ஒளி 222 கிராம்: பகுதி 4

 

’என்ன இது காடு மாதிரி இருக்குது’

 

உண்மையில் அந்தக் கார் காட்டிற்குள் செல்வதைப் போல் தான் இருந்தது. ஆனால் பாலாவும் ஹஸனும் சென்று கொண்டிருப்பதோ தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு. முன்னால் பாலாஜியின் கார் செல்ல மெதுவாக அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹஸன்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் பெரிய கட்டிடங்கள் தென்படவில்லை. முற்றும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். சில விலங்குகள். பறவைகள்.

 

காட்டிற்குள்ளே என்ன வேலை? ஹஸன் இங்கு வேலைக்கு வந்த கதை மிக வித்தியாசமானது. அவன் இது நாள் வரை எதற்காக ஒதுக்கப்பட்டு வந்தானோ அதுவே இங்கு அவனை கொண்டு வந்து சேர்த்திருந்தது.

 

ஆக்ராவை தெருத்தெருவாக சுற்றிய பிறகு ஒரு லாரியில் ஏறி டெல்லி சென்று சேர்ந்தான். பெரிதாக வரவேற்பெல்லாம் இல்லை. இவனுக்காக எதுவும் எங்கும் காத்து நிற்கவில்லை. இவனும் அப்போது ஒளியில் இருக்கவில்லை. அலைந்து திரிந்து அந்த முகவரியை கண்டடைந்த போது. புது டெல்லிப் பிரவேசம் துவங்கியது.

 

கிட்டத்தட்ட பத்து பதினோறு மாதம் அங்கே தான் குப்பை கொட்டினான். பி.இ மெக்கானிகல் இஞ்சினீரிங். ஃப்ரஷ்சர். நண்பன் ஒருவனது அண்ணன் டெல்லியில் இவனுக்கு ஒரு வேலை வைத்திருந்தார்.

 

ஹஸன் ஜெர்மனில் கரைகண்டவன். கோயம்புத்தூரில் காலேஜ்ஜுக்கு சென்ற நாட்களை விட ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் இயங்கிய ஜெர்மன் பாடசாலைக்குச் சென்ற நாட்களே அதிகம். அங்கு ஜெர்மன் சொல்லித் தரும் முறையே அலாதியானது. முக்கால்வாசி ஜெர்மானிய திரைப்படங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். கரும்பு தின்னக் கூலியா என்ன? ஜெர்மனின் ர்ர்ர் ஓசை ஹஸனை கவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்திழுத்தது. இவன் ஜெர்மன் ஞானம் பலருக்கும் தெரியும். மெக்கனிக்கல் இஞ்சினீர் ஜெர்மன் கற்றிருத்தல் ஜாப் ப்ரோஃபைலில் முன்னிலை தரும் என நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். ஆனால் அதற்காக எல்லாம் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. நல்ல மதிப்பெண்களுடன் ப்ரொஃபைல் என்று ஒன்று இருந்தால் தானே முன்னிலை பின்னிலை எல்லாம். அவனுக்கு மொழிகள் பிடிக்கும். இந்தக் காரணம் ஒன்று போதாதா என்ன?

 

இந்த ஜெர்மனுக்காக மட்டுமே அவனை டெல்லி அழைத்திருந்தது. அவன் வேலை செய்யும் நிறுவனம் ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டது. அதனால் ஜெர்மனில் தருவிக்கப்படும் பல கோப்புகளை இந்தியாவில் ஆங்கிலத்தில் மாற்ற பல ஆட்கள் தேவைப்பட்டனர். பலரும் பணியில் இருந்தனர். ஆனாலும் அந்நிறுவனத்திற்குத் திருப்தி இல்லை. எஞ்சினீரிங் தெரிந்த ஒரு டெக்னிகல் ட்ரான்ஸ்லேட்டர் தேவைப்பட்டார். ஹஸனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பெரிதாக ஒன்றும் சம்பளமில்லை. வீட்டில் இருந்து ஹஸன் கோபித்துக் கொண்டு வெளியேறி இருந்ததால் வேறு வழியில்லை. தான் கண்ட உலகம் தழைகீழாய் மாறும் போது மனம் அடையும் வேதனை சிறிதல்ல. அந்த வேதனையையும் வெல்பவனே ஒளியில் நுழைகிறான்.

 

டெல்லி வாழ்கை அருமையாக இருந்தது, குறிப்பாக உணவு. மனமுடைந்தோருக்கு நல்ல உணவைப் போன்ற மருந்து வேறொன்றும் இல்லை. அதுவும் ஹஜ்ரத் நிஜாமுதீன் பக்கம் சென்றால் போதும். மனம் திருப்தி அடைந்துவிடும்.பெரிதாக ஒன்றும் விலை இருக்காது. வீட்டில் இருக்கும் சூழல் இருக்கும். அதிலும் அந்த ஷேய்க் பாய் கடை பிரியாணியும் கோழி குருமாவும் அம்மா செய்ததைப் போலவே இருக்கும். என்ன எண்ணை தான் அதிகமாய் மிதக்கும். ஒன்றும் தெரியாது. விரைக்கும் குளிருக்கும் அந்தக் கடுகெண்ணைக்கும்.

 

அய்யம்பேட்டை, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.  ஹஸனது உறவினர்கள் எல்லாம் அய்யம்பேட்டையிலும் அதனைச் சுற்றிலுள்ள பகுதிகளிலும் வசித்தனர். பச்சைப் பசேலென்ற பகுதி. இளநீருக்கும் அந்த ஊர் தண்ணீருக்கும் பெரிய வேறுபாடு தெரியாது. அப்பாவின் மளிகை கடை  ஊரிலேயே பெரியது.

 

ஹஸன் பத்தாம் வகுப்பு வரை படித்தது ஊருக்குள்ளே தான். பதினொன்றும் பனிரெண்டும் நாமக்கல்லில். கல்லூரி கோயம்புத்தூரில். பின்னர் டெல்லியில்.

 

பாலாவின் கார் நின்றது.

 

‘என்னாச்சு பாலா?’

 

’ரைட்ல இருக்கிற பார்க்கிங் லாட்ல கார நிப்பாடிடுங்க’

 

‘ஓ.கே.’

 

ஹஸன் நளினமாக வண்டிக்கு வலிக்காமல் செங்கல்களால் எழுப்பப்பட்டிருந்த லாட்டில் நிறுத்தினான்.

 

‘பாலாஜி.என்ன நீங்க, ஆஃபிஸ்கு கூட்டிட்டு போறேனு சொல்லிட்டு ஏதோ காட்டுக்கு கூட்டீட்டு வந்திருக்கீங்க. ஆர் வீ கோனா ஹண்ட்?’

 

‘யா ஆஃப் கோர்ஸ். வீ அர் கோனா ஹண்ட் ஆர் பேசன்ஸ் ஹியர்’

 

‘பாலா. போதும். உண்மையச் சொல்லுங்க’

 

‘இது தான் நம்ம ஆஃபிஸ்னு சொன்னா நம்பவா போறிங்க. கமான்’

 

’நம்பி தானே ஆகனும். சரி ஏன் அங்க கார நிறுத்திட்டு நடந்து போறோம். அங்க ஏதோ டோல் தெரிது’

 

‘ஆமா. க்ரீன் செல்குள்ள இந்த ரேஞ்சுக்கு மேல வெளி வெஹிகில்ஸ் அலவ்ட் கிடையாது. நடந்து தான் போகனும்’

 

‘க்ரீன் செல்லா?’

 

‘ஆமாம். நம்ம ஆஃபிஸ் இருக்கிற எடத்துக்குப் பேரு க்ரீன் செல்’

 

’செல்னா ஜெய்ல்ங்க’

 

‘செல்னா உயிரணுகூட ஒரு அர்த்தம் இருக்கு. டோல் வருது பாருங்க. ரெண்டு செகண்ட் டிக்கட் கேட்டுக்கு முன்னாடி இருக்கிற சர்க்கிள்ல அசையாம நில்லுங்க’

 

ஹஸனிடமிருந்து பத்து மீட்டர் தொலைவில் டிக்கட் கேட் இருந்தது. டிக்கட் கேட்டை நெருங்கியவுடன் இரண்டு நொடிகள் பாலா கூறிய அந்த வட்டத்திற்குள் நின்றான். அவனையும் அறியாமல் எண்ணங்கள் டெல்லி மெட்ரோவுக்குப் பறந்தன.’

 

அதற்கு முன் நிச்சயமாக ஹஸன் மெட்ரோ ரயில்களையும் கண்டதில்லை. மெட்ரோ நிலையங்களையும் கண்டதில்லை. தானியங்கி டிக்கட் கேட்களைக் கண்டதில்லை. குறிப்பாக பாட்டியாக்களையும் கண்டதில்லை.

 

ஹஸன் அன்று முதல் நாள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். இவன் தங்கியிருந்த பழைய டெல்லியில் இருந்து தினமும் சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த கூர்காவ்னில் இருந்தது வேலை செய்யும் இடம். ஒன்பது மணிக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலைவழியாக பேருந்தில் செல்லும் நேரத்தில் செங்கோட்டையை நூறு முறை சுற்றிவந்து விடலாம். எனவே, தினமும் மெட்ரோவில் சென்றுவிடும்படி நண்பன் ஒருவன் கூறியிருந்தான். சிறு தொலைவு ரயில் பயணம் என்றாலே ஹஸனுக்கு பயம். ஏற்கனவே சென்னையிலும் மும்பையிலும் எலெக்ட்ரிக் ரயில்களில் விழி பிதுங்கும் கூட்டங்களை கண்டதுண்டு. கூட்டம், கூச்சல், நெரிசல், விரிசல், எச்சில், மூச்சடைப்பு, திணறல், திமிரல், அழுக்கு, களைப்பு. இருந்தாலும் துணிவை வரவழைத்துக் கொண்டான்.

 

அவன் எதிர்பார்த்திருந்ததெல்லாம் வழக்கமான ரயில் நிலையங்களைத் தான். வரிசையில் நின்று டிக்கட் எடுத்து அல்லது வித்தவுட்டில் ஊரோடு ஊராக ஒரு ரயிலில் வெளியில் தலை தெரியும்படியும் சில சமயம் மொத்த உடலையும் வெளியே தொங்கவிட்டபடியும் தொற்றிச் சென்று போய் இறங்குவது. ஆனால் இங்கே வேறு மாதிரி இருந்தது. ஸ்டேஷனே பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. எங்கும் எதிலும் ஏ.சி. டிக்கட் வாங்கும் இடத்தில் நெரிசல் எல்லாம் இல்லை. விரைவாக முன்னேறும் வரிசை. பேப்பர் டிக்கட்டுக்கு பதில் ஏதோ ப்ளாஸ்டிக் டோக்கன்.

 

ஏற்கனவே இஃப்க்கோ சௌக்கிற்குச் செல்லும் ரயிலில் ஏறச் சொல்லி இருந்தார்கள். டோக்கன் வாங்கிய ஹஸன் ரயில் நிற்கும் இடங்களை தேடிக் கொண்டிருந்தான். ரயில் நிற்பது எங்கும் தென்படவில்லை. ரயில் வரும் இரைச்சலும் இல்லை. எல்லா திசையில் மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கீழ்தளம் செல்லும் படி களில் ஓடினர் சிலர் டிக்கட் கேட்டுக்கு ஓடினர். அது ஏதோ காவலாளியைப் போல் கதவை மறித்து சோதனை செய்து ஒவ்வொருவனாய் கடத்திக்கொண்டிருந்தது. ஹஸனை டிக்கட் கேட் ஈர்த்தது. டிக்கட் கேட்டை நோக்கி நடையைக் கட்டினான். அங்கே அனைவரும் தங்கள் கையில் இருந்த டோக்கனை டிக்கட் கேட்டுக்குள் செலுத்தினால் மட்டுமே கதவு திறந்தது. ஹஸனும் அவ்வாறே செலுத்திக் கடந்தான். பின்னர் மீண்டும் அருகிலிருந்த ஒரு நெரிசல் மிக்க டிக்கட் கேட்டில்  (இந்த டிக்கட் கேட்டில் மக்கள் டோக்கன்களை செலுத்தவில்லை மாற்றாக காட்டினார்கள். காட்டியவுடன் திறந்து கொண்டது) அணிவகுத்துச் சென்றான். படி கீழே இறங்கியது இஃப்க்கோ சௌக் மற்றும் வேறேதோ பெயர் என இரண்டு வழிகளை வழிகாட்டிகள் சுட்டின. ஹஸன் இஃப்க்கோ சௌக் செல்லும் ரயிலின் வழித்தடத்திற்கு வந்தான். ரயில் ஒன்று வந்து நின்றது. கதவுகள் திறந்தன. ஏறினான்.

 

அடிக்கும் குளிரில் பெட்டி நன்கு குளிரூட்டப்பட்டிருந்தது. வியர்வை எல்லாம் சிந்தவில்லை. மூச்சுத் திணரும் அளவிற்கும் கூட்டம் இல்லை. வரும் ஸ்டேஷனையும் வரவிருக்கும் ஸ்டேஷனையும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒலித்துக் கொண்டே இருந்தனர். ஹுதா சிட்டி செண்டர். இறுதி நிறுத்தம். காலியான பெட்டிகளுடன் நெருங்கிக்கொண்டிருந்தது. இறங்கிக்கொண்டான்.

 

நான்கைந்து நபர்கள்தான் இவனோடு இறங்கினர். வெளியேறும் இடத்திற்கு அவர்கள் பின்னாலே சென்றான். டிக்கட் கேட் இருந்தது. அனைவரும் தங்கள் கையில் இருந்த டோக்கன்களை செலுத்தியும் சில அட்டைகளைக் காண்பித்தும் கடந்தனர். ஹஸன் கையில் டோக்கன் ஏதும் இல்லை. கடந்த ஸ்டேஷனிலேயே செலுத்திவிட்டானே.

 

உண்மை இதுதான்.  டோக்கன் வாங்கிய ஸ்டேஷனில் ரயில் வரும் தளத்திற்குள் அனுமதிக்கும் டிக்கட் கேட்டில் டோக்கனைக் காண்பிக்க வேண்டும். இதில் செலுத்தும் வசதி இருக்காது. பின்னர் தான் செல்லும் பகுதிக்குச் செல்லும் ரயிலில் ஏறி பயணிக்கலாம். பிறகு அந்த ஸ்டேஷனில் ரயிலைவிட்டு இறங்கி அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்கும் டிக்கட் கேட்டில் இருக்கும் உண்டியல் போன்ற அமைப்பில் டோக்கனைச் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும்.

 

டோக்கன் வாங்கினான். பிறகு அங்கிருந்து வெளியே செல்லும் டிக்கட் கேட்டில் போய் டோக்கனைச் செலுத்தினான். பின்னர், நிலையத்தை ஒரு சுற்று சுற்றிக் கூட்டம் நிரம்பியிருந்த ரயில் வரும் தளத்திற்குள் அனுமதிக்கும். டிக்கட் கேட்டுக்குச் சென்றான். கூட்டம் அதிகாமாய் இருந்ததால் அடிக்கினாற் போல் மக்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக டோக்கன்கள் காட்டப்பட்டுக் கொண்டே இருந்ததனால் டிக்கட் கேட் கதவு திறந்தபடியே இருந்தது. டோக்கனே இல்லாமல் கடந்து தன் இடத்திற்குச்  செல்லும் ரயிலில் டோக்கன் இன்றியே பயணித்து இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இறங்கினான். அங்கிருந்து வெளியேறும் டிக்கட் கேட்டுக்குச் சென்றான். கையில் டோக்கன் இல்லை. என்ன செய்யவென பையன் விழித்துக் கொண்டிருக்கிறான். இது தான் கதை.

 

அங்கே ஹஸனது மூளை இக்கதையைப் பற்றியெல்லாம் துளியும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அது அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தது.

 

டோக்கன் இருந்தால் மட்டுமே செல்ல இயலும். அதற்குத் தேவையான எண்ணங்கள் மட்டும் தனியே வடித்தெடுக்கப்பட்டன.

 

ஒன்று, டோக்கன் வேண்டும். அது இப்போது இல்லை. திருடவெல்லாம் முடியாது. இவன் சரிப்படமாட்டான்.

 

இரண்டு, டிக்கட் கேட்டைக் குதித்துத் தாண்டி ஒரே ஓட்டமாக ஓட்டம் எடுக்க வேண்டும். அதுவும் இவனுக்குச் சரிப்பட்டு வராது.

 

மூன்று, ஸ்டேஷனில் வேலை செய்யும் எவரிடமாவது உண்மையை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது இல்லை அபராதம் கட்டுவது. இது இவனுக்கேற்ற யோசனை தான். ஆனால் காலமும் கரன்சியும் ஒத்துவராது. இரண்டும் பற்றாக்குறை இவனிடம். ஏற்கனவே மணி எட்டு ஐம்பது. பர்ஸில் மணியோ நூற்றி ஐம்பது. இவன் வேலை செய்யும் இடம் ஜெர்மனியர்களுடையது. மற்ற இடங்களில் நேரம் தவறினால் அரைவிடுப்பு இல்லை நாள் விடுப்பு தான். இங்கோ முழு முழுக்கு. இப்படி முதல் நாளே வேலைக்கு தாமதமாக வருபவர்கள் நமக்கு நிச்சயம் தேவையில்லை என்று கூறி அனுப்பி விடுவார்கள். பாவம் இவனுக்கு வேறு வேலை கிடைக்குமா என்று கூடத் தெரியவில்லை. வீட்டைவிட்டு வேறு வெளியேறி இருக்கிறான். பையும் காலி.

 

நான்கு, நெரிசலில் எப்படி டோக்கன் இல்லாமல் நுழைந்தானோ அதே வழிமுறையில் வெளியேற வேண்டும். முன்னால் போவோரின் டோக்கனிலேயே நெரித்துக் கொண்டு செல்ல வேண்டும். இதில் டிக்கட் கேட் கதவு அடைத்துக் கொள்ளும் வேகத்தையும் விஞ்சி செயல்பட வேண்டும். இது ஓரளவிற்கு இவனுக்கு தகுந்தது. ஆனால் இந்த ஸ்டேஷனிலோ கூட்டம் இல்லை. ஒற்றை ஆளாய் நம்மாள் நின்று கொண்டிருக்கிறான். இருந்தாலும் வாய்ப்பு உள்ளது. இன்னும் இரண்டொரு நிமிடத்தில் மற்றொரு ரயில் வரும் வரை காத்திருந்தால் எவராவது வருவார். சட்டென்று சென்று விடலாம்.

 

ஒரு நிமிடம் கடந்திருக்கும். மற்றொரு ரயிலில் இருந்து இருவர் வெளியேறினர். ஒரு முதியவர். மற்றொரு பெண். முதியவர் நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தார் பெண்ணோ குதிரைவேகத்தில் கடந்துவிட்டாள். யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை. பெண்ணின் பின்னே போ. தாயின் பின்னே கன்று போல் பின்னால் ஓடினான்.

 

அந்தப் பெண்ணிடம் டோக்கன் இல்லை. ஏதோ கார்ட்டை காண்பித்தாள். ஸ்கேன் செய்தது. கதவு திறந்தது.

 

ரேஷன் கடை, இலவசம் கொடுக்கும் இடம், பதிவு செய்யும் இடங்களில் எல்லாம் இவன் காத்திருந்தது கிடையாது. ஆனால் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இந்தியன் அல்லவா ஜீனிலேயே பதிந்திருக்கவும் வாய்ப்புண்டு. தடதடவென அப்பெண்ணை உரசிக் கொண்டு நொடிப்பொழுதில் கடந்தான். கடந்து 30 நொடிகளில் கதவுகள் சாத்தப்பட்டது. சாதித்துவிட்ட வெறி கண்ணில்.

 

ஆமாம் வழிவிட்ட அந்த பெண்ணை எங்கே? திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண் கீழே விழுந்து கிடந்தாள். இதுவரை அத்தனை கெட்ட வார்த்தைகளை ஒருக்கே கண்டதில்லை. அபிஷேகமே நடந்தது. காதில் அவன் வாங்கவே இல்லை. ’மாஃப்கீஜியே முஹ்தர்மா’ என கூறிவிட்டு ஓடிவிட்டான்.

 

’யூ ஆர் வெல்கம் ஹஸன் டு தி க்ரீன்’

 

தி க்ரீனில் டிக்கட் கேட் டர்ன்ஸடைல் வரவேற்றது.

 

’டோர் ஓபனாகி ரொம்ப நேரம் ஆச்சு. கெட் இன்’.  அப்பெண்ணின் முகம் சிறிது சிறிதாய் விலகி பாலா காட்சியளித்தான்.

 

‘ம். யெஸ் யெஸ் பாலா. ஹியர் ஐ பாஸ்’ கடந்து வந்தான்.

 

 

டோலில் இருந்து சிறிது தொலைவு நடந்தவுடன் கொஞ்சம் ஆள்நடமாட்டம் தெரிந்தது. வருவதும் போவதுமாக சில வாகனங்கள் இருந்தன. பெரும்பாலும் சைக்கிள்களாக இருந்தன.

 

‘ஹஸன். வெல்கம் டூ தி க்ரீன். சைக்கிள் எடுத்துக்கோங்க’ என்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களை கைகாட்டினான்.

 

‘என்ன இது’

 

‘கோ க்ரீன் வித் சைக்கிள்ஸ் மேன்.’

 

ஆளுக்கொரு சைக்கிளில் ஏறிக் கிளம்பினர்.

 

‘பாலா இன்னும் எவ்ளோ தூரம் போகனும்? கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஏதும் பில்டிங்ஸ காணோம்’

 

‘பாஸ் தட்ஸ் சர்ப்ரைஸ்’

 

பத்து நிமிடம் சைக்கிள் சென்றிருக்கும். ஹஸனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்திருந்தது. கால்கள் களைப்படைந்து கொண்டிருந்தன. என்ன இருந்தாலும் சிறு வயதில் தொட்டதல்லவா?

 

திரும்பிப் பார்க்காமல் விரைவாக அலுவலகத்தை ஒரு வழியாக கண்டுபிடித்து வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான்.

 

‘வா ஹஸன். மொத நாளே பத்து நிமிஷம் லேட்’ ஹஸனை வேலையில் சேர்த்துவிட்ட நண்பனின் அண்ணன் டோஸ் கொடுத்தார்.

 

‘இல்ல சார். ஃபர்ஸ்ட் டைம். ஆஃபிஸ் கண்டுபிடிச்சு வந்ததால கொஞ்சம் லேட்’

 

‘டோண்ட் கிவ் மீ எக்ஸ்ப்ளனேஷன். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். டேக் கேபின் நம்பர் 17. இப்ப எல்லார்கிட்டயும் இண்ட்ரட்யூஸ் ஆகிக்கோ’

 

எல்லாரிடமும் ஹஸன் போய் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு பதினேழாம் கேபினில் அமர்ந்து கொண்டான். முதல் நாள் தானே என்ற  சலுகை எல்லாம் கிடையாது. வந்த முதல் நாளே பார்க்கவேண்டிய வேலைகள் குவிந்து கிடந்தன. கோப்புகளை ஒவ்வொன்றாய் எடுத்து புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான். வெளியே இருவர் கோபமாக பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. ஏதோ தாமதமாக வந்தவரிடம் விசாரனை நடந்து கொண்டிருந்தது. நீண்ட விவாதத்திற்குப் பின் அமைதி திரும்பியது. தாமதமாக வந்தவர் ஒன்று உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லை வெளியே திரும்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

 

‘ஹஸன். உன் இன்சார்ஜ் வந்துட்டாங்க. இப்ப அவங்க தான் இங்க ட்ரான்ஸ்லேஷன் ஹெட்.. ஷீ இஸ் நாட் டெக்னிகல் ட்ரான்ஸ்லேட்டர். ஆனா எல்லாரும் நல்லா இருக்குனு சர்ட்டிஃபிகேட் கொடுக்கிற அளவுக்கு திறமை. இனி அவங்க தான் உன்னைய கைட் பண்ணுவாங்க. கேபின் 3. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் பாரு.’ அண்ணன் சொல்லிவிட்டுப் போனார்.

 

அரை மணி நேரம் சென்றது. கேபின் மூன்றில் எட்டிப்பார்த்தான். எக்ஸ்க்யூஸ் மீ கேட்டான். உள்ளே அமர்ந்திருந்தவர் தலையை நிமிர்த்தி இறுகிய முகத்துடன் ‘கமின்’ என்றார்.

 

ஒரு நிமிடம் உயிரே அவனிடம் இல்லை. தஞ்சாவூருக்கே சென்று திரும்பியது. ஒளி பறிபோனது. இனியும் இந்த இடத்தில் வேலையில் இருப்பது முடியாத காரியம் என தீர்மானித்துக் கொண்டான். விதி முடிந்தது.பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டியது தான். உள்ளே நுழையாமல் அப்படியே திரும்பினான்.

 

’வாட்ஸ் த மேட்டர். ஆப் கோன்?’ உள்ளிருந்து குரல் வந்து அவனை நழுவவிடாமல் செய்தது.

 

‘மேம் யூ ஸீம் டிஸ்டர்ப்ட். ஐ வில் கம் லேட்டர்’ என கொண்டு வந்திருந்த ஃபைலால் முகத்தை மறைத்துக் கொண்டு நழுவப்பார்த்தான்.

 

‘ஐம் டெரிப்ளி சாரி. சுப்ஹ் மே ஏக் ஸம்ஸ்யா. தும் கமின்’

 

‘மேம். ஐம் ஹஸன். நியூலி அப்பாய்ண்டட் டெக்னிகல் ட்ரான்ஸ்லேட்டர்’

 

‘அச்சா. மே ஹூன் ஸ்மிர்தி. ஸ்மிர்தி பாட்டியா’

 

கை குலுக்கப்பட்டது. ஹஸன் விலகி ஓடுவதிலேயே குறியாக இருந்தான்.

 

‘காலைல ஒருத்தன் மெட்ரோல என்ன இடிச்சுத் தள்ளிட்டு ஓடிட்டான். அதான் ஒரே டென்ஷன் நீங்க தப்பா ஏதும் நினச்சுக்காதிங்க. இனிமே நாம ஒன்னா தான் வேல பாக்க வேண்டிவரும். உங்க காபின்ல ஒரு ஃபைல் இருக்கும் பாருங்க கொஞ்சம் எடுத்து வர முடியுமா?’ தெள்ளத் தெளிவான உச்சரிப்புகளுடனான ஹிந்தி. செங்ஹிந்தி. ராஜஸ்தானாக இருக்க வேண்டும்.

 

ஹஸனுக்கு வேர்க்கத் துவங்கி இருந்தது. காட்டிக் கொடுத்துவிடாமல் அவ்வப்போது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான். ஓடிச் சென்று அந்த ஃபைலை எடுத்துவந்து கொடுத்தான்.

 

’தாங்க் யூ ஹஸன்’

 

‘நோ மென்ஷன்’ வெளியில் காலை எடுத்து வைத்தான்.

 

‘ம். ஒன் மினிட். நீங்க எங்க தங்கி இருக்கீங்க?’

 

’ஓல்ட் டெல்லில. ஃப்ரண்ட் கூட.’

 

‘ஃப்ரண்டா? நம்ம ஆஃபிஸ்ல வேல பாக்குறாரா?’

 

‘இல்ல மேம். ஸ்கூல் ஃப்ரண்ட். இங்க சிவில் சர்விஸ் கோச்சிங் பண்ணிட்டு இருக்கான்’

 

’இஸ் இட். ஆஃபிஸ்கு எதில வந்திங்க?’

 

‘இன்னைக்கு மொத நாள் இல்லயா அதான் ஆஃபிஸ கண்டுபிடிச்சு விட ஃப்ரண்டே வண்டில கூட்டீட்டு வந்தான்’ வியர்த்து சட்டை தொப்பலாக நனைந்தது.

 

‘ஓ. ஐஸீ. மெட்ரோல வரலாமே. ட்ராஃபிக் அதிகமா இருக்கும். பாருங்க எவ்ளோ டயர்டா இருக்கீங்கனு’

 

‘கிவ் மீ சம் டைம் மேம் ஐ வில் திங்க் எபௌட் இட்.’

 

‘ஆஃப் கோர்ஸ்’

 

வெளியேறினான். கை கால்கள் நடுங்கின. பற்கள் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. பேச்சேதும் தொண்டையைவிட்டு வரவில்லை. அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது.

 

‘என்ன ஹஸன் இந்த க்ளைமேட்லயும் உங்களுக்கு இப்டி ஸ்வெட் ஆகுது’

 

‘ஹ்ம். சைக்கிள் மிதிச்சு ரொம்ப நாள் ஆச்சுல பாலா.  தட்ஸ் ஒய்’

 

 

‘மைண்ட் ப்ளோயிங். என்ன இது?’

 

‘நம்ம ஹெட்குவாட்டர்ஸ். பா தி நியூக்ளியஸ்’

 

சைக்கிளில் சென்ற ஹஸன் பெரிய பெரிய கட்டிடங்கள் தெரிகின்றனவா என்று துலாவிக்கொண்டே போனான். ஒன்றும் கண்ணில் அகப்படவில்லை. செல்லும் வழியில் சில இடங்களில் சிறு சிறு அமைப்புகள் தென்பட்டன. அனைத்தும் பூமிக்கடியில். இறுதியாக ‘Paw, The Nucleus’ என அறிவிக்கும் பகுதிக்குள் நுழைந்தான். பிரம்மித்துப் போனான்.

 

பூமிக்கடியில் கிணறுகளைப் போல் கட்டிட்டங்கள் கட்டப்பட்டிருந்தன. வளையம் வளையமாக சுற்றிலும் கட்டிடங்கள் நடுவில் பெரும் பள்ளம். மேலே எழும்பி நிற்கவேண்டிய கட்டிடங்களை அப்படியே பூமிக்குள் பதித்திருந்தனர். பறவைக் கோணத்தில் இருந்து பார்த்தால் புலியின் காலடித்தடம் போல் இருக்கும். நடுவில் ஒரு பெரிய கிணற்றுக் கட்டிடம் அதனைச் சுற்றிலும் ஐந்து குறுங் கிணற்றுக் கட்டிடங்கள். இதைத் தான் ஆங்கிலத்தில் Paw என்று அழைக்கிறார்கள். இக்கிணறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே காணும் பொழுது அதன் வடிவம் என்னவென்றே புலப்படாது. மத்தியில் இருக்கும் கிணறு ஜாய்ஸ்டிக் வடிவத்திலும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து கிணறுகளும் வெவ்வேறு அளவுள்ள நீள் வட்ட வடிவிலும் இருந்தன. குறிப்பாக ஐந்தாம் கிணறு மிகவும் சிறியதாக இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்து புலியின் தடத்தை உண்டு பண்ணிண.

 

’உங்க பேக்க ஸ்கேன் பண்ணனும். லீவிட் இன் த ஸ்கேனிங் மெஷின்’

 

‘ஆஃப் கோர்ஸ்.’ ஸ்மிர்தி தன் கைப்பையைக் கழற்றி அந்த ஸ்கேனிங் மெஷினில் வைத்தாள். செக்யூரிட்டிகள் கையில் இருந்த சாதனத்தால், உள்ளே நுழைபவர்களை பரிசோதித்து அனுப்பினர்.

 

டெல்லி கானட் ப்ளேஸின் செண்ட்ரல் பார்க்குக்கு ஹஸனை அழைத்து வந்திருந்தாள் ஸ்மிர்தி. சிறிது நேரம் அங்கு அமர்ந்து ஏதேதோ பேசிவிட்டு பாலிகா பஜாருக்குள் அழைத்துச் சென்றாள்.

 

சோதனைக்குப் பின் பஜாருக்குள் நுழைந்தனர். பூமிக்கடியில் ஒரு மார்கெட். சுமார் முந்நூறு கடைகள் இருக்கும். துணிக்கடைகளும் எலெக்ட்ரானிக் கடைகளும் அதிகம். புதியதோர் உலகிற்குள் நுழைந்ததைப் போல் இருந்தது. கடைகளின் முன் நின்று கூவிக் கூவி தங்கள் கடைக்குள் இழுத்துக் கொண்டிருந்தனர். உண்மை. இழுத்துக் கொண்டு தான் இருந்தனர். ஒரு கடை முன் ஒரு நொடி நின்று எதையாவது பார்த்தால் போதும். உள்ளே தள்ளிக்கொண்டு சென்றுவிடுவர். இந்த பஜாரில் இளசுகள் கூட்டம் அதிகம்.

 

’மேம் ஒய் ஆர் வீ ஹியர்?’

 

’ஷாப்பிங்’

 

‘ஷாப்பிங்?’

 

‘ஹான். தரஹ் நா? தென் டேட்டிங்’

 

‘டேட்டிங்? கோன் கே ஸாத்?’

 

‘தும் கோ’

 

’மேம்.’

 

‘ஹரே ஹஸன் பேபி. என்ன யார் இது. பஜார்கு எதுக்கு யார் வருவாங்க? ஷாப்பிங் தான்’

 

‘ஓகே மேம்.’ வாயைத் திறக்காமல் கூடவே வந்தான். ஒரு கடை முன் நின்றாள். அந்தக் கடையில் இருந்த ஆடைகளையும் ஹஸனையும் மாறி மாறி பார்த்தாள். பின் உள்ளே நுழைந்தாள்.

 

‘ஹஸன். சைஸ்?’

 

’எனக்கா?’

 

‘யா. சைஸ்?’

 

‘ஷர்ட் 40 மீடியம். பேண்ட் 32’ பிறகு சில டீ சர்ட்களையும் ஜீன்ஸ்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

‘மேம். இதெல்லாம் எதுக்கு?’

 

‘உனக்கு தான். உன் ட்ரெஸ்ஸைப் பாரு. சாமியார் மாதி. ஒரு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் வேணாம்?’

 

ஹஸன் இந்த உடை விசயங்களில் எந்த ஈடுபாடும் காட்ட மாட்டான். கல்லூரியில் படிக்கும் போது எப்போதும் அவன் நீலச் சட்டை நீலப் பேண்ட்டில் தான் இருப்பான். படித்தது மெக்கனிகல் சாண்ட்விச் கோர்ஸ். இது ஐந்து வருடப் படிப்பு. தினமும் கல்லூரிக்குள் இயங்கிய தொழிற்சாலையில் தான் அரை வேளை பாடம். காலையில் எழுந்து அவசர அவசரமாக குளித்து முடித்து அந்த நீல உடைக்குள் நுழைபவனுக்கும் இரவில் மட்டுமே விடுதலை. இப்படியே சென்றதால் அந்த உடைக்கும் இவனுக்குமான நெருக்கம் அதிகமாகி கல்லூரிக்கு கட்டை கொடுத்துவிட்டு ஊர் சுற்றும் பொழுதிலும், விடுமுறை தினங்களிலும், ஏன் வீட்டுக்குச் செல்லும் வேளையிலும் கூட அதுவே அவனது அடையாளமாகிப் போனது. இன்னொன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்த நீல அங்கியினுடன் எப்போதும் கழுத்தில் ஐ.டியும் தொங்கிக் கொண்டே இருக்கும். ஏனென்று கேட்டால் பதில் இவ்வாறு வந்து விழும். ‘டேய் நாமெல்லாம் ஊர் சுத்திக்கிட்டே திரீர ஆளு. தீடீர்னு நமக்கு ஏதாச்சும் ஆச்சுனா நாம யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்க மத்தவங்களுக்கு ஈஸியா இருக்கும் பாரு. அதுக்குத் தான்.’

 

இப்போது நீல உடைக்கு விடை கொடுத்து விட்டான். மஞ்சள் கலர் பாலிஸ்டர் சட்டை. தொள தொள ப்ரவ்ன் பேண்ட். தன் போக்கில் வளர்ந்த முடி, மூன்று நாள் தாடி, நோக்கியா 1100 போன், வீகேஸி ப்ரைட் செருப்பு. வாழ்வது இருபத்தி ஓறாம் நூற்றாண்டு. பிறகு ஏன் சொல்லமாட்டாள்.

 

‘உனக்கு குளிரல?’

 

என்ன கேள்வி இது. குளிரலையா. இந்த வடநாடு குளிரைக் கொண்டு குரல்வளையை நெரித்து வரவேற்பளித்ததை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா? என்ன இப்பொழுதெல்லாம் விரைக்கும் குளிரில் குளித்துப் பழகியதால் அவ்வளவாக தெரிவதில்லை. அவ்வளவு தான்.

 

‘லைட்டா’

 

சொன்னது தான் தாமதம். ஒரு ஓவர் கோட் கடைக்கு கூட்டிச் சென்றாள். அவனுக்கு பொருத்தமான கருப்பு நிற லெதர் ஜாக்கட் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். அப்படியே அதே கடையில் ஸ்னீக்கர்ஸ் ஷூ, லெதர் கையுறை. எல்லாவற்றையும் கொடுத்து துணி மாற்றும் அறையில் சென்று மாற்றிவரச் சொன்னாள்.

 

ஹஸன் தயங்கினான். ‘மேம். என்கிட்ட இவ்வளவு பணம் இல்லை. இதெல்லாம் எனக்கெதுக்கு?’

 

‘இடியட். ஹூ தெ F….k ஆஸ்க்ட் யூ ஃபார் மணி.’ அவள் கத்திய கத்தில் பஜாரே அவர்களை திரும்பிப் பார்த்தது. ஹஸன் நிற்கவில்லை. நேரே குடுகுடுவென அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தான்.

 

கனன்று நின்ற ஸ்மிர்தி, ஹஸன் அருகே வந்தாள். மூச்சு சூடாக வெளிப்பட்டது. அவன் கண்களை நேருக்கு ஊடுருவினாள்.  அவன் கண்ணை வேறு திசையில் செலுத்தினான். அவன் அணிந்து வந்திருந்த லெதர் ஜாக்கட்டை தடவினாள். பெண்ணின் கை தீண்டுவதை அவன் அனுமதிக்கவில்லை. விலகி நின்றான். அவனை நேரே பார்த்தாள்.’நவ் யூ லுக் மேன்லி ஹஸன் பைய்யா.’

 

‘ஹஸன். இது தான் நம்ம ஹெட்குவட்டர்ஸ். நியூக்ளியஸ்.’ பாலாவின் குரல்.

 

ஹஸன் கண்களை மூடி தன் கருப்பு ஜாக்கட்டை தழுவிக் கொண்டே சொன்னான். ’சான்ஸே இல்ல’

 

 

’ப்ளீஸ் பீ ஸீட்டட்’

 

மத்திய கிணற்றில் இருந்த நான்காம் தள அறை ஒன்றில் பாலாவும் ஹஸனும் இருந்தனர். அறையின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது. ஏழடி தான் இருக்கும். ஆறு சுவற்றைக் கொண்டு தேன்கூட்டு அறை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. சுவறு செங்குத்தாக இல்லை. ஏழெட்டு டிகிரி வெளிப்புறமாக சாய்ந்திருந்தது. சாய்ந்திருந்த சுவற்றில் புல் அழகாக வளர்க்கப்பட்டிருந்தது. இந்த புல்வெளியின் ஆங்காங்கே ப்ளக் பாயிண்டுகள் தெரிந்தன. கீழிருந்த தரை கூட புல்வெளிதான். அறை முழுதும் சிறு சிறு தொட்டியில் செடிகள் இருந்தன.  எங்கும் செடி கொடிகளுடன் பசுமையாக இருந்தது. அறையில் இருந்த சாமன்கள் அனைத்தும் தரையில் அமர்ந்து உபயோகப்படுத்தும் முறையில் இருந்தன. இருக்கைகளும் நாற்காலிகளும் தரை உபயோகத்திற்கேற்றாற் போல் இருந்தன. கணினி என எதுவும் தனியாக இல்லை. அதற்கு பதில் க்ரீனி இங்கும் இருந்தது. அதே க்ரீனி. இன்னும் சில நாட்களில் ஹஸனுடைய வாகனத்திலும் வியாபித்துவிடும். எல்லா சுவற்றிலும் கிரீனி தோன்றி வரவேற்றது. இதுவே ஹஸனின் வொர்க் ஸ்டேஷன் என்பதைக் காட்டியது.

 

அந்த அறை மிகவும் இதமாக இருந்தது. குளிரூட்ட ஏ.சியும் இல்லை. வெப்பமூட்ட ரூம் ஹீட்டரும் இல்லை. காற்றில் அபரிமிதமான ஈரப்பதம் இருப்பதை உணர முடிந்தது. ரகசியம் சுவற்களுக்குப் பின்னே ஒளிந்திருந்தது. உண்மையில் புல்வெளி இருக்கும் சுவர் சுவரே அல்ல. உண்மையான தண்ணீர் தாக்காத சுவர் உள்ளே இருக்கிறது. அந்த உண்மையான சுவற்றின் மேலே ஒரு லேயர் அதற்கும் மேல்  தண்ணீர் சுமக்கும் சிறு கேப்பிலரி பைப்கள். அதற்கும் மேல் சிறிது மண். அதற்கும் மேல் ஒரு லேயர். அதற்கு மேல் புல்வெளி. புல்லுக்குத் தேவையான சத்துக்களும் அனைத்தும் கேப்பிலரி பைப்கள் சுமந்து வந்து மண்ணில் விட்டுச் சென்றன. அவற்றிலேய மற்றொரு பைப்கள் குடிநீரை சுமந்து வந்தன. தாகிக்கும் போது ஹூக்கா பைப் போல இருந்த ஒன்றில் இருந்து உறிஞ்சி தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

இப்படி இருந்தால் வீண் விரயம் ஆகதல்லவா? அதேபோல் கட்டிடத்தின் கழிவு நீர் பெரும் பைப்களில் நிரப்பப்பட்டு மேலிருந்து கிணற்றின் அடியில் இருக்கும் டர்பைனில் விழவைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பின்னர், மீண்டும் அந்தக் கழிவு நீர் சுத்தப்படுத்தப் பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு பல வேலைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. இருமுறை சுழற்சி செய்யப்பட்ட நீர் மறுபடியும் பூமிக்குள் செலுத்தப்படுகின்றது. இது போக தி க்ரீன் செல்லில் சூரிய உற்பத்தியும் நடக்கிறது. க்ரீன் செல் தன் தேவைகளுக்கு யாரையும் சாரா தன்னிறைவு பெற்ற செல்.

 

அதே சுவற்றுப் புல்வெளிகளில் சில இடங்கள் போலி புல் அமைப்புகள் தென்பட்டன.  இவற்றை அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள இயலாது. அவற்றை தொட்டவுடன் ஜன்னலாய் திறந்து கொண்டன. போலி புல்வெளிக்குள் கண்ணாடி ஜன்னல்கள். பகலில் விளக்குகள் இன்றியே இயங்க முடிந்தது. பல்வேறு கண்ணாடிகளைக் கொண்டு தரையில் இருந்து சூரிய ஒளி கீழ் தளம் வரை கடத்திவரப்பட்டது. நமக்கு தேவைப் பட்ட அளவில் அறையை ஒளிர வைத்துக் கொள்ளலாம்.

 

இவை அனைத்தையும் க்ரீனியும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. உடலின் தேவைகளையும் மனதின் தேவைகளையும் சரியே கவனித்துக் கொண்டிருந்தது. தன்னை இயக்கும் முறையை மீண்டும் சொல்லிக் கொடுத்தது.

 

ஒளியற்ற வாழ்க்கைக்கும் இந்த ஒளிவுற்ற வாழ்கைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணுங்கள். ஒளியற்ற மனிதன் தேவைகளை பூர்த்தி செய்ய வழியைத் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒளிவுற்ற மனிதனோ புதிது புதிதாய் தேவைகளை தேடிக்கொண்டிருக்கிறான்.

 

இரண்டு மணிநேரம் ஓடியிருந்தது. அறிவிப்பு ஒன்றை க்ரீனி ஒளிபரப்பியது.

 

’வெல்கம் ஹஸன். வெல்கம் டூ தி க்ரீன். வீ ஆர் வெய்ட்டிங் ஃபார் யூ. பாலா வில் கைட் யூ.’

 

 

ஹஸனை அறையைவிட்டு வெளியே அழைத்து வந்தான் பாலா. அவன் வெளியே வந்த மாத்திரத்தில் அறைக்கதவு சாத்திக் கொண்டது. விளக்குகள் அணைந்தன. அந்த தளத்தில் சில அறைகளைக் கடந்தவுடன் பூங்கா போன்ற ஒன்று காட்சியளித்தது. பெரிய மரங்கள் எல்லாம் இல்லை. மொகலாயர்களின் கட்டிடங்களில் இருக்கும் பூங்காக்களைப் போல் இருந்தது. பூச்செடிகள். சிறிய காய்கனிச் செடிகள். கொடிகள் என இருந்தது. அதனைக் கடந்தவுடன். ப்ரேக் பாய்ண்ட் என போர்ட் தொங்கியது. பாலா அங்கே கூட்டிச் சென்றான். ப்ரேக் பாய்ண்ட்.

 

ஹஸன் இந்தக் கட்டிடத்திற்கு உள்ளே வந்தபொழுது நேரே சைக்கிளிலேயே ஐந்தாம் தளத்திற்கு வந்துவிட்டான். ஐந்தாம் தளத்திற்கு கீழே சைக்கிளில் செல்ல முடியாது. எல்லாம் பிரேக் பாய்ண்ட் தான்.

 

ப்ரேக் பாய்ட் என்பது பாலம் துவங்கும் இடம். நீண்டு சுருங்கக்கூடிய பாலம். எஸ்கலேட்டர் போன்று மேலே கீழே செல்லும் படிகள்.  கை வைக்கும் இடத்தில் ஒரு கணினி. ஹஸனும் பாலாவும் போய் அருகில் நின்றனர். ’ஆர் யூ ஆஃப் டூ நியூக்ளியோலஸ். ஆம் ஐ கரக்ட்?’ என வினா எழுப்பியது. பாலா ஆம் என்றான். அவர்கள் நின்ற தளத்திற்கு கீழே  பாலம் விரிந்தது. அநேகமாக பதினொன்றாவது தளமாக இருக்கக்கூடும். அங்கே இருந்த மற்றொரு ப்ரேக் பாய்ண்ட்டில் இருந்த பாலத்தில் இணைந்தது. கீழே தானாக படிகள் இறங்கின. அவர்கள் படிகளில் கீழிறங்கி அந்த இரண்டாம் பாலத்திற்குச் சென்றனர். கிணற்றின் நடுவே பாலம் அந்தரத்தில் ஜாலம் காட்டியது. அந்த இடத்தில் இருந்து பார்ப்பதற்கு ஒரு பெரும் மரத்தின் வேரைப் போல் இருந்து அந்தக் கிணற்றின் அமைப்பு. மேலே அகலமாகவும் உள்ளே இறங்க இறங்க குன்றியும். கிணற்றின் மேலே இருந்த திறப்பு முழுவதும் மிகவும் மெல்லிய ஆனால் திடமிக்க நானோ ஃபைபரின் மூலம் இழைக்கப்பட்ட மூடியால் மூடி இருந்தது. வெளியே உள்ளவை அனைத்தும் திறந்திருப்பதைப்  போல் அப்பட்டமாகத் தெரிந்தன. வானத்தில் இருந்து ஸ்லோ மோஷனில் பனி மெல்ல வந்து அந்த மூடியில் விழுந்து கொண்டிருந்ததை வைத்துத்தான் மூடி இருக்கிறது என அறிந்துகொள்ளமுடிந்தது. அவற்றை தேவைப் பட்ட நேரத்தில் திறந்தும் கொள்ளலாம். தற்போது பனிகாலம் என்பதால் மூடியிருந்தது. பூமிக்கு உள்ளே இருக்கும் கதகதப்பை வெளியேவிடாமல் வெளியே இருக்கும் பனியை உள்ளே விடாமலும் இந்த நானோ மூடி பாதுகாப்பளித்தது.

 

நியூக்ளியோலஸில் இருந்த பாலம் ஐந்தாம் தளத்தில் இருந்த பாலத்துடனான இணைப்பை அந்தரத்தில் துண்டித்தது. பின் மெதுவாக கீழே இறங்கியது. அதே தளத்தில் தன் எதிரே இருந்த மற்றொரு ப்ரேக் பாய்ண்டில் இணைந்து கொண்டது. நகரும் படிகள் நகரும் தளமாகின. எதிரே இருந்த ப்ரேக் பாய்ண்ட்டில் இருவரும் வந்திறங்கினர்.

 

நியூக்ளியோலஸ் அறைக்கும் சென்றனர்.

 

அதென்ன நியூக்ளியோலஸ்? தி க்ரீனில் எல்லாம் இயற்கை தான். பெயரிடுவதிலும் சரி. Cell Wall, Endoplasmic Recticulam, Vacuoles, Ribosomes, Golgi Bodies, Chloroplasts, Mitochondria என ஏகப்பட்ட இடங்கள் தி க்ரீன் செல்லில் இருந்தன. There’s nothing beyond Cosmos. பேரண்டத்திற்கு வெளியே ஒன்றுமில்லை. எல்லாம் இந்த பேரண்டத்திலேயே உள்ளன. அவை வெளிப்படையாகவும் தோன்றாலாம் இல்லை குறிப்பிலும் கிடைக்கலாம். உண்மையில் நாம் செய்ய வேண்டியது அவற்றை கண்டடைவது மட்டுமே. அவற்றைக் கண்டு இயற்கையுடன் ஒட்டி வாழ்வது இயற்கை நம்முடன் ஒத்துழைப்பதற்கு மிக மிக அவசியம். இப்படி இயற்கையுடன் ஒன்றி வாழும் வித்தையை கற்றுக்கொண்டால் ஒழிய அது நம்முடன் இசைபடாது. தொழில்நுட்பத்தையும் இயற்கைக்கு ஏற்றாற் போல் தகவமைத்து இவ்வாறு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே உலகில் உயிர்கள் தழைக்கும். இல்லையேல் சென்ற சில நூற்றாண்டுகளில் மனித இனம் சம்பாதித்துக் கொண்டதுதான் ஒத்துழைப்பை மிஞ்சி நிற்கும். தி க்ரீனின் மந்திரச் சொல்.இதுவே. இந்தத் தாரக மந்திரம் தி க்ரீனின் ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலித்தது.

 

அறைக்குள் தி க்ரீனின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் சந்தித்தான். மொத்தம் பதினோரு துறைகள் தி க்ரீனுள் இயங்கி வந்தன. ஹஸன் அதில் க்ரியேட்டிவிடி பிரிவில் பணிசெய்யப் போவது தெரிந்தது. பாலா ஹ்யூமன் ரிலேஷன் துறையில் இருந்தான்.

 

இங்கே பணிகளும் அப்படித்தான். மிகவும் வித்தியாசமானது. நம்முடைய துறை என்பது பெயரளவிற்கே. உண்மையில் நாம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்றிக் கொள்ளலாம். ஆனால் கொடுத்த ப்ராஜக்ட்டை முடிக்க வேண்டும். அவ்வளவே.

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: