ஒளி 222 கிராம்: பகுதி 10

திடலில் ஒதுங்கிய மூன்று வருட வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், சிறிய தந்தையை இழந்தான், அனைத்திற்கும் மணிமுடியாக இதோ அவளையும் இழந்துவிட்டான். இழக்க இனி ஏது? உயிர் தவிர. இவற்றை எல்லாம் விடவா அந்த உயிர் பெரிது? பித்துப் பிடிப்பது என்பது என்ன? எப்படி இருக்கும்? எல்லோருக்கும் வாழ்க்கையில் அந்த சமயம் வரும். இழக்க இனி எதுவுமில்லை உயிர்தவிர என்ற நிலையின் ஊடே பூக்கும் அந்தப் பித்தம். உலகத்தின் எந்த ஈர்ப்புகளுக்கும் அசைந்து கொடுக்காத அந்த பித்தம். வெற்றிகளின் களிப்புகளில் இருந்து விடுதலை அளிக்கும் பித்தம். அப்பித்தத்திற்கு இன்னொரு பலனும் உண்டு. அதைக் கடந்தவர்களால் மட்டுமே அதனை உணர முடியும்.

 

பலவகையில் சோகம் என்றாலும் ஒரு வகையில் அவனுக்கே தெரியாமல் அந்த நிலை அவனுக்கு ஊக்கம் தந்தது. இறைச் செய்தியை அருகாமையில் இருக்கும் ஊருக்கும் எடுத்துச் செல்லும்படி இறைவனிடம் இருந்து கட்டளை வந்தது. அவன் இழக்க ஏதும் இல்லை. மலையுச்சிக்கு சென்று தற்கொலை எல்லாம் செய்யத் தேவையில்லை. அவன் திடமாக இருந்தான். இறைவனை நம்புவேன். அவனது செய்தியை உண்மை எனச் சான்று கூறுவேன். பிறருக்கு எத்திவைப்பேன். அதற்குப் பதிலாய் அவன் வெற்றியைக் கொடுத்தாலும் சரி. வேதனையைக் கொடுத்தாலும் சரி. துணிவுடன் நிற்பேன். ஒன்றும் பாதகமில்லை. இவர்களால் என்ன செய்து விட முடியும் என்னை? மிஞ்சிப்போனால் உயிரை எடுப்பார்கள். எடுத்தால் எடுத்துக் கொள்ளட்டுமே. எனக்கு அதனால் ஒன்றும் நோவினை வந்துவிடப் போவதில்லை. என்றைக்கோ செல்லப்போகின்ற உயிர் இன்றைக்குச் சென்றால் தான் என்ன. அடுத்த ஊர் ஒன்றுக்கு இறைச் செய்தியை எடுத்துக் கொண்டு கால்நடையாகக் கிளம்பினான் அவன்.

 

முதலில் அந்த ஊரின் தலைவரைச் சென்று பார்த்தான். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பின் தான் நம்பி வந்தவர்களைச் சென்று சந்தித்தான். ஏதும் நிகழவில்லை. சென்ற இடம் எல்லாம் ஏதோ பிச்சைக்காரனை விரட்டுவது போல் விரட்டினர். சொற்களால் குதறி எடுத்தனர். கண்ணீர் மல்கத் திரும்ப முற்பட்டான். கற்களைக் கையில் கொண்டு சிறுவர்கள் துரத்தினர். கற்கள் எறியப்பட்டன. நாயை விரட்டுவது போல் விரட்டினர். உடல் முழுவதும் காயம். அங்கங்கு சதை கிழிந்து இரத்தம் கொட்டியது. ஆடைகள் கிழிந்தன. இரத்தத்தால் காலில் இருந்த செருப்புகள் தேய்ந்தன. அந்த ஊரில் இருந்து சில மைல் தூரம் வரை வந்து அவனை விரட்டிவிட்டு உற்சாகத்தில் சிறுவர்கள் வீடு திரும்பினர்.

 

அது அழுகைக்கான நேரம் இல்லை. கண்களில் நீர் தழும்புவதும் வழிவதும் தெரியாத நிலையை அழுகை என்று சொல்ல முடியாது. அது என்ன நிகழ்கிறது என்றே தெரியாத நிலை. மனம் சிதறி இரத்தத்தைக் கக்கும் கணம் அது. நடக்க முடியாமல் நடந்து ஒரு தோட்டத்தின் நிழலில் அமர்ந்தான். அத்தோட்டம் அவன் ஊரைச் சார்ந்த இரண்டு செல்வந்தர்களின் சொத்து. அவனைக் கண்டு அவர்கள் மனம் கலங்கினர். நேரடியாக அவர்கள் அவனிடம் வரமுடியாத சூழல். தங்கள் அடிமையிடம் சிறிது பழங்களைக் கொடுத்து அனுப்பினர்.

 

அடிமை பழத்தை அவனிடம் கொடுத்தான். அவன் ஏற்றுக்கொண்டான். அவன் பழத்தை எடுத்து ‘இறைவனின் பெயரால் இதை உண்ணத் துவங்குகிறேன்’ என்று கூறி பழத்தை வாயிலிட்டான். அவ்வடிமைக்கு ஒரே ஆச்சர்யம். ’இறைவனின் பெயாரால் என்று கூறுகிறீர்களே? இது இம்மக்கள் எப்போதும் பயன்படுத்தாத சொல்லாயிற்றே? நீங்கள் என்ன மதம்?’

 

அடிமைக்கு அவனைப் பற்றி தெரியாது. அவன் வேறு நாட்டைச் சார்ந்தவன். கிறிஸ்தவன். தற்போதுதான் அந்தப் பழத்தோட்டத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறான். ஆச்சர்யத்தால் வினவினான். அடிமையும் அவனும் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டனர். தன் எஜமானர்கள் அழைத்ததால் அடிமை அவ்விடம் விட்டு அகன்றான். செல்லும் போது அவன் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தான். தன் மரியாதையை வெளிப்படுத்தினான்.

 

’அவனுடன் என்ன பேசினாய்?’ எஜமானர்கள் வினவினர்.

 

‘சத்தியமாகச் சொல்கிறேன். அவரைப் போல் மனிதனை நான் இவ்வுலகில் கண்டதில்லை. அவரிடமிருந்து நான் பல உண்மைகளை அறிந்து கொண்டேன். நிச்சயம் இறைத்தூதுவர்களை அன்றி இச்செய்திகளை யாராலும் கூற முடியாது’ என்று சிலாகித்துக் கூறினான்.

 

‘நாங்கள் இதனால் விழையவிருக்கும் விளைவுகளைக் கண்டு உன்னை எச்சரிக்கிறோம். உன் மூன்னோர்களின் வழியில் இருந்து பிறழாமல் இருக்க எச்சரிக்கிறோம். உன்னை தன்வசம் இழுக்கும் அவனது வழியை விட உன் முன்னோர்கள் வழி மிகவும் பாதுகாப்பானது. புரிந்துகொள்’

 

மனம் குமுறி ய நிலையில் அவன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான்.

 

ஒளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படித்தான். ஒளியற்றவர்களை ஒளியால் உரசிப் பார்ப்பார்கள். மனதைப் புண்படுத்துவார்கள். ஒருவகையில் அவர்கள் ஒளியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சுத்த மனநோயாளிகளன்றி வேறில்லை. பணம், புகழ், ஆடாத வாழ்க்கை மட்டும் ஒளியெனக் கொண்ட மனநோயாளிகள் ஒளியற்றோர்களின் மனதை குதறி வெறிநாயைப் போல் தங்கள் மனநோயை அவர்களுக்குள் திணிக்க முற்படுவர். முடிந்தளவு பிறரை புண்படுத்திக் குளிர் காய்வர். புண்படுத்துதல் என்பது மன அளவிலிருந்து உடல் அளவு வரை ஆள்பொருத்து நீளும். என்ன கோரமான இதயம் பாருங்கள். மிரட்டும் கண்களும், கோரைப் பற்களும், சீழ்வடியும் அங்கமும் அவர்கள் உள்ளே அகப்பட்டுக் கிடக்கும். என்ன செய்ய உலகம் அவர்களைத் தான் நம்புகிறது. ஒளி என்பது அப்படித்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

 

ஒளி குன்றிய அவன் முன் பேரொளி மீண்டும் தோன்றியது. அதுவும் மிக்க சஞ்சலத்தில் இருந்தது. ஒளியின் வீரீயம் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கனலாய் கனிந்தது.

 

‘ஒரு சொல் கூறு. அவ்வூரை இரண்டு மலைகளுக்கு நடுவில் வைத்து அழுத்திவிடுகிறேன்’ கோபம் கொப்பளிக்க அவனை நோக்கிக் கூறியது.

 

அவனுக்கு அது ஒன்றும் பெரிதாய் படவில்லை. பெரிதாக என்ன செய்து விட்டார்கள்? கல்லால் தானே அடித்தார்கள். ‘இன்று அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் நாளை அவர்களது சந்ததிகளாவது இறைவனின் செய்தியை ஏற்றுக்கொள்வார்கள்.’

 

‘இல்லை. நீ கூறு. ஒரே ஒரு வார்த்தை கூறு போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்.’

 

‘நீ யார் எனக்கு உதவ? என்னைப் படைத்தவன் போதும் எனக்கு. என் முறையிடலை நான் அவனிடம் வைத்துக் கொள்கிறேன். இறைச் செய்தி ஏதுமில்லை என்றால் நீ செல்லலாம்.’

 

அந்த நிகழ்விற்குப் பின் பல ஊர்களுக்கு அவன் சென்றான். அவமானங்களும் வேதனைகளும் அவனுக்காக காத்து நின்றன. அதனைப் பெரிய துன்பமாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. என்ன தான் நடக்கிறதெனப் பார்க்கும் முடிவில் முனைப்போடு இருந்தான். தன் ஊரில் இருந்த கோவிலுக்கு வரும் யாத்ரீகர்களிடமும் இறைச் செய்தியை எடுத்துவைத்தான். யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இறைச் செய்தி வரத் துவங்கிய பத்தாம் வருடம் துக்கம் மிகுந்த வருடமாய் கழிந்தது. பதினொன்றாம் வருடம் வந்தது. ’நிச்சயம், துன்பத்தின் இறுதியில் இன்பம் பிறக்கின்றது’ எனும் இறைச் செய்தியுடன்.

 

அவ்வூருக்கு மற்றொரு நகரத்தில் இருந்து சிலர் கோவில் யாத்திரைக்காக வந்திருந்தனர். அந்த ஊரில் தங்கித் தங்கள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கிளம்பத் தயாராயினர். எதிரில் அவன் முற்பட்டான். தனக்கு வந்த இறைச் செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா எனக் கேள்வி எழுப்பினான் அவன். நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ அந்த நாடே அவன் பேச்சைத் தான் பேசியது. அவனது கிளர்ச்சியை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது. அந்த நகரத்தார்களுக்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அவன் என்னதான் சொல்கிறான் என்று கேட்போமே என முடிவு கட்டினர். அவன் பேச்சில் அப்படி என்ன கிளர்ச்சி இருக்கிறதென தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டனர். செவி கொடுத்தனர்.

 

அவன் பேசி முடித்தான். அவர்களுக்குள் ஏதோ மின்சாரம் பாய்வதைப் போல் இருந்தது. புது இரத்தம் ஓடியது. தங்கள் ஊரில் சென்று இறைச் செய்தியை பிறருக்கும் சொல்வதாய் அவர்கள் அவனுக்கு வாக்களித்தனர். அங்கிருந்து அவர்கள் நகரத்திற்கு கிளம்பினர்.

 

தங்கள் ஊருக்குத் திரும்பிய நகரத்தினர் அச்செய்தியைப் பரப்பினர். பனிரெண்டாம் ஆண்டும் அவர்கள் அவனைச் சந்திக்க அந்த ஊருக்கு வந்தனர். இம்முறை அவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது.

 

‘நாங்கள் எங்களைப் படைத்த ஒருவனாகிய அந்த இறைவனைத் தவிர வேறு யாரையும் எதையும் வணங்கமாட்டோம். விபச்சாரத்தில் ஈடுபடமாட்டோம். வருங்காலத்தை எண்ணி குழந்தைகளை கொல்ல மாட்டோம்.  நாங்கள் பொய்யை அதிகாரமாய் மனதில் நிறுத்தி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம். உங்களது பேச்சை மீற மாட்டோம்.’ அவர்கள் வாக்குறுதியாக மொழிந்தனர்.

 

அவன் முடித்தான். ’சொன்னதைத் சொன்னது போல் செயல்படுத்துபவர்களுக்கு இறைவன் பரிசளிப்பான். எவர்கள் இவ்வுண்மையை நிராகரித்து உலகத்தின் மோகத்தின் பின் தொடர்கிறாரோ அவர்களுக்கு உலகத்திற்குப் பின் தக்க பதில் கிடைக்கும். அவர்கள் எவ்வளவு திட்டம் தீட்டி பிறர் காணா வண்ணம் அப்பாவங்களைச் செய்து வந்தாலும் சரி. அது குறித்து இறைவன் அறிவான். அவர்களது பிடி இறைவனிடத்தில். இறைவன் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம். இல்லை செய்யாமலும் இருக்கலாம். அவர்களது பிடி இறைவனிடத்தில்.’

 

ஒரு புறம் அவன் மூலம் இறைச் செய்தி பரவி, அந்த அடிபணிந்த மார்க்கத்தைப் பலரும் ஏற்றுக் கொண்டுவந்தாலும் அந்த ஊரில் அவனை ஒடுக்குவதற்கான செயல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. பல வகையிலும் ஊரார்கள் தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். உயிருக்கு உத்தரவாதமளிக்க அவனது சித்தப்பா இல்லை. கொடுமைகள் மிக வெளிப்படையாக நடந்தன. அவமானங்களும் அசிங்கங்களும் அவனுக்கு மாலையாய் அணிவிக்கப்பட்டன.

 

பதிமூன்றாம் வருடம் பிறந்தது. வழக்கம் போல் கோவில் திருவிழா துவங்கியது. அந்த நகரத்தில் இருந்து பெரும் கூட்டமாய் அவ்வருடம் மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அவனது நிலையைக் கண்டு கொதித்தனர். தங்கள் ஊருக்கு வந்துவிடும் படிக் கூறினர். அவன் அது பற்றி யோசிப்பதாகக் கூறினான். முதல் கட்டமாக அதிகம் அந்த ஊரில் துன்பத்திற்கு உள்ளாபவர்களை அந்த நகரத்திற்கு அனுப்பி வைத்தான். அனைத்து நம்பிக்கையாளர்களும் ஊரைவிட்டு மெல்ல மெல்ல மறைந்து நகருக்குச் சென்றனர். இறுதியாக அவனும் கிளம்ப ஆயத்தமானான்.

 

தான் பிறந்து வளர்ந்து பண்பட்ட மண்ணைவிட்டு, உறவுகளைவிட்டு, உடைமைகளைவிட்டு இன்னொரு அயல் மண்ணுக்கு அகதியாய், போக்கற்றவனாய், புகழிடமற்று உயிருக்குப் பயந்து போவது அவ்வளவு எளிதல்ல. தற்கொலை செய்து கொள்வதைவிட கொடிய உணர்வு அது. ஓரிடம் விட்டு மற்றோரிடம் புகுவது மாற்றங்களைச் செய்விக்க வல்லது. மாற்றங்களை விரும்புவர்களால் ஒரிடத்தில் தங்க முடியாது. மாற்றம் மட்டும் நிரந்தரமென்றானபின் அதனை அனுசரிக்க மனித மனம் கற்றுக்கொள்கிறது. அது பயணங்களாலும் இடம்பெயர்தல்களாலும் பெரும்பாலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

 

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும் என்பது வாழ்க்கை நியதி. இழக்க எதுவும் இல்லை என்றாலும் இழப்பதற்கென்றே நிறைய இருக்கிறது. கிடைக்கும் என்ற நம்பிக்கை  இழக்கும் போது இருக்காது. கிடைக்கும் போது தெரியும் நாம் இழந்தது என்ன அடைந்தது என்னவென்று. அவன் இழந்தான். அன்றோடு அவன் இழந்தான். ‘அவன்’ என்பதை இழந்தான். அவன் அந்தத் துயர ஆண்டில் துயரப்பட்டு மனம் தளர்ந்திருந்தால் வரலாறு அவனைப் பல அவன்களில் ஒருவனாக்கி மூழ்கடித்திருக்கும்.பெருந் துன்பங்கள் கடந்திருந்தன. அவனை அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வு அவராக்கியது. யாரும் இனி அவன் இவன் என்று அவனைச் சொல்ல முடியா அளவிற்கு அவனது வாழ்க்கையை அதற்குப் பின் மாற்றி அமைந்தது. இனி அவர்.

 

ஹஸனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? ஹஸனுக்கு அவரது பெயரே முதல் பெயர். முஹம்மத். முஹம்மத் ஹஸன் அறையில் அமர்ந்து ஜோஆன் கொடுத்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். முஹம்மத் எனும் இறைச் செய்தியாளரின் வரலாற்றை. அவன் பெயருக்குப் பின் இருந்தவரின் வரலாற்றை. உலகில் அதிகம் பெயராகச் சூட்டப்படும் பெயருக்குரியரின் வரலாற்றை.

 

 

 

கட்டிடங்களும் உங்கள் கற்பனையும். அருமையான தலைப்பு. மெக்கானிகல் எஞ்சினீரான எனக்குக் கட்டிடங்கள் பற்றி என்ன தெரியும்? உண்மையில் அதனைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டிருக்க வேண்டும். நான் எதற்காகக் கவலை கொள்ள? கேட்கிறீர்கள் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் காரணம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த நான் அதிகம் பயப்படும் ஒருத்தி என்னை இக்கட்டுரையை எழுதச் சொல்கிறாள். ஸ்மிர்தி. கடந்த வாரம் முதற்கொண்டே என்னை நிபந்திக்கிறாள். இது கற்பனைக்கான தளம் தான் என்கிறாள். உன் படிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறாள். உண்மைதான் தற்போது நான் வேலை செய்து கொண்டிருக்கிறது என் படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலை தான். இருந்தாலும் செய்து வருகிறேன். காரணம் என் மனதுக்கு அது இதமளிக்கிறது. சில தொல்லைகளில் இருந்து என்னைக் காக்கிறது. நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன். உண்மையில் எனக்கு இந்த வேலையைவிட்டு தங்கள் நிறுவனத்திற்கு வர விருப்பம் இல்லை. என்னடா இவன் கட்டுரை எழுதடா என்றால் ஏதோ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுவிட்டது போல வேலை  எல்லாம் வேண்டாம் என்று நிராகரிக்கிறான் என்று நினைக்காதீர்கள். நான் எப்போதும் அப்படித்தான். கதவைத் தட்டும் வாய்ப்புகளை அல்லது நான் கதவைத் தட்டும் வாய்ப்புகளை முதலில் கற்பனையைத் தூண்டி சில மணிநேரங்களோ, நாட்களோ வாழ்ந்து பார்ப்பேன். நெளிவு சுழிவுகளில் சென்று வருவேன். பின்னரே முடிவுகள் என்பது இருக்கும். எல்லாம் கற்பனையின் விளைவு. இக்கற்பனைகள் என்னைக் கனவிலும் விடுவதில்லை. நான் கனவை ஒருவகையில் ஆள்கிறேன். எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. என்னால் கனவுகளிலும் ஒரு வாழ்க்கை வாழ முடிகிறது. எனக்கு பிடித்தாற் போல் கனவுகளை என்னால் கையாள முடிகிறது. நிஜ வாழ்க்கை கொடுக்கும் ஏமாற்றங்களை என்னால் கனவுகளில் மறக்க முடிகிறது. கற்பனைக்கும் கனவுகளுக்கும் என்னால் வேறுபாடு கூற இயலவில்லை.

 

நான் ஏன் என்னைப் பற்றி இவ்வளவு நேரம் கூறிக்கொண்டிருக்கிறேன். கட்டிடங்களும் உங்கள் கற்பனையும் என்று நீங்கள் தலைப்பு கொடுத்துள்ளீர்கள். கட்டிடங்களுக்குள் புகுவதற்கு முன் என் கனவுகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இப்போது கட்டிடங்கள் சார்ந்த கனவுகளுக்குள் செல்வோம். எனக்கு, கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் பெரிய வேறுபாடு தெரிவதில்லை.நினைவுக்குத் தெரிந்து கண்டால் கற்பனை, நினைவுக்குத் தெரியாமல் கண்டால் கனவு. நிஜ வாழ்கையே நினைவில் தெளிவாக இல்லை. நான் நிஜ வாழ்கையையும் கனவுகளைப் போல் தான் அனுகுகிறேன். வலித்தாலும் வலிக்காகதது போல் தான் இருக்கிறேன். ஜன்னலுக்கு வெளியே அமர்ந்து காட்சிகளைக் காண்பது போலத்தான் நிஜத்தில் நிகழ்வதைக் கவனிக்கிறேன். கனவுகளும் அப்படித்தான். கற்பனைகளும் அப்படித்தான். நினைவுகளை வைத்தும் உணர்வுகளை வைத்தும் நிஜம், கனவு, கற்பனை போன்றவற்றை பிரிக்கலாம் தான். ஆனால் இவைகளை பிரிக்கும் அந்த நாண் மிக மிக மெல்லியது. எளிதில் உடைபடக் கூடியது. அந்த நாண் எனக்கு இருந்ததாக நினைவும் இல்லை உணர்வும் இல்லை. இனி உணர்வுகளையும், நினைவுகளையும் கொண்டு எப்படி இவற்றை நான் பிரிப்பது?

 

உங்களுக்கு நான் தற்போது எழுதிக்கொண்டிருப்பது ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், எதுவும் புரிபடாமல் நழுவிக் கொண்டு செல்வதைப் போல் தெரியலாம். இவன் என்ன பித்தனா என்று கூட கேள்வி எழும். இல்லை இந்நேரம் இந்தக் கட்டுரையின் பக்கம் குப்பைத் தொட்டியின் அணைப்பிலும் கிடக்கலாம். யார் கண்டது?

 

இதையும் கடந்து படித்துவிட்டீர்களா? சபாஷ். ஒன்றை உங்களுக்கு தெளிவாக்க விரும்புகிறேன். இப்போது நான் உங்களுக்கு ஒரு பயிற்சி அளித்திக்கொண்டிருக்கிறேன். ஆம் உண்மைதான். என்னிடம் யாராவது என்னைப்பற்றி கேட்டால் நான் எப்போது இப்படித்தான் பதில் கூறுவேன். காரணம் உள்ளது. மிக வல்லிய காரணம். என்னைப் பற்றியும் என் மனதைப் பற்றியும் யாராவது அறிய முற்பட்டால் நான் முதலில் அவர்களுக்கு மனதின் மொழியைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். அதென்ன மனதின் மொழி?

 

ஆம் எப்படி நீங்களும் நானும் பேசிக்கொள்ள ஒரு மொழி இருக்கிறதோ? எப்படி நாம் இந்தக் கணினியுடன் பேச மொழி இருக்கிறதோ? அதே போல் மனதுக்கும் ஒரு மொழி உள்ளது. அது நாம் பேசும் மொழிகளைக் கடந்த மொழி. மிகவும் சிக்கலான, குழப்பமான மொழி. அதனால் தான் நம்மில் பலரும் அதை ஏதோ புரியாத கத்தலாகக் கொண்டு கேட்காமல் விடுகிறோம். உண்மையில் இந்த மனதின் மொழி மிகவும் விந்தையானது. முற்றிலும் உண்மையானது. இம்மனதின் மொழி இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் ஒன்று தான். மனிதன் தன் தாய் மொழியில் யோசிப்பதாய் சிலர் கூறுவர். உண்மையில் அது பொய். வடிகட்டிய பொய். அனைவரும் மனதின் அம்மொழியில் தான் யோசிக்கிறார்கள். வெளிப்படுத்தும் மொழி மட்டுமே தாய் மொழி. மனதின் மொழிக்குள் போய்விட்டால் அனைத்தும் ஒருமையே. மொழியும் நீங்களும் நானும் அதுவும் இதுவும் அனைத்தும் அந்த ஒருமைக்குள் சிக்கிக் கொள்கின்றன. இந்த மனதின் மொழி தெரிந்தால் உங்களுக்கு பேசும் மொழிகளின் அவசியம் குறைந்துவிடுகிறது. இப்போது நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால், ஒருநாள் அந்த மொழி உங்களுக்கு புரிபடுகிற போது தெரிந்து கொள்வீர்கள்.

 

சரி, அந்த மனதின் மொழி இப்பொழுது எதற்கு? என் கற்பனைகளைக் கேட்கிறீர்கள். நான் என் மனதின் மொழியில் இருந்து மொழிபெயர்த்து தாய் மொழிக்கு கொணர்ந்து உங்கள் மொழியில் மறுபடியும் தெரிவிக்கிறேன். அதனை நீங்கள் மீண்டும் நான் கொடுத்த மொழியில் வாங்கித் தாய்மொழிக்குக் கொண்டு செல்கிறீர்கள். பின்னர் உங்களை அறியாமலே தாய்மொழியிலிருந்து மனம் தன் மொழிக்கு மாற்றம் செய்து எடுத்துக் கொள்கிறது. நான் மொழி பெயர்ப்பவன். எனக்கு நன்கு தெரியும் மொழி பெயர்ப்பின் மூலம் எண்ணங்கள் எப்படி தொலைகின்றன என்று. அதனால் தான் நான் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறேன். உங்களுடன் பூச்சுகளற்ற மனதின் மொழியிலேயே முடிந்தளவு பேச நினைக்கிறேன். மனதின் மொழியில் பேசி பழக்கம் இல்லாதவர்களுக்கு சிறிது தலை வலிக்கும். தலை சுற்றும். இதுவும் ஒருவகை தியானம் தான். தியானம் முதலில் கடினமாகத் தான் இருக்கும். மனதின் மொழியைக் கற்றுக்கொள்ள தியானிப்பது அவசியம். தியானம் என்றால் கண்களை மூடி பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளுடன் செய்வது என கற்பனை செய்ய வேண்டாம். தனிமையில் அமர்ந்து யோசிப்பதும், தீர்வுகாண இயலா பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயல்வதும், அன்பு காட்டுவதும், நான், நாம் என்பதை நோக்கி எடுத்துவைக்கிற எந்த அடியும் தியானம்தான். மனதைப் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி தான். தியானம் தான். எண்ணங்களைப் பரிமாற முதலில் நானும் நீங்களும் தியானத்திற்குள் வர வேண்டும் என்கிறேன் நான். மனதின் மொழி அப்படித்தான் இருக்கும்.

 

நேர்கோட்டில் மனம் எதையும் எண்ணுவதில்லை. ஒன்றைத் தொட்டு மற்றொன்றைத் தொட்டு வேறொன்றைத் தொட்டு எங்கெங்கோ கூட்டிச் செல்லும் தன்மையுடையது மனம். எங்கெங்கோ கூட்டிச் செல்வதைப் போலும் சுற்றி வளைத்து பேசுவதைப் போலும் தோன்றினாலும் அதுதான் நம் இயல்பு. அந்த சுற்றி வளைத்தலிலிருந்து பல பாடங்கள் கிடைக்கும். பல புள்ளிகள் ஓரிடத்தில் கோடாகும். அது தான் மனம் பேசும் மொழி. ஆனால் பேசும் மொழியோ நேராக ஒரு கோர்வையாக எதையும் எடுத்துச் சொல்ல நினைக்கும். இது உண்மையில் தேவையற்ற தன்மை தான். மனதை மறைக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி தான். அந்த தேவையற்ற தன்மையை கடந்து பாருங்கள். அனைத்தும் தெளிவாக இருக்கும். தெளிவற்ற தெளிவில்.

 

எதையும் பார்த்துப் புரிந்து கொள்ள மொழி தேவையில்லை. அதே போல் இசையைக் கேட்டு உணரவும் மொழி தேவை இல்லை. உணர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் மொழி தேவையில்லை. முகர்ந்து உணரவும் மொழி தேவை இல்லை. இவை அனைத்தும் இடைத்தரகர் ஏதுமின்றி நேரடியான மனதின் மொழியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவை.  அனைவருக்கும் தெரியும் இது. ஆனால், பேசுவதில் மட்டும் ஒரு தரகு தேவைப்படுகிறது. அது மனதின் மொழியை முற்றிலும் மறைக்கப் பயன்படுகிறது. பொய்யும், புறமும் இதன் வெளிப்பாடு தான். நான் கூற வருவது இதைத் தான். இடைத் தரகு மொழியே இல்லாமல் பேசமுடியும் என்கிறேன். மனதில் இருந்து மனதுக்கு நேரடியாய் பேச இயலும் என்கிறேன். அதற்குச் சில முயற்சிகள் தேவை என்கிறேன். சரி, நாம் இப்போது கட்டிடங்களுக்குள் செல்வோம்.

 

கட்டிடங்களின் அவசியம் என்ன? ஒன்றே ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பான ஒரு சூழல் அளிப்பது. அடிப்படையில் கட்டிடங்கள் என்பது குளிரிலும், மழையிலும், வெயிலிலும் இருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு அமைப்பு. பிறகு தான் அதில் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து பிரிப்பதெல்லாம். மனிதன் வேலை செய்ய கட்டிடங்கள் அவசியப்பட்டது பிற்காலத்தில் தான். முதலில் தன்னைப் பாதுகாக்க ஒரு அமைப்பு என்ற அளவில் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டன. பின்னர் உணவு தானியத்தைப் பாதுகாக்க, பொருட்களைப் பாதுகாக்க, பிறகு அதனுள் அமர்ந்து வேலை செய்ய என முன்னேறியது. ஆனால் இந்த உலகில் ஒன்றரை பில்லியன் மக்கள் இருப்பிடம் இல்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உலகின் மக்களுள் ஐந்தில் ஒருவருக்கு இருக்க இருப்பிடம் இல்லை.

 

அடிப்படை தேவைகளான உணவும், உடையும் மிக எளிதில் பெற்றுவிடக்கூடியதே. செலவும் குறைந்ததே. ஆனால் இருப்பிடம் என்பது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாதலால் ஏழைகளால் எளிதில் அடையவியலாத ஒன்றாக விளங்கிவருகிறது. என் நாட்டின் தலைநகரில் மட்டும் எத்தனை பேர் குளிர்காலத்தில் தங்க இடமின்றி இறக்கிறார்கள் தெரியுமா? இந்தக் குளிரை நான் முதன் முதல் முறை உணர்ந்த போது கிட்டத்தட்ட இறந்தே உயிர்பித்தேன். அப்படி ஒரு குளிரை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. நான் வளர்ந்த தமிழ்நாட்டில் இப்படி ஒரு குளிர் இருந்தே இருந்ததில்லை. எங்கள் ஊரில் வெயில் இல்லாத நாளில்லை. உக்கிர வெயில் காலம், மிதமான வெயில் காலம், மழையுடன் கூடிய வெயில் காலம் என்று மூன்றே மூன்று காலங்களுக்குள் அடக்கிவிடலாம்.

 

அப்படிப்பட்ட எனக்கு முதன் முதலில் இந்த ஊருக்கு ரயிலில் வரும் போது தான் குளிரின் கொடூரம் புரிந்தது. இந்திய ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். ஒரு கனமான மெத்தையை சுற்றிக்கொண்டும், ஒருவித குமட்டும் நெடியுடனும் கையேந்தும் கைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்கையில் ஒரே ஒரு முறை அவர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள். இருப்பிடத்தின் அருமை புரியும். அவர்கள் உடலைச் சுற்றி இருக்கும் அந்த மெத்தைதான் அவர்கள் இருப்பிடம். இருப்பிடம் என்பது என்றும் தேவை அதிகம் நிலவிவரும் துறை. கட்டிடங்கள் என்பது என்றும் புதியதை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் துறை.

 

கட்டிடங்களும் என் கற்பனையும். என் கற்பனை இதுதான். உலகின் இருப்பிடமற்ற அந்த ஐந்தாம்  நபருக்கும் இருப்பிடம் வேண்டும். நாம் நடுக்கடலுக்குள் தீவமைத்து வான்முட்டும் கட்டிடங்களை எழுப்பச் செலவிடும் ஆற்றலில் மிகச் சில துளிகளைச் செலவிட்டால் போதும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். போர்வைகளை ஆடைகளாகவும் இருப்பிடமாகவும் பயன்படுத்துவதற்கு விடை கொடுக்கலாம். இதை ஒன்றும் இலவசமாக செய்யத் தேவை இல்லை. மிகக் குறைந்த ஆதாயத்தில் செய்து கொடுக்கலாம். சமூக சேவை தான் இதுவும். இருப்பிடம் கட்டச் செலவு குறைந்த வழியை கண்டுணர்ந்து ஆராய்ந்து அறிமுகப்படுத்தினால் தீர்ந்தது. எட்டாக் கனியாக இருந்த செல்போன்களை அனைவர் கையிலும் திணிக்கும் அளவிற்கு நம்மிடம் யோசனைகள் இருக்கிறதென்றால், ஏன் இதற்கு இல்லை? உண்மை யாதெனின் யாரும் இதில் காலெடுத்து வைக்க விரும்பவில்லை. அது தான் உண்மை.

 

உண்மையில் அரசாங்கம் எடுக்கும் இலவச வீடு வழங்கும் முடிவு முட்டாள்தனமானது. நூற்றில் ஒருவரைச் சென்று சேரக்கூடியது. அப்படி ஒருவரை சென்று சேர்ந்தாலும் அதை அவர் முழுக்கப் பயன்படுத்துகிறாரா? இல்லை வேறொருவரிடம் வாடகைக்கு விடுகிறாரா? என்பது கேள்விக்குறி. ஏன் ஒருவர் தனக்காக அரசாங்கம் கொடுத்த இருப்பிடத்தை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க முயல்கிறார்?

 

இது உளவியல் சார்ந்த கேள்வி. மனிதன் தேவையற்றதாய் தோன்றுவதை தேவைப் படுவதற்காகப் பலி கொடுக்கிறான். மாதம் ஒரு வருமானத்தை ஈட்டித்தரும் வீட்டை எதற்காக நாம் குடியிருந்து வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம். அந்த மாத வருமானத்திற்காக அவர்கள் அந்த வீட்டை பலிகொடுக்கிறார்கள். பழையபடியே குப்பைத் தொட்டியிலோ நடைபாதையிலோ அவர்கள் வாழ்கின்றனர். வீடு என்பதை தேவையற்ற ஒரு ஆடம்பரமாய் நினைக்கின்றனர். அரசாங்கம் இலவசமாகக் கொடுத்ததில் அவர்கள் தான் வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லமுடியாது. அது கொடுப்பது என்ற அர்த்தத்திலேயே இல்லை. கொடுப்பதை இப்படித்தான் செலவு செய்யவேண்டும் என்று கொடுப்பவர் அதிகாரம் செய்வது அநாகரிகம். கொடுக்கப்பட்டவருக்கு தேவை இருந்தால் அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பார் அல்லவா?

 

இந்தப் பிரச்சனையை மூன்று முறையில் கையாளலாம். முதலில் இலவசம் என்பதே இருக்கக்கூடாது. இலவசம் என்று கொடுத்தால் வாங்கியவர் அதைத் தனக்கு வேண்டிய வகையில் செலவு செய்வதற்கு உரிமை உண்டு. அதனால் இலவசம் என்ற ஒன்று இல்லாமல் மானிய விலை அல்லது குறைந்தபட்ச ஆதாயத்துடன் கூடிய விலையில் அவர்களுக்கு விற்கலாம். தேவைப்பட்டவர்கள் தாங்களாய் முன்வந்து வாங்கிக் கொள்வர்.

 

இரண்டு, இலவசம் என்று கொடுக்காமல் தாங்களே இருப்பிடங்களை நிர்வகித்து தகுதியானவர்களுக்கு இலவச வாடகை என்கிற வகையில் கொடுக்கலாம். அது ஒரு இரவானலும் சரி, ஒரு வருட இரவானாலும் சரி. அந்த நபர் தகுதியடையும் வரை அவ்வாறு செய்து வரலாம். டெல்லியில் அரசாங்கமே செய்து தரும் இலவச இரவு துகிலகம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

 

இவ்விரண்டிலும் அடங்காத மூன்றாம் ஒன்று இதன் மூலத்திற்கே சென்று விடை காண்பதாய் அமைகிறது. ஏன் இருப்பிடமற்றவர்களின் எண்ணிக்கை கிராமங்களைவிட நகரங்களில் அதிகமாய் உள்ளது?

 

கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பற்ற மக்கள் நகரத்தை நோக்கி, ஒளியை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி வருபவர்களால் எவ்வளவு தான் உள்கட்டமைப்பு இருக்கும் நகரமாய் இருந்தாலும் விழி பிதுங்குகிறது. தேவை அதிகம் வளம் குறைவு. விலை ஏறுகிறது. வாடகை கொடுக்க முடியாத அவர்கள் தெருக்களில் தஞ்சம் புகுகிறார்கள், தங்கள் வாழ்விலும் ஒரு நாள் ஒளி பிரவேசிக்கும் என்ற நம்பிக்கையில். இதில் யார் மீது குற்றம்? அவர்கள் மீது யாராலும் குற்றம் சொல்ல முடியாது. அரசாங்கம் தான் அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கிராமங்களை மனதில் வைத்துத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப்படித்தான் ஏதாவது நிகழும்.

 

நாம் அரசாங்களைக் கடந்து சற்று வெளியே வருவோம். நிறுவனங்களாலும் முதலாளிகளாலும் என்ன செய்ய முடியும் என்ற கருத்துக்கு வருவோம். நிறுவனங்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற உலகில் தான் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். இப்போதெல்லாம் அரசாங்கங்களை நிறுவனங்கள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கடந்த தலைமுறைக்கு முதல் தலைமுறையில் உலகத்தின் மூலையில் இருக்கும் ஒருவர் மற்றொரு மூலையில் இருப்பவரிடம் நேரடியாக பேசமுடியுமா என்று கேட்டால் ‘சத்தியமாக சாத்தியமில்லை’ என்று கூறியிருப்பார்கள். இன்று நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவது மிகச் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இது அறிவியலால் செயல்படுத்தப்பட்டதா? நிச்சயம் இல்லை. இவை அனைத்தும் நிறுவனங்களால் சாத்தியப்பட்டது. நிறுவனக்களின் ஆராய்ச்சியும், தொழில்நுட்ப போட்டியும், உற்பத்தியும், சந்தைபடுத்துதலும் இதனை நிகழ்த்திக் காட்டியது.

 

அரசாங்கங்களை விட நிறுவனங்களால் நிறைய செய்ய முடியும். இலவசமாக  அல்லாமல் ஆதாயத்துடன் ஒன்று இருக்குமானால் அதில் தலைபட எந்த நிறுவனமும் தயங்கப் போவதில்லை. தேவைகள் அதிகம் இருக்கும் துறை தான் இது. இருப்பிடம் அமைத்துத் தரும் துறையும். உற்பத்தியைப் பெருக்கினால் போதும். இதற்கு தீர்வு கைக்கருகே கிடைத்துவிடும்.

 

நிறுவனங்கள் குறைந்த விலையில் நகரங்களில் தங்கும் விடுதிகள் நடத்தலாம். டோக்கியோவின் கேப்ஸூல் ஹோட்டல்களைப் போல. எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான இருப்பிடம் எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாம். இன்றைய உலகம் இன்னும் நானோடெக்னாலஜியின் அதிர்வை பெரிதாய் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நானோவின் மூலம் செலவு குறைந்த பாதுகாப்பான உறைவிடம் ஒன்றை ஏற்படுத்தித் தரலாம். கிராமங்களை வளமாக்கும் செயல் திட்டங்களை வகுத்து நகர் நோக்கிய படையெடுப்பைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு சிறிது அரசாங்கத்தின் துணை தேவை. அது நிறுவனங்களால் எளிதில் பெற்றுவிடக் கூடியதே.

 

இது தான் என் கட்டிடங்கள் நோக்கிய கற்பனை. உலகில் இருப்பிடச் சிக்கல் என்று ஒன்று இரவே கூடாது. எனக்குப் போதிய இடமும் காலமும் உதவியும் இருந்தால் நிச்சயம் என்னால் இதனை செய்து காட்டமுடியும். இது வெறும் நம்பிக்கை இல்லை. சவால்.

 

தளம் அமைக்கப்பட்டு கொடுத்தால் போதும் இளைஞர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றனர். என் இந்தியா இளைஞர்கள் நிரம்பிய தேசம். மக்கள் தொகையும் தேவையும் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் முன்னேறிச் செல்லும் தேசம். சந்தைப் படுத்துதலும் அதற்கான யோசனைகளும் மலிந்து கிடக்கும் தேசம். தங்கள் ஆற்றலைப் பற்றி தங்களுக்கே முழுமையாக தெரியாதவர்களின் தாய் தேசம். எனது தேசம். என்னை ஆளாக்கிய தேசம்.

 

எனக்கு உண்மையில் தேசம் என்ற கற்பனைக் கோட்டின் மீது நம்பிக்கை கிடையாது. உலகம் முழுவதும் ஒரே தேசம் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனிக்கும் தனித்தனி குணம் இருப்பதைப் போல் ஒவ்வொரு மனிதக் கூட்டத்திற்கும் தனி குணம் அமைகிறது. மனிதன், கூட்டம், ஊர், மாநிலம், நாடு, உலகம் என ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குண நலன்களை வெளிப்படுத்துகின்றன. அதில் என் நாடு என குறிப்பிட்டுக் கூறியது நான் வாழும் நாட்டின் குணநலன்களை விளக்க. என் நாட்டிற்கு சாதகமான அம்சங்களை கூறிவிட்டேன். அதற்காக பாதகங்களே இல்லை என்று கூற வரவில்லை. மனிதன் தொடர்புடைய அத்தனையும் ஒரே விதம் தான். நன்மையும் தீமையும் ஒருக்கே அமையப் பெற்றிருப்பவை தான். எல்லா மனிதனும், கூட்டமும், ஊர்களும், மாநிலங்களும், நாடுகளும் அதனதன் தனித்துவத்தை பெற்றுள்ளன. அதன் மனித சிந்தனையின், செயலின் உள்ளடக்கத்தின் மொத்த தொகையாய் அவை இருக்கின்றன. அனைத்தும் அதனதன் வட்டத்தில் உயர்ந்தவையே. உயர்த்திப் பிடிக்கிறேன் என்றோ தாழ்த்திப் பிடிக்கிறேன் என்றோ சொல்ல முடியாது.

 

நான் இதில் எல்லாம் வல்லவன் என்று சொல்வதனால் பிறரைத் திறமையற்றவர் என்று கூறுவதாய் ஆகிவிடாது. என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவதாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் சுயநலவாதி என்று கொள்ள முடியாது. என்னை முதலில் நேசித்தால் தான் நான் மற்றவர்களை நேசிக்க முடியும். என் ஊரை நேசித்தால் தான் என்னால் மற்ற ஊரை நேசிக்க முடியும். என் மொழியை நேசித்தால் தான் என்னால் மற்ற மொழிகளை நேசிக்க முடியும். என்  நாட்டை நேசித்தால் தான் என்னால் மற்ற நாட்டையும் நேசிக்க முடியும். கட்டிடங்களும், என் கற்பனைகளும் இப்போதைக்கு இத்தோடு நிறைவடைகின்றன.

 

 

’ஹஸன். இப்பலாம் என்ன உங்கள் பாக்கவே முடியல. எப்பப்பாத்தாலும் ஏதாவது புக்கோட அலையறீங்க. உங்க வேலையுண்டு நீங்க உண்டுனு வேலை முடிஞ்சன்ன ஃபார்ம பக்கம் நடையக்கட்றிங்க?. என்னாச்சு உங்களுக்கு?. ஹாவ் யூ ஃபர்கட்டன் அஸ்?’, ஏதோ மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஹஸனிடம் நெருங்கினான் பாலா.

 

‘வெல்கம் பாலா. நீங்க வேற. வேலை அதிகமாயிடுச்சு. எனக்கு முன்னாடியே நீங்க தான சொன்னிங்க’

 

‘ஆமா. அதுக்காக இப்டியா. இருபத்தி நாலு மணிநேரமும் ஆஃபிஸ்லயே கிடக்கிறது. அபார்ட்மெண்ட்ட வெக்கேட் பண்ணிட்டிங்களா என்ன?’

 

‘ஹா.ஹா. ஆமா பாலா. தாங்ஸ் ஃபார் ரிமைண்டிங். நானே நினச்சிட்டிருந்தேன்.’

 

‘மை காட். உண்மையா தான் சொல்றீங்களா?’

 

‘ஆமாம்’

 

‘டோண்ட் வரி. கூடிய சீக்கிரம் அபார்ட்மெண்ட விட்டு மட்டுமில்ல இந்த ஊரவிட்டே வெளிய போகப்போறீங்க. அதப் பத்தி தான் நான் பேச வந்தேன்’

 

‘வெளிய போகப் போறேனா? ஆம் ஐ ஃபயர்ட்? அப்டி ஏதாச்சுனா முன்னாடியே சொல்லிடுங்க பாலா. நான் கொஞ்சம் ரெடியா இருப்பேன்’

 

‘ரெடியா இருப்பிங்களா? என்னங்க நீங்க ஃபயர் ஆகிறத எதிர் பாத்திட்டிட்டே இருப்பிங்க போல’

 

‘ஆமாம் பாலா எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கனும். வாழ்க்கை ரொம்ப மோசமானது. யார வேணும்னாலும் எப்டி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் மாத்திடும். மாற்றங்கள் மட்டும் தான நிரந்திரம்’

 

‘ஐயய்யோ. என்ன விடுங்க. அந்த ஃபார்ம் மேன்கூட சேர்ந்ததில உங்களுக்கு ஏதோ ஆயிடிச்சு. சீர்ஸ்’

 

‘சரி வந்த விசயத்த பேசுங்க’

 

‘உங்களுக்கு எப்டி தெரியும். நான் ஏதோ விசயத்தோட வந்திருக்கேன்னு?’

 

‘விசயம் இல்லாம பாலா வரமாட்டார்னு எனக்கு நல்லாத் தெரியும். என்னோட கற்பனைனு கூட வச்சுக்கங்களேன். சரி மேட்டருக்கு வாங்க. எனக்கும் ஒரே இடத்தில இருக்கிறத விட நாலஞ்சு ஊருக்கு போகத்தான் பிடிக்கும். என்ன எங்க பேக் பண்ணப் போறீங்க? என்ன ரீஸன்?

 

‘மை காட். யூ ஆர் ரீடிங் மீ. தர் வில் பீ அ மீட்டிங் திஸ் ஈவ்னிங் இன் நியூக்ளியோலஸ். வந்திடுங்க. சாரி டு டிஸ்டர்ப் யூ. ஸி யூ’

 

 

 

அந்த போன் காலை எடுக்கலாமா வேண்டாமா என பல முறை யோசித்து எடுத்தான்.

 

‘இஸ் திஸ் ஹஸன்’

 

‘ஐம் பாலாஜி. ஸ்பீக்கிங் ஃப்ரம் தி க்ரீன்’

 

‘பாலாவா? யார் நீங்க?’

 

‘யே. சாரி ஃபார் தட். ஐம் ஸ்பீக்கிங் ஃப்ரம் க்ரீன். கான் யூ கெட் மீ?’

 

‘தி க்ரீனா? அப்டீனா?’

 

‘தி க்ரீன். நீங்க உங்க சி.வி அனுப்பி இருந்தீங்களே? வேலைக்கு அப்ளை பண்ண’

 

’சாரி. எனக்கு தெரியாது. நான் எதுவும் அப்டி அனுப்பல’

 

‘நீங்க முஹம்மத் ஹஸன் தானே? டெல்லில ஜெர்மன் ட்ரான்ஸ்லேட்டரா வர்க் பண்ணீட்டிருக்கீங்க இல்ல?’

 

’ஆமாம் ஐம் ஹஸன். நான் ட்ரான்ஸ்லேட்டரா தான் வேலை செஞ்சிட்டிருந்தேன். ஆனா நான் எதுவும் வேலைக்கு அப்ளை பண்ணலையே’

 

‘ஓ ஐ ஸீ. கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் யுவர் க்ரியேட்டிவிடினு ஒரு எஸ்ஸே எழுதி உங்க சி.வி கூட அப்ளை பண்ணி இருந்தீங்க’

 

கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் யுவர் க்ரியேட்டிவிட்டி. கட்டிடங்களும் உங்கள் கற்பனையும். வேண்டா வெறுப்பாக எழுதிய கட்டுரை. ஆனால் எழுதும் போது வேலைக்கு எழுதுகிறோம் என்று தெரியாது. ஏதோ கட்டுரைப் போட்டி, ஜெயித்தால் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று சொல்லித் தான் அதனை ஸ்மிர்தி எழுத வைத்தாள். ஏதோ வேலைக்கு அப்ளை செய்வாள் என கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. இப்போது அவள் கனவில் மட்டுமே காட்சி தருகிறாள். ஆனால் அவள் சார்ந்த விசயங்கள் கனவில் இருந்து நிஜ உருவை அடைந்து வருகின்றன.

 

’ஆமாம். உங்க பேர் என்ன சொன்னீங்க?’

 

‘பாலாஜி. சார்ட்டா பாலா, பாலு, பாஜினு எப்டி ஃபீல் பன்றீங்களோ அப்டி கூப்பிடுங்க.’

 

’ஆமாம் பாலாஜி. நான் தான் அனுப்பி இருந்தேன்.’

 

‘அப்பா. அட் லாஸ்ட் ஐ ஹாவ் கன்வின்ஸ்ட் யூ. தென் வென் ஆர் யூ ஜாய்னிங்’

 

‘ஜாய்ன் பண்ணவா? ஹாவ் ஐ பீன் அப்பாய்ண்டட்’

 

‘யெஸ். ஆஃப் கோர்ஸ். உங்க மெய்ல்ல செக் பண்ணுங்க. யூ ஹாவ் தட் அப்பாய்ண்ட்மண்ட் ஆடர் தேர்’

 

‘ஓகே’

 

‘அண்ட் அனதர் திங். உங்களுக்கு எஃப்.பி-ல ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி இருக்கேன். அக்ஸப்ட் பண்ணுங்க. லெட்டஸ் மீட் தேர்’

 

‘ஸ்யூர்.’

 

ஸ்மிர்தி இறந்த பிறகு ஹஸன் டில்லியில் இருந்து வேலையை உதறிவிட்டுக் கிளம்பினான். உலகம் பெரிய பாடம் ஒன்றைக் கொடுத்திருந்தது. உலகத்தின் மீதான விரக்தியும் வெறுப்பும், தானும் உடன் சென்றிருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வும் அவனைக் கொன்று கொண்டிருந்தன. வாழ்வின் அடுத்த இலக்கை விரட்டும் எண்ணமின்றி துவண்டு கிடந்தான். மனம் பெரும் அடி ஒன்றை வாங்கி இருந்தது. ஆனால் அவனால் கண்ணால் அழ முடியவில்லை. இதயம் அழுதது, உதிரத்தால்.

 

தமிழகமும் அப்போது திணறிக் கொண்டிருந்தது. வருந்திக்கொண்டிருந்தது. நாளுக்கு 16 மணிநேர மின்வெட்டு என அமலில் இருந்தது. சந்திக்கும் மக்கள் அனைவரும் கோபத்தைக் கொப்பளித்தவர்களாய் இருந்தனர். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை எளிதாக அவர்களிடத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஹஸனுக்கு இருள் பழகியது. தமிழகத்தில் இருட்டு ஒரு வகையில் தன் இருட்டுடன் தொடர்புபட்டது. ஒளிவரும் நாளுக்காக ஏங்கியது. இருளும் ஒளியும் காதலர்கள். ஒன்றுகூடத் துடித்து ஒன்றை மற்றொன்று விழுங்கும் இயல்பின் காதலர்கள். இருள் இரவின் பார்வையைக் கொடுத்தது. இரவின் அழகு வெளிப்பட்டது. இரவு கொடுக்கும் இதம் பிடித்துக் கொண்டது. அதானால் இரவில் தூக்கம் என்பது போய் எண்ணம் என்றானது. அப்படி இரவில் தூக்கம் வந்தாலும் மின்சாரம் இராது. தூக்கம் எப்படியும் கெடும். பகல் உக்கிர வெயிலைச் சுமந்து வந்து வெறுப்பேற்றியது. இந்த சமயத்தில் தான் அவனுக்கு பூனைகளுடன் உறவு ஏற்பட்டது.

 

பூனைகள் சுகவாசிகள். சுதந்திர விரும்பிகள். நாய்களைப் போல் தனக்குப் பிடித்தவரை மகிழ்விக்க அவைகளுக்கு பிடிக்காது. தனக்கு விருப்பம் இருக்கும் போது அல்லது தேவை இருக்கும் போது மகிழ்விப்பதைப் போல் மகிழ்வித்து பிற நேரங்களில் செவிட்டித் திரியும் தன்மையுடையவை. கிட்டத்தட்ட மனிதனைப் போன்றவை. சுவையும் உணர்வும் ஒரே மாதிரியானவை. ஆம். மனிதனைப் போல் இல்லாவிட்டால் இந்நேரம் அவைகளால் எப்படி மனிதனிடம் அவன் வீடுகளில் எந்தப் பயனும் பயக்காமல் வாழ முடியும்? பிற விலங்குகள் எல்லாம் மனிதனால் அழிவு கண்ட போது பிழைத்துக் கொண்டவை இந்த நாய்களும் பூனைகளும். மனிதன் தனக்கு அடிபணிந்தவற்றையும் தன்னைப் போல் தான்தோன்றிக் குணமுள்ளவற்றையும் தேவை இல்லை எனினும் வளர்க்கும் குணமுடையவன் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

ஹஸனுக்குப் பூனைகள் பிடித்ததற்கு இதற்கெல்லாம் மேல் ஒரு காரணம் உண்டு. அனைவரும் உறங்கும் அந்நேரத்தில் தங்கள் வேலையில் ஈடுபடும் பூனைகளின் அந்த தனிமை விரும்பும் தன்மை தான் அந்தக் காரணம். அவற்றின் சுதந்திரப் போக்கும், தனித்துவமும் அவனைக் கவர்ந்தன. விருப்பமில்லாத வீட்டில் பூனைகளும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளும் அவனுக்கு இதமளித்தனர். தமிழகத்தின் இருள் இவை அனைத்திற்கும் அணி சேர்த்தது. இருள் திரையில் நட்சத்திரங்கள் மிண்ணின.

 

அந்த நேரத்தில் தான் இந்தப் பணி வாய்ப்பு வந்திருந்தது. ஹஸன் யோசித்தான். வீட்டைவிட்டு ஓடியவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த மகிழ்ச்சி பெற்றோருக்கு இருந்தது. ஆனால் இவனால் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க முடியவில்லை. அங்கு தங்கி இருந்த ஒரு மாதத்தில் ஒன்றை கண்டான். தன் தந்தை மாறியிருந்தார். குடித்த வாடையோ சுடுசொல்லோ அவரிடமிருந்து வெளிவரவில்லை. ஆனால் அவரது முகத்தை பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த இரவு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஏளனத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் முகத்தில் விழிக்க அவன் விரும்பவில்லை. திருப்பிக் கொண்டான். வழிய வந்து பேசினாலும் வலிய விலகினான். வீட்டைவிட்டு மற்றொரு முறை வெளியேறும் வாய்ப்புக்காக காத்திருந்தான். வாய்ப்பும் கதவைத் தட்டியது. கிளம்பினான். லண்டனுக்கு.

 

‘பாத்து போய்ட்டுவாப்பா’ தந்தை அத்துடன் நின்று கொண்டார்.

 

 

 

நியூக்ளியோலஸ் களைகட்டி இருந்தது. பாலா, ஜோஆன், மேக்ஸ், ரைஹானா எனத் தெரிந்த முகங்களுடன் தெரியாத பல முகங்களும் அமர்ந்திருந்தன. ஆம். ஹஸன் எப்போதும் அப்படித்தான் தான் வேலையில் நெருங்கி இருப்பவர்களிடம் மட்டும் தான் பழகுவான். பிறரிடம் பேசக்கூட மாட்டான். அவர்கள் பெயர் கூட தெரிந்திருக்காது. அல்லது நினைவில் தங்காது. தேவையற்றதை மனதில் போட்டு குழப்புவதென்பது அவனுக்கு பிடிக்காத செயல். அந்த அறை முழுதும் நிரம்பி இருந்த முகங்களுக்குள் தனக்கு தெரிந்த முகங்களிடம் சிறு புன்னகையைக் கொடுத்து விட்டு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 

ரைஹானா எழுந்தார். ரைஹானாவிடம் ஒரே ஒருமுறை தான் ஹஸன் பேசியிருக்கிறான். அதுவும் லண்டனுக்கு வந்த மறுநாள். அவன் அறைக்குள் வந்த பெண்ணாய். தன்னைத் துளியும் மதிக்காத பெண்ணாய் தான் அவனுக்குத் தெரியும். அதற்குப் பிறகு அவளிடம் நேரடியாக எதுவும் பேசியதில்லை. அவளைப் பற்றியும் வெளியே விசாரித்ததில்லை. அவன் வேலையில் முழுவதுமாய் மூழ்கிப்போனான். அவளைப் பார்த்தால் இந்திய, அல்லது அரேபிய வம்சாவளிப் பெண்ணைப் போல் இருந்தாள். ஆனால், பேச்சு சுத்தமாய் ஆங்கிலேயர்கள் போலவே இருந்தது. அவளது பூர்வீகம் பற்றிக் குழப்பிக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவல் இல்லை. ஆனால் ஒன்று அந்த முகச் சாயலை எங்கோ பார்த்திருக்கிறான். ஏதோ அருகில் பல நாள் இருந்த ஒருவரின் சாயலைப் போல் இருந்தது. ஆனால் தெளிவில்லை. மனம் சில குழப்பங்களுடன் முன்னே வந்து அவளைப் பற்றி சிந்திக்கச் சொன்னாலும் அவன் அதனை விரும்பவில்லை. விலக்கியே வைத்தான்.

 

வந்து சில மாதங்கள் சென்றிருந்தன. எடை குறைந்த ஆனால் வலிமையான கற்களைத் தயாரிக்கும் குழுவில் இருந்தான். அவர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வேலை செய்தனர். நானோ டெக்னாலஜியில் சாத்தியப்பட்ட கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அக்குழுவில்  தான் ஜோஆன் அறிமுகமானார். அவர் மூலம் கிடைத்த சில புத்தகங்கள் அவனுக்கு முஹம்மதை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன. ஆவல் மேலிட்டு வாழ்க்கையை தனிமையில் கழிக்க எண்ணினான். எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் துவங்கினான். முடிவுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், தன் எண்ணங்கள் ஏதோ முடியை நோக்கி அழைத்துச் செல்வதை அவனால் உணர முடிந்தது. ஜோஆனின் வற்புறுத்தலுக்கிணங்க ஓரிருமுறை அவர் வீட்டு விருந்தில் கலந்து கொண்டான்.

 

ஜோஆனுக்கு இரண்டு மகள்கள். இரட்டையர்கள். பதினோறு வயதாகிறது. பார்ப்பதற்கு பூனைக்குட்டிகளைப் போல் இருப்பர். அவரது கணவர் சென்ற வருடம் இறந்து விட்டார். அவர் இஸ்லாத்தை தழுவிய கதை மிகவும் சிலிர்பூட்டக்கூடியது. தன் மனது கூறும் உண்மையைத் துரத்தித் தொடர்ந்து தழுவ ஏகப்பட்ட தைரியம் தேவை. ஜோஆனிடம் அது இருந்தது. ஆனால் துவக்கத்தில் எதற்காக இஸ்லாமை தன் மதமாக ஏற்றுக்கொள்ள போராடினார் எனப் புரியவில்லை. தெளிவற்ற தேடலாய் தெரிந்தது. பின்னர் அவர் மூலம் ஒரு புதிய முகம் தென்பட்டது. புதிய புலன் திறந்துகொண்டது. புதிய தத்துவம் ஒன்று அறிமுகப்பட்டது. தேடல் தென்பட்டது.

 

மேக்ஸிடமும் விவசாயத்திடமும் ஏற்கனவே தன் மனதை பறிகொடுத்திருந்தான். இந்த அரசல்புரசலான வாழ்க்கையில் பாலா விடுபட்டுப்போனான். வாழ்க்கை அனுபவிக்கிறேன் என்று நாளொரு தோழியும் பொழுதொரு விருந்துமாய் திரிந்தான். ஹஸனால் ஏனோ தெரியவில்லை அவனுடன் அணி சேர முடியவில்லை. அவனுள் சில காயங்கள் இன்னும் மாறாமல் தான் இருந்தன. அவை வலியைக் கொடுத்திருக்கலாம். தெரியவில்லை. அவ்வப்பொழுது வந்து செல்லும் ஜோவியல் மேனாய் அவன் தென்பட்டான்.

 

ரைஹானா எழுந்து உரையை ஆரம்பித்தாள். உரை மிகவும் தெளிவாக இருந்தது. தேவையற்ற சுற்றல்களோ வளைவுகளோ எங்கும் இல்லை. மிடுக்காக அவளைப் போல் பேசின. கண்கள் கட்டளை பிறப்பித்தன. அனைவரும் கட்டுண்டு கிடந்தனர். சாரம் இதுதான். அந்த வருடத்தின் பெரும்பாலான ப்ராஜக்ட்கள் அன்றுடன் முடிகின்றன. அடுத்த வேலையையும் குழுவையும் பிரிக்கும் தருணம் அது. ஹஸன் இடையில் சேர்ந்தவன். அவன் இல்லை என்றாலும் அந்த இடை குறைந்த கல் பற்றியான ஆய்வும் செயலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதாவது அவனுக்கென்று இதுவரை தனியே பொறுப்புகள் ஏதும் இல்லை. இன்று கொடுக்கப்படவிருக்கிறது. அனைவருக்கும் அப்படியே.

 

தி க்ரீன் உலக அளவில் மிகவும் பரந்துபட்ட நிறுவனம். இது நிறுவனங்களுக்கான நூற்றாண்டு. அவை எங்கும் எதிலும் விரவி இருக்கலாம். காலமும் மொழியும் இடமும் அவர்களைத் தடை செய்யாது. செய்யாமல் பார்த்துக் கொள்வர். அன்றைய கூட்டத்தில் தி க்ரீனில் இருந்து வெளிநாடுகளில் தங்கள் நிறுவனம் சார்பில் நடந்துகொண்டிருக்கும் வேலைகளில் பங்கெடுக்கச் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் ஹஸன் இருந்தான். அதைத் தான் பாலா அன்றைய தினம் அவனிடம் தெரிவித்திருந்தான். ஹஸனது உலகறியும் வேட்கையோ எதுவோ தெரியவில்லை அவனை அந்தப் பட்டியலில் சேர்த்திருந்தது. அனைவருக்கும் அவரவர் கணினி கணக்கிற்கு அது பற்றிய தகவல் அனுப்பப்பட்டது. தங்கள் அறைகளுக்கு திரும்பி அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுக்க அன்னைவரும் பணிக்கப்பட்டனர். நாற்பத்தெட்டு மணி நேரங்கள் முடிவெடுக்க கெடு கொடுக்கப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்தது.

 

 

மூன்று சாய்ஸ். ஒன்று எமிரெட்ஸ், இன்னொன்று காஸா, மற்றொன்று டில்லி.

 

எதை எடுப்பதென்பதில் குழப்பம் இருந்தாலும், எதை விடுப்பதென்பதில் தெளிவாக இருந்தான். டில்லி. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று நினைவுகளை மீண்டும் மீட்டு வலிகளை வலிய வரவழைக்க அவன் விரும்பவில்லை. முடிந்தளவிற்கு இந்தியாவை தவிர்க்க எண்ணினான். அந்த நிகழ்விற்குப் பின் அவன் மிக நொந்திருந்தான். இந்தியர்கள் பெண்களைக் கடவுளாகவும் நதியாகவும் உருவகப்படுத்தினாலும் வழக்கத்திலும் எதிரிலும் பெண்களை வேறு விதமாகத் தான் பார்த்தனர். உலகத்தில் பெண்கள் வேறெங்கும் இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த மாதம் மட்டும் ஸ்மிர்தியையும் சேர்ந்த்து ஆண்களின் இச்சையால் பலியான பெண்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கக்கூடியது. என்னதான் ஆடை குறைவு, அறிவு குறைவு என்று கருத்துகள் கூறப்பட்டாலும் அவை எல்லாம் பூச்சானவை. அது சமூகத்தின் மொத்த மதிப்பீடுகளில் உள்ள ஓட்டை. என்ன தான் ஆயிரக்கணக்கான தத்துவங்களின் பிறப்பிடமாய் இருந்தாலும் மாந்தன் எங்கும் மாந்தன் தான்.

 

விவாதம் தேவையில்லை. டெல்லி வேண்டாம். காஸா. காஸாவா? அப்படி ஒரு ஊரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை அவன். க்ரீனியிடமோ கூகுளிடமோ அவன் கேட்க விரும்பவில்லை. நேரே எமிரெட்ஸ். நன்கு தெரிந்த அடிக்கடி பரிச்சயபட்ட நாடு. துபை, ஷார்ஜா என செழிப்பான பாலை நிலம். அதைத் தான் மனதில் நினைத்துகொண்டான். தனக்கு வந்த அந்த மெய்லில் ரெய்ஹானாவிடமிருந்து இன்னொரு குறிப்பு இருந்தது. எமிரெட்ஸை தேர்ந்தெடுத்தால் சிறப்பு என.

 

எமிரெட்ஸ் முடிவெடுத்தான். யாரிடமும் கேட்கவெல்லாம் விரும்பவில்லை. உடனே மறுமொழி அளித்தான். எமிரெட்ஸ் என. ஆறு மாதம் அங்கு வேலை. பிறகு லண்டன் திரும்பி விடலாம். அங்கு ’தி க்ரீன்’ சார்பில் கடலுக்கு நடுவே பிரம்மாண்டமாய் கட்டப்பட்டுவரும் அந்த ஈச்சமர வடிவத் தீவின் கட்டமைபில் பங்கெடுக்க வேண்டும். புதுமைகளைப் புகுத்த வேண்டும். ஆறு மாத்ததிற்கு அவன் செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் அதில் இருந்தன. பயணப்பட தயாரானான்.

 

நேரம் முடிந்தது. இந்தியாவிற்கும், எமிரெட்ஸுக்கும், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ஓமனுக்கும், எகிப்திற்கும் என மொத்தம் 20 நாடுகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவரவர் வேலை செய்யப்போகும் நாட்டிற்கான அனைத்து தகவல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஹஸன் அதிர்ந்தான்.

 

ஹஸனை காஸாவுக்கு அனுப்புவதாய் மின்னஞ்சல் வந்திருந்தது. காஸாவா? என்ன ஊர் இது? எந்த நாட்டில் உள்ளது? என்ன மொழி பேசுவார்கள்? யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தார்கள்? நேரே பாலாவைத் தொடர்பு கொண்டான்.

 

‘சொல்லுங்க ஹஸன்’

 

‘பாலா? என்ன இது  நான் எமிட்ரெட்ஸ் தானே கேட்டிருந்தேன். அப்பறம் ஏன் காஸா கீஸானு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைக்கிறீங்க?’

 

‘ஜோஆன் தான் உங்களை ப்ரஸ்க்ரைப் பண்ணாங்க. மேக்ஸ் தான் நான் பாத்துக்கிறேன்னு உங்களுக்கு காஸாவ அசைன் பண்ணச் சொன்னாரு. ஆர் யூ நாட் இண்டரஸ்டட்?’

 

‘ஓ. ஐ ஸீ. தென் லெட் மீ ஸ்பீக் டு தெம்’ அவர்களிடம் நேரில் பேசுவதாய் சொல்லி வைத்தான்.

 

‘மேம் என்ன இது?’

 

‘வாட்ஸ் அப் ஹஸன்’

 

‘என்ன எதுக்கு காஸாவுக்கு செலக்ட் பண்ண சொன்னீங்க?’

 

‘நான் ஏதும் சொல்லல. உங்க டீம்ல யார் இருந்த நல்லா இருக்கும்னு கேட்டாங்க. ஐ ஜஸ்ட் ப்ரிஃபர்ட் யூ’

 

‘மேம் எனக்கு காஸா எங்க இருக்குனே தெரியாது. இதுக்கு முன்னாடி நான் அப்டி ஒரு ஊர கேள்விப்பட்டதே இல்ல. ஏதாவது ஆஃப்ரிக்கா அண்டார்டிக்கானு அனுப்பிடப்போறாங்க’

 

‘ஹஸன். ஹாவ் யூ பீன் ஸெலெக்டட் டூ காஸா’

 

‘யெஸ்’

 

‘தாங்க் காட். நான் அதத் தான் ப்ரே பண்ணிட்டிருந்தேன். ப்ளீஸ் எங்கூட வா’

 

‘மேம். என்னனே தெரியாம உங்க கூட எப்டி வர முடியும்?’

 

‘காஸா இஸ் இன் பாலஸ்டைன். நோ ப்ராப்ளம். கம் வித் மீ’

 

‘பாலஸ்டைனா?’ ஒரு நிமிடம் இதயமே நின்று திரும்பியது.  இராக், ஆஃப்கன், இஸ்ரேல், பாலஸ்தீன். மனது கோர்த்தது.

 

‘மேம். தேர் வில் பீ டெரர் எவ்ரிவேர்’

 

‘ஸோ வாட். ஆர் யூ அஃப்ரைட்?’

 

’டெஃபனட்லி நோ ஆன். பட் அங்க போய் நாம என்ன பண்ண போறோம்?’

 

‘உன் மெய்ல்ல பாரு. டீடய்ல்ஸ் இருக்கும்’

 

‘ஓகே பை’

 

மெய்ல் பெட்டியை திறந்தான். புதிதாக ஒரு மெய்ல் வந்திருந்தது. மேக்ஸிடமிருந்து. மேக்ஸ் திரையில் தோன்றினார்.

 

‘பான் வாயேஜ்’

 

‘மேக்ஸ் வாட்ஸ் திஸ். யூ ஹாட் செலக்டட் மீ டூ காஸா வைல் ஐ ப்ரிஃபர் எமிரெட்ஸ்’

 

‘வாட் தெ ஹெல் ஆர் யூ கொனா டூ இன் தட் ஃபகிங் எமிரேட்ஸ்? ஆர் யூ கோனா ஹாவ் ஃபன் வித் யுவர் டிக்? ஃபூல். ஐ நோ மோர் அபவ்ட் யூ தன் மோர் யூ குட் ஹாவ். ஷட் அண்ட் பேக்’

வேறு வழியில்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிளம்பி தான் ஆக வேண்டும். ஏதோ ஒன்றை நோக்கித்தான் வாழ்க்கை இழுத்துச் செல்லும். பயணங்கள் என்றும் வீண் போனதில்லை. அந்தப் புரிதல் இருந்தது. ஓரிடம்விட்டு மற்றோரிடம் செல்ல வேண்டியது வளர்ச்சியின் மிக முக்கிய நிலை. லெட் த லைஃப் டேக் இட்ஸ் பேஸ்.

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: