ஏ.பி (சிறுகதை )

ஏ.பி

மணி எட்டரையாச்சு, எழுந்து குளிச்சு கிளம்ப லேட்டாயிடும் எழுதிரிப்பா
மாலதியின் குரல் சரவணனின் கனவைக் கலைத்தது. இது தினமும் மாலதிக்கும் சரவணனுக்கும் இடையே நடக்கும் காலை விழிப்புப் போராட்டம்.
தன் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிப்புத் தொழிலில் குதித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தத்தளித்து தியாகராசர் கல்லூரியில் கணக்கராக கரை ஒதுங்கி கடந்த இருபது ஆண்டுகளாய் மதுரையில் குப்பை கொட்டும் ஜீவாத்மாதான் இந்த சரவணன். மதுரையில், தான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய உத்தியோகத்தில் இருப்பதாக சரவணன் தன் சொந்த ஊரில் விரித்த வதந்தி வலையில் முதலில் விழுந்தவர் கயல்விழியின் தந்தை மேஜர் கணேசன் தி கிரேட். விளைவு, சரவணன் M.Com வெட்ஸ் கயல்விழி B.A B.Ed. அன்றிலிருந்து இன்றுவரை சரவணனின் பிழைப்பு கயல்விழி டீச்சரை வைத்தும் அவளது தந்தையை வைத்தும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றது. அவனது அரும்பு மீசை முறுக்கு மீசையாக மலர்ந்த பருவத்தில் தான் கயல்விழி வயிற்றில் மாலதி பூத்தாள்.
மாலதி, வயது ஒன்பது. சரவணன்-கயல்விழி தம்பதியினரின் மகள். ஒரே மகள். படிப்பது சொக்கிகுளம் கேந்ரவித்யாலயாவில் நான்காம் வகுப்பு. கிண்டர்ஜாய், சோட்டா பீம், நெய்ல் பாலிஸ், கே.எஃப்.ஸி என பிடித்தனவற்றைக் காட்டிலும் மேத்தமடிக்ஸ் மேம், டமில் மொழி, பக்கத்து வீட்டு குள்ள கிரி, அப்பாவின் ஆக்ஸ் டியோட்ரண்ட் ஸ்பிரே என அவளுக்கு பிடிக்காதவை தான் ஏராளம்.
தன் மேஜர் மாமா அளித்த சீதன மொபெட்டில் தான் தினமும் சரவணன் அலுவலகத்திற்குச் செல்வான். போகிற வழியில் மாலதியை அவளது பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல், மாலையில் சரவணன் அலுவல் முடிந்து திரும்புவதற்கும் மாலதி ஸ்கேடிங் கிளாஸ் முடிந்து திரும்புவதற்கும் சரியாக இருக்கும். இவ்வாறாக சரவணனும் மாலதியும் ஒன்றாக வீட்டைவிட்டுக் கிளம்பி ஒன்றாக வீட்டுக்கு வருவர். தான் வேலை செய்யும் லீ சாட்லியர் பள்ளி வீட்டருகே இருப்பதனால் கயல்விழி இந்த ஆட்டதில் கலந்து கொள்வதில்லை.
மணி எட்டரையாச்சு, நான் கிளம்பிட்டேன் எழுதிரிப்பா”, மீண்டும் மாலதியின் குரல்  சரவணனை எழுந்து உட்காரச் செய்தது.
மடமடவென எழுந்தான். தீர்க்க வேண்டிய கடன்களை தீர்த்தான். தலையை துவட்டிக்கொண்டே அவசர அவசரமாக இட்லியை பிசைந்து உண்டான். இல்லை அமுக்கினான். காற்றில் பறந்து கொண்டே உடைகளை மாட்டினான். இரண்டு தட்டு தட்டி மொபட்டை கிளப்பினான். இதோ கிளம்பிவிட்டான்.
தன் தந்தையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இருங்கப்பா, இதோ வந்துட்டேன் என்று அம்மா ஊட்டிவிட்ட கடைசி வாய் இட்லியை வேண்டாவெறுப்பாக தண்ணீர் கொண்டு விழுங்கிவிட்டு ஓடிவந்து வாகனத்தில் தொற்றிக்கொண்டாள் மாலதி.
அம்மா ஸீயூ பய் பய்என்ற ஓசையுடன் வண்டி அப்பார்ட்மெண்ட் வாசலைத் தாண்டி எதிரில் இருந்த இண்டியன் ஆயில் பெட்ரோல் பல்க்கில் நின்றது. வயிற்றை நிரப்பியது. மீண்டும் அங்கிருந்து ஏப்பம் விட்டபடி கிளம்பியது, வழியில் பார்ப்பவர்களுக்கெல்லாம் மாலதியின் கை அசைந்து அசைந்து டாட்டா காட்டியதையும் கவனித்துக்கொண்டே.
காக்கிச் சட்டை பயத்தால் வெறிச்சோடிய ரேஸ் கோர்ஸ் காவல்நிலையம், ஸ்பீக்கர் சத்தத்தின் கோரப்பிடியில் தள்ளாடிய பி.டி.ஆர் திருமண மண்டபம், குடியிருப்புக் கட்டிடங்களின் நெரிசலின் ஊடே வளைந்து செல்லும் ராம்மூர்த்தி சாலை ஆகியவற்றை மாலதி ரசித்துக்கொண்டிருக்கையிலேயே பயணம் முடிந்தது. அவளது பள்ளி வந்தது.
சரவணன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். பள்ளிக்கு அருகில் இருந்த கடையில் கிண்டர் ஜாய் ஒன்றை வாங்கி மாலதிக்கு கொடுத்தான். அவள் அதை ஆவளுடன் வாங்கி தன் பேக்கிற்குள் பதுக்கி வைத்துக்கொண்டு,
“அப்பா, ஒன் ருபி சேஞ்ச் இருக்காஎன்றாள்.
“எதுக்குக்குமா?என்றான் சரவணன்.
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ், குடுனா குடு
“சரி, இந்தாங்க மேடம்”, என இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவளிடம் கொடுத்துவிட்டு வாட்ச் மேனுக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு அங்கிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் பய் மாலுஎன்றபடி.
ள்ளிக்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாக ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் அருகே இருந்த எடை மிஷினுக்குச் சென்றாள். நேற்று அறிவியல் வகுப்பில், ஒன்பது வயது பெண் குழந்தை 28.5 கிலோ இருக்கவேண்டும் என்று மேடம் சொன்னதை சோதித்துப் பார்ப்பதற்காக. சுகாதாரப் பணியாளர்கள் விரைந்து தங்கள் பணியை செய்துகொண்டிருந்தனர். ஒரு ரூபாயை திணித்தவுடன் மிஷினில் இருந்த மிக்கி மவுஸ் செயல்படத் தொடங்கியது. 31kgsஎன பிரிண்ட் செய்யப்பட்ட காகிதம் வெளியில் வந்தது. சிறிது நேரம் அதனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த மாலதி உடல் வெயிட் போட்டுவிட்டது இனிமேல் டயட்டில் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் மிஷினைவிட்டு கீழிறங்கினாள். அருகில் துப்பரவு பணியளார் ஒருவரின் மூன்று வயது மகன் நின்றிருந்ததைக் கண்டாள்.
“அக்கா, இது என்னது”, என்று மிஷினை தடவிக்கொண்டே கேட்டான்.
“உன் வெய்ட் சொல்லும் மிஷின், ஒரு ஒன் ருபி காய்ன் கொடுத்தா ஜீனியஸ் மிக்கி உன்னோட வெய்ட்ட சொல்லிடும், உனக்கும் இதுல வெய்ட் செக் பண்ண ஆசையா இருக்கா?”, என்றாள் இரட்டை ஜடைகள் குதிக்க.
ம்
அவனை மிஷின்மேல் ஏற்றிவிட்டாள். தன்னிடமிருந்த மற்றொரு ஒற்றை ரூபாய் காசைச் சொருகி மிக்கியுடன் ஏதோ உரையாடிவிட்டு 13 கிலோ என பொறிக்கப்பட்ட சீட்டை அவனிடம் நீட்டினாள்.
“உன் ஏஜ் என்ன
“தெரியாதுக்கா
நீ எத்தினாவது ஸ்டாண்டர்ட் படிக்கிற
“படிக்கலை
“ஓ.கே லீவ் இட், நீ என் ஹிப் சைஸ் தான் இருக்கிற, ஸோ, 24/2=14-4=10 கிலோ, உன் வயசுக்கு நீ ஓவர் வெய்ட். டைலி சாப்பிட்றத குறைக்கனும். டயட்ல இருக்கனும். இல்லைனா குண்டாயிடுவ. சரியா?என்று அவனை ஒரு உலுப்பு உலுப்பி தன் மனதை தேத்திக்கொண்டாள்.
தம்பி, வா போலாம் வேலை முடிஞ்சிருச்சு”, அந்தப் பையனின் தாயின் குரல்.
சரிக்கா  என்று அவனும் பலமாக மண்டையை ஒரு ஆட்டிவிட்டு தாயின் குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.
தியாகராசர் கல்லூரி, அலுவலகம்.
கம்ப்யூட்டரில் கார்ட் கேம் விளையாடும் மும்முராமான பணியில் சரவணன்.
குட் மார்னிங் சரவணன்”,  திருமதி லதாவின் குரல்.
“குட் மார்னிங் மேடம்”, டக்கென கேம் ஸ்க்ரீனை மினிமைஸ் செய்தான்
“பிரின்ஸிபல் உங்களை பார்க்கனும்னு வரச் சொன்னார்
“எதுக்கு மேடம்?
“தெரியல, போய் பாருங்க
“தெரிஞ்சாலும் சொல்லிருவ பாரு”, என்று மனதிற்க்குள் திட்டிக்கொண்டே தன் சீட்டை விட்டு எழுந்தான்.
தினமும் கேம் விளையாடுவது தெரிந்து விட்டதோ, இல்லை நேற்று மாலை அலுவலகத்திற்குள் புகைத்தது கசிந்துவிட்டதோ, இருக்காதே மற்றவர்களுக்குத் தெரியாமல் தானே செய்தேன். வேறென்னவாய் இருக்கும்.மனதில் எழுந்த சிந்தனைகளை அடக்க இயலாமல் மே ஐ கமின் சர்என்றபடி கல்லூரித் தலைமையாசிரியரின் முன் போய் நின்றான்.
“சரவணன், ஸ்டூடண்ட்ஸுக்கு செமெஸ்டர் எக்ஸாம் நெருங்கிட்டது. இந்த நேரத்தில அட்டெண்டன்ஸ் கமிட்டி ராஜா வேற ஓ.டி.ல கரூர் போய் இருக்காரு. அதனால, நீங்க என்ன பண்றீங்க அட்டெண்டன்ஸ் லேக்கா இருக்கும் ஸ்டூடன்ஸை லிஸ்ட் எடுத்து இன்னிக்கே அவங்களுக்கு வார்னிங் கொடுத்திடுங்கஎன்று நழுவாமல் ஒரு வேலையை திணித்தார்.
ஓ.கே சர், ஐ வில் டூ இட்”, என்று அவர் முன் பவ்யமாய் கூறிவிட்டு வெளியில் பல்லைக் கடித்துக்கொண்டு வந்தான் சரவணன்.
வருகை குறைந்த மாணவர்களின் பட்டியல் எடுப்பதற்குள் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது. உணவை ஒத்திவைத்துவிட்டு மாணவர்களுக்கு தகவல் அனுப்ப அலுவலக பையனை அழைத்தான். தகவல் தீ போல் பரவியது. சரியாக, மாலை நான்கு மணிக்கு குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் அனைவரும் சரவணன் முன் அணிவகுத்து நின்றனர். பிறர் மேல் இருக்கும் வெறியை அவர்கள் மேல் கக்கி தனக்கிடப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடித்தான் சரவணன்.
மணி ஐந்தரையானது. இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பினால் மாலதியை கூட்டிக்கொண்டு வீடு திரும்ப சரியாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டிருக்கையிலேயே அவனது செல்போனுக்கு அழைப்பொன்று வந்தது.
“ஹலோ
“ஹலோ சார் நான் மாலதியின் கிளாஸ் டீச்சர் பேசறேன்
“ம், சொல்லுங்க மேம். நேத்தே மாலதி சொன்னா, பேங்லூர்ல ஏதோ ஸ்டேட் லெவல் ஸ்கேடிங் காம்ப்படீஸன் இருக்கு உங்க விருப்பம் கேக்க எங்க மேம் போன் பன்னுவாங்கனு
“இப்ப அதுக்காக நான் உங்கள கூப்பிடல சார். மாலதி காலைல ஸ்கூலுக்கு வந்த்திலிருந்தே டல்லா இருந்தா. ஸ்கேடிங் பண்ணிட்டிருந்தப்ப திடீர்னு மயங்கி விழுந்துட்டா, மூக்கில அடிபட்டு பிளீடிங் ஆகிருச்சு. இப்பதான் ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டு இருக்கோம். வேறொன்னும் இல்லை. கொஞ்சம் வந்திருங்க
சரவணனின் குரல்வளையைக் ஏதோ கவ்வியது போல் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
“ …………………….. வந்துடறேன் மேம். கொஞ்சம் பாத்துக்கங்கஎன்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.
கயல்விழியிடம் என்ன சொல்வது. ஏதும் சொல்லவேண்டாம். இது சின்ன காயம் தானே. டீச்சர் வேறு மயக்கம் என்கிறாரே. ஏதாவது பெரிதா இருக்குமோ. சேச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஹாஸ்பிடலுக்குச் சென்று பேசாமல் மாலதியின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்ட பின் வீட்டிற்குச் சென்று ஆற அமர அவளிடம் தெரிவிப்போம். இல்லைனா டென்ஷன் ஆகிடுவாஎன மனசுக்குள்ளேயே திட்டம் தீட்டிக்கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தான்.
“பேர் மாலதி, ஒன்பது வயது. மூக்கில் அடிபட்டு இங்க தான் அடமிட் பண்ணியிருக்கதா சொன்னாங்கஎன்றான் ரிஷப்னிஸ்ட்டிடம்.
இப்படியே போய் ரைட் கட் பண்ணிங்கனா ஸ்டைர்ஸ் வரும் அதுக்கு ஆப்போஸிட்ல இருக்கும் ஐ.சி.யூ ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. போய் பாருங்க.
சரவணனுக்கு ஐ.சி.யூஎன்ற வார்த்தை தூக்கிவாரிப் போட்டது. சிந்தனை ஸ்தம்பித்த நிலையில் அங்கிருந்து நகர்ந்தான்.
நேரே போய் வலப்பக்கம் வளைந்தான். அங்கிருந்த படிக்கட்டில் மாலதியின் ஆசிரியை அமர்ந்திருந்ததைக் கண்டான். அவர் சொன்ன எதுவும் இவன் காதில் விழவில்லை. எதிரே ஐ.சி.யூ. கதவைத் திறந்தான். உள்ளே கயல்விழி அழுதுகொண்டு நின்றிருந்தாள், சத்தம் போடாதீர்கள் என்று நர்ஸ் கூறுவதை செவிமடுக்காமல்.
“நீங்க தான் இந்தக் குழந்தையின் அப்பாவாகையில் ஒரு ரெக்கார்ட் ஃபைலுடன் நின்ற அந்த நர்ஸ் கேட்டாள்.
“அவர் தான்”, கயல்விழியின் குரல். சரவணனுக்கு தகவல் தெரிவிக்கும் முன்பே கயல்விழிக்கு டீச்சர் செய்தி அறிவித்துவிட்டார்.
“டாக்டர் உங்கள வரச் சொன்னார் போய் பாருங்கஎன்று கூறி அந்த ஃபைலை அவனிடம் கைமாற்றினாள்.
டாக்டர் ராஜேஸ் குமார் M.B.B.S, M.D, M.S என ஏகப்பட்ட டிகிரிகளுடன் ஒரு போர்ட் தென்பட்டது. தட்டினான் திறக்கப்பட்டது. உள்ளே வழுக்கைத் தலையுடன் தீர்க்கமான பார்வையுடன் முகத்தில் புன்னகை தவழ ஒரு உருவம் தென்பட்டது. ஃபைலை அவரிடம் நீட்டினான்.
மிஸ்டர் சரவணன், மாலதியின் ஃபாதர், ரைட்?”,  மூக்குக்கண்ணாடியை சரி செய்தவண்ணம் கேட்டார்.
“எஸ் டாக்டர்
“என் பையனும் உங்க பொண்ணு கூடத்தான் படிக்கிறான். ஏதோ டயட்ல இருக்கதா மாலதி சொன்னானு என் பையன் சொன்னான். இப்பதான் அவுங்க கிளாஸ் டீச்சர்கிட்ட பேசினேன். இன்னைக்கு மதியம் மாலதி எதுவும் சாப்பிடலைனு பசங்க சொன்னதா சொன்னாங்க. சாப்பிடாம ஸ்கேடிங் பண்ணதுல மயங்கி கிழே விழுந்துட்டானும் அதனால் மூக்குல அடிபட்டதாகவும் சொன்னாங்க. அதனால, முதலில் பிளீடிங் நிக்க மருந்து கொடுத்தேன். ஆனால், பிளீடிங் நிக்கவே இல்ல. ஸோ, பிளட் ஸாம்பிள் எடுத்து லேப் டெஸ்டுக்கு அனுப்பினேன். ஹீமோபிலியானு ரிசல்ட் வந்தது
“ஹீமோபிலியானா….
“சாதரணமா எல்லாருக்கும் அடிபட்டு ரத்தம் வெளியேறினா கொஞ்ச நேரத்திலயே உறைஞ்சி ரத்தம் கசியிறது நின்னுடும். ஆனா ஹீமோபிலிக் பேஷண்ட்ஸுக்கு உறையாது. ரத்தம் உறையும் ஃபாக்டர்ரில் குறைபாடு இருந்தா இப்படி ஆகும். ரத்தம் நிக்காம வெளியேறிட்டே இருக்கும். இப்ப மாலதிக்கும் அதே நோய் தான். நிறைய ரத்தம் வெளியேறிடுச்சு. இப்ப  அர்ஜெண்ட்டா நாலு யூனிட் ஏ.பி. நெகடிவ் ரத்தம் தேவை. இது அரிய வகை ரத்தமும் கூட. எங்ககிட்ட இருந்த ஒரு யூனிட் ரத்தத்த தான் இப்ப ஏத்திகிட்டிருக்கோம். பிளீடிங் ஸ்டாப் ஆக ஃபாக்டர் இஞ்செக்ஸன் போட்டிருக்கேன். பிளீடிங் எப்ப ஸ்டாப் ஆகும்னு சொல்ல முடியாது. ஸ்டாப் ஆகிற வரைக்கும் ரத்தம் ஏத்திக்கிட்டே தான் இருக்கனும். நாங்க எல்லா பிளட் பாங்குகளிடமும் தெரிவித்துவிட்டோம். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கேட்டுப்பாருங்கள். மற்றது இறைவன் கையில்
இன்னும் ஏதேதோ சொன்னார். பேசிவிட்டு வெளிவரும் போது சரியாக இரவு ஒன்பது மணி. யாரிடம் குருதி யாசிப்பது என தீவிரமாக யோசித்தான் சரவணன். இறுதியில் அன்று மாலை அட்டெண்டன்ஸ் குறைபாட்டிற்காக தன் முன் ஆஜரான விவேக்கின் முகம் ஞாபகம் வந்தது. ஒருமுறை ஏ நெகெடிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது என்று சரவணனை ரத்தம் கொடுக்கச்சொல்லி விவேக் வற்புறுத்திய நிகழ்வு ஞாபகம் வந்தது. முடியாது என்று மறுத்த கணமும் நினைவிற்கு வந்தது. மனம் மாறினால் அழைக்கவும் என்று அவன் கொடுத்த விசிடிங் கார்டும் பையில் இருந்தது. அன்று கொடுக்க மறுத்துவிட்டு இன்று கேட்டால் தருவானா என்ற ஐயம் மேலோங்கிய நிலையில் அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.

“ஹலோ விவேக் இருக்காரா
“நான் விவேக் தான் பேசறேன். நீங்க
ஆஃபிஸ் சரவணன் தம்பி
“சொல்லுங்க சார். ஏன் இந்த நேரத்தில போன்?
“அது ஒன்னும் இல்லை தம்பி. அர்ஜெண்ட்டா ஏ.பி. நெகெடிவ் ரத்தம் தேவைப்படுது
“அப்படியா சார், யாருக்கு, எங்க, என்ன டைப்னு உடனே எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க சார். ஆள் கிடச்ச நிமிஷத்தில நான் அங்க வரேன்
சரி தம்பி என அழைப்பை முடக்கினான். தனது சுயநலவாதத்தை நினைத்து நொந்துகொண்டான். கை நடுங்க டைப் செய்து எஸ்.எம்.எஸ் அணுப்பினான். நடப்பது நடக்கட்டும் என நேரே மாலதியின் அருகே போய் அமர்ந்து கொண்டான்.
போர்வையில் படுத்துத்துறங்கும் பூனைக்குட்டியின் துயில் கலைந்துவிடாமல் நாசுக்காக படுக்கையைவிட்டு வெளியேறினான் விவேக். கைபேசியில் சரவணன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தன் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டான். ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேடஸை “அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவைஎன அப்டேட் செய்தான். தன் டையரியில் ஏ.பி.நெகெடிவ் என குறித்து வைத்திருந்த நபர்களுக்கு போன் செய்ய ஆயத்தமானான்.
அர்ஜுனிலிருந்து ஆரம்பித்தான்.
“அர்ஜுன், நாங்கள் மதுரைக் குருதி வழங்கி குழுவிலிருந்து பேசுகிறோம். அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவை. கொஞ்சம் தர முடியுமா
“சாரிங்க, நேத்துதான் ஒருத்தவருக்குத் தந்தேன். வேறு யாரிடமாவது கேளுங்க”,  என்று கூறி மழுப்பினான்.
இல்லைங்க இப்பதான் ஜிம்கு போக ஆரம்பிச்சிருக்கேன். இந்த நேரத்தில ரத்தம் கொடுத்தா பாடி ஏறாதுனு மாஸ்டர் சொல்லிருக்கார்
“நாளைக்கு எனக்கு கல்யாணம். அக்ட்சுவலி ஐம் வெரி வெரி சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்
அவன் இப்பதான் வெளிய போனான். நான் அவன் ஃப்ரண்ட் வெங்கி. காலைல போன் பண்ணுங்க
“நான் கொஞ்சம் மப்புல இருக்கேன் பரவாயில்லையா
“எவ்ளோ தருவீங்க பிரதர்
என்ன ரத்தமா. ஸாரி ராங் நம்பர்
அடுத்தடுத்த நபர்களும் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி முடியாது என்றனர். மணி ஏற்கனவே பத்தை கடந்து விட்டது. கடைசியாக தன் வகுப்புத்தோழன் மூர்த்திக்கு டயல் செய்தான். மூர்த்திக்கு தன் கிராமத்திலிருந்து மதுரைக்கு வர குறைந்தது ஒரு மணி நேரம் பிடிக்கும் என்பதாலும் அங்கிருந்து மதுரைக்கு வர எட்டு மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இல்லை என்பதாலும் தான் அவனை அழைக்க விவேக்கிற்கு தயக்கம்.
கோயில் திண்னை. வாலிபர்களின் படுக்கை. அமைதி எங்கும் பேரமைதி. போன் ஒலித்தது. அமைதியை குலைத்தது.
“டேய் மூர்த்தி. நான் விவேக் பேசரேண்டா. நம்ம ஆஃபிஸ் சரவணன் சார் மகளுக்கு அர்ஜெண்ட்டா ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவைப்படுதுடா
“அவன் மகளா. பாவம். என்ன பாடு படுத்தினானோ. அன்னைக்கு அவசரம்னு ரத்தம் கேட்டப்ப உதவுனானா. இவன் ரத்தம் குடுத்திருந்தா அந்த பையன் பொழசிருப்பான். போய் ஒங்க வேலைய பாருங்கடானு நம்மள தானே திட்னான். பக்கா சுயநலவாதி. அனுபவிக்கட்டும். எல்லாம் அவனவனுக்கு வந்தா தான்டா தெரியும். நீ தூங்கு டா அவனுக்கெல்லாம் கரிசனை காட்டிகிட்டு இருக்காமஎன்று பதில் வந்த்து மறுமுனையிலிருந்து.
“அந்தாள பலிவாங்கிற நேரமில்லடா இது. அவனே திருந்திட்டான். மன்னிகலைனா நாம மனுஷன் இல்ல. பக்கத்துல யார்டையாவது பைக் இருக்கா?
“ராமு வாத்தியார் வச்சிருக்கார்டா
அவசரம்னு கேட்டா தருவார்ல?
“தருவார் தருவார்
“சரி. வாங்கிட்டு எங்க வீடு வந்து சேரு
பீப் பீப் பீப்  மறுமுனையில்.
மூர்த்தி தங்களுடன் தூங்கிய ராமு வாத்தியார் மகனை எழுப்பினான். விஷயத்தை தெரிவித்தான். சாவியை வாங்கினான். மதுரையை நோக்கி முடுக்கினான். சரியாக
பண்ணிரெண்டு மணி பேய்கள் நடமாடும் நேரம். மதுரையின் மனித நடமாட்டம் சற்றும்  குறையவில்லை. விவேக் வீட்டின் முன் நின்றது மூர்த்தியின் வண்டி. இருவரும் செல்ல தயாராயினர்.
“ஐம் சாரி மிஸ்டர் சரவணன், ரத்தம் தீரப்போகிறது. எங்களால் முயன்ற அளவு தேடிவிட்டோம். கிடைக்கவில்லை.
சரவணன் கையை பிசைந்துகொண்டு நின்றார். மீண்டும் விவேக்கை கூப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அதற்குள், விவேக் மூர்த்தியுடன் வந்து நின்றான். வேகவேகமக மூர்த்தி ரத்த தானம் அளிக்கும் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஒரு யூனிட் ரத்தம் எடுக்கப்பட்டது. மாலதிக்கு செலுத்தப்பட்டது. மூர்த்தியும் விவேக்கும் அங்கேயே காத்திருந்தனர். சற்று நேரத்திலேயே பத்தாயிரம் பில்லுடன் உபரியாக நான்கு யூனிட் ரத்தம் குருதி வங்கியிலிருந்து வந்தது. மாலதிக்கு ஆபத்தேதும் இல்லை என அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை இரண்டடித்தது. மாலதியின் ரத்தக்கசிவு நிக்கவில்லை, ஃபாக்டர் இஞ்செக்‌ஷன்  வேலை செய்யவில்லை என மருத்துவர் கையை கசக்கிக்கொண்டு வந்தார். இரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் சிறிது சிறிதாக சுயநினைவை இழந்தாள். மூச்சுவிட சிரமப்பட்டாள். கண்கள் இருண்டன, சுற்றியுள்ளவர்களின் அழுகைச் சத்தத்துடன்.
          ஏ.பி.தீன்

Baba Pakurdheen A

Anthropologist, Writer, Traveler, Journalist and ultimately a Simplite.

2 thoughts on “ஏ.பி (சிறுகதை )

  • Wed 30 May 2012AD at 7:40 am
    Permalink

    படித்தேன் .அருமை. கருவை இன்னும் ஆழமாக ………

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: