ஒளி 222 கிராம்: பகுதி 8

’இக்ரா’

 

‘மா அனா ப்கிரா’

 

’இக்ரா’

 

‘மா அனா ப்கிரா’

 

‘இக்ரக் பிஸ்மி ரப்பிக்கல்லதீ கலக்’

 

அந்தக் மலைக் குகையின் விளிம்பில் வியர்த்து விறுவிறுத்து எழுந்து நின்றான் அவன். ஒரு நிமிடம் குலையே நடுங்கிவிட்டது. வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு ராட்ஷத உருவம் எதிரே நின்று கொண்டிருந்தது. ஒளியால் முழுவதும் நிரம்பிய அந்த உருவம். சில நாட்களாக கனவில் தோன்றிக் கலவரப்படுத்திய அந்த உருவம் இன்று நேரில். அதுவும் சில அடி தொலைவில். அவனைப் பார்த்து கூறியது.

 

’வாசி’

 

’எனக்கு வாசிக்கத் தெரியாது’

 

’வாசி’

 

‘நான் வாசிக்கத் தெரியாதவன்’

 

‘வாசி’

 

வாசிக்கத் தெரியா ஒருவனிடம் வாசி என்றால் என்ன கூறுவான். விழித்துக் கொண்டு நின்றான். பேரொளி அருகே நெருங்கியது. அவன் விலகிச் சென்றான். விடவில்லை. நெருங்கிய ஒளி அருகே வந்து இறுகக் கட்டி அணைத்தது. மூச்சுத் திணற இறுகக் கட்டி மீண்டும் கூறியது.

 

’வாசி.

உன்னைப் படைத்த அந்த இறைவனின் பெயரால் வாசி.

அவன் உன்னை அட்டைபோல் ஒட்டும் சிறு பொருளிலிருந்து படைத்தான்.

உன் இறைவன் உனக்களித்திருக்கும் கொடையை எண்ணிப்பார்.

அவன் கற்றுக்கொடுத்தான்

மனிதன் அறியாதை எல்லாம் அறிய வைத்தான்.

இருந்தும் மனிதன் வரம்பு மீறுபவனாகவே இருக்கிறான்,

ஏனென்றால் அவன் தன்னைப் போதுமானவனாக கருதுவதால்.

தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் இறைவனிடமே மீண்டும் நீங்கள் மீளப்போகிறீர்கள்.’

 

ஒளியின் சொல்லும் செயலும் உருவமும் அவனைப் பதைபதைக்க வைத்தன. ஊருக்கு வெளியே மலை மீதிருந்த குகையிலிருந்து வீட்டிற்கு ஓடிவந்தான், பித்துப் பிடித்தவனைப் போல், கைகால் நடுங்கி காய்ச்சல் எகிற.

 

‘ ஜாமலூனி. ஜாமலூனி. முதலில் என்னைப் போர்வையால் போர்த்து’

 

தன் மனைவியிடம் நடந்தது அத்தனையையும் ஒப்பித்தான்.

 

‘எனக்கு ஏதோ நடந்துவிட்டது. பித்து பிடித்துவிட்டாற் போல் உள்ளது. என் கனவில் வந்த அந்த மாபெரும் ஒளி என்னுடன் உரையாடுகிறது. அது தரும் பார்வை நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது. ஏதோ ஒன்றில் நான் சிக்கிவிட்டேன்’ எனப் பயந்தவாறு கூறினான்.

 

’நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கனவிலும் கெடுதி இழைக்கவில்லை. உங்களுக்கு அப்படி எதுவும் நடக்காது. புலம்பாதீர்கள். நிச்சயம் இறைவன் உங்களைக் கைவிடமாட்டான்’ அவள் ஆறுதல் கூறினாள்.

 

தன் மனைவியை எந்தளவிற்கு அவன் நேசித்தான் என்று கூற வரையறை இல்லை. அது வயது கடந்த காதல். அவள், அவனை விட சுமார் பதினைந்து வயது மூத்தவள். தெளிவாகப் புரிந்து கொள்ளவும், அவள், அவனைவிட சுமார் பதினைந்து வயது மூத்தவள்.

 

அவள் அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். முதல் முறை திருமணமாகி கணவன் இறக்க, மறுமுறை திருமணம் செய்தாள். அதே கதை, கணவன் இறந்தான். விதவையாக இருந்தே வியாபாரம் செய்து அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தர் நிலைக்கு உயர்ந்திருந்தாள். பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக பொருட்களை வாங்கி பல்வேறு ஊர்களுக்கு, நாடுகளுக்குச் சென்று விற்றுவரும் வணிகத்தைச் செய்தாள். அவள் நேரடியாக எந்த ஊருக்கும் செல்வதில்லை. அதற்கென அங்கங்கே தனக்குக் கீழ் வாணிபக் குழுக்களை அமர்த்தி வேலை வாங்கி வந்தாள். இந்த நிலையில் தான் அவன் அவளுக்கு அறிமுகமாகிறான். தன் அண்ணன் மகனான அவனை, தலைவர் அவளது வணிகத்திற்குச் சிபாரிசு செய்கிறார். அவளும் அவனுக்கு தன் வணிகக் குழுவுக்கான தலைமைப் பதவியை அளிக்கிறாள். அவன் பல நாடுகளுக்கும் சென்று வெற்றிகரமாக வணிகத்தை நடத்தி வருகிறான். அவனது நேர்மையும் நாணயமும் தான் அந்தக் குழுவின் துதியாக இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என அவன் மீது மையல் கொள்கிறாள். தன்னை திருமணம் செய்ய முடியுமா என அவனுக்கு தூதனுப்புகிறாள்.

 

அவனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 

அவன் பிறக்கும் சில மாதங்களுக்கு முன், அவன் தந்தை இறந்து போகிறார். அவனது ஊரில் ஒரு வழக்கம். குழந்தைகளை ஐந்தாறு வயது வரை கிராமங்களில் சென்று வளரவிடுவது. அப்போதுதான் நோய்நொடியற்று திடகார்த்தமாக குழந்தை வளரும் என்பது அவர்கள் நம்பிக்கை. அவனையும் அதே போல் ஒரு கிராமத்தில் சென்று விட்டுவிடுகிறார்கள். வளர்ந்து ஊருக்குத் திரும்பி சில ஆண்டுகளில் தாயும் இறந்துபோக தாத்தாவிடம் வளர்கிறான். தாத்தாவும் சிறிது மாதங்களில் இறக்க கைவிடப்பட்ட அனாதையாய் அவன் சித்தாப்பாவிடம் வளர்கிறான். சித்தப்பா தான் அந்த ஊரின் தலைவர்.

 

அனாதை வாழ்க்கை எப்படிப்பட்டது என்று வாழ்ந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும். ஒளியற்ற வாழ்வு நமக்கெல்லாம் அறிமுகமாக பதின்ம வயது வரை எடுக்கும். சிலருக்கு கூடும் குறையும். தாய் தந்தையரின் அரவணைப்பு நம்மை என்றும் ஒளியில் வைத்திருப்பதால் தான் அவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறது. பணத்தையும் புகழையும் ஒளியெனக் கருதும் நமக்கு முன்பே பணத்தையும், புகழையும் மட்டுமல்லாது அன்பையும் அரவணைப்பையும் ஒளியெனக் கண்டு ஏங்கும் கண்கள் அனாதைகளின் கண்கள். வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் ஒருக்கே கண்ட கண்கள் அவை. ஊண்டக் கையோ, தூக்கி நடக்கக் கால்களோ, வாங்கித் தர நெஞ்சமோ, முட்டுக் கொடுக்க தோளோ இல்லாத உடலுடம் அலையும் கோலம் படைத்த வாழ்க்கை.

 

அவன் வாழ்கையை ஆடு மேய்த்துத் துவங்கினான். பின் சிறிது நாள் வியாபாரம் கற்றான். ஊருக்குள் உண்மையானவன், நேர்மையானவன் எனப் பெயர் அவனுக்கு. இங்கு நிச்சயம் அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டாக வேண்டும்.

 

அந்த ஊரிலிருந்த கட்டிடம். மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடம். சதுரங்க வடிவக் கட்டிடம். மிகவும் மதிப்பிற்குரிய கட்டிடம். பல சிலைகளுக்கு அடைக்கலமாய் செயல்பட்ட கட்டிடம். ஊரார்கள் வணங்கச் செல்லும் கோவில் கட்டிடம். அந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அழகிய தொன்மையான கல்லை அதில் மீண்டும் பதிக்க வேண்டும். புதிய பிரச்சனை வெடித்தது. யார் அதை எடுத்துக் கொடுப்பது? எங்கள் குலமா? இல்லை உங்கள் குலமா?

 

ஊரிலிருந்த அனைத்துக் குலங்களும் மோதிக்கொண்டிருந்தன. யார் குலம் பெரியது என தங்கள் திராணியை நிருபிக்கும் கௌரவத்திற்குரிய செயல் அது. வாய்ச் சண்டை கைச் சண்டையாய் மூள தயாராய் இருந்தது. அந்த ஊர்க்காரர்கள் குலப்பெருமை காக்க போர் வரை கூடச் செல்லத் துணிந்தவர்கள். இறுதியில் அவன் அந்தப் பக்கம் வந்தான். அனாதை என்பதாலும் யாரையும் சாரா நேர்மையாளன் என்பதாலும் அவனிடம் ஒரு கருத்துக் கேட்போம் என ஊரார்கள் முடிவெடுத்தனர்.

 

ஒரு துணியால் மோதலைத் தவிர்த்தான் அவன். பெரிய கனமான துணியை எடுத்து அதன் நடுவே அந்தக் கல்லை வைத்து, அனைத்துக் குலமும் ஒன்று சேர்ந்து துணியை ஆளுக்கொரு பகுதியில் பிடித்துத் தூக்கி எடுத்துக் கொடுக்க ஒரு வழியைச் சொன்னான் அவன். ஒரு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

 

இப்படி இருக்கையில் தான் சித்தப்பாவின் மூலம் அவளது வணிகக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். பல்வேறு ஊர்களையும் நாடுகளையும் கடந்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வீட்டிற்கு வந்திருக்கையில் தான் அந்தத் தூது வந்து சேர்கிறது. அவனை அவள் மணக்க விரும்புகிறாள் என்று. அவனுக்குச் சில நிமிடம் எதுவும் புரியவில்லை. அவளை விரும்பாமல் எல்லாம் இல்லை. முதலில் அவள் அவனைவிட வயதில் மூத்தவள். இரண்டாவது அவளுக்கு மணப்பணம் கொடுக்கும் அளவிற்கு அவன் செல்வந்தன் இல்லை. ஆம் அந்த ஊரில் இன்னொரு பழக்கம். திருமணம் செய்ய மணமகளுக்கு, மனமகன்தான் தட்சணை கொடுக்கவேண்டும்.

 

எப்படியோ அந்த திருமணம் முடிந்திருந்தது. ஹுவ்வ ஃகம்ச வ உஸ்ரூன் வ ஹிய்ய அர்பூன். அவனுக்கு 25. அவளுக்கு 40. அவனும் அவளும் வயதுகடந்த காதலர்களாய் கனிந்தனர். ஒருவரை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டிருந்தனர். அனாதையாய் வளர்ந்த அவனுக்கு எல்லையற்ற அன்பும் அரவணைப்பும் கிடைக்கத் துவங்கியிருந்தது. அவனுக்கு வயது நாற்பதைத் தொடத் துவங்கியிருந்தது. பணத்திற்கும் புகழுக்குமான ஒளியை நோக்கிய வேட்கை தணிந்து அவனுள் வேறு சில கவலைகள் தொற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தன.

 

நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன? ஏன் உலகம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது? கடவுள் என்று சொல்லிக் கல்லை வணங்குகிறார்கள், அதற்குப் பலி கொடுத்து உணவும் படைக்கிறார்கள். ஏழையோ அனாதையோ அருகில் சென்றால் விரட்டுகிறார்கள். ஏதேதோ லாபத்திற்காகப் போர் மூட்டுகிறார்கள். பிறர் குடியைக் கெடுக்கிறார்கள். கொலை செய்கிறார்கள். கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? இல்லை நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோமா? ஏன் உலகம் அநியாயத்திற்கு துணை போகிறது? ஏன்? ஏன்? ஏன்? மனது பதிலுக்காக துலாவும் கட்டத்தை அடைந்திருந்தான். கேள்விக்கு பதில் கிடைக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் தெரியாமல் விடக்கூடாது என்ற வைராக்கியம். மனதை ஒருநிலைப்படுத்தி அதன் நிலைபாட்டையும் குரலையும் கவனிக்கக் கற்றுக்கொண்டான்.

 

அந்த ஊரில் மற்றொரு வழக்கம் இருந்தது. ஊரைவிட்டுச் சில நாட்கள் ஒதுங்கி சுற்றியிருந்த மலைகளின் குகைகளில் சென்று தனியே தியானிப்பது. அவன் அடிக்கடி குகைகளுக்குச் செல்வது வழக்கம். தனிமை தரும் பக்குவத்தை அவன் அனுபவிக்கத் துவங்கியிருந்தான். ஏதாவது கஞ்சியுடன் மலைக்கு ஏறிச்சென்று பல வாரக்கணக்கில் தியானித்துக் கிடப்பான். கணவனுக்கு அவ்வவப்போது மலை மீதேறி உணவு கொடுத்துப் பார்த்துவிட்டு வருவது அவளுக்கு வழக்கம்.

 

சில நாட்களாகவே அவனுக்கு மனதில் பெரும் குழப்பம், வருத்தம். உலகத்தை எண்ணி எண்ணி வருத்தப்பட்டான். இப்படி ஒரு உலகம் எதற்காக என கோபப்பட்டான். இந்த நிலையில் தீடீர் திடீரென கண் முன் ஏதோ வருவது போல் இருக்கும். டக்கென மறைந்துவிடும். பெரிய ஒளி தோன்றும் அப்படியே மறைந்துவிடும். பின் அது கனவிலும் தோன்றத் துவங்கியது. அந்தப் பேரொளி அவனைத் துரத்தியது. அவன் மிரண்டுபோய் ஓடினான். இப்படியான தொடர் மன அழுத்தத்தினால் அவனது உடல் மெலிந்தது. நிறம் குறைந்தது. அப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் குகைக்குச் சென்று தியானிக்க அவன் முடிவெடுத்தான்.

 

குகையில் தியானத்தில் அமர்ந்திருக்க வெளியே ஏதோ நெருப்பு பிடிப்பதை போல் தெரிந்தது. எழுந்து அருகில் சென்ற போது தான் அந்தப் பேரொளி நின்றுகொண்டிருந்தது. வாசிக்கச் சொல்லியது. வாசித்தான். மிரண்டான். உடல் அனல் கக்கியது. மனவழுத்தம் மிகுந்தது. அரண்டு விழுந்து வீட்டிற்கு வந்து போர்வைக்குள் புகுந்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் குழம்பினான். தனக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதாக எண்ணி வருந்தினான். எண்ணங்கள் அதற்கு மேல் அவனை எண்ண அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு நிலையில் சிக்கியவனைப் போல் ஒடுங்கிப்படுத்தான்.

 

தன் கணவனை அழைத்துக் கொண்டு அவள் தன் வயதான உறவினர் ஒருவரிடம் சென்றாள். அவர் கண் தெரியாதவர். மெத்தப் படித்தவர். தீர்க்கதரிசி.

 

அவரிடம் நடந்த அனைத்தையும் அவன் கூறினான். நிதானமாக அனைத்தையும் கேட்ட அவர் கூறினார். ‘அந்த ஒளியைக் கண்டு நீ அஞ்சத் தேவையில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இனிமேல் தான் உன் மேல் அந்த சுமை இறக்கப்படவிருக்கிறது. உன் ஊரார் உன்னைக் கூடிய விரைவில் எதிர்ப்பார்கள். விரட்டுவார்கள்.’

 

‘என்னை விரட்டுவார்களா? ஏன்? ஏதும் தவறிழைக்கப் போகிறேனா?’

 

’தவறுக்கு மட்டுமல்ல சிலசமயம் உண்மைக்கும் தண்டனை கொடுப்பார்கள். அவர்களால் தாங்க முடியாத உண்மையை நீ கொண்டுவரப் போகிறாய். எனக்கு இளமை இருந்திருந்தால் நானும் உன்னுடன் சுமை பகிர்ந்திருப்பேன். என்ன செய்ய. இனி இளமை  என்னிடம் திரும்பப் போவதில்லை. நான் அதுவரை உயிருடன் இருப்பின் என் தோள் உனக்கு’ என்று கூறினார். இந்த நிகழ்விற்குச் சில நாட்களுக்குப் பின் அவர் இறந்தார்.

 

அவன் ஒரு முடிவிற்கு வந்தான். ஊர் மக்கள் தன்னை துரத்துவதற்கு முன் தானே தன் உயிரை போக்கிக் கொள்ள முடிவு கட்டினான். மலைக்கு மேல் இருந்து குதித்து உயிர் விடும் முடிவோடு அரை மலை கடந்தான். மீண்டும் ஒரு குரலொளித்தது.

 

‘நில். இறைவன் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறான். அவனது வாக்கை மக்களுக்கு எடுத்து வைக்க உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறான்.’

 

குரல் வந்த திசையில் தலையைத் தூக்கினான். பேரொளி, மனித வடிவில் வானத்தில் மிதந்துகொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்க அச்சப்பட்டு தலையை வேறு திசையில் திருப்பினான். அங்கும் அதே உருவம் காட்சியளித்தது. வேறு பக்கம் திரும்பினான். அங்கும் அதே நிலை. எல்லாத் திசையிலும் அந்த உருவம் காட்சியளித்தது. வழக்கம் போல் வீட்டிற்கு விடுவிடுத்துத் திரும்பிப் போர்த்திக்கொண்டான்.

 

தன்னை ஊரார்கள் துரத்துவதற்கு முன் தானே மரித்துக் கொள்ள எண்ணி தற்கொலை முடிவுடன் பல முறை அந்த மலைக்குச் சென்றான். எல்லா முறையும் அந்த உருவம் தோன்றி தடுத்தது. ஏதும் புரியாமல் நடுக்கம் அதிகமாகி தன் போர்வைக்குள் அடைபட்டான் அவன்.

 

அந்தப் பேரொளி தோன்றும் போதெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு அச்சம் தலைக்கேறினாலும் அதன் வருகை ஒரு இனம் புரியா இனிமையைக் கொடுத்தது. வலித்தாலூம் அந்த வலியை மனம் வேண்டியது. வரும் போது வலியைக் கொடுத்தாலும், வராத போது அந்த வலியே ஒரு வித சுகத்தைத் தந்தது. ஒளிக்கும் அவனுக்குமான உறவு காதலைப் போல் ஆகியது. அது வராதா எனும் அளவிற்கு ஏங்கிப்போனான். அதுவும் ஏங்க வைத்தது. பல நாள் வராமல் அவன் மனதுக்குப் போக்கு காட்டியது.

 

ஒரு செயல் செய்யும் போது வலி எடுத்தாலும், செய்யாத போது அந்த வலிக்காக உங்கள் மனம் ஏங்குகிறதா? அப்படி என்றால் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கைக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் செயல் என.

 

இப்படி, பல மாதங்கள் கடந்தன. ஒளி தோன்றிய பொழுது தனக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டதாய் எண்ணிய அவன். உண்மையில் அது வராமல் எந்த வலியும் தராமல் இருந்ததை எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவன் மனது அப்படி செய்யவில்லை. மறுபடியும் மறுபடியும் அதனைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது. அந்த வலியை வலிய வரவழைக்கத் துணிந்து கொண்டிருந்தது. இதுவே பாதி உயிரைக் குடித்தது. போர்வையில் இருந்து வெளிவரவே அவன் விரும்பவில்லை. அந்த நிலையில் தான் அந்தச் செய்தியை ஒளி கொண்டு வந்தது.

 

‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே

எழு. எச்சரி. இறைவன் உனக்கு யாருக்கும் அளிக்காத ஒளியை அளிக்கப்போகிறான்.

உன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள். அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கு.

கொடுப்பதைக் காட்டிலும் அதிகம் திரும்பி வரும் என்ற ஆசையில் எதையும் செய்யாதே. உன்னைப் படைத்தவனுக்காகவேணும் பொறுமையைக் கடைபிடி’

 

அதற்குப்பிறகு அந்த ஒளி அடிக்கடி இறைவனின் செய்தியை அவனுக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு, அவனுக்கு அது அச்சத்தையோ மிரட்சியையோ தரவில்லை. காட்சியாகவோ, ஒளி வடிவிலோ, மனித வடிவிலோ, இல்லை அதிர்வுகளாய் அவனுள் இறங்கியோ அல்லது அவன் கண்களுக்கு புலப்படாமல் அவன் மனதுக்குள் இறக்கியோ தான் கொண்டுவந்த செய்தியை அவனிடம் சேர்த்தது.

 

’போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

எழு. இரவில் சிறிது நேரம் பிராத்திப்பதற்காக எழுந்து நில்.

நேரத்தைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ கொள்.

மேலும் அந்நேரத்தில், உன் மீது இறங்கிய இவ்வசனங்களை ஓது.

மிக விரைவில் உன் மீது கடினமான வாக்கை நாம் இறக்கப்போவது உறுதி.

நிச்சயமாக இரவென்பது அகத்தையும் புறத்தையும் ஒருங்கிணைப்பதற்கும், வெளிப்படையான சொற்களுக்கும் ஏற்ற நேரம்.

உண்மையில் இனி பகலில் உனக்குப் பல வேலைகள் இருக்கப் போகின்றன.

இரவிலும் பகலிலும் உனைப் படைத்தவனை நினைவில் கொள். முழுமையான நினைவில்.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இறைவன். அவன் ஒருவன். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதனால் உன் விசயங்களின் பொருப்பாளனாய் அவனையே எடுத்துக் கொள்.

அவர்கள் காயப்படுத்தினால் பொறுத்துக்கொள். திரும்பி காயத்தை அல்லாமல் கண்ணியத்தை அவர்களுக்கு பதிலாய் கொடுத்து விலகு.

அவர்களை இறைவன் பொறுப்பில் விட்டுவிடு. அவர்களும் கொஞ்ச காலம் ஆடித்திரியட்டும்.

அவர்களுக்காவே நரகமும் பிணைகளும் காத்திருக்கின்றன.’

 

அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் நடு இரவுக்குமேல் ஒரு கூட்டம் தினசரி கூடியது. அதில் பெரும்பான்மை இளைஞர்கள்.  சமூகத்தின் அவல நிலை கண்டு கொதித்து மாற்றம் தேடிய இளைஞர்கள். அவன் மீது இறங்கிய செய்யுள்கள் அங்கு வைத்து வாசிக்கப்பட்டது. அவனுக்கு செய்தி பொதிந்த செய்யுள்களை அந்த ஒளி இறைவனிடமிருந்து கொணர்ந்தது. அவர்களுக்கு அவன் மீது இறங்கிய வசனம் புதுவித உத்வேகம் அளித்தது. மதி மயக்கியது. இன்னும் பரிசோதனையே செய்யாத நிலையிலேயே உண்மை என உணர்த்தியது. யானைப் பலமளித்தது. மனத் திடம் கொடுத்தது. கவலைகளுக்கு காது கொடுத்தது. நேர்மையான அறிவுரைகள் வழங்கியது. ஒளியை நோக்கிச் செல்ல வழி காட்டியது.

 

இவை அனைத்தும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்தும் கிசுகிசுக்கப்பட்டன. இங்கு ஏதோ ஒரு புரட்சி புகைந்து கொண்டிருந்தது தெரியாமல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் மக்கள்.

 

’யா அய்யுஹஸ் முஸ்ஸம்மில்’ என ஆரம்பித்த மேற்கூறிய வசனத்தை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மிகவும் அழகிய முறையில் அந்த வசனம் பாடல் போல் செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கிசுகிசுக்க ஏற்ற நடையில் இருந்தது.

 

இறைவசனம் சொல்லியதை அவர்கள் செயல் படுத்தினர். இரவில் கூடிப் பிராத்தித்தனர். இறைவனை தியானித்தார்கள். பொய்யும் புறமும் கள்ளும் களவும் தவிர்த்தார்கள். மனிதர் அனைவரும் சமம் என்றனர். அன்பையும் அமைதியையும் பரப்பினர். பொறுமையைக் கடைபிடித்தனர்.  இயலாதவர்களுக்கு உதவினர். மாதரை மதித்தனர். மூடப்பழக்கங்களை எதிர்த்தனர்.

 

மறைமுகமாக, வெளியில் தெரியாமல் பின்பற்றி வரப்பட்ட அந்த இரசியக் கூட்டத்தின் அதிர்வுகள் கூட்டத்தினரின் செயல்கள் மூலம் ஊருக்குள் உணரப்பட்டது. அனாதையாகிய அவன் என்ன செய்து விடுவான் என்று ஊரார்கள் முதலில் அலட்சியத்தில் விட்டனர். நாளாக நாளாக அதிர்வு அருகில் உணரப்பட்டது. தங்கள் வீட்டு இளையோர்களும் கேள்வி எழுப்பினர். தங்கள் மூதாதையர்கள் வழிவழியாக பின்பற்றி வந்த வழக்கங்களில் குறைகண்டனர். தளைக்கக் கூட வழியில்லாத வயதில் தத்துவம் பேசினர். பெண்களுக்காக உரிமை கோரினர். விபச்சாரத்தையும், மதுப்பழக்கத்தையும் விட்டொழிக்கச் சொல்லினர்.

 

‘இவர்கள் யார் நம்மைச் சொல்ல? நாம் இவர்களைப் பெற்றோமா? இல்லை அவர்கள் நம்மைப் பெற்றனரா? நிகழ்வு கை மீறிக்கொண்டிருக்கிறது. நம் பிள்ளைகளே நம்மை கேள்வி கேட்கிறார்கள். திடீரென ஞானிகளைப் போல் பேசுகிறார்கள். இதெற்கெல்லாம் அவன் தான் காரணம். ஏதோ இறைவனிடமிருந்து அவனுக்கு செய்தி வருகின்றதாம். அது தான் இப்படி எல்லாம் கூறுகிறதாம். ஆனால் எதையும் யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை. மறைமுகமான திட்டங்கள் செயல்களால் வெளிப்படுகின்றன. வெளிப்படையாக சொல்லட்டும் தொலைந்தார்கள். இப்படியே சென்றால் நம்மூர் தழைக்காது. முளையிலேயே இதனைக் கிள்ளி எறிய வேண்டும். வணிகச் செல்வம் மிக்க நம் ஊரின் பெருமை சீரழிந்துவிடும். ஒரு முடிவிற்கு வந்து தான் ஆக வேண்டும். ஆண்டாண்டு காலமாக இங்கே வாழும் குலங்கள் சிதறுவதற்கு முன் அவனை எச்சரிக்க வேண்டும். அவனை மேற்கொண்டு எதுவும் செய்ய விடாமல் முடக்க வேண்டும். வெளிப்படையாக எப்படியும் அவன் அறிவித்துத் தான் ஆவான். அப்படி மட்டும் செய்யட்டும் தொலைந்தான்.’

 

 

அன்று அனைத்து நெருங்கிய சொந்தங்களும் அவனது வீட்டில் கூடியிருந்தனர். அவன் அவர்களை விருந்துக்காக அழைத்திருந்தான். உண்மையில் நோக்கம் வேறு. அன்றைக்கு முந்தைய தினத்தில் தான் அவனுக்கு செய்தி வந்திருந்தது. ‘உன் நெருங்கிய சொந்தங்களில் இருந்து எச்சரிக்கையைத் துவங்கு’ என. அவன் இறைச் செய்தியை தன் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவிக்கவே இந்த விருந்து ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

 

விருந்து முடிந்தபின் செய்தியை எடுத்து வைத்தான். தன்னிடம் இறைவனிடமிருந்து ஒரு ஒளி வருவதாகவும், அந்த ஒளி இறைவனின் செய்தியைத் தாங்கி வருவதாகவும், அந்தச் செய்தி இந்த உலகத்தை நல்வழிபடுத்தும் விதத்தில் இருப்பதாகவும் கூறினான்.

 

சிலர் ஆமோதிக்க, பலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது நிச்சயம் அவனை இன்னலில் கொண்டு தான் விடப்போகிறதென உறுதிபடத் தெரிவித்தனர். ஆறுதல் தரும் வகையில் அவனது சித்தப்பா, அந்த ஊரின் தலைவர் மட்டும் ஒரு உறுதியளித்தார். அவன் உயிருக்கு எந்தத் தீங்கும் வராத வகையில் தான் காப்பதாக உறுதியளித்தார். அனைவரும் கைகழுவினர்.

 

அவனுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. தன் பாதுகாப்புக்கு உறுதியளித்ததைப் பற்றியல்ல. தான் சொல்லக் கூடிய இறைவனின் வாக்கை சிலராவது கேட்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அப்படி இறைவாக்கை கேட்பவர்கள் தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் துணிச்சலைச் பெற்றிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த இறைவாக்கை கேட்பாவர்களுக்கு இறைவன் ஒரு பெயரளித்தான். இறைவனின் சொல்லுக்கு அடிபணிந்தவர்கள் என.

 

அந்த குன்றின் உச்சியில் நின்று கொண்டிருந்தான். மக்களை அவர்கள் குலம் கூறி கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தான். இதுவும் அந்த ஊரின் வழக்கம். யாராவது ஏதாவது செய்தியை அறிவிக்க விரும்பினால் அந்த குன்றின் மீது ஏறி அதனை அறிவிப்பர். அப்படி அறிவிக்கும் போது குலத்திற்கு ஒருவரையாவது அழைப்பர். தங்களால் வர இயலாதவர்கள் கூட குலத்திற்கு ஒருவனை அனுப்பி வைப்பர். அன்றும் அது போல் யாரோ நின்றிருந்தனர். அனைவரும் குன்றிற்கு கீழ் கூடினர். யாரெனப் பார்த்ததில் அவன். அவன். அவன் நின்றிருந்தான். அனைவருக்கும் எதிர்பார்ப்பு ஏறியது.

 

‘நான், நம்மை இந்தக் குன்றுக்குப் பின் எதிரிகள் சூழ்துள்ளனர் எனக் கூறி உங்களை எச்சரித்தால் நம்புவீர்களா?’ குன்றின் உச்சியில் இருந்து கத்தினான். அவனது முதல் கேள்வியில் ஏதோ சூசகம் தென்பட்டது. என்ன சொல்வதென யோசித்து பின் மக்கள் மத்தியிலிருந்து குரல் ஒலித்தது.

 

‘நிச்சயம். நம்புவோம். நீங்கள் இதற்கு முன் எந்தப் பொய்யும் கூறியதில்லையே’

 

‘அப்படியானால் இதையும் நம்புங்கள். நான் எச்சரிக்கிறேன். உங்களை நெருப்பு சூழ்ந்துள்ளது. உங்களை, உங்களை, உங்களை, என்னை, என் மகளை, என் குடும்பத்தை, உங்கள் குடும்பத்தை, நம் ஊரை, நம் தேசத்தை, இந்த உலகத்தை, தவறான வழியில் செல்லும் அனைத்து மக்களை. அந்த நெருப்பு. நரகத்தின் கொடிய நெருப்பு சூழ்ந்துள்ளது. என்னிடம் இறைவன் அவன் பாரமான வாக்கை இறக்கி வைத்துள்ளான். நீங்கள் அவனுக்கு அடிபணியுங்கள். அவனை திடமாக நம்புங்கள்.’ உரையை முடித்தான்.

 

அந்த ஊர் எங்கும் இதே சலசலப்பு. அவன் பேசிய பேச்சில் ஊரார்கள் குழம்பி இருந்தார்கள். என்ன செய்வதென முடிவுகட்டக் காத்திருந்தார்கள். அதற்குள் அடுத்த இறைச் செய்தி வந்தது.

 

’உனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை வெளிப்படையாக அறிவி. உனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை எடுத்துக் கூறு. இறைவனுக்கு கல்லையும் மண்ணையும் இணைவைப்பவர்களை விட்டு விலகு’

 

அவன் அறிவித்தான். வெளிப்படையாக அறிவித்தான்.

 

’தன்னைப் பாதுகாக்க முடியாத இக்கற்களா உங்களைப் பாதுகாக்கப் போகிறது? பேச இயலா இந்த விக்ரகங்களா உங்களுக்காகப் பரிந்து பேசப் போகிறது? உங்களைப் படைத்த இறைவனை நேரடியாக நெருங்காமல் ஏன் நடுவில் கல்லையும் அதைக் கவனிக்க ஒரு ஆளையும் வைத்து இறைவனுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்கிறீர்கள்? இது மடமை அல்லவா? அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் இல்லையா? ஏன் இதை உணர மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் பிறந்த நோக்கத்தை மறந்து தவறிழைக்கிறீர்கள். சடங்குகளின் போலித்தனம் தெரியாமல் அதனை அலங்கரிக்கிறீர்கள். சிலைகளை தெய்வமாக்கி அவைகளின் பெயரைச் சொல்லி மனிதனை பிறப்பால் உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கிறீர்கள். குலத்திற்காக போர் வரை செல்கிறீர்கள். சுதந்திரமாகப் பிறந்த மனிதனை அடிமைப்படுத்துகிறீர்கள். உங்களுக்குப் புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாயாதபடி அலட்சியம் செய்கிறீர்களா? உங்கள் மனது உங்களைக் கேட்காதா? நாம் அனைவரும் மனிதர்கள் என. ஒரே நிலையில் இருப்பவர்கள் என. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கிறீர்கள். அவை வளர்ந்தால் செலவுகள் அதிகம் வரும் என அஞ்சுகிறீர்கள். யார் சொன்னது? உங்களுக்கே உணவளிக்கும் அந்த இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்க மாட்டானா? பிஞ்சுக் குழந்தைகளை புதைக்கும் போது உங்கள் மனதையும் சேர்த்து புதைத்துவிடுவீர்களா? அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீங்கள் மட்டும் புசிக்கிறீர்களே சரியா? ஏழைகள் எங்கு செல்வார்கள்? அவர்களுக்கு நீங்கள் உதவ முன்வர வேண்டாமா?’

 

அவனது பிரச்சாரம் தெருவுக்கு வந்தது. பலரும் ஈர்க்கப்பட்டனர். பலரும் எரிச்சலூட்டப்பட்டனர்.

 

‘என்ன நேற்று வந்தவன் நம்மை கேள்வி கேட்கிறானா? பல நூற்றாண்டுகளாக வணங்கிவரும் நம் தெய்வங்களை அவன் கற்கள் என்கிறானா? என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்? நாமும் அடிமைகளும் ஒன்றெனவா சொல்கிறான். அடிமைகள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எழுதிப் பிறக்கிறார்கள். யார் இவன் அதை மாற்ற? பெண்களுக்கு எல்லாம் குரல் கொடுக்க இவன் யார்? இப்படி ஒருவனை எழவிட்டால் பிறகு பலர் கிளம்பி விடுவார்கள். கடவுளுக்கு உருவமில்லையாம். அவன் நிலையானவனாம். அவன் யாரையும் பெறவுமில்லையாம், யாராலும் பெறப்படவும் இல்லையாம். நம் எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒருவனாம். என்னடா இது? இப்படி ஒரு கடவுள். என்ன இருந்தாலும் சரி. நம் மூதாதையரின் கடவுளை இவன் நிந்திக்கிறான். இவனை ஏதாவது செய்ய வேண்டும். பேசாமல் கொலை செய்து விடுவோமா? ம்ஹும் முடியாது அவனது சித்தப்பா தான் ஊர் தலைவர். அவர் வேறு இவனுக்கு பாதுகாப்பு தருவதாக வாக்களித்துவிட்டார். கொல்ல முடியாது. சரி ஏன் இப்படி சொல்கிறான். அவன் ஒன்றும் பைத்தியக்காரன் கிடையாது. இத்தனை நாளாய் உண்மை மட்டும் தான் பேசிவந்தான். தீடீரென்று நம்மிடம் வந்து எனக்கு இறைவன் செய்தி அளிக்கிறான் என்கிறான்.

 

இதிலிருந்து இரண்டு மட்டுமே சாத்தியம். ஒன்று அவனுக்கு உண்மையிலேயே இறைவன் செய்தி அனுப்பி வைக்க வேண்டும் இல்லை என்றால் வேறேதோ பலனுக்காக அவன் இப்படிச் செய்ய வேண்டும். பலன் என்றால்? மண், பெண், பொருள்? பொருள் அவனிடம் நிறையவே இருக்கிறது. செல்வச் செழிப்புள்ள சீமாட்டியல்லவா அவன் மனைவி. பெண்? தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆள் இல்லை அவன். சரி மண்ணாகத் தான் இருக்கும். இந்த மண்ணை ஆண்டு மன்னனாக அவன் விரும்ப வேண்டும். பாருங்கள் நம் வீட்டு இளைஞர்கள் அவன் கூறுவதை அப்படியே ஏற்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். பேசாமல் அவனுக்கு மண்ணை விட்டுக் கொடுத்தால் என்ன? நம்மூரை நம் நாட்டை அவன் ஆண்டு கொள்ளட்டுமே. மிகவும் உண்மையானவன் நேர்மையானவன். அவன் ஆள்வதில் நமக்கென்ன கவலை. பேசாமல் வாருங்கள் அவன் சித்தப்பாவிடம் சொல்லி பேச வைப்போம். நிச்சயம் இந்த அஸ்திரம் வேலை செய்யும்’ ஊர் பெரியவர்கள் கூடி ஒரு முடிவுடன் அவனிடம் சென்றனர். சித்தப்பா முன்னிலையில் கேட்டனர்.

 

‘நீங்கள் ஒரு கையில் சந்திரனையும் மறு கையில் சூரியனையும் கொடுப்பதாக எனக்கு வாக்களித்தாலும் அது என் இறைவனின் வாக்குக்கு ஈடாகாது. என் இறைவன் எனக்குப் போதுமானவன். வெற்றியோ தோல்வியோ அவன் வாக்கை நான் மரிக்கும் வரை நம்பியே ஆவேன். தாங்கள் செல்லலாம்’ முடித்தான் அவன்.

 

 

அந்த ஊரில் திருவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த சதுரங்கக் கோவிலுக்கு இன்னும் சில தினங்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வரவிருந்தனர். இது ஆண்டு தோறும் நடக்கும் விழா. இந்தத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். லட்சக்கணக்கான பேர் கூடும் திருவிழா. அந்த ஊரே களைகட்டி வியாபாரம் தழைக்கும் திருவிழா. அன்றைய பொழுது ஊர் பெரியவர்கள் வரப்போகும் திருவிழா நிமிர்த்தமாகப் பேச கோவிலுக்கு அருகே கூடி இருந்தனர். புதுத் தலைவலி ஒன்றுடன் கூடியிருந்தனர். ’அவன்’ என்னும் ஒரே தலைவலி.

 

‘பல்வேறு ஊர்களிலும் நாடுகளிலுமிருந்தும் பக்தர்கள் வரவிருக்கின்றனர். இந்த நிலையில் நம் ஊரில் புதுத் தலைவலி தலைதூக்கியுள்ளது. அவன். அவனே தான்.’

 

‘நிச்சயம் திருவிழாவிற்கு வந்தவர்களிடம் தன் செய்தியைத் தெரிவிப்பான். இவற்றை வணங்காதீர்கள். கற்கள். என்பான். இவை அந்த இறைவனை அடைவதற்கு இடையூறாய் இருக்கின்றன. இவற்றை விட்டொதுங்கி அந்த இறைவனை மட்டும் வணங்குங்கள் என்பான்.’

 

‘அவர்கள் அனைவரும் நம்பவில்லை என்றாலும், ஒரு சிலராவது நம்புவார்கள். ஏனென்றால் நம் வீடுகளிலேயே, நம் குழந்தைகள் குடும்பங்களிடையேயே அவனது சொல்லின் தாக்கம் அதிகமாக உள்ளது.’

 

‘ஆம். அவனை நம்பி பலர் தங்கள் மூதாதையரின் தெய்வங்களை விட்டு ஒதுங்கிவிடுவார்கள். பிறகு இங்கே யாரும் வரமாட்டார்கள். இத் திருவிழாவிற்கு வரும் ஆட்களும் கணிசமாக குறைந்து விடுவர். அவர்களை நம்பி இருக்கும் நம் வியாபாரமும் படுத்துவிடும். பிறகு நம்மூர் வறுமையை நோக்கிச் செல்ல வேண்டியது தான்’

 

‘ஆம். முற்றிலும் சரி. நாம் அனைவரும் சேர்ந்து அவன் அவர்களை அணுகுவதற்கு முன், அவனைப் பற்றி அவர்களிடம் சொல்லிவிடுவோம்.’

 

‘என்னவென்று? அவன் இறைவனின் செய்தியை அறிவிக்கும் தூதன் என்றா?’

 

‘இல்லை. வேறேதாவது சொல்வோம். கவிஞன் என்போம். அவன் செய்தியாய் கூறுபவை அத்தனையும் அழகிய செய்யுளாய் அல்லவா இருக்கிறது?’

 

‘கவிஞனா? அவனே முறையாகக் கல்லாதவன். அவனைப் போய் கவிஞன் என்றால் நம்பவா போகிறார்கள்?’

 

‘அப்படி என்றால் பைத்தியக்காரன், தீய பேய் பிடித்தவன் என்று சொல்லிவிடுவோம்’

 

’நீங்களும் உங்கள் யோசனைகளும். எந்தப் பைத்தியக்காரன் தெளிவாய் பேசினான்? தீய சக்தி என்று கடவுள் பற்றி பேசியது? கெட்டதைச் செய்யாதீர்கள் என ஏவியது?’

 

‘அப்படியென்றால் என்ன செய்யலாம்? சக்தி வாய்ந்த சூனியக்காரன் என்று சொல்லிவிடுவோம். நம் பிள்ளைகளையும் குடும்பத்தையும் மந்திரத்தால் நம்மிடமிருந்து பிரிக்க விரும்பும் சூனியக்காரன் அவன் என்று சொல்லிவிடுவோம். எப்படி?’

 

‘அதுவும் சரிதான். இது தான் பொருத்தமாக இருக்கும். அவன், மனைவியை கணவனிடமிருந்தும் கணவனை மனைவியிடமிருந்தும், பெற்றோரை பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகளை பெற்றோர்களிடமிருந்தும், மனிதனை அவன் குலத்திலிருந்தும், குலத்தை மனிதனிடமிருந்தும் பிரிக்கும் சூனியக்காரன். அவன்’

 

 

’அவர்களும் திட்டம் தீட்டட்டும். இறைவனும் திட்டம் தீட்டுவான். ஆனால், இறைவனே திட்டம் தீட்டுபவர்களில் எல்லாம் கைதேர்ந்தவன்.’

 

இறைச் செய்தி அவனுக்கு இறங்கிக் கொண்டே இருந்து தைரியமூட்டியது. அவன் யாருக்கும் கவலைப்படவில்லை. அவனுக்கு அளிக்கப்பட்ட செய்தியை பிறருக்கு எடுத்து வைத்துக் கொண்டே வந்தான். ஒன்று இரண்டானது. இரண்டு நான்கானது. நான்கு எட்டானது. அவன் செய்தி சென்று சேர்வதும் வளர்ந்து கொண்டே சென்றது. இறைவனுக்கு அடிபணிந்தவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டிருந்தது. அடிமைகளும், பெண்களும், வறியவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் ஈடுபாடு காட்டினர்.

 

ஊரார்களால் பொறுக்க முடியைல்லை. அவனுக்கு அவன் சித்தப்பா பாதுகாப்பிற்கு பொறுப்பு. மற்றும் சிலருக்கு அவர்கள் குலங்கள் பொறுப்பு. ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் யார் பொறுப்பு?

 

அவர்களிலிருந்து கொடுமை தொடங்கியது. அடிமைகளும், தாழ்ந்த குலத்தினரும், ஏழைகளும் இன்னலுக்கு உள்ளாயினர். உச்சி வெயிலில் சுடுபாறைகளைக் கொண்டும், இரு கால்களிலும் இரண்டு கயிற்றைக் கட்டி இரு வேறு திசையில் இழுத்துக் கிழித்தும், இன்னும் சொல்ல முடியாத அளவில் எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை மனமாற ஏற்று மரணத்தை தழுவினார்கள்.

 

அவன் அவர்கள் நிலையை எண்ணி சஞ்சலத்தில் இருந்தான். ஏழை எளியவர்களை, காக்க குலம் இல்லாதவர்களை அந்த ஊரைவிட்டுக் கிளம்பி கடல்கடந்து மற்றொரு தேசத்திற்கு செல்லும் படி இறைச்செய்திவந்தது.

 

அவர்கள் ஊரைவிட்டுக் கிளம்பினர். கடல் கடந்து அத்தேசத்திற்கு சென்றனர். அது கிறிஸ்தவ தேசம். அவர்கள் சென்றால் மட்டும் ஊரார்கள் விட்டுவிடுவார்களா என்ன? அது வியாபார ஊர். வியாபாரத்திற்கு பெயர் போன ஊரல்லவா? அத்தேசத்திற்கும் அந்த ஊருக்கும் வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. அத்தேசத்திற்கும் அவ்வூரிலிரிருந்து முக்கியமான ஆட்கள் அவலைகளை விரட்டிச் சென்றனர். தங்கள் ஊரில் உள்ளவர்களை கெடுத்துவிட்டு இங்கே உயிருக்கு பயந்து அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளதாய் ஊரார்கள் அத்தேசத்து மன்னனிடம் புகார் கூறினர். மன்னனும் அவலைகளை அழைத்தான். விசாரனை துவங்கியது.

 

அவர்கள் ஊரில் என்ன நடக்கிறது என வினாவினான் மன்னன். அவர்கள் தெளிவாகக் கூறினர். எங்களுக்கு இறைவன் தன் செய்தியை ஒரு தூதர் மூலம் அனுப்பி வைக்கிறான். அச்செய்தி எங்களை சில தீய பண்புகளை விட்டு வெறுத்து ஒதுங்கச் சொல்கிறது. இறைவனுக்கு கல்லையும் மண்ணையும் இணைவைக்கவேண்டாம் என்கிறது. ஏழைகளை துரத்த வேண்டாம் என்கிறது. இன்னும் அது சொல்வதை எல்லாம் கூறினார்கள்.

மன்னன் யோசித்துவிட்டு ஊரார்களை நோக்கி சொன்னான்.

 

‘அவர்கள் சரியாகத் தானே சொல்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கும் மடமையை ஒழிக்கத் தானே சொல்கிறார்கள்.இது உண்மைதானே ’என்றான்.

 

ஊரார்களுக்கு முகம் வாடிப்போனது. தங்கள் தெய்வங்களை இப்படி சொல்லிவிட்டாரே என்று. இப்படி ஒரு சமயம் வந்தால் சமாளிப்பதற்கெனவே ஒரு கேள்வி வைத்திருந்தனர். அதைக் கேட்டனர். அவர்கள் உங்கள் ஏசு கிறிஸ்துவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என விசாரியுங்கள்.

 

மன்னன் கேட்டான். ‘எங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன கூறிகிறது உங்கள் இறைச்செய்தி?’

 

ஆம். ஏசுவைப் பற்றியும் செய்தி வந்திருந்தது. அவர்களுக்கு சிறிது தயக்கம் என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு கூறினர். உண்மையை மறைக்க அவர்கள் யார்?

 

’தாலிக ஆ’ஈஸ இப்னு மர்யம கவ்ல அல்ஹக்கி அல்லதீ ஃபீஹி யவ்ம்தப் ரூன.’ எனத் தொடங்கினர்.

 

‘அவர் தான் ஏசு, மரியாளின் மகன். எவரைப் பற்றி இவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர். அவரைப் பற்றிய உண்மை இதோ.

இறைவன் குழந்தை எடுத்துக் கொள்ளும் தேவை அற்றவன். அவன் உயர்ந்தவன். ஒன்றை ஆக்க நினைத்தால் அவன் ‘ஆகுக’ என எண்ணினால் போதும் அது ஆகிவிடும்.

இறைவனுக்கு எந்த மகனும் நிச்சயம் தேவையில்லை. இறைவனுக்கு குழந்தையுண்டு என்பது ஆபாண்டமன்றி வேறில்லை.’ என்றும்

 

‘ஏசு மனிதர்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட மனிதரே அன்றி தேவகுமாரன் அல்ல. அவர் தூய பிறப்பைக் கொண்டவர். அவரது தாயும் தூயாள். அவர் இறைவனின் துணைகொண்டே அற்புதங்கள் நிகழ்த்தினார். பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற ஒன்றில் முக்கடவுள் கோட்பாடு என்பது அப்பட்டமான பொய். ஏசுவை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை அவர் இறக்கவும் இல்லை. அவரை இறைவன் ஏற்றுக்கொண்டான். உலகம் அழியும் நாள் நெருங்குகையில் அவர் மீண்டும் வருவார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பூர்த்தி செய்வார். அவர் மீது அமைதி நிலவட்டுமாக’ என எங்களுக்கு இறைவனிடமிருந்து வந்த செய்தி தெரிவிக்கிறது எனறனர்.

 

மன்னன் இருக்கையை விட்டு எழுந்தான். ஊரார்களுக்கு மகிழ்ச்சி. எப்படியும் இன்றுடன் இவர்கள் தொலைந்தார்கள் என்று முடிவு கட்டினர்.

 

‘இவர்கள் சொல்வது உண்மை. சத்தியம். நானறிவேன். என் மக்களைப் போல் என் தேசத்தில் தங்கவும் உலவாவும் இவர்களுக்கு முழு உரிமை உண்டு. நீங்கள் செல்லலாம்’ என ஊரார்களைப் பார்த்து கூறினான் மன்னன்.

 

ஊரார்கள் கருப்பேறிய முகத்துடன் ஊர் திரும்பினர். அவனுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கத் தயாராயினர்.

 

’அவனையும் அவன் குலத்தையும், அவனை ஆதரிப்பவர்களையும் ஊரைவிட்டு வெளியே தள்ளிவைப்போம். அவர்களுடன் யாரும் வாணிபத்திலோ, கொடுக்கல் வாங்கலிலோ ஈடுபடக் கூடாது.’ எனத் தொடங்கிய அறிவிப்பு கோவிலில் இருந்தது.

 

அவனைச் சார்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த திடலில் அவர்கள் கூடாரமிட்டனர். போதுமான நீரும் உணவும் மருந்துமின்றி மூன்று வருடங்கள் அங்கே கடந்திருந்தன. பலரும் இறந்திருந்தனர். அவனுக்கு இறைச்செய்தி வரத் துவங்கி பத்து வருடங்கள் பூர்த்தியாகி இருந்தன. சொல்ல இயலாத அளவீற்கு துன்பம் இருந்தது. மொத்தமாக அழித்துவிடுதைவிட கொடியது இது போல் ஒதுக்கிவைப்பதென்பது. மனிதன் சமூக விலங்கு. ஒருவரை ஒருவர் சார்ந்த சமூக விலங்கு. தனிமைப்படுத்தப்படும் போது அவன் அனுபவிக்கும் சித்தரவதை மனதை நொறுக்கக் கூடியது. தைரியத்தை வடித்தெடுக்கக் கூடியது. தாழ்மையை வார்க்கக்கூடியது.

 

அவன் மனதளவில் திடமாக இருந்தான். எதையும் இறைவன் தாங்கக்கூடிய சக்தியை தருவான் என நம்பினான். இறைச்செய்தி பொறுமையைக் கடைபிடிப்பதில் பெரிதளவில் ஆர்வம் காட்டச் சொன்னது. அவனுக்கு உறுதுணையாய் அவள் நின்றிருந்தாள். தங்கள் செல்வம் முற்றிலும் கறைந்தாலும் அவர்கள் அதற்காகச் சிறிதும் வருந்தவில்லை. எல்லாம் இறைவனின் திட்டம் எனத் திடமாக இருந்தனர். அவள் அந்த வயதிலும் அவனுக்கு உதவியாக இருந்தாள். அவனை முழுமையாக நம்பினாள். அவனிடமிருந்த வந்த செய்திகளின் உண்மையை அவள் சிறிதும் சந்தேகிக்கவில்லை.

 

அன்றிரவு ஐந்தாறு மூட்டை உணவுப் பொருட்களை திடல் நோக்கி ஊரில் இருந்த சில அனுதாபிகள் கடத்திக் கொண்டு போயினர். அச்சமயம் ஊரார் கண்களில் சிக்கிப் பிடிபட்டனர். அவர்களுக்கு தீர்பளிக்க கோவிலில் கூட்டம் கூட்டப்பட்டது. தீர்ப்பை அறிவிக்கும் அறிவிப்பைக் கொண்டே எப்பொழுதும் தீர்ப்பு வழங்கப்படும். அறிவிப்பை எடுக்க கோவிலுக்குள் சென்றனர். அறிவிப்புக் காகிதம் செதிலறிக்கப்பட்ட நிலையில் தொங்கியது.

 

முடிந்தது. அந்த ஊரின் வழக்கப்படி செதிலறிக்கப்பட்ட அறிவிப்பு என்பது ஒப்பந்த முறிவைக் குறிக்கும். ஏற்கனவே அந்த ஊரில் பல மக்கள் திடலில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வந்தனர். எப்படியும் ஏதாவது வகையில் அனைவரும் இந்த ஒதுக்கி வைக்கும் படலத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். அந்தத் திடலில் செல்வந்தர்களாய் இருந்தவர்களும் ஏழைகளுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று துன்பங்கள் அனுபவிப்பதைக் கண்டு கண்கலங்கினர். அவர்களுக்கு ஆதரவான அனுதாப அலை அடித்துக் கொண்டிருந்த சமயம். ஊரார்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களின் அலை. தற்போது செதிலரிக்கப்பட்ட அறிவிப்பு. போதும். ஒப்பந்தம் முறிந்தது. தள்ளிவைப்பு முடிந்தது. அனைவரும் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்.

 

தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனரே தவிர மூன்றுவருடம் அத்திடலில் கழித்த காயங்கள் ஆறவில்லை. அவர்கள் மனம் அத்துன்பங்களை மறந்தாலும், உடல் மறக்கவில்லை. வயதானவர்கள் பலரும் குழந்தைகளும் வற்றிய உடலில் உயிருடன் ஊசலாடினர்.

 

அது அவனுக்கு துயர ஆண்டாக மாறிப்போனது. மனத் திடம் குன்றியது. இனியும் தன்னால் வாழ முடியுமா என சந்தேகம் தொற்றிக்கொண்ட்டது.

 

முதலில் அவன் சித்தப்பா. இத்தனை நாளாய் அவனை ஊரார்களின் கோபத்திலிருந்து காத்துவந்த அவனது சித்தப்பா காலமானார். அவனது சித்தப்பா இறுதிவரை அவனை நம்பினாரே தவிர அவனது இறைச் செய்தியை நம்ப மறுத்தார். என்ன ஆனாலும் தன் மூதாதையரின் மதத்தை அவர் விடத் தயாராய் இல்லை. அவரது இறுதி மூச்சு வெளியேறும் வரை அவன் போராடிப் பார்த்தான். அவர் அவனை நம்பினாரே தவிர செய்தியை நம்பவில்லை. இறைவன் ஒன்று என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு அதில் மனவருத்தம்.

 

‘நீ நாடியவர்களுக்கு எல்லாம் உண்மையை சென்று சேர்த்துவிட முடியாது. அது இறைவனது நாட்டம்’ என ஒரு செய்தி இறங்கியது.இறைவனின் வல்லமையையும், தனது இயலாமையையும் எண்ணி வருந்தினான். இரண்டொரு மாதத்தில் இன்னொரு இடி விழுந்தது.

 

’யாரும் என்னை நம்பத் தயங்கிய பொழுது என்னை முழுமையாக நம்பினாள். .யாரும் இறைவனின் வழியை பின்பற்றத் துணியாத பொழுது துணிந்து நின்றாள். அவளாலும் அவளது குணத்தாலும் அவளது செல்வத்தாலும் எனக்கு உதவினாள். என்னைப் பாதுகாத்தாள். அவளிடமிருந்து மட்டுமே எனக்கு செல்வங்கள் உண்டாயின.’

 

அவளும் இறந்து போனாள்.

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: