆனால் அந்த ஒரு மணிநேரம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். ஒரு வாரம் இவர் வழிமுறையில் படித்தால் முன் பின் அறிமுகமில்லாதவருக்கும்  ஹிந்தி புரியத் துவங்கிவிடும். ’ஹிந்தி டீச்சர் வாரணசி’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்திய அளவில் வெளிநாட்டினருக்குப் மொழிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிறுவனங்களில் இவருக்கு இரண்டாம் இடம்.
தன் கிளையை டில்லிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். இது தொடர்பாக முதலில் சந்தித்தேன். பின்னர் நடந்தது எங்களுக்குள். விசயம் இதுதான். அவரிடம் போராடி மதுரைக்கு வரும் போது ‘ஹிந்தி டீச்சர் வாரணசி’யையும் எடுத்து வருகிறேன். யார் வேண்டுமானலும் சேரலாம். முதல் வகுப்பிலேயே தெரிந்துவிடும் எங்களுக்கும் பிறருக்குமான வேறுபாடு.
அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் இரண்டு ஹிந்தி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை எங்கள் முறையில் பயிற்சியளித்து நிறுவ எண்ணம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
மற்றபடி, கூட்டம் கூட்டி மாணவர்களைச் சேர்க்க விருப்பமில்லை. வாரணசியையும் டெல்லியையும் சமாளிப்பதே பெரிது. மதுரையில் விடாப்பிடியாக தொடங்குவதன் நோக்கம் வர்த்தக ரீதீயானதல்ல. தேவைப்படுபவர்களுக்கு கற்பிப்பது அவ்வளவு தான். யார் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பெரிதாக இருக்காது என்பது என் சார்பில் நிச்சயம் சொல்ல முடியும். ஆர்வமுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவே இதை நான் எழுதுகிறேன். கேள்விகளும் புலம்பல்களும் இல்லாமல் என்னடமிருக்கும் வழியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதுவே இக்கட்டுரையின் நோக்கம். 
ஒளி 222 கிராம்: பகுதி 1

ஒளி 222 கிராம்: பகுதி 1

 

’தம்பி பாத்து போய்ட்டுவாப்பா’

 

பதில் ஏதுமின்றி சிறிய தலை அசைவுடன் விடைபெற்றான். முதல் கவுண்ட்டரில் பாஸ்போர்ட், டிக்கட்டைக் காட்டி போர்டிங் பாஸை வாங்கினான். லக்கேஜை அவர்களிடம் கொடுத்துவிட்டுக் கைப்பையுடன் இரண்டாம் கவுண்ட்டருக்குள் நுழைந்தான். போர்டிங் பாஸ் சரிபார்க்கப்பட்டது. சில நிமிட பாதுகாப்பு சோதனைக்குப் பின் காத்திருப்போர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டான்.

 

ஓமன் ஏர். இரவு பதினொன்று மணிக்கு ஃப்ளைட். போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தான்.

 

வாழ்க்கை காத்திருப்புகளால் மெருகேற்றப்படுகிறது. காத்திருக்கத் துணியாதவன் வாழத் தகுதியற்றவன்.

 

இரண்டு மூன்று ஆண்டுகள் இருக்கும். கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு தனியே வந்திருந்தான். இன்று அவன் செய்யும் பயணத்திற்கும் அன்று அவன் செய்த பயணத்திற்குமான வேறுபாடு மிக வலியது. வலி மிகுந்தது. ஒளி குறைந்தது.

 

உலகம் அவனை பயமுறுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. வாழ்க்கை­யில்  தன்னால் வெற்றி பெற இயலுமா? என சந்தேகம் தொற்றி வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயம்.  இரவு பத்தரை ரயிலுக்கு மதியம் ஒன்றரைக்கே வந்திருந்த வேலை வெட்டியற்ற வேலை தேடிக்கொண்டிருந்த வேளை. தன் மனதே தன்னைச் சுட்ட காரணத்தால் வீட்டை விட்டு ஓடி வந்திருந்த நேரம். ஒன்பது மணிநேரம் கடத்தவேண்டும். பல வருடங்களாக தூரத்தில் ஓர் ஒளி நிச்சயம் தோன்றும் என்றெண்ணி காத்திருக்கையில், ரயில் நிலையத்தில் ஒன்பது மணிநேரம் காத்திருப்பதெல்லாம் ஒரு பொருட்டா? கணத்தில் கடந்துவிடும், என எண்ணவோட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

 

வெற்றுப் பை – கனத்த பை

கொசுக்கடி – ஏ.சி,

சலசலப்பு – பேரமைதி,

துர்நாற்றம் – மென்மணம்,

இருள் – ஒளி

 

இவற்றையும் தாண்டி அன்று அவன் அமர்ந்திருந்த இடத்திற்கும் இன்றமர்ந்திருக்கும் இடத்துக்கும் ஒரே சொல்லில் வேறுபாட்டைச் சொல்லவேண்டுமானால் அது இதுதான்.

 

ஒளி.

 

ஆனால், ஒருவர் மீது ஒருவர் அக்கரை கொள்ளும், அறிந்து கொள்ள விழையும் வாழ்க்கையில் இன்னும் ஒளியைக் கண்டிராத அன்ரிஸர்ட்வ் க்ளாஸ் மனிதர்களுக்குள் இருந்த மனிதம் இங்கு இல்லை. ஒளியை நோக்கி அல்லது ஒளிக்குள் பயணிக்கும் வேட்கையில் மனிதத்தைத் தொலைத்த கூட்டம் இவை. எவன் உள்ளத்திலும் கடுகளவு கூட மனிதம் கிடையாது. ஒளியின் பெருமையும் பூரிப்பும் தான் விஞ்சி நிற்கின்றது.

 

ஃப்ளைட் வந்திறங்கிவிட்டதாகவும் பயணிகள் தயாராக இருக்குமாறும் திரையியில் அறிவிப்பு ஓடியது. ஓமன் ஏர். மஸ்கட் வழியே லண்டனுக்கு பதினாறு மணி நேரத்தில் செல்லும்.

 

பணம் மிகவும் பலம் படைத்தது. சில வருடங்களுக்கு முன் வரை அடித்துப்பிடித்து இடம் பிடித்த நிலையை ஒரே கட்டு தலைகீழாய் மாற்றிவிட்டது. நீல நிற உடையில் தலையில் தொப்பிகளுடன் வலம் வந்த விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் தன் இருக்கையை இனம் கண்டான். சிறிது நேரத்தில், எல்லாம் சரிபார்க்கப்பட்டு விமானம் வானில் மிதக்கத் துவங்கியது. தூக்கம் தழுவாத அவன் மனதிலும் பல எண்ணங்கள் மிதக்கத் துவங்கின.

 

தன் தாயின் சமையலையும் அரவணைப்பையும் விட்டுச் செல்வது அவனுக்கு எதையோ இழந்ததைப் போல் இருந்தது. வீடும், ரகசியங்கள் பொதிந்த தன் அறையும், செல்லப் பூனைக்குட்டியும், பக்கத்து விட்டுக் குழந்தையும், மின்சாரமில்லா தமிழகத்தின் இருட்டும், அது தரும் இயற்கையுடன் உறவாடும் வாய்ப்பும் அவன் மனதைவிட்டு நீங்க மறுத்தன. தன் நண்பர்களுடன் அரட்டையடித்த கனங்களும், செய்து திரிந்த சேட்டைகளும் கண்முன் வந்து போயின.

 

வாழ்க்கையின் மறக்கமுடியா தருணங்கள் ஓடிக் கொண்டிருக்கையிலேயே அவனது மனம் மறக்கவிரும்பும் தருணங்களையும் எடுத்துக் கொடுத்தது. அவற்றை வலுக்கட்டாயமாக மறக்க விரும்பினாலும் அவை கலைந்து செல்ல மறுத்தன. கண்களுக்குள் புகுந்து விளையாடி கைகொட்டிச் சிரித்தன. அட்ரினலினை அடிக்கடி உசுப்பிவிட்டன. சூறாவளி போல் சுழற்றியடித்தன.

 

அவன் மறக்க விரும்பும் முதல் நபர் மனத்திரையில் வந்து வந்து போனார். சில மணி நேரங்களுக்கு முன் அவனைப் பார்த்துப் போய்வரச் சொன்ன மனிதர். அவன் இந்த உலகில் எவரைப் போல் வரக்கூடாது என முடிவெடுத்து இருந்தானோ அதே மனிதர். அவனைப் பெற்றெடுத்த மனிதர். அவனது தந்தை.

 

அவரது பல்வேறு முகங்களை அவன் கண்டான். கோபம், மிரட்டல், ஏளனம் இவையே அவற்றுள் முதன்மையாய் தெரிந்தன. தன் தந்தையை அவன் வெறுத்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். குடித்துவிட்டு வந்து ரகளை செய்தது காரணமாக இருக்கலாம். தன் ப்ரஸ்டீஜை நிரூபிக்க அவன் படிப்பை பகடையாக பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம். அவனது தாயை பல்வேறு வகையிலும் கொடுமைப்படுத்தியது காரணமாக இருக்கலாம். அவனை எதற்கும் உபயோகம் இல்லாதவானாக நோக்கியது காரணமாக இருக்கலாம், ஜோதிடத்தை நம்பி மூடப் பழக்கங்களில் மூழ்கிக் கிடந்தது காரணமாக இருக்கலாம், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பச்சோந்தித் தன்மை காரணமாக இருக்கலாம். கடைந்தெடுத்த சுத்த சுயநலம் காரணமாக இருக்கலாம். இல்லை அவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த வயது வேறுபாடும், தலைமுறை இடைவெளியும்கூட காரணமாக இருக்கலாம். இருக்கலாம். இதுதான் என வரையறுக்க முடியாத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

தனக்கு எதிரே இருந்த இருக்கைத் தொலைக்காட்சியை துவக்கினான், மனவோட்டத்தை தொலைக்க. அதில் முஹம்மத் மோர்ஸி பற்றிய செய்தி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

 

அவனது மனம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. பட்டும் படாமல் இருக்கும் சில பதிவுகளை கோர்க்கும் வேலையை ஆரம்பித்தது. கடந்த வருடம் அரபு தேசங்களில் நடந்த மல்லிகைப் புரட்சியும் அதைத் தொடர்ந்த மோர்ஸியின் பதவி ஏற்பும். தற்போது எகிப்தில் மீண்டும் எழுந்திருக்கும் அதிபர் மோர்ஸிக்கு எதிரான அலையும் அவனது நினைவில் பாய்ந்தன.

 

‘அஹ்லா பெகொம் ஃபீ மடார் ஓமன் எல் ஜவ்வி. அண்தொம் எலான் பேதெஜாஹ் எல் மஸ்கட். ஸவ்ஃப் யதிம் ரப்ட் வ தஜ்மீஆ எல் மொஸாஃப்ரீன் எலா லண்டன் மென் ஹோனக்’

 

திடீரென்று கேட்ட விமானியின் அறிவிப்பை அரபி மொழி என புரிந்து கொண்ட அவனது செவிகள் சிறுவயதில் நடந்த சில நினைவுகளைப் பதிந்த நியூரான்களைத் தட்டிவிட்டன. ஆறுவயதில் தன் தெருவின் மற்ற எல்லா குழந்தைகளையும் போல் அவனும் மாலையில் பள்ளிவாசலில் இயங்கிய அரபி பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அங்கு போகமாட்டேன் என்று அடம்பிடித்தது, அவ்வயதிலேயே ’உனக்கு விருப்பம் இல்லையெனில் தேவையில்லை’ என்று கூறி தன் தந்தை தட்டிக்கொடுத்தது. உள்ளே விரிந்தன.

 

கல்லிலும் ஈரமுண்டு என்பதைப் போல் யாரும் நூறு சதவிகிதம் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை என சற்றும் பொருந்தா தத்துவம் பேசிக்கொண்டு மனம் அவனது தந்தையின் மற்றொரு பக்கத்தைக் உயர்த்திக் காட்டியது.

 

அதில் மகனைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தராத, கொள்கையில் தன் கருத்தைத் திணிக்காமல் சுதந்திரம் அளித்த, அறிவுத் தேடலை ஊக்குவித்த, அவனது நாத்திகத் தன்மையை அங்கீகரித்த, இருபத்திநான்கு வயது வரை தன்னைப் பாதுகாத்த, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை போதித்த ரட்சகராய் அவனது தந்தை காட்சியளித்தார்.

 

வழக்கம் போல், ஒன்றை நல்லதென்றும் கெட்டதென்றும் தனக்கே கட்டளையிடும் தன் மனதின் திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தான்.

 

எப்படி இதனால் என்னை ஆட்கொள்ள முடிகிறது?

 

என் மனம் தான் நானா?

 

இல்லை மனதுக்கும் மேல் முடிவெடுக்கும் தன்மையுள்ள ஒன்று உள்ளதே அது தான் நானா? அதுவும் மனம் இல்லையா?

 

உண்மையில் நான் யார்? ஏன் பிறந்தேன்? எங்கிருந்து வந்தேன்? வாழ்க்கை என்னை எங்கு கொண்டு செல்கிறது? இறப்பிற்கு அப்பால் என்ன?

 

இது எப்படி நடக்கிறது? உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கையில் மனிதர்களாகிய நாம் மட்டும் ஏன் நாம் யார் எனச் சிந்திக்கிறோம்?

 

அப்படி என்றால் நமக்கு மேல் ஏதும் இருக்கிறதா?

 

ஆம். இயற்கை தான் அது. நிச்சயம் கடவுளாய் இருக்காது. இருந்திருந்தால் ஏன் நமக்குத் தென்படாமல் இருக்க வேண்டும்?

 

வழக்கம் போல் தனிமை அவனைப் பக்குவப்படுத்தத் துவங்கியிருந்தது. கேள்விகள் அவனை கொன்று கொண்டிருந்தன. சிறிது சிறிதாக நினைவுகளிலிருந்து விடுவித்து உறக்கம் அவனை ஆட்கொண்டது.

 

 

லண்டன் ஹீட்த்ரோ விமான நிலையம். க்கோல்ட் த்ரோ என்றே வைத்திருக்கலாம். கடும் பனி படர்ந்த மாலை நேரம். லண்டனைப் பற்றி கூகுள் செய்து வைத்திருந்ததால் அவன் குளிருக்குத் தயாராய் தான் வந்திருந்தான்.  ஏற்கனவே டெல்லியில் அவனுக்கு குளிர் அறிமுகமாகியிருந்தது.

 

முகலாயர்களில் முதலில் கடலைக் கண்டவர் ஹுமாயுன் தான். கடலைக் கண்டு மிரண்டு போய் திரும்பினாராம். அதே போல் தான் இவனும் முதன்முதலில் குளிர் என்றால் என்னவென்று உணர்ந்த பொழுது உரைந்தே விட்டான். அது தந்த புல்லரிப்பு இன்றுவரை நீங்கியதாகத் தெரியவில்லை.

 

கோயம்புத்தூரில் இருந்து டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்ப்ரஸ் அன்று வர மணி பதினொன்றாகி இருந்தது. இரண்டு மணி ரயிலுக்கு காத்திருந்த இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டிருந்த டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். அவர் மதுரை ரயிலுக்காக காத்திருந்தார். பயணங்களால் கிடைத்த தற்காலிகச் சொந்தங்கள் தான் எத்தனை.

 

மறுநாள் இரவுக்குள் ஆந்திராவை முழுமையாக ரயில் கடந்திருந்தது. அப்பொழுது தான் அதனை உணர்ந்தான். போர்வையில் இருக்கும் ஒவ்வொரு நுண்துளைகளில் இருந்தும் வறட்டுப் பனி பீறிட்டு அடித்து நிமிடத்தில் நனைந்தது. அது என்னவென்று உணர்ந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது. அதுவரை அந்த உடல் குளிரின் அளப்பெரிய தன்மையை ஒருக்கே கண்டதில்லை. வேண்டாம் வேண்டாம் என்றாலும் விடாது வலுக்கட்டாயமாக புணர்ந்தது. எழும்புகளை கடித்தது. கை கால்கள்களை விரைக்கச் செய்தது. அதன் தாண்டவத்தால் மூக்கும் காதும் உணர்ச்சியற்றுப் போயின. எண்ணைக்கொப்பரை வெயிலையும் சமாளித்துப் பழகிய தமிழனை பூலாந்தேவிப் பள்ளத்தாக்கின் பனி வெடவெடுக்கச் செய்தது. விடிந்து மதியமாகியும் விட்டபாடில்லை, மறுதினம் ஆக்ராவரை தொடர்ந்தது. அந்த டாக்டர் ஏற்கனவே சொல்லி இருந்தார், சம்பல் பள்ளத்தாக்குப் பனியை பார்த்து கடக்கவென. இவன் தான் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டான்.

 

உக்கிர வெயில் காலம், மிதமான வெயில்காலம், மழையுடன் கலந்த வெயில் காலம் என்ற தமிழகத்தின் மூன்றே மூன்று காலங்களைப் போல் அங்கு இல்லாததில் அவனுக்கு சற்று வருத்தம் தான்.

 

இதன்பின் அப்பனியையே பணித்து அடிமையாக்கி குளிர் காய்ந்ததெல்லாம் வரலாறு.  இருந்தாலும் பனியுடனான முதல் உறவென்பது என்றும் நினைவைவிட்டு உருகாதது. கொடூரமான துவக்கத்துடன் துவங்கினாலும் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் உச்சந்தலை குளிர்ச்சி தரக்கூடியது.

 

சோதனைகளை கடந்து விமான நிலையத்தைவிட்டு வெளியேறி வந்தான். கைகள் மொபைலில் சில எண்களைத் தடவியது. காதில் வைத்து தலையை நிமிர்த்தினான்.

 

’ஹலோ. திஸ் இஸ் ஹஸன். அட் ஹீட்த்ரோ. நீங்க எங்க இருக்கீங்க பாலாஜி? யா. நியர் டாக்ஸி ஸ்டாண்ட். வெய்ட் டீ ஷர்ட் அண்ட் ப்ளூ பேண்ட்ஸ்’

 

பக்கத்தில் நின்றிருந்த வெள்ளைக்காரி ஹஸனைப் பார்த்து குபீரெனச் சிரித்தாள்.

 

‘ஆர் யூ இன் ப்ளூ பேண்ட்ஸ்? தாங்ஸ் ஃபார் இன்ஃபார்மிங்.’ என மீண்டும் சிரித்துக் கொண்டு அவ்விடம் விட்டு ஒரு டாக்சியில் நகர்ந்தாள்.

 

ப்ளூ பேண்ட் அணிந்திருந்தது ஒரு குற்றமா? எதற்காகச் சிரித்திருப்பாள்? என யோசித்துக்கொண்டிருக்கையில் எதிரே ஒரு இந்திய வாலிபன் வந்து நின்றான்.

 

மூக்கிற்கு கீழ் ஒற்றை முடி கூட தென்படாமல் முற்றிலும் மழித்த முகம், டக் இன் செய்து காதில் ஒரு வயர்லெஸ்ஸும் கையில் ஒரு டேப்லட்டும் அவன் உருவத்தை முன்னெடுத்துக் காட்டின. நடுத்தர உயரம். அகண்ட வாய். வெளிர் மஞ்சள் நிறம். கத்திரிக்காய் தொந்தி.

 

’ஐம் சாரி பாஸ். லேட் ஆய்டுத்து. பை தி பை நான் தான் உங்க பெர்ஸனல் கேர் டேக்கர் பாலாஜி. உங்ககிட்ட பேசினேனே’

 

பாலாஜியும் தன் ஊரான தஞ்சாவூர் அய்யம்பேட்டையை பூர்வீகமாகக் கொண்டவன் என்பதும் சென்னையில் வளர்ந்தவன் என்பதும் லண்டனில் கடந்த ஆறு வருடங்களாக பணியாற்றி வருவதும் தனக்கு உதவி செய்ய சில நாட்கள் நியமிக்கப் பட்டிருப்பதும் அவனுக்கு முன்பே தெரியும்.

 

’ஓ எஸ். நினைவிருக்கு. பாஸ் எல்லாம் வேண்டாம். கால் மீ ஹஸன். ரைட்?’ என்று கூறியவாறு பாலஜியுடன் கைகுலுக்கிக் கொண்டான்.

 

’இன்னும் கொஞ்ச நேரத்தில குளிர் ஏறிடும். லெட்ஸ் கெட் இன்ஸைட் தி கார்‘

 

‘ஸ்யூர்‘ என தலையசைப்புடன் பாலாஜியுடன் கதகதவென இருந்த காருக்குள் புகுந்தான்.

 

வண்டி கிளம்பியது.

 

போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவழியாக வண்டி வடக்கு ஹில்லிங்டன்னில் இருந்த குடியிருப்பினுள் நுழைந்தது. அது ஹஸன் வேலை செய்ய வந்திருக்கும் ‘தி கிரீன்’ நிறுவனத்திற்கு சொந்தமானது. அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் அங்கு தான் தங்கியிருப்பர். அக்குடியிருப்பில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது  நிறுவனம். கண்ணில் படுபவர்களில் பத்தில் ஒருவர் இந்தியராக இருந்தனர். ஹஸனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, பாலாஜியிடம் வினவினான்.

 

’பாலாஜி இதென்ன இங்க எங்க பாத்தாலும் நம்மவங்க தெரிறாங்க?’

 

‘எஸ் பாஸ். ஹில்லிங்டன்ல நம்ம பீப்பிள் அதிகம். உங்க முஸ்லிம்ஸ் கூட லண்டன்-ல அதிகமா இருக்காங்க.’

 

வேண்டா வெறுப்பாக ’ஐ ஸீ’என்றான் ஹஸன். உள்ளுக்குள் தன்னை முஸ்லிம்களுடன் அடையாளப் படுத்தியதை நினைத்து பாலாஜியை திட்டிக் கொண்டிருந்தான். முஸ்லிம்கள் என்ற வார்த்தைக்கு எப்படித் தேடினாலும் தீவிரவாதத்துடன் தான் அவன் மனது தொடர்புபடுத்தியது. ஏனோ தெரியவில்லை இஸ்லாம் என்ற சொல் அவனை புண்படுத்தியது. அதனைத் தன்னுடன் அடையாளப்படுத்துவது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவனது கடந்தகாலம் அப்படித்தான் இருந்திருக்கிறது. தான் நாத்திகன் எனும் வரையறையை விட்டு வெளியேற அவன் விரும்பவில்லை. பேச்சை வேறு திசைக்கு கூட்டிச் சென்றான்.

 

‘பாலாஜி. இந்த ஊர்ல ப்ளூ பேண்ட்ஸ் போட மாட்டிங்களா?’

 

‘இல்லயே. யார் சொன்னா உங்களுக்கு?’

 

‘இல்ல ஒரு லேடி. ப்ளூ பேண்ட்ஸ், தாங்கஸ் ஃபார் இன்ஃபார்மிங்னு சொல்லி சிரிச்சிட்டு போனாங்க’

 

சொன்னது தான் தாமதம், பாலாஜியும் குபீரெனச் சிரித்தான்.

 

‘பின்ன ப்ளூ பேண்ட்ஸ் போட்டிருக்கேனு சொன்னா?. இங்க பேண்ட்ஸ்னா அண்டர்பேண்ட்ஸ்னு அர்த்தம். நம்மூர் பேண்ட்ஸுக்கு பேர் ட்ரோஸர்ஸ். நம்மூர்ல  பேண்ட்ட ட்ரோஸர்ஸ்னா டவுசர் கிழிஞ்சிடும்’

 

‘இதில ஒரு ப்யூட்டி என்ன தெரியுமா பாலாஜி. இன்னைக்கு ரெண்டு பேண்ட்டும் ப்ளூதான்’ எனக் கூறி விழுந்து விழுந்து சிரித்தான்.

 

கார் நின்றது. பாலாஜியுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு ’ரொனால்ட்’ ப்ளாக்கின் ஒன்பதாம் தளத்திற்கு சிரிப்படங்காமல் லிஃப்ட்டில் ஏறினான்.

 

‘பாலாஜி, நான் டெல்லில வொர்க் செஞ்சப்ப எங்களுக்கு நாலஞ்சு வேலைக்காரங்க இருந்தாங்க. இங்க என்னனா நம்ம லக்கேஜ நாமலே தூக்கிகிட்டு இருக்கோம்’

 

‘பாஸ் திஸ் இஸ் ’தி கிரீன்’. அப்படிதான். ஆஃபிஸ்-ல உங்களுக்கு டீ வேணும்னா நீங்க தான்  போயி ஃபெட்ச் பண்ணிகனும். இண்டியா மாதி டீ பாய் எல்லாம் தனியா இருக்க மாட்டாங்க. நம்ம கம்பெனிக்கினு தனியா கொள்கைகள் எல்லாம் இருக்கு. போகப் போக தெரிஞ்சுக்கிவீங்க. பட் ஒன் திங் உங்களுக்கு எல்லா ஃபெஸிலிட்டியும் இங்க கிடைக்கும். ஆனா எல்லாம் மெஷின் தான். அதுவும் நம்ம கம்பெனி தயாரிச்சது. ரூமுக்கு போங்க தெரியும்’

 

‘தட்ஸ் க்ரேட். நான் கேள்விப்பட்டிருக்கேன்.’

 

‘ஹியர் இட் இஸ். உங்க அபார்ட்மெண்ட். நம்பர் 545. ரொம்ப லக்கியான இடம் இது. இங்க தான் நம்ம சி.இ.ஓ ஒரு காலத்தில தங்கி இருந்தாரு. கம்பெனி வளர்ந்த பின்னாடி முதல் வேலையா இந்த ஏரியாவையே வாங்கி கம்பெனி ஸ்டாஃப் குவாட்டர் ஆக்கிட்டாரு. ஒன்லி ஸ்பெஷல் ஒன்ஸ் கெட் திஸ் ப்ளாக். எஸ்பெஸலி திஸ் போர்ஷன். க்ரீனீ’

 

’ரியலி? ஒன்னு தெரியுமா பாலாஜி. நான் இங்க என்ன வேலை செய்ய வந்திருக்கேனு எதுவும் தெரியாது. சாலரி செட் ஆனது மட்டும் தான் நான் வந்ததுக்கானா ஒன் அன் ஒன்லி ரீஸன். பணம் தானே ஒளிய முடிவு செய்யுது’

 

‘பெரிய பெரிய வேலை எல்லாம் அப்படி தான் பாஸ் இருக்கும். எப்புடியும் உங்களுக்கு நியூ இயருக்குப் பின்னாடி தான் ஆஃபிஸ் அசைன் ஆகும். அநேகமா ஜான்வரி தர்ட் வாக்கில இருக்கும். அதுவரைக்கும் உங்களுக்கு லண்டனை சுத்திப் பாக்கிறது தான் வேலை.’’

 

’உங்களுக்கு?’

 

‘உங்களை பாத்திக்கிறது தான்’

 

‘நல்லா பேசுறீங்க பாலா. ஷால் ஐ கால் யூ அஸ் பாலா’ ஹஸன் சிரித்தபடி கேட்டான்.

 

‘அஸ் யூ லைக். ஓகே. நீங்க ரொம்ப டயர்டா இருப்பிங்க. டேக் ரெஸ்ட், சேஞ்சிங் யுவர் ப்ளூ பேண்ட்ஸ் பாஸ்.ஹா ஹா. நாளைக்கு உங்கள ஷோ ரூம் கூட்டிப் போனும். ச்சே. சொல்லிட்டனே. இதுக்கு மேல கேக்காதிங்க. நாளைக்கு காலை-ல சொல்றேன். டேக் கேர். ஸீ யூ. ஸீ யூ க்ரீனீ.’

 

’க்ரீனீயா? இதென்ன பட்டப்பேரு பாலா. குட் நைட்‘

 

கதவு சாத்தப்பட்டது.

 

கதவு தட்டும் சத்தம் கேட்டது.

 

’யெஸ் கமின்’.

 

கதவு தானாய் திறந்தது.

 

ஸமார்ட் போன், ஸ்மார்ட் டீவி வரிசையில் இது புதிது ஸ்மார்ட் ரூம். சந்தைக்கு வர குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளாவது பிடிக்கும். க்ரீனீ. நேற்றிரவு அறைக்குள் அடைபட்ட ஹஸன் அறைக்குள் ஓர் உலகு அடைபட்டிருப்பதைக் இனம்கண்டான். ’ஸி யூ பாலா குட் நைட்’ என சொன்னது தான் தாமதம். ’வெல்கம் ஹோம் ஹஸன்’ என கதவு தானாய் சாத்தியது.

 

‘யாரது?’

 

‘ஸாரி ஐ ஸ்பீக் ஒன்லி இங்லிஷ் ஃபார் நவ்’ என தன் தமிழ் அறியாமையை வெளிப்படுத்தியது.

 

‘நோ ப்ராப். மே ஐ நோ யூ’

 

‘நான் தான் க்ரீனீ. உலகத்தின் முதல் க்ரீன் ஆப்பரேட்டர். நான் இந்த ரூமை ஆப்பரேட் பண்றேன். இந்த ரூம கவனிச்சுக்கிறது தான் என் வேலை. நீங்க கதவைத் தட்டினா தொறப்பேன், மூடுன்னு கூட சொல்ல வேண்டாம், உங்க தலையசைவே போதும் முடிக்கொள்வேன். ரூம க்ளீன் பண்ணுவேன். ட்ரெஸ்ல இருந்து பேட் ஸ்மெல் வந்தா நானே எடுத்து தண்ணியே இல்லாம துவச்சு அயர்ன் பண்ணுவேன். காலைல எழுப்பிவிடுவேன். எதாவது தொலஞ்சு போச்சுனா தேடி எடுக்க உதவுவேன். எனக்கு தேவையான சாமான்லாம் வாங்கிக் குடுத்தா சமைக்கக் கூட செய்வேன். ஆனா ஒரு கண்டிஷன் சமையல் சரியில்லைனு சொல்லக் கூடாது. ஏன்னா எனக்குத் தெரிஞ்சதெல்லாம் காஃபி போட்றது மட்டும் தான். ஹி ஹி.  சிம்பிளா சொல்லனும்னா நான் இந்த ரூம்ல இருக்கும் மிஷின்களையெல்லம் ஒருகிணைக்கிற ஒரு ஆப்பரேட்டர். நீங்க உள்ள நுழைஞ்சவுடன் உங்க  ஃபோன என்கூட கப்பிள் பண்ணினா அதையும் மேய்ப்பேன். போன் வந்தா நீங்க அத எடுக்கனும்னு அவசியமே இல்ல. படுத்துக்கிட்டே பதில் சொல்லலாம். இன்னொன்னும் சொல்றேன். எனக்கு சுயமா எதுவும் யோசிக்கத் தெரியாது. உங்களோட பிரதிபலிப்பாதான் நான் இயங்குவேன். டேக் கேர் ஆஃப் மீ.’ என மழலை ஆங்கிலத்தில் ஒப்பித்தது. ஹஸன் திரும்பிய திசை எல்லாம் சுவற்றில் ஒரு திரை தோன்றி க்ரீனீயின் பசுமையான முகத்தை ஒளிபரப்பியது.

 

ஹஸனுக்கு வியப்பு தாங்கவில்லை. ஏதோ வேறொரு உலகிற்குள் நுழைந்ததைப் போல் இருந்தது. அனைத்து இயந்திரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தன. திரையில் தோன்றிய க்ரீனீ தன் பாடத்தை ஆரம்பித்தது. தான் புரிந்துகொள்ளும் மொழியை போதித்தது. அது சொல்லச் சொல்ல எழுந்தான், விளக்கெரிந்தது. கண்ணை மூடினான், விளக்கணைந்தது. கண்முன் மாயம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

பயணக் களைப்பையும் மீறி சுமார் இரண்டு மணி நேரம் ஸ்மார்ட் ரூமை ஆய்ந்து கொண்டிருந்தான். உடல் அசதியால் கொட்டாவிவிட்டது. க்ரீனீ புரிந்து கொண்டது. தன் அனைத்து செயல்களில் இருந்தும் விடுபட்டு உறங்க ஹஸனுக்கு கட்டளையிட்டது. அவனுக்கு பிடித்த பாடல்களை அவன் மொபைல் ஹிஸ்டரியிலிருந்து உருவி மிதமாக இசைத்தது. மெல்ல உறங்கிப் போனான்.

 

 

’குட் மார்னிங்’

 

‘குட் மார்னிங் பாலாஜி’. பாலாஜியின் குரல் இல்லையே இது.  பெண்ணின் குரல் அல்லவா என சுதாரித்து போர்வையை விலக்கினான். எதிரே ஒரு பெண். தோற்றம் கதை சொன்னது. துருதுரு பார்வை இருக்க வேண்டிய வயது.தெரிந்ததென்னவோ ஊடுருவும் விழிகளே. முகம் சுழிக்கவும் தேவை இல்லை. சுழிக்காமல் வெறுத்துப் பார்க்கவும் தேவை இல்லை. எடுப்பான உடை. அதனுள் மிதமான உடல். எங்கேயோ பார்த்த முகம். கழுத்தில் ஓர் மச்சம். ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததைப் போல் தெரிந்தது. வெள்ளைக்காரி இல்லை. வேலைக்காரியும் இல்லை. யாராய் இருப்பாள்? இங்கென்ன வேலை?

 

இவன் அங்குளம் அங்குளமாக அளந்து கொண்டிருக்கையில் அவள் இவனது எண்ணத்தைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. ரூமுக்குள் நுழைந்து கண்களால்  எதையோ கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.

 

‘வெல்கம். மேம்’ க்ரீனீ வரவேற்றது.

 

‘மெய்ல் மீ’ என்று எதையோ தன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொன்னாள்.

 

‘அல்ரெடி மேம்’

 

இதற்கெப்படி இவளைத் தெரியும். என்ன நடந்துகொண்டிருக்கிறது. எதற்காக மின்னஞ்சல் எல்லாம் அனுப்பச் சொல்கிறாள்?

 

‘ஹஸன். ஹவ் வாஸ் தி ட்ராவல்’. அக்மார்க் ஆங்கிலம் தெரித்தது.

 

‘ஃபைன் மேம்’

 

மேம்.மேம். இந்த மேமை எங்கிருந்து கற்றான்? யார் நீ என்றல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும். சிலருக்குத் இயல்பிலேயே அந்த தோற்றம் இருக்கும். பார்த்தாலே  தோன்றிவிடும் இவர்களை ‘மேம்’ போட்டு கூப்பிட வேண்டுமென.

 

அவனது பதிலைக் கேட்பதற்குள்ளாகவே ஒலித்தது ’ஓகே’ .

 

‘நான் உங்கள எங்கயோ பார்த்திருக்கேன்?’. அசடு வழிவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

 

’இருக்கலாம். மே பீ’ எனக் கூறி அங்கிருந்து வெளியேறினாள்.

 

அடித்தளம் இருந்த இடத்தைக் காணவில்லை, கரைந்திருந்தது. முகத்துக்கு முகம் நோக்கிய ஒரே ஒரு நொடி அது தான். மறுபதில் எதிபார்க்கா தோரணை.இது ஒளி படைத்தோருக்கே உரிய தோரணை. அலட்சியத் தோரணை. நான் உன்னை மதிக்கவில்லை, என்ன சொல்ல வேண்டுமோ சொல்லிக்கொள். இது என் இடம், எனக்குக் கீழ் தான் எல்லாம். வால் ஆட்டக்கூடாது என நிறுவ முயலும் தோரணை. ’அப்ப இவ தான் நம்ம பாஸா இருக்கனும்’. புரிந்து கொண்டான்.

 

‘யாரிது க்ரீனீ’ க்ரீனீயிடம் வினவினான்.

 

‘தீ க்ரீன் நிறுவனத்தின் பீக்கீ. அதாவது ஒன் ஆஃப் போர்ட் மெம்பர்.’

 

‘இவுங்களப்பத்தி இன்னும் டீடெய்ல்ஸ் சொல்லு’

 

‘எனக்கு இவ்ளோ தான் தெரியும். இண்டெர்னெட் டேட்டா பேஸ்லயும் பெரிசா ஒன்னும் இல்ல. பாருங்க’

 

இணைய முடிவுகளுடன் திரை தோன்றியது. கதவு மீண்டும் தட்டப்பட்டது.

 

‘தாங்க் யூ க்ரீனீ. ஹூ இஸ் இட்?’

 

‘உங்களுக்காக டேட்டா பேஸே வெளிய நிக்குது. இட்ஸ் நன் அதர் தென் பாலாஜி’

 

‘வாங்க பாலாஜி உள்ள’

 

தமிழ் தான் எவ்வளவு அழகு. மூன்றே வார்த்தைகள். எப்படி வேண்டுமானலும் போட்டுக்கொள்ளலாம். வாங்க பாலாஜி உள்ள. உள்ள வாங்க பாலாஜி. வாங்க உள்ள பாலாஜி. எல்லாம் பொருள் தரும். இப்படி தமிழற்ற சூழலில் தான் தமிழ் தித்திக்கும்.