புது ப்ளாக் புகுவிழா – விஞ்ஞான மனப்போக்கு
இந்தியர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மை குறைவாக உள்ளதே. ஏன்?
இது பொதுவாகவே இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் கேள்வி. இது முற்றிலும் நியானமான கேள்வி என்பதை உணர்கிறீர்களா?

உணரவில்லையா, கவலைகொள்ளவேண்டாம். இந்தக் கட்டுரையின் நோக்கமே அதை உணர்வது தான்.
117 கோடி மக்களை கொண்டது இந்தியா. மனிதவளம் மிக்க நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் வேறு. இப்படிப்பட்ட மக்கள் பேராற்றல் மிகுந்த நாட்டில் ஆராய்ச்சி மனப்பான்மை என்பது மக்களிடையே மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஏன்?
இதற்கு, முதலில் இந்தியர்களின் மனப்போக்கு எவ்வாறு உள்ளது என புரிந்து கொள்வோம். பொதுவாக ஒரு நாட்டின் மனப்போக்கு என்பது அதன் நடுத்தரவர்கத்து மக்களை வைத்துத் தான் கணக்கிடப்படுகிறது. நடுத்தர வர்கத்து இந்தியர்கள் இங்கு ஒரே போல் இருக்கிறார்கள். கேரண்ட்டி (உத்தரவாதம்) எதிர்பாக்கிறார்கள். எதற்கெடுத்தாலும். வாங்கும் பொருளிலிருந்து, படிக்கும் கல்வியிலிருந்து, பார்க்கும் வேலையிலிருந்து, வாழும் வாழ்க்கை வரை. இதனை ஒருவகையில் தாங்கள் செய்யும் செயல் அனைத்திற்கும் ஆதாயம் தேடுகிறார்கள் என்றும் கொள்ளலாம். இது தவறா?
நிச்சயமாக இல்லை. ஆதாயம் தேடி வேலை செய்வது தான் மனித மரபு. ஆனால் உடனடி ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொள்வது அல்ல. உடனடி ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொள்வதென்பது மிகத் தவறான அனுகுமுறை. ஆராய்ச்சி மனப்பான்மைக்கு ஆப்பு வைக்கும் மிக மிகத் தவறான அனுகுமுறை. எப்படி?
அதற்கு முன். உடனடி ஆதாயம். மக்கள் இதனை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்.
யாமினி அபார்ட்மெண்ட்ஸ், முதல் தளம். 417ஆம் நம்பர் வீட்டின் படுக்கையறை. இரவு பத்தரை மணி. படுக்கையில் ராஜா, அவரது மகன், அவரது மனைவி.
என் கூட வேலை செய்யும் முருகனோட பையன் நேற்று மைக்ரோஸாப்ட் கம்பனியில ப்ளேஸ் ஆயிட்டான்”, என்று ராஜா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம் கூறுகிறார்.
“அப்படியா”, வாய்பிளக்கக் கூறிவிட்டு மறுபடியும் நாடகத்தில் அயர்கிறாள்.
இது ஒரு நிகழ்வு. சொற்களால் பரிமாறப்படும் நிகழ்வு. இதன் பின்னே மனவோட்டத்தால் ஆன நிகழ்வும் இருக்கிறதல்லவா?
அவர்களது எண்ணவோட்டங்களை சுண்டக் காய்சினால் “நாமும் முருகனின் மகனைப் போல் நம் மகனையும் ஆக்கவேண்டும்என்பது தீர்மானமாய் வெளிப்படும். காட்டில் எலிகளுடன் விளையாடும் தன் மகனின் கனவுக் கைகளில் கணினி எலியை திணிக்க எடுக்கப்படும் தீர்மானம். இது ஒரு நிகழ்வு மட்டுமே. இன்னும் இதைப்போல் எத்தனையோ நிகழ்வுகள்.
பிறரை பார்த்து அவர்கள் எடுத்த முடிவால் அவர்கள் அடைந்த நிலையைப்பார்த்து ஏற்படுவது தான் உடனடி ஆதாயம் தேடும் மனப்போக்கு. சுருக்கமாக சொல்வதானால், மந்தையோடு மந்தையாய் திரியும் மனப்போக்கு. பலர் இவ்வாறு செய்தனரா? அவர்களுக்கு நல்லது கிடைத்ததா? அப்படியென்றால் நாமும் அவர்கள் வழியைப் பின்பற்றுவோம். நமக்கும் நல்லதுதான் கிடைக்கும். தனித்துவம் அவசியமில்லை”. இது தான் உடனடி ஆதாயத்தைத் தேடி மந்தையோடு மந்தையாய் திரிய வழிவகுக்கும் எண்ணப்போக்கு. இந்த மனப்போக்கு முற்றினால் பிறர் செய்வதை வினவாமால் தாங்களும் செய்ய மக்கள் துணிந்துவிடுவர், மக்கள் அனைவரும் ஒரே பாதையில் பயணப்படத் தயாராகிவிடுவர். தொலைக்காட்சி விளம்பரங்களின் தாரக மந்திரமே இதுதானே. இந்தப் போக்கு ஆராய்ச்சி மனப்பான்மைக்கு எப்படி ஆப்படிக்கிறது?
மக்கள் அனைவரும் ஒரே பாதையில் பயணப்பட்டால் எப்படி ஆராய்ச்சிகள் வளரும். அந்த ஒரே பாதையும் குறுகிய காலத்தில் பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அடைவதை நோக்கி சென்றால் எப்படி ஆராய்ச்சிகள் வளரும்? இக்குறுகியமனப்பான்மை என்பது ஆராய்ச்சிக்கு முழுமுதற் எதிரியல்லவா. ஆராய்ச்சியை வளர்க்க முதலில் விஞ்ஞானிகள் அவசியம். விஞ்ஞானியாக இருக்க விரிந்த மனம் அவசியம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தேடி எந்தவொரு விஞ்ஞானியின் மனமும் செல்லாது. அவனது மன வேட்கையின் ஈர்ப்புவிசையால் பேரும் புகழும் அவனை வந்தடையும். உத்தரவாதம் என்பதும் விஞ்ஞானியின் வாழ்க்கையில் இல்லவே இல்லை. இப்பொழுது சொல்லுங்கள் இன்றைய இந்தியர்களிடத்தில் விஞ்ஞானிக்கான மனப்போக்கு உள்ளதா?
இதில் ஒரு வினோதம் என்னவென்றால். விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. ஆனால் அது பாட புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானிகளைப் போல்.
ஐன்ஸ்டைன் பிறந்தார். சார்புநிலை கோட்பாட்டை நிறுவினார். ஈ=எம்.ஸி²  (E=MC² ) என்ற சூத்திரத்தை கண்டுபிடித்தார். அணு விஞ்ஞானியானார். பணமழையில் நனைந்தார். உலகம் போற்ற மரித்துப்போனார். இது தான் பாடப் புத்தகத்தில் உத்தரவாத மனப்போக்கில் கூறப்படும் ஐன்ஸ்டைன். உத்தரவாதமின்றி மனக்குழப்பத்தில் உழன்ற ஐஸ்டைனின் உண்மையான வாழ்க்கை மிக மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். சரி என்ன செய்யலாம்?
விஞ்ஞானியாக முதலில் விஞ்ஞானத்தை மக்களுக்கு கற்கும் ஆர்வம் வரவேண்டும். விஞ்ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்களே என்று வாசிப்பின் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். உத்தரவாதமும், மந்தையோடு மந்தையாய் திரிவதும் நம்மை ஆராய்ச்சிக்கு தயார் படுத்தாது என்ற தெளிவும் பிறக்கவேண்டும். வாசிப்பும் ஆராய்ச்சி மனப்பான்மையும் நம் மனதை விசாலமாக்க வேண்டும்.
என்ன, அந்த வெளிநாட்டவர் கேட்ட கேள்வி சரிதானே.
எதற்காக இதையெல்லாம் நான் சொல்கிறேன்?
நான் விண்வெளியின் நிகழ்வுகளை பதிவு செய்யும் ஒரு வலைபூவை http://abcosmiccafe.blogspot.in/ துவக்கவுள்ளேன். ஏனென்றால், நாம் வாழ்வது நிலத்தில். பூமியின் மூன்றில் ஒரு பங்கு நிலம் என நாம் அறிவோம். அந்த நிலத்திலும் பாதி விண்வெளி. கீழே நிலம் என்றால், மேலே வானம். வானத்திற்கும் அப்பால் என்ன விண்வெளி. வானம் கண்ணாடி போல் விளங்கி நமக்கு விண்வெளியை காட்டுகிறது. விண்வெளியுடனான உறவு, நம் மூதாதயர் காலத்தில் இருந்து உள்ளது. விண்வெளியிலுள்ளவற்றை புரிந்து கொள்வது நம்மை புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச்செல்லும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அந்த வலைபூவில் என்னவெல்லாம் இருக்கும்?
அந்த வலைபூவின் மூல மொழி ஆங்கிலம். அதன் ஆங்கிலப் பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபாடு மிக்கவர்களுக்கு என் பகுதியின் விண்வெளிக் குறிப்புகளை வழங்கும். தமிழ்ப் பதிவுகள் தமிழில் விண்வெளி நோட்டத்திற்கு அவசியமானவற்றை விரிவாக விளக்கும். ஏன் இந்தப் பாகுபாடு என்றால் விண்வெளிநோட்டத்தில் வெளிநாட்டினருக்கு அடிப்படை அறிவு உள்ளது. ஆகையால் அவர்களுக்கு நம் பகுதி வானத்தின் செயல்பாடுமட்டும் போதுமானது. ஆனால் நமக்கு அவ்வளவு அடிப்படையெல்லாம் தெரியாது. ஆகையால் நம்மவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆரம்பிப்பதே சிறந்தது.
நம் நாட்டில் சோற்றுக்கே வழியற்று பலர் இருக்கையில் விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் நமக்கு அவசியமா?
இது என்ன கேள்வி. நம் நாட்டில் பலர் சோற்றுக்கு வழியற்று இருப்பது நீங்கள் சினிமா பார்க்கையிலும் உணவுகளை விணாக்கும் பொழுதும் நினைவில் இல்லையா? மூன்று மனிநேரம் சினிமா பார்த்து நேரத்தை கொல்வதைக் காட்டிலும் விண்வெளி நோட்டம் எந்த வகையிலும் நம் நேரத்தை பாதிக்காது.
விண்வெளிநோட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவாகும்?
ஒரு நயா பைசா கூட இல்லை. உங்களிடம் இரு கண்கள் உள்ளதே அது போதும். முதலில் நாம் விண்வெளியை நோட்டமிட்டு நட்சத்திரங்களின் இருப்பை வரையருப்பதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை. நம் கண்களும் மூளையும் மட்டும் போதும். விண்வெளிநோட்டத்தில் நாம் உயர உயர சில உபகரணங்கள் தேவைப்படும். அவை என்னவென்று பிறகு பார்ப்போம்.
இப்போதைக்கு இது போதும் மற்றவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம். 

புதிய ப்ளாக்கின் முகவரி: 
           
       – ஏ.பி.தீன் 

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: