ஒளி 222 கிராம்: பகுதி 14

 

‘ஹஸன் என்ன இது? ஆளே மாறிட்டிங்க? நாமக்கல்ல ஸ்கூல்ல டையக் கழட்டி கயறா மாத்தி செவர் ஏறிக் குதுச்சு வெளிய போயி வாத்துக்கறிய தின்ன கிழிஞ்ச பேண்ட்டோட போன ஹஸனா இது?’

 

‘நீங்க வேற ரஞ்சித். உங்களுக்கு வேறெதுவும் நினவிருக்காதா?’

 

’ஆமா காம்ரேட். இப்ப எதுக்கு மதுரைக்கு வந்தீங்க?’

 

‘உங்கள பாக்குறதுக்குத் தான்னு வச்சுக்கங்களேன்’

 

‘இல்ல நீங்க சொல்லித் தான் ஆகனும். துபாய்ல இருந்து திடீர்னு நான் வரேன்னு சொன்னிங்க. நானும் ஏர்போர்ட் வந்துட்டேன். ஏன் எதுக்குனு ஒரு வார்த்த கூட சொல்ல’

 

’ரஞ்சித், ப்ளீஸ் எங்கிட்ட அதப்பத்தி கேக்காதீங்க. தலவலினு வச்சுக்கங்களேன். மனசே சரியில்ல’

 

‘என்ன உங்களுக்குமா? ரைட் நான் கேக்க மாட்டேன். நான் இனி கேக்கவே மாட்டேன். ஆனா நீங்க ஏன்கூட வரனும்’

 

‘எங்க?’

 

‘நான் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கே தெரியாது. இனிமே தான் முடிவு பண்ணனும். எனக்கும் தலவலி. ஒரு ஆட் வீடியோவ கஷ்டப்பட்டு ராப்பகலா தூங்காம வேல பாத்து எடிட் பண்ணி அனுப்பி விட்டா அது நொட்ட இது சொட்டனு சொல்றாய்ங்க. மனுஷனுக்கு எவ்வளவு டென்ஷன். வாங்க எங்கயாவது ஓடிருவோம்’

 

‘எங்க?’

 

‘அட வாங்க ஹஸன். நமக்கு இதென்ன புதுசா? என்னைக்கோ வரும்னு நம்பி அந்த ஒளிய துரத்தரப்ப இதல்லாம் ஒரு மேட்டரா?’

 

 

 

ரஞ்சித். ஹஸனும் ரஞ்சித்தும் நாமக்கல்லில் பள்ளித் தோழர்கள். வாங்க போங்க என மரியாதை கொடுத்துக் கூப்பிடும் வழக்கம் அன்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஹஸனும் ரஞ்சித்தும் ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். அதை ஒளியென்றே ஒருமையாய் அழைத்தனர். பாதை வேறானாலும் தேடுவது ஒன்றைத்தான். ஒளியைத்தான்.

 

’ஹஸன் நீங்க பூட்டி அடிப்பீங்களா?’

 

’பூட்டினா?’

 

’ஸ்டஃப்?’

 

‘ஸ்டஃப், ட்ரிங்க்ஸா?’

 

‘அடப்போங்க. கஞ்சா. அடிப்பிங்களா?’

 

‘இல்ல.’

 

‘பழக்கமில்லையா? விருப்பமில்லையா?’

 

‘ரெண்டும் தான்’

 

‘ஒரு இழு இழுக்கிறீங்களா?’

 

‘எதுக்குங்க? தேவையே இல்ல’

 

அழகான வடிவமைப்பில் இருந்தது அந்த மண் குழாய். பெரிய சுருட்டின் அளவு. சில்லம் அதன் பெயர். அதனுள்ளே காய வைத்துக் கசக்கிய கஞ்சா. இனிமேல் கஞ்சா இல்லை பூட்டி. வீட்டு மாடியில் பத்தவைத்து இழுத்துக் கொண்டிருந்தார்.

 

’சும்மா அடிச்சுப் பாருங்களேன். ஒரே ஒரு பஃப்’

 

‘இல்லங்க. எனக்கு வேணாம். இதெல்லாம் தேவையில்லாதது.’

 

‘தேவையில்லாததா. யார் சொன்னா? ஒரு தடவ இழுத்துப் பாருங்க அருமை தெரியும்.’

 

‘எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுங்க. ட்ரிங்கிங், ஸ்மோக்கிங் எதும் எனக்கு ஆகாது.’

 

‘இத தண்ணினு யாரு சொன்னா? ம். ட்ரிங்க்ஸுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

’அடப் போங்க நீங்க வேற’

 

’உண்மைல தாங்க. இதுக்கும் ட்ரிங்க்ஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

’அட நீங்க வேற’

 

‘ச்சும். உண்மைல தாங்க. இப்ப தண்ணியடிச்சிங்கனா மண்ட கழண்டு லூசாட்டம் ஏதாவது ஒளறிக்கிட்டே இருப்பிங்க. என்ன பண்றோம்னு நமக்கே தெரியாது. ஆனா பூட்டி அப்டி இல்லங்க. என்ன பண்றோம்ன்றது தெளிவா தெரியும். பூட்டியடிச்சிட்டு செய்ற ஒவ்வொரு செயலையும் அப்டியே ரசிச்சு ரசிச்சு செய்வோம். வாழ்றதுக்கே ஒரு புது அர்த்தம் கிடைக்கும். இப்ப பூட்டியடிச்சிட்டு பைக் ஓட்றிங்கனு வச்சுக்கங்க. ஆக்ஸிலரேட்டர திருவும் போது கூட ஒரு ஹாப்பி ஃபீலிங் கலந்த உணர்ச்சி இருக்கும். இதத்தான் பேரானந்த நிலைனு சொல்வாங்க.’

 

‘ரஞ்சித் ஜீ. போதும். பேரனந்தம் ப்ரேமானந்தம்னு எதையாவது எது கூடையாவது கோர்த்து விடாதீங்க’

 

’அட நம்புங்க. நாம ஸ்கூல்ல படிக்கும் போது நீங்க நிறைய யோகா தியானமெல்லாம் பண்ணுவீங்க நினைவிருக்கா?’

 

‘இப்பவும் தான் பண்றேன்.’

 

‘சரி அப்டி செய்றதனால உங்களுக்கு என்ன பலன்?’

 

‘மனசு பேசுறத கேக்க முடியும். மனச ஆள முடியும். ’

 

‘சரி. அது ஒரு பெரிய ஆனந்தமான நிலைனு சொல்ல வறீங்க?’

 

‘ஆமா அத பேரானந்த நிலைனு தான் சொல்வாங்க’

 

’நீங்க தியானம் பண்றது மூலமா மூளையோட சில பகுதிகள தட்டிவிட்டு விதவிதமான நிலைகள கடக்கிறீங்க. சரிதானே?’

 

‘ஆமா’

 

‘அப்டி தாங்க போதையும். ஆல்கஹால், பூட்டி, அபின், ஈதர், ஆஸிட்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு நிலைக்கு நம்மள கூட்டிட்டுப் போகும். நம்ம மூளையோட பேரானந்தம் தர பகுதிகளத் தட்டிவிடும். நீங்க கஷ்டப்பட்டு கண்ணமூடி காதக்கட்டி போற அதே பேரானந்த நிலைக்கு நாங்க பூட்டி மூலமா போறோம். அவ்ளோதான் வித்தியாசம்’

 

‘ஆனா இதுல உங்களால மனச அடக்க முடியாதே.’

 

‘உங்கள யாரு அடக்க சொன்னா? இப்ப ஒரு கொழந்த சேட்ட பண்ணிக்கிட்டே இருக்கு. நாமலும் சொல்லிப் பாக்குறோம் அப்பறம் நாலு அடியப்போட்டு அடக்கிப் பாக்குறோம் அடங்குமா?’

 

‘நீங்க ஏதோ முடிவோட தான் இருக்கிங்க. நீங்களே சொல்லுங்க’

 

’சத்தியமா அடங்காது. அத அது போக்கில விட்டுட்டு கொஞ்ச நேரம் அப்டி எக்கா ஒக்காந்திருங்க. அதுவா ஆடி அடங்கி ஓடி ஓஞ்சு பக்கத்தில வந்து ஒக்காந்திரும். அப்டி தாங்க பாஸ் மனசும். பூட்டியப் போட்டு மனச அது போக்கில விட்டுட்டா கொஞ்ச நேரத்தில எல்லாம் முடிஞ்சு ஃப்ரீ ஆயிடும். நீங்க இப்படியும் பேரானந்த நிலைய அடையலாம். என்னோட தியரி என்ன தெரியுமா?’

 

‘சொல்லுங்க.’

 

‘மைண்ட் ஸ்ட்ரெஸ் ஆகிறதுக்கும் மனசு வலிக்கிறதுக்கும் ஒலகத்தில ரெண்டு மருந்து ஒன்னு தத்துவம், ஞானம், தியானம்னு சொல்ற எல்லாருக்கும் இப்பலாம் ஒத்துவராத சமாச்சாரம் இன்னொன்னு போதை, பொண்ணு, பாட்டு, பூட்டி, கீட்டினு ஏழைக்குக் கூட ஈஸியாக் கிடைக்கிற ரெண்டாவது சமாச்சாரம். காசில போய் பாருங்க. கஞ்சா அடிச்சிட்டு எப்டி பேரானந்த நிலையில உங்க யோகிகள் உக்காந்திருக்காங்கனு.’

 

‘நிச்சயமா இல்ல ரஞ்சித். போதையால ஒடம்பு பாதிக்கும். நீங்க என்ன பண்ணாலும் அது மத்தவங்களப் பாதிக்கும். தியானம் அப்டி இல்ல.’

 

‘அட எல்லா வெங்காயமும் ஒன்னு தான். வெங்காயத்த லேயர் லேயரா பிரிச்சுப் பாருங்க உள்ள ஒன்னுமே இருக்காது. அது தான் வாழ்க்கையோட தத்துவம். புரியுதா?’

 

’எனக்குப் புரியல’

 

‘புரியலையா. நான் கஞ்சால இருக்கும் போது ரொம்பத் தெளிவாத் தான் இருப்பேன். சரி அப்ப நீங்க இன்னும் அந்தப் பக்குவத்துக்கு வரல. இன்னொன்னு தெரியுமா?’

 

‘என்ன?’

 

’எனக்குத் தெரிஞ்ச ஒரு வெள்ளக்காரரு. பெரிய ஆளு. பேர் என்னமோ வில் ஸ்மித் படம் மாரி இருக்கும். காக், ஹேண்டுன்னு.’

 

’ஹாஹா’

 

‘நான் அசிங்கமா சொல்லலங்க. உண்மையிலேயே தான்.’

 

‘ஹேன்காக்கா?’

 

‘ஆங். ஹேன்காக். ஸ்டீஃபன் ஹேன்காக். தெரியுமா உங்களுக்கு அவர?’

 

‘ம். அட்லாண்டிஸ் பத்தியும் லெமூரியா பத்தியும் நான் கோயம்புத்தூர்ல படிச்சப்போ வச்ச உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில ஒரு செஷன் குடுத்தாரு.’

 

‘ம். அவரே தான். அவர் உலகத்தில இருந்த நாகரீகமெல்லாம் போதையால தான் தோனுச்சுனு ஒரு தியரி சொல்றாரு. தெரியுமா?’

 

‘தெரியாது’

 

‘உண்மையிலயே தான். மேஜிக் மஷ்ரூம் பத்தி நிறையப் பேசினாரு’

 

‘எங்க?’

 

’நெட்ல ஏதோ ஒரு சைட்ல’

 

‘அப்டியா?’

 

‘ஆமாங்க. உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.’

 

’……’

 

‘மேஜிக் மஷ்ரூம்னோன தான் நினவு வந்துச்சு. நாம இன்னைக்கு நைட்டு கொடைக்கானல் கெளம்வுறோம்.’

 

‘கொடைக்கானலா? எதுக்கு?’

 

‘எதுக்குன்லாம் கேக்கக் கூடாது. இன்னைக்கு நைட் ஓகே?’

 

‘இப்ப நைட் ஒன்பது மணி. இனி எந்த நைட் போறோம்’

 

‘ஆமால. நைட் ஆச்சோ. அப்ப வாங்க கிளம்புவோம்.’

 

‘இப்பவா?’

 

‘இப்பவே தான் வாங்க’

 

‘ரஞ்சித் உங்க நிலைம சரியில்ல. காலைல போவோமே’

 

‘இல்ல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். வாங்க கிளம்புவோம்’

 

’எதில. இப்ப பஸ் இருக்குமா?’

 

‘பஸ்லலாம் மனிதர்கள் போறதுக்கு? நம்ம வண்டீல தான்’

 

‘மனிதர்களா? அப்ப நாம?’

 

’ஏலியன்ஸ்னு வச்சுக்குவோம். வாங்க வண்டியக் கெளப்புவோம்’

 

’எந்த வண்டிய சொல்றீங்க?’

 

‘நம்ம ஸ்கூட்டர தான்’

 

‘இந்தக் ஸ்கூட்டர்லயா? கியர் கூட இல்லாத ஸ்கூட்டர்லயா. விளையாடாதீங்க மலை ஏறாது’

 

‘அந்த சூச்சுமமெல்லாம் உங்களுக்குத் தெரியாது வாங்க போலாம்’

 

‘சரி சொன்னா கேக்கவா போறீங்க. வாங்க. இங்க வாழ்ந்து ஒன்னும் பெரிசா செய்யப் போறதில்ல. சாகனும்னு எழுதியிருந்தா செத்துத்தான் ஆகனும்’

 

 

 

மதுரையில் இருந்து வாடிப்பட்டி வழியாக கொடைக்கானல் செல்ல ஸ்கூட்டரில் மூன்று மணி நேரம் பிடித்தது. பராவாயில்லை. பூட்டியில் இருந்தாலும் வண்டி ஒரு இடத்தில் கூட தள்ளாடவில்லை. தெளிவாக, மிதமாக வந்திறங்கியது. வழியில் எங்கும் நிறுத்தாமல் வந்ததால் இஞ்சின் தன் முழு பலத்தையும் திரட்டி கோபத்தில் அனலை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு கடை இல்லை. எட்டுமணிக்கே தூங்கிவிடுமாம் இந்த ஊர். சரி எங்கே செல்கிறது பாதை?

 

‘ரஞ்சித் எங்க போறோம்?’

 

‘எதோ ஒரு பேரு சொன்னாய்ங்க’

 

‘யாரு?’

 

‘என் தோஸ்த் ஒருத்தன்’

 

‘என்ன பேரு? எதுக்கு?’

 

’இல்ல இப்ப நாம போற ஊருக்குப் பேரு ஏதோ வட்டைப் பாறையோ வால் பாறையோ சொன்னாங்க ஆன்’

 

‘வால்பாறை இங்க இல்லிங்க.’

 

‘இல்ல கொடைக்கானல் பக்கம் தான். ம். வட்டக்கானல். டால்பின் நோஸ் இருக்கே அந்த வட்டக்கானல்’

 

‘அங்க எதுக்கு?’

 

‘அங்க தான் அந்தக் காளான் கெடைக்கிதாம்’

 

‘காளானா என்ன காளான்?’

 

‘மேஜிக் மஷ்ரூம். ஹான்காக் சொன்னாரே அதே ஒளியத் தர்ர மஷ்ரூம். மாஜிகல் மஷ்ரூம்’

 

’அதுக்காகவா இந்த நேரத்தில இங்க வந்தோம். என்னங்க நீங்க’

 

‘பாஸ். வாழ்க்கைனா அப்டித்தான். நாம தேடி ஓடலைனா அதுவாத் தேடி வரும். ஐயையோ மாத்தி சொல்லிட்டனோ. நாம தேடி ஓடலைனா அதுவா தேடி வராது. நாம தான் தேடி லங்கு லங்குனு ஓடனும்’

 

‘இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையேங்க.’

 

‘சம்பந்தம் இல்லைனா சம்பந்தம் உருவாக்கிக்கிவோம். சரி இப்ப இங்க ஒரு பக்கி கூட இல்லையே. நடுரோட்ல பேயாட்டம் தனியா நின்னு பேசிட்டிருக்கோமே. சரி இப்ப எப்டி வட்டக்கானல் போறது’

 

‘எங்கிட்ட கேட்டா?’

 

‘எதாவது யோசனை வருமேன்னு தான்’

 

’என் போன்ல பாப்போமா’

 

‘அடக் கொடுமையே குடுங்க இங்க’

 

‘இப்படியே நேரா போறோம். ஒரு ஆர்ச் வரும். அங்க இருந்து மல மாதிரி ஒரு ரோட் ஏறும். எக்காரணம் கொண்டும் அதுல ஏறக் கூடாது. நம்ம வண்டி தாங்காது. அதுனால சுத்தி வளச்சு பஸ் ஸ்டாண்டுக்கு போறோம். அங்கிருந்து உட் வைல் ரோட் வழியா போய் க்ளப் ரோட்ல சேரனும். சூப்பர்ங்க உங்க போன். இதுக்குத் தான் சொல்றது’

 

போன் திசை கூற வண்டி தொடர்ந்தது. சர்ச் ரோட்டில் ஒரு சர்ச். இரண்டு வழிகள் எதைத் தேர்ந்தெடுக்க? போனும் எதுவும் சொல்லவில்லை. ரோட்டில் புகைவிட்டுக் கொண்டே ஒருவர் வருவது தெரிந்தது. விரைக்கும் பனி.

 

’அண்ணே வட்டக்கானல் எங்க இருக்கு?’

 

‘அப்டியே நேரா போங்க. மொத கட்டிங் போயி அடுத்த லெஃப்ட் கட்டிங். ஒத்தையடி காட்டுப் பாதை. அதுக்குள்ள போனா ஃபால்ஸ். அங்கிருந்து லெஃப்ட். நேரா வட்டக்கானல். காட்டு மாடு வரும் பத்திரம்’

 

‘காட்டு மாடல்லாம் ஒரு பொருட்டான்ணே. அதெல்லாம் இந்த ரஞ்சித் நிறைய பாத்திருக்கான்’

 

தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த நபர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்.

 

’மொத கட்டிங் போயிருச்சு. ரெண்டாவது கட்டிங். என்னாதிது? கட்டிங்னாரு இது எதோ காட்டுக்குள்ள போற பாதையாட்டம் இருக்கு. மரமட்டையெல்லாம் பச்சை பச்சை பாசம் புடுச்சு சொறிப் புடுச்சுக் கெடக்கு. இதுக்குள்ள தான் போகனுமா?’

 

’ஆமாமா அப்டி தான் சொன்னாரு’

 

வண்டி நேரே சென்று கொண்டிருந்தது. அருவி கொட்டும் சத்தம் காற்றைச் சலசலத்துக் கொண்டிருந்தது. எதோ சருகு மிதிபடும் சத்தம் கேட்டது. சத்தம் பெரிதானது. மா என மாடுகள் கத்தும் சத்தம். ஏதோ ஒரு காட்டெருமைக் கூட்டம் நெருங்குவது தெரிந்தது. கணித்தது சரி. வழியை மறித்துக் கொண்டு வந்து நின்றன. ஒவ்வொன்றும் யானையளவு இருந்தன. கன்றுக்குட்டிகள் ஒவ்வொன்றும் பசுமாட்டளவு. கொம்புகளும் கண்களும் வெறித்துப் பார்த்தன.

 

’ஹஸன். மாடு’

 

ரஞ்சித் திடீரென ப்ரேக் அடித்து இரண்டு கைகளையும் விட்டார். வண்டி முன்னெழும்பி நின்றது.

 

‘ஹஸன் மாடு. ஆடாதீங்க அசையாதீங்க. நம்மள எப்டி குரு குருன்னு பாக்குதுன்னு பாருங்க’

இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கிங்களா ரஞ்சித்?’

 

‘கொடைக்கானல் வந்திருக்கேன். இங்க வந்ததில்ல. சத்தமா பேசாதிங்க மாடு வந்திரும். ஆனா நிறைய தடவ மாடப் பாத்திருக்கேன். அசையாம இருந்தா அதுவே போயிடும்’

 

’அப்டியா. நான் இதுவரைக்கும் கொடைக்கானல் வந்ததில்ல. இப்டித் தான் ஒரு தடவ கோயம்புத்தூர்ல இருந்து ஊட்டி போனப்ப அப்டி தான் ரஞ்சித் ஒரு யானை துரத்துச்சு’

 

‘யானையா? ஏங்க நீங்க வேற இந்த நேரத்தில யானை கீனைனு என்ன பயமுறுத்துறீங்க. பேசாமா இருங்க அந்த ஆம்பள மாடு நம்மளையே தான் பாக்குது’

 

ஒரு மணிநேரம் எங்கங்கோ பேச்சு சென்று வந்தது. அந்த மாடுகளுக்கு பிடித்துவிட்டது போல. எங்கும் நகரவில்லை. நேரே நோக்கியபடியே இருந்தன.

 

‘ரஞ்சித் கல்லவிட்டு எறிவமா?’

 

‘ஏங்க இதென்ன தெரு நாயா? மாடுங்க. ஒரு குத்து குத்தி தூக்கினா சோழி முடிஞ்ச்சு. பேசாமா இருங்க’

 

‘வாங்க செஞ்சு தான் பாப்போமே. போற ஊயிரு போனாப் போது’

 

‘என்ன உங்களுக்கு உயிர்னா அவ்வளவு கேவலமாப் போச்சா? எப்பப்பாரு உயிர மயிரளவு கூட மதிக்க மாட்டீன்றய்ங்க. எனக்கு உயிர் முக்கியம்’

 

‘அடப் போங்க. நான் கல்லெடுக்கத் தான் போறேன்’ கீழே கிடந்த கல் ஹஸன் கையில்.

 

‘நோ நோ நோ. இங்க எந்த முடிவா இருந்தாலும் நான் தான் எடுப்பேன்’

 

‘ஏன்?’

 

‘கப்பல்ல யார் சொல்றது கடைசி?

 

’கேப்டன்’

 

‘ஃப்ளைட்லயும் அப்டித் தான். வண்டிய ஓட்றவங்க தான் எப்பவும் கேப்டன். அவங்க சொல்றதத் தான் நாம கேக்கனும். புரிதா. இங்க நான் தான் வண்டி ஓட்றேன். நான் தான் கேப்டன்’

 

‘கார் ஓட்ற ட்ரைவருக்கெல்லாம் கேப்டன் பதவி கொடுக்க முடியுமா?’ கையில் இருந்த கல் குறி பார்க்கப்பட்டது.

 

’நோ நோ நோ. நான் தான் இங்க எதா இருந்தாலும் செய்வேன். இவளோ பெரிய கல் வேணாம். ஒரு கைப்பிடி மண்ண எறிவோம்’

 

‘எதாவது செய்ங்க’

 

’ஓம் சிவோகம். தென்னாடுடைய சிவனே போற்றி. அடுத்தென்ன தெரில இது போதும். சிவனோட வாகனம் எருமை தானே. ஓடிடு செல்லம்’ மண் விழுந்த அடுத்த நொடி மாடுகள் விரண்டு ஓடின. ஒரு மணிநேரக் காத்திருப்பை ஒரு கைப்பிடி மண் உடைத்தது. ஒரு மண் பிடிக்கு மிரளும் மாடுகளுக்கு சிவ நாமம் எல்லாம் சற்று அதிகம் தான்.

 

’பாத்திங்களா சிவனோட மகிமைய?’

 

’மண்ணாங்கட்டி’

 

‘ஆமாம் அதோட மகிமையும் தான்’

 

வண்டி நேரே கிளம்பி மற்றொரு முச்சந்தியில் நின்றது. இரண்டு பாதை. வலமா இடமா. போன் வலம் செல்லச் சொல்லியது. அந்த மனிதரோ இடம் சொல்லியிருந்தார். ஸ்மார்ட் போனுக்கு முதல் மரியாதை. வலப்புறம் இருந்த ஒரு வேலியின் இடைவெளியில் புகுந்து வண்டி சென்றது. உள்ளே சாணம் ஆங்காங்கே.

 

‘இருங்க ரஞ்சித் ஏதோ வண்டிச் சத்தம் கேக்குது. உள்ள போக வேணாம். அவங்கட்ட கேப்போம்’

 

‘ஓகே. பர்மிஷன் க்ராண்ட்டட்’

 

வெள்ளை ஓம்னி வந்து கொண்டிருந்தது. இடையில் நிறுத்தப்பட்டது.

 

‘அண்ணா. வட்டக்கானல் எப்டிப் போனும்?’

 

‘வட்டக்கானலா. அங்க தான் தம்பி நாங்களும் போய்கிட்டிருக்கோம். பின்னாலயே வாங்க’

 

ஸ்கூட்டருக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது.

 

‘ஹஸன் வண்டிக்குள்ள பாத்திங்களா?’

 

‘என்ன ரஞ்சித்’

 

‘பொம்ம மொம்மயா இருக்கு பாருங்க’

 

‘பொம்மையா? நீங்க வேற’

 

‘நல்லாப் பாருங்க’

 

‘ஆமாங்க. வெள்ளக்காரங்க’

 

‘வாவ். வெள்ளக்காரங்களா? நான் பொம்மைனு நினச்சேன்’

 

‘ஏன்?’

 

’இங்க தான் பூட்டி இருக்கும். கன்ஃபார்ம். என்ன ஆனாலும் இங்க தான் நாம இருக்கப்போறோம்’

 

ஒம்னியும் ஸ்கூட்டரும் பல நெளிவு சுழிவுகளைக் கடந்து ஒரு ஊருக்குள் சென்று நின்றது. ஊரின் துவக்கத்தில் நட்சத்திரம் தொங்கும் தேவாலயம் வரவேற்றது. அந்த நட்சத்திரம் எங்கோ பார்த்தது போல் இருந்தது. வண்டிக்குள்ளிருந்து பொம்மைகள் இறங்கின. அத்தனையும் ஆண்கள். இறங்கியவுடன் அவை பொம்மைகளைப் போல் இல்லை. ஒவ்வொருவனும் ஆறரை அடிக்கு குறைச்சல் இல்லை. தின்னமான தோள்களைத் தாங்கிய உடல். முறுக்கேறிய நரம்புகள் பொதிந்த கை கால்கள். ராணுவத் தோற்றம். நிச்சயம் ஐரோப்பியரோ அமெரிக்கர்களோ இல்லை.

 

’பாஸ். இங்க கொஞ்சம் வந்து இவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க. கழுத்தறுக்கிறானுங்க’

 

ஓம்னி ட்ரைவர் அவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐந்து கிலோ மீட்டருக்கு ஐநூறு கேட்டார். அவர்கள் விடவில்லை. வலுகட்டாயமாக பேசி வசூலித்துவிட்டார். பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல யாரோ இருவர் வந்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டு அங்கிருந்து ஒரு வீட்டை நோக்கிச் சென்றனர். எங்கோ கேட்ட மொழி போல் தெரிந்தது. அவர்கள் யாருடனும் பேசவில்லை. பேச அனுமதிக்காத இறுகிய முகத் தோரனை அனைவருக்கும்.

 

‘ஹஸன் இவனுங்க என்ன மொழி பேசறானுங்க. இங்லிஷ் ரொம்ப கேவலமா இருக்கு’

 

‘தெரியல. ஆனா எங்கயோ கேட்ட மாதிரித் தோணுது. சரி நடு ராத்திரி ஆயிடுச்சு. எங்க தங்கப் போறோம்?’

 

‘வாங்க தேடிப் பாப்போம். தேடினா கிடைக்கும்.’

 

சிறிது தொலைவு நடந்து செல்ல, மலைச் சரிவின் கீழ் நோக்கி ஒரு கற்பாதை சென்றது. ஏதோ வெளிச்சம் தெரிந்தது. அதிலிருந்து ஒரு குடும்பம் ஏறி வந்தது. தகப்பன், தாய், ஓர் அழகிய இளம் பெண்.

 

‘இங்க தங்குறதுக்கு எங்கங்க இடம் இருக்கு?’ ரஞ்சித் அந்தப் பெண்ணிடம் போய் கேட்டார்.

 

‘தமில் நய் மாலும். நீச்சே ஜாவ் நீச்சே ஜாவ்’  திடுமென தகப்பன் பதில் கொடுத்தார். இந்த ஊரில் தமிழே எங்கும் இல்லை.

 

அந்த நிலையிலொரு போஸ்ட்டர் கண்ணில் பட்டது. இருளில் கூர்ந்து கவனிக்க, கடைகள் தென்பட்டன. கடைகளின் பலகைகளில் வேறேதோ மொழியில் ஒரு எழுத்துக் கூட்டம் தென்பட்டது. கட்டம் கட்டமாக வலமிருந்து இடம் எழுதப்பட்ட எழுத்துக்கள். ஏதோ ஒரு நாணயத்தில் பார்த்த நினைவு. அப்பாதையின் கீழிறங்கி ஒளியை நோக்கிக் கால்கள் சென்றன. ஒளி தெரிந்த கடை முன் நின்றன.

 

‘அக்கா. தங்க இங்க இடம் கிடைக்குமா?’, ரஞ்சித் தொடங்கினார்.

 

‘தமிழா? எங்கிருந்து வறீங்க?’

 

‘மதுரைல இருந்து’

 

‘அட நம்ம மதுரையா?’

 

‘ஆமாக்கா’

 

‘நல்ல வேளை. இப்ப தான் கடைய மூட எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருந்தோம். எதுக்க வந்த ஹிந்தி ஃபேமிலி சொன்னாங்களா?’

 

‘ஆமாமா’

 

’அவங்களும் எங்க வீட்ல தான்  தங்கி இருக்காங்க. மேல இருக்க ரெஸ்டாரண்ட் அவங்கது தான். அவங்களுக்கு எதிர் ரூம்ல தங்கிக்கங்க’

 

’சரிங்கக்கா. எவ்ளோ?’

 

‘எண்ணூறு தம்பி’

 

‘என்னக்கா. ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நாங்க ரொம்ப நாள் தங்கனும். ஒரு வாரம் கிட்ட’

 

‘சரி உங்களுக்காக ஐநூறு’

 

‘இன்னும் கொறைங்களேன். கொடைக்கானல்ல இது தான் சீசன் டைம் இல்லைல’

 

‘கொடைக்கானல்ல இல்ல தம்பி. வட்டக்கானல்ல இது சீசன். எங்கங்க இருந்தோ இந்த இஸ்ரேல் பக்கிக இங்க வரும். ரூம் ரேட்லாம் ரொம்ப அதிகம்.’

 

இஸ்ரேல். டேவிட் ஸ்டார். வலமிருந்து இடம். கட்டம் கட்டமான எழுத்துகள். ஹிப்ரூ. கட்டாய ராணுவச் சேவை.

 

 

‘நான் ஒரு கத சொல்லவா?’

 

‘ஹஸன். அவன் சொல்ற கதைய நீங்க கண்டிப்பாக் கேட்டே ஆகணும். ஹா ஹா’

 

‘டேய் என்ன சிரிக்கிற? என் கத ஒன்னும் அவ்வளவு கேவலம் கிடையாது. நீங்களே கேட்டுட்டு சொல்லுங்க ஹஸன்’

 

‘சரி. சொல்லுங்க கேக்கிறேன்.’

 

’நம்ம படத்தோட டைட்டில் பறவை’

 

‘ஏது அதிசயம் இருக்கே அந்தப் பரவையா. ஹா ஹா ஹா’

 

‘ரஞ்சித் நோ லூஸ் கமண்ட்ஸ். உனக்கு பூட்டி அதிகமாயி லூசு புடிச்சுடுச்சு. நீங்க கேளுங்க ஹஸன்’

 

‘நம்ம கதையோட டைட்டில் பறவை’

 

‘என்ன பறவை’

 

‘ஏதோ பறவை. காக்கானு வச்சுக்குவோமே. காக்கா நல்லா இருக்கே. இப்போ இருந்து நம்ம டைட்டில் காக்கா. சோக்கா?’

 

‘சோக்கு இல்ல ஜோக்கு ஹா ஹா ஹா’

 

‘எதுக்கு இப்ப நீ சிரிச்சிட்டே இருக்க? கொஞ்சம் அமைதியா இருடா. என் கதையச் சொல்ல விடுடா’

 

‘சொல்லுங்க டைரக்ட்டர் ப்ரொட்யூஷர் கிட்ட ஹா ஹா ஹா’

 

‘சரி. ஹஸன். காக்கா நம்ம டைட்டில். காக்காவ வச்சு தான் கதையே. நம்ம படத்தோட ஸ்டார்ட்டிங்ல அப்டியே ஒரு காக்கா அண்ணாநகர்ல இருந்து ஒரு பொட்டலத்தத் தூக்கிட்டு தெப்பக்குளம், கீழவாசல், தெற்குவாசல், பெரியார், ரைல்வே ஸ்டேஷன், நேதாஜி ரோட், மீனாச்சி அம்மன் கோயில், சிம்மக்கல், கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், நீதிமன்றம், மாட்டுத்தாவணினு மதுரையோட எல்லா எடத்தையும் சுத்திட்டுத் திரும்பி அண்ணா நகர்ல கிளம்பின வீட்டுக்கே வருது. அதுக்குள்ள நம்ம டைட்டில் போட்டு முடிக்கனும்’

 

‘என்ன மானாக்குடா இந்த சுத்தல் ஹா ஹா’

 

‘அது அப்டிதான் ஹஸன் உங்களுக்கு புரிதில’

 

‘ம். சொல்லுங்க’

 

’அப்படியே ஒரு சாங். ரெண்டு காக்கா. அன்பான காக்கா. புருஷன் பொண்டாட்டிக் காக்கா. ஜாலியா பாடி ஒன்னு சேந்து ஒரு குட்டி போடுது. குட்டி போட்டு சந்தோஷம வாழுது. திடீர்னு ஒரு நாள் ஒரு பாம்பு வந்து அந்த குட்டியச் சாப்பிட வருது’

 

‘குட்டி இல்லடா குஞ்சு ஹா ஹா ஹா’

 

‘இப்ப அதா முக்கியம். கதையக் கேளுடா பக்கி. சரியா அந்த க்குஞ்ச காப்பாத்த அந்த அம்மா காக்காவால முடியல. கத்தி கத்திப் புருஷன் காக்காவக் கூப்பிடுது. அதுவும் வந்து பாம்போட சண்டை போடுது. முடியல. அம்மா காக்கா அப்பா காக்காகிட்ட குஞ்ச தூக்கிட்டு பறக்க சொல்லுது’

 

‘ஹா ஹா ஹா’

 

‘எதுக்குடா சிரிக்கிற?’

 

‘உண்மை விளங்க சிரிப்புத் துலங்கும். ஜெய் போலேநாத். ஹா ஹா ஹா’

 

‘அம்மா காக்கா, அப்பா காக்காகிட்ட குஞ்ச தூக்கிட்டு பறக்க சொல்லுது. குட்டியத் தூக்கிட்டு பறக்க சொல்லுது. அந்த காக்காவும் தூக்கிப் பாக்குது. முடியல. எப்டியோ பல்லக் கடிச்சு தூக்கிருச்சு’

 

‘காக்காவுக்கு ஏதுடா பல்லு? ஹா ஹா இறைவா’

 

‘பீக்க கடிச்சு தூக்கிட்டு ரெண்டு எட்டு தான் பறந்திருக்கும்’

 

‘ரெண்டு எட்டு. பதினாறா? ஹா ஹா’

 

‘இடியட். கதைய கேளு. ரெண்டு தடவ தான் கைய அசச்சு பறந்திருக்கும். அதால முடியல. குட்டிய கீழ போட்டிருச்சு. அவ்ளோதான் அம்மா காக்காவோட இதயமே வெடிச்சிருச்சு. உண்மையிலேயே இதயம் வெடுச்சு, கண் சிவந்து மூக்கு வாய் வழியா ரத்தம் ஒழுகி செத்துசுருச்சு’

 

‘அப்ப அப்பன் காக்கா? ஹா ஹா ஹா’

 

‘ஆமால. அப்பன் காக்கா ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட். இன்னுமா உயிரோட இருக்க போது. அது அல்ரெடி கான்.’

 

‘வாட் அ ட்ராஜடி வாட் அ ட்ராஜடி. ஹா ஹா ஹா. எனக்கு அழுகையா வருது ஆனா சிரிப்ப அடக்க முடியல’

 

‘டோண்ட் ஃபீல். அம்மா அப்பா எறந்தத கண் முண்ணால பாத்துக்கிட்டே அந்த குட்டிக் காக்கா கீழ அப்டியே அழுதுக்கிட்டே விழுது. ஸ்லோ மோஷன்ல அதக் காட்றோம். கீழ விழுந்து என்ன ஆகும்னு எல்லாரும் எதிர் பார்க்கிறப்ப அந்தக் காக்காவோட கண்ணீர், காய்கறி வாங்கிட்டு அந்தப் பக்கமாப் போற ஒரு அம்மா மேல உழுகுது. அப்டியே பதறிப்போய் அந்தக் காக்காவ காய்கறி கூடையில கேட்ச் பிடிச்சு வீட்டுக்குக் கொண்டு போறாங்க. இங்க ஒரு பாட்டு. சின்னத் தாயவள் ரேஞ்ல.’

 

‘ச்சுசுச்ச். ஹா ஹா ஹா. கலைஞன் டா நீ’

 

‘மச்சி பாராட்றதெல்லாம் அப்பறம். லிஸ்டன் மீ’

 

‘டன்’

 

’அந்தக் காக்காவையே தன் பிள்ளையா நினச்சு அந்த அம்மா வளக்கிறாங்க. அப்ப அவங்களுக்கு ஒரு கொழந்த பிறக்குது. அந்தப் பாட்லையே அந்த பையனும் காக்காவும் ஒன்னா வளர்றாங்க. ஒரே டப்ல குளிக்கிறாங்க. ஒரு தட்டில சாப்டறாங்க. ஒரே ஸ்கூல்ல படிக்கிறாங்க. அந்தப் பையன் பெரியவனா வளர்றான். ஒரு நாள் ஒரு காம்ப்காக கொடைக்கானல் வர்றான். காளான்னு சொல்லி எதையோ அவனும் காக்காவும் புடிங்கி ஜாலியா சமைக்கிறாங்க. அவனும் காக்காவும் சாப்பிடறாங்க’

 

’காளானா? மேஜிக் மஷ்ரூமா? ஆமாமா. டேய் நாளைக்கு எனக்கு வேணுண்டா. ஏமாத்திறாத. ஹா ஹா ஹா’

 

’கரெக்டா கண்டுபிடிச்சிட்டியா. நல்ல குடிமகனுக்கு இதுதான் அழகு ரஞ்சித். இப்ப கதையக் கேட்டாதான் உனக்கு மஷ்ரூம். இப்ப அவங்க கதைக்கு வருவோம். நல்லா சாப்பிட்றாங்க. அவங்க தாத்தாபாட்டினு ஆரம்பிச்சு உலகம் முடியரவரைக்கும் கலர்கலரா ஏதோதோ கதை ஓடுது. நிம்மதியா தூங்கிறாங்க. காலைல எந்திருச்சுப் பாத்தா எல்லாம் மறஞ்சிடுது. காளானத் தேடித் தேடி கண்டுபிடிச்சு அவன் சாப்பிடறான். அந்த நேரத்தில அவனுக்கு நம்ம தஹ்ர் மாதிரி ஃப்ரெண்ட் சிக்குறான்’

 

‘ஹா ஹா. தஹ்ர் ஹீ இஸ் மாக்கிங் யூ’

 

‘தேர் இஸ் நோ மாக்கிங். நோ ஹாக்கிங். நோ லைஃப். நோ டெத். ஐம் எட்டர்னல். ஹர் ஹர் மஹாதேவ். ஐம் காட்’

 

’இஸ்ரேல்ல எங்கயோ ஒரு மூலையில பிறந்து, நம்ம என்ன பேசறோம்னு கூட தெரியலைனாலும் பூட்டியப் போட்டு தெரிஞ்ச மாதிரி அமைதியா பக்கத்தில ஒக்காந்து நம்ம தஹ்ர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் அவனுக்கும் கெடைக்கிறான். இவன் அவனுக்கு காளான் குடுக்க அவன் இவனுக்கு பூட்டி, இடிக்கி கோல்ட், ஹெராய்ன், ஓபியம்னு ஒரு பெரிய வெரைட்டியவே அறிமுகப்படுத்தி வைக்கிறான். மூனு பேரும் காக்காவையும் சேத்து தல நிறைய முடி வளத்திட்டு ஹிப்பியா ரெண்டு வருஷம் வட்டக்கானல், ஹம்பி, இமயமலைனு வலம் வராங்க. அப்ப தான் அந்த யோசனை அவனுக்கு வருது. பிசினஸ் ஆரம்பிக்கறான். பூட்டி பிஸினஸ். ஹெராய்ன், அபின், கொகைன், பூட்டி, ஆசிட், ஈதர் எல்லாம். ஈதர் கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் காக்காவ வச்சு. போலிஸ் தொல்ல இல்லாம. இனி தான் கத ஆரம்பிக்கிது. அவ்ளோ தான் சொல்ல முடியும்’

 

பலத்த கைதட்டல். ஹஸன், சிகரெட் சுருளுக்குள் கஞ்சா இலையை கசக்கிச் சொருகி இழுத்துக் கொண்டிருக்கும் மூவரால் சூழப்பட்டிருந்தான்.  ரஞ்சித், தஹ்ர் மற்றும் கதை சொல்லி. கதை சொல்லி வட்டக்கானல் தான். ரஞ்சித்துடன் மதுரையில் அனிமேஷன் படித்தவன். தற்போது வட்டக்கானலிலேயே தங்கி வியாபாரம் செய்து வருகிறான்.

 

வட்டக்கானலை சிறு இஸ்ரேல் என்றே அழைக்கலாம். நவம்பர் தொடங்கி மார்ச் வரை இங்கு இஸ்ரேலியர்கள் குவிகிறார்கள். இவர்களைக் குறிவைத்து வியாபாரம் சூடு பறக்க நடக்கிறது. முக்கியமாக நம் கதை சொல்லி போன்ற போதை வியாபாரிகள் காட்டில் மழை தான். இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் கட்டாய ராணுவச் சேவையில் பணிபுரிந்து பாலஸ்தீனியர்களை அடக்கியாளும் வேலையால் மனப்புழுக்கம் ஏற்பட்டு அதைத் தொலைக்க இங்கே குவிகிறார்கள். போதையும் ஆன்மீகமும் அவர்களை இந்தியா நோக்கி இழுத்து வருகிறது. வியட்நாம் போரின் போது அமெரிக்க ஹிப்பிக்கள் எடுத்த தடத்தை இவர்கள் தொடர்கிறார்கள்.

 

மார்ச்சுக்குப் பின்னர் இஸ்ரேலியர்கள் ஹம்பி மற்றும் இமயமலைப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். வார இறுதிகளில் பெங்களூர் ஐ.டி.க்காரர்கள் வந்து விடுகின்றனர். இது தான் வட்டக்கானல்.

 

 

அந்தக் கண்கள்.

 

மிரட்சி தரும் அந்தக் கண்கள் கனவிலும் வரத் துவங்கிவிட்டன. முன் பின் பார்க்காத கண்கள் அவை. சுற்றி மையிடப்பட்டு கருமையில் தெளிவாகத், தனியாக மிதக்கும் கண்கள் அவை. ஒளிபடைத்த கண்கள். பெண்ணின் கண்ணா? இல்லை ஆணின் கண்ணா? நிச்சயமாகத் தெரியவில்லை. கணிப்பது கடினம். அது ஆன்மாவை நேரடியாக ஊடுருவி மிரட்சியளித்தது. சுற்றிலும் இருள் அதில் அந்தக் கண்கள் மட்டும் திடீரென திறப்பது போல் நினைவில் இருக்கும் போதும், கனவில் இருக்கும் போதும் மீண்டும் மீண்டும் காட்சியாய் வந்தது. கண்ணா? இல்லை கண்களா? ஒற்றைக் கண்ணா? இரண்டு கண்ணா? நிச்சயம் பிடிபடவில்லை. நினைவில் வர மறுத்தன. கண். ஒன்றா? ஒரு ஜோடியா? நிச்சயம் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. எவ்வளவு முயற்சித்தும் பயனில்லை. முன் பின் பார்க்காத கண்கள் மீண்டும் மீண்டும் வருவது மிரட்சியை மிச்சம் விட்டுச் சென்றன.

 

 

 

’அக்கா ஏதாவது தாங்கக்கா குளிர் தாங்க முடியல’

 

அந்தக் காலையில் குளிர் சற்று அதிகமாக இருந்தது. பல் விலக்கும் பொறுமை இல்லாமல் ரஞ்சித் அக்கா கடைக்கு இழுத்துச் சென்றார். கேட்ட நொடியில் சட்டியில் எண்ணெய் உற்றி காயவைக்கப் பட்டது. இங்கு எண்ணெய் திரவ நிலை கடந்து திடநிலை கொண்டிருப்பதால் காய்வதற்கு நேரம் பிடிக்கும். குடைமிளகாயைக் கடலை மாவில் துவட்டிக் கொதிக்கும் எண்ணெய்க்குள் குளிக்கவைத்துத் செய்தித்தாளின் துண்டொன்றில் கொடுத்தார். பகலுணவு. கணக்கெல்லாம் பார்க்காமல் உள்ளே சென்று கொண்டிருந்தது. உரைப்பிலும் கொதிப்பிலும் குளிர் குறைந்தது. கடைக்கு முன் கூட்டம் சேரத் துவங்கியது.

 

சற்று முன் கண்ட கண்கள் ஹஸனை விட்டுச் செல்ல மறுத்தன. சிந்தனை முழுவதும் அங்கே இருந்தது. கடை கூட்டம் கூட ஹஸன் சற்று விலகி ஒரு பாறை மீது அமர்ந்தான். நினைவுகளின் சிறையில் இருந்தான். மீண்டு வர விருப்பமில்லை. அனுமதித்தான். இஸ்ரேலியர்களும் டால்பின் முனைக்குச் செல்லும் கூட்டமும் முன்னும் பின்னும் நடந்தவண்ணம் இருந்தனர். எதுவும் அவனைக் கலைக்கவில்லை. எண்ணங்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அவற்றைக் கவனித்தவனாய் அமர்ந்திருந்தான். எப்படியாயினும் எண்ணங்களின் போக்கு முடியும் இடம் கண்களாக இருப்பது புலப்பட்டது. எதிரே அக்கண்கள் அவனை வெறித்துப் பார்த்தபடி இருப்பதாய் உணர்ந்தான். உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே போனது. வெறித்த கண்களை உணர முடிந்தது. உள்ளிருந்து கண்களை எதிரே உயர்த்தினான்.

 

இரண்டு கண்கள் வெறித்த வண்ணம் இருந்தது. கண்களுக்கு கீழ் மையிடப்பட்டிருந்தது. கண்கள் இருந்த முகம் முழுவதையும் அடர்ந்த வெண் தாடியும் மீசையும் ஆக்கிரமித்திருந்தன. உடல் வெள்ளுடை உடுத்தியிருந்தது. இரண்டு நொடிகள் வெறித்த கண்களையுடைய அந்த உருவம் அவனைக் கடந்து சென்றது.

 

வியர்த்துக் கொட்டி மயக்கம் தழுவியது.

 

 

’போவோமா?’

 

‘எங்க?’

 

‘பெட்ரோல் போட?’

 

‘பெட்ரோலா. வாங்க போவோம்’

 

வட்டக்கானலில் பெட்ரோல் பங்க் கிடையாது. கொடைக்கானலுக்குத் தான் செல்ல வேண்டும். அந்த பங்க்கையும் இரவில் விரைந்து மூடிவிடுவார்கள். அதனால் மாலையிலேயே சென்று அடுத்த நாளைக்குத் தேவையான பெட்ரோல் நிரப்பிவிடுவது அவர்கள் வழக்கம்.

 

மாலைப் பனியைக் கிழித்துக் கொண்டு சென்று பெட்ரோல் வாங்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இருவரும் பின்னால் இருந்து பார்த்தனர்.

 

’பாவம். பனியில எப்படி நடந்து போறாருன்னு பாத்திங்களா? வயசானவரா வேற தெரியிறாரு’

 

’ஆமாமா’  ஹஸனது சிந்தனை நிச்சயம் அங்கில்லை.

 

ரஞ்சித் வண்டியை விரட்டிச் சென்று அந்த முதியவரின் முன் நிறுத்தினார். முகம் முக்காடிடப்பட்டிருந்தது.

 

’ஐயா, ஏன் இந்தப் பனியில இப்படி கால் கடுக்க நடக்கிறீங்க? வண்டீல ஏறுங்க நான் இறக்கிவிடறேன்.’

 

‘இல்லங்க தம்பி உங்களுக்கு எதுக்குச் சிரமம். நான் இப்படியே நடந்து போயிடறேன்’

 

பெரியவர் தலையை உயர்த்திப் பதிலளித்தார். ஹஸனுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

 

இரண்டு கண்கள் வெறித்த வண்ணம் இருந்தது. கண்களுக்குக் கீழ் மையிடப்பட்டிருந்தது. கண்கள் இருந்த முகம் முழுவதையும் அடர்ந்த வெண் தாடியும் மீசையும் ஆக்கிரமித்திருந்தன. உடல் வெள்ளுடை உடுத்தியிருந்தது. அதே பெரியவர்.

 

‘எங்க போனும்?’ ரஞ்சித் தொடர்ந்தார்.

 

‘உங்களுக்குத் தெரியுமா எங்க போகனும்னு?’

 

‘என்ன கேக்கிறீங்க? நாங்க வட்டக்கானலுக்கு’

 

‘புரியலையா. விடுங்க. நானும் அங்க தான் போனும்’

 

‘சரி ஏறிக்கங்க. ஹஸன் கொஞ்சம் இறங்கி அவர நடூல விட்டுட்டு நீங்க பின்னாடி உக்காந்துக்கோங்க. வயசானவரு.’

 

‘ஆமாமா ரொம்ப வயசானவன். பாத்துப்பா’

 

அனைவரும் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. ஹஸனது தொடையில் கை வைத்து பெரியவர் அமர்ந்திருந்தார்.  ரஞ்சித் மொபைல் ஒலித்தது. ஹெட்போனை எடுத்துக் காதில் திணித்தார். மதுரையிலிருந்து யாரோ. வண்டியுடன் சேர்ந்து பேச்சு மும்முரமாகச் சென்று கொண்டிருந்தது.

 

‘உங்க பேரென்ன தம்பி?’

 

‘…..’

 

‘உங்களத்தான். உங்க பேரென்ன?’ கேள்வி தனக்கென தொடை அழுத்தத்தில் புரிந்துகொண்டான்.

 

‘ஹஸன்’

 

‘முழுசா?’

 

‘முஹம்மத் ஹஸன்’

 

’தேடிற ஒளி கெடச்சிருச்சா?’

 

வியர்க்கத் துவங்கி ஒரே நொடியில் உப்பை நாவில் உணர முடிந்தது.

 

‘ஒளி கெடச்சிருச்சா? உங்களத்தான்’

 

‘எப்படி உங்களுக்குத் தெரியும்’

 

‘பொதுவாத் தான் கேட்டேன்’

 

சில சந்தர்ப்பங்கள் பேசுவதற்கல்ல, கேட்பதற்கு. இது கேட்பதற்கு. பேசி ஒன்றையும் நிறுவிவிட இயலாது. நழுவவும் முடியாது.

 

‘சரி, சொல்லுங்க. ஒளி கெடச்சிருச்சா இல்லையா?’

 

‘தெரியல’

 

‘இது என்ன பதில்?’

 

’உண்மையிலேயே தெரியல.’

 

‘உனக்குள்ளயே பதில் இருக்கு.’

 

‘இருக்கலாம்’

 

‘என் கண்கள பாத்து ஏன் பயப்படற?’

 

‘தெரியல. இப்பலாம் கண்களப் பாத்தா பயம் வருது. கனவுல எல்லாம் வந்து மிரட்டுது.’

 

’உனக்குக் கண்கள் திறக்கப் போது. ஒளிய உணர கண்கள் அவசியம்’

 

‘புரியல’

 

‘உன் கண்ண ஏன் நான் வெறிச்சு பாத்தேன் தெரியுமா? அது யோகியின் கண்கள்’

 

‘புரியல’

 

‘புரியும். ரொம்ப சீக்கிரமாவே’

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: