ஒளி 222 கிராம்: பகுதி 5

ஸ்ரீ ராம கிருஷ்ண மடம்.

 

எப்பொழுதுமே விவேகானந்தரின் பிறந்தநாளை அவனது பள்ளி வெகு விமரிசையாக கொண்டாடும். இனிப்புகள். பானங்கள். நிகழ்ச்சிகள். நாடகங்கள். இன்னும் எத்தனையோ. அந்த வருடம் அவனது பள்ளிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. ராம கிருஷ்ண மடத்திலிருந்து. அவ்வருட விவேகானந்தர் ஜெயந்தி அன்று அவனது பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் குழு ஒன்று வந்து நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்பதே அழைப்பு. அழைப்பை தொடர்ந்து நாடகத்திற்கான வேலைகள் தொடங்கின. முதலில் கதை தயாராகியது. பின்னர் நாடகத்தில் நடிக்க ஆள் எடுக்கும் வேலை தொடங்கியது. எட்டாம் வகுப்பிலிருந்து ஐந்து பேர் தேவை. இரண்டு மாணவிகள் மூன்று மாணவர்கள். தேர்ந்தெடுக்கும் குழு அவனது வகுப்பிற்கு வந்தது.

 

இரண்டு மாணவர்கள். இரண்டு மாணவிகள் ஓ.கே. எடுத்தாகிவிட்டது. இன்னும் ஒரே ஒருவன் தேவை. அவன் கையை தூக்கினான். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு, வேறு சில வகுப்புகளுக்குச் சென்றும் யாரும் கிடைக்காததால் அவனையே எடுக்க வேண்டியதாயிற்று. ஒரு வழியாக ஆளெடுத்து, கதை சொல்லி, ஒத்திகை செய்து, வசனம் பேசி, நடிக்க வைத்து இருபது பேர் கொண்ட கூழுவாய் அன்று ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றனர்.

 

மடத்திற்குள் நுழைந்ததும் ஏதோ செடி கொடிகளைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு ஆளுக்கு ஒரு சிட்டிகை அளவில் வரிசையில் நிற்கவைத்து தந்தனர். எல்லோரும் அதனை உள்ளங்கையில் வாங்கி ஒரு உறுஞ்சு உறுஞ்சிவிட்டு தலைமுடியில் தடவிக் கொண்டனர். அவனுக்கு வியப்பு தாங்கவில்லை. இது என்னவாய் இருக்கும் என யோசித்தான். பின்னர் அருகில் இருந்தவனிடம் கேட்டான்.

 

‘டேய். இதென்னடா?’

 

‘தீர்த்தம். வாங்கி குடி. நல்லது நடக்கும்’

 

’ஓகோ அப்டியா. அதென்னடா செடியா கெடக்குது’

 

‘செடியில்லடா. மூலிக. நீ கோவிலுக்கெல்லாம் போனதில்லையா?’

 

‘போயிருக்கேன்’

 

‘அப்பறம் அங்க தருவாங்கல்ல அதான் இதுவும்’

 

‘யார் தருவா?’

 

‘குருக்கள். அர்ச்சனை பண்ணிட்டு’

 

‘அப்டியா. தெரியாதே. நான் கோவிலுக்கு போயிருக்கேன். ஆனா அந்த குருக்கள் சைடெல்லாம் ஒதுங்கினதில்ல. சுத்திப் பாத்தோமா வந்தோமானு இருப்பேன். ஆனா தீர்த்தம்னா என்னனு இப்ப புரியுது. நிறைய படத்தில பாத்திருக்கேன்.’

 

‘சரி சரி. நம்ம லைன் அவர நெருங்கிடிச்சி. பேசாத. பேசாம வாங்கிக்கோ’

 

‘ஓகே டா’. வரிசை நகர்ந்தது. அவனது முறை வந்தது. சிரித்த முகத்துடன் கையில் ஒரு செம்பு நிறைய தீர்த்தத்துடன் காவி உடையில் நின்றார். ஒரு ஸ்பூனில் தீர்த்தத்தை அள்ளி அவனுக்கு கொடுத்தார். அவன் வாங்க மறுத்தான்.

 

‘ஸ்வாமிஜி. இது எதுக்கு நல்லது?’

 

‘பகவானோட பிரசாதம். தீர்த்தம் நல்லது. அந்த பகவான மனசில நினச்சுண்டு குடிச்சா நீ கேட்டதெல்லாம் கிடைக்கும்’

 

‘எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதுங்க ஜி.’  அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு துறவி வெளியில் இருந்து வந்தார். அவர் வந்ததும் எல்லோரும் அவரை நோக்கி ஓடினர். அவரது காலில் பொத் பொத்தென விழுந்தனர். அவர் அனைவருக்கும் சிரித்த முகத்துடன் ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என்று நெடுநாள் வாழ ஆசீர்வதித்தார். பிறகு அவன் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தார். அவனை நோக்கி வந்தார்.

 

‘என்ன இங்க பிரச்சனை?’

 

‘இல்ல.இந்தப் பையன் நாஸ்திகனாமாம். அதான் இதென்ன அதென்னனு கேள்வி கேக்கறான்’ சீடர்கள் சொன்னர். அவர் அவனை நோக்கித் திரும்பினார்.

 

‘உனக்கு என்னடா கொழந்த சந்தேகம்?’

 

‘இந்த தீர்த்தம் எதுக்குனு ஜி’

 

‘இவா என்ன சொன்னா?’

 

‘பகவானோட பிரசாதம்னு சொன்னாங்க. அவன நினச்சிட்டு குடிச்சா நினச்செதெல்லாம் கிடைக்கும்னாங்க’

 

‘அதுக்கு நீ என்ன சொன்ன?’

 

‘எனக்கு கடவுள் நம்பிக்க இல்லனு சொன்னேன்.’

 

‘அப்டினா?’

 

’பகவானே இல்லன்றேன்’

 

‘அப்ப இந்த பிரசாதம் உனக்கு வேணாம்ன்றே’

 

‘ஆமாம். எனக்கு யூஸ் இல்ல பாருங்க’ இதைச் சொல்லி முடித்தது தான் தாமதம். அவனது பள்ளிக் குழு அவனை சூழ்ந்து கொண்டது. இவன் அப்படித்தான் அதிகப்பிரசங்கி என்று ஸ்வாமிஜியிடம் கூறி அவனை அதட்டியது.

 

‘இல்லேலே. இவன் அப்டியில்லே. நீங்க செத்த நகர்ந்திருங்கோ. நான் பேசனும்’ என அனைவரையும் அவரே சமாதானப் படுத்திவிட்டு அவரே அவனிடம் தொடர்ந்தார்.

 

‘இது. நிறைய மூலிகைகள் இட்டு ஊறவச்ச ஜலம். இது வயித்துக்கு நன்னது. வயிறு நன்னா இருந்தாதானே மனசு நன்னா இருக்கும்’

 

‘ஆமா ஜி. மனசு நல்லா இருந்தா தானே எல்லாம் நல்லா இருக்கும். உங்கள மாதி நிதானமா தியானமா பேச முடியும்’

 

‘அட. பாரு. இவன் ஞானத்தே. தியானமா? உமக்கு அது பத்திலாம் தெரியுமோ ஐயா?’

 

‘ஏதோ தெரியும் ஜி. அப்பா சொல்லிக் குடுப்பாரு. வாழ்கையில பயப்பிடாம இருக்கனும்னா எப்பவும் தியான நிலையில இருக்கனும்னு சொல்வாரு.’

 

‘பேஷ் பேஷ். உன்ன நன்னா வளத்திருக்கா. அப்பறம் ஏன் பகவான இல்லைன்றே?’

 

‘ஜி. நான் தியானத்த நம்புறேன். ஆனா கடவுள நம்பல. தியானம் எனக்கு நேரடியா பலன் கொடுக்குது. நான் கேட்டதக் கொடுக்குது. எனக்கு நிம்மதி தருது. இதெல்லாம் கடவுளே இல்லாம நடக்குது. அப்பறம் எதுக்கு அவரு வேற. தேவை இல்லாம.’

 

‘சரி. நீ தியானம்னா என்ன பண்ணுவ?’

 

‘எப்பவும் மனச கவனிச்சுக்கிட்டே இருப்பேன். அதான் என் தியானம். மூச்ச கவனிச்சு பழகினா மனச கவனிக்கிறது ஈஸி’

 

‘என்ன ஒரு பேச்சு. விவேகானந்தர் பத்தி ஏதும் தெரியுமோ நோக்கு?’

 

‘ம். ஏதோ தெரியும் ஜி. அவரோட சில புக்ஸெல்லாம் படிச்சிருக்கேன். கர்ம யோகா, பக்தி யோகானு ஒரு யோகா சீரீஸ் இருக்குமே அது ரொம்ப பிடிக்கும்.’

 

‘அதெல்லாம் புரிரதா?’

 

‘புரிரதுக்கு தான் போராடீட்டு இருக்கேன் ஜீ’

 

‘என்ன பதில். நீ எத்தனாவது படிக்கிறே?’

 

‘எட்டாவது’

 

‘எட்டாவதா. என்னால நம்ப முடியல. பாருங்கோளேன். இந்தக் காலத்துக் கொழந்தைகள் எவ்வளவு வேகமா வளர்ரதுன்னு’

 

‘ஜீ. அப்ப எனக்கு அந்த தீர்த்தம் வேணாமில்ல’

 

‘எங்க சுத்தினாலும் உன் எடத்துக்கு சரியா வந்திட்ரே பாரு. பலே ஆளுப்பா நீ. உனக்கு தியானம் பண்ணனும்னா மனசு நன்னா இருக்கனும். மனசு நன்னா இருக்கனும்னா உடம்பு நன்னா இருக்கனும். உடம்பு நன்னா இருக்கனும்னுதான் இந்த தீர்த்தம். போறுமா?’

 

‘போதாது. அப்டினா ஒரு ஸ்பூன் போதாது. அந்த சொம்பயே கொஞ்சம் தரச் சொல்லுங்க ஜீ. என்ன ஏமாத்த முடியாது’

 

‘ஹஹ ஹா. வாங்கிகோட குழந்த’

 

 

’எல்லாரும் இங்கயே நீல் டவுன் பண்ணி உக்காருங்க’. அந்த வகுப்பே முழந்தாளிட்டு அமர்ந்தது.

 

என்ன இது ஏதோ சேட்டை செய்து வாங்கிக் கட்டிக்கொண்ட தண்டனையைப் போல் இருக்கிறது. எதற்காக இந்த தண்டனை என யாருக்கும் தெரியவில்லை. ஏதோ பிரச்சனை. அனைவர் மனதும் பதைபதைத்தது. குற்றவாளி யார் எனத் தெரியாத நிலையில் தான் அனைவரும் இவ்வாறு அமர்த்தப்படுவர். என்ன காரணமாக இருக்கும்? என்ன குற்றமாக இருக்கும்? யார் செய்திருப்பார்? என கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தன. வகுப்பு முழுவதும் ஒரே சலசலப்பு. இதில் சில அழு குரல்கள் வேறு. தங்களைத் தவறாக எண்ணி தண்டனை கொடுத்து விட்டார்களே என அனைவருக்கும் ஆதங்கம். ஆனால் ஒன்று இது பற்றி யாரும் அந்த மேமிடம் விளக்கம் கேட்கத் துணியவில்லை.

 

இத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் ஒருவன் சிறிதும் சலனமின்றி அமர்ந்திருந்தான். அவன். அவனே தான். வகுப்பின் மூலையில் இருந்த ஒரு பெஞ்சின் துணையுடன் அப்படியே பின்னால் சாய்ந்து முழந்தாளிட்டான். யாரும் அவனைக் கவனிக்கவில்லை. அவனும் யாரையும் கவனித்ததாகத் தெரியவில்லை. சாய்ந்து கிடந்ததில் கொட்டாவி வந்தது. அப்படியே தூக்கமும் வந்து கவ்விக்கொண்டது. கண்ணை மூடி இதமாக தூங்கத் துவங்கினான்.

 

‘டோண்ட் பீ அஃப்ரைட் ஸ்டூடண்ட்ஸ். இட்ஸ் ஃபார் யூர் குட் ஷேக்’ என கூறிக்கொண்டு பாடனி மேம் உள்ளே நுழைந்தார். கூடவே நம் பிரின்ஸிபாலும். பாடனி மேம் இப்பொழுது தான் பள்ளியில் சேர்ந்திருந்தார். அந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பாடங்களுக்காக சிறப்பு ஆசிரியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். அதில் வந்து சேர்ந்திருந்தார். வந்து முதல் நாளே அவனுக்கு தெரிந்துவிட்டது ‘நான் இவருக்கு ஒத்துவரமாட்டேன்’ என.

 

பாடனி மேமின் முதல் வகுப்பு. ஹிபிஸ்கஸ் ரோசாசின்னென்ஸிஸ் என செம்பருத்திப் பூவை வைத்து ஏதோ பாடம் ஓடிக்கொண்டிருந்தது. வெளியே மழை பிய்த்து உதறிக்கொண்டிருந்தது. வகுப்பறைக்குள் மாணவர்களின் மூச்சுக் காற்று சற்று கதகதப்பை அளித்தது. அன்று பார்த்து அவனுக்கு உடல்நிலை வேறு சரியில்லை. அதற்கு முந்தைய தினம் முழுதும் தண்ணீரில் ஆட்டம் போட்டு நனைந்ததில் ஏதோ உறுப்பு இடர்பட்டு உறுமத் துவங்கியிருந்தது. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. வழக்கம் போல் பள்ளிக்கு வருவதற்கு முன் ஐஸ்க்ரீம் வாங்கித் தின்றுவிட்டு வந்து சேர்ந்திருந்தான். எப்போதும் ஏதும் செய்யாது. ஆனால் அன்றோ முதல் வகுப்பிலேயே தலைவலிக்க ஆரம்பித்தது. கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தது. எழுந்து மேமிடம் தெரிவித்து விடலாம் என எண்ணி எழுந்தான்.

 

‘மேம். உடம்பு சரியில்லை’

 

பாடத்தை பாதியிலேயே நிறுத்திய எரிச்சலில் மேம் ‘வாட் பா?’ என்றார்.

 

‘உடம்பு சரியில்லை. தல வலிக்கிது’

 

‘யூ ஆர் இன் டென்த் ஸ்டாண்டர்ட். ஹவ் டேர் யூ ப்ளடி ஃபூல் ஸ்பீக் டமில். இன் ஃப்ரண்ட் ஆஃப் மீ? ஏசப்பா?’ அவன் தன் முன்னாலேயே தமிழில் பேசுவதை அந்த மேமால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

 

இதுதான் இந்தியாவின் ஆங்கிலப் பள்ளிகளின் நிலைமை. ஆங்கிலம் தவிர வேறு மொழிகளைப் பள்ளிக்குள் பேசக்கூடாது. பேசினால் குற்றம் பிடிக்கப்படுவர். தண்டனை அளிக்கப்படுவர். ப்ளாக் ஸ்டார் அளிக்கப்படுவர். பெற்றோர் அழைக்கப்படுவர். இன்னும் சீரியஸான சமயங்களில் டீ.சியே கொடுக்கப்படுவர். எப்படிப்பட்ட சூழலிலும் பள்ளிக்குள் பிற மொழிகளுக்குத் தடா. அது உயிர் போகும் நிலை என்றாலும் சரி அல்லது அவனைப் போல் தலைவெடிக்கும் நிலை என்றாலும் சரி. ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. இருக்கவும் கூடாது. இருக்கவும் விடமாட்டர்.

 

‘மேம். தலவலிக்குது’ அவன் தொடந்தான்.

 

‘இடியட். திரும்பத் திரும்ப பேசறே. மொதல்ல க்ளாஸ விட்டு வெளிய போய் நில்லு. ஏசப்பா இப்படியும் நீ ஏன் மனுசங்கள படைக்கிற’  ஆங்கிலத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது அதில் ஏசப்பா மட்டும் தமிழ். அவனும் வெளியே போய் நின்றான். வகுப்புக்கு வெளியே இரண்டடி வரை தாழ்வாரம் இருந்தது. மழையில் நனையத் தேவையில்லை.

 

குளிர் அதிகமாக இருந்தது. மழைச் சாரல் அவனை சிறிது சிறிதாக நனைத்தது. அவன் நடுங்க ஆரம்பித்தான். வெளியே பெய்யும் மழையில் நனையாமல் பூச்சிகள் கதகதப்பைத் தேடி வகுப்பு நோக்கி வந்த வண்ணம் இருந்தன. அவனைச் சுற்றி ஈசல்களும், ரயில் பூச்சிகளும், கம்பளிப் பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. திடீர் என ஒரு வண்டு வந்தது. வண்டா குழவியா எனத் தெரியவில்லை. எதோவொன்று சட்டென்று அவனது காதுக்குள் புகுந்தது. காதில் இய்யத்தைக் காய்ச்சி ஊத்தினாற் போல் வலி எடுத்தது.

 

‘மேம் காதுக்குள்ள ஏதோ கொழவி போயிடுச்சு. வலிக்குது’ என கத்தினான். அந்த மேம் காதிலேயே வாங்கவில்லை. சிறிது நேரத்தில் காதில் இருந்து இரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்தான்.

 

அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். பாடனி மேம் முன்னே வந்து நின்றார். அவருக்கு அருகே பிரின்ஸிபல். தவறிழைத்தவர்கள் மண்டியிட தர்மத்தின் காவலர்கள் தீர்ப்புவழங்கும் ரேஞ்சில் இருந்தது.

 

‘யாரும் பயப்பிட வேண்டாம். என்கொயரி இல்ல. யாரையும் பனிஷ் பண்ணப் போறதில்ல. ஆனா நீங்க எல்லாம் நீல் டவுன் பண்ணனும்’

 

எல்லோர் முகத்திலும் புதிரின் ரேகை. என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.

 

’இன்னும் ரெண்டு வாரத்தில உங்களுக்கு டென்த் காமன் எக்ஸாம் கமன்ஸ் ஆகிது. அதான் நான் ஸ்பெஷலா ப்ரேயர் டவர்ல சொல்லி நீங்க எல்லாம் நல்ல மார்க் எடுக்கப் ப்ரே பண்ணச் சொன்னேன். அப்டி ப்ரே பண்ணி நீங்க நல்ல மார்க் எடுக்க இந்த ஆயில அனுப்பி வச்சிருக்காங்க. ஜீஸஸ் கால்ஸ் ஆயில். இதோட பவர பத்தி உங்களுக்கு தெரியாது. ஏசப்பா உங்களுக்கு நல்ல மார்க்க வாங்க உதவி செய்வாரு. ஓ.கே’

 

‘ஓ.கே மேம்’ ஒருமித்த குரலில் ஒலித்தது.

 

பாடனி மேம் மூச்சுக்கு முன்னூறு முறை ஏசப்பா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். பைபிளில் இருந்து ஏசுவின் வாழ்கையை அடிக்கடி எடுத்து உதாரணத்திற்கும் திட்ட, மெச்ச, கதைக்கவும் பயன்படுத்துவார். ஆனால், இந்த நிலைக்கு என்றும் வந்ததில்லை. எண்ணெய் தடவும் வேலை எல்லாம் என்றும் செய்ததில்லை.

 

அதே போல், பிரின்ஸிபால் படித்து வளர்ந்ததெல்லாம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் கான்வண்ட்டில். அடிக்கடி வகுப்பில் வந்து தான் சிறுவயதில் சர்ச்சுக்கு சென்ற விவரங்களையும், தனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த சிஸ்டர்களைப் பற்றியும் வியந்து பேசிக் கொண்டிருப்பார். இப்போது இந்த பிரின்ஸிபால் தான் அவனது ஹிஸ்டரி அண்ட் சிவிக்ஸ் ஆசிரியரும். ஐந்தாம் வகுப்பில் அவன் எழுதிய இமய மலை விளக்கத்தையும் சென்ற வருடம் அவன் எழுதிய தன் சாமியார் கனவு பற்றியும் அந்த மேம் இம்மியளவு கூட மறக்கவில்லை என்பது அவ்வப்போது வகுப்பில் அவர் காட்டும் காட்டிலேயே தெரிந்துவிடும்.

 

’எல்லாரும் நீல் டவுன் பண்ணியே இருங்க. நான் வந்து ஒவ்வொருத்தருக்கும் எண்ணெய் வச்சு விடறேன்.’ என்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே கையில் இருந்த எண்ணெய் புட்டியை திறந்து விரலில் சிறிது நனைத்து முதலில் முழந்தாளிட்டிருந்தவனின் நெற்றியில் சிலுவை வரைந்தார்.

 

’எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஏன் நீங்கள் ஒரு கொலைக் கருவிவை அடையாளச் சின்னமாக பயன்படுத்துகிறீர்கள்? ஏசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஏசுவை கொலை செய்யப் பயன்படுத்திய கருவியை அதாவது சிலுவையை ஏன் குறியீடாக, சின்னமாக பயன்படுத்துகிறீர்கள்? அதாவது நான் கேட்க வருவது என்னவென்றால் ஒருவர் அறிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் இறந்த பிறகு அவரை அடையாளப்படுத்த அவரை வெட்டிய அறிவாளையா குறியீடாக பயன்படுத்துவது? எனக்கு புரியவில்லை சற்று விளக்கம் தாருங்கள்.’ என்று கேட்கும் எண்ணம் அவனை குடிகொண்டது. ஆனால் அவன் கேட்கவில்லை. சென்ற வருடம் ஸ்வாமிஜீயை பார்த்துவிட்டு வந்தததும் வராததுமாக அவனுக்கு ஒரு நிகழ்வு நடந்தது. அவனை அப்படியே மாற்றியமைத்தது. அந்த நிகழ்வை பிறகு காணலாம். அந்த நிகழ்வுக்குப் பின் அவன் அவ்வளவாக பேசுவதே கிடையாது. பேசினாலும் கொஞ்சம் தான். எல்லாம் அளந்து தான். பல வேளைகளில் மௌணம். அந்தளவிற்கு அந்நிகழ்வினால் மனதில் புண்பட்டிருந்தான்.

 

பாடனி மேம் ஒவ்வொருவராக நெருங்கிக் கொண்டிருக்க அவன் எழுந்தான். நின்றான். எல்லோரும் அவனையே பார்த்தனர்.

 

‘வாட் மேன் (என்ன)?’

 

‘நத்திங் மேம்’

 

‘தென் (அப்பறம்)?’

 

‘நத்திங், ஒன்னுமில்லை’

 

‘மீன்ஸ் (அப்டீனா)’

 

‘நத்திங்’

 

‘இடியட். வாட்ஸ் த ப்ராப்ளம்’

 

‘நத்திங்’

 

‘தென் ஒய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஸ்டில் (ஏன் நிக்கிற)?’

 

‘நத்திங்.

 

‘ஃபூல். யூ ஸீம் நத்திங் டூ அஸ். டோட்ண்ட் மேக் எ ஸீன் (எங்களப் பொருத்தவரை நீயே நத்திங் தான். ஏதாச்சும் லூசாட்டம் செய்யாத)’

 

‘ஸ்யூர். திஸ் ஆயில் டூ ஸீம் நத்திங் ஃபார் மீ மேம். (நிச்சயமா. எனக்கும் உங்க ஆயில் நத்திங் தான்.)’

 

‘யுவர்ஸ் இஸ் அவர் ஓல்ட் டெஸ்டமெண்ட். நத்திங் ராங். பிளிவ் இட் (உங்களோடது எங்க ஓல்ட் டெஸ்டமெண்ட் தான். நத்திங் ராங். நம்பு)’

 

‘ஐ பிளிவ் நத்திங். ஐம் அன் எதிஸ்ட்  (நான் நாத்திகன். நான் எதையும் நம்பத் தயாரா இல்ல)’

 

அமைதியையும் பொறுமையையும் போதித்த இயேசுவை அவனுக்குப் பிடிக்கும். ஆனால் அவர் சொல்லும் அந்த தந்தை மீது தான் அவனுக்கு நம்பிக்கை கிடையாது.

 

’யூ வில் பீ இன் டார்க்னஸ், அண்டில் யூ பிளிவ் (நீ நம்பாதா வரைக்கும் இருட்டில தான் இருக்கப் போற)’

 

’இஸ் இட். வாஸ் தெ  பிளிவிங் மெடிவியல் யூரோப் வாஸ் இன்? லைட்? (அப்டியா? அன்னிக்கி கடவுள நம்பிய மத்திய கால ஐரோப்பா ஒளியிலயா இருந்துச்சு?)’ எனக் கூறி தன் பார்வையை ஹிஸ்டரி டீச்சரின் பக்கம் திருப்பினான். பிரின்ஸிபாலுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.

 

அதற்கு மேல் அவனும் எதுவும் பேச தயாராய் இல்லை, அவர்களும் பேச விரும்பவில்லை.

 

 

பாரதியார் போல அவனுக்கு என்றும் கணக்கு பிணக்கு ஆமணக்கு தான். மொழிகளும் வரலாறும் அறிவியலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடங்கள். இவை ரீதியான படங்களை அதிகம் பார்ப்பான். தாய் மொழி தமிழ். பள்ளி மொழி ஆங்கிலம். இரண்டும் சரளமாக தெரியும். மூன்றாம் மொழிப் பாடமாக இருந்த இந்தியில் அவனுக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. தமிழகத்திற்கே இந்தி மிகவும் அன்னிய மொழியாகப்பட்டது. அறிவியல் உற்சாகத்தை அளித்தது. தனனைச் சுற்றி இருக்கும் உலகை உண்மை நிலையில் புரிந்து தனது நாத்திகத்தன்மையை நிறுவ உதவியது.

 

வரலாறு, வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்தது. வரலாற்றை அவன் பரந்துபட்ட தளத்தில் வாசிக்காமல் இருந்தான். புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தும் வரலாற்றுப் புத்தகங்களை அவன் ஏனோ வாசிப்பதில்லை. பள்ளிக்கூடத்தில் மினுமினுக்கும் வரை படங்களைக் கொண்டு அவனுக்கு வரலாற்றுப் பாடம் எடுக்கப்பட்டது. அதிலும் சும்மா சொல்லக்கூடாது, இந்த பிரின்ஸிபால் மேம் பாடமெடுக்கும் நடையே அலாதியானது. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் பற்றிய பாடங்கள் எல்லாம் இவன் வகுப்பறையில் நான்கு வாரங்கள் கூட நீளும். அனைவர் கையிலும் வரைபடம் கொடுத்து நாடுகளின் அமைவிடத்தையும் போர்கள நிகழ்வுகளையும் அப்படியே கண்முன்னே அந்த மேம் எழுப்பிவிடுவார். போருக்குள் நாமும் இருக்கும் உணர்வை கிளரிவிடுவார். அவ்வளவு திறமை. இவனை அந்த மேமுக்குப் பிடிக்காது என்றாலும் இவனுக்கு அந்த மேமை பிடிக்காமல் இல்லை. அவர் வரலாறு பற்றி சொல்லும் அனைத்தையும் அப்படியே மனதில் பதித்துவிடுவான். அவ்வளவு ஆர்வம்.

 

அன்று பாடம் நடந்து கொண்டிருந்தது. இஸ்ரேஸ் பாலஸ்தீன பிரச்சனை பற்றிய பாடம்.

 

‘இஸ்ரயெல் பேலஸ்டைன் பத்தி யாருக்காவது தெரியுமா?’

 

எவனோ ஒருவன் எழுந்து ‘அராஃபத்’ என்றான். மேம், குட் சொல்லி உட்காரச் செய்தார்.

 

‘எனிதிங்?’ பிறகு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மேம் தொடர்ந்தார்.

 

’இஸ்ரயெல் பத்தி பைபிள்ல வருது தெரியுமா?’

 

பதில் ஏதும் இல்லை.வகுப்பு முழுவதும் சூனியம் வைத்தாற் போல் கவனித்துக் கொண்டிருந்தது.

 

‘ஓ.கே. அதுக்கு முன்னாடி உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லலாம்னு இருக்கேன். சொல்லவா?’

 

உணர்ச்சி பொங்க அனைத்து தலைகளும் அசைந்தன.

 

‘ஒரு ஊர்ல ஒருத்தர் இருந்தாரு. அவர் பேரு ஆப்ரஹாம். நல்லா கேட்டுக்கங்க. ஆப்ரஹாம். ஆப்ரஹாம் லிங்கன் இல்ல. நம்ம கதையில வர ஆப்ரஹாம், ஆப்ரஹாம் லிங்கனவிட பல வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவரு. அவர் வேற இவர் வேற. புரிஞ்சுக்கங்க.

 

அந்த ஆப்ரஹாமோட ஒய்ஃப் பேரு சாரா. ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா கொழந்தை இல்ல. ஆப்ரஹாமுக்கு தொன்னூறு வயசாச்சு இன்னி வரைக்கும் கொழந்தை இல்லை. அப்பதான் அவரோட ஒய்ஃப் சாரா என்ன பன்றாங்க அவங்ககிட்ட அடிமையா இருந்த ஒரு பொண்ண தன்னோட ஹஸ்பண்டுக்கு ரெண்டாவது தாரமா கல்யாணம் பண்ணி கொடுக்கிறாங்க’

 

‘அடிமையா?’

 

‘ஆமாம். அந்தக் காலத்தில இப்ப நாம ஆடு மாடு வாங்கிற மாதிரி மனுஷங்களையும் காசு குடுத்து வாங்கிக்கலாம். அப்டி காசுகுடுத்து வாங்கின மனுசன் தான் அடிமை’

 

‘ஓகே மேம். எதுக்கு ரெண்டாவது ஒய்ஃப்?’

 

‘மொத ஒய்ஃப் சாராவுக்கு கொழந்த இல்லைல அதனால அவுங்களுக்கு தன்னால தான் கொழந்த பொறக்கலனு வருத்தம். அத சரி பண்ண தன்னோட ஹஸ்பண்டுக்கு அவுங்களே ரெண்டாவதா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க’

 

‘ஓகே மேம்’

 

’ஆப்ரஹாம் வேணாம்னு சொல்லிப் பாக்குறாரு. ஆனா சாரா கேக்க மாட்றாங்க. சரி வேற வழி இல்லைனு அந்த அடிமை பெண்ண அப்ரஹாம் கல்யாணம் பண்ணிக்கிறாரு. அந்த அடிமை பெண்ணோட பேரு ஹாகர். ஓகே.’

 

‘யெஸ் மேம்’

 

‘கொஞ்ச நாள்ல என்ன ஆகிது. ஆப்ரஹாமுக்கும் அந்த அடிமை பெண் ஹாகருக்கும் ஒரு ஆண் கொழந்த பெறக்குது. அது பேரு இஸ்மாயீல். சரியா?’

 

‘சரி மேம்’

 

‘அப்டி கொஞ்ச வருசத்தில இஸ்மாயீல் வளந்து பெரியவனா ஆறான். அப்பப் பாத்து சாராவுக்கும் கொழந்த பெறக்குது. சாரா யாரு’

 

‘ஆப்ரஹாமோட ஃபர்ஸ்ட் ஒய்ஃப்’

 

‘குட். சாராவோட பையனுக்குப் பேர் ஐஸாக். ஐஸாக் நியூட்டன் இல்ல. இவரு வேற. அவரு வேற. சரியா. அந்த பையன் பேர் என்ன?’

 

‘ஐஸாக். ஆப்ரஹாமோட தம்பி’

 

‘வெரி குட். இப்டி இருக்கும் போது சாராவுக்கு பொறாமை வந்திருது. பின்னாடி இஸ்மாயீலால தன் பையன் ஐஸாகுக்கு ஏதும் பிரச்சனை வந்திருமோனு பயப்படறாங்க. அதனால இஸ்மாயீலையையும் அவனோட அம்மா ஹாகரையும் எங்காவது கண்காணாத திசைக்கு அனுப்பி வைக்கச் சொல்றாங்க.’

 

‘ஐயோ பாவம்’

 

‘சாரா தான கல்யாணம் பண்ணிவச்சா அதனால அவ சொல்ரத கேக்கனும்னு ஆப்ரஹாம் முடிவெடுக்கிறாரு. இது பத்தி ஹாகர் கிட்டயும் இஸ்மாயீல் கிட்டயும் பேசறாரு. அவங்களும் ஒத்துக்கிறாங்க. அவங்கள கொண்டு போயி ஒரு பாலைவனத்தில விட்டிட்டு வந்திடறாரு. புரிதா?’

 

அவனுக்கு சந்தேகம் எழுந்துவிட்டது. ‘மேம் ஐ ஹேவ் எ கொஸின்’

 

’யா’

 

’மேம் இதெல்லாம் கதை மாதிரில இருக்கு. புராணம் மாதி’

 

’நல்ல கொஸின். நம்ம நாட்ல புராணங்கள்லாம் உண்மையா நடந்த சம்பவங்கள் தான். ஆனா நிறையா பேர் அத பில்ட் அப் பண்ணி பில்ட் அப் பண்ணி கதையா ஆக்கிட்டாங்க. ஆனா மிடில் ஈஸ்டர்ன் கண்ட்ரீஸோட ஹிஸ்டரி அப்டி இல்ல. நம்பகத்தன்மை அதிகமா இருக்கும். ரெஃபரன்ஸ் அதிகமா இருக்கும். பதிவுகள் நிறைய இருக்கும். கற்பனைகள் கம்மியா இருக்கும். அதனால அத லெஜண்ட்டா கட்டுக்கதையா எடுக்காம ஹிஸ்டரியா கொஞ்சம் ரிஸர்ச் பண்ணி யூஸ் பண்ணிக்கலாம். எங்க ப்ரொஃபெஸர் அடிக்கடி சொல்வாரு. ஒலகத்திலேயே தொடர்ச்சியான வரலாற்று பதிவுள்ளா ஏரியா மத்திய கிழக்குனு.’

 

‘ஓகே மேம்’

 

‘ஓகே. ஆப்ரஹாம், சாரா, ஐஸாக் வாழ்ந்த ஏரியா தான் இஸ்ரயெல், பேலஸ்டீன் எல்லாம். ஹாகர், இஸ்மாயீல் வாழ்ந்த பாலைவன ஏரியா தான் அரேபியா. அதாவது ஐஸாக் வழில வந்தவங்க ஜ்யூஸ் அதாவது யூதர்கள். இஸ்மாயீல் வழி வந்தவங்க அராபியன்ஸ். டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?’

 

‘யெஸ் மேம்’

 

‘இப்ப பிரச்சனை அது தான். ஆப்ராஹாமுக்கு பின்னாடி யூதர்களும் அராபுகளும் பரம்பர பரம்பரைய ஆகி பல நாடா ஆகிட்டாங்க. சண்டை. இப்ப அதான் பிரச்சனை. புரீற மாதி சொல்லனும்னா அண்ணன் தம்பிச் சண்டை. பங்காளி சண்டை. அதாவது நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கிற சண்டை மாதி, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த மாதிரி’

 

‘ஓகோ’

 

‘ஆமாம். இதனால தான் பல முஸ்லிம்ஸ் டெரரிஸ்ட் ஆகிட்டாங்க’

 

‘முஸ்லிம்ஸ்?’

 

’யா. அராப்ஸ் ஆர் முஸ்லிம்ஸ். இந்த பிரச்சனை தான் இன்னிக்கு முஸ்லிம்ஸ டெரரிஸ்ட் ஆக்கியிருக்கு. 9/11லாம் இதனால தான். பட் ஒன் திங். ஆல் முஸ்லிம்ஸ் ஆர் நாட் டெரரிஸ்ட்ஸ். தேர் ஆர் குட் முஸ்லிம்ஸ் அண்ட் பேட் முஸ்லிம்ஸ் பட் டெரரிஸ்ட்ஸ் ஆர் முஸ்லிம்ஸ்.’

 

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல. நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம். ஆனால், தீவிரவாதிகள்  முஸ்லிம்களாக இருக்கின்றனர். இதுவே, இருபத்தியோறாம் நூற்றாண்டின் முஸ்லிம் என்பதற்கான பொருள்.

 

 

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு. முதல் நாள்.

 

அவசர அவசரமாக பள்ளியில் இருந்து அந்த வேன் கிளம்பியது. அவனது பள்ளியில் இருந்து அரைமணி நேர தொலைவில் இருந்தது தேர்வுக் கூடம். தேர்வு துவங்க இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது. இருந்தும் பள்ளி அவசரம் காட்டியது. அங்கே போய் ஒரு மணி நேரம் என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. வாகனத்தில் கடைசி இருக்கையின் ஜன்னல் மூலையில் போய் அமர்ந்தான். அனைவரும் வந்து சேர்ந்தனர். முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு. முப்பது மாணவர்கள். தமிழ் அம்மா. ஓட்டுனர். நடத்துனர் இவர்களுடன் முதல் நாள் என்பதால் பிரின்ஸிபாலும் வந்திருந்தார். வண்டி கிளம்பியது.

 

பள்ளியில் இருந்து ஐந்து நிமிடத் தொலைவில் சென்று வேன் நின்றது. ஐயனார் கோவில். எப்போதும் முதல் தேர்வுக்குப் போகையில் இந்தக் கோவிலில் நின்று பிராத்தித்துவிட்டுப் போவது பள்ளி வழக்கம் என அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து புரிந்தது. எல்லோரும் இறங்கிப் போனர். அவன் வேனுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டான். யாரும் எதுவும் கேட்கவில்லை.

 

பத்து நிமிடம் கழித்துச் சில அழுகுரல்களும் கூச்சல்களும் அவசர அடிகளும் வேனை நோக்கி வந்தன. ஆசிரிய மாணவ மாணவியரின் சட்டைகள் பல சிவப்பு நிறத்தில் இருந்தன. அருகில் நெருங்க நெருங்க அது இரத்தம் என புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அவன் படித்த பள்ளியில் முக்கால்வாசிப் பேர் இரத்தத்தையே பார்க்காத பிராமணர்கள். அவனுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. இரத்த அடி வாங்கிய ஒருவனை அழைத்து வினவத் துவங்கினான்.

 

‘என்னடா ஆச்சு. வெள்ள யூனிஃபார்ம்ல போயி செவப்பா மாத்திட்டு வந்திருக்கீங்க?’

 

‘அத ஏண்டா கேக்கிற. நாங்க போய் சாமி முன்னாடி நின்னோம். பிரின்ஸிபால் மேம் எல்லோரையும் கண்ண மூடச் சொல்லி ஸ்லோகம் சொல்லிக்கிட்டிருந்தாங்க.’

 

‘இங்கயுமா? அப்பறம்’

 

‘அந்த நேரம் பாத்து யாரோ ஐய்யனாருக்கு கெடா வெட்டிட்டா. அத சரியா பிடிக்காம விட்டுட்டா போல. அது தல தனியா கெடக்கு முண்டம் தனியா ஓடுது. எங்க மேல இரத்தத்த எறச்சுவிட்டுட்டு போயிடுத்து. இங்க பாரு ஒரே பேட் ஸ்மெல் அடிக்கிது’

 

அவனுக்கு வயிற்றை பொத்துக் கொண்டு சிரிப்பு வந்தது. அடிக்க முடியாமல் சிரித்தான். ‘இ இது இதுக்குப் பேர் தான். இதுக்குப் பேர் தான் கேப்பில கெடா வெட்றதாடா?’ என மூச்சுத் திணறக் கேட்டான்.

 

‘பாருடா உனக்கு இது சிரிப்பா போயிடுத்து. எவ்ளோ சீரியஸான மேட்டர் பேசிட்டிருக்கேன்’

 

‘போங்கடா நீங்களும் உங்க சீரியஸ்நெஸ்ஸும். சரி இப்ப என்ன பன்றதா உத்தேசம். இப்புடியே இரத்த வாடையோட மணமணக்க நாளு பேப்பர எழுதிடலாம்னு உங்க மேம் சொல்லிட்டாங்களா?’

 

‘இல்லடா. திரும்பி ஸ்கூலுக்கு போய் ஹாஸ்டல்ல ட்ரஸ் மாத்திட்டு எக்ஸாம் எழுதலாம்னு சொல்லிட்டா’

 

‘ரைட் அதான. நான் அப்பவே நினச்சேன். இப்டி எக்ஸாமுக்கு ஒன்னரை மணிநேரம் முன்னாடி போயி என்ன பண்ணப் போறோம்னு பரவாயில்ல. நல்ல எண்டர்டெய்ன்மெண்ட்.’

 

அரை மணி நேரத்திற்கு முன் பிரகாசமாக பளிச்சென கிளம்பிய வேன் முகம் வாடித் தொங்கி வதங்கிப் போய் பள்ளிக்கூடத்தைத் தொட்டது. அனைவரும் இறங்கி ஹாஸ்டலுக்கு ஓடினர். கடந்த மாதம் வரை இந்த ஹாஸ்டல் எல்லாம் இல்லை. பரிட்சைக்கு மூன்று வாரத்திற்கு முன் தான் அனைத்துப் பத்தாம் வகுப்புக்காரர்களுக்கும் ஹாஸ்டல் வாசம் துவங்கியிருந்தது. அதிக மதிப்பெண் வாங்குவதற்கும் ஒருங்கிணப்பதற்கும் தான் இந்த ஏற்பாடு.

 

நல்லவேளை இப்போது ஹாஸடல் தான் காப்பாற்றியிருந்தது. அடுத்த அரை மணிநேரத்திற்குள் அனைவரும் துவைத்ததோ துவைக்காததோ வேறொரு சீருடையை மாற்றிவிட்டு வந்து சேர்ந்திருந்தனர். இதுவே அவரவர் வீட்டில் இருந்தால் இது சாத்தியப்பட்டு வராது.

 

எல்லோரும் வந்துவிட்டனர். இன்னும் அரைமணி நேரத்தல் தேர்வுக்கூடத்தில் இருக்க வேண்டும். வேகவேகமாக வண்டி கிளம்பியது. கிளம்பிய சில நொடிகளில் அனைவரும் தேர்வுக்கான புத்தகத்தை விரித்து படிக்கலாயினர். அவன் சிரிப்பை இன்னும் நிறுத்தவில்லை. அவன் வாயைக் கைக்குட்டையால் அடைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் அப்படிச் சிரித்து பல நாள் ஆயிருந்தது.

 

இரத்தம் பட்ட அந்த ஐய்யனார் கோவிலைக் கடந்து சில தொலைவு போனதும் தமிழ் அம்மா ஒரு கையடக்கப் புத்தகத்தை திறந்தார். அவன் என்னவென்று எட்டிப் பார்க்க, பிராத்தனை புத்தகம் எனப் புரிந்தது. ஆமாம் தமிழ் மேமும் கிறிஸ்தவர் தான்.

 

‘லிஸன், ஸ்டூடண்ட்ஸ். இப்ப ஒரு சின்னப் ப்ரேயர் பண்ணிக்குவோம். எக்ஸாம்ஸ் நல்லா எழுதனும்னு ப்ரேயர். இந்தப் பொண்ணு வாசிப்பாள்’ என தமிழ் அம்மா புத்தகத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பிராத்தனை துவங்கியது. அனைவரும் அமென் சொல்லிக் கொண்டே வந்தனர்.

 

‘என் அன்பிற்குரிய கடவுளே, இயேசு கிறிஸ்துவே. நான் என் சுயபுத்தியின் பின்னால் ஓடாமல் என் முழு இருதயத்தோடு இந்த பரிட்சையை எழுத சகாயம் செய்யும் ஆண்டவரே. இதனை லேசான காரியமாக்கிவைப்பாய் இயேசு கிறிஸ்துவே. பரிட்சையில் நீ என்னோடிருந்து, நான் படித்தவைகளை நினைவுக்கு கொணர்ந்து, திகைப்பின்றி, மன உறுதியோடு, ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை குறித்த நேரத்திற்குள் சிறப்பாக எழுதி முடிக்க உன் குருதியை என் பேனவில் நிரப்புக் கொடு ஆண்டவரே. பாவங்களை அழிக்கும் உன் குருதி எனக்குப் போதும்.’

 

‘ஆமென்’

 

அவனுக்கு மீண்டும் நகைப்பு தாங்க முடியவில்லை. ஏதோ ஒன்று மனதில் எழுந்தது. கேட்கலாம் என துணிந்தான் பின்னர் மீண்டும் அமர்ந்து கொண்டான். மீண்டும் எழுந்தான். மீண்டும் அமர்ந்து கொண்டார். இறுதியாக துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டான்.

 

‘அம்மா எனக்கொரு சந்தேகம்.’

 

என்ன கேட்கப்போகிறானோ என பயந்தபடி ‘கேளுடா’ என்றார். பிரின்ஸிபாலும் மற்றவர்களும் திரும்பி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். கேட்டான் ஒரு கேள்வி.

 

‘அம்மா இந்த பிராத்தனைய நாம மொத தடவை ஸ்கூல விட்டு கெளம்பும்போது கேட்டிங்களா?’

 

‘இல்லையே ஏன்?’

 

‘இல்ல சும்மா தான் கேட்டேன்.’ என சொல்லிவிட்டு அவன் வேறொரு திசையின் பக்கம் திரும்பினான். அம்மா விடுவதாக இல்லை.

 

‘பரவா இல்லப்பா. சொல்லு. ஏன் கேட்ட?’

 

‘இல்ல வேணாம்மா. அப்பறம் ஏண்டா கேட்டோம்னு ஃபீல் பண்ணுவீங்க’

 

‘பரவா இல்ல. அப்டிலாம் நெனைக்க மாட்டேன். சும்மா கேளு’

 

‘கேட்டிடவா?’

 

‘சும்மா கேளு’

 

‘இல்ல அவருகிட்ட குருதிய கேட்கிறிங்களே. அதான்’

 

‘ஆமாம். இயேசுவோட இரத்தம் பாவத்தப் போக்கும் அதான் கேட்டோம்’

 

‘இல்ல. நான் நினச்சேன் மொத தடவையே நீங்க இந்த ப்ரேயர பண்ணி இரத்தத்த கேட்டிங்களோ என்னவோ அதானல தான் ஐயனார் கோவில்ல எல்லாருக்கும் இரத்தத்த அள்ளி தெளிச்சிட்டாரோனு சந்தேகப்பட்டு தான் கேட்டேன். நல்லவேளை அதுவா தான் அது நடந்திருக்கு. சரி இன்னொன்னு கேக்கலாமா?’

 

‘…….’ பதில் ஏதும் வரவில்லை.

 

‘இயேசுவே பாவம். பாவிப்பசங்க அவர கொன்னுட்டானுங்க.மொத தடவ பட்ட ஆட்டு இரத்த வாடையே இன்னும் போகல. அதுக்குள்ள எதுக்கு இன்னொரக்கா மனுஷ இரத்தத்த கேக்கிறீங்க. அதுவும் பேனாவில. பாவமில்லையா அவரு. உங்களுக்கு லூசு கீசு பிடிச்சு போச்சா?’

 

’க்க்ரீரீரீரீரீச்ச்ச்ச்’

 

ட்ரைவர் ஷாக்காகி சடன் ப்ரேக் அடித்தார்.

 

 

அந்த நிகழ்விலிருந்து அவனால் முன் போல் இருக்க முடியவில்லை. நடத்தையும் பேச்சும் வழக்கத்துக்கு மாறாக குறைந்தது போய் இருந்தன. எந்நேரமும் முகத்தில் தவழும் புன்னகையை அவ்வளவு எளிதில் காணமுடியாமல் போனது.

 

அன்று காலை வழக்கமாக பள்ளிக்கு வந்தான். அவன் வருவதற்கு முன்பே சிலர் வந்திருந்தனர். வகுப்பறையில் கருப்பலகையை நோக்கியவாறு பலகைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் என்றுமில்லாத வகையில் அனைவரும் அன்று தலைகீழாய் அமர்ந்திருந்தனர். அதாவது முதுகுப்புறத்தை கரும்பலகைகளின் திசையில் காட்டிவாறு இருந்தனர்.

 

அந்த வகுப்பில் கரும்பலகையின் நேரெதிர் திசையில் மற்றொரு பலகை இருந்தது அது ஒரு பெரிய தெர்மகோல் பலகை. அந்த தெர்மகோல் பலகையில் சில முக்கியமான தாள்களும் சார்ட்களும் பின் செய்யப்பட்டிருக்கும். டைம் டேபிள், ஃபார்முலாக்கள், க்ராமர் சம்பந்தமானவை. அதிமுக்கியமாக, ப்ளாக் ஸ்டார் சார்ட் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதென்ன ப்ளாக் ஸ்டார் சார்ட்?

 

வகுப்பு மாணவர்களின் பெயர்களை வரிசையாக எழுதி நன்கு தெரியும்படி வைத்திருக்கும் ஒரு சார்ட் தான் ப்ளாக் மார்க் சார்ட். மாணவர்கள் தவறிழைக்கும் போது தவறைப் பொறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஒவ்வொரு தண்டனையும் கரும் நட்சத்திர குறியீட்டால் அளக்கப்படும். எடுத்துக்காட்டாக பென்ஸிலை லவட்டிவிட்டுப் போவதற்கான தண்டனை அளவு ஒரு கரும் நட்சத்திரக் குறியீடு. தேர்வில் பிட் அடித்து பிடிபட்டால் இரண்டு நட்சத்திரக் குறியீடு. இந்தக் குறியீடு மேலே கண்ட சார்ட்டில் அவரவர் பெயர்களுக்கு அருகே இருக்கும் இடத்தில் பொறிக்கப்பட்டு ஒருவரது குற்றப்பத்திர்க்கையாய் காட்சியளிக்கும்.

 

இப்போது அவனை எடுத்துக்கொள்வோம். அவன் எனும் பெயருக்கு நேரே அந்த சார்ட்டில் இருபத்தெட்டு எட்டு கரும் நட்சத்திரங்கள் இருந்தன. இந்த வருடத்தில் மட்டும் அவன் பெற்றிருந்த  நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். இவனுக்கு அடுத்த இடத்தில் அதிக அளாவிலான நட்சத்திரங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருப்பவன் ப்ரேம் அவனது நட்சத்திர அந்தஸ்து நான்கு. முதல் இடத்தில் 28, இரண்டாம் இடத்தில் 4, மூன்றாம் இடத்தில் 1, நான்காம் இடம் என்பதே இல்லை. ஏனென்றால் வேறு யாரும் தவறிழைக்கவில்லை அல்லது பிடிபடவில்லை.

 

ஆமாம், அது ஏன் முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவு வேறுபாடு? அவன் அப்படி என்ன தான் செய்தான். இதென்ன கேள்வி? இத்தனை பக்கமாக நாம் அவன் செய்ததை தானே பார்த்து வந்தோம். அதாவது மற்றவர்கள் எல்லாம் ஏற்கனவே நட்சத்திர அளவு வரையறுக்கப்பட்ட தவறுகளில் தான் ஈடுபடுவர். ஆனால் அவனோ அதற்கு முன் அந்த பள்ளியே பார்க்காத தவறுகளை செய்து, அடிக்கடி சட்ட திருத்தம் செய்து வந்தான்.

 

சட்ட திருத்தம் செய்யுமளவிற்கு ஒருவன் தவறு செய்தால் கூடுதல் தண்டனை கிடைக்கும். அத்தண்டனைக்கு கொடுக்க வேண்டிய நடசத்திரங்களின் அளவைவிட கூடுதாலக இரண்டு நட்சத்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். ஏதாவது அனாவசியமாக பேசி வகுப்புக்கு இடையூறு செய்தல், ஆசிரியரிடம் குதர்க்கமான கேள்விகளை கேட்டல், மனப்பாடம் செய்யாமல் சொந்தமாக எதையாவது தேர்வில் கொட்டுதல், வயதுக்கு மீறி யோசித்தல் என புதுப்புது குற்றங்கள் அவனால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆக நட்சத்திர அந்தஸ்தும் சார்ட்டில் அவனுக்குத் தரப்பட்ட இடத்தைவிட்டு வெளியே நிரம்பி வழிய ஆயத்தமாயின.

 

அப்படிப்பட்ட அந்த சார்ட் வீற்றிருந்த தெர்மகோல் பலகையை நோக்கித்தான் அனைவர் கண்களும் இருந்தன. அந்தப் பலகையின் முன் ப்ரேம் நின்று கொண்டிருந்தான். ஏதோ சித்துவிளையாட்டு அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

மேற்கண்ட நிகழ்வு நடந்து பல மாதங்கள் கடந்திருந்தன.

 

ஓம்

பூர்ணமதக பூர்ணமிதம் பூர்ணா பூர்ணமுதஸ்யதே

பூர்ணஷ்ய பூர்ணமாதாய பூர்ணமேவேவ சிஷ்யதே

 

பிரின்ஸிபால் அறையில் கோரசாக உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள் ஸ்பீக்கர்களின் துணைகொண்டு வகுப்புகளுக்குள் வந்து விழுந்து நிரப்பியது.

 

இது காலையில் தினமும் நடக்கும் பிராத்தனை. திங்கள் தவிர மற்ற எல்லா தினங்களும் இப்படித்தான். ஒரு சில மாணவர்கள் மட்டும் பிரின்ஸிபால் ரூமுக்குச் சென்று அங்கிருக்கும் மைக்கில் தினசரி பிராத்தனைக்கான ஸ்லோகங்களை உச்சரிப்பர். மற்ற மாணவர்கள் தங்கள் வகுப்பிலேயே இருந்து அந்தப் பிராத்தனையை  பின்தொடர்வர். திங்களன்று மட்டும் இந்நிகழ்வு பள்ளிக்கூடத் திடலில் நடைபெறும். பிராத்தனை தவிர பள்ளியின் அந்த வாரப் போக்கு குறித்த வேறு சில நிகழ்வுகளும் நடக்கும்.

 

வகுப்பில் அனைத்து மாணவர்களும் கண்களை மூடி ஸ்லோகங்களை திருப்பி சொல்லிக் கொண்டிருந்தனர். கண்களை மூட வேண்டும். திறந்தால் அரை ப்ளாக் ஸ்டார் மற்றும் அரை நாள் நாள் முழுவதும் வெளியே நிற்தல். அவன் எப்பொழுதும் போல் கண்களை மூடுவது போல் பாவனை காட்டிக்கொண்டு, இமைகள்  காட்டும் இருட்டுக்கு வெளியே நடந்தேறிக் கொண்டிருப்பதை உளவு பார்த்துக்கொண்டிருந்தான்.

 

மேம், அனைவரும் கண்ணை மூடியிருக்கிறார்களா என சோதித்தார். பின் மெதுவாகச் சென்று தன் பையில் இருந்த டிபன் பாக்ஸை திறந்தார். ஏதோ இட்லி போல் தெரிந்தது. அதில் சாம்பாரை வெள்ளம் போல் உற்றினார். முள்ளங்கி சாம்பார் என வாடை காட்டிக்கொடுத்தது. மெதுவாக அப்படியே இட்லியை சாம்பாரில் சம்ஹாரம் செய்து விழுங்கத் துவங்கினார். சரியாக அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லவே என்ற ஸ்லோகம் துவங்கியிருந்தது.

 

இரண்டு நிமிடத்தில் அனைத்தையும் முடித்து கைகளை சூப்பியே கழுனாற் போல் ஆக்கினார். இருந்தாலும் தண்ணீரை வைத்து டிபன் பாக்ஸுக்குள் கையை கழுவினார். அப்படியே அதே தண்ணீரை வைத்து டிபன் பாக்ஸின் உள்புறத்தையும் நன்கு கழுவினார். மறுபடியும் யாரும் தன்னை பார்க்கிறார்களா என நோட்டம் விட்டார். அந்த டிஃபன் பாக்ஸில் இருந்த கழுவி ஊற்றப்பட்ட தண்ணீரை மெதுவாக குடித்தார். ஒருவேளை கையிலும் பாத்திரத்திலும் ஒட்டி இருக்கும் உணவுத் துகள்களின் சத்துகளை வீணாக்காக்க கூடாது என எண்ணியிருக்ககூடும்.

 

அதெல்லாம் அவனுக்கு புரியவில்லை. பாத்திரத்தையும் கைகளையும் கழுவிய நீரை காலகாலமாக வெளியே ஊற்றித்தான் அவன் பார்த்திருக்கிறான். மேமின் இந்த செயல் அவனுக்கு வினோதமாகப் பட்டது. என்ன ஏது என யோசித்து முடிப்பதற்குள் அவனை அறியாமல் பலமாக சிரித்துவிட்டான். எல்லோரும் கவனம் சிதறி அவனைக் கண்ட பொழுதாவது அவன் நிறுத்தியிருக்க வேண்டும். அவன் தன்னை அறியாமல் மேமைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.

 

மேமுக்கு தர்ம சங்கடமாகிப் போனது. கூனிக் குறுகி நெளிந்தார். கண்கள் சிவந்தன. நகைப்புக் கண்ணீரில் மிதந்த அவனது கண்களை வலித்துக் கலங்க வைக்க முடிவெடுத்தார். அவன் மீது பிராத்தனை நேரத்தில் கண்ணைத் திறந்ததற்கு மட்டுமல்லாமல் சிரித்து பலரது கவனத்தையும் சிதைத்தற்கான தண்டனையும் நிறைவேற்றப் படுவதாக அறிவித்தார். ஒரு நாள் முழுவதும் வகுப்புக்கு வெளியே முழங்கால் போட்டபடி கழிக்க வேண்டும். தண்டனையின் அளவு ஆறு நட்சத்திரங்கள். பழிக்குப் பழி. கண்ணுக்குக் கண். திருப்தி. இந்த உலகில் இன்று ஏன் இத்தனை பிரச்சனைகள் இருந்து வருகின்றன தெரியுமா? இவர்களால் தான். முதிர்ச்சியற்ற பெரியவர்களால் தான்.

 

அவனை வெளியே மைதானத்தில் முழந்தாளிட அனுப்பிவிட்டு கையில் கருப்பு ஸ்கெட்ச் பேனாவுடன் ப்ளாக் ஸ்டார் சார்டை நோக்கி நடந்தார். ஆறு கரும் நட்சத்திரங்கள். குற்றங்களின் மொத்த உருவம். அருகே சென்று அவனது பெயரைத் தேடினார். தேடவெல்லாம் தேவையில்லை  யார் பெயருக்குப் பின் அதிக ஸ்டார்கள் இருக்கிறது என்று பார்த்தாலே போதும்.

 

ஆரவாரமாக ஸ்கெட்சை கையில் எடுத்துக் கொண்டு போன மேமுக்கு விழி பிதுங்கியது. அங்கே அவன் பெயருக்கருகே இருந்த ஸ்டார்கள் அனைத்து இடத்தையும் அடைத்துக் கொண்டு புதிதாய் ஒரு ஸ்டாருக்கு இடம் இல்லை என ஐந்து விரல்களையும் விரித்தன. என்ன செய்யலாம்? அதெப்படி எதைச் செய்தாலும் புதுமையாக செய்கிறான். பிரின்ஸிபாலின் கதவு தட்டப்பட்டது.  ஐந்து கரும் நட்சத்திரங்களுக்கு ஈடாக ஒரு சிகப்பு நட்சத்திரம் என்றும் பழைய ப்ளாக் சார்ட்டில் இடம் கொள்ளாத சூழ்நிலையாலும் புதிதாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாலும் புதிதாக ஒரு ப்ளாக் அண்ட் ரெட் சார்ட்டைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதென்றும் இது போக மறுநாள் அவனது பெற்றோர்களை அழைத்து அவனுக்கு டீ.சி. கொடுத்து அனுப்புவதென்றும் முடிவு கொணரப்பட்டது.

 

மகிழ்ச்சியுடன் கையோடு ஒரு ப்ளாக் அண்ட் ரெட் சார்ட்டையும் தயார் செய்து கொண்டு வந்தார் மேம். அதில் அவனது பெயருக்கு நேரே ஏழு சிவப்பு நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தது. கூட்டிப் பார்த்தால் 28+6=34 தான் வர வேண்டும்.  ஒன்றை எதற்கும் இருக்கட்டுமே பின்னால் உதவும் என்று மேம் கருதியிருக்கக்கூடும். சரி அதுவல்ல இங்கே செய்தி. அந்த நட்சத்திரங்களை அடுத்து இருந்த வாசகம் தான் முக்கியம். அவன் பெயரத்தொடர்ந்து வந்த ஐந்து சிகப்பு நட்சத்திரங்களைத் தொடர்ந்து Transfer Certificate (TC) Issued என இருந்தது.

 

மேம், நேரே தெர்மாகோல் போர்டுக்குச் சென்றார். பழைய ப்ளாக் சார்ட்டை அகற்றி தூர வைத்தார். புதிய ப்ளாக் அண்ட் ரெட் சார்ட்டை அவ்விடத்தில் பொருத்தினார். அகற்றி தூர எறிந்த சார்ட்டை கையில் எடுத்தவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

 

சார்ட்டை  ஆங்காங்கே ப்ளேடால் கீறியதைப் போல் கீறல் கீறலாய் இருந்தது. சற்று உற்றுப்பார்க்கையில் தான் தெரிந்தது, தெர்மாகோல் போர்டில் இருந்த அத்தனை சார்ட்டுகளும் ப்ளேடால் கீறிவிடப்பட்டிருந்தது. அவை கிழிந்து தொங்காதவண்ணம் மிகச் சரியான அளவில் கீறிவிடப்பட்டட்டிருந்தன. மேமுக்கு இருந்த டென்ஷனில் கண் மூக்கு தெரியாமல் கோபம் வந்தது. யார் அதை செய்ததென கேட்டு அவர் கத்திய கத்தில் அனைவர் செவிப்பறையும் கிழியும் நிலைக்குச் சென்று மீண்டுவந்தன.

 

எவ்வளவு கேட்டும் யாரும் வாயைத் திறக்கவில்லை. மிரட்டியும் பார்த்தாயிற்று. உருட்டியும் பார்த்தாயிற்று. யாரும் காட்டிக்கொடுக்கத் தயாராய் இல்லை. அப்படி என்றால் இந்த ப்ளேட் மேட்டரை செய்தவன் எல்லோர் அபிமானத்திற்கும் உள்ளானவனாக இருக்க வேண்டும் இல்லை எல்லோரும் அவனைக் கண்டு பயப்பட வேண்டும். சமயோசிதமாக ஏதாவது யோசிக்க வேண்டிய சூழலில் மேம் தள்ளப்பட்டார்.

 

அவன் தான் செய்திருக்க வேண்டும் என குலதெய்வத்தை வேண்டி அனைவர் கையிலும் ஒரு சீட்டைக் கொடுத்தார். யார் இந்த கீறலைச் செய்தார் என அந்தச் சீட்டில் எழுதி அங்கே வைக்கப்பட்டிருந்த டப்பாவில் போட்டுவிடச் சொன்னார். செய்தவன் எவனாக இருந்தாலும் இல்லை அவனாக இருந்தாலும் தயங்காமல் பயப்படாமல் எழுதும்படி அழுத்தினார். கால் மணி நேரத்தில் அனைத்தும் முடிந்தது. பெரும்பான்மையானவர்கள் அவனது பெயரை எழுதியிருந்தனர். அந்தப் பெரும்பான்மையினரிலும் பெரும்பான்மையினர் அவனது பெயருக்கு அருகில் (Doubt) என எழுதி ப்ரேம் என இன்னொரு பெயரை தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

 

ப்ரேம் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டான். அவன் செய்ததை அன்று நேரில் பார்த்தவர்கள் பலர் இருந்தனர். அதனால் குற்றத்தை அவனால் மறுக்கமுடியவில்லை. ஒப்புக்கொண்டான். ஆனால் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி தன் மீது குற்றத்தை குறைத்துக் கொள்ள முடிவுகட்டினான்.

 

‘நானும் அவனும் சேந்து தான் செஞ்சோம் மேம். அவன் தான் எனக்கு ஐடியா கொடுத்தான்’ ஒரே பதிலில் பிரச்சனை ஓய்ந்தது.

 

வகுப்பு முழுக்க இல்லை பள்ளி முழுக்க இது தான் பேச்சு. பிரின்ஸிபாலும் ஒலிப் பெருக்கியில் தோன்றி இத்தனை நாளாய் சீழ் பிடித்தும் சில காரணங்களால் வெட்டி எறியப்படாத பள்ளியின் ஒரு பகுதி இன்று இறுதியாக வெட்டி எரியப்படுவதாய் அறிவித்தார்.

 

அவன் காதுகளுக்கு இந்த செய்திகள் எதுவும் வந்து சேரவில்லை. யாரும் அண்டாத நடு மைதானத்தில்  அவன் முழ்ந்தாள் இட்டிருந்தான். மனதில் துக்கமெல்லாம் இல்லை. முட்டியில் கற்கள் குத்தி காயம்படுத்திய டவுசர் போட்ட காலத்தில் இருந்தே இப்படி மண்ணில் முழங்கால் இட்டிருந்ததால் பேண்ட் போடும் இந்தக்காலத்தில் அது பெரிய டீல் இல்லை. மனதுக்குள் எந்தப் புலம்பலும் இல்லை. பறவைகளையும் வானத்தையும் கவனுத்துடன் பார்த்துக் கொண்டே கறையத் துவங்கினான். உடலைவிட்டு விலகி அந்தப் பறவைகளுடன் பயணித்துக் கொண்டிருந்தான். மண்ணின் அடிமைத்தனத்தை மறந்து காற்றின் சுதந்திரத்தை சுவாசித்தான். சிறகுகள் இன்றியே பறக்க முடிந்தது. மிதக்க முடிந்தது. பிடித்த இடத்தில் இறங்கிப் பிடித்ததை செய்ய முடிந்தது.

 

கனவு இடைப்பட்டது. யாரோ வந்து அழைத்தது தெரிந்தது. வானத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் உடலுக்குள் புகுந்தான்.

 

‘டேய் உன்ன மேம் கூட்டீட்டு வரச் சொன்னாங்க’

 

எதுக்கென்று எதுவும் புரியவில்லை. மேம் மனம் மாறியிருக்ககூடும் என்று எண்ணிக்கொண்டான். மனதில் இனம் புரியா புன்னகை தொற்றிக்கொண்டது. துளியும் சத்தமின்றி வகுப்பே அமைதியாய் இருந்தது. அனைவர் முகமும் ஒருவித பீதியில் இருந்தது. ப்ரேம், மேமுக்கு அருகே முன் நின்றிருந்தான். சிரித்த முகத்துடன் ப்ரேமை பார்த்து கண்ணடித்துவிட்டு மேம் முன்னே போய் நின்றான். அவன் செய்கைகள் அனைத்தையும் வகுப்பே கவனித்துக் கொண்டிருந்ததை அவன் உணரவில்லை. பழுக்கக் காய்ச்சிய கம்பியும் சதையும் உரசிக் கொண்டன.

 

முதல் அரைமணி நேரம் அவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. என்ன நடக்கிறது? எதைப்பற்றி பேசுகிறார்கள்? என்ன வேண்டும் இவர்களுக்கு? கழுவிய தண்ணீரை குடித்ததைக் கண்டு சிரித்ததற்கா இப்படிப்பட்ட தண்டனை. ஏன் திட்டுகிறார்கள்? ஒரு வேளை திட்டிவிட்டு விட்டுவிடுவார்களா? இல்லையே அப்படித் தெரியவில்லையே, டீசி கீசீ என ஏதேதோ சொல்கிறார்களா? கொடுத்துவிடுவார்களா? ஏன் ப்ரேம் இங்கு நிற்கிறான்? எதுவும் நமக்கு சாதகமாகப் பேசி இருப்பானோ? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? எதற்காக திட்டுகிறோம் என சொல்லாமல்? நீயெல்லாம் நல்லாவே வரமாட்ட, டெரரிஸ்ட்டா தான் ஆவ, எவ்வளவு வக்கிரம் உனக்கு? எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்புடி செய்வ? என்று மீண்டும் மீண்டும் அரச்சமாவையே அரைக்கிறார்களே என்ன செய்யலாம். பேச முடிவெடுத்தான்.

 

’மேம் நீங்க எதப்பத்தி பேசுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

 

’ப்ளடி. நான் இவ்ளோ நேரம் பேசீட்டிருந்தனே அதப் பத்தி தான். டோண்ட் ஆக்ட் ஸ்மார்ட். உன் ப்ரண்ட் ப்ரேம் எல்லாத்தையும் சொல்லிட்டான். நீ சொல்லித் தான் அவன் அந்த போர்ட்ல இருந்த சார்ட்டையெல்லாம் கிழிச்சேன்னு ஒத்துக்கிட்டான். நீ தான் ஏவிவிட்டியாமே. ஃபூல். நம்மால மேமோட கழுத்த தான் கிழிக்க முடியல இந்த சார்ட்ட கிழிச்சாவது அந்த ஆதங்கத்த தீத்துகுவோம்னு சொலிருக்க. உனக்கு எவ்ளோ கட்ஸ் இருக்கும். இரு பிரின்ஸிபால்கிட்ட எல்லாத்தையும் இன்ஃபார்ம் பண்ணியாச்சு, வராங்க. உனக்கு டீசி ரெடி பண்ணிட்டிருக்காங்க. யூ ஹாவ் பீன் ஸ்பிட்டெட் அவுட் ஆஃப் திஸ் ப்ரஸ்டீஜியஸ் இன்ஸ்ட்டிட்யூஷன்.’

 

‘மேம் எனக்கு உண்மையிலேயே எதுவும் புரியல. வாட்ஸ் கோயிங் ஆன்?’

 

அன்றொரு நாள். அவன் பள்ளிக்கு  வரும் போது ப்ரேம் ஒரு கச்சேரி நடத்திக்கொண்டிருந்தான். சார்ட்களை தெர்மாகோலில் இருந்த குண்டூசியைக் கொண்டு கீறிவிட்டுக்கொண்டிருந்தான். ப்ரேமை பலர் குழுமியிருந்தனர்.

 

‘ப்ரேம் என்னடா பண்ணிட்டிருக்கீங்க?’

 

‘வாடா. நம்ம மேம்களோட கழுத்த தான் கீற முடியல. இந்த சார்டையாவது கீறி ஆதங்கத்த வெளிப்படுத்துவோம். வாயேன்.’

 

’எனக்கு அவ்ளோ வெறிலாம் இல்லப்பா. அப்படி என்ன செஞ்சிடாங்க. அவ்வளவு வெறி உள்ளவன் நேரா போய் கழுத்த கீற வேண்டியது தானா. அது ஆம்பளைக்கு அழகு. அத விட்டுப்புட்டு இதெல்லாம் ஒரு வேலையா. நீயே செய்’

 

பிரின்ஸிபால் மின்னல் வேகத்தில் வகுப்புக்குள் நுழைந்தார். அவர் கடந்து வந்த பாதையில் கிடந்த தூசு, பேப்பர், சருகு என அனைத்தும் பறந்தது. எப்போதும் அவரைத் தொடர்ந்து வரும் மேம் பின்னால் தன் பருத்த உடலை இழுக்கமாட்டாமல் இழுத்திக்கொண்டு ஓடி வந்தார்.

 

பின்ஸ்பாலுக்கு இந்திரா காந்தி என மனதில் நினைப்பு. அடிக்கடி இந்திரா காந்தி தான் தன் முன்மாதிரி என சொல்லி இருக்கிறார். இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு வங்கதேச விஷயத்தில் கொடுத்த மரண அடியை சிலாகித்துக் கொண்டு சொல்வார். நேரு இந்திரா இடையேயான கடிதங்களையும் அதில் தொனிக்கும் தலைமைத்துவத்தையும் அடிக்கடி நினைவு கூறுவார். இன்றைய பாரதத்துக்கு இந்திரா காந்தி தேவை என்றும், இருந்தால் பாகிஸ்தானோ, சீனாவோ, இலங்கையோ ஏன் அமெரிக்காவோ கூட நம்மிடம் வாலாட்ட முடியாது என்பார். தீவிரவாதிகளை எப்படியெல்லாம் சித்தரவதை செய்து உண்மையை வெளிவாங்கிக் கொல்வது என வகுப்பெடுப்பார். சில சமயம் இவர் பிரமாணா ஆத்துப் பெண்ணா என ஐயம் வரும். அந்தளவிற்கு துடிப்பு, ஆளை அடிக்கும் நடை எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம்.

 

வகுப்புக்குள் நுழைந்த மேமை வைத்த கண் வாங்காமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவரது உடல் மொழியை கண்டு வியத்துக் கொண்டிருந்தான். அவரது மூக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆம், அவனுக்கு அவரது மூக்கின் மேல் பலவருடமாக ஒரு ஈர்ப்பு. அந்த மூக்கு அவனுக்கு அவனது தாயின் மூக்கை நினைவுபடுத்தியது. மிகவும் சிறிய மூக்கு. எப்படிச் சொல்வது. மிகவும் சிரிய, ஆனால் கூரிய, நேரான, மிகவும் சிறுத்த நுனியைக் கொண்ட மூக்கு. பேசும் போதும், கொஞ்சும் போதும் மிகவும் அழகாக இருக்கும். கொஞ்சும் போதும் திட்டும் போதும் மூக்கு மற்றும் மேல் உதட்டுப் பகுதிகளில் உண்டாகும் ரேகைகள் கண்களை கட்டிப்போடும். பிரின்ஸிபால் மலையாளி வேறு. சொல்லவா வேண்டும்? மையிட்ட கண்ணும் கொஞ்சுவது போல் பேசும் மலையாளத் தொனியும் அந்த மூக்குக்கு மேலும் மூக்கு வைத்தன. இப்படி ரசிப்பது அவனைப் பொறுத்தவரை ஜொள் அல்ல. அழகை ரசிப்பது. எந்த தீய எண்ணமும் இல்லாதது. கவலையை மறக்க வல்லது. இயற்கையின் பெருமையை பறைசாற்றுவது. பரிணாமத்தின் உச்சி.

 

இயற்கையை ரசிக்க நேரம் காலமெல்லாம் அவனுக்குத் தடையாக நிற்கவில்லை. அக்னி குண்டத்தில் அமர்ந்திருந்தாலும் அந்த குண்டம் எப்படி அழகாக நெருப்பை கடத்துகிறது, எப்படி அந்த ஜ்வாலை கொழுந்து விட்டு பல நிறங்களை உமிழ்ந்து கொண்டே எரிகிறது என  ரசிக்கும் தன்மை சிலருக்குத் தான் இருக்கும். தன் மனதை அடக்கி ஆட்டுவிக்கும் மிகச் சிலருக்குத் தான் இருக்கும்.

 

‘ஹூ கேவ் யூ பர்மிஷன் டூ கெட் இன்? யார் உன்ன க்ளாஸ்க்குள்ள விட்டது?’ என வந்ததும் வராததுமாக தாளிக்க ஆரம்பித்தார் பிரின்ஸிபால்.

 

‘மேம். நான் தான் உள்ள விட்டேன். விசாரிக்கிறதுக்கு’

 

‘இதில விசாரிக்கிறதுக்கு என்ன இருக்கு. இவன் தான்னு உறுதியானப்பறம். மொதல்ல நீ போய் வெளிய முட்டி போடு’  அவன் மைதானத்திற்குச் சென்றான். ஒலிப்பெருக்கியில் ஏதோ அறிவிப்பு ஓடியது. சிறிது நேரத்தில் பள்ளியே அவனைச் சுற்றி நின்றது. அருகே ப்ரேம் நின்றிருந்தான். எதிரே மேமும், பிரின்ஸிபாலும்.

 

‘ஸ்டூடண்ட்ஸ் நல்லா பாத்துக்கோங்க. இவன் தான் நீங்க எப்டிலாம் இருக்கக் கூடாதுன்றதுக்கு உதாரணம். சரியா?’

 

’எஸ் மேம்’

 

‘நவ் யூ கேன் கோ. போய் க்ளாஸ்ல உக்காருங்க’

 

’நீ என்ன சொல்ற?’ அவனைப் பார்த்து கேள்வி கேட்டார் பிரின்ஸிபால்.

 

‘நான் எதுவும் செய்யல. என்ன செய்ய விருப்பமோ செஞ்சுக்கங்க?’

 

‘குற்றம் செஞ்சவன் எப்ப ஒத்துக்கிட்டான்’

 

‘குற்றம் செஞ்சவனும் குற்றத்த ஒத்துக்கமாட்டான். செய்யாதவனும் ஒத்துக்கமாட்டான்’

 

‘நான் உனக்கு டீசி ரெடி பண்ணிட்டேன். ஒத்துக்கோ நான் விட்டடறேன்’

 

‘டீசிக்கு பயந்து பொய் சொல்ல நான் தயாரா இல்ல’

 

‘ரொம்ப தெளிவா பேசுறோம்னு நினப்பா?’

 

‘நான் ஏதும் நினைக்கல. நீங்க என்ன நினைக்கிறங்களோ நெனச்சுக்கலாம்’

 

‘இங்க பாரு நான் கடைசியா ஒரு சான்ஸ் தரேன். ஒத்துக்கோ. விட்டடறேன். வீட்ல இருந்து யாரையும் கூப்பிட மாட்டேன்’

 

’உங்களுக்கு என்ன பெரிய போலிஸ்னு மனசுல நினப்பா? போங்க அந்தாண்ட’

 

‘யூ இடியட். நம்ம ஸ்கூல்ல அடிக்கிறதில்லனு உனக்கு கொழுப்பா? முட்டிய பேத்திருவேன்’

 

‘ஆமாமா. இப்ப அப்டியே கொஞ்சிக்கிட்டிருக்கீங்க பாருங்க’

 

‘யூ ஹாவ் டெரரிஸ்ட் மைண்ட் செட். தீவிரவாதியா வர உனக்கு எல்லா தகுதியும் இருக்கு. இந்த வயசிலயே மேமோட தொண்டையக் கீறி கொல்லனும்னு யோசிக்கிறியே இதவிடவா? ஏற்கனவே உங்க ஆளுங்க தான் இந்தியாவையே ரத்தக் களமா ஆக்கிக்கிட்டிருக்கானுங்க. இது தான் காரணம். எல்லாம் பிறப்பில இருக்குது. வேதங்கள் என்ன பொய்யா சொல்லும்? குலமே அப்படித்தான். ரத்தவெறி பிடிச்ச குலம். வெட்றதையும் குத்துரதையும் போதிக்கிற புஸ்தகத்த தூக்கிக் கொண்டாடிற குலம். அப்படிப்பட்ட குலத்தில பெறந்துட்டு நீ என்ன பண்ணுவ? அதெல்லாம் உன் ரத்தத்திலயே ஊறிக் கெடக்கும். நாங்க என்ன பண்ணாலும் நாய் வால நிமித்த முடியுமா என்ன?’

 

அவனுக்கு அழுகை வந்துவிட்டது. இதுவரை வாழ்க்கையில் அவன் அழுத கணங்கள் மிகவும் குறைவு. இந்தளவிற்கு மனம் வலியெடுத்து அழுததில்லை.

 

முஸ்லிமாக அவன் பிறந்திருந்தாலும் அவன் முஸ்லிமாக வளரவில்லை. ஆனால் பள்ளியில் அவன் முஸ்லிமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக பட்ட துயரங்கள் அதிகம். எதற்கெடுத்தாலும் முஸ்லிம் எனும் அடையாளம் தோண்டப்பட்டது. அவனை அறியாமல் அவனுக்குள் இஸ்லாம் மீதான வெறுப்பு குடிகொள்ளத் துவங்கியது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் பள்ளிவாசல்களும் மதர்சாக்களும் தீவிரவாதத்தை வளர்க்கும் இடங்கள் எனவும் மனதில் பதிந்திருந்தது.

 

அழுது கொண்டு மட்டும் இருந்தான். பிரின்ஸிபால் இன்னும் பல தொடர்களை பேசி முடித்திருந்தார்.

 

‘யூ வில் பே ஃபார் இட்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

 

அன்று முழுவதும் முழங்காலிலேயே கழித்தான். செய்த தவறுக்குத் தண்டனை அனுப்பவித்தால் கூட இதெல்லாம் தெரியாது. யாரோ செய்த தவறுக்கு இவன் பலியாக்கப்படுவதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இயேசு தான் நினைவில் வந்தார். பிறர் பாவத்திற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக படித்திருக்கிறான். அனால் அனுபவித்ததில்லை. அனுபவம் படித்தலை விட பயங்கரமானது. உயிருள்ளது என்பதை அன்று தான் உணர்ந்தான். உலக மக்களின் பாவத்திற்காக ஒரு அப்பாவி மனிதனைப் பலி கொடுப்பது மிகவும் கொடுமையாகப் பட்டது. நிச்சயம் இயேசு கடவுளாய் இருந்திருந்தால் இப்படி தன் ரத்தத்தைச் சிந்தி தான் இந்தக் கொடிய மனிதர்களின் பாவங்களை போக்க வேண்டும் என்பது இல்லை. நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்கலாம். அவர் பாவம் அப்பாவி மனிதன். பிறருக்காக தன் உயிரைக் கொடுத்த புனிதர். என்ன பாடு பட்டிருப்பார். பல நாள் பொத்தி வைத்திருந்த சோகம் ஒரே நாளில் வெளிப்பட்டது. வலி உயிரை எடுத்தது. கண்கள் வீங்கின.

 

அதன் பிறகு டீசி கொடுப்பதற்கு அவனது தந்தை அழைக்கப்பட்டார். அவனுக்கு நடந்ததை தன் வீட்டில் சொல்லும் பழக்கம் இல்லை. இன்றும் இல்லை. என்றும் இருக்கப் போவதில்லை. அவர் அதனை வாங்க மறுத்தார். காரணம் கேட்டார். பிராத்தனையில் சிரித்தததையும் சில பேப்பர்களையும் கிழித்ததற்காகவும் டீசி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று திட்டவட்டமாக கூறினார். அதற்கு மேலும் ஏதாவது பேச விரும்பினால் நீதிமன்றத்தின் பக்கம் வருமாறு கேட்டார். அவனை அவர் எதுவும் கேட்கவில்லை. அவர்களும் அவரிடம் எதுவும் பேசவில்லை. விட்டுவிட்டனர்.

 

எதையும் வெளிப்படையாக அவன் பேச விரும்பவில்லை. தன்னுள் சில குணங்களை மறைத்து வைக்கத் துவங்கினான். அனைவரையும் போல் இருக்க ஆயத்தமானான். நடிக்கத் துவங்கினான். எதிர்வரும் பொதுத் தேர்வில் முழுக் கவனத்தையும் செலுத்தலானான். அவன் என்ற அடையாளத்தை துறந்து புதிய அடையாளம் ஏற்க தயாரானான். அன்றோடு அவனாகியவன் ஹஸனாகி இருந்தான். முஹம்மத் ஹஸன்.

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: