ஒளி 222 கிராம்: பகுதி 13

 

ஸபாஹ் அல் ஃகைர்

 

ஸபாஹ் அந்நூர்

 

இன்றைய காலை நல்ல காலையாக அமையட்டும் என ‘குட் மார்னிங்’  சொன்னால் உங்கள் காலை ஒளி பொருந்தியதாக அமையட்டும் என மறுமொழி அளிக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். ஒளியைத் தேடித் தேடித் துவண்ட நெஞ்சங்களுக்குத் தான் ஒளியின் அருமை தெரியும். ஒரு நாள் இங்கு வந்து பாருங்கள் இருளின் கருமை உங்கள் கண்களைக் குருடாக்கும். இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்கு காஸாவின் அழுகைகளைக் காட்டப் போவதில்லை. இணையத்தில் ஆயிரம் பக்கங்கள் இருக்கின்றன. அதற்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் காஸாவின் அழுகுரல் உங்கள் மனதை உலுக்கிவிடும். நான் இங்கே நூரைப் பற்றி பேச வருகிறேன். ஒளியைப் பற்றி.

 

உலகின் மிகக் கடினமான ஆனால் மிகவும் தேவைப்படும் ஒரு செயல் இருக்கிறது. ஒளி அளிப்பது. தேவைப்பட்டவர்களுக்கு ஒளி அளிப்பது. ஒளியை கையில் எல்லாம் எடுத்துக் கொடுத்துவிட முடியாது. தான் கண்ட ஒளியைப் பிறர் அடைய உதவுவலாம். வழி காட்டலாம். அவ்வளவுதான். ஆனால் இந்த வேலையை அவ்வளவு எளிதில் ஒளிகண்ட யாரும் செய்ய முன்வரமாட்டர். பிறர் ஒளி தெரியாமல் தட்டுத்தடுமாறி இருளில் தடுமாறும் நிலையை ஏளனத்துடன் இறுமாப்புடன் ரசித்துக் கைகொட்டுபவர்களாகத் தான் ஒளியில் நுழைந்தவர்கள் அனைவரும் இருக்கின்றனர். இவர்கள் உண்மையில் ஒளி கண்டவர்கள் இல்லை. இவர்கள் கண்டதை இவர்களும் பொது உலகும் ஒளி எனக் கருதுகிறது. அவ்வளவுதான். மிகச் சொற்ப மனிதர்களே தாங்கள் கண்ட ஒளியைப் பிறரிடம் எடுத்து வைக்கின்றனர். உண்மையில் இவர்கள் தான் ஒளியைக் கண்டவர்கள். மற்றவர்கள் ஒளியென நினைத்து ஏதோ ஒன்றில் தங்களை இழந்தவர்கள். ஒளி தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும். அது தான் உண்மையான ஒளி. ஒளிபொருந்திய ஒளி. அவற்றை உடையவர்களே உண்மையில் ஒளிவுடையவர்கள். மற்றோர்கள் ஒளியில் இல்லை. பார்ப்பவரின் பிழை அது. ஒளிவுடையவர்கள். அவர்களாக நாம் இருக்கவேண்டும் என்பது தான் என் கனா.

 

முதலில் ஒளி என்பதை என்னவென்று வரையறுத்துக் கொள்வோம். இன்னதென குறிப்பிட்டுக் கூறாமல் தேவை இருக்கும் ஒன்றை ஒளி எனக் கூறலாமா? கூறலாம் ஆனால் ஒரு நிபந்தனை. தேவை இருப்பது மட்டும் ஒளியல்ல. தேவை இல்லாததாய் தெரிந்தாலும் சிலவை ஒளியாக இருக்கிறது. அதனை நாம் ஒளி என்று தேடிச் செல்லாமல் இருந்தாலும் அவை நம் வாழ்க்கைக்கு அவசியமாய் இருப்பன. அது நமக்கே தெரியாது. ஆனால் அவையும் வேண்டும். ஒளி என்பது இன்னதென ஒளியில் வைத்து சோதித்துப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாத ஒன்று. கரைந்து கடக்கும் ஒன்று. ஆனால் எல்லோரும் உணரக் கூடியது. எல்லோர் மனதும் அதை நோக்கிப் பாயக்கூடியது. ஒரு வகையில் அனைவரும் அதை நோக்கிப் பாயும் வகையில் தான் வடிவமைக்கப் பட்டுள்ளோம். வளர்ந்து வந்துள்ளோம்.

 

வாழ்கையில் பல்வேறு சூழ்நிலையிலும் சமயத்திலும் ஒளியைப் பற்றிய நம் கருத்து மாறுபட்டுக் கொண்டே வந்துள்ளது. வருகிறது. வரும். வேலை, பணம், பதவி, காதல், மணம், விடுதலை என்பன போன்றவை பல சமயங்களில் பலருக்கு ஒளியாய் தெரிந்து மரித்திருக்கின்றன. உண்மையில் ஒளி மாறவில்லை. ஒளி பற்றிய நம் கண்ணோட்டம் தான் மாறிக் கொண்டே வருகிறது. ஒளியைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். முடியவில்லை என்பதே உண்மை. ஒளியைத் தேடுபவனும் அதனை அடைந்தவனும் மற்றொரு ஒளியைத் தேடிச் சென்று கொண்டு தான் இருக்கிறான். இது ஒரு வகையில் முடிவற்றதாய் தெரிகிறது. அந்த ஒளியைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒளி என்று நேற்று வரை பணத்தை நினைத்தேன். இன்றில்லை. புரிந்துவிட்டது. இப்போதைக்கு சொந்தக் காலில் நிற்பது எனக்கு ஒளியாய் படுகிறது. அதாவது சுயம். சுயமாக இயங்கும் தன்மை.

 

அதைத் தான் நான் காஸாவிற்கு என் சார்பாக அளிக்க விரும்புகிறேன். ஒளியின் வாசலை திறக்க விரும்புகிறேன். எல்லோரும் செய்வதைப் போல் ஒரு பள்ளியையோ கல்லூரியையோ துவங்குவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. நான் பிறரைப் போல் என்றும் இருந்ததில்லை. தனித்துவம் என்றும் என்னிடமிருந்து வெளிப்படும். தி க்ரீனும் அப்படித்தான் என்று இன்று வரை எண்ணி வருகிறேன்.  என் எண்ணத்தை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கம் இல்லை.

 

வெளிப்படையாகவே சொல்கிறேன் எனக்கு பள்ளி கட்டும் யோசனை பிடிக்கவில்லை. இங்கு டிகிரி முடித்துவிட்டுக் கார் ஓட்டும் பலரைக் காணமுடிகிறது. தேவை கல்வி அல்ல. வேலை. அதைவிட சுதந்திரம். நம்மால் சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியாது. வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். தன் காலில் சுயத்தில் நிற்கக் கற்றுக் கொடுக்க முடியும். என்னால் எப்படி என்று தெளிவாகக் கூற இயலவில்லை. இதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அதை எப்படி, எந்த விதத்தில் நிறைவேற்றுவது என்பது மட்டும் தெரியவில்லை. அதற்கான திட்டத்தையும் வழியையும் வகுக்க எனக்குச் சிலரது உதவி தேவை. நிச்சயம் என்னால் செய்ய முடியும். நான் தினமும் இங்கு அழுகிறேன். என்றைக்கும் என்வாழ்வில் இப்படி அழுததில்லை. அவ்வளவு வேதனையாக இருக்கிறது.

 

இவர்களின் ஊடாக என் தேசத்தின் நிலை சுதந்திரம் வாங்குவதற்கு முன் எப்படி இருந்திருக்கும் என ஊகிக்கிறேன். சுதந்திரத்திரத்திற்கான ஏக்கம் எப்படிப்பட்டதென்று என்னளவில் நான் உணர்ந்தாலும் நாடளவில் என்னால் உணர முடியவில்லை. ஒரு தனி மனிதன் தான் சார்ந்திருப்பதை விலக்கிச் சுதந்திரமாக ஒளியில் பிரவேசிக்க ஏங்கும் அந்த நிலையை விட இது கொடுமையாய் இருக்கிறது. ஒரு நாடே ஒளிக்கு ஏங்கிக் கிடக்கிறது. வீரியம் வலி கொடுக்கிறது. இவர்களால் என் தேசத்தை நான் அதிகமாக நேசிக்கத் துவங்கியுள்ளேன். என் தேசம் அமைவதற்கு என் முன்னோர்கள் இப்படித்தானே ஏங்கி இருப்பார்கள். அவர்களது ஏக்கம் தானே இன்று நம்மை ஒருங்கிணைத்துள்ளது. என் தேசம் சுதந்திரமடைந்த பிறகு தன் காலில் நிற்க எப்படி திணறியதென்பதையும் இன்று எப்படி உலகின் முக்கிய நாடுகளின் வரிசையில் நிற்கிறது என்பதையும் நான் அறியாமல் ஒன்றும் இல்லை. தன் நாட்டையும் மக்களையும் மட்டும் நேசிப்பவனை விட அனைத்து நாடுகளையும் மக்களையும் நேசிப்பவனே உண்மையில் தன் நாட்டை அதிகம் நேசிக்கிறான்.  இது சொல்லால் புரியாது, சற்று உணர்வூட்ட வேண்டும்.

 

இப்போது இதனை எழுதும் போது என்னுள் பல்வேறு உணர்ச்சிகள் எழுந்து வீழ்கின்றன. திடீரென்று புல்லரிக்கிறது, கண் கசிகிறது, மூச்சுத் தடுமாறுகிறது, நெஞ்சம் படபடக்கிறது. எவ்வளவு உளப்பூர்வமாய் இந்த ஊர் என்னைப் பாதித்திருக்கிறது. எண்ணிப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. சிலவை நம்மை அறியாமலே நமக்குள் புகுந்து கொள்கின்றன. நல்ல செய்தியை உங்கள் பக்கத்திலிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 

 

 

We are not obliged to answer a question which questions itself whether it bears quality to  question.

 

தான் கேள்வி தானா என சந்தேகிக்கும் கேள்விக்கு பதிலளிப்பது எங்கள் மீது கடமை இல்லை. உங்கள் கேள்வி அப்படித் தான் உள்ளது. எங்கள் கேள்விக்கு பதில் தேட உங்களைப் பணிக்கிறோம். உங்கள் மெய்லில் எழுதியுள்ளது போல் ஒளி ஒளி என்று எங்களால் பேச முடியாது. இங்கு தத்துவங்களுக்கு வாய் கிடையாது. அவற்றால் பேச முடியாது. என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெளிவாக இங்கே பேசுவது அவசியமாகிறது. உங்கள் பார்வையில் இருந்து சொல்வது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் அவற்றை செயல்படுத்த தெளிவான முடிவுகள் எங்களுக்குத் தேவை. அது இருந்தாலே போதும் வேறொன்றும் தேவை இல்லை. அது உங்களிடம் குறைபடுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.

 

காஸாவின் நிலையை தாங்கள் முன்பு அனுப்பியிருந்த ரிப்போர்ட்டில் இருந்து கண்டோம். உங்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும். அவை மிக ஆழமான கவனிப்பாகத் தன்னை வெளிக்கட்டுகிறது. மகிழ்ச்சி. தங்கள் ரிப்போர்ட்டிங் எங்களை மெய் சிலிர்க்கச் செய்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் நிறுவனத்தின் முடிவுகள் தவறெனக் கூறி திருத்துவதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு முன் தெளிவான முடிவொன்றை நீங்கள் அடைந்திருக்க வேண்டும். இல்லையேல் அது நிறுவனத்தின் முன் வாதிடாது.

 

எதுவாயினும் தெளிவான முடிவுடன் எங்களை அனுகவும். இப்போதைக்கு தாங்கள் காஸா சென்ற வேலை முடிந்துவிட்டதால் அங்கிருந்து கிளம்பும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்காக ஐக்கிய அமீரகம் காத்திருக்கிறது. இந்த மெய்லுடன் அதற்கான ஆவணங்களும் அனுமதிச்சீட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளது. கிளம்பவும்.

 

 

கண்கள் அதனை நம்ப மறுத்தன. காஸாவைவிட்டுக் கிளம்பு. அது கட்டளையாய் தொனித்தது. சமரசமற்ற கட்டளை. எல்லாம் ஆயத்த நிலையில் எடுத்துக் கொடுக்கப்பட்ட பின் பேசி எந்தப் பயனும் இல்லை. யாரையும் உதவிக்கும் அழைக்க தயாராய் இல்லை. தன்னுள் கேள்வி கேட்டுக்கொண்டான்.

 

உண்மைதான். தெளிவான முடிவில்லாமல் எப்படி ஒன்றை அனுகுவது? யார் தான் ஒப்புக் கொள்வார்கள்? வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் தெளிவான முடிவுடன் தான் அனுகுகிறோமா? இல்லை தான். தெளிவாகத் தெரிந்தால் அது வாழ்க்கையே இல்லையே. அப்படி இருக்கையில் அதெப்படி தெளிவான முடிவு என்று ஒன்று இருக்கும்? வாய்ப்பே இல்லை. இருந்தாலும் இவர்கள் இப்படித்தான். உலகம் இப்படித்தான். நடிக்க வேண்டும். தெளிவாகத் தெரிந்தாற் போல் நடிக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே திரைக்கு அப்பால் நோக்கும் பார்வை கொண்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் இப்படித்தான். உண்மையைப் பேசினால் இப்படித்தான். அவர்கள் கூறுவதில் என்ன தவறு? அவர்கள் தெளிவான முடிவை எதிர்பார்ப்பது இயற்கை தான். அவர்களுக்கு அந்த யோசனையால் என்ன விழையும் எனத் தெளிவாகத் தெரிந்தால் தானே துணிந்து இறங்க முடியும். இது தனி மனிதன் சார்ந்ததல்லவே. முடிவுகளில் தெளிவு வேண்டும். இதை எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

 

ஒன்று தெளிவாகத் தெரிந்தாற் போல் நடிக்க வேண்டும் இல்லை உண்மையிலேயே திரைக்கு அப்பால் தெளிவாக நோக்கும் பார்வை கொண்டிருக்க வேண்டும்.

 

 

 

ஐக்கிய அரபு அமீரகம். அதே இனம். அதே மொழி. அதே மதம். ஆனால் வாழ்க்கை வேறு. ஒரு கண்ணில் வெண்ணெய். மறு கண்ணில் சுண்ணம். காஸாவைக் கண்ட கண்களுக்கு அமீரகம் இப்படித் தான் தெரியும். தொடும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு உச்சத்தை, ஒரு உன்னதத்தை இங்கே காண முடியும். அனைத்திலும் இங்கே மிதமிஞ்சி வழிவது எண்ணெய், கண்ணீர் அல்ல.

 

தன் நினைவுகளின் சுழியில் சிக்கி உலக நினைவின்றிப் பித்தனைப் போல் விமான நிலையம் விட்டு வெளியே வந்திருந்தான். கால்கள் அமைதியான இருட்டுப் பகுதியை நோக்கி தானாய் நடந்தன. ஒளியற்ற இடத்தில் தன் ஒளியற்ற மனதை ஒன்றிணைத்து ஓர் ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்தான். நேரம் தற்போது சார்பில் இல்லை. தன்னை அவன் கண்டுகொள்ளாவிட்டாலும் அது ஒருபுறம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது.

 

வாழ்க்கை ஏன் என்னை காஸாவிற்குள் கொண்டு சென்றது? அதைப் பார்க்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருக்குமே? நிம்மதிக்காக பொய்யில் வாழ முடியாது. இறந்தாலும் மெய்யில், ஒளியில் இறக்க வேண்டும், எத்தனை வலிய வேதனையை அது கொடுத்தாலும் சரி.

 

தெளிவில்லாத மனதை இங்கேயும் ஹஸன் கொண்டு வந்திருந்தான். காஸாவிற்குள் என்று நுழைந்தானோ அன்றே மனம் குழப்பத்திலும் தெளிவின்மையிலும் வலியிலும் சிக்கத் தவிக்கத் துவங்கியது. உண்மைகள் என்றும் அப்படித்தான். தன்னைத் தாங்கக் கூடிய மனங்களுக்கு விடுதலையையும், தாங்க இயலா மனங்களுக்கு விடுதலை அடைவதற்கான பக்குவத்தையும் அளிக்கும். இங்கேயும் பண்படுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. வலியும் வேதனையும் தெளிவின்மையும் மனதை எதற்காகவோ தயார் படுத்திக் கொண்டிருந்தது. எதிலிருந்தோ விடுதலை கொடுக்க ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தது. இருளுக்குப் பின்னே ஒளி. ஒளி வேண்டும். இருள் சூழ்ந்தவனுக்கு ஒளி வேண்டும். ஒளி வேண்டும்.

ஒளி தேடியவனின் மேல் ஃப்ளாஷ் லைட்டின் ஒளி வந்து விழுந்தது. நிமிர்ந்து பார்ப்பதற்குள் ‘ஹஸன் ஆர் யூ ஹியர்?’ என ஒலி வந்து சேர்ந்தது.

 

வாழ்க்கையில் எங்கோ, தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத இடங்களில் தனியாய் தனக்குள் சென்று கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு சத்தம் வருவதென்ப்பது வருணிக்க முடியாதது. நிமிர்ந்த நொடி மனம் பதறியது.

 

ரைஹானா.

 

’ஹஸன். வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?’

 

கனவுகள் இப்படித்தான் அடிக்கடி நடுவில் வந்து நம்மை குழப்பும். நாம் எதிர்பார்க்காத நபரை நாம் எதிர்பார்க்காத சூழலில் நம்முடன் கோர்த்துக் கதை நகர்த்தும்.

 

‘ஹஸன். ஆர் யூ ஆல்ரைட். ஹியர் ஆர் மை பேரண்ட்ஸ். நாங்க உங்கள எங்கலாம் தேடறது?’

 

கனவுகள் இப்படித்தான். யார் வேண்டுமானலும் எந்த மொழி வேண்டுமானலும் பேசலாம். இங்கே எந்த வரையறைகளும் கிடையாது. அனைத்தும் தான் தோன்றிகள் தான். எண்ணங்கள் விடுதலையடையும் நேரம் கனவுகள் தோன்றும்.

 

’அஸ்ஸலாமு அலைக்கும். எப்டி இருக்கீங்க?’ ரைஹானாவுக்குப் பின் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரிடமிருந்து. அவருடன் அவர் வயதுப் பெண் ஒருத்தியும் இருபது வயதுப் பெண்ணும் ஹிஜாப்புடன் நின்றிருந்தனர். அவர்களிடமிருந்து தமிழ் வந்தது அவனை ஒரு உலுக்கு உலுக்கியது. இது கனவல்ல நிஜம் என வேர்வையால் நனைத்து நினைவுபடுத்தியது.

 

‘வ ஆலைக்குமஸ்ஸலாம்’ எழுந்து நின்றான்.

 

’எங்கள தெரிதா?’

 

‘இல்ல?’

 

‘இவள?’

 

‘தெரியும். ரைஹானா. நான் இவங்க கம்பெனில தான் வேல பாக்குறேன்’

 

‘இவ கம்பெனி இல்ல. நம்ம கம்பெனி தான். உங்க கம்பெனி தான்.’

 

‘புரியல’

 

‘இப்ப ஒன்னும் அவசரமில்ல. போகப் போக புரியும்’

 

‘நீங்க?’

 

‘நெஜமாவே எங்கள தெரியலையா?’

 

‘இல்ல.’

 

‘நான் ரைஹானாவோட அப்பா, இவங்க அம்மா, அவங்க தங்கச்சி’

 

’தமிழா?’

 

‘ஆமாம்’

 

‘ரைஹானா நீங்க முஸ்லிமா? தமிழா?’

 

‘ஆமாம். இட் மே பீ ஷாக்கிங் ஃபார் யூ. இஸிண்ட் இட்?’

 

‘…..’

 

‘ஆமாம், அவ லண்டன்ல படிச்சிட்டுருக்கா. ’தி க்ரீன்’ல நாமும் ஷேர் ஹோல்டர்ஸ். அதான் அவள அப்படியே பாத்துக்க சொல்லி அப்பாய்ண்ட் பண்ணி இருந்தேன்’

 

’இண்டரஸ்டிங்’

 

‘உங்க அத்தா எங்களப் பத்தி எதுவும் சொன்னதில்லையா?’

 

‘அவரா? அவர் எதுக்கு சொல்லனும்?’

 

‘ரிலாக்ஸ். மாம் டாட் லெட்ஸ் லீவ். மத்ததெல்லாம் வீட்ல பேசிக்கலாம்’

 

 

’நீங்க? அவருக்கு தெரிஞ்சவங்களா?’

 

‘யாருக்கு?’

 

‘எங்கப்பாவுக்கு?’

 

‘தெரிஞ்சவங்களா? ஹஹா’

 

‘…….’

 

’நான் உங்கத்தா கடையில தான் வேல பாத்தேன் தெரியுமா?’

 

‘……’

 

‘நீ அப்ப பிறக்கல. உங்க அத்தாவுக்கே அப்ப கல்யாணம் ஆகல. என்ன எப்பவுமே அவர் வேலை பாக்கிறவனாவே பாத்தது கிடையாது. என்ன மட்டுமில்ல அவர்கிட்ட வேலை பாத்த எல்லாரையுமே அவர் அப்டித்தான் பாத்தாரு. ஆனா என்கிட்ட அவருக்குத் தனிப் பிரியம்.’

 

‘……’

 

‘அவர் தங்கச்சியையே எனக்கு கட்டிக் கொடுத்தாரு.’

 

‘……’

 

‘நாங்க அங்க இருந்தப்போ நிறைய பிரச்சன. ரைஹானா அங்க தான் பிறந்தா. உன்னவிட ரெண்டு வயசு மூத்தவ. அவ பிறந்து கொஞ்ச நாள்ல சில பிரச்சனையால நான் அங்கிருந்து சவூதிக்கு வந்துட்டேன். அங்க அஞ்சு வருஷம் பெட்ரோல் பல்க்ல வேல பாத்தேன். அந்த ஓனருக்கு என் மேல அவ்ளோ நம்பிக்க. என்னைய அவருக்கு சொந்தமா இருந்த எண்ணை கம்பனிய நிர்வாகம் பண்ணச் சொன்னாரு. நிர்வாகம்னா, கம்பெனிக்குத் தேவையான ஆட்கள நியமிக்கிறது தான் வேல. அத அப்படியே செய்ய முடியாது. ஏஜென்ஸி ஆரம்பிச்சு செய்யனும். ஏஜென்ஸி ஆரம்பிக்க ரொம்ப செலவாகும். என்ன செய்றதுன்னே தெரியாம இருந்தேன்.’

 

‘……’

 

’அத்தாகிட்ட வேலை செய்யலைனாலும், எதா இருந்தாலும் அவர்கிட்ட கலந்துக்கிறது என் வழக்கம். இதப் பத்தி நான் அவர்கிட்ட பேசினேன். ஒடனே ஊருக்கு கிளம்பி வரச்சொன்னாரு. நானும் போனேன். அவர் ரொம்பக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாத்தையும் அவர் தங்கச்சி பேர்ல எழுதி வச்சிட்டாரு. நாங்க எவ்ளோ சொல்லியும் கேக்கல. இதப்பத்தி யார்கிட்டயும் அவர் கலந்துக்கல. நான் குடும்பத்தோட வந்துட்டேன். நீலாம் அப்ப சின்னப் பையன்.  அதுக்கப்பறம் அவர் பெரிசா எதுவும் சம்பாதிக்கல.’

 

‘…..’

 

‘நான் அதுக்கப்பறம் சம்பாதிச்சதெல்லாம் அவரால தான். இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கதுக்கு காரணம் அவர் தான். இந்த விசயம் ஊர்ல யாருக்கும் தெரியாது. உங்க அம்மாக்குக் கூட தெரியாது. அம்மா ரொம்ப வெகுளி எதைச் சொன்னாலும் அவ்வளவு சீக்கிரம் புரியாது. நாங்க அதுக்கப்பறம் அங்க வரவே இல்ல. இங்கயே எங்க காலம் போயிடுச்சு. எங்களப்பத்தி அங்க உங்கத்தாவத் தவற யாருக்கும் தெரியாது ஆனா உங்களப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். அங்க என்ன நடக்குதுன்னு நல்லாவே தெரியும். ஒன்னு தெரியுமா? நீ டெல்லிக்கு வேலைக்கு போறதுக்கு முன்னாடியே உனக்கு இங்க வேலை ரெடியாய்டுச்சு. அத்தா தான் உங்கிட்ட சொல்ல வேணாம்னுட்டாரு’

 

’இப்ப நான் இங்க எதுக்கு வந்திருக்கேன். தி க்ரீன் ஏன் என்ன இங்க வரச் சொல்லனும்?’

 

‘ஓ ஆமா. உனக்கு எதுவும் சொல்லவேணாம்னு அத்தா தான் சொன்னாரு. அதான் கம்பெனில இருந்து மெய்ல் அனுபினாங்க. நாளைக்கு ரைஹானாவுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்க. உங்க குடும்பம் அல்ரெடி இங்க வந்துட்டாங்க. வீட்ல தான் இருக்காங்க. உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் சொன்னாங்க ஆனா என்னால மறைக்க முடியல’

 

‘அப்ப எனக்கு வேலை கிடச்சது உங்களால. சரிதானே?’

 

‘அப்டி இல்ல. உனக்கும் தெறம இல்லாம இல்ல.’

 

‘நான் கேக்கிறது புரியும்னு நினைக்கிறேன். எனக்கு உங்க கம்பெனில வேலை கிடச்சதுக்கு நான் காரணம் இல்ல, அத்தா தான் காரணம் இல்ல?’

 

‘இல்ல. உன் தெறமை தான்’

 

‘போதும் என் தெறமைய பத்தி எனக்கு நல்லாத் தெரியும்’

 

‘உங்க அத்தா குடுத்த பணம் தான் இது எல்லாம். அப்டி பாத்தா உன் கம்பெனி தானே. ’

 

‘இப்ப ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க. அவர் பணம். ரொம்ப சரி. ரொம்ப சரி. கொஞ்சம் கார நிறுத்திறீங்களா’

 

‘என்ன?’

 

‘கார ஓரமா நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்.’

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: