விதி வலியது (சிறுகதை)

விதி வலியதுநேற்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

செய்தித் தாளில் எல்.எல்.ஆர் பற்றி படித்த நேற்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், இன்று எப்படியேனும் எல்.எல்.ஆர் எடுத்துவிட வேண்டும் என்று.

பைக் ஓட்டவேண்டும் என்பது இளைஞர்களுக்கு மீசை முளைக்கத் துவங்கும் காலற்கு முன்பே முளைவிடும் ஆசை, எப்படி பெண் குழந்தைகளுக்கு தலைமயிர் உதிக்கும் முன்பே மல்லிகையின் மீது ஆசை உதிக்கிறதோ அதைப்போல. பைக் ஓட்டி ஃபிகரை மடக்கும் கதாநாயகர்கள் இருக்கும் வரையும், மல்லிகைப்பூவை வைத்தே மனதை கொள்ளையடிக்கும் கதாநாயகிகள் உலாவரும் வரையும் இந்த மோகத்தை அணைவைத்தெல்லாம் அடைக்க முடியாது, ’பைக் ஓட்டவேண்டும்என்பது கிட்டத்தட்ட ஜனநாயகக் கடமைகளுள் ஒன்றோடொன்றாய் கலந்துவிட்ட இச்சமூகத்தில். இப்படி இருக்கும் சூழலில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? ஜோதியில் கலந்தால் தானே உற்சவம்.

கால் எட்டா எட்டாம் வகுப்பிலேயே பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டாலும், லைசன்ஸ் என்று ஒன்று வாங்கவேண்டுமே என்று என்றும் நிதானித்து யோசித்ததில்லை. பக்கத்து தெரு சகா வீட்டிற்கும், தெரு முக்குக் கடைக்கும் மட்டுமே வண்டியை ஓட்டிச் சென்ற காலம் அது. மின்னல் வேகத்தில் தெருக்களைக் கடப்பதால் கிடைக்கும் வசவுகளை மட்டுமே வண்டி ஓட்டுவதின் விபரீதமாய் நான் அறிந்து வைத்திருந்த காலம். இப்படி இருக்கையில் தான் அந்த நாளும் வந்தது.


மே மாதம். பத்தாம் வகுப்பு விடுமுறை ஆரம்பித்திருந்த சமயம். தினமும் காலை நான்கு மணிக்கு படிக்க எழுந்து பதினோரு மணிக்கு படுக்கப் போகும் அந்த ஏகாந்த நாட்களை விட்டு மனம் மீண்டுவிட்டாலும், உடல் இன்னும் மீண்டுவர மறுத்துக்கொண்டிருந்தது. விளைவு. போர் போர் பெரும் போர். போர் அமாம் அந்த சலிப்பு கழுதை தான். என்ன செய்யலாம். வேறென்ன, நண்பர்கள் நால்வர் சேர்ந்து திட்டம் தீட்டினோம்.

வீ அர் கோயிங் டு அழகர் கோவில்”, திட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கழுதை கெட்டால் குட்டிச்சுவறு, வேறெங்கு செல்ல மதுரை வாலிபர்களின் ஒரே மெரினா அழகர் கோயில் தானே. மறுநாள் காலை அனைவரும் வீட்டில் ஏதாவது கப்சா விட்டுவிட்டு கோரிப்பாளையம் பெட்ரோல் பங்கில் தனித்தனியே குழுமிவிட வேண்டும். அங்கிருந்து அமர்களமாய்க் கிளம்பி அழகர் கோயில் சென்றுவிட வேண்டியது தான் பாக்கி.

மறுநாள் காலை ஆளுக்கொரு வண்டியை எடுத்துக்கொண்டு கூடிவிட்டோம் பெட்ரோல் பங்கில். சன் கிளாஸ், ஹேர் ஜெல் என அனைத்து மேக்அப்பகளுடன் அழகர்கோவில் பயணம் இனிதே துவங்கியது. முதல் கியர், இரண்டாம் கியர், மூன்றாம் கியர்.

இன்னும் நான்காம் கியரைக்கூட கடந்திருக்கவில்லை. தமுக்கத்தில் ஒருவர் எங்கள் படையை கை மறைத்தார். வெள்ளைச் சட்டை. காக்கி பேண்ட். கக்கத்தில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட ஒரு விசில். நெஞ்சில் அ.சுப்புராஜ், போக்குவரத்து காவலர் என்ற பேட்ஜ் வேறு.

எங்க தம்பி போரீங்க

அழகர் கோயிலுக்குனே, போன வாரம் தான் டெண்த் முடிச்சோம். அதான் அப்டியே சம்மர் லீவை கழிக்கச் செல்கிறோம்

சரி எப்படி வேணும்னாலும் கழிங்க, முதல்ல லைசென்ஸை எடுங்க

எதுக்குண்ணே லைஸென்ஸ், அதான் நாங்களெல்லாம், எவ்வளோ அழகா வண்டிய ஓட்டீட்டு வந்தோம்னு பாத்தீங்கள்ள

அப்படியா தம்பி வண்டியைக் கொஞ்சம் ஓரம் கட்டுங்க, ஐயா வந்தன்ன ஓட்டிக்காட்டீட்டு கெளம்பலாம்

ஓகே, ஷூயூர். நாங்க வெய்ட் பன்றோம். அவரையும் பாத்துட்டு போறோம்
கரை ஒதுங்கி நின்ற நாங்கள் நின்றோம் நின்றோம் இரண்டு மணிநேரம் கால்கடுக்க நின்றோம் சுப்பு ராஜின் கடைக்கண் தரிசனம்கூட எங்களுக்கு கிட்டவில்லை. இறுதியாக எங்கள் வண்டியை 
போக்குவரத்து வாகனத்தில் ஏற்றும் போது தான் புரிந்தது, சுப்பு ஏதோ தப்பு செய்கிறார் என்று.

அண்ணே ஏண்ணே எங்க வண்டியை தூக்கிறீங்க?”

லைஸன்ஸ், ஆர்.சி எதுவும் இல்ல. வயசும் பதினாறத் தாண்டாது. உங்களுக்கெல்லாம் பைக் அதுவும் அழகர் கோயிலுக்கு. எப்டிறா உங்க வீட்ல அனுப்புறாங்க. ஸ்டேசன் வாங்க உங்க அப்பா அம்மாவை வரவழச்சு பேசிக்கிறேன்

அனைவரது அப்பாவும் அம்மாவும் காவல் நிலையத்திற்கு தங்கள் சுற்றம் சகிதம் வருகை புரிந்தனர். இனி என்ன நடந்தது என்று சொல்லவா வேண்டும். டமால் டுமீல் தான். அந்த நிகழ்வுக்கு பிறகு பெற்றோரின் திட்டில் சம்மர் வெக்கேஷன் சராமாரியான வேகத்தில் சரிந்து முடிந்தது.

நீங்கள் கேக்கலாம், இன்றைக்கு சிறுகுழந்தைக்கு கூட தெரியும் லைஸன்ஸ் இல்லையென்றால் போலிஸ் பிடிக்கும் என. இதற்கு ஏதோதொ பதில் சொல்லி குட்டையை குழப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரே கூற்றுஅந்த காலகட்டத்தில் எங்களுக்கு லைஸன்ஸ் பற்றியெல்லாம் அவ்வளவு விழிப்புணர்வு கிடையாது”. ஏனென்றால் அது லைஸன்ஸ் சரிபார்ப்பு தொடங்கியிருந்த காலம். இன்னும் கேக்காதீங்க குழப்பிடுவேன்.

அன்று முதல் எப்படியாவது ஒரு லைஸன்ஸ் எடுத்தே தீரவேண்டும் என்று தீராவேட்கை கொண்டேன். ஆனால் அதற்கான காலம் தான் கைகூடவில்லை. தொடர்ந்து வந்த ப்ளஸ் ஒண்ணும், ப்ளஸ் டூவும், குறைந்த வயதும் என்னை எதுவும் சிந்திக்கவிடாமல் செய்தன. அப்பொழுது விட்ட காலம் இப்பொழுது கிட்டியுள்ளது. பண்ணிரெண்டாம் வகுப்பு விடுமுறையில்.

விடுமுறை தொடங்கிய தினமே லைஸன்ஸ் எடுப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். முதலில் எல்.எல்.ஆர் போடவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்குள் எட்டு போட்டும் இன்ன பிற வித்தைகளைக் காட்டியும் லைஸன்ஸை எப்படியாவது வாங்கி விடவேண்டும். இந்த சமயத்தில் தான் செய்தித்தாளில் அந்த செய்தியைப் படித்தேன். எல்.எல்.ஆர் போடுவது எப்படி? எனும் தலைப்பில் எம்.டி. உதயமூர்த்தி எழுதியிருந்த அருமையான கட்டுரை.

முதலில் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பதிந்து, அவர்கள் வரச்சொல்லும் நாளில் இணையதளத்திலிருந்து சில ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொண்டு அவர்களது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு நூற்றைம்பது ரூபாயை கவுண்டரில் கட்டினால், தீர்ந்த்து வேலை. எல்.எல்.ஆர் காண்டம் இனிதே நிறைவடைந்து விடும். அந்தக் கட்டுரையை வாசிக்க வாசிக்க இன்பத் தேன் வந்து பாய்ந்தது என் காதில். இவ்வளவு எளிதான காரியத்தை இவ்வளவு நாள் செய்யாமல் விட்டுவிட்டோமே. உடனே காரியத்தில் குதித்தேன். இணையதளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு டான் டான் என விடையளித்தேன். நான் அளித்த தகவல்களைக் கொண்டு அவர்களே ஒரு படிவத்தை நிரப்பி என்னை நோகாமல் பதிவிறக்கம் செய்து மறுநாள் மாட்டுத்தாவணி விரைவுப்போக்குவரத்துக் கழக அலுவகத்திற்கு வரச்சொன்னார்கள்.

பொழுதும் புலர்ந்தது. விடியற் காலை பத்து மணி. வேகவேகமாய்க் கிளம்பிஇனிமேல் உன்னைச் சீண்டமாட்டேன்என சூளுரைத்து மாட்டுத்தாவணி செல்லும் பேருந்தில் ஏறினேன். சரியாக பதினோறு மணிக்கு போக்குவரத்து அலுவகத்தில் இருந்தேன்.

பெருத்திரளான கூட்டம் அங்கு கூடியிருந்தது. அங்கு இங்கு மோதி, நான்கைந்து பேர்களிடம் விசாரித்து பணம் கட்டும் அறையை அடைந்தேன். நூற்றம்பது ரூபாயை அங்கு கட்டி ரசீது பெற்றுக்கொண்டபின், ஆவணங்களையும் படிவத்தையும் ரசீதையும் அவர்கள் சொல்லும் முறையில் அடுக்கி மேல் மாடி அறையில் அமர்ந்திருந்த போலிஸ்கார அம்மாவிடம் எடுத்துச் சென்றேன்.

வில்லாபுரமா

ஆமாம், மேடம்

வயசென்ன?”

பதினெட்டு

ஊனம் ஏதும் இருக்கா?”

அதெல்லாம் இல்ல மேடம்

நான் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்துகொண்டே கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

சரி அங்கிருந்து நடந்துவா”, என எதிரில் இருந்த கதவிலிருந்து நடந்து வரச்சொன்னார். நானும் அழகிப் போட்டியில் நடந்து வருவதைப்போல் ஒய்யாரமாய் ரேம்வாக் செய்தேன்.

ம், எல்லாம் சரியா இருக்கு, ஒரே ஒரு ஆவணம் மட்டும் மிஸ்ஸிங். யோவ்301 என்ன ஏதுனு பாருஎன்று மற்றொரு ஏட்டைக் கைகாட்டினார். அவரும் என்னை அடுத்த அறைக்கு வருமாறு சைகை செய்தார். சென்றேன்.

கொடிவீர்ர் தின நன்கொடை ரூ.100 என அச்சடிக்கப்பட்டிருந்த ரசீதை என்னிடம் நீட்டி நூறு ரூபாயை லபக்கிக்கொண்டனர். மீண்டும் அந்த காவல்கார அம்மாவிடம் சென்றேன். அந்த நன்கொடை ரசீதை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு, “ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது, கீழே சென்று இந்த ரசீதைக் காட்டி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்என்றார்.

கீழ்தளத்தில் போக்குவரத்துக் குறியீடுகளும், விதிமுறைகளும் சுவற்றில் படங்களாய் மாட்டப்பட்டிருந்த அறை என்னை அன்புடன் வரவேற்றது. ரசீதை நீட்டி கணினிக் கேமராவில் ஒரு க்ளிக் எடுத்துக்கொண்டேன். எல்லாம் முடிந்தது. மாலை ஆறுமணிக்கு வந்து எல்.எல்.ஆரை வாங்கிகொண்டு போகச் சொன்னனர். ஏற்கனவே மணி நான்கு. இன்னும் இரண்டு மணிநேரம் இங்கேயே எங்காவது பொழுதைக்கழித்தால் அலைச்சல் மிச்சம் என எண்ணிக்கொண்டேன். நினைத்து முடிப்பதற்குள் செல்போன் மணியடித்தது. அர்ஜுன் காலிங்.

என்னடா மச்சி எங்கிருக்க

மாட்டுத்தாவணிலடா

எதுக்குடா அங்க போன

எல்.எல்.ஆர் எடுக்கத் தான்

ம். கலக்கு. கைல எவ்ளோ வச்சிருக்க மாப்ள?”

ஆயிரத்துல 250போக மீதி

அங்கையே இருடா நான் வரேன், பார்ட்டி ஓ.கே

அதெல்லாம் இப்ப வேணாம்டா, நாளப்பின்ன பாக்கலாம்

அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம், அப்புடியே காலாற நடந்து 100அடி ரோடு டோமினோஸ் 
வந்துடு. வச்சுரேன்

என் பேச்சை துளியும் அவன் கேட்கவில்லையென்றாலும் அந்த ஐடியா எனக்கு சரியாகப்பட்டது. இரண்டு மணிநேரம் பொழுதும் போகும், சந்தோசத்தை வெளிப்படுத்த பார்ட்டியும் கூட. போனை வைத்து பத்தே நிமிடத்தில் அர்ஜுன் ஆஜராகிவிட்டான். டோமினோஸை ஒருவழி செய்துவிட்டு வெளியேறினோம். ஆறு. இருவருமாய் மீண்டும் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தோம்.

மணிகண்டன்

அரவிந்தன்

ஜேம்ஸ்

கருப்பாய் கணமாய் ஒருவர் ஒவ்வொரு பெயராய் தன் கணீர்க்குரலில் வாசித்துக் கொண்டிருந்தார். அனைவரும் அமைதியாய் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் வரிசையாய் அமர்ந்திருந்தனர். பெயர்வந்தவர்கள் எழுந்து சென்று கையெப்பமிட்டு தங்கள் எல்.எல்.ஆரை வாங்கிச் சென்றனர். பார்ப்பதற்கு திருத்தப்பட்ட தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர் வினியோகிக்கும் வகுப்பறை போல் இருந்த்து. துவக்கத்தில் ஐந்து பெஞ்ச் நிரம்பியிருந்த கூட்டம் ஐந்தானது. ஐந்தும் இரண்டானது. அந்த இருவர் நானும் என் நண்பனும்.

இன்னும் வரலையா உங்களுக்கு, பேர் என்ன தம்பி?” என்றார் அந்த கருத்தவர். என் பெயரைச் சொன்னேன். ”எந்த ஏரியா?” என்றார். ”வில்லாபுரம்என்றேன். என்னமோ எனக்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல் விரிந்த கண்களுடன் வாய் திறந்தார்.

என்ன தம்பி வில்லாபுரத்திற்கான ஆர்.டி.ஓ ஆஃபிஸ் பெரியார்லைல இருக்கு. நீங்க இங்க வந்து அப்ளிகேஷன் போட்டிருகீங்க

அண்ணே நான் வரலை, உங்க வெப்சைட் தான் இங்க கூட்டீட்டு வந்துச்சு. நான் என்ன பன்றது

ஆமால, இப்ப எல்லாம் வெப்சைட் தானே

என்னணே இது வரிஞ்சு வரிஞ்சு அந்த போலிஸ் மேடம் அப்ளிகேசனை சரி பார்த்தாங்களே, அப்ப கூட சொல்லி இருக்கலாமே. சரி இப்ப என்ன பன்னலாம்

இருங்க தம்பி நான் ஆஃபிஸர் ஸார்கிட்ட கேட்டிட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு எலிப்பொந்து போன்ற ஒரு அறைக்குள் நுழைந்தார். இனி என்ன தார் வேண்டிக்கிடக்கிறது. தான். நுழைந்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்து, “சார் உங்கள உள்ள வரச் சொல்றாருஎன்றான்.

அப்பொந்துக்குள் நானும் நுழைந்தேன். ஒரு சிறிய நாற்காலி, அதில் ஒரு பெரிய உருவம் படைத்த ஆஃபிஸர், அவர்முன் ஒரு மேசை அதில் சில கோப்புகளும் பல திண்பண்டங்களும் இரைந்து கிடந்தன. நான் சென்ற பொழுது வடையை மென்று டீயை உள்ளிறக்கிக் கொண்டிருந்தார்.


சார் நான் லேனர்ஸ் லைஸன்ஸுக்கு இண்டர்நெட்டில் அப்ளய் செய்தேன். அது இந்த ஆர்.டீ.ஓ ஆஃபிஸுக்கு வரச்சொல்லியது. நானும் வந்து பணமெல்லாம் கட்டி, ஆவணங்கள் எல்லாம் சரிபார்த்து, சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து எல்.எல்.ஆர் வாங்கிக்கோனு சொல்லிஇப்ப வந்து கேட்டா உங்களுக்கு இந்த ஆஃபிஸ் இல்ல அப்ட்டீங்றாங்க என்ன செய்யலாம் சார்


இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த ஓபீஸர் இஞ்சி விழுங்கிய குரங்கைப்போல் ஒரு முழி முழித்தார். பின்னர் வயிற்றையும் தொண்டையையும் தடவிக்கொடுத்தார். பின்னர் அடிவயிற்றிலிருந்துஏவ்என பதிலளித்தார்


– ஏ.பி.தீன்

குறிப்பு: இது 100% உண்மை கலக்காதமுற்றிலும் தூய
கற்பனைக் கதை

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: